தீர்ப்பு அரசியல்

பாகம் 3

வன்முறையும் சமூக மோதலும் நடப்பதைப் பற்றிக் கவலைப்படுவது அத்தனை முக்கியமல்ல; தாங்கள் அரசியல்ரீதியாகச் சரி என்று நினைப்பது அதைவிட முக்கியமானது என்று ‘மதச்சார்பற்ற’ பலரும் கருதுகின்றனர். இவ்வாறு வன்முறையின்றிக் கடந்துபோனது குறித்து பெருமூச்சு விடுவதையும், ஒரு விஷயமாகப் பொருட்படுத்திப் பேசுவதையும் பொதுப்புத்தி அல்லது பூர்ஷ்வா மனநிலை என்பதாகவெல்லாம் சிலர் சொல்கிறார்கள். எப்படி என்று எனக்குப் புரியவில்லை. அடிப்படையில் ஒரு புண்ணாக்கும் இல்லாத ஒரு பிரச்னைக்காக, யாரும் அடித்துக்கொண்டு சாகக்கூடாது என்று நினைப்பதுதானே எல்லாவற்றையும்விட முக்கிய அக்கறையாக இருக்க முடியும்? அதை எப்படி இவ்வாறு முத்திரை குத்தமுடியும் என்று புரியவில்லை.

தம் அரசியல் நோக்கங்களின் வெற்றிக்காக அதற்கு எதிரான அரசியலிடம் பணிவது அல்லது இடையில் ஒரு புள்ளியில் சமரசம் செய்வது ஆகியவை குறித்தெல்லாம் விழிப்புணர்வுடன் இருப்பது அரசியல் செயல்பாட்டுக்கு இன்றியமையாதது. ஆனால், அவற்றையெல்லாம்விட அக்கறை கொள்ளவேண்டியது, பயனற்ற வன்முறைகளை தவிர்ப்பது என்று நான் இன்று நினைக்கிறேன். அதற்காக எந்த அநியாயத்தையும் பொறுத்துக்கொள்வதா என்ற கேள்வி எழுவது நியாயமானது. அந்தக் கேள்விக்கு அடுத்து வருவோம். அதற்குமுன், வன்முறையைத் தவிர்ப்பதை உள்ளார்ந்த முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறதா என்பது சிறு சிடுக்கல் கொண்ட கேள்வி.

வன்முறைகளைத் தவிர்ப்பதைத் தனது அடைப்படை நோக்கமாக இந்தத் தீர்ப்பு கொண்டதாக அவ்வளவு நிச்சயமாகச் சொல்லமுடியாது; குறைந்தபட்சம் தனது தர்க்கமாக அதனை இந்தத் தீர்ப்பு எந்த இடத்திலும் கொள்ளவில்லை. ஆனால் நிச்சயம் அதை ஒரு இறுதி அக்கறையாகக் கொண்டிருக்கிறது. தீர்ப்பின் உள்தர்க்கமாக அல்லது தீர்ப்பின் பின்விளைவுகளாக, வன்முறையை தவிர்ப்பது பற்றி இந்தத் தீர்ப்பு நேரடியாகப் பேசவில்லை. (மேலோட்டமாக அறிந்தவரையில்) தீர்ப்பின் ஒரு சமாதான நோக்கமாக, வன்முறையை தவிர்ப்பதற்காக இப்படி மூன்றில் ஆளுக்கு ஒரு பங்கு என்ற தீர்ப்பை வந்து அடைந்ததாக எந்த இடத்திலும் தர்க்கிக்கவில்லை.

இன்னொரு புறத்தில், 1992-ல் நடந்த வன்முறை குறித்து, தீர்ப்பு பிரபஞ்ச மறதியில் நிலைத்து, எந்தக் குறிப்பையும் வெளிப்படுத்தவில்லை. இந்த வழக்கு சொத்து சார்ந்த சிவில் வழக்கு என்கிற பட்சத்தில், 1992 சம்பவம் குறித்த கிரிமினல் வழக்குடன் சம்பந்தம் இல்லாததாக இருக்கலாம். ஆனால் சொத்துப் பிரச்னையைத் தாண்டி வேறு பல விஷயங்களைப் பேசும் இந்தத் தீர்ப்பு, இந்த 1992 நிகழ்வு குறித்து கண்டனமாக ஒரு கடமைக்குக்கூடச் சொல்லவில்லை என்பது வெறும் உறுத்தல் மட்டுமல்ல. மேலும் 1992 சம்பவம், பாஜகவும் மற்றவர்களும் நீதிமன்றத்தில்  ‘அந்தக் கட்டடத்துக்குத் தீர்ப்பு வரும்வரை எந்தப் பாதிப்பும் நிகழாது’ என்று அளித்த வாக்குறுதிக்குச் செய்த துரோகம். அந்த வகையில் (இடிப்பு தொடர்பான கிரிமினல் வழக்கு சாராமல்) இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டிய ஒரு நீதிமன்ற அவமதிப்பு. ஆனால் அதைச் சுத்தமாகக் கண்டுகொள்ளாதது ஒரு பக்க அநியாயச் சாய்வன்றி வேறில்லை.

அதே நேரம் தனது உள்தர்க்கத்துக்கு முரணாகத்தான் இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. வக்ஃப் வாரியத்துக்கு சட்டரீதியான உரிமை இல்லை என்று முடிவெடுத்தபின், மூன்றில் ஒரு பங்கு நிலத்தை வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கவேண்டிய காரணமும், தர்க்கமும், கட்டாயமும் என்ன? அல்லது மற்றவர்களுக்கும் சட்டரீதியான உரிமை இல்லாதபோது அவர்களுக்குத்தான் அந்த இடத்தை அளிப்பதற்கான தர்க்கம் என்ன? பிரச்னையில் எங்கோ திருப்தி கொள்ளவேண்டிய புள்ளியை அமைத்து, சமாதானமாகச் செல்லும் வாய்ப்பை அளிப்பதுதான் அது. இந்தச் சமரசம், சம்பந்தப்பட்ட தரப்புகள்  நீதிமன்றத்துக்கு வெளியே முயன்றிருந்தால் எட்டியிருக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் உரையாடலுக்கே வாய்பில்லாத முரண்பட்ட அரசியல் சக்திகள், இத்தகைய முயற்சிக்கு வந்து சேருவதே சாத்தியமில்லாத நிலைதான் இருந்தது. அந்நிலையில் இப்படி ஒரு சமரசத்தை, சட்டத்தின் கான்க்ரீட் சுவர்களுக்கு இடையேயும், தீர்ப்பின் உள்தர்க்கத்தின் உள்ளும் கறாராகக் கையாளாமால், இந்தத் தீர்ப்பு ஒரு கட்டப்பஞ்சாயத்துத்தனமாக முன்வைக்கிறது.

கல் எறிந்து எதிர்ப்பைக் காட்டும் பாலஸ்தீனியர்கள்

சில நேரங்களில் கட்டப்பஞ்சாயத்து சமரசம், sophisticated நியாயத்தைவிட, சமூக அமைதியைப் பேணுவதாக இருக்கக்கூடும்; அத்தகைய சமரசத்துக்கு முரண்பட்ட சக்திகளை நீதிமன்றம் தன் நீதி அதிகாரத்தின்மூலம் கட்டாயப்படுத்துகிறது என்பதுதான் இந்தத் தீர்ப்பின் முக்கியமான விஷயம்.

இந்தத் தீர்ப்பு மேல் முறையீட்டுக்குச் செல்லும் என்றுதான் இப்போதைக்கு இருக்கும் நிலைமை. சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பளித்தாலும் அதற்குப் பிறகும் மறு பரிசீலனைக்கான முறையீட்டுக்கு வாய்ப்புள்ளது என்று அறிகிறேன். இந்த வகையில் சட்டரீதியான தீர்ப்புகளும் தீர்வுகளும் எப்படிப் பயணித்தாலும், தங்கள் அறுதி நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கி, ஏதோ ஒரு சமரசத்தை சம்பந்தப்பட்ட சக்திகள் ஏற்பதற்கு மனத்தைத் தயார்ப்படுத்தும் முதல் படியாக இந்தத் தீர்ப்பு உள்ளது.

இவ்வாறான சமரசத்தை ஏற்காமல் அறுதி நியாயம் என்பதாக ஒன்றை முன்வைப்பதுதான் அரசியல் நிலைப்பாடு என்பது. அரசியல் நிலைப்பாடு என்பது, இணையத்தில் சும்மா எழுதிக்கொண்டிருக்கும் என் போன்றவர்கள்கூட, பிரச்னையின்றி மிகத் தீவிரமாகத் தூக்கிப் பிடிக்கும் ஒரு ‘லட்சிய’ நிலைப்பாடு; மாறாக அரசியல் செயல்பாடு என்பது போராடி, பேரம் பேசி, வற்புறுத்தி, நிர்பந்தப்படுத்தி, நிர்பந்தத்தை ஏற்று ஒரு சமரசப் புள்ளியில் தாற்காலிகமாகவேனும் நிறைவுகொள்வது. நேரடியாகக் களத்தில் செய்யும் அரசியல் செயல்பாடுகள் அனைத்துமே இத்தகையதாகவே உள்ளன. இதற்கு பெரியாரும், அம்பேத்கரும், காந்தியும், இந்துத்துவவாதிகளும்கூட விதிவிலக்கல்ல. (மாறாக அரசியல் லட்சியத்தின் முழுமையான வெற்றி என்பது யதார்த்தத்தில் ஒருவகையில் வன்முறையாகவே உருவெடுக்கக்கூடும் என்பதும் இன்னொரு விஷயம்.)

பலதரப்பிலிருந்தும் தங்கள் அரசியலால் பூதாகாரப்படுத்தப்பட்டுள்ள அளவுக்கு, உண்மையிலேயே எந்த மக்கள் கூட்டத்துக்கும் ஒரு வாழ்வா சாவா பிரச்னையாக அயோத்திப் பிரச்னை இல்லை. மாறாக ஓர் இனக்குழுவின் இருப்பையும் அழிவையும் நிர்ணயிக்கும் அளவுக்கு மிகத் தீவிரமான ஈழப் பிரச்னையிலும், பாலஸ்தீனப் பிரச்னையிலும்கூட, பேரங்களால் ஆன சமரசப் புள்ளியில் நிறைவுகொள்வதையே இன்று அனைவரும் தீர்வாக முன்வைக்கின்றனர். பாலஸ்தீனத்துக்குத் தொடர்ந்து தார்மீக ஆதரவு தருபவர்களால், கடந்த பத்தாண்டுகளில் முன்வைக்கப்பட்ட எந்தத் தீர்வை ஒப்புக்கொண்டாலும், அது, இஸ்ரேலின் ஆக்ரமிப்பை, அத்துமீறல்களை, அடக்குமுறைகளை, மேலும் பல வரலாற்று அநியாயங்களை குறிப்பிட்ட அளவுக்கு லெஜிடிமைஸ் செய்வதாகவே இருக்கும். (ஆனால் நடைமுறையில் அத்தகைய, ஏதோ கிடைத்த நியாயம் போதும் என்கிற அளவிலான ஒரு சமரசப் புள்ளியில்கூட, ஒரு தீர்வு உருவாக முடியாமல் இருக்கிறது என்பது வேறு விஷயம்.) ஒருவகையில் இஸ்ரேல் இந்த யதார்த்தத்தை நீண்ட காலமாக மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறது. எந்த அத்துமீறலையும், எதிர்ப்புகள் குறித்த அலட்சியத்துடன் முதலில் செய்துவிடுவது; பிறகு அதிலிருந்து பின்வாங்க நேரிடினும், தான் செய்த அத்துமீறலின் பெரும் பகுதி அங்கீகரிக்கப்பட்டே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் உருவாகிவிடும் என்று இஸ்ரேல் புரிந்துகொண்டிருக்கிறது.

முள் வேலிக்குள் ஈழத் தமிழர்கள்

ஈழத்தை பொருத்தவரை ‘தனி ஈழம்’ என்பதற்கு எல்லாவகை நியாயங்களும் இருக்கின்றன. ஈழப்பிரச்னை குறித்து அக்கறை கொண்ட யாராலும் அந்த நியாயங்களில் எதையும் மறுக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் பலர் தனி ஈழத்தை மறுப்பதற்கான முக்கியக் காரணம், அது சாத்தியமில்லை என்பதும், அதை முன்வைத்து இன்னும் உயிர்பலிகளையும் பேரழிவுகளையும் எதிர்கொள்ள முடியாது என்பதும்தான். காஷ்மீர், அயோத்தி போன்ற பிரச்னைகளில் முழு நியாயம் என்பதான தீவிர அரசியல் நிலைப்பாட்டை வைக்கும் அ.மார்க்ஸ் போன்றவர்கள்கூட, ஈழப் பிரச்னையில் யதார்த்தத்தைக் கணக்கில் கொண்டு தனி ஈழம் கோரிக்கை கைவிடப்படவேண்டியது என்கிறார்கள். ஆகையால் பாலஸ்தீனமானாலும் ஈழமானாலும் முழு நியாயம் என்று நம் அரசியலால் முடிவெடுக்கக்கூடிய ஒன்றிலிருந்து கீழிறங்கி, ஒரு சமரசத்தை ஒப்புக்கொள்வதுதான் யதார்த்தத்தைக் கணக்கில் கொள்ளும் விவேகமாக இருக்க முடியும்.

பாலஸ்தீனம், ஈழத்திலாவது முழு நியாயம் என்று ஒன்றைப் பேசுவதில் கொஞ்சமாவது விவேகம் இருக்கக்கூடும். தென்னமெரிக்க, வட அமெரிக்கக் கண்டங்களில், முற்றாக இனம் அழிக்கப்பட்ட பூர்விகக் குடிகளில் எஞ்சியிருப்பவர்களுக்கு எந்த நியாயத்தை நாம் இன்று பேசமுடியும்? அவர்களுக்கு ஆதரவாக நாம் பேசும் எந்த விஷயத்திலும் தீர்வு, நியாயம் செய்தல் என்கிற சொல்லே மிக அபத்தமாக இருக்கும். வட அமெரிக்கா மட்டுமின்றி, இடது சாரி அரசியலைக் கொண்டிருந்த பல தென்னமெரிக்க தேசங்களிலும் பூர்வீக இந்தியர்களுக்கான நியாயங்களைப் பேசும் அரசியல் இல்லை. சிலேயில் எஸ்பானியர்களுடன் மிகத் தீவிரமாக நூற்றாண்டுக் கணக்கில் போரிட்டு, ஒரு கட்டத்தில் முழுமையாகத் தோற்ற மபூச் இனத்தவர்கள் இன்று சிதறலாக, சிறு கூட்டங்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் உருவான சில குழுக்கள், சில இடங்களில், கலக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிலே அரசாங்கம் அவர்களை பயங்கரவாதிகளாகவே பார்க்கிறது; பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் கொண்டு அவர்களை எதிர்கொண்டு வருகின்றது. இந்தப் பிரச்னையில் மபூச் இனத்தவர்களின் நியாயங்களைப் பேசுவது என்பது தற்போதைய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், மபூச் இன மக்களின் இருப்புக்கு ஆதரவாகவும் பேசுவது. அவ்வாறு பேசும்போதுகூட மபூச் மக்களின் பல கலக நடவடிக்கைகளை (மக்களைக் கடத்துவது, வெடிகுண்டு வைப்பது) வெளிப்படையாக அங்கீகரிக்க முடியாது. எஸ்பானியர்கள் செய்த அனைத்து அயோக்கியத்தனங்களாலும் விளைந்த யதார்த்தத்தை ஏற்று அங்கீகரிப்பதாகக்கூட நமது நியாயமான நிலைப்பாடு இருக்கலாம்.

இந்த இடத்தில் மிக மிக அபத்தமான ஒரு முரணைச் சந்திக்கிறோம். அடக்குமுறையின், அநியாயத்தின் தீவிரம் எந்த அளவுக்குக் குறைவாக உள்ளதோ, அந்த அளவுக்கான நேரெதிர் தீவிரத்துடன், நாம் ஒரு கொள்கை அடிப்படையில், யதார்த்தத்தில், நியாயமான தீர்வைப் பேச முடிகிறது. அடக்குமுறை மிகக் கச்சிதமாக நடைபெறும் நிகழ்வில், நாம் நியாயம் என்று எதையும் குறைந்தபட்சமாகப் பேசக்கூட யதார்த்தம் வாய்ப்பு அளிப்பதே இல்லை.

ஆகையால் நாம் மிகத் தீவிரமாக நியாயமும் தீர்வும் பேச இடம் இருக்கிறது என்றால், அதில் அத்தனை தீவிரமாக அடக்குமுறை நிகழவில்லை என்பதுதான் பொருள்.

பாகம் 1 | பாகம் 2

(தொடரும்)

3 comments so far

 1. ரோஸாவசந்த்
  #1

  சில பிழைகள்.

  /அரசியல் நிலைப்பாடு என்பது, இணையத்தில் சும்மா எழுதிக்கொண்டிருக்கும் என் போன்றவர்கள், பிரச்னையின்றி மிகத் தீவிரமாகத் தூக்கிப் பிடிக்கும் ஒரு ‘லட்சிய’ நிலைப்பாடு அல்ல; /

  இதில் ̀அல்ல’ என்கிற வார்த்தை எப்படியோ சேர்ந்துவிட்டது. கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.

  ‘அரசியல் நிலைப்பாடு என்பது, இணையத்தில் சும்மா எழுதிக்கொண்டிருக்கும் என் போன்றவர்கள் கூட, பிரச்னையின்றி மிகத் தீவிரமாகத் தூக்கிப் பிடிக்கும் ஒரு ‘லட்சிய’ நிலைப்பாடு; ‘

  / மாறாக அரசியல் நிலைப்பாடு என்பது போராடி, பேரம் பேசி, வற்புறுத்தி, நிர்பந்தப்படுத்தி, நிர்பந்தத்தை ஏற்று ஒரு சமரசப் புள்ளியில் தாற்காலிகமாகவேனும் நிறைவுகொள்வது. /

  மேலே உள்ளதில் ‘நிலைபாடு’ என்பது ‘செயல்பாடு’ என்று இருக்க வேண்டும்; கீழ்கண்டவாறு,

  ‘மாறாக அரசியல் செயல்பாடு என்பது போராடி, பேரம் பேசி, வற்புறுத்தி, நிர்பந்தப்படுத்தி, நிர்பந்தத்தை ஏற்று ஒரு சமரசப் புள்ளியில் தாற்காலிகமாகவேனும் நிறைவுகொள்வது. ‘

 2. admin
  #2

  ரோஸாவசந்த்: மாற்றங்கள் செய்யப்பட்டாயிற்று. நன்றி. (ஆசிரியர்)

 3. commie.basher
  #3

  ராமர் கோயிலை அரசியல் ஆக்குகிறார்கள் என்று கூச்சலிட்டவர்கள் எல்லாம் இப்போது அயோத்தியா தீர்ப்பை அரசியல் ஆக்குகிறார்கள்.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: