தீர்ப்பு அரசியல்

பாகம் 2

நீதிமன்ற விசாரணை கோரி இருந்த விஷயம் சொத்தின் சட்டபூர்வமான உரிமை குறித்தது. அதில சுன்னி வக்ஃப் போர்டு தவிர்த்து, இப்போது மூன்றில் ஒரு பங்கு வழங்கப்பட்டிருக்கும் மற்றவர்களுக்கு சட்டப்பூர்வமாக எந்த உரிமையும் இல்லை என்பது தெளிவான யதார்த்தம். நீதிமன்றம் வக்ஃப் வாரியத்துக்கும் சட்டப்பூர்வமான உரிமை இல்லை என்கிறது. இங்கே ஒரு குறிப்பிட்ட புனிதத் தலத்தின் சட்டப்பூர்வமான உரிமை என்பது என்ன என்பதும், அதை நிர்ணயிக்கும் வழிமுறை பற்றியும் எனக்குச் சற்று குழப்பம் நேர்கிறது.

நூற்றாண்டுகளாக இருக்கும், தொழுகைத் தலத்துக்கான சட்டபூர்வ உரிமை, நாம் மனை நிலம் வாங்கியதன் பத்திரம் போன்ற வலுவான வடிவத்தில் ஆதாரமாக இருக்க முடியாது என்கிறபோது, சுன்னி வக்ஃப் வாரியத்துக்கு உரிமை இல்லை என்று கறாரான சட்டப்பூர்வக் காகித ஆதாரங்களை கொண்டு முடிவுக்கு வரமுடியுமா என்பது முதல் சந்தேகம்.

ஒருவேளை அவர்களுக்கு உரிமை இல்லை என்றால், முஸ்லீம்களுக்கு வேறு ஏதாவது உருவில் உரிமை இருப்பதான முடிவுக்குதான் சட்டப்பூர்வமாக வரமுடியும் என்பதே இயல்பாக தோன்றுவது. அது மசூதி அல்ல ஏதோ கும்மட்டம் என்கிறார்கள் இந்துத்துவர்கள். 1949-ல் அந்த விக்கிரகங்கள் உள்ளே யாரும் அறியாமல் (அதாவது திருட்டுத்தனமாக) வைக்கப்படுவதற்கு முன்னால், அதன் மூலம் ‘வில்லங்கம் ஏற்பட்டு’ அரசாங்கத் தடை வருவதற்கு முன்னால், தொழுகை நடைபெற்ற இடத்தை மசூதி என்றுதான் சொல்லமுடியும் என்று தோன்றுகிறது. 1949-ல் நடந்த ஆக்கிரமிப்பையும், 1992-ல் நடந்த கும்பல் இடிப்பு அராஜகத்தையும் அங்கீகரிப்பதாகவே இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.

சமூகத்தின் நம்பிக்கையை மதித்து ஏற்று, அதன் அடிப்படையில் நீதிமன்றம் இயங்க முடியுமா? அதுவும் முரணான நம்பிக்கைகள் எதிர்ப்பக்கம் வாதாடும்போது, ஒரு பக்க நம்பிக்கையை முன்வைத்து செயல்படமுடியுமா? இந்தக் கேள்வி ஒரு பக்கம். ஆனால் ராமர் அயோத்தியில் பிறந்தாரா என்கிற நம்பிக்கையை அல்ல, அந்த ‘கும்மட்டங்களுக்கு’ கீழேதான் பிறந்தார் என்கிற நம்பிக்கையை ஏற்பதாகத் தீர்ப்பு சொல்கிறது. ராமரைக் கடவுளாக ஏற்கும், அவர் அயோத்தியில் (அதாவது இந்த அயோத்தியில்தான்) பிறந்ததாக நம்பும் மக்கள் கூட்டம் மொத்தத்துக்கும் இப்படி ஒரு நம்பிக்கை தொன்றுதொட்டு இருப்பதாகத் தெரியவில்லை. உத்தரப் பிரதேசத்தில்கூட எத்தனை ராம பக்தர்கள் இப்படி ஒரு நம்பிக்கையை  – இந்துத்துவ அரசியல் தோன்றும்முன் – கொண்டிருந்தார்கள் என்று எதேனும் புள்ளிவிவரமும் இருப்பதாகத் தெரியவில்லை.

அயோத்தித் தீர்ப்புக்குப் பின் கலவரம் ஏதும் இல்லை

இப்படி ஒரு நம்பிக்கையை (ராமர் அயோத்தியில் பிறந்ததை அல்ல, அந்த dome-களுக்கு இடையே பிறந்ததான நம்பிக்கையை) அங்கீகரிப்பது இந்த நீதிமன்றத்தின் தெளிவான இந்துத்துவச் சார்புக்கு உதாரணம். (வெறும் இந்துமதச் சார்பு அல்ல.) ஒரு பக்கம் மிகக் கறாரான சட்டபூர்வ உரிமை குறித்துப் பேசி, சுன்னி வக்ஃப் போர்டுக்கு உரிமை இல்லை என்பதும், மறு பக்கத்துக்கு நம்பிக்கைகளையும், பலரால் தீவிரமாக விமரிசிக்கப்பட்ட தொல்லியல் ஆய்வின் சான்றுகளையும் ஆதாரமாகக் கொள்ளுதல் (வக்ஃப் வாரியத்துக்கு நம்பிக்கை மட்டுமில்லாமல், யதார்த்தமான அனுபவ பாத்யதை சார்ந்த பலனைக்கூடத் தராமல்) என்று மிகுந்த பாரபட்சத்துடன்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ‘தொல்லியல் ஆய்வுகள்’ குறித்து பலத்த விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. தீர்ப்புக்குப் பல ஆண்டுகள் முன்னால் இருந்தே இருக்கின்றன. (உதாரணமாக  ஒன்று, இன்னொன்று ); இல்லை, எல்லாம் நல்லபடியாக நடந்தது என்றும் சொல்கிறார்கள். இந்த விமர்சனங்கள் மற்றும் சான்றிதழ்கள் குறித்து உறுதியான முடிவு எதுவும் எனக்கு இல்லை.

இந்த இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் 2003 அறிக்கையின் முடிவுகளை மூன்று நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். தீர்ப்பின் முக்கிய ஆதாரமாகவும், நீதிமன்ற நியாயத்தைத் தர்க்கப்படுத்தவும் இந்த அறிக்கை முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியத் தொல்லியல் துறையின் 2003-ன் அகழ்வாராய்ச்சி அறிக்கையை ஆதாரமாக, விமரிசனம் இன்றி ஏற்றுக்கொண்டால்கூட, இரண்டு முக்கியக் கேள்விகள் எழுகின்றன. முதலில் தொல்லியல் ஆய்வுகள் தரும் ஆதாரங்கள்மூலம் முன்வைக்கப்படும் முடிவுகள், எவ்வளவு நேர்மையும் கறார்த்தனமும் கொண்டிருந்தாலும், அதைச் சோதித்து தெளியும் அறிவும் திறனும் நீதிபதிகளிடம் இருந்தாலும், அது ஒரு வரலாற்று முடிவு மட்டுமே. வரலாறு என்பது சாட்சியங்களாக ஏற்கும் தேர்வு பெற்ற உண்மை அல்ல. உண்மையின் ஒரு பக்கமாக வேண்டுமானால் அதைப் பார்க்கலாம். அது, நடந்த நிகழ்வுகள் பற்றி, குறிப்பிட்ட சாராரால் எழுதப்படும் ஒரு கதையாடல். அதே ஆதாரங்களைக் கொண்டு சமானமான நேர்மையுடன், கறார்த்தனம் கொண்டு, (நேர்மாறாக இல்லாவிடினும்) இணையான ஒரு வரலாற்றை எழுத முடியும்.

இவ்வாறான சாத்தியங்கள் உள்ள நிலையில், இந்த ஆய்வுகளுக்கு ஆணையிட்டு, மிகக் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட வரலாற்று முடிவுகள் எழுதப்பட்டு, அதை ஒரு நீதிமன்றம் ஏற்பதும், அதை முன்வைத்து நீதி நல்குவதும் முறையா என்பது முதல் கேள்வி. அடுத்தது, இந்த வரலாற்று முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டால்கூட, அதன் அடிப்படையில் பல நூற்றாண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்வுகளை முன்வைத்து, இன்றைய காலகட்டத்துக்கான நியாயத்தை உருவாக்குவதை ஏற்கமுடியுமா? மசூதி எழுப்பப்படுவதற்கு முன்பு கோவிலின் அமைப்பு இருந்ததாக அறிக்கை சொல்வதை ஒருவேளை அப்படியே ஏற்றுக்கொண்டாலும், வரலாற்றின் போக்கில் நியாயம் வழங்குவதோ, 500 ஆண்டுகளுக்கு முந்தைய உரிமையாக ஒன்றைக் கற்பித்து, அதை இன்று உரிமை கோரும் வேறு ஒரு அமைப்புக்கு வழங்குவதும் மிக விநோதமான பாரபட்சம்.

இப்படி எத்தனை பிரச்னைகளில் ‘நீதி’ செயல்படத் தயராக உள்ளது? அதற்கு அமைப்புரீதியாகத் தேவைப்படும் சட்டரீதியான வேலைகளும், சட்ட விரோதமான வேலைகளும், அரசியல் அலைகளும் என்னவென்று விவாதிப்பதற்கு இந்தத் தீர்ப்பு மோசமான முன்னுதாரணம். இன்னமும் இந்தத் தீர்ப்பின் நியாயமற்ற தன்மை குறித்துப் பேச நிறைய உள்ளது. பலர் பேசியுள்ளார்கள். அவற்றைப் பொதுவாக நான் ஏற்கிறேன். இங்கே அதை விரிவாகப் பேசுவதல்ல என் நோக்கம் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

பாரதிய ஜனதா கட்சி இத்தனை காலமாகச் செய்துவந்த அரசியலுக்கும், அதனால் அடைந்த அரசியல் லாபங்களுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு வெகுஜன அங்கீகாரத்தைத் தருவதுதான் இந்தத் தீர்ப்பின் மோசமான பின்விளைவு. கணிசமான உயிர்பலி கொண்ட அத்வானியின் ரதயாத்திரை, நீதிக்கான ஒரு யாத்திரைதான் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். இந்துத்துவ சக்திகள் தங்களுக்கான நியாயங்களைத் தர்க்கப்படுத்திக்கொள்ள இந்தத் தீர்ப்பு புதிதாக உதவப் போவதில்லை. அவர்கள் ஏற்கெனவே அதைத் மிகத் திறமையாகச் செய்பவர்கள். ஆனால் அதைப் பொதுவான மதச்சார்பற்ற இந்திய மனம் முழுவதும் ஏற்றுக்கொண்டதில்லை; இந்துவாகத் தன்னை அடையாளம் கண்டுகொண்டாலும், தமிழகம் போன்ற பகுதிகளின் பொது வெகுமனம், இந்துத்துவா முன்வைக்கும் வாதங்களை தங்களுக்குள் கரைத்துக்கொண்டதில்லை. இனி இந்துத்துவாக்கள் பக்கம் நியாயம் இருப்பதாக இந்த வெகுமனம் கருதக்கூடும் என்ற அளவில் இந்தத் தீர்ப்பு இந்துத்துவ சக்திகளுக்கு மிக முக்கியமான வெற்றி.

இவ்வாறு எல்லாவகையிலும் எதிர்மறையாகவே தோன்றும் இந்தத் தீர்ப்பின் ஒரே பொதிவான தன்மையாக, அதன் ஒரே ஒரு முக்கியப் பரிமாணம் மட்டும்தான் தெரிகிறது. ஒரு மிகப் பெரிய வன்முறை கலந்த பிரச்னையை நாடு மொத்தமும் எதிர்பார்த்துவந்த திகிலை ஒன்றும் இல்லாமல் ஆக்கியது இந்தத் தீர்ப்பு. வேறு எந்த வகையில் இந்தத் தீர்ப்பு வந்திருந்தாலும் எதிர்ப்புகளையும், மோதல்களையும், இயன்றால் ரத்த ஆற்றையும் உருவாக்கியிருக்கும். இந்தத் தீர்ப்பின் சூட்சுமமே அப்படி எதுவுமே நிகழாமல் செய்ததுதான். இதைப் புரிந்துகொள்ள, தீர்ப்புக்குமுன் எல்லோரும் மொத்தமாக எதிர்பார்த்திருந்த தயார் நிலையை நினைவுக்குக் கொண்டுவரவேண்டும். ஆனால் இதை, தீர்ப்பு எழுதியவர்கள் பிரக்ஞைபூர்வமாக நிகழ்த்தினார்களா என்று உறுதியாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

பாகம் 1

(தொடரும்)

4 comments so far

 1. Aaryan66
  #1

  நல்லதொரு அலசல், தொடருங்கள்.

 2. களிமிகு கணபதி
  #2

  அருமையான அலசல் ரோசா வசந்த் அவர்களே.

  இசை அரசியல், மொழி அரசியல் போல தீர்ப்பு அரசியல் என்ற ஒன்று இருப்பதையும் இடதுசாரியான நீங்கள் கண்டுபிடித்துச் சொல்லி இருக்கிறீர்கள்.

  உங்களது இந்த அருமையான கட்டுரைத் தொடரை ஓடும் பேருந்தில் அமர்ந்தவாறு படித்துவிட்டு, உடனடியாகப் பாராட்டி கமெண்ட் போடுகிறேன். உங்களது அறச்சீற்றம் என்னைக் கவர்ந்துவிட்டது.

  ஆனால், எல்லாரும் உங்களைப் போலும் என்னைப் போலுமா இருக்கிறார்கள்? உங்களது அறச்சீற்றம் என்னைக் கவர்ந்து இழுக்கிறது என்றால், என் பக்கத்தில் நிற்கும் அந்த முறுக்குமீசைக்காரரை அவர் பக்கத்தில் நிற்கும் பெண்மணிதான் கவர்ந்து இழுக்கிறார். அந்தப் பெண்ணைப் போட்டு இடி இடி என்று இடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பெண்மணி இதைப் பிரச்சினையாக்காமல் அமைதியாக இருக்கிறார். அயோத்திக் கோவில் பிரச்சினையயும் இப்படி அமைதியாகக் கையாண்டிருக்கலாம்.

  தேவையில்லாமல் பிரச்சினையை பெரிதாக்கி, குழப்பு குழப்பு என்று குழப்பிவிட்டார்கள். கோவில் எப்போதிருந்து யாருக்குச் சொந்தம் என்று புரிந்துகொள்வதில் எனக்குப் பெரும் குழப்பம் இருந்தது – உங்கள் கட்டுரையைப் படிக்கும் வரை.

  பாசிச இந்துத்துவர்கள் அறிவியல்பூர்வமான அகழ்வாராய்ச்சி ஆதாரங்களை ஆதாரமாகக் காட்டினால், அந்த ஆதாரங்களை செய்திஊடகங்களில் வந்த செய்திகளை ஆதாரமாகக் காட்டி நீங்கள் தூள்தூளாக்கிவிட்டீர்கள். உங்களால் சமூகநீதி காப்பாற்றப்பட்டது.

  அயோத்திக் கோவில் பிரச்சினை வரலாற்றுப் பிரச்சினையா, இல்லை சொத்துப் பிரச்சினையா என்பதை அறிய உங்களுடைய இந்தக் கட்டுரையை விடத் தெளிவான பதில் கிடைக்காது.

  நீங்கள் தெளிவாக விளக்கியதுபோல, அயோத்தி கோவில் ஒரு சொத்துப் பிரச்சினை மட்டுமே. அந்த சொத்துரிமை எப்போது ஏற்பட்டது என்பதை பாபர் காலம் வரைக்கும் மட்டுமே போய் பார்க்க வேண்டும். அதற்கு முந்தைய காலகட்டத்திற்குப் போய் பார்த்தால், அதுவரை சொத்துப் பிரச்சினையாக இருந்த அந்தப் பிரச்சினை வரலாறு சம்பந்தமான பிரச்சினையாக மாறிவிடும்.

  அந்த வரையறையின்படி, கோயில் இடிக்கப்பட்ட வரை உள்ள ஆதாரங்கள் வரலாற்று ஆதாரங்கள். அவற்றை நீதி மன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது அநியாயம். ஆனால், கோயில் இடிக்கப்பட்டு கும்மட்டம் எழுப்பப்பட்ட பின்பு அது சொத்தாக மாறிவிடுகிறது. அந்த கும்மட்டம் சம்பந்தமான ஆதாரங்களை மட்டுமே கோர்ட் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  ஆனால், இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அந்தப் பிரச்சினையில் இருந்து இந்திய செக்யூலரிசத்தைக் காப்பாற்றும் கடமையும் நமக்கு இருக்கிறது. நமது கடமையைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை.

  உலகைக் காப்பாற்ற மற்ற நாடுகளில் குண்டு போடுவது அமெரிக்காவின் கடமை என்றால், இந்திய செக்யூலரிசத்தைக் காப்பாற்ற இசுலாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்படவேண்டியது மார்க்க அறிஞர்க..ஸாரி…மார்க்கசீய அறிஞர்களான நமது கடமை.

  சுன்னி வஃப் போர்டின் சார்பாக நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின் டெல்லி இமாம் பதிலளித்தார். அப்போது, ஒரு உருது பத்திரிக்கையின் நிருபர் (அவரும் ஒரு இசுலாமியர்தான்) முகலாயர் ஆவணம் ஒன்றில் அந்த நிலம் தசரதராஜனுடைய நிலம் என்று சொல்லப் படுகிறதே என்று கேள்வி கேட்டார். அதைக் கேட்டதும் உங்களைப் போல அறச்சீற்றம் மேலிட்ட டெல்லி இமாம் அவனைக் கொல்லு என்று வீராவேசத்துடன் கர்ஜித்தார். ஆனால், இஸ்லாம் அமைதி மார்க்கம் அல்லவா? அதனால், அந்த நிருபரைக் கொலை செய்யாமல் அமைதியுடன் அடி அடி என்று அடித்து வெளியேற்றினார்கள். ஊடகங்கள் அமைதி மார்க்கத்தின் இந்தச் செயலை அமைதியோடு வேடிக்கை பார்த்தன. யூட்யூபில் கூட இந்த எழுச்சிப் போராட்ட வீடியோ கிடைக்கிறது: http://www.youtube.com/watch?v=BaErXxqjLhk&feature=related

  ஷாஹி இமாம் புக்காரியின் வீராவேசம் இந்திய செக்யூலரிச வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிக்கப்படவேண்டிய நிகழ்ச்சி. அவரது உணர்வு நியாயமானது. அந்த உருது பத்திரிக்கையின் நிருபர் குறிப்பிடும் அந்த ஆவணம் சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்துவிடும் தன்மை உடையது என்பதை மறுக்க முடியாது.

  எனவே, நீங்கள் உங்கள் வரையறைக்கான காலகட்டத்தை கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும் பணிவோடு விண்ணப்பிக்கிறேன். அந்த நிருபர் குறிப்பிட்ட வரலாற்று ஆவணம் எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பதைப் பார்க்க வேண்டும். அந்தக் காலம் வரை அயோத்திப் பிரச்சினையானது வரலாற்றுப் பிரச்சினை. அதற்குப் பின்பே அது சொத்துப் பிரச்சினையாகப் பார்க்கப்பட வேண்டும் என்று அடுத்தக் கட்டுரையில் எழுதிவிடுங்கள்.

  அப்போதுதான் அமைதியான வழியில் இந்தப் பிரச்சினை தீர வாய்ப்பு இருக்கிறது. அமைதி முக்கியம், அமைச்சரே.

  இப்போது பாருங்கள். நான் பயணம் செய்துகொண்டிருக்கும் இந்த பஸ்ஸில் மீசைக்காரன் இடிப்பதைக் கண்டு கோபப்படாமல் அந்தப் பெண்மணி அமைதி காக்கிறார். பக்கத்தில் இருக்கும் என்னைப் போன்ற பொதுமக்களும் அமைதி காக்கிறோம்.

  இந்தியாவில் அயோத்தி என்றால் என்ன? அய்யன்பேட்டை என்றால் என்ன? கோவிலாக இருந்தால் என்ன? பஸ்ஸாக இருந்தால் என்ன?

  இடிப்பவர்களுக்கு ஆதரவாக இருப்பதுதான் இந்திய செக்யூலரிசம்.

 3. commie.basher
  #3

  இவரைப் போல் நான்கே நான்கு பேர் தமிழ்பேப்பரில் எழுதினால் போதும், மாவோ கடவுளை இந்தியாவில் காட்டும் கழகத்து வினவு தளத்துக்கு கொஞ்சமும் குறையாமல் இந்தத் தளமும் இடதுசாரி கப்பு வீசும்.

  சும்மா சொல்லக்கூடாது, காசே இல்லாமல் எப்படி வெறும் தகரடப்பாவிலிருந்து சத்தம் வரவழைத்து சில்லரை தேத்துவது என்பது நம்ம இடது சாரிகளிடம் கற்கவேண்டிய பாடம்.

 4. ரோஸாவசந்த்
  #4

  அன்புள்ள களிமிகு கணபதி, ஷாஹி இமாம் வீடியோ பார்த்தேன். (தொடர்பான மற்ற வீடியோக்களை பார்க்கவில்லை.) அதற்கு நன்றி. இந்த வீடியோவிற்கும், நான் மேலே எழுதிய பல கருத்துக்களுக்குமான தொடர்பு சரியான வகையில் புரிந்தால் நிச்சயம் வந்து பதிலளிக்கிறேன்.

  ஆர்யன் 66 கருத்துக்கு நன்றி.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

3 Trackbacks/Pings

Facebook comments: