கருணையும் மரணமும்

Afzal Guruஇந்திய அரசாங்கம் சமீப காலமாக மக்களுக்கு காலையில் சுட சுட செய்திகளை வழங்கிவருகிறது. 26/11 மும்பை தாக்குதல் கைதி அஜ்மல் கசாப் பூனே ஏரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார். அதைத் தொடர்ந்து டில்லி பாராளுமன்ற தாக்குதலின் முக்கியக் குற்றவாளி அப்சல் குரு டில்லி திகார் சிறையில் கொல்லப்பட்டார். இந்த மரண தண்டனைகளுக்கெல்லாம் காரணம், தூக்கிலிடப்பட்டவர்களின் கருணை மனு இந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதுதான். அஜ்மல் கசாப், அப்சல் குரு சர்ச்சை ஓய்வதற்குள் சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் நால்வரின் மரண தண்டனை மீதான கருணை மனுவையும் ஜனாதிபதி நிராகரித்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் இப்பொழுது தடாலடியாக ஒவ்வொருவராத தூக்கிலிடப்படுவதை மக்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

ஏன் அவசரம்?

2014 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் அரசாங்கம் இவ்வாறு அவசரமாக கைதிகளை தூக்கிலிடுகிறார்கள் என்கிறார்கள் சிலர். இந்துக்களின் ஓட்டு வங்கியை குறிவைத்தே அஜ்மல் கசாப்பும், அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்டதாக சிலர் விமரிசனமும் செய்கிறார்கள். எது எப்படி இருப்பினும் ஜனாதிபதியின் அதிரடி முடிவு சட்டப்படி சரிதானா என்று பலருக்கு சந்தேகம் இருந்துவருகிறது.

உண்மையில், மரண தண்டனை கைதிகளின் கருணை மனுவைத் தள்ளுபடி செய்வதில் ஜனாதிபதிக்கு அப்படியொன்றும் பெரும் பங்கு இல்லை. அவர் மற்ற விவகாரங்களைப் போல் இதிலும் ஒரு ரப்பர் ஸ்டாம்புதான். இந்திய அரசியல் சட்டத்தின் 72 ஆம் ஷரத்தின்படி, உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி தன் மீது வழங்கப்பட்ட மரண தண்டனையை நிராகரிக்கக் கோரி ஜனாதிபதியினிடம் கருணை மனு அனுப்பி வைக்கலாம் (ஒரு மாநிலத்தின் ஆளுனரிடமும் இந்திய அரசியல் அமைப்பின் 161 வது ஷரத்தின்படி கருணை மனு தாக்கல் செய்யலாம். இது குறித்து மேலும் அறிய  தமிழ்பேப்பரில் முன்னர் வெளியான ஹாய் அட்வகேட் பகுதியைப் பார்க்கவும்).

ஜனாதிபதி, தன்னிடம் வந்து சேரும் கருணை மனுக்கள்மீது தன்னிச்சையாக முடிவெடுக்கமுடியாது. ஒவ்வொரு கருணை மனுவையும் உள்துறை அமைச்சகத்தின்மூலம் மத்திய மந்திரி சபையின் ஆலோசனைக்கு அவர் அனுப்பி வைப்பார். மத்திய மந்திரி சபை தன்னுடைய முடிவை உள்துறை அமைச்சகத்தின்மூலம் ஜனாதிபதிக்கு தெரிவிக்கும். மந்திரி சபை எடுத்த முடிவை நிராகரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை. சம்பந்தப்பட்ட மரண தண்டனை கைதியை தூக்கிலிடவேண்டும் என்று அரசாங்கம் முடிவெடுத்தால் அதை ஜனாதிபதி ஏற்றுதான் ஆகவேண்டும். வேண்டுமென்றால் மறு பரிசீலனை செய்ய மறுபடியும் கருணை மனுவை மந்திரி சபைக்கு அனுப்பி வைக்கலாமே தவிர, இந்த விவகாரத்தில் ஜனாதிபதியால் செய்வதற்கு மேலதிகம் ஒன்றுமில்லை. அதனால் ஜனாதிபதியை இதில் குற்றம் சொல்லிப் பலனில்லை.

யார் காரணம்?

கருணை மனு விவகாரத்தில் காலம் தாழ்த்தப்பட்டால் அதற்கு முழுக் காரணமும் மத்திய அரசுதான். அதே போல் கருணை மனுவின்மீதான இப்படிப்பட்ட அதிரடி நடவடிக்கைகளுக்குக் காரணமும் மத்திய அரசுதான். குறிப்பிட்ட ஒரு மனு ஏன் துரிதமாகச் செயல்படுத்தப்படுகிறது, இன்னொன்றுக்கு மட்டும் ஏன் காலதாமதம் போன்ற கேள்விகளுக்கு அரசுதான் பதிலளிக்கவேண்டும்.

கருணை மனுவும் தாமதமும்

ஒரு கருணை மனுவை இத்தனை நாள்களுக்குள் விசாரித்து முடிவு வழங்கவேண்டும் என்று சட்டவிதிகளெல்லாம் இல்லை. ‘எங்களிடம் 33 கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன. நாங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத்தான் முடிவெடுப்போம். அதனால் ஏற்படக்கூடிய கால அவகாசத்தால்தான் கருணை மனுக்களின் மீதான முடிவு தாமதப்படுகிறது‘ என்று அரசாங்கம் சொல்லி வருகிறது. ஆனால், முன்னதாக தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு பின்னால் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். பின்னதாக தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப் முன்னதாகத் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.

வீரப்பனின் கூட்டாளிகள் நால்வரின் (ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன், பிளவேந்திரன்) கருணை மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ’கருணை மனுவின் மீதான முடிவை அரசாங்கம் மிகவும் தாமதமாக சுமார் 9 ஆண்டுகள் கழித்து எடுத்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் எங்களுடைய கருணை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு நாங்கள் உயிரோடு இருப்போமா அல்லது கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவோமா என்ற மன சஞ்சலத்திலேயே வாழ்ந்து வந்திருக்கிறோம். இது இந்திய அரசியல் சட்டத்தின் 21 ஆவது ஷரத்துக்கு எதிரானது. எனவே எங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்து அதை ஆயுள் தண்டனையாக குறைக்கவேண்டும்.’

இந்த மனுதாரர்கள் தங்கள் வழக்குக்கு முன்மாதிரியாக, ஏற்கெனவே இதே போன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டுகின்றனர். அது, வைத்தீஸ்வரன் -எதிர்- தமிழ் நாடு அரசு – (1983) 2 SCR 348. அதில் குறிப்பிடப்படும் விஷயங்கள் இவை. ‘இந்திய அரசியல் சட்டத்தின் 21 ஆவது ஷரத்தின்படி, கவுரவத்துடன் வாழவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. (பந்து முக்தி மோர்ச்சா -எதிர்- மத்திய அரசாங்கம் (1984) 3 SCC 161). சிறையில் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளுக்கும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. (சார்ல்ஸ் சோப்ராஞ் -எதிர்- திகார் சிறை அதிகாரி – AIR 1978 SC 514; சுனில் பாத்ரா – எதிர் – டில்லி நிர்வாகம் AIR 1994 SC 1675). வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் எங்கள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நாங்கள் எப்பொழுதும் மரண பயத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கிறாம். எங்கள் கருணை மனு மீதான முடிவை அரசாங்கம் இரண்டாண்டுகளுக்கும் மேலாக தாமதப்படுத்தியதின் மூலம் எங்களுக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் நிம்மதியாக வாழமுடியவில்லை. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையால் எங்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமை மீறப்பட்டிருக்கிறது. எனவே எங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்து அதை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும்.’

வைத்தீஸ்வரனின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது. இந்த வழக்கின் தீர்ப்பை வைத்து பல மரண தண்டனை கைதிகள், தங்களுடைய கருணை மனுவின் முடிவை அரசாங்கம் தாமதமாக வெளியிட்டது. அதனால் நாங்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளானோம் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

உச்ச நீதிமன்றத்துக்கு இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வந்தது. ஒரு கொலை வழக்கை மூன்று நீதிமன்றங்கள் விசாரித்து மரண தண்டனை வழங்குகிறது. அதாவது சாட்சிகளை விசாரித்து தீர்ப்பை வழங்கிய செஷன்ஸ் நீதிமன்றம் (கீழ் நீதிமன்றம்); அந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம்; பிறகு உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம். இந்த மூன்றும் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கவேண்டும் என்று ஏகமனதாக முடிவெடுக்கிறது. இந்நிலையில், காலதாமதத்தை முன்னிறுத்தி ஆயுள் தண்டனையாக மாற்றுவது சரிதானா? திரிவேனிபென் – எதிர்- குஜராத் அரசு – 1989 1989 AIR SC 1335 என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய வைத்தீஸ்வரன் வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனைக்கு ஆட்படுத்தியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பென்ச் திரிவேனிபென் வழக்கை விசாரித்தது. முடிவில் பின்வரும் தீர்ப்பை வெளியிட்டது.

‘ஒரு நீதிமன்றம் ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய பிறகு, சம்பந்தப்பட்ட மரண தண்டனை கைதி ரிட் மனு தாக்கல் செய்து ’தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைளுக்கு எதிரானது’ என்று வாதிடமுடியாது. கருணை மனுவை முடிவெடுப்பதில் அரசாங்கம் இரண்டாண்டுகள் காலம் தாழ்த்தியதால் வைத்தீஸ்வரன் வழக்கில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது தவறானது. குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு கருணை மனுவின் மீதான முடிவை ஒரு அரசாங்கம் வெளியிடவேண்டும் என்று கட்டளையிட முடியாது. கருணை மனுவின்மீதான விசாரணையை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் அதை காலதாமதமாக கருதமுடியாது. ஆனால் காரணமே இல்லாமல் ஒரு அரசாங்கம் கருணை மனுவின் மீதான தன்னுடைய முடிவை தாமதப்படுத்தினால் அதை கருத்தில் எடுத்துக்கொண்டு மரண தண்டனை கைதிகளுக்கு தகுந்த பரிகாரங்களை நீதிமன்றம் வழங்கலாம். ஆனால் அப்படி தண்டனையை குறைப்பதற்கு முன்னர் குற்றத்தின் தன்மையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.’

கருணை மனுமீதான காலதாமதமான முடிவை எதிர்த்துதான் ரிட் மனு தாக்கல் செய்யலாமே தவிர, கருணை மனுவை தனக்கு சாதகமாக ஜனாதிபதி முடிவெடுக்கவில்லை என்று அரசாங்கத்தை எதிர்த்து மரண தண்டனை கைதி ரிட் மனு தாக்கல் செய்யமுடியாது. ஆனால் ஆந்திர மாநில ஆளுனர் ஒரு மரண தண்டனை கைதியின் கருணை மனுவை ஏற்றுக்கொண்டு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார். ஆந்திர ஆளுனர் முடிவு தவறானது என்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆந்திர ஆளுனர் கருணை மனுவை சரியாக யோசிக்காமல் முடிவெடுத்திருக்கிறார். அவர் அவ்வாறு முடிவு எடுத்ததற்கு காரணங்கள் தகுந்ததாக இல்லை. ஆளுனர் தன் முடிவை எடுப்பதற்கு தேவையான தகுந்த ஆதாரங்கள் அவர் பார்வைக்கு வழங்கப்படவில்லை. எனவே ஆளுனர் எடுத்த முடிவு தவறானது. சம்பந்தப்பட்ட கைதியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது சரியில்லை என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. (எப்புரு சுதாகர் -எதிர்- ஆந்திர அரசு – AIR 2006 SC 3385).

ராஜிவ் கொலை வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 11 ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 2011ல் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. கருணை மனுவை முடிவெடுப்பதில் அரசாங்கம் தேவையற்ற காலதாமாதம் செய்திருப்பதாக மேற்பஐ மூவரும் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிந்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில்தான் மேற்சொன்ன வீரப்பன் கூட்டாளிகளும், ’தங்கள் கருணை மனுக்களை அரசாங்கம் தேவையற்ற கால தாமதத்துடன் நிராகரித்திருக்கிறது’ என்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ராஜிவ் காந்தி கொலையாளிகளின் ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் வேறொரு பென்ச் முடிவை வெளியிடும் தருவாயில் இருப்பதால், அந்த முடிவு வரும் வரை வீரப்பன் கூட்டாளிகளின் மனுவின் மீதான விசாரணையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இதற்கிடையில், மூவருக்கும் அரசு தூக்கு தண்டனை நிறைவேற்றாதபடி இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டது. ராஜிவ் கொலையாளிகளின் ரிட் மனு தீர்ப்புக்காக வீரப்பன் கூட்டாளிகள் ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போலவே பொதுமக்களும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

0

4 comments so far

 1. சரவணன்
  #1

  தமிழ்நாட்டை மரணதண்டனை ஒழிக்கப்பட்ட மாநிலமாக முதல்வர் அறிவிக்க வேண்டும். அதாவது, ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்துவிட்டாலும் எந்தக் குற்றவாளிக்கும் தமிழ்நாட்டு சிறைகளில் மரணதண்டனை தரப்பட மாட்டாது. அனைவரது தண்டனையையும் குறைக்கும்படி ஆளுநரிடம் அமைச்சரவை அறிவுறுத்தும் என்று அறிவிக்கலாம்.

  அரசியல் ரீதியாகப் பார்த்தால், சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான புதிய படங்கள் புலிகள் மேல் அனுதாபத்தை அதிகரித்திருக்கும் நேரத்தில், ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் அடுத்து 2014ல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அது மத்திய, மாநில ஆளும் கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும்; எனவே குறைந்தது நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை தண்டனையை நிறைவேற்ற ஜெயலலிதா விரும்பமாட்டார். அதன் பிறகு என்ன நடக்கும் என்று இப்போது கூற முடியாது. இதற்கிடையில் ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.டி.தாமஸே இந்தத் தீர்ப்பு பிழையானது, தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது அரசியல் சாசனப்படி தவறாகும், ஒரே குற்றத்திற்கு இரண்டு தண்டனை வழங்கியதாகும் என்று கூறியிருப்பதை மாநில அரசு கணக்கில் கொண்டு, உடனடியாக அவர்களது தண்டனையை ரத்து செய்ய முன்வர வேண்டும்.

 2. பூவண்ணன்
  #2

  மது விலக்கு,இலவச மின்சாரம்,இட ஒதுக்கீடு,சிறைசாலை வசதிகள்,உணவு,விதிகள் போன்றவை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடவில்லையா .அதை போல சரவணனின் அருமையான யோசனையை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.இட ஒதுக்கீடு சட்டம் போல ஒன்பதாவது அட்டவணையின் கீழும் அதனை கொண்டு வர பாராளுமன்றத்தில் போராட வேண்டும்
  குடியரசு தலைவராக இருந்த ராதக்ரிஷ்ணன் மரணதண்டனைக்கு எதிரானவர் என்பதால் அவர் பதவி வகித்த காலத்தில் கருணை மனு மறுக்கப்பட்ட மனு ஒன்றில் கூட கையெழுத்து போடாமல் அவர் காலத்தில் மரண தண்டனை நடைபெற முடியாமல் அவரால் தடுக்க முடிந்தது.அதை சட்டமும் அனுமதிக்கிறது என்பதை கருத்தில் கொண்டால் மாநில மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் சட்டமன்றம் மரணதண்டனையை மாநிலத்தில் ஒழிக்கும் தீர்மானம் ,சட்டம் நிறைவேற்றுவதை நமது அரசியல் அமைப்பு சட்டம் ஆதரிக்கிறது.
  இதை எதிர்த்து யாராவது ஸ்வாமி வழக்கு போட்டால் உச்ச நீதிமன்றமும் சட்டத்தின் கீழ் அதற்கு அனுமதி உண்டா என்பதை விளக்கும்.அனுமதி இல்லை என்றால் ஒன்பதாவது அட்டவணை கீழ் கொண்டு செல்ல முயற்சிக்கலாம்.

 3. சரவணன்
  #3

  இராதாகிருஷ்ணன் மட்டுமல்ல; கே.ஆர்.நாராயணன் கூட யாருடைய கருணை மனுவையும் நிராகரிக்கவில்லை. அப்துல் கலாம் கூட ஒரே ஒரு மனுவை மட்டுமே நிராகரித்தார். ஏன், பிரதிபா பாட்டீல் கூட தமிழ் மூவரின் மனுவை மட்டுமே நிராகரித்தார்.

 4. சான்றோன்
  #4

  தமிழகத்தில் மின் வெட்டுப்பிரச்சினை தீர்ந்துவிட்டது……மின் மிகை மாநிலமாக மாறிவிட்டது……. காவிரிப்பிரச்சினை முடிந்து டெல்டா பகுதிகளில் முப்போகம் விளைகிறது……..முல்லைப்பெரியாறு பிரச்சினை முடிந்து கேரளம் 152 அடி தண்ணீர் தேக்க ஒத்துக்கொண்டு விட்டது…….தென் மாவட்டங்கள் இனி பசுமையாக மாறிவிடும்…….சட்டம் ஒழுங்கு மிக சிற‌ப்பாக இருக்கிறது……இளம்பெண்கள் நள்ளிரவில் தனியாக எங்கும் பாதுகாப்பாக சென்று வரமுடிகிறது…..கொலை . கொள்ளை, திருட்டு போன்றவை அறவே ஒழிக்கப்பட்டுவிட்டன……..மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு பெண்கள் வயிற்றில் பால் வார்க்கப்படுவிட்டது……லஞ்ச ஊழல் என்பது லவலேசமும் கிடையாது…….தமிழகம் முழுவதும் இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்பட்டு முழுமையான சமத்துவம் நிலவுகிறது…….

  ஆகவே தமிழக முதல்வர் அவர்கள் பாக்கி இருக்கும் ஒரே பிரச்சினையான ராஜீவ் கொலையாளிகளையும் , இனி எதிர்காலத்தில் பல படுகொலைகளை நிகழ்த்தவிருக்கும் மனித நேயர்களயும் காக்கும்விதமாக , தூக்குதண்டனை ஒழிப்பு மசோதாவை உடனடியாக சட்டப்பேரவையில் நிறைவேற்றவேண்டும்……

  போங்கய்யா … நீங்களும் உங்க ” மனித ” உரிமையும்……….சான்றோன்

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: