ரியல் எஸ்டேட் அபாயங்கள் – ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

Real-Estate_4இந்தியாவிலேயே பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனி அது. சுமார் ஐந்தாறு வருடத்துக்கு முன்பே ஐந்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் புக்கிங் என காசோலை வாங்கினார்கள். சென்னை பழைய மகாபலிபுரம் சாலைக்குச் சற்றுத் தள்ளி செம்மஞ்சேரி அருகில் அவர்கள் திட்டமிட்டிருந்த டவுன்ஷிப்பிற்கு அப்ரூவல் வாங்கவே பல காலம் பிடித்தது. அவர்கள் கட்டித் தருவதாகச் சொன்ன வீடுகள் இன்னும் முழுமையாகக் கையளிக்கப்படாமல் உள்ளன.

அதற்குப் பக்கத்திலேயே 92 ஏக்கரில் பிரம்மாண்டமாக உருவெடுப்பதாகச் சொல்லும் இன்னொரு டவுன்ஷிப், சமீபத்தில் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்குக் கூட புரவலராக இருந்தார்கள். 2009 இல் கீழ்க்கண்ட விளம்பரங்களை வெளியிட்டார்கள்.

ஒன்னே முக்கால் ஏக்கர் பரப்பளவில் ஏழு மாடி – ஒரு லட்சம் சதுர அடியில் உலகத் தரம் வாய்ந்த கிளப் ஹவுஸ். அந்தக் கட்டுமான நிறுவனத்தின் இணையத்தளத்தில் ஏழு மாடி கிளப் ஹவுஸ்க்கான பில்டிங் பிளான் இணைக்கப்பட்டிருந்தது. அதிலே பிசினஸ் செண்டர், பார், உணவகங்கள், கெஸ்ட் ரூம்கள், ஆர்கானிக் ஸ்பா, ஸ்னூக்கர், டேபிள் டென்னிஸ், குழந்தைகளுக்கான விளையாடும் இடங்கள், உலகத் தரம் வாய்ந்த ஜிம், யோகா மாற்றும் தியான மண்டபம், ஸ்குவாஸ் கோர்ட், நூலகம் (புத்தகங்கள் மற்றும் வீடியோ), திரையரங்கு, பேட்மிட்டன் & டென்னிஸ் கோர்ட்கள், ஒலிம்பிக் நீச்சல் குளத்தில் பாதி அளவு நீச்சல் குளம், அதில் குழந்தைகளுக்குத் தனி பெரியவர்களுக்குத் தனி.

மேலே சொன்னதெல்லாம் வெறும் கிளப் ஹவுஸ் சம்பந்தப்பட்ட சிறப்பம்சங்கள். அது போக ரிவர்ஸ் ஆம்மோசிஸ் (RO) சுத்திகரிப்பு நிலையம், தேக்குக் கதவு, மாஸ்டர் பெட் ரூமில் மரத்தினால் ஆன தளம், வளாகத்துக்குள்ளாகவே எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூட வசதி, 24 மணி நேர தடையில்லா மின்சாரம், வளாகத்தைச் சுற்றி மின்சார வேலி, ஒவ்வொரு கட்டடத்துக்கும் ஒரு காவலாளி, ஐடி கம்பெனியைப் போல அடையாள அட்டையைக் காட்டினால் மட்டுமே திறக்கும் பொது நுழைவு, குழாய் மூலம் வழங்கப்பட்டு மீட்டர் மூலம் அளக்கப்படும் சமையல் எரிவாயு.

இந்த டவுன்ஷிப் அமைந்திருக்கும் பகுதியில் நெல் வயல்கள். காவிரி வறண்டு போய் தஞ்சாவூரே காய்ந்து போயிருந்த சமய்த்தில் கூட நெல் விளைந்த இடம். அதற்கு அருகிலேயே அரசன்கழனி ஏரி. கூடவே பால்கனி கதவைத் திறந்து பார்த்தால் தரிசிப்பதற்கு பச்சைப் பசேல் என ஒரு மலை.

2009 இல் அந்த நிறுவனம் தந்த விளம்பரங்களிலேயே தலையாயது கிளப்ஹவுஸ் என்றால் மிகையாகாது. அந்த கிளப்ஹவுஸ் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமாக இருக்கும். வீடு வாங்கும் அத்தனை பேரும் அதில் உறுப்பினர்கள். அதாவது அதன் வசதிகளை அனுபவித்துக் கொள்ளாலாம். வேற்று மனிதர்கள் வர மாட்டார்கள். ஐந்து நட்சத்திர ஓட்டல் போல வசதிகளோடிருந்த கிளப்ஹவுஸ் விளம்பரத்துக்காவே பலர் அதில் புக் செய்தார்கள்.

வாராவாரம் சனிக்கிழமை பிரபலமான ஆங்கில செய்தித்தாள்களில் தவறாமல் அந்த டவுன்ஷிப் விளம்பரம் வந்தது. அதில் கிளப்ஹவுஸ் தவறாமல் இடம்பெற்றத்து. ஆகச் சிறந்த Unique Selling Point என்பதே கிளப்ஹவுஸ். இப்படி கிளப்ஹவுஸ் விளம்பரத்தைக் காட்டி குறிப்பிட்ட அளவு பேரை புக் செய்ய வைத்த பின்னரும் விளம்பரம் தொடர்ந்தது. ஆனால் அதில் கிளப்ஹவுஸ் பற்றிக் குறிப்பிடுவதை நிறுத்திக்கொண்டார்கள். ஏற்கனவே 300 குடும்பங்கள், 500 குடும்பங்கள் சொகுசு வாழ்வை அனுபவித்து வருகிறார்கள். அவர்களோடு நீங்களும் இணைந்து கொள்ளுங்கள் என்கிற தொனியில் அவை பேசத் தொடங்கிவிட்டன.

இதற்கிடையில் அவர்கள் இணையத்தளத்தில் வெளியிட்டிருந்த ஏழு மாடி பில்டிங் பிளான் நாலு மாடி பிளானாகத் தேய்ந்து, அதுவும் ஒரு சுபயோக சுபதினத்தில் காணாமல் போனது. அஜீத் நடித்த சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி என்ற கிராமமே இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போகும் அல்லவா? அப்படித்தான்.

ஆனாலும் அவர்கள் செய்து கொடுத்திருந்த ஒப்பந்தத்தில் கிளப்ஹவுஸ் குறிப்பிடப்பட்டிருந்ததால், ‘உங்களால் கிளப்ஹவுஸ் கட்ட முடியவில்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதில் உள்ள சிக்கல்களை உணர்ந்து கொள்கிறேன். அதனால் அதற்காக நான் இழப்பீடு கேட்க மாட்டேன்,’ என ஒரு பேப்பரில் கையெழுத்துப் போட்டுத் தரச்சொல்லி மிரட்டியிருக்கிறார்கள். அப்படித்தரவில்லை என்றால் உங்கள் பிளாட்டின் சாவியை உங்களுக்குத் தர மாட்டோம் என பிளாக்மெயில். ஐம்பது லட்சம் பணத்தைக் கொடுத்து விட்டு, அதற்கு வங்கியில் வட்டி கட்டிக்கொண்டு, இன்னொரு வீட்டில் வாடகையும் செலுத்திக்கொண்டு எத்தனை பேரால் இருக்க முடியும்? அதனால் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டு சாவியை வாங்கி வந்து அடுப்பைப் பற்ற வைத்திருக்கிறார்கள்.

ஒரு சிலர், கிளப்ஹவுஸ் எப்போது தயாராகிறதோ அப்போது ஆகட்டும். அதைக் கட்டி முடித்த பின்னர் அதற்கென ஒப்புக்கொண்ட ஒரு லட்ச ரூபாயைத் தருகிறேன் என லாஜிக் பேச முயன்றிருக்கிறார்கள். ஒரு சல்லிக் காசு பாக்கி இல்லாமல் வைத்தால்தான் சாவி என்றவுடன் வேறு வழியில்லாமல் சம்மதித்திருக்கிறார்கள்.

சரி வீட்டின் சாவியைத்தான் கொடுத்தார்களே என்றால் அதுவும் சரியான சமயத்தில் தரவில்லை. 2010 டிசம்பரில் கட்டித் தருவுவதாக ஒப்புக்கொண்ட சில வீடுகள் 2012 பிப்ரவரி மாதம்தான் கையளிக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் அறைகுறையாக.

தேக்கு மரத்துக்குப் பதிலாக லொடலொடவென்று உளுத்துக் கொட்டுகிற பேக்டரி கதவுகள், பெட்ரூமில் மரத்தளம் இல்லாமல் வெறும் பாலீஷ் செய்யப்பட்ட டைல்ஸ். பாத்ரூம் மற்றும் கிச்சனில் உள்ள இணைப்பு உபகரணங்கள் எல்லாம் ஒரு வருடத்துக்குள் துருவேறி விட்டன. வீட்டில் அ முதல் ஃ வரை எல்லாமே மலிவான சீனத் தயாரிப்புகள்.

இன்னுமொரு பிரச்சினை RO குடிநீர். முதலில் RO தண்ணீர் எனச் சொன்ன பில்டர், அதை RO வுக்கு இணையான தண்ணீர் என வார்த்தைப் பிரயோகம் செய்து, பிற்பாடு அதைச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராக உருமாற்றம் செய்திருக்கிறார்கள். அவ்வாறே எல்லா வீடுகளுக்கும் சப்ளை செய்யப்படுகிறது.

இதனிடையில் டவுன்ஷிப்பின் பராமரிப்பை பில்டரே ஏற்று நடத்துமெனவும் வீடு விற்கும் போது அக்ரிமெண்ட் போட்ட காரணத்தினால் செக்யூரிட்டி, தண்ணீர் சுத்திகரிப்பு என எல்லாவற்றையும் அவர்களே கவனித்துக்கொள்கிறார்கள்.

அப்படிச் செய்யும் போது அந்த நிறுவனமே தான் சுத்திகரித்த நீரை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்ட்டிடியூட்டில் பரிசோதனை செய்ததில், இந்தத் தண்ணீர் ரசாயன மற்றும் பாக்டீரியா கலந்துள்ளது என்றும் பயன்பாட்டுக்கு ஒவ்வாத தண்ணீர் என்றும் சான்றிதழ் அளித்தது. அந்த அறிக்கையை குடியிருப்போரிடமிருந்து மறைத்தும் வருகிறது கட்டுமான நிறுவனம்.

மொத்தம் 92 ஏக்கர் புராஜெக்ட். அதில் சுமார் 45-50 ஏக்கர் பரப்பளவில் முதல் கட்டம். இந்த முதல் கட்ட வேலைகள்தான் சில ஆண்டுகளாக ஓடுகிறது. அதில் 1300 வீடுகள். அதில் கார் பார்க்கிங் ஒன்றரை லட்சம், கிளப்ஹவுஸ் சார்ஜ் ஒரு லட்சம் என்பது போல உள்கட்டமைப்பு மற்றும் தண்ணீருக்காகவே ஒவ்வொருவரிடமும் ஐம்பதாயிரம் வசூலித்திருக்கிறார்கள். ஒரு வீட்டுக்கு ஐம்பதாயிரம் என்றால் 1300 வீட்டுக்கு ஆறரைக் கோடி ரூபாய். ஆறரைக் கோடி ரூபாயில் எத்தனை கிணறு வெட்டியிருக்கலாம், எத்தனை ஆழ்துளைக் கிணறுகள் அமைத்திருக்கலாம்? வெறும் பத்து பிளாட் இருக்கும் அபார்ட்மெண்டில் இரண்டு போர்வெல் போட்டிருப்பார்கள். அப்படியானால் 1300 வீடுகளுக்கு எத்தனை வேண்டும்?

ஆனால் இங்கே வெறும் ஆறு கிணறு / ஆழ்துளைக் கிணறு மட்டுமே உள்ளன. அதுவும் அந்த நிறுவனம் தனது கட்டுமானப் பணிகளுக்குத் தண்ணீர் எடுப்பதற்காகத் தோண்டியவை. அதுவும் பஞ்சாயத்துக்குக் கையளிக்கப்படவுள்ள பார்க்கில் தோண்டியவை. ஆறரைக் கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு தண்ணீருக்காக இந்தப் படித்த சீமான்களை கையேந்த வைத்திருக்கிறது இந்த நிறுவனம். இங்கே போதுமான நிலத்தடி நீர் இல்லை. அதனால் லாரியில் தண்ணீர் வாங்குகிறோம் என்று சொல்லி மாதம் ஐந்து அல்லது ஆறாயிர ரூபாய் மெயிண்டனென்ஸ் பில் போடுகிறார்கள். இதுவே இன்னொரு EMI மாதிரி உள்ளதென அதிர்ச்சியில் உறைந்து போன குடியிருப்போர் பிற்பாடு அதற்குப் பழகிக்கொண்டார்கள்.

எங்களுக்கு பில் போட்டு விட்டு பில்டர் தனது தொடர்ச்சியான கட்டுமானப் பணிகளுக்கு எங்களது தண்ணீரையும், மின்சாரத்தையும் பயன்படுத்திகிறார்கள் எனக் குற்றம் சாட்டுகிறார்கள் அபார்ட்மெண்ட் வாசிகள். எங்கள் வீடுகளுக்கு வாட்டர் மீட்டர் மாட்டுங்கள். எங்கள் பயன்பாட்டுக்குத் தக்க மெயிண்டனென்ஸ் செலுத்துகிறோம் என்கிறார்கள். இது தொடர்பான வாக்குவாதத்தில் பில்டரின் அலுவலத்தில் வேலை பார்த்த ஓர் ஊழியர் வீட்டு உரிமையாளர் ஒருவரைத் தாக்கியதில் அந்த சாஃப்ட்வேர் ஆசாமிக்கு மூக்கில் எலும்பு முறிவு, கையில் எழும்பு முறிவு ஏற்பட்டது. பில்டரின் ஆள்கள் போலிஸ் வருவதற்கு முன் அவசர அவசரமாக தரையில் சிந்திய ரத்தத்தை எல்லாம் சுத்தம் செய்து தடயத்தை அழித்து விட்டார்கள். பெரும் சமரசத்துக்குப் பிறகு திட்டமிட்ட கொலை முயற்சியாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்படவேண்டிய வழக்கு வெறும் கைகலப்பு வழக்காக பதியப்பட்டு ரூ 2500 அபராதக் கேஸாக முடிந்தது.

இப்படி அப்ரூவல் வாங்காமலேயே புக் செய்வது, பொய்யான விளம்பரங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றி வாங்க வைப்பது, சரியான நேரத்தில் வீட்டைக் கட்டி ஒப்படைக்காமல் இழுத்தடிப்பது, மிடில் கிளாஸ் மக்களான வீடு வாங்கியோர் மீது தாக்குதல் நடத்துவது என எல்லா வகையிலும் வாடிக்கையாளரை வஞ்சிக்கும் பில்டர்களைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டம், புதிய அமைப்பு வரப் போகிறது.

பங்குச் சந்தைக்கு SEBI, இன்சூரன்ஸ் துறைக்கும் IRDA, வங்கித் துறைக்கு ரிசர்வ் வங்கி மாதிரி ரியர் எஸ்டேட் துறைக்கு ஒரு நெறிப்படுத்தும் அமைப்பைக் கொண்டுவரும் சட்ட மசோதாவை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

இன்ஷுரன்ஸ் ஏஜெண்ட் மாதிரி ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் எல்லாம் இதன் கட்டுப்பாட்டில் லைசன்ஸ் வாங்க வேண்டி வரலாம். சும்மா ஒரு இடத்தை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தும் போதே மார்க்கெட்டிங் ஆரம்பிக்க முடியாது. அனுமதி பெறப்பட்ட ஒவ்வொரு புராஜெக்ட்டும் புதிதாக வரவிருக்கும் இந்த ரெகுலேட்டரி அமைப்பில் பதியப்பட வேண்டும். புராஜெக்ட் குறித்த அனைத்து அவசியமான விவரங்களும் அளிக்கப்படவேண்டும். அதன் பிறகுதான் மார்கெட்டிங் செய்ய வேண்டும்.

ஆஸ்திரேலியா நீர்வீழ்ச்சி, குடகுமலைப் பசுமை போன்றவற்றையெல்லாம் விளம்பரத்தில் போடக் கூடாது. புராஜெக்ட் சைட்டில் என்ன இருக்கிறதோ அதுதான் விளம்பரமாக வேண்டும். பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றக் கூடாது.

கவனித்திருப்பீர்கள். 1500 சதுர அடிக்கு நீங்கள் வாங்கினால் வீடு 1200 சதுர அடிதான் இருக்கும். இங்கே பில்டர்கள் விற்பது சூப்பர் பில்டப் ஏரியா. இனிமேல் வீட்டுக்குள் நமக்கு எத்தனை சதுர அடி கிடைக்குமோ, கார்ப்பெட் ஏரியா, அதைத்தான் விற்க வேண்டும்.

பிறகு வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற பணத்தை அந்த புராஜெக்ட்டில் மட்டுமே முதலீடு அல்லது செலவு செய்ய வேண்டும். சென்னையில் கிளப்ஹவுஸ் கட்டுவதாகச் சொல்லித் திரட்டிய பணத்தை துபாய் புராஜெக்ட்டில் போட முடியாது.

பிறகு குறிப்பிட்ட நேரத்தில் கட்டிக் கையளிக்காமல் போனால் தான் கட்டிய மொத்தப் பணத்தையும், வட்டியோடு திரும்பப் பெற்றுக்கொள்ளும் ஆப்ஷனும் வாடிக்கையாளருக்கு இருக்கும்.

வாடிக்கையாளர் குறைகளைக் கேட்டுக் களைய சிறப்பு அமைப்பும், தீர்ப்பாயமும் அமைக்கப்படவுள்ளன. சிவில் நீதிமன்றம், நுகர்வோர் நீதிமன்றம் என தாமதமாக நீதி கிடைக்கும் சிரமங்களை இது தவிர்க்கும்.

0

செல்லமுத்து குப்புசாமி

3 comments so far

 1. பொன்.முத்துக்குமார்
  #1

  சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரை சொல்லாமல் மறைத்தது ஏனோ ?

 2. surya
  #2

  The township name is bollineni. But still, the township looks better than other townships in that area

 3. செல்லமுத்து குப்புசாமி
  #3

  அது Bollineni Hillside தான். You may refer to this post as well.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: