அற்புதம் அம்மாவே… உங்களை ஆதரிக்க முடியும்; உங்களை வைத்து நடக்கும் அரசியலை எப்படி ஆதரிக்க முடியும்?

imagesமரண தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அரசியல்/கொள்கை சம்பந்தப்பட்ட கைதிகளுக்கானாலும் சரி… சாதாரண கைதிகளுக்கானாலும் சரி… ஏனென்றால், அரசியல் விஷயத்தில் எந்தத் தரப்பின் பக்கமும் முழு நியாயம் இருப்பதில்லை.  சாதாரண கைதிகளோ ஒரு உணர்ச்சி வேகத்தில் தவறு செய்துவிட்டிருப்பார்கள். அவர்களுக்குத் திருந்த ஒரு வாய்ப்பு தரவேண்டும். இந்தக் காரணங்களினால் மரண தண்டனை என்பது தார்மிக ரீதியிலும் தவறு. சட்டரீதியிலும் சரியாக இருக்க வாய்ப்பு குறைவு. அதிலும் ஓர் அரசு என்பது பல்வேறு ஊழல்கள் மலிந்த அமைப்பு. எனவே அதன் கையில் ஓர் உயிரைப் பறிக்கும் அதிகாரத்தை ஒருபோதும் தரவே கூடாது.

இது பொதுவான ஒரு கருத்து. ஆனால், குற்றங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகைப்பட்டவை என்பதால் அதற்கான தீர்ப்பும் பொத்தாம் பொதுவாக இருக்கவும் முடியாது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் சிக்கியவர்கள் சிலர். தப்பித்தவர்கள் பலர். சிக்கியவர்களில் அந்தப் படுகொலையில் சொற்ப பங்களித்தவர்களில் ஆரம்பித்து கொஞ்சம் கூடுதலாகப் பங்களித்தவர்கள்வரை பல அடுக்குக் குற்றவாளிகள் உண்டு. இவர்களில் யாரும் நிச்சயமாக இந்தக் குற்றத்தைப் பொறுத்தவரையிலும் மரண தண்டனை தரவேண்டிய அளவுக்குக் குற்றவாளிகள் அல்ல. இத்தனை வருடங்கள் சிறையில் அடைக்கப்படும் அளவுக்கான குற்றம் செய்தவர்களும் அல்ல. எனினும் பிடிபட்டவர்கள் அந்த முக்கிய குற்றவாளிகளைக் காட்டிக்கொடுக்காமல் இருந்து வந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாகச் சொல்லி பயமுறுத்தி வந்ததில் ஒருவித நியாயம் இருக்கவே செய்கிறது.

இந்த வழக்கில் இன்னொரு விந்தையான விஷயம் என்னவென்றால், காவலர்களின் பிடியில் இத்தனை ஆண்டுகள் இருந்த பிறகும் எந்தவொரு குற்றவாளியும் கிடைத்த ஆதாரங்களுக்குக் கூடுதலாக ஒற்றை வார்த்தைகூட வழக்கு தொடர்பாக கக்கியிருக்க இல்லை. பிரதான குற்றவாளிகளை அடையாளம் காட்டியிருக்கவும் இல்லை. இவர்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தியவர்கள் அந்த அளவுக்கு சாமர்த்தியசாலிகள் என்பது மட்டுமே இதற்கான காரணமாக இருக்கமுடியாது. விசாரணை நடந்தவிதத்திலும் பல குழறுபடிகள் இருக்கின்றன. பிரதான குற்றவாளிகளை நோக்கி ஒருபோதும் விசாரணை போய்விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் தேர்தல் நெருங்கும் இந்தப் பொன்னான நேரத்தில் காங்கிரஸ் அரசுக்கு தமிழகத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்துக் கொள்ள ஒரு வாய்ப்பைத் தரும் வகையில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததோடு மத்திய அரசு விரும்பினால் இவர்களை விடுதலைகூடச் செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியது. கருணை மனு தொடர்பாக முடிவெடுப்பதில் தாமதம் செய்யப்பட்டால், அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கருணை மனு தொடர்பாக இத்தனை நாட்களுக்குள் முடிவெடுத்தாகவேண்டும். மவுனம் சாதித்தால், தண்டனைக்கு ஒப்புக்கொள்வதாகவே அர்த்தம் என்று கடைசியாக ஒரு கெடுவை நிதிமன்றம் விதித்திருக்கவேண்டும். ஆனால், அது தொடர்பாக எந்த அழுத்தமான தீர்மானமும் எடுக்காமல், பாதிக்கப்பட்டவர்களின் தண்டனையை மட்டும் குறைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்போடு நாடகம் நிறைவுற்றிருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது எளிதாகியிருக்கும். ஆனால், அப்படியான ஒரு சாதகமான சூழல் எதிரணிக்குப் போவதைத் தடுக்கும் நோக்கில் ஜெயலலிதா ஏழு பேரையும் விடுதலை செய்வதாக பதறிக்கொண்டு அறிவித்தார். அது உண்மையிலேயே ஈழ அரசியல் அன்கோவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்தான். ஏனென்றால் ஈழப் போராலிகள் தொடர்பாக ஜெயலலிதா இதுவரை எடுத்துவந்திருக்கும் நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவருக்கு அது மிகப் பெரிய பின்னடைவே. எனவே அவரை அந்த முடிவை எடுக்கவைத்தவர்களின் சாமர்த்தியம் என்றுதான் அதைச் சொல்லவேண்டும்.

ஏனென்றால், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததன் மூலம் காங்கிரஸ் தலைமையில் தேமுதிக, திமுக கூட்டணி உருவாகியிருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அதன் மூலமாக மக்கள் மத்தியில் அந்தக் கூட்டணிக்கு செல்வாக்கு அதிகரித்துவிடும் என்று ஜெயலலிதா நம்பியது ஒருவகையில் மிகப் பெரிய தவறு. அவர்கள் தனித்தனியாக இருந்தால் அதிமுகவுக்கு எவ்வளவு சாதகமோ அதைவிட அதிக பலன் அவர்கள் கூட்டாகச் சேர்வதில் உண்டு. ஏற்கெனவே மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னையில் அதுநடந்துகொண்டவிதம் தொடர்பாக கோபம் இருக்கிறது. போதாத குறையாக ஊழல் தொடர்பாக பெரும் வெறுப்பும் அந்தக் கட்சி மீது இருக்கிறது. இந்தநிலையில் காங்கிரஸுடன் யார் சேர்ந்தாலும் அவர்களுக்கு அது பின்னடைவையே தரும். எனவே ஜெயலலிதா அந்தக் கூட்டணியைக் கண்டு இந்த அளவுக்குப் பயந்து தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமே இல்லை. எனினும் அவர் திரைப்படங்களில் வாழ்க்கையில் துடுக்குத்தனம் மிகுந்த பெண்ணாக நடித்துப் பெற்ற வெற்றியை மனத்தில் கொண்டு அரசியல் வாழ்க்கையில் அதிரடிப் பெண்மணியாக ஒரு பிம்பத்தை வளர்த்தெடுக்க விரும்பியிருக்கிறார். சந்தர்ப்ப சூழல் அதற்குத் தோதாக அமைந்திருக்கவே அவரும் அந்த வேடத்தை இதுநாள் வரை வெற்றிகரமாக நடிக்கவும் முடிந்திருக்கிறது. இன்றைய சூழலில் அவருடைய இலக்கு இந்திய இறையாண்மைக்கு எதிராகக் காய் நகர்த்தும் அதிரடியாக மாறியிருக்கிறது (அவருடைய பிரதமர் கனவு நிறைவேறினால் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்பைவிட அவர் ஆகாவிட்டால் கூடுதலாக நடக்கும் என்பதே இப்போதைய யதார்த்தம்).

ராஜீவ் கொலை என்ற வழக்கில் பேரறிவாளர் என்ற அப்பாவியும் அற்புதம்மாள் என்ற போராளியும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னிலைப்படுத்தப்பட்டு வந்திருப்பதைக் கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்ளமுடியும். இது மிகவும் தந்திரமான வலை.

இலங்கைத் தமிழர் பிரச்னையின் பிற அனைத்து விஷயங்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஒரு அப்பாவியைத் தூக்கிலிடலாமா என்ற தார்மிகக் கேள்வியில் வந்து நிற்கிறது. இதனூடாக இந்தியாவின் அற உணர்வு இன்று கேள்விக்குபடுத்தப்பட்டிருக்கிறது.

பேட்டரி செல் வாங்கிக் கொடுத்தார் என்ற பூஞ்சையான குற்றச்சாட்டுடன் ஒருவரை நளினி, முருகன், சாந்தன் போன்ற ஒரிஜினல் குற்றவாளிகளுடன் கோர்த்துவிட்டதில் இருக்கிறது கிரிமினல் சாணக்கியத்தனம். ராஜீவ் கொலையாளிகள் அனைவரும் அந்த அப்பாவியின் பின்னால் ஒளிந்துகொண்டு எளிதாக வெளியே வந்துவிட ஒரு வழி அன்றே ஏற்படுத்திவைக்கப்பட்டிருக்கிறது. ராஜீவ் கொலையை நியாயப்படுத்துபவர்கள் அதை வெளிப்படையாகச் செய்வது சிரமம் என்பதால் அவர்களுக்கு ஒரு துருப்புச் சீட்டு பேரறிவாளர் உருவில் அழகாக உருவாக்கித் தரப்பட்டிருக்கிறது.

அவர் சொல்லாததைச் சொன்னதாக வாக்குமூலம் பதிவு செய்தேன் என்று காவலர் இன்று சொல்லியிருக்கிறார். அன்று அவருக்கு (மே)லி(டம்) இட்ட உத்தரவின்படி பொய் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறார். உண்மைக் குற்றவாளிகளைத் தப்புவிக்க உள் நுழைக்கப்பட்ட பலியாடுதானே பேரறிவாளர். அல்லது தெரிந்தே இந்த தியாகத்தை அவர் செய்ய முன்வந்திருக்கலாம். நிச்சயம் இந்தக் கொலை வழக்கில் தூக்குதண்டனை வழங்கப்படமாட்டாது என்ற உத்தரவாதம் நம்பத் தகுந்தவட்டாரங்களில் இருந்து வந்திருக்கும். எனவே இந்தப் பிரச்னையை போராளித் தாய் – அப்பாவி மகன் ஆகியோரின் பாசப் போராட்டம் என வெறும் உணர்ச்சிமயத்தோடுமட்டுமே ஆராய்ந்து கொண்டிருந்தால் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுவோம்.

ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் சொல்லாமல் விடும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவையே இந்தப் பிரச்னையின் முக்கிய கூறுகள். மரண தண்டனை தரலாமா கூடாதா என்பதெல்லாம் உண்மையான பிரச்னையே அல்ல.

உண்மையில் ஏழு பேருக்கு விடுதலை தரவேண்டும் என்பவர்களின் மனத்தில் இருக்கும் முக்கியமான ஒரு விஷயம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை; அமைதிப்படையை அனுப்பி இலங்கைத் தமிழர்களை அவர் கொன்றொழித்தார். எனவே, அவருக்கு தக்க தண்டனை தரப்பட்டது என்பதுதான்.

இதுதான் பேரறிவாளரின் விடுதலையை விரும்புபவர்களில் பெரும்பாலானவர்களின் மனத்தில் இருக்கும் விஷயம். ஆனால், அநது தொடர்பான கேள்வி அவர்களிடம் கேட்கப்படுவதில்லை. பேட்டரி வாங்கிக் கொடுத்தவருக்குத் தூக்கா என்ற வசனத்தை அவர்கள் தர்ம ஆவேசத்துடன் கேட்க மற்றவர்கள் வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

ஒரு கோட்டை அழிக்காமலேயே அதைச் சிறியதாக ஆக்கவேண்டும்னெறால், பக்கத்தில் இன்னொரு பெரிய கோட்டை வரை என்றுசொல்வார்களே அதுபோல் ஒரு கொலைகாரனை கொலைப் பழியில் இருந்து தப்புவிக்கவேண்டுமென்றால், ஒரு அப்பாவியை அவனோடு கோர்த்துவிடு. அப்பாவியின் வெகுளித்தனத்தை மட்டுமே பேசிப் பேசி கொலைகாரனையும் எளிதில் வெளியில் கொண்டுவந்துவிடலாம். இந்த தந்திரமே இங்கு கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உண்மை புரியவேண்டுமென்றால், அப்பாவி பேரறிவாளரை விடுதலை செய்துவிடுகிறோம். எஞ்சியவர்களைத் தூக்கில் இடுகிறோம் உங்களுக்கு இது சம்மதமா என்று கேட்டுப்பாருங்கள். அமைதிப்படைப் படையின் படுகொலைகளில் போய் அந்த பதில் முட்டிக்கொண்டு நிற்கும்.

இந்த இடத்தில் இந்த அடிப்படை விஷயம் தொடர்பான தெளிவு பிறந்தாக வேண்டியிருக்கிறது.

உண்மையில் அமைதிப்படையினர் தமிழ் பெண்களைக் கற்பழித்தல், ஈழத் தமிழ் போராளிகளையும் அப்பாவிகளையும் கொன்றழித்தல் என அத்துமீறினார்களா? இந்தக் குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? சிங்கள அண்ணனும் தமிழ் தம்பியும் சேர்ந்துகொண்டு இந்திய அமைதிப் படையை இலங்கை மண்ணில் இருந்து விரட்டியடிக்க நடத்திய நாடகத்தின் ஓர் அங்கமா இந்திய அமைதிபடையின் மீதான அவதூறுகள்? அப்படியே அமைதிப்படையினர் அத்துமீறி நடந்திருந்தாலும் அதற்காக ராஜீவைக் கொன்றது எந்தவகையில் நியாயம்? தமிழர்களை நிர்மூலமாக்கு என்று சொல்லியா அவர் அமைதிப்படையை அனுப்பினார். மத்தியில் கூட்டாட்சி… மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய கோட்பாட்டின்படி இலங்கையின் ஒரு மாநிலமாக ஈழம் இருக்கட்டும் என்பதுதானே அவருடைய அமைதிப் பேச்சுவார்த்தையின் சாராம்சம். பங்களாதேஷைப் போல் தனி நாடாகப் பிரிக்கப்பட முடிந்த நாடு அல்லவே இலங்கை. இந்த அமைதி முயற்சியை வெற்றி பெற வைக்கத்தானே ராஜீவின் அரசு அமைதிப்படையை அனுப்பியது. யாழ்பாணம் சிங்களப் படைகளால் முற்றுகையிடப்பட்டபோது பூமாலை ஆப்பரேஷன் நடத்தியதுகூட தமிழர்களின் நலனுக்காகத்தானே. அமைதிப்படை செய்த அல்லது செய்ததாகச் சொல்லப்படும் அத்துமீறல்களுக்கு ராஜீவை எப்படிப் பொறுப்பாக்க முடியும்? எப்படி அவரைப் படுகொலை செய்ய முடியும்? இந்தக் கேள்விகள் எதற்குமே விடை கிடையாது.

உண்மையில் இரண்டாம் முறை ராஜீவ் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அமைதிப்படையை அனுப்பும் வாய்ப்பு மிகவும் குறைவே. ஆனால், அவர் இந்தியப் பிரதமரானால், தனி நாடு கிடைக்கும் வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் ஆகிவிடும் என்ற அச்சமே அவரைக் கொல்லக் காரணமாக இருந்திருக்கிறது. அமைதிப்படையின் அட்டூழியங்கள் என்பவை அதற்கான நியாயப்படுத்தலாகக் கண்டடையப்பட்டிருக்கிறது. எனவே, ராஜீவைக் கொன்றவர்களுக்கு மன்னிப்பு என்பது எந்தவகையிலும் நீதியின்பாற்பட்டதாக இருக்க முடியாது.

அப்படியே அமைதிப் படை செய்த தவறுகளுக்கு ராஜீவைக் கொன்றது சரி என்றால், 18 அப்பாவி காவலர்களையும் பொதுமக்களையும் கொன்றதற்கு இவர்களுக்கு மரண தண்டனை வழங்கியதில் என்ன தவறு இருக்கிறது?

ஈழப் போராட்டத்தில் சக போராளிக் குழுக்களைக் கொன்றது, முஸ்லீம்களை அகதிகளாக வீட்டை விட்டுத் துரத்தியது, அவர்களைப் படுகொலை செய்தது, போரை விரும்பாத மக்களையும் மிரட்டி பண வசூலில் ஆரம்பித்து படையில் சேர்த்துப் பலி கொடுத்ததுவரை எத்தனையோ அநீதிகளை பிரபாகரன் தரப்பும் செய்திருக்கிறது. அதற்கு யார், என்ன தண்டனை தருவது? இந்தியாவில் இனி யாரும் பிரபாகரன் பெயரை உச்சரிக்கவோ, படத்தைப் பயன்படுத்துவதோ கூடாதுஎன்ற குறைந்தபட்ச தண்டனையாவது அவர்களுக்கு விதிக்க முடியுமா? அல்லது அவர்களாகவே பொறுப்புணர்ச்சியுடன் அந்த முடிவை எடுப்பார்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரையில் நீதி, தார்மிகம் எல்லாம் அவர்களுக்குத் தரப்படும் தண்டனைகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்படவேண்டும். அவர்களுடைய செயல்களில் அந்த நற்பண்புகளை யாரும் தேடக்கூடாது. ஏனென்றால் அவர்கள் ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டத்தில் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் செய்வது எல்லாமே சரி. அல்லது சூழ்நிலை அவர்களை அப்படிச் செய்ய வைக்கிறது. ஆனால், மற்றவர்கள் யோக்கியர்களாக இருந்தாகவேண்டும். ஒரு நாட்டின் தலைவரை அவர்களுடைய நாட்டில் வைத்துக் கொன்றாலும் அவர்கள் மட்டும் நீதியின்படி நடந்துகொண்டாகவேண்டும்.

உண்மையில் ஈழப் பிரச்னை என்பது இன்று தமிழர்களை/தமிழகத்தை இந்திய அரசுக்கு / ஒட்டுமொத்த இந்தியாவுக்கு எதிரானதாக ஆக்கும் நோக்குடனே முன்னெடுக்கப்படுகின்றன. ஒட்டு மொத்த இந்தியா ராஜீவைக் கொன்ற பயங்கரவாத இயக்கமாக புலிகள் இயக்கத்தைப் பார்க்கிறது. அவர்களுக்கு ஆதரவாகப் பேசும் தமிழர்களை பிரிவினைவாதிகளாகப் பார்க்கிறது. தமிழ் போராளிகள் தரப்போ ஈழம் கிடைக்காமல் போனதற்கு இந்தியாதான் காரணம் என்று சொல்லிக்கொண்டு ஒட்டு மொத்த இந்தியாவைத் தன்னுடைய எதிரியாகப் பார்க்கிறது. இப்படியாக எதிரும் புதிருமான இரண்டு சக்திகள் உருட்டி விளையாடும் பகடைக் காய்களே இந்த ஏழு உயிர்கள். எனவே இந்த ஏழு உயிர்களின் அம்மா அப்பாக்கள், மகன் மகள்கள், மாமன் மச்சான்கள், தம்பி தங்கைகள் கோணத்தில் இருந்து பிரசனையைப் பார்ப்பது எந்தவகையிலும் சரியாக இருக்காது.

சுய முனைப்பு இல்லாமல் தோற்பது அல்லது சாதகமாக இருந்த அநீதியான சூழல் மாற்றி அமைக்கப்படும்போது ஏற்படும் இழப்புகளை அராஜகமாகச் சித்திரிப்பது, வெறுப்பை அடிப்படையாக வைத்து பிரிவினை நெருப்பை மூட்டிக் குளிர் காய நினைப்பது போன்ற வழிகளைப் பின்பற்றுபவர்களைவிட கூடுதல் பொறுப்பு உணர்வும் அற நெறியும் நிச்சயம் ஒரு தேசத்துக்கு இருந்தாகவேண்டும். அந்த வகையில் அது ஏழு பேரை நிச்சயம் விடுதலை செய்தாகவேண்டும். ஆனால், அந்த தேசம் வேறு சில உத்தரவாதங்களையும் பெற்றுக்கொண்டாக வேண்டும்.

உங்களை விடுவிக்கிறேன். பதிலுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்.? உங்கள் பிரிவினைவாத கோஷங்களைக் கைவிடுவீர்களா? ராஜீவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து விழுந்து வணங்குவீர்களா? 18 அப்பாவித் தமிழர்களின் உருவப்படங்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும். ஈழத் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி புலிகளால் கொல்லப்பட்ட சக குழுக்களின் தலைவர்களின் படங்களும் அங்கு வைக்கப்பட்டிருக்கும். மசூதிகளில் தொழுகை நடத்தியபோது கொல்லப்பட்ட இஸ்லாமியத் தமிழர்களின் திருவுருவப்படங்களும் அங்கு இருக்கும். வலுக்கட்டாயாமாக துப்பாக்கி திணிக்கப்பட்டு போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டு கொல்லப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களும் அங்கு இருக்கும். அந்த நினைவு மண்டபத்தில் ஒரு மிதியடியும் போடப்பட்டிருக்கும். அதில் பிரபாகரனின் உருவப்படம் பதித்திருக்கும். அதை மிதித்தபடி சென்று நீங்கள் அத்தனை படங்களுக்கும் அஞ்சலி செலுத்தவேண்டும் செய்வீர்களா போராளி அற்புதம் அம்மாவே… அப்பாவி பேரறிவாளரே… உங்களைப் போலவே அப்பாவிகள்தானே கொல்லப்பட்ட அத்தனை பேர்களும். அவர்களைக் கொன்ற இயக்கத்தின் சார்பில்தானே இன்றும் நீங்கள் இயங்கிவருகிறீர்கள். உங்களை ஆதரிக்க முடியும். ஆனால், உங்களை முன்வைத்து நடத்தப்படும் அரசியலை எப்படி ஆதரிக்க முடியும்?

அற்புதம் அம்மா… உங்கள் மகன் இன்னமும் உயிருடன் இருக்கிறான். நீதி கேட்டு மன்றாட ஓர் இடம் இந்த இந்தியாவில் இன்றும் இருக்கிறது. பிரபாகரனின் ஈழத்தில் அப்படியான ஒரு இடம் ஒருபோதும் இருந்ததே இல்லையே. திராவிட இயக்கப் பின்புலம் இருந்த பிறகும் சுய சிந்தனை கொண்டவராக நீங்கள் இருக்கக்கூடும். உங்கள் நிஜமான கண்ணீர்த்துளிகளைக் கொஞ்சம் இவர்களுக்காகவும் சிந்துங்களேன். ஒட்டு மொத்த இந்திய மனசாட்சியை நோக்கி அல்லவா உங்கள் மன்றாடல்களை முன்வைக்கிறீர்கள். நீங்களும் அதன் பெருங்கருணைக்குக் கொஞ்சம் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்களேன். ஏனென்றால் உங்கள் மகன் வெறும் உங்கள் மகன் மட்டுமே அல்ல. துரோக நாடகத்தின் துருப்புச் சீட்டு. பிரிவினை விளையாட்டின் பிரதான அம்பு.

***

14 comments so far

 1. Rajan
  #1

  மகாதேவன்
  நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உருப்படியாக எழுதிய மாஸ்டர் பீஸ் பதிவு..
  பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  100% பொருத்தமான வரிகள்..

 2. சீனு
  #2

  True true true…

 3. சுப்புராஜ்
  #3

  மிகவும் வக்கிரமான பார்வையில் படைக்கப்பட்ட அபத்தமான கட்டுரை. இலங்கையில் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கும், போபால் விஷவாய்வில் உயிரிழந்தவர்களுக்கும் (ராண்டர்சணை விமானமேற்றி தப்பிக்க வைத்தவரல்லவா ராஜீவ்காந்தி)அஞ்சலி செலுத்துவதற்கு ராஜீவ்காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட மிதியடியில் மிதித்தபடி போய் ராஜீவ்காந்தியின் குடும்பத்தினர்களை அஞ்சலி செலுத்த சொல்வீர்களா மகாதேவன்? அல்லது இந்தியாவின் கூட்டு மனச்சாட்சியைத் திருப்தி படுத்துவதற்காக எந்தவிதமான நிரூபண சாட்சியமும் இல்லாமல் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் கல்லறையில் அஞ்சலி செலுத்த யாருடைய உருவப்படம் பொறித்த மிதியடியை மிதித்துக் கொண்டு போய் அஞ்சலி செலுத்துவது? இந்து மதத்தின் பெயரால் மோடியின் மேற்பார்வையில் குஜராத்தில் கொன்று குவிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு இந்துமதக் கடவுளர்களின் உருவப்படம் பொறித்த மிதியடிகளை மிதித்துக் கொண்டு போய் மோடியை அஞ்சலி செலுத்த சொல்வீர்களா?

 4. சாந்தன்
  #4

  //உண்மையில் அமைதிப்படையினர் தமிழ் பெண்களைக் கற்பழித்தல், ஈழத் தமிழ் போராளிகளையும் அப்பாவிகளையும் கொன்றழித்தல் என அத்துமீறினார்களா? இந்தக் குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?///

  இந்திய இராணுவப் புலனாய்வுத் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட கேணல் ஆர்.ஹரிகரன் அண்மையில் வழங்கிய செவ்வியின் பகுதி.

  ”..இந்தியப் படைகளின் கூட்டு நடவடிக்கையின் போது பல அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்த நோயாளிகள் மற்றும் வைத்தியர்கள் இந்தியப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிக மோசமான மீறலாகும். இதேபோன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பதுங்கித் தாக்குதலின் போது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை பிறிதொரு முக்கிய மீறல் சம்பவமாகும். இந்த மீறல்கள் தொடர்பில் உண்மையான விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதில் இராணுவத் தலைமையும் அரசாங்கமும் தவறிழைத்துவிட்டது என நான் கருதுகிறேன். ..”

  http://www.youtube.com/watch?v=ct2VOIHwANk

  தமிழில்….

  http://www.puthinappalakai.com/view.php?20140212109954

 5. mahadevan
  #5

  ராஜீவ் செய்த தவறுகளுக்கு நிச்சயம் அவரைச் சேர்ந்தவர்கள் மன்னிப்புக் கேட்டுத்தான் ஆகவேண்டும். அஃப்சல் குரு, அஜ்மல் கசாப் போன்ற அப்பாவித் தியாகிகளுக்கு பரிந்து பேசும் முன் இந்தியாவில் 30-40 வருடங்களில் கொன்று குவிக்கப்பட்டவர்களை இந்தியர்களை/இந்துக்களை ஒரு கணம் நினைத்துப் பார்த்துவிட்டுப் பேசுங்கள்.
  அப்பாவி கரசேவகர்கள் மட்டுமல்லாமல் இந்துப் பெரும்பான்மை தன்னிச்சையாய்க் கொதித்துத் தெருவில் இறங்கியபோதும் 300 இந்துக்களைக் கொன்று குவிக்கும் அளவுக்கு வலிமையுடன் இருந்த இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளைக் கட்டுக்குள் கொண்டுவராமல் இருந்ததற்கும் மோடி மன்னிப்புக் கேட்டுத்தான் ஆகவேண்டும். உடனடியாக துணை ராணுவத்தை அழைத்தது, அடுத்த மூன்று நியாயமான தேர்தல்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது, அவர் ஆட்சி செய்த அடுத்த பத்தாண்டுகளில் எந்தக் கலவரமும் இல்லாமல் இருந்தது, காங்கிரஸ் கட்சியும், ஊடகங்களும் முற்போக்கு படைகளும் எவ்வளவோ முயன்றும் நேர்மையாக நடந்த ஒரு நீதிமன்ற விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்று சொல்லப்பட்டது இவையெல்லாம் நடந்த பிறகும் மோடி நிச்சயம் மன்னிப்புக் கேட்டுத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அவர் உலகுக்கு உண்மையான அன்பைப் போதித்த இந்து சக்தியை அல்லவா பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும் கம்யூனிஸ சாம்ராட்டுகள் செய்த தவறுகளுக்கெல்லாம் விழுந்து வணங்கி மன்னிப்புத் தெரிவிப்பதென்றால் அவர்கள் விழுந்தபடியேதான் கிடக்கவேண்டியிருக்கும். நம்மவர்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளும் நேர்மையாளர்கள், எல்லா அடிப்படைவாத இயக்கங்களுக்குள்ளும் (இந்து சக்திகளில் இருப்பதுபோல்) உருவாகும்போதுதான் பிரச்னைகள் தீர வழி பிறக்கும். இல்லையென்றால், நீ மட்டும் யோக்கியனா என்ற ஒற்றைக் கேள்வியை மட்டுமே வெவ்வேறு வார்த்தைகளில் கேட்டுக்கொண்டிருப்போம்.

 6. மு.செந்தமிழன்
  #6

  மிகவும் சரியான அற்புதமான கருத்துக்கள்.செறிவான தெளிவான ஒளி மிக்க எழுத்து.நல் வாழ்த்துக்கள்.

 7. ரங்கன்
  #7

  சுப்புராஜ்

  உளறல் சகிக்கவில்லை. இலங்கைப் பிரச்சினைக்கு மூல காரணம் பிரபாகரன்.
  இஸ்லாத்தைப் பற்றி உலகம் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டது. நாங்கள் இனி ஏமாறத் தயாராய் இல்லை.

 8. raj
  #8

  அற்புதம் அம்மாள் யாரை நம்பினாரோ அவர்கள் கைவிட்ட கதையை வாசிக்க..

  http://www.4tamilmedia.com/special/republish/1866-2

 9. சுப்புராஜ்
  #9

  ரங்கன்
  அபத்தமான ஒரு கட்டுரைக்கு உங்களை மாதிரியானவர்களின் ஜால்ரா சத்தம் தான் காதுகளைக் கிழிக்கிறது.
  //இலங்கைப் பிரச்சினைக்கு மூல காரணம் பிரபாகரன்// அவரே மூல காரணமாக இருந்து விட்டுப் போகட்டும். குஜராத்தில் நரவேட்டையாடிய நர(ந்திர)மோடி மகாதேவனுக்கும் உங்களுக்கும் தேவபுருஷனாகத் தெரியும் போது, வேறு சிலருக்கு பிரபாகரன் ஆதர்ஷமாக இருந்துவிட்டுப் போகட்டுமே! அவரின் உருவப்படத்தை ஏன் மிதித்துக் கொண்டு போக வேண்டும்? இந்த அபத்தத்தைச் சுட்டிக் காட்டினால் அது உளறலா ரஞ்சன்?
  //இஸ்லாத்தைப் பற்றி உலகம் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டது.// மிக்க சந்தோஷம்! இந்துமதத்தையும் உலகம் புரிந்து கொண்டு விட்டது. நீங்களும் புரிந்து கொள்ளுங்கள் நண்பரே! மனித மேன்மைக்காக உருவாக்கப்பட்ட மதங்கள் யாவுமே அவனைப் படுகுழியில் தள்ளி சக மனிதனின் மீது வெறுப்பை விதைக்கும் விஷங்களாக மாறிப்போன விபரீதத்தைப் புரிந்து கொண்டு அதிலிருந்து வெளியேறி விடுங்கள் என்று தான் சொல்கிறேன். எனக்கு பிரபாகரன் மீதோ இஸ்லாம் உட்பட எந்த மதங்களின் மீதோ பிரேமை எதுமில்லை; அதனால் அட்டைக்கத்தி வீச்சு எதுவும் அவசியமில்லை.

 10. qwerty
  #10

  ஈழத்தில் அமைதி நிலவட்டும்

 11. deepak
  #11

  //அப்பாவி கரசேவகர்கள் மட்டுமல்லாமல் இந்துப் பெரும்பான்மை தன்னிச்சையாய்க் கொதித்துத் தெருவில் இறங்கியபோதும் 300 இந்துக்களைக் கொன்று குவிக்கும் அளவுக்கு வலிமையுடன் இருந்த இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளைக் கட்டுக்குள் கொண்டுவராமல் இருந்ததற்கும் மோடி மன்னிப்புக் கேட்டுத்தான் ஆகவேண்டும். //
  உண்மைதான் மோடியின் வாக்குறிதியை நம்பிதானே அப்பாவி கரசேவகர்களும் அன்பு மட்டுமே உருவான (என்ன கொஞ்சமா ஜாதி வெறியில் தலித்துகளை கொலை செய்து இருக்காங்க, மத வெறியில் கொஞ்சம் பவுத்தர்களை கொலை செஞ்சி இருக்காங்க அதை மறந்துடுவோம்) இந்துகளும் 2000 முஸ்லிம்களை மட்டுமே மணத்தை கல்லாக்கி கொண்டு கொலை செய்தார்கள் கொடுத்த உறுதியை காத்திருக்க வேண்டாமா மோடி, 300 இந்துக்களை சாகவிட்டு விட்டாரே, சரி விடுங்க மோடியும் சரி இந்து வெறியும் சரி மாறிவிட போகிறதா என்ன இன்னுமொரு சந்தர்ப்பத்தில் கொன்னு கொன்னு விளையாடலாம்……

  //ஏனென்றால் அவர் உலகுக்கு உண்மையான அன்பைப் போதித்த இந்து சக்தியை அல்லவா பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.//
  இந்த மாதிரி காமேடிலாம் சொல்லுறதுக்கு முன்னாடியே சொல்லிடுங்க அப்போதான் எங்களுக்கு சிரிப்பு வரும்….. வேத மதத்தில் ஏதாவது ஒரு மூலையில் அன்பு என்பது ஒட்டிக்கொண்டாவது இருக்கா? எந்த காலத்தில் அமைதியாக இருந்திருகின்றது அந்த மதம்…..

 12. ஷாலி
  #12

  // ஒட்டு மொத்த இந்திய மனசாட்சியை நோக்கி அல்லவா உங்கள் மன்றாடல்களை முன்வைக்கிறீர்கள். நீங்களும் அதன் பெருங்கருணைக்குக் கொஞ்சம் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்களேன். ஏனென்றால் உங்கள் மகன் வெறும் உங்கள் மகன் மட்டுமே அல்ல. துரோக நாடகத்தின் துருப்புச் சீட்டு. பிரிவினை விளையாட்டின் பிரதான அம்பு.//
  நமது மகா மேதாவியின் கட்டுரை, ஒரு அப்பாவி தாய் தன் மகன் உயிரைக் காப்பாற்ற அல்லலோகப்படும் நிலையை அரசியலாக்குகிறது.இந்தத் தாயுக்கு பிரபாகரனோ,பிரிவினையோ எதுவும் தெரியாது.எந்த ஒரு தாயும் தன் மகன் உயிரை காப்பாற்ற போராடத்தான் செய்வார்கள்.மகாதேவனின் தாயாக இருந்தாலும் இதைத்தான் செய்வார்.ஒரு தாயுள்ளத்தை அரசியலாக்குவது அநாகரீகமாக தெரியவில்லையா? மகாதேவர்களுக்கு இதெல்லாம் பொருட்டல்ல.இவரின் அகண்ட ஹிந்துஸ்தானுக்கு ஆப்பு அடிக்க முயற்சித்தவர் தனிஈழப் பிரிவினை பேசிய பிரபாகரன்.ஆகவே இவர் எதிர்க்கவே செய்வார். மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரமான புத்தனின் புத்திரன் ராஜபக்சே அகண்ட ஹிந்துஸ்தானுக்குள் வந்துவிட்டதால் நரமோடி,சுஷ்மா சுவராஜ் கோஷ்டியுடன் நமது மகாதேவனும் சேர்ந்து கொள்வது இயல்புதான்.ஆனாலும் இத்தாலி தாயின் தலைமகனுக்காக இவர் அழுது வடிப்பதின் அர்த்தமென்ன?….தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே..அதேதான்.காஷ்மீர் பார்ப்பன பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பேரனல்லவா…
  மகாதேவன்கள் எங்கே இருந்தாலும் எப்படி இருந்தாலும் ஒற்றை பூணூலால் கட்டி வர்ணத்தை காத்து விடுவார்கள்.இந்தியாவிலும்,இலங்கையிலும் உள்ள சூத்திர,பஞ்சம,சண்டாளா ஹிந்துத்துக்கள் கொலை செய்யப்பட்டாலும்,கொள்ளி வைக்கப்பட்டாலும் மகாதேவன்கள் சுள்ளியைக்கூட கிள்ளிப்போட மாட்டார்கள்.நாகத்திடம் மாணிக்ககல் எதிர்பார்ப்பதும் மகாதேவர்களிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பதும் மூட நம்பிக்கை.

 13. மகாதேவன்
  #13

  அற்புதம் அம்மாளிடம் கேட்க விரும்பியது ஒன்றேதான். அவர்கள் அப்பாவியா… அல்லது அரசியல் ஈடுபாடு உடையவரா..? அப்பாவி என்றால் அவர் பிரபாகரனால் கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கும் வெளிப்படையாக கண்ணீர் சிந்தவேண்டும். சிந்துவார். ஒருவேளை அவர் பிரபாகரனின் அரசியலை ஆதரித்தும் ராஜீவ் காந்தியின் செயல்பாடுகளை எதிர்க்கவும் (அதனால் இந்தியாவை வெறுக்கவும்) செய்கிறவர் என்றால் அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டுச் செயல்படவேண்டும். அவர் பிரிவினை பேசும் இயக்கங்களின் ஆதரவுடன் செயல்படுகிறார். ஆனால் அப்பாவி என்று கோரிக்கை வைக்கிறார். அதை அவர் செய்யக்கூடாது. சோனியா காந்தி மன்னிப்பு அளித்திருக்கும் நிலையில் ஈழப் பிரச்னை தொடர்பாக யாருடைய கழுத்தையும் இந்தியத் தூக்குக் கயிறு இறுக்காது என்பது நம்மைவிட அற்புதம் அம்மாவுக்கு நன்கு தெரியும். ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக அவர் நடந்துகொள்ளும்போது அவருக்கும் அதற்கு இணையான அரசியல் பதில்கள்தான் கிடைக்கும்.

 14. ஷாலி
  #14

  // அமைதிப்படை செய்த அல்லது செய்ததாகச் சொல்லப்படும் அத்துமீறல்களுக்கு ராஜீவை எப்படிப் பொறுப்பாக்க முடியும்? //

  நிச்சயம் பொறுப்பாக்க முடியாது.அனுப்பி வைப்பதுதான் பிரதமர் வேலை.அங்குபோய் தமிழ்பெண்களின் கச்சைக்குகுள் கைக்குண்டு பிசைந்து தேடுயதற்கு ராஜீவ் பொறுப்பல்ல.

  லட்சக்கணக்கான யூதர்களை வதைமுகாமல் வைத்து நச்சு வாயு செலுத்திக்கொண்றது நாஜி ராணுவமே தவிர ஹிட்லர் அல்ல.முள்ளிவாய்க்காலில் மூன்று லட்சம் தமிழர்களை கொள்ளி வைத்தது அஹிம்சா மூர்த்தி ராஜபக்சேயா? நிச்சயம் இல்லை.காவாலி ராணுவம்.
  அமைதிப்படையின் ஆனந்த தாண்டவத்தை படம் பிடிக்கும் கவிதை. இணையத்தில் படித்தது.மஹா தேவர்களும் படித்து மனம் மகிழட்டுமே!

  கட்டக்காலி சமூகமாகிவிட்டோம்
  கேட்க நாதியில்லை
  யார் வேண்டுமானாலும்
  தெருவுக்குத் தெரு கசாப்புக் கடை
  கட்டும்படியாகிவிட்டது பூமி

  ஆண்மையை நிரூபிக்க
  அனுப்பி வைக்கப்பட்டவர்கள் போல்
  சீதை கண்ணகியின் கற்புருகி
  கடைவாயில் வீணியாய் கொட்ட
  பெண்குறி தேடி அலைகிறார்கள்
  வீட்டுக்கு வீடாய்..

  முற்றம் பெருக்கவென
  துடைப்பத்தொடு போன பெரியக்கா
  பூரான் பூச்சியால் கடியுண்டவள் போல்
  பதறியடித்து
  வீட்டிற்குள் வந்து விழுந்தாள்.

  வேலியோரங்களில்
  பனங்காய் உருள்வதுபோல்
  பாரதப் பச்சைகள்

  எங்கள் வீட்டில்
  நாங்கள் நான்கு குமர்
  பக்கத்து வீடுகளிலிலிருந்தும்
  பத்துக்கு மேற்ப்பட்ட குமர்கள்
  பனிப்புகார் அண்டாத
  இளங்காலையின் கீழ்
  கிராமத்துக் கோயிலின்
  முன்றல் வெளியில் இருத்தப்பட்டோம்

  கைக்குண்டு தேடுவதாய்
  முலைகளை தடவும்
  மானக்கெட்ட பிழைப்பு
  ச்சே…

  கைக்குண்டுக்கும் முலைகளுக்கும்
  வேறுபாடு தெரியாதவர்களா
  இந்தப்பாண்டவர்கள்?

  ஏ..பாரதமே!
  எல்லைகளை தாண்டி
  வெண்கொடி நாட்டுவதிருக்கட்டும்
  முதலில்
  உன் புத்திரரின் வேகம் தணியுமட்டும்
  பிசைந்து உருட்டி விளையாடிட
  திரண்ட உன் முலைகளை
  அவர்களுக்கு கொடு!

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: