ஐ!

“ஏண்டா சுரேஷ், இன்னிக்கு என்ன பாட்டோடடா க்ளாஸ் ஆரம்பிக்கப் போற?” என்று கேட்டுக்கொண்டே லஞ்ச் ரூமுக்கு வந்தான் தினேஷ்.

“அடப்பாவி, ரஜினி படம் மாதிரி, ஆரம்பத்தில் எஸ்பிபி பாட்டு பாடித்தான் ஆரம்பிக்கணுமா? அதெல்லாம் அந்தக் காலம்டா. நாம எல்லாம் ரோபோ ரஜினி மாதிரி சும்மா சாதாரணமாவே இருப்போம்.”

“அதெல்லாம் சரியில்லை. நம்ம நோட்ஸைப் படிக்கிறவங்க, நேயர் விருப்பம் மாதிரி இந்த வாட்டி ச் தா ச் தா அப்படின்னு ஆரம்பிக்கச் சொல்லறாங்களே!”

“சரியாப் போச்சு. அவங்க அப்படிச் சொன்னா இருக்கட்டும். நான் வேணா ஐர ஐர ஐ-டாப்பா, ஐர ஐர ஐ-டாப்பா அப்படின்னு ஒரு பாட்டைப் போடறேன்.”

“ஆஹா! அடுத்தது ஐ பத்தி எதோ சொல்லப்போற போல. சரியாப் புரிஞ்சுதுன்னா நானும் ஐ!ன்னு துள்ளிக் குதிக்கறேன்.”

“டேய் நிறுத்துடா. விட்டா இப்படி சினிமாப் பாட்டு பத்திப் பேசியே ஓட்டிடுவே. நான் ஐன்னு சொன்னதுக்குக் காரணம் என்னன்னா, ஒரு வார்த்தை ஐ அப்படின்னு முடிஞ்சா அப்பவும் வலி மிகும். அதாவது என்னைச் சொன்னால், உன்னைக் கேட்டால், அவனைப் பிடித்தால், தலையைச் சொறிந்தால், பையைக் கொடுத்தால், வாயைப் பிடுங்கினால் இப்படி எல்லாம்.”

“அந்தத் தேக்குப் பலகையைக் கேட்டால்…”

“அட, சரியாச் சேர்த்துட்டியே! வெரி குட். தமிழ்ல வேற்றுமைன்னு ஒரு விஷயம் இருக்கு. நான் ஏண்டா லேட்டுன்னு கேட்டதுக்கு ஆபீசுக்கு லேட்டு, ஆபீசால லேட்டு, ஆபீசில்தான் லேட்டு அப்படின்னு பாட்டுப் பாடினயே. அதுல பாரு, முதல் வார்த்தை ஆபீஸ், ரெண்டாவது வார்த்தை லேட்டு. ஆனா ஆபீசில், ஆபீசால், ஆபீசுக்கு அப்படின்னு சொல்லும்போது ஒவ்வொரு வரியிலும் மீனிங் மாறுது இல்லையா? இதுதான் வேற்றுமை. மொத்தம் எட்டு விதமான வேற்றுமை இருக்கு. அதுவும் முக்கியமான மேட்டர்தான். ஆனா அதை அப்பாலிக்காப் பார்த்துக்கலாம்.

“இந்த லிஸ்ட்ல ரெண்டாவது விதம்தான் நாம சொன்ன இந்த ஐ. எங்க எல்லாம் இந்த ஐ சேர்ந்து ஒரு வார்த்தை வருதோ அங்க எல்லாம் வலி மிகும்.

“இதே மாதிரி எங்க எல்லாம் கு சேருதோ அங்கவும் வலி மிகும். அவனுக்குத் தா, நடிகைக்குக் காயம், ஹீரோவுக்குக் கொடு, இப்படி ஐ மாதிரி கு சேர்ந்தாலும் வலி மிகும். ஒரு தகவலுக்காகச் சொல்லறேன். இந்த கு இருக்கே, இது நம்ம வேற்றுமை விதங்களில் நாலாவது.”

“ஐ வந்தா வலி மிகும், கு வந்தா வலி மிகும். சில பேரு எழுதற ஹைக்கூ வந்தாலும் வலி மிகும்.”

“மிகும் மிகும். இந்த மாதிரி எல்லாம் கவுஜயைப் படிச்சா ஏன் மிகாது. சரி, நம்ம விஷயத்துக்கு வா. சில சமயங்களில் இந்த எக்ஸ்ட்ரா எழுத்துகள் இருக்கே. அதைச் சொல்லாம விட்டுடுடறோம். ஆனாலும் அர்த்தம் மாறாம இருக்கும். தண்ணீர் குடித்தான்னு சொன்னா, தண்ணீரைக் குடித்தான் அப்படின்னுதானே அர்த்தம். இந்த மாதிரி அந்த வேற்றுமைக்கான எழுத்தை சாய்ஸில் விட்டா அதுக்கு வேற்றுமைத் தொகை அப்படின்னு பேரு.”

“கையில் இருக்கும் காசு சீக்கிரமே செலவாகி மறைந்துபோகுதே. அதான் அதையும் தொகைன்னு சொல்லறோமா?”

“இந்த மாதிரி வகை தொகை இல்லாமப் பேசாதே! அப்புறம் சொல்ல வந்தது விட்டுப் போயிடும். மறைந்து இருக்கிறது இந்த வேற்றுமைத் தொகை மட்டும்தான். அதில் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. அதை அப்புறமாப் பார்க்கலாம். ஆனா இப்போதைக்கு இந்த ஐ, கு போன்ற எழுத்துகள் மறைஞ்சு வந்தா அது வேற்றுமைத் தொகை.”

“ஓக்கே. மேல போ.”

“சில சமயங்களில் இந்த எழுத்துகளோட இன்னும் சில வார்த்தையும்கூட மறையலாம். உதாரணமா தண்ணீர்த் தொட்டி அப்படின்னு சொன்னா நமக்கு என்ன புரியுது? தண்ணீரைக் கொண்ட தொட்டி அல்லது தண்ணீரை உடைய தொட்டின்னுதானே அர்த்தம். இங்க பார்த்தா தண்ணீருக்குப் பின்னாடி வரும் ஐ மட்டும் இல்லாம அதுகூட கொண்ட அல்லது உடைய அப்படின்னு அர்த்தத்தை முழுசாத் தர வார்த்தையும்கூட மறைந்து வந்திருக்கு பார்த்தியா.”

“ம்.”

“இப்போ கொஞ்சமே கொஞ்சம் கஷ்டப்படுத்தறேன். இந்த ஐ, கு எல்லாம் இருக்கு இல்லையா? அதுக்கு வேற்றுமை உருபு அப்படின்னு பேரு. இந்த உருபும் மறைஞ்சு போச்சு. அதோட அந்த முதல் வார்த்தையோட பயன் என்னன்னு சொல்லும் அடுத்த வார்த்தையும் மறைஞ்சு போச்சு. இல்லையா? இதைத்தான் ‘வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை’ அப்படின்னு டெக்னிக்கலாச் சொல்லணும்.”

“குழப்பிட்டியே!”

“சரி. அதை எல்லாம் விட்டுடு. ஒரு சில இடங்களில் பெருசாச் சொல்லவேண்டியதை சின்னாதாச் சொன்னாலும் பொருள் மாறாம வரும். அப்படி இருக்கும்போது சொல்லாம விடற விஷயங்களில் ஐ, கு போன்ற எழுத்துகளும் அந்த சொற்களில் முழுசா அர்த்தம் வரதுக்காக இருக்கும் வார்த்தையும் மறைஞ்சு வரும். அப்படி மறைஞ்சு வந்தா வலி மிகும். கொஞ்சம் எடுத்துக்காட்டுகள் பார்த்தா இது ஈசியாப் புரியும்.

“தண்ணீர்த் தொட்டி = தண்ணீரை உடைய தொட்டி -> இதுல ஐ +உடைய காணாமல் போகுது -> இங்க வலி மிகும். எனவே தண்ணீர்த் தொட்டி.

“கூலிப் படை = கூலிக்கு போரிடும் படை -> கு+போரிடும் போகுது -> இங்க வலி மிகும்.”

“இந்த விதத்திலும் ஐ, கு மட்டும்தான் வருமா? இல்லை வேற எதாவது, கூட இருக்கா?”

“சரியாக் கேட்டடா. இந்த மாதிரி வரும்பொழுது இன்னும் ரெண்டு வேற்றுமைகள் சேர்ந்துக்கும். நம்பர்ப்படி சொல்லணுமுன்னா, இந்த விதத்தில் 2, 3, 4, 7 என்ற நாலு வேற்றுமை விதங்களில் வலி மிகும். ரெண்டுன்னா ஐ, நாலுன்னா கு. இது ரெண்டும் நமக்கு இப்போ நல்லாத் தெரியும். மூணாவதுக்கும் ஏழாவதுக்கும் இப்படி ஒரு எழுத்தோட நிக்காம ரெண்டு மூணு டைப் இருக்கு.

“கண்ணால் காண்பதும் பொய் – இங்க ஆல் என்பது வேற்றுமை. ராஜாவோடு சென்றேன் – இங்க ஓடு என்பது வேற்றுமை. இதையே ராஜாவுடன் சென்றேன்னு சொல்லலாம். அப்போ உடன் என்பது வேற்றுமை. இதுதான் மூன்றாவது வேற்றுமை.

“இந்த மாதிரி ஆல் ஆன் ஒடு ஓடு உடன் – இதுகூட வர வார்த்தை மறைஞ்சு வந்தா அப்ப வலி மிகும்.

“வெள்ளித் தட்டு – வெள்ளியால் செய்யப்பட்ட தட்டு. இங்கவும் ஆல்+செய்யப்பட்ட என்பது மறைவதினால் வலி மிகும்.”

“இருப்பா. கொஞ்சம் நில்லு. தலை சுத்துது.”

“இன்னும் ஒண்ணே ஒண்ணு சொல்லிட்டு நிறுத்தறேன். இந்த ஏழாம் வேற்றுமை மட்டும் என்னன்னு பார்த்துடலாம். இதுல இல், கண், இடம் -னு மூணு சாய்ஸ் இருக்கு. பையில் பணம் இருக்கு, உன்னிடம் என்ன இருக்கு, வீட்டின்கண் விருந்தினர் இருக்கின்றனர் – இப்படி எல்லாம் சொல்லலாம். இதுல கண் என்பதை இன்னைக்கு இந்த அர்த்தத்தில் நாம சொல்லறதே இல்லை. இந்த ஏழாம் வேற்றுமையும் வேற ஒரு வார்த்தையோட மறைஞ்சு வந்தா அப்பவும் வலி மிகும்.

“உதாரணமா தண்ணீர்ப் பாம்பு -> தண்ணீரில் இருக்கும் பாம்பு -> இல்+இருக்கும் மறையுது -> எனவே வலி மிகும்.”

“இன்னிக்கு சொல்லிக் குடுத்தது ரொம்பக் குழப்பமா இருக்குடா.”

“சரி, இதுவரை சொன்னது எல்லாம் மறந்து போயிடு. எதையும் ஞாபகம் வெச்சுக்காதே. வெறும் எடுத்துக்காட்டுகளை மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ. இதுமாதிரி வந்தா வலி மிகும் அப்படின்னு தெரிஞ்சுக்கிட்டாப் போதும். வழக்கம்போல அந்த வார்த்தையை எழுதும்போது உச்சரிச்சுப் பாரு. வலி மிகுமான்னு தெரிஞ்சுடும்.

தண்ணீர்த் தொட்டி = தண்ணீர் (ஐ உடைய) த் தொட்டி

தண்ணீர்ச் சண்டை = தண்ணீர்(க்கு போடப்படும்)ச் சண்டை

தண்ணீர்க் கலவை = தண்ணீர் (ஓடு கலந்த) க் கலவை

தண்ணீர்ப் பாம்பு = தண்ணீர் (இல் இருக்கும்) ப் பாம்பு

“எழுதும்பொழுது, அதை இந்த மாதிரி விரிவுபடுத்த முடியுமான்னு பாரு. விரிவுபடுத்த முடியும்ன்னு தோணும்பொழுது உச்சரிப்பில் அழுத்தம் இருக்கான்னு பாரு. அழுத்தம் இருந்தா க் ச் த் ப் – இதில் எதைச் சேர்க்கணுமோ சேர்த்துடு. அவ்வளவுதாம்பா.”

“இவ்வளவு தண்ணிக்கு அப்புறம் என்னடா ஞாபகம் இருக்கப் போகுது. அட்லீஸ்ட் நல்லாவாவது இருக்கும். இப்படியே இருக்கட்டும்.”

“இன்னிக்கு ரொம்ப பேஜார் ஆயிட்ட. அதனால கடைசியா சிரிக்கிற மாதிரி ஒண்ணு சொல்லித்தரேன் கேளு. ஆய் போய் வந்தா வலி மிகும்.”

“ஏண்டா உனக்கு என்ன மூல வியாதியா? இப்படிச் சொல்லற?”

“அடப்பாவி, உனக்கு சிம்பிளா இருக்கணுமேன்னு சொன்னா எனக்கே திருப்பி விடறயா? நன்றாய்ப் போகிறது, போய்ப் பார்த்து வா – இப்படி ஆய் போய் சேர்ந்துவர வார்த்தைகளுக்கு வலி மிகும். இதையே நன்றாகப் போகிறது, போகக்கூடாதுன்னு சொன்னாலும் வலி மிகும். ஆக, போக, ஆய், போய் என்று முடியும் வார்த்தைகளுக்குப்பின் வலி மிகும். ஓக்கே?”

“யப்பா, கடைசியா இன்னிக்குச் சொன்னவுடனே புரியற மாதிரி ஒண்ணு சொல்லிட்ட. ரொம்ப நன்றி.”

“ இன்னிக்குச் சொன்னதைத் திரும்பச் சொல்லறேன்.

“ஐ சேர்ந்து முடிஞ்சாலோ கு சேர்ந்து முடிஞ்சாலோ வலி மிகும். (அவனைப் பார், அவனுக்குத் தா.)

“ஐ, கு, ஆல், ஓடு, இல், இடம் – இந்த மாதிரி முடியவேண்டிய இடங்களில் இந்த எழுத்துகள் மறைந்து அதன்கூட அந்தப் பொருளை முழுமையாகத் தரும் சொல்லும் மறைந்து வந்தால் வலி மிகும். (மேல இருக்கும் தண்ணி கேசுங்களைப் பார்த்துக்கோ.)

“ஆக, போக, ஆய், போய் என முடியும் வார்த்தைகளுக்குப்பின் வலி மிகும். (நன்றாகப் போகிறது, நன்றாய்ப் போகிறது.)”

“இதோட இந்த வலி மிகும் மேட்டர் முடிஞ்சுதாடா?”

“இதுதான் கொஞ்சம் கஷ்டமான இடம். இதோட அல்மோஸ்ட் முடிச்சாச்சு. இன்னும் கொஞ்சமே கொஞ்சம் இருக்கு. அதை அடுத்தவாட்டி சொல்லறேன். இப்போதைக்கு இதுவரை சொன்னதில் சந்தேகம் எதாவது இருந்தால் கேளு.”

5 comments so far

 1. Unmaivirumpi
  #1

  நன்றி வாத்தியரே !!!

 2. Ganesh
  #2

  சார்,
  பாடம் காலையில் பேப்பருடன் வரவேண்டும். தனி பிட் ஆக மாலையில் வெளியிடக்கூடாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் ( வலி மிகுந்ததா) கொள்கிறோம்.
  நன்றி.

 3. ஸ்ரீதர் நாராயணன்
  #3

  இதே போல உவம உருபுகளையும் டப்பா அடிச்சிருந்தேன் ஒரு காலத்தில். போல, புரைய, ஒப்ப, மான, சிவன, மலைய, அதிர, எதிர… இப்படிப் போகும்.

  ஏற்கெனவே ஒரு கமெண்ட் போட்ட மாதிரி நினைவு. இதுவரை காணலியே… சந்தேகத்துக்கு இங்கே ரிப்பீட்டு.

  ஒன்பதாம் வகுப்பில, இந்த வேற்றுமை உருபுகளை டப்பா அடிச்சிட்டு கிருஷ்ணப்பா ஐயா வகுப்பில முந்திரிகொட்டை மாதிரி பதில் சொல்லி பீத்திகிட்டது நல்லாவே நினைவிலிருக்கு 🙂

  இந்த வடிவம் எளிமையாகவும், செறிவாகவும் இருக்கு.

  ஆனாலும் கிளாஸ், சினிமா, மேட்டர், சாய்ஸ், ஆல்மோஸ்ட் போன்ற சொற்களுக்கு எளிமையான தமிழ் வார்த்தைகள் நிறையவே புழக்கத்தில இருக்குன்னு சொல்லிட்டு… நான் அப்பீட்!

  (அப்பீட்:- மொழிகடந்த குழூஉ குறி-னு சொல்லிக்கிறேன்)

 4. Subhra
  #4

  “இந்த ஐ. எங்க எல்லாம் இந்த ஐ சேர்ந்து ஒரு வார்த்தை வருதோ அங்க எல்லாம் வலி மிகும்.” – இதை இன்னும் சற்றுத் தெளிவுபடுத்தியிருக்கலாம். ஏனெனில் ஐ வே​ற்றுமை உருபாக இருந்தால் மட்டுமே வலி மிகும். எடுத்துக்காட்டாக, தந்தை + பார்த்தார், அன்னை பார்த்தார் போன்றவற்றில் முதல் வார்த்தை ஐ-யில் முடிந்திருந்தாலும் வலி மிகாது. ஏனெனில் இந்த ஐ வேற்றுமை உருபல்ல. பலர் தவறாக ஒற்றெழுத்துடன் எழுதுகின்றனர்.

 5. சிமுலேஷன்
  #5

  புனிதன் அவர்களின் ஒரு கதையின் பெயர், “அன்புள்ள ஆறாம் வேற்றுமை”. அதன் அர்த்தம் என்ன?

  – சிமுலேஷன்

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: