நரேந்திர மோடியின் கதை : தொடக்கம்

narendra-modi-the-man-the-times-400x400-imadjbh9uqqry72kநரேந்திர மோடி குறித்து இந்த ஆண்டு வெளிவந்துள்ள இரு நூல்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் நூல், நிலஞ்சன் முகோபாத்யாய் எழுதிய Narendra Modi : The Man, The Times.  இரண்டாவது, கிங்ஷுக் நாக் எழுதிய The NaMo Story. முகோபாத்யாய், நாக் இருவருமே குஜராத் அரசியல் குறித்தும் மோடி குறித்தும் பத்தாண்டுகளுக்கு மேலாக எழுதி வருபவர்கள். மோடியின் அரசியல் வாழ்க்கையோடு சேர்த்து குஜராத்தின் சமூக, அரசியல் வரலாறையும் பாஜக வளர்ந்த கதையையும் இந்திய அரசியல் களத்தில் பொருத்திப் பார்த்து ஆய்வு செய்கின்றன இந்த நூல்கள்.

முகோபாத்யாய், தி எகனாமிக் டைம்ஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ், அவுட்லுக், ஸ்டேட்ஸ்மென் ஆகிய இதழ்களில் பணியாற்றியவர்.  குஜராத்துக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வுகளும் நேர்காணல்களும் மேற்கொண்டு, மோடியிடமும் உரையாடி தனது புத்தகத்தை இவர் உருவாக்கியிருக்கிறார். கரன் தாப்பர் செய்ததைப் போல் 2002 குறித்து சங்கடமான கேள்விகள் எதையும் முகோபாத்யாய் மோடியிடம் முன்வைக்கவில்லை. அவ்வாறு செய்யக்கூடாது என்பதில் அவர் தெளிவாகவே இருந்திருக்கிறார். மோடியிடம் என்ன கேட்கவேண்டும், என்ன கேட்கக்கூடாது என்பதைப் பட்டியலிட்டுக்கொண்ட பிறகே தன் பணியைத் தொடங்கியிருக்கிறார். மோடியை இதற்கு முன்பே நிலஞ்சன் முகோபாத்யாய் வேறு சில சந்தர்ப்பங்களில் நேரில் சந்தித்திருக்கிறார், உரையாடியிருக்கிறார் என்றபோதும் குஜராத்தின் முதல்வரான பிறகு அவரைச் சந்திப்பது இதுவே முதல் முறை.

வேறு பலரும்கூட குறிப்பிட்டுப் பாராட்டும் மோடியின் ஒரு பண்பை விவரித்தபடியே புத்தகம் ஆரம்பமாகிறது. முதல்வரின் அலுவலகத்துக்குத் தொலைபேசியில் அழைத்திருக்கிறார். தற்சமயம் இல்லை, வந்தவுடன் பேசுவார் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் மோடி லைனுக்கு வந்துவிட்டார். எங்கே, எப்போது என்பதை விரைவில் உறுதி செய்வார்கள் என்று சொல்லியிருக்கிறார். உடனே அடுத்தடுத்து தொலைபேசி அழைப்புகள் அவர் அலுவலகத்தில் இருந்து பறந்து வரத் தொடங்கிவிட்டன. நேரம் ஒதுக்கப்பட்டது. புன்சிரிப்புடன் வரவேற்று உபசரித்து கேள்விகளை எதிர்கொண்டிருக்கிறார் மோடி. தன் வாழ்வின் தொடக்கப்பகுதி தொடங்கி, கல்வி, அரசியல் ஈடுபாடு, வழிநடத்திய தலைவர்கள், மேற்கொண்ட பணிகள், படிப்படியாக வளர்ந்த கதை, தனது கனவுகள், இந்துத்துவ அரசியல், குஜராத் 2002 (அதிகமில்லை, கொஞ்சம்தான்) என்று பல விஷயங்கள் குறித்து சுருக்கமாக மோடி உரையாடியிருக்கிறார்.

மோடியை இன்னொரு காந்தியாகவோ அல்லது மற்றொரு ஹிட்லராகவோ முன்னிறுத்தாமல், “அவரைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்திருக்கிறேன் என்கிறார் முகோபாத்யாய். ஹேஜியோகிராஃபியாகவும் (புகழ் புராணம்) இல்லாமல் கூர்மைமயான விமரிசன நூலாகவும் இல்லாமல் பல கோணங்களில் இருந்து மோடியை அணுகி முடிந்தவரை விருப்பு, வெறுப்பற்று பதிவு செய்திருக்கிறார் முகோபத்யாய். ஆனால் அவரே ஓரிடத்தில் குறிப்பிடுவதைப் போல், 2002 சம்பவத்தை விலக்கிவிட்டு மோடியைப் புரிந்துகொள்வதோ மதிப்பிடுவதோ முடியாத காரியம். அந்தச் சம்பவம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் மோடி ‘வழிபாட்டுக்குரிய ஒரு தலைவராக வளர்ச்சி அடைந்திருக்கமாட்டார். அவரைப் பற்றி நாம் இன்று விவாதித்துக்கொண்டிருக்கவும் மாட்டோம்.’

0

நரேந்திர மோடி 17 செப்டெம்பர் 1950 அன்று பிறந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் தோன்றி ஒன்பது மாதங்கள்கூட ஆகியிருக்கவில்லை. மோடி பிறந்து, வளர்ந்து, படித்த மெஹ்சானா என்னும் மாவட்டம் குஜராத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. குஜராத்தின் பிற பகுதிகளைக் காட்டிலும் அதிகம் செழிப்பாக இந்த மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களும் பல உற்பத்தி நிறுவனங்களும் அமைந்துள்ளன. இங்குள்ள வாட்நகர் என்னும் சிறிய நகராட்சியில்தான் மோடி பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டார். மிகுந்த பாசத்துடன் வாட்நகரை முகோபாத்யாயிடம் நினைவுகூர்கிறார் மோடி. குஜராத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சில மாதங்களில் ஒரு தனி கமிட்டியை உருவாக்கி இந்நகரின் வளர்ச்சித் திட்டங்களை முடுக்கிவிட்டிருக்கிறார் மோடி.

2002 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் வாட்நகரில் தானா ரிரி மஹோத்சவ் நடைபெற்றுவருகிறது. புராணத்தின்படி அக்பரின் துருப்புகளிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இந்த இரு சகோதரிகளும் தற்கொலை செய்துகொண்டனராம். குஜராத்தி பிராமணப் பிரிவைச் சேர்ந்த இந்த இரு பாடகர்களையும் கடத்திவந்து தன் அரண்மனையில் பாட வைக்க அக்பர் திட்டமிட்டிருந்தாராம். 2010ம் ஆண்டு இவர்கள் பெயரில் ஒரு விருதை உருவாக்கி, முதல் விருது லதா மங்கேஷ்கருக்குக் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டிருக்கிறார் மோடி.

மோடி பிறந்து, வளர்ந்த ரயில் பெட்டி போன்ற ஒரு வீட்டுக்குச் சென்று முகோபாத்யாய் பார்வையிட்டிருக்கிறார்; அவருடைய பால்ய சிநேகிதர் ஒருவரிடமும் மோடியின் மாமாவிடமும் உரையாடியிருக்கிறார். இளம் வயதில் இருந்தே மோடி ‘ஒரு சிறந்த இந்துவாக’ இருந்திருக்கிறார்.  கோயில்களுக்குச் சென்று சத்தம் போட்டு மந்திரங்களை உச்சரிப்பார். பண்டிகைக் காலங்களில், முக்கிய தினங்களில் விரதம் இருப்பார். முகோபாத்யாயிடம் பேசும்போது, சமயத் தேடலைவிடவும் ஆன்மத் தேடலில் தனக்கு விருப்பம் அதிகம் என்று குறிப்பிடுகிறார். கைலாஷ் மானசரோவர், அமர்நாத் என்று சிவாலயங்களைத் தேடிச் சென்று தரிசித்திருக்கிறார். ‘தினமும் பூஜை செய்கிறேன் என்றபோதும் மத நம்பிக்கைகளிலும் நம்பிக்கைச் சார்ந்த சடங்குகளிலும் நான் சிக்கிக்கொள்ளவில்லை.’

அப்போது மோடியின் தந்தை வாட்நகர் ரயில்வே நிலையத்துக்கு அருகில் ஒரு சிறிய தேநீர் கடை நடத்தி வந்தார். மோடிக்கு ஆறு வயதாகும்போது மகா குஜராத் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. மகா குஜராத் ஜனதா பரிஷத் என்னும் அமைப்பு குஜராத் தனி மாநிலமாக அறிவிக்கப்படவேண்டும் என்னும் கோரிக்கையுடன் போராடி வந்தது. வாட்நகரில் உள்ள ரசிக்பாய் தவே, இந்துலால் யாக்னிக் ஆகிய பிரமுகர்கள் இந்தக் கோரிக்கைக்கு குரல் கொடுத்துக்கொண்டிருந்தனர். வாட்நகரில் அமைந்திருந்த தவேயின் அலுவலகத்துக்குச் சென்று குஜராத் மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தும் முத்திரைகளை வாங்கி விநியோகிக்கும் பணியை ஆர்வத்துடன் செய்துவந்தார் மோடி. ரசிக்பாயிடம் இருந்து எப்படிச் சத்தம் போட்டு கோஷமிடுவது என்று கற்றுக்கொண்டார். தனது முதல் அரசியல் பணியை ஒரு விளையாட்டு போல கற்றுக்கொண்டு செய்ததாகக் குறிப்பிடுகிறார் மோடி.

அப்போதே காங்கிரஸைத் தீவிரமாக வெறுக்கத் தொடங்கிவிட்டதாகவும் சொல்கிறார் மோடி. ‘மக்கள் அப்போது காங்கிரஸைத் தீவிரமாக வெறுத்தனர். பேரணி நடத்தினர், கோஷமிட்டனர், உருவபொம்மைகள் எரித்தனர். ஏன் காங்கிரஸ்மீது இவர்களுக்கு இவ்வளவு கோபம் என்று யோசித்தேன். விசாரித்தபோது, காங்கிரஸ் நமக்கு தீங்கு செய்துவருகிறது என்று சொன்னார்கள். ’

தனி மாநிலக் கோரிக்கைகள் தீவிரமாக இருந்த சமயம் அது. தனி ஆந்திரம் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த பொட்டி ஸ்ரீராமுலு 15 டிசம்பர் 1952 அன்று இறந்துபோனார். ஆந்திராவை உருவாக்குவதாக இரு தினங்களில் நேரு அறிவிக்கவேண்டி வந்தது. அதுவரை காலம் ஒன்றாக இருந்த ஆந்திராவும் தமிழ்நாடும் பிரிக்கப்பட்டன. இதைத் தொடக்கப்புள்ளியாகக் கொண்டு பல மாநிலக் கோரிக்கைகள் எழும் என்று அஞ்சிய நேரு, மாநில மறுசீரமைப்பு கமிட்டியை (எஸ்ஆர்சி) உருவாக்கினார். எதிர்பார்த்தபடியே பல கோரிக்கைகள் எழுந்தன. அவற்றில் ஒன்று, பம்பாய் தொடர்பானது. மராத்தி பேசும் மக்களுக்கும் குஜராத்தி பேசும் மக்களுக்கும் பொதுவாக இருந்த பம்பாய் யாருக்குச் செல்லும் என்னும் கேள்வி பொது வெளியில் எழுந்தது. பம்பாய் மாநிலத்தை குஜராத், மகாராஷ்டிரா என்று தனியே பிரித்து பம்பாய் நகரை யூனியன் பிரதேசமாக மாற்றிவிடலாம் என்னும் அரசின் யோசனை ஏற்கப்படவில்லை. இறுதியில் இருமொழி மாநிலமாக பம்பாய் மாற்றியமைக்கப்பட்டது. அதே சமயம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகியவற்றை தனி மாநிலங்களாக அங்கீகரிக்கமுடியாது என்றும் எஸ்ஆர்சி அறிவித்தது. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 1 மே 1960 அன்று மகாராஷ்டிரா, குஜராத் இரண்டும் தனி மாநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டன. பம்பாயும் அகமதாபாத்தும் அவற்றின் தலைநகரங்கள் ஆயின. அப்போது மோடி பத்து வயதை நெருங்கிக்கொண்டிருந்தார்.

(தொடரும்)

4 comments so far

 1. Dr.P. Saravanan
  #1

  பேரன்புள்ள நண்பரே!வணக்கம்
  இது கதை அல்ல நிஜம்தானே!
  இதில் மோடி தானே கதைநாயகர் (நிஜ நாயகர்)? பலருக்கும் மோடியின் பின்னணி தெரியாது. இத்தொடர் (தொடர்ந்தால்) பலருக்கும் பலவகையில் உதவியாக இருக்கும். தேர்தல் வர இன்னும் நாட்கள் இருக்கின்றன. அதற்குள் இத்தொடர் முடிந்தால் ஒரு “நல்ல“ முடிவுக்கு மக்கள் வருவார்கள்.
  நன்றி
  தங்கள்
  சரவணன்

 2. சான்றோன்
  #2

  சரவணன் சார்….

  உங்கள் அது நம்பிக்கையாக இருக்கலாம்……. ஆனால் காம்ரேட்டுகளின் யோக்கியதை உலகம் அறிந்தது……இரண்டுவாரங்களுக்கு முன் மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டு கட்டுரை எழுதிய மருதன், இனிமேல் என்ன எழுதுவார் என்பது யாருக்கும் தெரியாமலா இருக்கிற‌து…?

  மருதன் கட்டுரையை படிப்பவர்கள் அவரது அவதூறுகளை அப்படியே நம்புவார்கள் என்ற உங்கள் மூட நம்பிக்கை புல்லரிக்க வைக்கிறது……. நீங்கள்லாம் நல்லா வருவீங்க சார்…….

 3. jeyakumar
  #3

  //மருதன் கட்டுரையை படிப்பவர்கள் அவரது அவதூறுகளை அப்படியே நம்புவார்கள் என்ற உங்கள் மூட நம்பிக்கை புல்லரிக்க வைக்கிறது……. நீங்கள்லாம் நல்லா வருவீங்க சார்…….// 🙂 மருதன் இதைப்போன்ற அவதூறு தொடர்களை எழுதுவதே கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி யாரும் பேசிவிடாமல் இருக்கவே. நடக்கட்டும்..

 4. deepak
  #4

  இதைத்தான் எதிர்ப் பார்த்திருந்தேன் மருதன் தொடர்ந்து எழுதுங்கள், காவி துணியால் கண்களை கட்டியிருப்பவர்களை பற்றி கண்டுக்காதிங்க….. தங்கள் மதம் பரி போனால் அதன் கிளையான தங்களுடைய சாதியையும் அதில் கிடைக்கும் சுகமும் போய்விடுமே என்ற பயம்தான் அவர்களை இப்படி பேச வைக்கின்றது…. அவற்றை காக்க இவர்கள் கண்டுபிடித்த பரமபிதாதான் மோடி ……

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: