தவறான திசையில் ஓடும் உலகம்

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 11

Icepits near Allahabad. Drawing by Fanny Parks c. 1830

இந்தியாவில் பிரிட்டிஷார் சற்றும் எதிர்பார்த்திராத இன்னொரு விஷயமும் நடந்துவந்தது. சுட்டெரிக்கும் வெய்யில் நிறைந்த நம் தேசத்தில் செயற்கை முறையில் ஐஸ் தயாரிக்கப்பட்டு வந்ததைப் பார்த்ததும் அவர்களால் முதலில் நம்பவே முடியவில்லை. அவர்கள் இமயமலை வழியாக இந்தியாவுக்கு வந்திருக்கவில்லை. எனவே, இந்தியாவில் பனிக்கட்டியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பனிக்கட்டி நிறைந்த பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதால் ஐரோப்பியர்களுக்கு செயற்கையாக அதை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இந்தியாவில் அப்போது பனிக்கட்டி உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. அது குறித்து சர் ராபர்ட் பார்க்கர் (எஃப்.ஆர்.எஸ்) (1775) மிக விரிவாக எழுதியிருக்கிறார்.

கட்டுரையை ஆரம்பிக்கும்போதே, அவர் ஆய்வு மேற்கொண்ட அலகாபாத், கல்கத்தா பகுதிகளில் எங்கும் தெருவிலோ சமவெளிகளிலோ பனிக்கட்டிகளே கிடையாது. வெப்பமானியும் உறை நிலை வெப்பத்தை ஒருபோதும் சுட்டிக்காட்டியதில்லை என்றுதான் ஆரம்பிக்கிறார். இயற்கை பனிக்கட்டி என்பது கிடையாது; இந்தப் பகுதியில் செயற்கையாகவேதான் பனிக்கட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவே அவர் அப்படியான குறிப்புடன் கட்டுரையை ஆரம்பிக்கிறார். டிசம்பரில் இருந்து பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் பெருமளவுக்கு ஐஸ்கட்டி உற்பத்தி செய்யப்பட்டதை நேரில் பார்த்து எழுதியிருக்கிறார். வேறு சிலரும் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். என்றாலும் இதுதொடர்பாக வெறும் மேலோட்டமான தகவல்களே எங்கும் அதிகம் இருப்பதால் விரிவாக எழுத முடிவெடுத்ததாகச் சொல்கிறார். அவர் சொல்வதன் சாராம்சம் இது.

மிகப் பெரிய திறந்த வெளியில் 30 அடி சதுரத்தில் இரண்டடி ஆழத்தில் ஒரு பாத்திபோல் மூன்று நான்கு குழிகள் வெட்டப்பட்டன. எட்டு அங்குல அளவுக்கு கரும்பு அல்லது மக்காச்சோளத் தட்டைகொண்டு நிரப்பப்பட்டன. இந்தப் படுகை மேலே உறைய வைக்க வேண்டிய நீரானது சிறு சிறு பானைகளில் ஊற்றப்பட்டு வரிசையாக வைக்கப்பட்டன. இந்த நீரானது கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்டிருக்கும். இப்படி மாலை நேரத்தில் வைக்கப்படும் நீரானது சூரியன் உதிப்பதற்கு முன்பாக சேகரிக்கப்படும். எந்த அளவுக்கு பனிக்கட்டியாக ஆகியிருக்கிறதோ அது அப்படியே கூடைகளில் சேகரிக்கப்பட்டு வேறொரு இடத்துக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு 14-15 அடிக்குக் குழி தோண்டப்பட்டிருக்கும். அந்தக் குழியில் முதலில் வைக்கோல் போடப்பட்டிருக்கும். அதன் பிறகு கரடு முரடான போர்வை போன்ற ஒன்று போடப்படுகிறது. இந்தக் குழிக்குள் கூடை வைக்கப்பட்டு குழியின் மேல் பகுதி மீண்டும் காற்றுப் புகாதபடி வைக்கோல் போட்டு மூடப்படும். இந்தக் குழிகளுக்கு மேலே பந்தல் போல் கூரை வேயப்பட்டிருக்கும்.

கரும்பு அல்லது சோளத்தட்டைகளின் ஸ்பாஞ்ச் போன்ற தன்மை பானைகளுக்குக் கீழே குளிர்ந்த காற்று சென்று வர வழிசெய்கின்றன. பானையில் இருக்கும் சிறு துவாரங்கள் குளிர்ந்த காற்று உள்ளே செல்ல வழி செய்து தருகின்றன. சம தளத்தில் இருந்து ஒரு அடி கீழே இவை வைக்கப்பட்டிருப்பதால் சம தளக் காற்றினால் எந்த அதிர்வுக்கும் ஆளாகாமல் இருக்க வழி செய்கிறது. இவை எல்லாமே மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக மட்டுமே கண்டடையப்பட்டிருக்க வேண்டும்.

இந்த ஐஸ் உற்பத்தியில் பின்பற்றப்பட்டிருக்கும் விஞ்ஞானம் மிகவும் எளியது. பிற பொருட்களில் இருந்து வெப்பம் வந்து சேர முடியாதபடி நீர், திறந்த வெளியில் வைக்கப்பட்டால் சுற்றுப்புற வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கு சில டிகிரிகள் அதிகமாக இருக்கும்போதே நீரானது பூஜ்ஜியத்தை எட்டிவிடும். இந்தப் பனிக்கட்டியானது பெருமளவுக்குச் சேகரிக்கப்பட்டு முறையாக மூடிவைக்கப்பட்டால் உறை நிலையிலேயே தொடர்ந்து இருக்கும்.

சர்பத்கள் அல்லது உறைய வைக்கப்படவேண்டிய திரவங்களானது ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் ஊற்றப்பட்டு ஐஸ்கட்டிகள், வெடியுப்பு, சாதா உப்பு போன்றவை இருக்கும் பெரிய பாத்திரத்தினுள் வைக்கப்படும். கிண்ணத்துக்குள் வைக்கப்படும் திரவமானது ஐஸ்க்ரீம் போல வெகு அருமையாக உறைந்துவிடும். ஐரோப்பாவில் நாம் எந்த அளவுக்கு சிறப்பாக தயாரிக்கிறோமோ அதே அளவுக்கு இந்திய ஐஸ்க்ரீம்களும் இருக்கின்றன.

இந்த வழிமுறையானது இந்தியர்கள் தாமாகவே கண்டுபிடித்ததுதான். பனை ஓலை விசிறியில் ஆரம்பித்து வெட்டி வேர் தட்டிகள் வரை வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியக் குடிசைகள் என்பவை வெய்யில் காலத்தில் குளிர்ச்சியாகவும். மழைக்காலத்தில் கதகதப்பாகவும் இருக்கும் சக்திகொண்டவை. இன்றைய கான்க்ரீட் வீடுகளோ சுண்ணாம்புக் காளவாய்போல் தகித்துவருகின்றன. இந்த நவீன மனிதன்தான் நேற்றைய மனிதனைப் பார்த்து தொழில்நுட்பத்தில் நீ பின்தங்கியவன் என்று சொல்கிறான்.

காகிதத்தைக் கண்டுபிடித்தது சீனர்கள்தான் என்றாலும் இந்தியாவிலும் அது உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷார் பைபிள் அச்சடிக்கப் பயன்படுத்திய காகிதத்தை இந்திய பேப்பர் என்றே அழைத்திருக்கிறார்கள். சீனாவுடனும் அவர்களுக்கு தொடர்பு இருந்திருக்கிறது என்றபோதிலும் பைபிள் அச்சடிக்கப் பயன்படுத்திய தரமான காகிதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.  பிற தேசத்துக் கண்டுபிடிப்பையும் தனது திறமையைப் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் திறமை நம்மிடம் இருந்தது  புலனாகிறது. இது ஒரு சமூகம் உயிர்த்துடிப்புடன் இருந்து வந்ததன் அடையாளம்.

இந்தியா மிகவும் சிறந்து விளங்கிய இன்னொரு துறை விவசாயம். ஊடுபயிரில் ஆரம்பித்து இயற்கை வழியில் உரங்களை உற்பத்தி செய்வது வரை எத்தனையோ விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட காலகட்டத்தில் ஒரு சமூகம் அந்தத்துறையில் சிறந்து விளங்குவது இயல்புதான். என்றாலும் நீர்பாசனத்தில் நாம் அடைந்த உச்சம் வேறு எந்த நாடும் நினைத்தே பார்த்திருக்க முடியாதது. வற்றாத நதிகள் எதுவும் இல்லாத தமிழகத்தில் ஏரிப் பாசனமும் கிணற்றுப் பாசனமும் மிகப் பெரிய அளவில் இருந்திருக்கின்றன (வரும் அத்தியாயங்களில் இது பற்றி விரிவாகப் பார்ப்போம்).

மனிதர்கள், குறிப்பாக இந்தியர்கள் தமது சுற்றுச்சூழல், வாழ்க்கைத் தேவைகள், அனுபவங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை மேம்படுத்திக்கொண்டே வந்திருக்கிறார்கள். எப்போதுமே மனித வாழ்க்கையின் இலக்கு என்பது சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதான். ஒவ்வொருவரும் தமது சந்தோஷத்துக்கு ஒவ்வொரு வழியைத்தேடிக் கண்டைவதுண்டு. அனைவருக்கும் பொதுவான ஒன்றை முன்வைத்து அதன் அடிப்படையில் வாழ்க்கையை மதிப்பிடுவது பல நேரங்களில் தவறாகவே போய் முடியும்.

துணிகளை வெளுக்கும் தொழில் ஈடுபட்டவர்கள் அதற்கான வேதிப் பொருட்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கூடவே சுமைகளைச் சுமந்து செல்ல கழுதைகளை வளர்ப்பு மிருகங்களாக்கிக் கொண்டார்கள். விவசாயிகள் கலப்பை போன்றவற்றைக் கண்டுபிடித்ததோடு காளை மாட்டைக் கொண்டு உழவுத் தொழிலைச் செய்துகொண்டார்கள். உடல் வலு குறைவென்பதால் உடல் உழைப்பில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்ட பிராமணர்கள், மனம் எழுப்பும் கேள்விகளுக்கு விடை தேடி தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். அதனால் தத்துவார்த்த, இருத்தியல் சிக்கல்களை நோக்கி அவர்களுடைய நகர்வு அமைந்தது. உடல் உழைப்பில் ஈடுபட்டுவந்த பிரிவினர் வேத வேதாந்தங்களைப் படிக்க முடியவில்லையே என்று மூலையில் சோர்ந்துபோய் உட்காராமல் தமது வேலை சார்ந்த தொழில்நுட்பங்களை வெகு நேர்த்தியாகக் கண்டடைந்துவந்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க இந்த அறிவானது அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ளப்பட்டு தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கிறது. அப்படியாகக் கடந்த கால இந்திய சமூகத்தில் (உலகின் பிற சமூகங்களைப் போல) வேலைகளை மாற்றிக்கொள்ளத்தான் வழி இருந்திருக்கவில்லையே தவிர, ஒவ்வொருவரும் தமது வேலையைச் செழுமைப்படுத்திக் கொள்ள எந்தத் தடையும் இருந்திருக்கவில்லை.

நவீன காலகட்டத்தில், ஒரு சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் இருந்த இத்தகைய அறிவானது பொதுத்தளத்துக்குக் கொண்டுவரப்பட்டு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அது சார்ந்து சிந்தித்து ஒவ்வொரு தொழிலையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். மேற்குலகில் இந்த நவீன யுகச் செயல்பாடுகள் அவர்களுடைய பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக மிக இயல்பாக நடந்தேறி இருக்கிறது. இந்தியாவிலோ அது நேர்மாறாக ஆகிவிட்டது. இந்தியாவில் ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது அனுபவம் சார்ந்து கற்று உருவாக்கியிருந்த தொழில்நுட்பங்களும் வாழ்க்கை முறைகளும் ஒற்றை வரியில் நிராகரிக்கப்பட்டன. ஒருவேளை இந்திய பாரம்பரிய அறிவானது அதன் இயல்பான போக்கிலேயே வளரவிடப்பட்டிருந்தால் மேற்குலகின் பேராசை பிடித்த முன்னேற்றத்துக்குப் பதிலாக இயற்கையோடு ஒன்றிணைந்த ஒரு வளர்ச்சியை நாம் அடைந்திருக்கமுடியும். ஒருவேளை பிரிட்டிஷார்கள் தமது ஆதிக்க மனோபாவத்தை விட்டொழித்து உலகின் பல பகுதிகளில் இருந்த அறிவைத் தமக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்தால் உலகமே மிகவும் நிதானமான வளர்ச்சியை நோக்கிப் போயிருக்கும்.

ஜே.சி.குமரப்பா ஐந்துவகை பொருளாதாரம் பற்றிச் சொன்னார். சிங்கம் புலி போல் பிறரை அழித்து தன்னை வளர்த்துக் கொள்ளும் வேட்டைப் பொருளாதாரம் ஒரு முனையில் இருக்கிறது. இதற்கு நேர் எதிர்முனையில் தாயன்புடன் பிரதிபலன் எதிர்பார்க்காமல், குறைந்த தேவைகளுடன் தியாக மனப்பான்மையுடன் திகழும் சேவைப் பொருளாதாரம் இருக்கிறது. மேற்குலகம் வேட்டைப் பொருளாதார மனநிலையை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா சேவைப் பொருளாதார மனநிலையை கொண்டது. குமரப்பா பொருளாதாரத்துக்குச் சொன்னதை அதற்கு அடிப்படையான தொழில்நுட்பத்துக்கும் நாம் பொருத்திப் பார்க்க முடியும். இன்றைய மேற்கத்திய தொழில்நுட்பத்தின் மூலம் மனித குலம் அனுபவித்துவரும் வளர்ச்சியானது அபாயகரமானது. நிலைமை கைமீறிப் போவதற்கு முன் அதை உணர்ந்துகொள்வதுதான் நமக்கு நன்மை தரும்.

0

2 comments so far

  1. kashyapan
    #1

    மகாதேவன் அவர்களே!” இன்றய மேற்கத்திய தொழில் நுணுக்கம் மூகம் மனித குலம் அனுபவிக்கும் வளர்சியனது அபாயகரமனது.அதனை எவ்வளவு விரைவக புரிந்து கொள்கிறோமோஅவவளவு நல்லது” .காப்பீடு,ஓய்வூதியம்,சில்லரை வர்த்தகம் ஆகியவை பற்றி நாடாளுமனரத்தில் மசோதா வருகிறது.அதனை நாமெல்லாருமாக சேர்ந்து தடுக்கவேண்டும் அதுவும் நாட்டுக்கு நல்லது—காஸ்யபன்

  2. snkm
    #2

    நன்றி. உண்மையே, காலம் கடந்து போகுமுன் அனைவரும் கூடி நமது நாட்டைக் காக்க போராட வேண்டும். வாழ்க பாரதம்.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: