ஒரு வெளிநாட்டு அல்வா

halwaநண்பர் ராம் சுரேஷ் (‘பெனாத்தல்’ சுரேஷ் என்று சொல்வதுதான் இயல்பாக இருக்கிறது, ஆனாலும் Brandகளை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் மதித்தாகவேண்டும் என்று எப்பவும் சொல்கிறவன் என்றமுறையில், அது ‘ராம் சுரேஷ்’ன்னே இருக்கட்டும்) எழுதிய ‘அல்வா’வை அது தமிழ் பேப்பரில் தொடராக வந்தபோதே ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தேன், சரியாக மூன்றாவது அத்தியாயத்தில் அந்த ஆர்வம் தீர்ந்துவிட்டது, கதையில் குறை ஏதும் இல்லை, வாராவாரம் காத்திருந்து படிக்கும் பொறுமை எனக்குக் கிடையாது. ஆகவே, ‘மொத்தமா புக்ல படிச்சுக்கறேன்’ என்று அவரிடம் சொல்லிவிட்டேன்.

சொன்னபடி, ‘அல்வா’ புத்தகமாக வெளிவந்தவுடன் வாங்கிப் படித்தேன். ரசித்தேன்.

தொடர்ந்து பேசுவதற்குமுன்னால் ஒரு விஷயம், இது முழுக்க முழுக்க வேக வாசிப்புக்கான நாவல், இலக்கியப் பூச்சு ஏதும் கிடையாது, கையில் எடுத்தால் முழுக்கப் படித்து முடித்துவிட்டுதான் கீழே வைப்பீர்கள், அப்புறம் சில மணி நேரத்தில் மறந்துபோய்விடுவீர்கள். மறுபடி எப்போதாவது எதேச்சையாகக் கையில் எடுத்தால், மறுபடி அதே வேகத்தில் படிப்பீர்கள். அப்படி த்ரில்லர்களுக்கான இலக்கணத்தைச் சிறிதும் குறைவைக்காமல் பின்பற்றியிருக்கிறார் ராம் சுரேஷ்.

அதேசமயம், இது டெம்ப்ளேட் கதை அல்ல. சர்வதேசக் களம் என்பதை வைத்து வெறும் பிரமிப்பு காட்டாமல், நிஜமாகவே அந்தப் பின்னணியை மிக அழகாகக் கதையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். முடிந்தவரை க்ளிஷேக்களைக் குறைத்து, கட்டுக்கோப்பான வடிவில் தந்திருக்கிறார். கதைப்போக்கில் வரும் பல Twists and turns முற்றிலும் எதிர்பார்க்கமுடியாதவையாக உள்ளன (குறைந்தபட்சம் எனக்கு).

அடிதடி, கொலை, கொள்ளை, கடத்தல்தான் கதையின் அடிப்படை என்றாலும், ஆங்காங்கே பல சின்னச் சின்னக் குறிப்புகள், வர்ணனைகள், வசனங்கள் மிகவும் ரசிக்கவைக்கின்றன. உதாரணமாக, துபாயில் எங்கு பார்த்தாலும் (செயற்கை) நீரூற்றுகள் என்று சொல்லி, அதற்கு அவர் சொல்லும் உளவியல் காரணம்.

அடுத்து, வசவசவென்று ஏகப்பட்ட கேரக்டர்களைக் கொட்டி நிரப்பாமல், அளவான எண்ணிக்கையில் கதாபாத்திரங்கள், அவை எல்லாவற்றுக்கும் அழுத்தமான ஒரு பின்னணி, அதையும் தனியே ‘ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே’ என்று தொடங்கி விளக்காமல் கதையோடு சொல்லிய விதம், எல்லாமே ரசிக்கவைக்கிறது.

இதற்குச் சிறந்த உதாரணம், மோனிகா என்ற ஓர் உப பாத்திரம். அநேகமாக அந்தப் பெண்ணுக்கு இந்தக் கதையில் வேலையே இல்லை, ஆனாலும் ஒரு சிறுகதையின் கதாநாயகிபோன்ற கவனத்துடன் அவளைச் செதுக்கியிருக்கிறார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தைப்பற்றியும் ஒரு தெளிவான முகம் வாசகர்களுக்குக் கிடைக்கிறது.

அப்புறம், தகவல்கள், ஏதோ ஒரு பார்சல் எங்கிருந்தோ எங்கோ சென்று ஒரு பேங்க் லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது என்றால், அதுதொடர்பான அத்தனை பின்னணி விவரங்களும் உறுத்தாமல் கதைக்குள் நுழைக்கப்பட்டிருக்கின்றன. கூகுளும் மேப்ஸும் உள்ள சூழ்நிலையில் இது ஒரு பெரிய விஷயம் இல்லைதான் என்றாலும், அதற்கென்று மெனக்கெட ஒரு மனோநிலை வேண்டுமே. அது என்னை மிகவும் ஈர்த்தது.

குறைகள் என்று பார்த்தால், அநேகமாக ஒரு தமிழ்க் கதாபாத்திரம்கூட இல்லாத முதல் தமிழ் த்ரில்லர் நாவல் இதுவாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்!

இது எப்படிக் குறையாகும்? என்று நீங்கள் கேட்கலாம். கதையில் வருகிற யாருமே தமிழ் பேசுவதில்லை என்பதால், மொத்த நாவலும் மொழிபெயர்ப்புமாதிரிதான், ஒரு வசனம்கூட நேரடித் தமிழில் இல்லை.

அந்தப் பின்னணியில் பார்க்கும்போது, கதையில் ஆங்கில வார்த்தைகள் மிக மிக அதிகம். ‘தமிழர்கள் இப்பல்லாம் அதிகம் ஆங்கிலம்தானே பேசறாங்க’ என்று ‘நேட்டிவிட்டி’யைச் சொல்லி ராம் சுரேஷ் தப்பித்துக்கொள்ளமுடியாது, மொழிபெயர்த்த அவரே இதற்கு முழுப் பொறுப்பு.

‘அதற்காக, த்ரில்லர் நாவலைச் செந்தமிழிலா எழுதமுடியும்?’ என்பதும் நியாயமான கேள்விதான். க்ரைம் நாவல்களை விரும்பிப் படிக்கும் வாசகர் வட்டம் இத்தனை தீவிரமான ஆங்கிலக் கலப்பை விரும்பாது என்பது என் கட்சி.

த்ரில்லரையெல்லாம் அனுபவிக்கணும், ஆராயப்படாது என்ற மூத்தோர் வாக்கை மதிப்போமாக!

அல்வா, ராம் சுரேஷ், மதி நிலையம் : விலை ரூ 45/-. புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.

One comment

  1. ravi_aa
    #1

    //ஆராயப்படாது என்ற மூத்தோர் வாக்கை மதிப்போமாக!//
    தலைவர் படம் போல என்று சொல்லுகிறீர்.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: