வருகிறது கூகுள் கார்

ஆளே இல்லாத டீக் கடையில் டீ ஆற்றலாம். ஆளே இல்லாத ரோடில் கார் ஓட்டலாம். ஆனால் ஆளே இல்லாமல் ஆட்டோமேடிக்காக கார் ஓடுமா? கூகிள் கார் ஓடும். இது கரடி விடும் கதை இல்லை. கூகுளின் லேட்டஸ்ட் ஆராய்ச்சி அறிவிப்பு!

அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி மையம் நடத்திய போட்டியில் கலந்துகொண்டு முன்பே ஆட்டொமேடிக் கார்கள் தயாரித்த என்ஜினியர்கள் ஒரு 15 பேர், கொஞ்சம் வீடியோ கேமரா, ரேடார் சென்சார், லேசர், மேப், இத்யாதி இத்யாதி, அப்புறம் நிறைய ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜன்ஸ். அவ்வளவு தான், டிரைவர் இல்லாமல் டிராபிக்கில் தானே ஓடும் கார் ரெடி என்கிறது கூகிள்.

இந்த மாதிரி சாப்ட்வேர் சமாசாரங்கள் எல்லாம் தாராளமாக தாறுமாறாக டெஸ்ட் செய்யப்படவேண்டும். அதற்கு இந்த ஆளில்லா கார்களை ஓட்ட கூகிள் கூப்பிட்ட ஆட்கள், காரை கன்னாபின்னாவென்று ஓட்டாத, மாமாவிடம் மாட்டவே மாட்டாத மனிதர்கள். அட அந்தளவு திறமையான ஆசாமிகளால்தானே, சட்டென்று சாப்ட்வேர் செத்துப்போனால் சடாரென்று காரை கண்ட்ரோல் செய்ய முடியும்.

டிராபிக் போலீஸ் தவிர யாரிடமும் சொல்லாமல், ஆனால் எல்லாரும் ஓட்டும் சாலைகளில் கூகிள் சாப்ட்வேர் பொருத்தப்பட்ட ஏழு கார்களில், திறமையான டிரைவர்களை, ஒப்புக்குச் சப்பாணியாக டிரைவர் சீட்டில் உட்காரவைத்து, பின் சீட்டில் சாப்ட்வேர் ஆசாமியை உட்காரவைத்து சான் பிரான்சிஸ்கோவைச் சுற்றிப் பலமுறை ஜானவாசம் வந்திருக்கிறார்கள். ஒரு சில லாங் டூரும் அடித்துள்ளனர். எந்தவித மனித உதவியுமின்றி சுமார் 1,000 மைல்களும், லைட்டான உதவியுடன் இதுவரை 1,40,000 மைல்களுக்கும் மேலாக இதுவரை ஓடியுள்ளன.

என்ன ஆச்சரியம் என்று கொட்டாவிவிடும்முன்னர் இன்னுமொரு விஷயம். இவ்வளவு ஓட்டியும் ஒரே ஒரு விபத்துகூட நடக்கவில்லை என்று மார், தொடை எல்லாம் டூப் போடாமல் தட்டுகிறார்கள். சும்மாங்காட்டியும் த்ருஷ்டிக்கு ஒரே ஒரு முறை, டிராபிக் சிக்னலில் நிற்கும்போது ஒரு ஆள் ஓட்டி வந்த கார் பின்பக்கம் இடித்தது மட்டும்தானாம். அமெரிக்காவில் சரி, அசோக் பில்லரிலிருந்து கத்திப்பாராவரை ஓட்டிப் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் இதன் உண்மையான பவிசு என்கிறீர்களா?

சாப்ட்வேர், சரக்கடிச்சுட்டு, பேசிக்கிட்டு, பராக்கு பாத்துக்கிட்டு, மெசேஜ் பண்ணிகிட்டு, தூங்கிட்டு எல்லாம் ஓட்டாது. அதனால ஆக்ஸிடண்ட்டும் ஆகாது. ஆனா எல்லாத்தையும் நாம ஹாயா பின்னாடி உக்காந்துக்கிட்டு செய்யலாம் என்று இதன் பாதுகாப்பு பற்றிப் போற்றிப் பாடுபவர்களிடம், கம்பூட்டர் சாப்ட்வேர் எவ்ளோ வாட்டி கிராஷ் ஆகுது, அந்த மாதிரி இது கிராஷ் ஆச்சுன்னா இன்னாபா பண்றது என்கிற கோயிந்துவின் கேள்விக்கு பதில் இல்லை. ஏரோப்ளேனில் ஆட்டோ பைலட் சாப்ட்வேர் போலத்தானே இதுவும்? அது எல்லாம் என்ன அடிக்கடி கிராஷ் ஆகிறதா? அதுபோல இதுவும் தயார் செய்யப்படலாம். ஆட்டோமேடிக் கண்ட்ரோலைத்தான் ஒவர்ரைட் செய்யலாமே என்கிற வாதங்கள் எழலாம். அந்தச் சமயத்தில் ஏரோபிளேனின் விலையையும்  விபத்துகளையும் மனத்தில் கொள்ளலாம்.

எல்லாவற்றுக்கும்  மேலாக கூகிள் பெரும்பாலான சாப்ட்வேர்களைப் பொதுப் பயன்பாட்டுக்கு விட்டாலும், பீட்டா என்றே வைத்திருக்கும். சில சமயம் இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்தும் அளவுக்கு இன்னும் மக்கள் வளரவில்லை; காம்பிளான் குடிக்கவேண்டும் என்று கொடுத்த  சாப்ட்வேரை வேரோடு பிடுங்கிக்கொள்வார்கள். ஆசை காட்டி மோசம் செய்வார்கள். அவர்களை எல்லாம் நம்பி கார் வாங்க முடியுமா என்பது எல்லாம் ரூம் போட்டு யோசிக்கவேண்டிய விஷயம்.

பாதுகாப்பைத் தவிர்த்து இதன் முக்கியப் பயனாக கூகிள் முன்வைக்கும் வாதம், நேர மிச்சம். எவ்வளவு நேரம் வண்டி ஓட்டி வீணாக்குகிறோம்; டிராபிக்கில் தேமே என்று கிடக்கிறோம். அதை எல்லாம் மிச்சப்படுத்தி மனித குலம் முன்னேறலாம். இல்லை மஜாவாக மீனாகுமாரி பாட்டு பார்க்கலாம். மேலும், ஆட்டோமேடிக்காக ஓட்டுவதால் சிக்னல் விழுந்தவுடன் மைக்ரோ நொடியில் வண்டியைக் கிளப்பலாம். உரசல் இல்லாமல் மிகப் பக்கத்தில் ஓட்டலாம். இருக்கும் ரோடுகளில் இரண்டு மடங்கு வண்டி ஓட்டலாம் என்று எல்லாம் சொல்லும் கூகிளைப் பார்த்து சிக்னலை மதிக்காத, இருக்கும் ரோட் பாதியானாலும் அதே எண்ணிக்கையிலான வண்டிகள் ஓடுவதைப் பார்க்கும் நமக்கு ஆட்டோமேடிக்காகச் சிரிப்பு  வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

முட்டு சந்துக்கெல்லாம் மேப், எல்லா இடங்களுக்கும் வேக நிர்ணயம், வேலை செய்யும் சிக்னல்கள் இருக்கும் அமெரிக்காவில் இப்படிப்பட்ட புரோகிராம் செய்யப்பட்ட கார்கள் சரி. எப்ப எந்தப் பக்கம் ஒன் வே ஆகும், எருமை வரும், எந்த ரோட்டில் எப்போது யாருக்காக, எதற்காக பிளாக் ஆகும் என்பதை எல்லாம் மனத்தில் கொண்டு புரோகிராம் எழுத பத்து பில் கேட்ஸ் வந்தாலும் முடியாது!

லைசன்ஸ் எடுக்க கப்பம் கட்டத் தேவையில்லை; ஓவர் ஸ்பீட், சிக்னல் நிற்கவில்லை போன்ற பிரச்னைகள் எல்லாம் எழாது என்ற கொண்டாட்டங்களுக்கு இடையே, ஆட்டோமேடிக் ஒன்று நினைக்க ஆண்டவன் ஒன்று நினைக்க நடக்கும் ஆக்ஸிடண்ட்களுக்கு எல்லாம் யார் பொறுப்பாளி; ஷேர் ஆட்டோவில் யாரிடம் காசு கொடுப்பது என்பதெல்லாம் இன்னும் பிரித்து மேயப்படாத பிரச்னைகள்!

இந்த வண்டிகள் எல்லாம் பாமரனின் பயன்பாட்டுக்கு வர குறைந்தது எட்டு ஆண்டுகளாவது பிடிக்கும் என்று கூகிள் அறிவித்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அரசாங்கம் அசால்ட்டாக அனுமதிக்குமா, அதற்குள் மீசை முளைக்காத அத்தைக்கு சித்தப்பா என்று பெயர் ஏன் வைப்பானேன், அப்படி சித்தப்பா என்றோ மாமா என்றோ பேர் வைக்கும் பட்சத்தில் வரும் கார்கள், பெட்ரோல் கம்மியாகும்போது அதுவே பெட்ரோல் கடையில் பிரேக் அடித்து நின்று, இந்த ஓனர் அக்கவுண்டல இவ்வளவுதான் காசு இருக்கு அதுக்குத் தகுந்தமாதிரி போட்டாப் போதும் என்னும் அளவுக்கு டெவலப் ஆகலாம். நான் ரொம்ப அழுக்கா இருக்கேன், வாட்டர் வாஷ் தவிர வேறு எங்கும் போக மாட்டேன் எனக் குளிப்பதற்கு அடம் பிடிக்கலாம். ஏன், டயர் பஞ்சர் ஆனால் இந்த இடத்தில் இருக்கிறோம் என்று மெக்கானிக்குக்கு கால்கூடச் செய்யலாம். ஆனால் அந்தக் காலத்திலும், தெரியாமல் இடிபட்டால், யார்டா சோமாறி என்று  இறங்கித் திட்ட கண்டிப்பாக நாம் தேவை.

9 comments so far

 1. REKHA RAGHAVAN
  #1

  //ஆனால் அந்தக் காலத்திலும், தெரியாமல் இடிபட்டால், யார்டா சோமாறி என்று இறங்கித் திட்ட கண்டிப்பாக நாம் தேவை.//

  அதானே! நாமில்லாமல் எப்புடி?
  ரேகா ராகவன்.

 2. Ganesh
  #2

  அமெரிக்காவிற்கு எட்டு வருஷம்ன்னா அத்திப்பட்டிக்கு…. இப்பத்தான் கொஞ்சம் ரோட் நெறய ஊழல்ன்னு கோல்டன் நால்வழிச்சாலை போடறோம். இதில வேறே நீங்க ஜோக் அடிக்காதிங்க சார்.

 3. Abarajithan
  #3

  நல்ல கட்டுரை. எருமைமாட்டையும் ஒன் வேயையும் கவனிக்க இந்திய மென்பொருள் பொறியாளர்களை மேம்பொருள் உருவாக்கச் சொல்லலாமே?

  (அதாவது இடைத்தேர்தல் வருவதற்கு இரண்டு மாதம் முன்னாலேயே கூகுள் அலர்ட் ஆகி, எந்த மினிஸ்டர் எந்த தொகுதிக்கு என்பதை கண்டுபிடித்து, சிக்கலான அல்காரிதங்கள் மூலம் அவர்களின் பயண வழிகளை எதிர்வுகூறி வெற்றிகரமாக வண்டியை ஓட்டலாமே?)

  //எல்லாவற்றுக்கும் மேலாக கூகிள் பெரும்பாலான சாப்ட்வேர்களைப் பொதுப் பயன்பாட்டுக்கு விட்டாலும், பீட்டா என்றே வைத்திருக்கும். //

  ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு: If it ain’t broke, don’t fix it, அதாவது ஒரு மெத்தட் ஒழுங்காக வேலை செய்தால், அதை மாற்றவேண்டிய உடனடி அவசியம் இல்லாவிட்டால் மாற்ற வேண்டாம் என்பது. ஆனால் கூகிள் இதைக் கணக்கெடுப்பதில்லை.. புதிய புதிய முயற்சிகளை வாரா வாரம் வெளியிடுகின்றது. அதில் குறிப்பிடத்தக்க அளவு முயற்சிகள் பெருவெற்றி பெறுகின்றன. அதனால்தான் இன்று நம்பர் ஒன் தேடல் இயந்திரமாகவும், மின்னஞ்சல் வழங்குனராகவும், வரைபட வழங்குனராகவும், இணையத்தின் மிகப்பெரிய காணொளி பகிர்வு சமூகத்தின் உரிமையாளர்களாகவும் முன்னேறியிருக்கின்றனர்.

  இவ்வாறு தேவையற்று ஒரு முறையை மேம்படுத்தும்போது, அதில் பல பிரச்சனைகள் உருவாக வாய்ப்பிருக்கின்றன.. இதனால்தான் பல கூகுள் சேவைகள் பீட்டா முத்திரையைத் தாங்கி வெளிவருகின்றன. அதுவும் பயனர் நலனுக்கே..

  //சில சமயம் இந்த டெக்னாலஜியைப் பயன்படுத்தும் அளவுக்கு இன்னும் மக்கள் வளரவில்லை; காம்பிளான் குடிக்கவேண்டும் என்று கொடுத்த சாப்ட்வேரை வேரோடு பிடுங்கிக்கொள்வார்கள். ஆசை காட்டி மோசம் செய்வார்கள். //

  அவர்களது டெக்னாலஜியை மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு வளரவில்லை என்பதல்ல காரணம், அவர்களது டெக்னாலஜியை மக்கள் வரவேற்கவில்லை, எதிர்பார்த்தளவு இலாபம் கிடைக்கவில்லை அல்லது மக்களுக்கு புரியவில்லை எனும்போது, அதில் செலவிடும் பணத்தையும் உழைப்பையும் வேறொரு புதிய முயற்சிக்கு செலவிடுவதுதானே நியாயம்? எனவே மோசம் செய்வது கூகுளல்ல, நாம்தான். கூகிள் காரை நாம் வரவேற்றால், பயன்படுத்தத் தொடங்கினால் கூகுள் ஒருபோதும் அச்சேவையினை நிறுத்தாது.

 4. அருண்பிரபு
  #4

  //லைசன்ஸ் எடுக்க கப்பம் கட்டத் தேவையில்லை; ஓவர் ஸ்பீட், சிக்னல் நிற்கவில்லை போன்ற பிரச்னைகள் எல்லாம் எழாது….
  பெட்ரோல் கம்மியாகும்போது அதுவே பெட்ரோல் கடையில் பிரேக் அடித்து நின்று, இந்த ஓனர் அக்கவுண்டல இவ்வளவுதான் காசு இருக்கு அதுக்குத் தகுந்தமாதிரி போட்டாப் போதும் என்னும் அளவுக்கு டெவலப் ஆகலாம். நான் ரொம்ப அழுக்கா இருக்கேன், வாட்டர் வாஷ் தவிர வேறு எங்கும் போக மாட்டேன் எனக் குளிப்பதற்கு அடம் பிடிக்கலாம். ஏன், டயர் பஞ்சர் ஆனால் இந்த இடத்தில் இருக்கிறோம் என்று மெக்கானிக்குக்கு கால்கூடச் செய்யலாம். //

  Let us see a typical Indian politician’s reaction for this.

  பேரன்புமிக்க வாக்காளப் பெருங்குடி மக்களே! தாய்மார்களே! அரசு ஊழியர்களே! தொழிலாளத் தோழர்களே! கூகிள் கார் என்று ஒன்றை இங்கே அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஆளில்லாமல் ஓடும், எல்லா வேலைகளையும் அதுவே செய்யும் என்று கட்டியம் கூறுகிறார்கள். லட்சோபலட்சம் டிரைவர்களின் வயிற்றிலடித்தும், RTO அலுவலர்கள், traffic policeகாரர்களின் வாயிலடித்தும் பிழைக்கும் முதலாளித்துவ ஏகதிபத்திய சிந்தனையில் பிறந்த இந்தக் கூகிள் கார் நம் கலாசாரத்திற்க்கும் பண்பாட்டிற்கும் எதிரானது. இது வேலை செய்யும் விதமோ மிகவும் புதிரானது, ஆதனால்தான் சொல்கிறேன்…. இது நமக்கெதிராக சதிராடுது.

  எமது அரசு என்றென்றும் தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட கனிவான, அன்பான, பண்பான மக்கள் நல அரசு என்பதால், இந்த ஆளில்லாத கூகிள் காரை நாம் வன்மையாகக் கண்டிக்கிற அதே வேளையிலே, தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி மூலம் சமுதாய முன்னேற்றம் ஏற்படுவதைத் தடுத்தோம் என்கிற வரலாற்றுப் பழிக்கும் தமிழன் ஆளாகாத வகையிலே, திறம்பட யோசித்து தெளிவான முடிவெடுக்க வகைசெய்ய ஏதுவாக வருகிற தேர்தலிலே உங்களின் பொன்னான வாக்குகளை ஊசி சின்னத்திலே போட்டு நிரந்தரமாக நாங்களே காது குத்த… அடச்சீ… ஆட்சி செய்ய வகை செய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டு, வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி… வணக்கம். (சோடா குடுங்கப்பா!)

 5. Suresh
  #5

  @arun prabhu,

  காரில்லாக் கண்மணிகளின் கண்ணீர் என் கனவை வந்து கடலாக்கியது. தேரில்லாச் சோழன் இருக்கலாம், காரில்லாத்தமிழன் இருக்கலாமா?

  ஆளுக்கொரு ஆளில்லா காரை இலவசமாகத் தந்திடும் கலைஞர் காரொலி திட்டத்தில் கையொப்பமிடுவதே கழக ஆட்சியின் முதல் கையொப்பமாக இருக்கும்..

 6. Appu
  #6

  @Abarajithan
  சில சமயங்களில் சராசரியாக கூகிளின் 45% சதவீத பொருட்கள் பீட்டாவில் தான் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அதுவும் கூகிள் லாப்களில் இருக்கும் பொருட்களைத் தவிர்த்து. அவற்றையும் சேர்த்தால், 75% பொருட்கள் அல்லது பீட்டாவில் இருக்குமாம். ஜி மெயிலை 5 வருடங்கள் பீட்டாவில் வைத்திருந்தார்கள்! ஆனால் இதற்கு காரணமாக அவர்கள் சொல்வது எங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று[It does not meet our internal metric requirements]ஆனால் பெரிய தப்பு நடந்தால் பீட்டா மீது பழி போடலாம் என்பதால் தான் என்பது பெரும்பாலானோர் கருத்து!எல்லாவற்றுக்கும் மேலாக பீட்டாவில் இருக்கு சேவைகளுக்கும் காசு வாங்கிய ஒரே கம்பெனி அவர்களாகத் தான் இருக்கும்.

  அவர்கள் தயாரித்த கூகிள் வீடியோ சரியாக போணியாகாத காரணத்தினால், 5 பில்லியன் டாலர்கள் கொடுத்து தான் யூடியுப்பை வாங்கினார்கள். சில காலமாகத் தான் யூடியுப் மூலமாக அவர்கள் வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

  கூகிள் இவ்வாறு புது புது முயற்சிகளில் எல்லாம் இறங்க வேண்டுமா? அவர்கள் மூடுவிழா நடத்திய சேவைகள் மிக நீளம். அதில் செலவிட்ட உழைப்பை மற்ற உருப்படியான சேவைகளில் செலுத்தி இருக்கலாம் என்பது எல்லாம் தனியாக சில கட்டுரைகள் மூலம் கவனிக்க வேண்டிய விஷயம்.
  உதாரணமாக இந்தக் கார், இதற்கும் கூகிளுக்கும் என்ன சம்பந்தம்? யாரைக் கேட்டு வீணாக பங்குதாரர்கள் பணத்தை செலவிடுகிறார்கள் என கேஸ் கூட போட முடியும்!!!

 7. Abarajithan
  #7

  //அவற்றையும் சேர்த்தால், 75% பொருட்கள் அல்லது பீட்டாவில் இருக்குமாம். //

  இருக்கட்டுமே.. பீட்டாவிற்கு பயப்படும் பயந்தாங்கொள்ளிகள் கூகுளை பயன்படுத்தித்தான் ஆகவேண்டும் எனும் கட்டாயம் இல்லையே?

  //ஆனால் பெரிய தப்பு நடந்தால் பீட்டா மீது பழி போடலாம் என்பதால் தான் என்பது பெரும்பாலானோர் கருத்து!//

  உண்மைதான். ஆனால் அந்த ஐந்து வருடமும் படிப்படியாக புதுப்புது முறைகள் மூலம் ஜிமெயிலை மேம்படுத்தி வந்தார்கள் என்பதை மறக்கக் கூடாது. தற்போது பீட்டாவை நீக்கியதற்கு காரணம், ஜிமெயில் லேப்ஸ் ஐ அறிமுகப்படுத்தி தப்பு செய்யும் வாய்ப்பிருக்கின்ற சேவைகளை அதற்குள் போட்டு வைப்பதுதான்..

  //அவர்கள் தயாரித்த கூகிள் வீடியோ சரியாக போணியாகாத காரணத்தினால், 5 பில்லியன் டாலர்கள் கொடுத்து தான் யூடியுப்பை வாங்கினார்கள். //

  இதுவும் உண்மைதான். ஆனால் கூகிள் வீடியோ காணொளிகளை பகிர்வதற்கான தளமல்ல.. அது காணொளிகளை தேடுவதற்கான தளம். இன்றும் பல வீடியோ பகிர்வு தளங்களில் ஒன்றாக தேடவேண்டுமென்றால் பலர் பயன்படுத்துவது கூகிள் வீடியோ தளத்தைத்தான். அத்துடன் கூகிள் யூடியூப்-ஐ வாங்கியிருக்காவிட்டால் அதில் html 5, வீடியோ எடிட்டர் போன்ற புதிய முயற்சிகள், வசதிகள் வந்திருக்காது அல்லவா?

  //உதாரணமாக இந்தக் கார், இதற்கும் கூகிளுக்கும் என்ன சம்பந்தம்? யாரைக் கேட்டு வீணாக பங்குதாரர்கள் பணத்தை செலவிடுகிறார்கள் என கேஸ் கூட போட முடியும்!!!//

  இது என்ன கேள்வி? கூகுள் ஒரு இணைய, மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்பு நிறுவனம். அவர்கள் தயாரித்த கூகுள் எர்த்தும் குரோமும் அவர்கள் வெளியிடும் ஆண்ட்ராய்ட்டும் சூப்பர் ஹிட்டாகியது பலருக்கும் தெரிந்ததே.. அந்தவகையில் அவர்கள் ‘அவர்களது’ மேப்ஸ், ஸ்ட்ரீட் வியூ போன்ற சேவைகள் ஊடாகவும் இன்னும் புதிய மென்பொருட்கள் மூலமாகவும் ஒரு வாகனத்தை தானே ஓட்டக்கூடிய மென்பொருளை கண்டுபிடித்து டெஸ்ட் செய்து வருகின்றார்கள். அந்த மென்பொருளை பயன்படுத்தலாமா கூடாதா என்பது அரசாங்கமும் கூகுளும் கலந்தாலோசித்து முடிவெடுக்கவேண்டிய விடயம். அதில் பணம் போடுவது பங்குதாரர்கள் கூகுள் மேல் வைத்துள்ள நம்பிக்கை. வெறும் எருமைமாட்டை காரணம் காட்டி கூகுளின் முயற்சியை சாடுவதற்கு உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?

 8. bogan
  #8

  இதற்கு ஒரே வழி கூகிள் காரின் குறுக்கே வரும் சாலைப் பண்பாடு தெரியாத நம் ஊர் எருமைமாடுகளை எல்லாம் உலகத்தை விட்டே எலிமினேட் செய்துவிட்டு டிராபிக் அறிவுள்ள புதிய தலைமுறை எருமை மாடுகளையும் கூகுளையே தயாரிக்கச் சொல்லிவிடலாம்

 9. sundaram
  #9

  யார்டா சோமாறி என்று இறங்கித் திட்ட கண்டிப்பாக நாம் தேவை

  யார் கண்டது கார் பின்னால் உட்காந்து இருப்பவரை பார்த்து, ஏன்டா சோமாறி எவனோ பின்னால் இடுச்சிட்டானே போய் பாக்கமாடியா எல்லா வேலையும் நானேதான் செய்யனுமா அப்படின்னு கேட்டாலும் கேக்கும்

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: