இயந்திரப் புலி திப்பு சுல்தான்

tipuபெருங்கருணையும் பேராற்றலும் உடைய மாவீரராக, சமூக – சமயச் சீர்திருத்தவாதியாக, பொதுவுடைமைவாதியாக, நவீன தொழில்நுட்பவாதியாக, பிரிட்டிஷாருக்குச் சிம்மசொப்பனமாக, மைசூரின் புலியாக…. சிறந்த மன்னராகவும் நல்ல குடிமகனாகவும் வாழ்ந்த ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மாமனிதர் திப்புசுல்தான்.

திப்பு சுல்தான் பதவிக்கு வந்தது முதல் இறக்கும் வரை அவரின் முகத்துக்கு முன்னால் சில எதிரிகளும் முதுகுக்குப் பின்னால் பல துரோகிகளும் அவரைத் தாக்கத் தயார்நிலையில் காத்திருந்தனர்.  திப்பு சுல்தான் தன் மன, உடல், அறிவு வலிமையால் அவர்களைத் தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கியபடியே இருந்தார். உலகில் எந்தப் பேரரசருக்கும் இல்லாத நெருக்கடிகள் திப்புசுல்தானுக்கு இருந்தன. அவற்றைத் தகர்த்தபடியே அவர் தன்னை மைசூரில் நிலைப்படுத்திக்கொண்டார்.

அறப்பணியா, அரசுப்பணியா?   

ஹைதர் அலியின் முதல் மனைவி ஷாபாஸ் பேகம். அவருக்கும் ஹைதல் அலிக்கும் பெண்குழந்தைகளே பிறந்தன. ஆண் வாரிசு இல்லை. ஆதலால் ஷாபாஸ் பேகமின் வற்புறுத்தலின்பேரில் ஹைதர் அலிக்கு ஃபக்ர் உன்னிஸாவைத் திருமணம் செய்துவைத்தார்.ஃபக்ர் உன்னிஸா தனக்குப் பிறக்கும் முதல்குழந்தையை அல்லாவின் திருப்பணிக்கு நேர்ந்துகொள்ளவும் அடுத்த குழந்தையை வாரிசாக ஏற்றுக்கொள்ளவும் ஹைதர் அலியிடம் அனுமதிபெற்றுக்கொண்டார். அத்தம்பதியருக்கு ஐந்தாண்டுகள் குழந்தைப்பேறு இல்லை.

முதல் குழந்தையாகத் திப்பு சுல்தான் 20.11.1750ஆம் நாள் பிறந்தார். ஹைதர் அலி தன் இரண்டாம் மனைவி ஃபக்ர் உன்னிஸாவின் விருப்பப்படி திப்பு சுல்தானை இறைப்பணிக்கு ஒப்படைத்தார். ஹைதர் அலியின் முன்னோர்களின் சூஃபி மரபு இனி திப்பு சுல்தானால் தொடரும் என்று நம்பினார். ஆனால், அல்லாவின் கணக்குவேறு விதமாக இருந்தது.
திப்புசுல்தானுக்கு இஸ்லாமும் பிற இந்திய மதங்களும் கற்பிக்கப்பட்டன. அமைதி என்பது ஒரு மந்திரமாகவே திப்பு சுல்தானுக்குக் கற்பிக்கப்பட்டது. ஹைதல் அலி – ஃபக்ர் உன்னிஸா தம்பதியருக்கு இரண்டாவதாக ஒரு ஆண்குழந்தை பிறந்தது. கரீம் என்று பெயரிட்டனர். அவனையே தன் அடுத்த ஆட்சி வாரிசாக ஹைதர் அலி நினைத்தார்.

ஆனால், கரீம் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானான். ஹைதர் அலி கலங்கினார். அவர் திப்புசுல்தானைப் பார்க்கச் சென்றார். அப்போது திப்புசுல்தான் ஒரு பண்டிதரிடம் பாடம் படித்துக்கொண்டிருந்தார்.

அப்போதே ஹைதர் அலி தன் முதல் மகன் திப்பு சுல்தானின் மொத்த ஆன்மிகப் படிப்பையும் நிறுத்தினார். திப்பு சுல்தானின் கைகளில் தன் வாளை ஒப்படைத்தார். இனி திப்பு சுல்தான் ஆன்மிகப் பாதையில் பயணிக்க முடியாது. இனி அமைதியை அவர் போர்களத்தில்தான் தேடவேண்டும்.

வித்தியாசமானவர்

திப்பு சுல்தானுக்குப் போர்க்கலைகள் கற்பிக்கப்பட்டன. ஒரு தகுதிவாய்ந்த இளவரசராகத் திப்பு சுல்தான் உருவானார். அப்போது திப்பு சுல்தானுக்கு வயது 15. பெத்தனூர் அரசர் ஹைதர் அலியிடம் வாலா(ளா)ட்டினார். பாலம் என்ற இடத்தில் ஹைதர் அலியின் படைகள் பெத்தனூரை நோக்கி முன்னேறின. இந்தப் போரைக் காண்பதற்காக (அதாவது போர் குறித்த பிராக்டிகல் எக்ஸாமாக) திப்பு சுல்தானும் அழைக்கப்பட்டிருந்தார்.

ஹைதர் அலியும் அவரது படைகளும் பெத்தனூர் அரசனைப் பந்தாடின. திப்புசுல்தான் போர்க்களத்திலிருந்து சற்றுத் தொலைவிலிருந்தார். தன் தந்தைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று கருதிய திப்பு சுல்தான் வேறுவழியில் ஹைதர் அலி போரிடும் பகுதிக்குச் சென்றார்.

அவ்வாறு போகும் வழியில் பெத்தனூர் அரசரின் குடும்பத்தாரைச் சந்தித்தார். அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துவந்தார். இச்செய்தி பெத்தனூர் அரசருக்குத் தெரிந்ததும் அவர் ஹைதர் அலியிடம் சரணடைந்தார்.

திப்பு சுல்தான் பெத்தனூர் அரசரின் குடும்பத்தாரைப் பிணையக் கைதியாகப் பிடித்துள்ளார் என்பதனை அறிந்த ஹைதர் அலி மகிழ்ச்சியுடன் திப்பு சுல்தானைப் பார்க்க வந்தார். அதற்குள் ஹைதர் அலியின் தளபதி மக்பூல்கான் திப்பு சுல்தானிடம் வந்து, பிணையக் கைதிகளைப் பார்வையிட்டார். திப்பு சுல்தானின் வீரத்தைப் புகழ்ந்தார். பின் வழக்கம்போலப் பிணையக் கைதிகளிடம் வென்றவர்கள் நடத்தும் அத்துமீறல்களைச் செய்யத் துணிந்தான். அது திப்புசுல்தானுக்குப் பிடிக்கவில்லை. எச்சரித்தார். அவன் கேட்கவில்லை. திப்புசுல்தான் தன் கைத்துப்பாக்கியால் சுட்டார். திப்புசுல்தானின் அரசியல்கொலைகளின் எண்ணிக்கை மக்பூல்கான் கொலையிலிருந்து தொடங்கியது.

திப்புசுல்தான் பெத்தனூர் அரச குடும்பத்தாரைப் பாதுகாத்த்தும் மக்பூல்கானைக் கொன்றதும் ஹைதர் அலிக்குச் சரியாகவே பட்டது. திப்புசுல்தானின் விருப்பப்படி ஹைதர்அலி பெத்தனூர் அரசரையும் அவரது குடும்பத்தாரையும் விடுவித்தார்.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

“எங்கெல்லாம் பிரிட்டிஷார் அத்து மீறி ஆக்கிரமிப்பு நடத்துகிறார்களோ அங்கெல்லாம் விரைந்து செல்லவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, நம் எதிரியாகவே இருந்தாலும் சரி, அவர்களுக்கு ஆதரவாகத் தோள்கொடுத்து நிற்கவேண்டும்.”

இதுதான் திப்புசுல்தானுக்கு அவரின் தந்தை ஹைதர்அலி சொல்லிச் சென்ற (மனத்தில் விதைத்துச் சென்ற) மகாமந்திரம். இதனைத் திப்புசுல்தான் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். அதனால்தான் அவர் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தார்.

முதல் வெற்றியும் தொடர் வெற்றிகளும்

கி.பி. 1776ஆம் ஆண்டு மராட்டியர்களுக்குச் சொந்தமான காதிகோட்டையைத் திப்புசுல்தான் கைப்பற்றினார்.

கி.பி. 1767ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தளபதி ஜோசப் ஸ்மித் தலைமையில் வந்த பிரிட்டிஷ் படையைத் திப்புசுல்தான் வாணியம்பாடியில் எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். அப்போது திப்புசுல்தானுக்கு வயது 17.

அன்றுமுதல் கி.பி. 1769ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பிரிட்டிஷ் படை அத்துமீறுகிறதோ அங்கெல்லாம் திப்புசுல்தான் தன் வாளை வீசி அவர்களை அடக்கினார்.
பின் கி.பி. 1780ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் மைசூர் போரில் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகத் தன் தந்தையுடன் இணைந்து போர்தொடுத்தார்.

மைசூர் சுல்தான்

07.12.1782 அன்று தன்னுடைய தந்தை ஹைதர் அலி இறந்தபின் 26.12.1782ஆம் நாள் மைசூர் சுல்தானாக ஆட்சிப்பொறுப்பினை ஏற்றார். அப்பொது திப்பு சுல்தானுக்கு வயது 32.
புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியைத் தன்னுடைய சின்னமாகப் பயன்படுத்தினார். துரோகிகளாக மதிமந்திரி பூர்ணையா தனக்கு அடையாளம் காட்டிய அத்தனைபேரையும் மறு பரிசீலனையே இல்லாமல் மன்னித்தார்.

சுல்தானின் அந்தப்புரம்

திப்புசுல்தானின் அதிகாரப்பூர்வமான மனைவியர்கள் நால்வர். அவர்கள் ருக்கையா பானு, ஆற்காடு ரோஷன் பேகம், புரந்தி பேகம், கதீஜா ஜமானி பேகம் ஆவர்.

திப்புசுல்தானுக்கு ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷ்ருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிரண்டு ஆண்குழந்தைகள் பிறந்தன.
பீவி பேகம், அஸ்முலுன்னிஸா பேகம், உமருன்னிஸா பேகம், பாத்திமா பேகம், பதீயுன்னிஸா பேகம், நூருன்னிஸா பேகம், குலூமா பேகம், கதீஸா பேகம் ஆகிய எட்டு பெண் குழந்தைகள் பிறந்தனர்.

திப்புவின் ஆழ்மனது   

திப்புவின் இயந்திரப் புலி சுவாரசியமானது. ஒரு புலி ஒரு பிரிட்டிஷ் வீரரைக் கடித்துக் குதறுவது போன்று ஓர் இசை இயந்திரத்தை  பிரெஞ்சுக் கலைஞர் ஒருவரைக் கொண்டு திப்பு வடிவமைத்திருந்தார்.

ஒரு விசையை இயக்கியவுடன் அந்தப் புலி கர்ஜனையுடன் அந்த பிரிட்டிஷ் வீரனைக் கடித்துக் குதறும். வீரன் அலறுவான். புலியின் கர்ஜனையும் வீரனின் மரண ஓலமும் கூடிய இந்த இயந்திரப்புலி திப்புவுக்கு பிரிட்டிஷாரைப் பழிதீர்க்கும் எண்ணத்தை அவ்வப்போது நினைவூட்டிவந்தது.

இந்த இயந்திரப் புலி ஒரு குறியீடு. அது திப்புவின் ஆழ்மனது. அது திப்புவைத் திப்புவுக்கு நினைவூட்டியபடியே இருந்தது. திப்புவின் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்வை வளர்த்துவந்தது. திப்புவின் இறப்பிற்குப் பின்னர் அது பிரிட்டிஷாரால் திருடப்பட்டு, இலண்டனுக்குக் கடத்தப்பட்டது. இப்போது அது அங்குள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

பொற்கால ஆட்சி

திப்பு சுல்தான் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம்.

வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு பிரிட்டிஷார் நடத்திய போர்களுக்குப் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள் பொருளுதவிச் செய்து வந்தனர். ஆனால், வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்றியவர் திப்புசுல்தான்.

அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தன் அமைச்சரைக் கண்டித்த திப்புசுல்தான், “மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்றார். இந்தக்கேள்வியை நாம் இப்போது நம் அரசிடம் கேட்கவேண்டும்.

பிரிட்டிஷார் விவசாயிகளைக் கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியைத் திப்புசுல்தான் தடை செய்தார். பிரிட்டிஷார் பாலியல் தொழிலில் பணம் சம்பாதித்தபோது திப்புசுல்தான் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் பாலியல் தொழிலைத்தடை செய்ததோடு அநாதைச் சிறுமிகளைக் கோயிலுக்குத் தேவதாசியாகத் தானமளிப்பதையும் தடை செய்தார்.

அடிமை விற்பனையைத் தடை செய்வதற்காகத் திப்புசுல்தான் ‘எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என்று ஆணை பிறப்பித்தார். வரதட்சணைக் கொடுமையும் சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளையும் திப்புசுல்தான் நீக்கினார்.

கேரளத்தில் நம்பூதிரிகள் கொண்டிருந்த ஆச்சாரப் பழக்கவழக்கத்தில் உள்ள தீய முறையை நீக்கவேண்டியும் தன் மக்கள் தூயவாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கிலும்,  “உங்களுக்கு மத்தியில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்” என்றார்.

கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தார் திப்புசுல்தான்.

மதச்சார்பின்றி அனைத்து மதத்தினருக்கும் அரசுப் பணத்தில் கொடைகள் வழங்கினார். இந்துக் கோயில்களுக்கும் அறநிலையங்களுக்கும் பிராமண மடங்களுக்கும் முஸ்லிம் ஸ்தாபனங்களுக்கும் திப்புசுல்தான் ஆண்டுதோறும் 2.34 லட்சம் வராகன்கள் செலவிட்டார்.
“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்திருக்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் மூன்று லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.

சென்னை மாகாணத்தைப் போலில்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
கி.பி. 1792ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்குப்பின் திப்புசுல்தானிடமிருந்து பிரிட்டிஷார் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து பிரிட்டிஷாரின் வரிக் கொடுமை தாளாமல் 4,000 விவசாயிகள் திப்புசுல்தானின் ஆட்சிப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்ததைக் கி.பி. 1796ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அதிகாரி தாமஸ் மன்றோ தன்னுடைய ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி. 1792 ஆம் ஆண்டு தோல்விக்குப் பின்னரும் திப்புசுல்தான் தமது எல்லைக்குள் வாணிகம்செய்துகொள்ள பிரிட்டிஷாருக்கு அனுமதி தரவில்லை. உள்ளூர் வணிகர்களை ஊக்குவித்தார். பணப் பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தைப் பிற உற்பத்தித் துறைகளுடன் இணைத்தார். பாசன வசதியைப் பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்தினார்.

கி.பி. 1911ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக் கட்டும் பணிகளைத் துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்குக் கி.பி. 1798ஆம் ஆண்டு திப்புசுல்தான் அடிக்கல் நாட்டப்பட்ட கல்லைக் கண்டனர். அக் கல்வெட்டில் “இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்“ என்று திப்புசுல்தான் ஆணையிட்டிருந்தார்.

“விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றினார்.
“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்குத் திப்புசுல்தான் எழுத்துப் பூர்வமாக ஆணையிட்டார்.

பிரிட்டிஷாருக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பிய திப்புசுல்தான், “அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும். தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்” என்று ஆணையிட்டார்.

இத்தனை நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்தி ஆட்சிபுரிந்த திப்புசுல்தானின் மீது வரலாற்றாசிரியர்கள் மதவாத, இனவாதக் கருத்துக்களைத் தூவி அவரின் புகழுக்குக் கலங்கம் விளைவித்தனர். சங்கும் சுட்டாலும் வெண்மைதரும் என்ற விதிக்கு ஏற்ப திப்புசுல்தானின் புகழ் இம்மியும் குறையவில்லை.

சுல்தானின் ராணுவம்

மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல், போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார்.

பிரிட்டிஷாரின் அத்துமீறல்களை அடக்குவதற்கு வாளும் வேலும் மட்டும் பயன்படாது தொழில் முறையில் பயிற்சி பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதைத் திப்பு சுல்தான் புரிந்துகொண்டார்.

ஆதலால் கடற்பயிற்சி பள்ளிகளை உருவாக்கி, கடற்படையில் பீரங்கிகள் மற்றும் பிரிட்டிஷாருக்கு நிகராக நவீன ஏவுகணைகளைப் பயன்படுத்தினார். சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தானே.

திப்பு சுல்தானுக்கு மொத்தம் 3.20 லட்சம் வீரர்கள் இருந்தனர். மூன்று லட்சம் துப்பாக்கிகளும் 929 பீரங்கிகளும் 2.24 லட்சம் வாள்களும் இருந்தன. தன் தந்தை பயன்படுத்திய ஏவுகணைகளைத் திப்புசுல்தான் பிரெஞ்சு படைவீரர்களின் துணையுடன் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதுவகையில் பயன்படுத்தினார்.

மோதி விளையாடு

மேற்கு கடற்கரையிலிருந்து பிரிட்டிஷாரைத் துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால், பிரெஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்தினார். கி.பி. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4,000 சிப்பாய்கள் திப்புசுல்தானால் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் பிரிட்டிஷாருக்குத் திப்புவை நினைத்து பதறச் செய்தது.

கி.பி. 1790ஆம் ஆண்டு முதல் கி.பி. 1792ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர் யுத்தம் என்பது பிரிட்டிஷாரின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டதே. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனைப் போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராகப் போர் புரியத் தயாரானான்.

இச்சூழலில் திப்புசுல்தானுக்கு எதிராகப் போர் புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் பிரிட்டிஷாருடன் இணைந்து கொண்டனர். தனித்து நின்ற திப்புசுல்தான் அத்தனை  எதிரிகளையும் ஒருகைபார்த்தார்.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புசுல்தானின் கோட்டைக்குள் யாராலும் நுழைய முடியவில்லை.

சூது கவ்வியது

மூன்றாம் மைசூர் போரில் பிரிட்டிஷாரிடம் திப்பு தன் தோல்வியைத் தவிர்ப்பதற்காகச் சமாதான உடன்படிக்கைக்கு இசைவு அளித்தார்.

அதன்படி மைசூரின் ஒரு பகுதியையும் 3.3 கோடி வராகனும் கொடுக்க 26.02.1792ஆம் நாள் ஒப்புக்கொண்டார். முதல்தவணையாகத் திப்பு 1.65 கோடி வராகன் கொடுத்தார். திப்புவின் திண்டுக்கல், கோவை, சத்தியமங்கலம், தேன்கனிக்கோட்டை, சேலம், கிருஷ்ணா நதியைச் சார்ந்த பகுதிகள் பிரிட்டிஷாரின் ஆளுகைக்குச் சென்றன.

முழுப்பணத்தையும் கொடுக்கும் வரை பிணையக்கைதிகளாகத் திப்புவின் பிள்ளைகளான பத்துவயதுடைய அப்துல் காலிக் மற்றும் எட்டு வயதுடைய மொய்சுதீன் கான் ஆகியோர் காரன் வாலிஸ் பிரபுவால் 10.03.1792ஆம் நாள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மீதியுள்ள 1.65 கோடி வராகனை மூன்று தவணைகளில் சுமார் இரண்டாண்டு அவகாசத்தில் திப்பு செலுத்தி தன் மகன்களை 29.02.1794ஆம் நாள் மீட்டார்.

தன் மகன்களைப் பிரிந்திருந்த இந்த இரண்டாண்டு காலத்தில் திப்புசுல்தான் அடுத்து போருக்குத் தன்னைத் தயார்செய்திருந்தார். திப்புசுல்தானின் மகன்கள் மனத்தளவில் இங்கிலாந்து கலாச்சாரத்திற்கு பிரிட்டிஷாரால் மாற்றப்பட்டிருந்தனர். அதுமட்டுமல்ல அவர்களுக்கு அல்லாவின் மீதும் வெறுப்பு ஏற்படும் படி பிரிட்டிஷார் மூளைச் சலவை செய்திருந்தனர்.

தர்மம் தலை காக்கவில்லை

இந்தமுறை பிரிட்டிஷார் திப்புசுல்தானின் அமைச்சர்களை விலைக்கு வாங்கினர். திப்புசுல்தானுக்கு உதவியாகப் படைதருவதாகக் கூறியிருந்த நெப்போலியனால் அப்போது உதவிக்கு வரமுடியவில்லை. எதிரிகளுக்கும் குள்ளநரிகளுக்கும் இடையில் தனியாகச் சிக்கிக்கொண்ட திப்புசுல்தான் தன்னுடைய கடைசி 11,000 வீரர்களுடன் தானும் ஒரு சிப்பாயாக வாளேந்திப் போரிட்டு 04.05.1799ஆம் நாள் மாண்டார்.

ஆயுதம், அறிவுத் திருட்டுகள்

நான்காவது மைசூர் யுத்தத்தில் வஞ்சகம்,  சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் 04.05.1799ஆம் நாள் திப்புசுல்தானை வீழ்த்திய பிரிட்டிஷார்  அவரது அரண்மனைக்குள் புகுந்து அங்கிருந்த 9,700-க்கும் மேற்பட்ட நவீன ராக்கெட்டுகளை கைப்பற்றினர்.

திப்பு சுல்தான் தன் அரண்மனையில் அமைத்திருந்த ஓரியண்டல் லைப்ரரி என்ற பெயருடைய நூலகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், ராக்கெட் தயாரிப்பு சார்ந்த ஆய்வுக்குறிப்புகள் மற்றும் தொழில்சீர்திருத்தம் பற்றிய திப்புவின் பல்வேறு திட்டக்குறிப்புகள் ஆகியவற்றைக் கொள்ளையிட்டனர்.

இங்கிலாந்தில் கி.பி.19ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி காரணமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் திப்புசுல்தானின் அரண்மனையிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நூல்களின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டவைதான்.

திப்புசுல்தானின் ராக்கெட் தயாரிப்பு சம்பந்தமான ஆய்வுக்குறிப்புகளைக் கொண்டு தனது ராணுவத்திற்கு தேவையான ராக்கெட்டுகளை தயாரிக்க விரும்பிய பிரிட்டிஷ் அரசு அதற்காக அப்போது இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கிய கண்டுபிடிப்பாளர்  மற்றும் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான சர் வில்லியம் காங்கிரிவ் என்பவரை அணுகியது.

சில ஆய்வுகளை மேற்கொண்ட வில்லியம் காங்கிரிவ்  திப்புசுல்தானின் தயாரிப்பு முறைகளில் இருந்த சில அடிப்படை தவறுகளைக் களைந்து  திப்புசுல்தானின் ராக்கெட்டை மேம்படுத்திக் கி.பி. 1804ஆம் ஆண்டு “காங்கிரிவ்“ என்ற ராக்கெட்டை  வடிவமைத்தார்.
16அடிகள் நீளம் கொண்ட மூங்கில் கம்புகளின் முனையில் கட்டி ஏவப்பட்ட “காங்கிரிவ் ராக்கெட்டுகள்“ ஒன்பது கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டவையாக இருந்தன.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே கி.பி. 1800களில் நடந்த பல யுத்தங்களில் பிரிட்டிஷ் ராணுவத்தினரால் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன.

முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் தாம் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையத்திற்குச் சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கு பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (DRDO) முன்னாள் தலைமை இயக்குநர் மற்றும் விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, ‘இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்’ என்றும்  ‘ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது லண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்றும் கூறினார்.

இவர்களின் கருத்துகளிலிருந்து திப்புசுல்தானின் ஆயுதம் சார்ந்த தொழில்நுட்பத்தின் வெற்றியைப் புரிந்துகொள்ள முடிகிறது.

Tipu_Sultan_BLதிப்பு சுல்தானின் மரணத்திற்குப் பின்

திப்புவின் மரணத்துக்குப் பின் கி.பி. 1799ஆம் ஆண்டில் ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷ்ருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிரண்டு ஆண்குழந்தைகளும் குடும்ப உறுப்பினர்களும் திப்புவின் தளபதிகளில் சிலரும் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு வேலுர் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே சமயம் திப்புவின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருந்த வீரர்களும் பக்கீர்களும் குடிமக்களும் மைசூரில் இருந்து புலம் பெயர்ந்து வேலுரைச் சுற்றி முகாமிட்டனர்.

சிறையில் அடைபட்டிருந்த திப்புவின் மைந்தர்களோடு இரகசியத் தொடர்பை எற்படுத்திக்கொண்டு, அலோசனை செய்து ஒரு குறிப்பிட்ட நாளில் திடீர்ப் புரட்சி செய்ய என்று முடிவு செய்தனர். ஆனால், அந்தப் புரட்சித் திட்டம் ஒற்றர்கள் மூலமாகக் கசிந்து அங்கிலேயருக்குத் தெரியவந்ததால் வேலுர் கோட்டையைச் சுற்றி பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது.

இதனை அறியாத திப்புவின் வாரிசுகளும் அவரது பற்றாளர்களும் 10.07.1806ஆம் நாள் அதிகாலை 2.00மணியளவில் அதிரடியாகப் புரட்சியில் இறங்கினர். 100க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்களைக்  கொன்றனர். கோட்டையின்மேல் திப்புசுல்தானின் புலிக்கொடியைப் பறக்கவிட்டனர்.

இரண்டு நாட்களில் ஆற்காட்டிலிருந்து பிரிட்டிஷாரின் 19 லைட் ட்ரகூன்ஸ் என்ற 19ஆவது சிரிய குதிரைப் படை ஆயுதங்களுடன் வந்து அப்புரட்சியை முற்றிலும் முறியடித்தனர். 3000த்திற்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். பிடிபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்களைப் பீரங்கி வாய்களில் கட்டி, பீரங்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொன்றனர்.

அந்தப் புரட்சிக்குப் பின் திப்புவின் குடும்பத்தினர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவினர் மைசூருக்கும் மற்றொரு பிரிவினர் வங்கத்திற்கும் அனுப்பப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின் சில அண்டுகள் கழித்து திப்புவின் வாரிசுகளுக்கு மானியம் வழங்குவோம் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. ஆனால் வழங்கவில்லை. பிரிட்டிஷாரைப் போலவே நாமும் அவர்களைக் கைவிட்டு விட்டோம்.

எங்கக் கொள்ளுத் தாத்தா மைசூரின் சுல்தானாம்!    

திப்புவின் கொள்ளுப் பேரர்களில் ஒருவர் அன்வர்ஷா. அவருக்கு சன்வர், அன்வர், திலாவர், ஹஸன் ஆகிய நால்வரும் வாரிசுகள்.

அந்நால்வரும் அவர்களின் குடும்பத்தினரும் இன்று கல்கத்தாவிலுள்ள இளவரசர் அன்வர்ஷா தெரு  இன்று திப்புவின் பேரக்குழந்தையின் பெயராலேயே அழைக்கப்படும் தெருவில் உள்ள சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இதில் சன்வரும், அன்வரும் சைக்கிள் ரிக்க்ஷா  இழுத்துப் பிழைக்கிறார்கள். திலாவர் சிறிய டீக்கடை நடத்தி வருகிறார். ஹஸன் ஸ்கூட்டர்கள் மற்றும் ஆட்டோ ரிக்க்ஷாக்களுக்கு சீட் கவர் தைத்துக்கொடுக்கும் பணியைச் செய்கிறார்.

நமக்குத் திப்புசுல்தான் ஒரு வரலாற்று ராஜா. அவர்களுக்குத் திப்புசுல்தான் நம்பமுடியாத நிஜ ராஜா. அவர்களின் வாரிசுகள் திப்புசுல்தானின் வரலாற்றைப் படிக்காமல் இருப்பது நல்லது. படித்தால் “நம்ம கொள்ளுத்தாத்தாவா சுல்தானாக இருந்தார்?“ என்று நம்ப மறுப்பார்கள். அப்படித்தானே நாம் அவர்களை இப்போது வைத்திருக்கிறோம்!

திப்பு சுல்தான் (20 நவம்பர் 1750 – 4 மே 1799) பிறந்த தின  சிறப்புக் கட்டுரை.

0

முனைவர் ப. சரவணன்

14 comments so far

 1. Abu Mujahid
  #1

  நிறைவானக் கட்டுரை. அய்யா முனைவர் ப. சரவணன் அவர்களுக்கும் தமிழ் பேப்பருக்கும் நன்றி.

 2. SUTHANTHIRAM
  #2

  அருமை.வாழ்க.வளர்க.

 3. lavanya
  #3

  Thambi your article is very nice

 4. R.P.M.ADAM SAHIB
  #4

  நிறைவானக் கட்டுரை. அய்யா முனைவர் ப. சரவணன் அவர்களுக்கும் தமிழ் பேப்பருக்கும் நன்றி.

 5. க்ருஷ்ணகுமார்
  #5

  அன்பின் சரவணன்

  திப்பு செய்த மதவெறிக் கொலைகள் பற்பல பரங்கிப் பாதிரிகளாலும் சரித்ர ஆசிரியர்களாலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதை அப்படியே புறக்கணித்து திப்புவை கருணை (பெருங்கருணை!) உடையவனாகச் சித்தரிக்க முனையும் தங்களது வ்யாசம் மதசார்பின்மை என்ற பெயரில் பகிரப்படும் புனைவு. சரித்ரத்தை சிதைக்க முயலும் புனைவு.

 6. Dr. P. Saravanan
  #6

  பேரன்புள்ள திரு. கிருஷ்ணகுமார் அவர்களுக்கு
  வணக்கம்.
  புனைவின் நிழல் இன்றி வரலாறு இல்லை. வரலாற்றின் நிழல் இன்றிப் புனைவு இல்லை.
  பொதுப்புத்தியில் புனைவினை நம்பும் அளவிற்கு நாம் வரலாற்றை நம்புவதில்லை.
  திப்பு மட்டுமல்ல அவரின் தந்தை ஹைதர் அலியும் இந்துக்களுக்கு விரோதியல்ல. அவர் வேலுநாச்சியாருக்குப் படையுதவி செய்துள்ளார்.
  பிரிட்டிஷார் திப்புவிடம் வஞ்சகமாகப் பறித்துக்கொண்ட பகுதியில் வசித்த இந்துக்கள் பலர் திப்புவிடம் எஞ்சியிருந்த சிறிய பகுதியில் வாழ்வதற்காகப் புலம்பெயர்ந்தனர்.
  திப்பு இந்துக்களுக்கு எதிரி என்றால் அவரிடமும் அவரின் தந்தையிடமும் பூர்ணையா போன்றவர்கள் எவ்வாறு சிறப்புற பணியாற்றியிருக்க முடியும்?
  திப்பு இந்துக்களுக்கு எதிரி என்ற கருத்தினை விதைத்தவர்களுள் பிரிட்டிஷாருக்குப் பெரும்பங்குண்டு. அவர்களின் சதிகளுள் இதுவும் ஒன்று.
  இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகவும் அவர்கள் இந்துக்களுக்கு எதிரிகளாகவும் சித்தரிக்கும் போக்கு இந்திய அளவில் மிகுந்துவிட்டது. திருக்குர்-ஆன்யை உணர்ந்தவர்கள் மதக்காழ்புணர்வுடன் நடந்துகொள்ள மாட்டார்கள். திப்புவின் வீரமரணத்தில் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டவை வீர வாளும் ஒரு திருக்குர் –ஆனும் மட்டுமே. திப்புவின் வீர சரித்திரம் இந்துக்களின் இரத்தத்தால் எழுதப்பட்டதல்ல. அல்லாவின் (ஸல்) பெருங்கருணையினால் எழுதப்பட்டது.
  நன்றி.
  தங்கள் சரவணன்

 7. Abu Mujahid
  #7

  அய்யா முனைவர் சரவணன் நஞ்சை விதைப்பவர்களுக்கு நல்ல சவுக்கடி கொடுத்துள்ளீர்கள். நாலைந்து நாட்களாக ஒளிந்து இருந்து விட்டு தங்கள் நஞ்சை பதிவு செய்ய மெல்ல வருகிறார்கள். வரலாற்றில் இந்து முஸ்லிம் நிகழ்வுகளெல்லாம் இவர்களுக்கு எட்டிக்காயாக கசக்கும். இந்த நல்லுறவு எண்ணங்களை சீர்குலைக்க இவர்கள் விரைந்து ஓடி வருவார்கள். இவர்களிடம் சமுதாயம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 8. க்ருஷ்ணகுமார்
  #8

  அன்பின் சரவணன்,

  சரித்ரத்திலிருந்து புனைவுகளை ஒதுக்கி ஆவணங்கள் சார்ந்து அணுகுவதின் மூலம் பெறப்படுவது பாடம் பெற வேண்டிய சரித்ரம்.

  \\\ இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகவும் அவர்கள் இந்துக்களுக்கு எதிரிகளாகவும் சித்தரிக்கும் போக்கு இந்திய அளவில் மிகுந்துவிட்டது. \\\

  அப்படியா?

  மாறாக உக்ரவாதத்தில் முனைந்து இரங்கும் இஸ்லாமிய சஹோதரர்களை பூசி மொழுகி இவர்களை அமைதியின் பாதுகாவலர்களாக சித்தரிக்கும் போக்கு அறிவுஜீவித்தனம் என்ற போர்வையில் ஒளிர்வதாக நான் அவதானிக்கிறேன். இது மனித குலத்திற்கே பெருந்தீங்கு விளைவிக்கும் போக்கு.

  மாறாக போற்றப்பட வேண்டிய இஸ்லாமிய சஹோதரர்களை இது போன்ற அறிவுஜீவிகள் கண்டுகொள்வதும் இல்லை என்பதனையும் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

  என்னுடைய ஹிந்துஸ்தானி உப சாஸ்த்ரீய சங்கீத அத்யாபகர்கள் பலரும் முஸல்மாணிய சஹோதரர்கள். கபீரையும், ரஹீமையும், ரஸ்கானையும், சூர்தாஸரையும், மீராவையும் போதிக்கும் அவர்களை நான் தீவிர வாதியாக எப்படிப் பார்க்க இயலும். மேலும் தாங்கள் அவகாசம் இருப்பின் தமிழ் ஹிந்து தளத்தில் நான் பதிவு செய்த கீழ்க்கண்ட இரு பகுதிகளாலான வ்யாசங்களையும் வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  கடந்த ஐந்தரை வருஷ காலமாக லே, கார்கில், ஸ்ரீ நகர் முதல் ஜம்மு வரை ஜம்மு காஷ்மீர மாகாணத்தில் பல பகுதிகளில் உத்யோகத்திலிருந்த நான் பகிர்ந்த வ்யாசம் இது

  http://www.tamilhindu.com/2013/04/hindutva-transcending-religion-1/

  http://www.tamilhindu.com/2013/04/hindutva-transcending-religion-2/

  ஆனால் அஜ்மல் கஸாப், அஃப்சல் குரு, மத நூற்களில் அபிப்ராய பேதம் காரணமாக ஒரு க்றைஸ்தவ உபாத்யாயரின் கையை வாளால் வெட்டிய முஸல்மாணிய கும்பல், விதேசங்களில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்தமைக்கு மதறாஸிலும் ஹிந்துஸ்தானத்தின் பிற பகுதிகளிலும் பொதுச்சொத்துக்களை நாசம் செய்த இஸ்லாமியர் போன்றோரை என் வ்யாசத்தில் பகிர்ந்த ஸ்ரீமான் அயாஸ் ரஸுல் நஸ்கி போன்றோ அல்லது என்னுடைய குரு ஸ்தானத்தில் இருந்து எனக்கு சங்கீதம் போதிக்கும் பெரியோர்களுடனோ கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாது. எனக்குப் பரிச்சயமான ஹிந்துஸ்தானத்தை விரும்பும் இஸ்லாமியர் கலை, தேசப்பற்று, பண்பு இவற்றில் ஒளி வீசுபவர். வன்முறை இவர்களிடமிருந்து எண்ணிறந்த காத தூரம்.

  இந்த தேசத்தில் உயர்த்திப் பிடிக்க வேண்டியவர்கள் மத வேறுபாடு இன்றி மாற்று மதத்தவருடன் ஸ்னேஹத்துடனும் தங்கள் மதத்தை முறையாக ஒழுகியும் மாற்று மதத்தவர்களை ஹிம்சிக்காது வாழும் அன்பர்கள். நான் எழுதிய ஒரு வ்யாசம் போதாது என எண்ணுகிறேன். மேலும் இது சம்பந்தமாக நான் போற்றும் தேசபக்த கலையன்பர்களான இஸ்லாமிய சஹோதரர்களைப் பற்றி வ்யாசம் எழுதுகிறேன்.

  கூடவே ஸ்ரீமான் பால.கௌதமன் என்ற அன்பர் புனைவுகளன்றி ஆவணங்களின் பாற்பட்டு மட்டிலும் தொகுத்துள்ள வ்யாசத்தையும் தாங்கள் வாசிக்குமாறு விக்ஞாபித்துக்க்கொள்கிறேன். கீழ்க்கண்ட சுட்டியில்

  http://www.tamilhindu.com/2013/06/tipu-memorial-in-tn-a-shame/

  பால.கௌதமன் அவர்களின் வ்யாசம் மிகப்பெரும்பாலும் ஆவணங்கள் மட்டிலும் சார்ந்து வடிக்கப்பட்ட வ்யாசமாக இருப்பதைத் தாங்கள் வாசித்தறியலாம். ஆவணங்களில் பரங்கியரின் திப்பு கால குறிப்புகள் மட்டுமின்றி கேரளத்து சரித்ர ஆசிரியர்கள் இஸ்லாமிய ஆவணங்கள் போன்ற பலதிலிருந்தும் தொகுக்கப்பட்ட வ்யாசம்.

  ஒரு திவான் பூர்ணய்யா விதிவிலக்காக திப்பு வேலு நாச்சியாருக்கு உதவியதாகத் தாங்கள் தெரிவித்தமை (சார்புடைய சரித்ர ஆவணங்களைத் தாங்கள் பகிரவில்லை – இது தங்கள் வாய்மொழி மட்டுமே) இவை கேரளத்திலும் மைசூர் ராஜ்யத்திலும் திப்பு ஹிந்துக்களை ஆடிய நரவேட்டையை மறைக்க முடியாது.

  இஸ்லாம் மதத்தை கபூல் செய்யாத ஹிந்துக்களை வாளுக்கு இறையாக்கி நெருப்பில் இட்டுப் பொசுக்குவது கருணை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனக்குப் பரிச்சயமான இஸ்லாமிய பெரியோர்களும் இதை கருணை (பெருங்கருணை?) என ஏற்கவொண்ணார் ஐயா.

  தங்கள் வ்யாசத்தை நான் நிஷ்காரணமாகக் குறை காணுவதாக எண்ண வேண்டாம்.

  தங்களது வ்யாசம் முழுதும் எந்த ஆவணங்களும் சாராது ஹிந்துக்களை நரவேட்டையாடிய ஒரு கொடுங்கோல் ராஜனை புனைவின் பாற்பட்டு மட்டிலும் பெருங்கருணை உடையவனாக சித்தரிக்க முயல்வது.

  இதற்கு நேர் மாறாக ஸ்ரீமான் பால.கௌதமன் அவர்களின் வ்யாசம் ஆவணங்கள் மட்டிலும் சார்ந்து படைக்கப்பட்டத தாங்கள் புறக்கணிக்க இயலாது என எண்ணுகிறேன்.

  அந்த ராஜனால் நரவேட்டையாடப்பட்டு மதவெறியால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்காய் ரத்தம் சிந்திய ஹிந்துக்களை விலங்குகளுக்கு சமமாக நாம் எண்ணுவதாக மட்டிலும் அமையும் அந்த மதவெறி மிகுந்த கொடுங்கோலனை கருணைமிக்கவனாகச் சித்தரிப்பது.

  திப்புவின் வாளில் பொறிக்கப்பட்ட வாசகங்களையும் தாங்கள் வாசித்தறியவும்.

  \\ திருக்குர்-ஆன்யை உணர்ந்தவர்கள் மதக்காழ்புணர்வுடன் நடந்துகொள்ள மாட்டார்கள். \\

  எனக்கு சங்கீதம் போதிக்கும் இஸ்லாமிய அறிஞர் பெருமக்களைத் தான் நான் இவ்வாறு அறிகிறேன். இந்த தேசத்தின் நமது பொதுவான பண்பாட்டை மதித்துப் போற்றும் ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி சாஹேப் போன்ற சான்றோர்களை அவரது தகப்பனாரான பஹுபாஷி வித்தகரான ஸ்ரீமான் மீர் குலாம் ரஸூல் நஸ்கி சாஹேப் போன்றோர்களை நான் இவ்வாறு அறிகிறேன்.

  \\\ திப்புவின் வீர சரித்திரம் இந்துக்களின் இரத்தத்தால் எழுதப்பட்டதல்ல. அல்லாவின் (ஸல்) பெருங்கருணையினால் எழுதப்பட்டது. \\\

  இஸ்லாத்தை கபூல் செய்யாத ஹிந்துக்களை திப்பு கொத்துக் கொத்தாக கொன்றொழித்ததை அல்லாஹ்வின் பெருங்கருணையாக எனக்குப் பரிச்சயமான இஸ்லாமியப் பெரியோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

  புதஜனவிதேயன்
  க்ருஷ்ணகுமார்

 9. க்ருஷ்ணகுமார்
  #9

  ஜெனாப் அபு முஜாஹித்

  அஸ்ஸலாமு அலைக்கும்

  கோஷமிடுவது அல்லது கூச்சலிடுவது இவைதான் விவாதம் என்றால்…… க்ஷமிக்கவும்….நாம் விவாதம் செய்ய இயலாது.

  அன்பு நண்பர் சரவணன் அவர்களுடன் கருத்துக்கள் சார்ந்து என்னால் பண்புடன் சம்வாதம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் நான் என் உத்தரத்தை பதிவு செய்துள்ளேன்.

  இஸ்லாத்தை கபூல் செய்யாத ஹிந்துக்கள் திப்புவால் கேரளத்திலும் மைசூர் ராஜ்யங்களிலும் கொன்றொழிக்கப் பட்டது சரித்ரம். இது பற்பல ஆவணங்கள் சார்ந்து ஸ்ரீ பால.கௌதமன் அவர்களது வ்யாசத்தில் பகிரப்பட்டுள்ளது.

  இது போன்ற கொடுமையை ஜெனாப்-ஏ-அலி ஏற்கிறார் என்றால் – நாம் மேற்கொண்டு பேசவும் ஏதுமில்லை.

  அன்பு நண்பர் சரவணன் அவர்களின் உத்தரம் அறிவு பூர்வமாகவும் ஆவணங்கள் சார்ந்தும் வெறும் கோஷங்கள் சார்ந்தும் இருக்காது என்ற நம்பிக்கையிலும் என்னால் உத்தரங்கள் பகிரப்பட்டுள்ளன.

  குதா ஹாஃபீஸ்

 10. rajasankar
  #10

  இன்னோர் செக்குலர் வரலாறா?

  திப்பு செய்த கொலைகள் அவனாலே எழுதி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது கிறிஸ்துவ பாதிரியார்களாலும் அவனுடையை கொலை கொள்ளையில் இருந்து தப்பி ஓடி வந்த இந்துக்களாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  //உங்களுக்கு மத்தியில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும்//

  இது தானே பெண் சுதந்திரம் என ஈவேராமசாமி நாயக்கரும் இப்பொது இருக்கும் திராவிட பஹூத் அறிவுவியாதிகளும் முன்வைப்பது அப்புறம் என்ன அதை தடை செய்த கொடுங்கோலைனை கொண்டாடுவது?

  இப்படியெல்லாம் பொய்வரலாறு எழுதி ஒரு கொடுங்கோலனை தீவிரவாதியை இந்துக்களை கொன்று ஒழித்தவனை நல்லவன் ஆக்கிவிட முடியாது.

 11. Dr. P. Saravanan
  #11

  பேரன்புள்ள திரு. ராஜசங்கர் முதலான நண்பர்களுக்கு வணக்கம்.
  என் கட்டுரையின் மையம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் திப்புவின் செயல்பாடுகள்தான். “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நாம் எதிர்ப்பினைக் காட்டவேண்டும்“ என்பதே திப்புவின் கொள்கை. அதனால்தான் இந்துக்கள் ஆண்ட பகுதிகளில் பிரிட்டிஷ்காரர்கள் ஆக்கிரமித்தபோது திப்பு மதவேறுபாடு பார்க்காது இந்து மன்னர்களுக்கு உதவினார். உங்களின் எதிர்வினைகள் இந்து-முஸ்லீம் பிரச்சனையைத் தூண்டி, இந்திய ஒருமைப்பாட்டிற்கு “ஆப்பு“ வைப்பதாகவே உள்ளன. இது எனக்கு வேதனையைத் தருகிறது.
  நன்றி.
  தங்கள் சரவணன்.

 12. rajasankar
  #12

  அன்பின் சரவணன்,

  //“பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நாம் எதிர்ப்பினைக் காட்டவேண்டும்“ என்பதே திப்புவின் கொள்கை.//

  இதற்கும் திப்பு மேற்கொண்ட போர்களுக்கும் என்ன சம்பந்தம்?

  திருவிதாங்கூர் மீதான படையெடுப்பைக்கூட அந்த அரசு பிரிட்டிஷ் அரசோடு உடன்பாடு வைத்திருந்தது என்பதால் சொல்லலாம் ஆனால் கூர்க்கில் இருந்து மற்ற படையெடுப்புகளுக்கும் திப்புவின் மேற்கண்ட கொள்கைகளுக்கும் என்ன சம்பந்தம்?

  திப்பு பிரெஞ்ச் உதவியை பெற்றது எப்படி அந்நிய ஆதிக்கத்தை எதிர்க்க உதவும்? பிரெஞ்சும் காலனிய ஆக்கிரமிப்பாளர்கள் தானே?

  அடுத்து திப்பு கலீபாவிடன் எழுதிய கடிதங்கள் பாருங்கள். இங்கே அவரின் ஆட்சியை அமைப்பேன் என சொல்லித்தானே உதவி கேட்கிறார் அது மட்டும் என்ன அந்நிய அடிவருடித்தனம் இல்லையா?

  திப்பு எந்தெந்த இந்து மன்னர்களுக்கு உதவினார் என ஏதேனும் வரலாற்று ஆதாரங்கள் உண்டா?

  திப்பு எழுதிய கடிதங்கள், அப்போதிருந்த பயணிகள் எழுதிய குறிப்புகள் அனைத்தும் திப்புவை கொடுங்கோலனாக, இந்துக்களை கொன்றழித்தவனாகவே காட்டுகின்றன.

  திப்புவை விதந்தோதி மட்டுமே கட்டுரை எழுதினால் இப்படிப்பட்ட எதிர்வினைகள் வரவே செய்யும்.

  வரலாற்றை வரலாற்றாக முன்வைத்தால் பிரச்சனைகள் தவிர்க்க முடியும் அதை விடுத்து கட்டுக்கதைகள் எழுதிவிட்டு அதற்கு இந்திய ஒருமைப்பாடு முலாம் பூசினாலும் சரியாகாது.

  ராஜசங்கர்.

 13. rajasankar
  #13

  //இங்கிலாந்தில் கி.பி.19ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி காரணமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் திப்புசுல்தானின் அரண்மனையிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நூல்களின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டவைதான்.//

  இதை கொஞ்சம் மாற்றி

  ஆங்கிலேயனின் எல்லா அறிவியல் வெற்றிகளும் வேதங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவை என எந்த இந்துவேனும் சொன்னால் கிண்டலடிக்கப்படுவான் ஆனால் இதையே கொடுங்கோலன திப்புவிற்கு சொன்னால் உண்மையாகிவிடுகிறது.

  இது வரலாறா இல்லை கொடூரன் திப்புவின் புகழ் பாடலா?

 14. க்ருஷ்ணகுமார்
  #14

  \\ அதனால்தான் இந்துக்கள் ஆண்ட பகுதிகளில் பிரிட்டிஷ்காரர்கள் ஆக்கிரமித்தபோது திப்பு மதவேறுபாடு பார்க்காது இந்து மன்னர்களுக்கு உதவினார். \\

  அன்பின் சரவணன்,

  மேற்கண்ட வாசகத்தில் தாங்கள் சொல்லியுள்ள செய்திப்படி திப்பு உதவிய ஹிந்து மன்னர்கள் யாவர் அதற்கான சரித்ர ஆதாரமாக நீங்கள் முன்வைக்கும் ஆவணம் யாது என அறிய விழைகிறேன்.

  இஸ்லாம் மதத்தை கபூல் செய்யாததற்காக ஹிந்துக்களை திப்பு கொன்றொழித்த ஆவணங்கள் சார்ந்த சரித்ரத்தை நீங்கள் மறைப்பது ஏன்? இது போன்றதொரு கொன்றொழிப்பை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

  \\\ உங்களின் எதிர்வினைகள் இந்து-முஸ்லீம் பிரச்சனையைத் தூண்டி, இந்திய ஒருமைப்பாட்டிற்கு “ஆப்பு“ வைப்பதாகவே உள்ளன. \\\

  முஸல்மாணிய சஹோதரர்களில் பலரும் நான் மதிக்கும் சான்றோர்கள் அவர்கள் என் குரு ஸ்தானத்தில் இருப்பவர்கள் மற்றும் ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி சாஹேப் போன்ற சான்றோர் நான் மதிப்பவர் என்று நான் பகிர்ந்து

  தொடர்ச்சியாக மிகக் குறிப்பாக மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் பாதை தவறிய இஸ்லாமிய சஹோதரர்களைப் பற்றித் தெரிவித்த பின்னும்

  தங்களது உத்தரம் தெரிவு செய்யும் விஷயம் – எமது எதிர்வினை ஹிந்து முஸ்லீம் ப்ரச்சினையத் தூண்டி தேச ஒருமைப்பாட்டிற்கு ஆப்பு வைப்பது என்றால்

  தாங்கள் ஹிந்துக்களுடன் மத நல்லிணக்கத்துடன் செயல்படும் இஸ்லாமிய சான்றோர்களை எதிர்க்கிறீர்கள் மற்றும் மதவெறி பிடித்து அலையும் பாதை தவறிய இஸ்லாமிய சஹோதரர்களை ஆதரிக்கிறீர்கள் என்றும் தான் வாசகர்களால் அவதானிக்கப்படும்.

  எப்படி எந்த ஆவணங்களின் ஆதாரமும் இல்லாது வெறும் அதீத மதசார்புள்ள ஒரு புனைவினால் ஹிந்துக்களைக் கொன்றொழித்த ஒரு கொடுங்கோலனை பெருங்கருணை உள்ளவன் என தங்களது வ்யாசம் கட்டமைத்துள்ளதோ அதே போன்று சாரம் என்பது அறவே இல்லாது நடுநிலைமை என்பது எள்ளளவும் இல்லாது பகிரப்பட்டுள்ளது தங்கள் உத்தரம்.

  க்ஷமிக்கவும்.

  என்னுடைய உத்தரத்தில் நான் அனைத்து இஸ்லாமிய சஹோதரர்களையும் தீவிரவாதிகளாக சுட்டவில்லை என்பதை வாசிக்கும் அனைவரும் உணர்வர். அதே சமயம் தீவிர வாதச் செயல்களில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்பட்ட பாதை தவறிய சஹோதரர்களை மறைக்கவும் முயலவில்லை.

  ஆனால் தங்களது பார்வைகள் யதார்த்தத்திலிருந்து விலகி மதசார்பு என்ற தளத்தில் கூட இல்லாது மதவெறி சார்புள்ளதாக மட்டிலும் அவதானிக்கப்படும்.

  ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு அடிகோலும் நிலைப்பாடுகள் நேர்மை என்ற அடிப்படையை கொள்ளாத வரை வெறும் வெற்று கோஷங்களாக மட்டிலும் அமையும். மேலும் இது போன்ற நேர்மையற்ற பார்வைகள் தேச ஒற்றுமைக்கும் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும்.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: