வெண்மைப் புரட்சியின் தந்தை

வெண்மைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் வர்கீஸ் குரியன் நேற்று காலமானார். அவர் வயது 90.

என். சொக்கன் எழுதிய அமுல் – ஓர் அதிசய வெற்றிக் கதை என்னும் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள், அவர் நினைவாக இங்கே.

1950-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி, கேரா (Kaira) மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முழு நேர ஊழியராக இணைந்தார் வர்கீஸ் குரியன். கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை மேலாளராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

தன்னுடைய நிஜமான முதலாளிகள், கிராமத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள்தான் என்பது வர்கீஸ் குரியனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. தன்னை அந்தப் ‘பால்காரர்களின் ஊழியன்’ என்றே பெருமையுடன் அழைத்துக்கொண்ட அவர், இனிமேல் தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையும், கேரா மாவட்டப் பால் உற்பத்தியாளர்களின் முன்னேற்றத்தை நோக்கியே இருக்கும் என்று உறுதியாகத் தீர்மானித்துக்கொண்டார்.

வர்கீஸ் குரியன் நினைத்திருந்தால், அவருக்கு இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ பல பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்திருக்கும். சொல்லப்போனால், அவர் இந்தக் கூட்டுறவுச் சங்கத்தின் மேலாளராகப் பொறுப்பேற்றபிறகும்கூட, புதிய வேலை வாய்ப்புகள், பதவிகள் அவரைத் தேடி வந்துகொண்டுதான் இருந்தன. இத்தனைக்கும், கூட்டுறவுச் சங்கத்தில் குரியனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் மிகக் குறைவு. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குமேல் இந்தத் துறையில் பணியாற்றிய வர்கீஸ் குரியன் வாங்கிய அதிகபட்ச சம்பளம், மாதம் ஐந்தாயிரம் ரூபாய்தான்!

ஆனால், இதே காலகட்டத்தில்தான், லட்சக்கணக்கான கிராமவாசிகளின் வாழ்த்துகளைச் சம்பாதித்துக்கொண்டிருந்தார் வர்கீஸ் குரியன். தன்னுடைய பணிகளின்மூலம், சமூகத்தில், பால் உற்பத்தியாளர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றம், முன்னேற்றம் கொண்டுவரமுடிகிறது என்கிற இந்த எண்ணம்தான், குரியனை மேலும் மேலும் கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடத் தூண்டியது.

0

இன்னும் ஒரு வாரத்தில் அமுல் தொழிற்சாலையின் திறப்புவிழா. இந்தியப் பிரதமர் சட்டையில் ரோஜாப்பூவுடன் வந்து நிற்கப்போகிறார். அவர் ரிப்பன் வெட்டித் தொழிற்சாலையைத் திறந்துவைக்கும்போது, பால் பவுடர் கொட்டவேண்டும். இல்லாவிட்டால், மொத்தக் கூட்டுறவுச் சங்கத்துக்கும் அவமானம்.

கடந்த பத்தரை மாதங்களாக, வர்கீஸ் குரியன் சரியாகத் தூங்கக்கூட இல்லை. ஒருபக்கம் கட்டட வேலைகளை மேற்பார்வை செய்யவேண்டியிருக்கிறது. இன்னொரு பக்கம் ஒவ்வோர் இயந்திரமாக வரவழைத்து, அவற்றைப் பொருத்துவதற்கான நிபுணர்களை ஒன்றுசேர்த்து வேலை வாங்குகிற அவசியம். எப்படியோ, பேச வேண்டியவர்களிடம் நல்லவிதமாகப் பேசி அத்தனையையும் முடித்துவிட்டார் குரியன். இன்னும் சில கடைசி நேரப் பூச்சு வேலைகள், அலங்கரிப்புதான் மிச்சம். மற்றபடி புதிய பால் பண்ணை கம்பீரமாகத் தயாராகிவிட்டது.

ஆனால், எருமைப் பாலில் இருந்து பால் பவுடர் தயாரிப்பதற்கான பரிசோதனைதான், இன்னும் முடிவடையவில்லை. வர்கீஸ் குரியன் பதற்றத்தோடு சுற்றிக்கொண்டிருந்தார். இன்னும் ஒரு வாரத்தில் திறப்புவிழா. அதற்குள் தலாயாவின் இயந்திரம் பால் பவுடரைக் கொட்டத் தொடங்கிவிடுமா? யாருக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை! இந்த நேரத்தில்தான், மொரார்ஜி தேசாய், வர்கீஸ் குரியனைச் சந்திக்க வந்தார்.

கேரா மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கு விதை போட்ட மொரார்ஜி தேசாய், இப்போது பம்பாய் மாகாணத்தின் முதலமைச்சர். ஆகவே, பிரதமரின் விழா ஏற்பாடுகளைக் கவனித்து உறுதி செய்துகொள்வதற்காக அவர் ஆனந்த் வந்திருந்தார்.
வர்கீஸ் குரியனை அவர் வீட்டில் சந்தித்த மொரார்ஜி தேசாய், அவரிடம் சில கடிதங்களைக் காண்பித்தார். அந்தக் கடிதங்கள் அனைத்தும், பல நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், பால் பண்ணைத்துறை நிபுணர்கள் எழுதியவை.

எல்லாக் கடிதங்களிலும் மையமாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரே விஷயம் இதுதான்: எருமைப் பாலைக் கொண்டு பால் பவுடர் தயாரிக்கவே முடியாது. வர்கீஸ் குரியன் அநாவசியமாக நேரத்தை, உழைப்பை, பணத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்தக் கடிதங்களைக் குரியனிடம் காண்பித்த மொரார்ஜி தேசாய் முகத்தில் கவலை படர்ந்திருந்தது. ‘என்ன குரியன், எல்லோரும் இப்படிச் சொல்கிறார்கள்?’

‘கவலைப்படாதீர்கள் சார், நாம் திட்டமிட்டபடி இந்தத் தொழிற்சாலை கச்சிதமாகத் தயாராகிவிடும்’ என்றார் வர்கீஸ் குரியன். ‘எருமைப் பாலில் இருந்து பால் பவுடர் வரும். உங்களுக்கு அதில் சந்தேகமே வேண்டாம்.’

அப்போதும், மொரார்ஜி தேசாய்க்கு முழு நம்பிக்கை வரவில்லை. வர்கீஸ் குரியனைக் குழப்பமாகப் பார்த்த அவர், ‘நான் இந்தத் தொழிற்சாலையைச் சுற்றிப்பார்க்க விரும்புகிறேன்’ என்றார்.

உடனடியாக, முதலமைச்சரைப் புதிய பால் பண்ணைத் தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்றார் வர்கீஸ் குரியன். ஒவ்வோர் அறையாகச் சுற்றிக் காண்பித்து, எங்கே, என்ன நடக்கிறது என்று விளக்கிச் சொன்னார். ‘இன்னும் ஒரு வாரத்தில் எல்லா வேலைகளும் முடிந்துவிடும் சார், எந்தப் பிரச்னையும் இருக்காது.’

கடைசியாக, வர்கீஸ் குரியன் அவருக்குப் பால் பவுடர் இயந்திரத்தைக் காண்பித்தார். ‘இந்தக் குழாயின் வழியாகத்தான், பால் பவுடர் கொட்டப்போகிறது சார்!’

மொரார்ஜி தேசாய் அந்த இயந்திரத்தைச் சந்தேகமாக உற்றுப் பார்த்தார்.

‘குரியன், நான் கேட்கிறேனே என்று தப்பாக நினைத்துக்கொள்ளாதீர்கள். ஒருவேளை, உங்களுடைய பரிசோதனை தோல்வி அடைந்துவிட்டால், என்ன செய்வது?’

‘கவலைப்படாதீர்கள் சார், அதற்கும் ஒரு வழி வைத்திருக்கிறேன்’ என்றார் வர்கீஸ் குரியன்.
‘அந்தப் பால் பவுடர் இயந்திரத்தின் மேலே இருந்த ஓர் அறையைச் சுட்டிக் காண்பித்தார் வர்கீஸ் குரியன். ‘அங்கே ஏற்கெனவே நான்கு மூட்டை வெளிநாட்டுப் பால் பவுடர் வாங்கி வைத்திருக்கிறேன், ஒருவேளை இந்த இயந்திரம் ஒழுங்காக வேலை செய்யாவிட்டால், அங்கிருக்கும் பால் பவுடர் மூட்டைகளைப் பிரித்துக் கொட்டுவோம். இந்தக் குழாயின் வழியே பால் பவுடர் வரும், பிரதமருக்கு எந்தச் சந்தேகமும் வராது.’

ஆனால், இந்த ஏற்பாட்டில் குரியனுக்குத் துளி சந்தோஷம் இல்லை. பிரதம மந்திரிக்காக இல்லாவிட்டாலும், நம்மை நம்பிப் பணம் கொடுத்த கூட்டுறவுச் சங்கத்தினருக்காகவேனும், நாம் இந்தப் பரிசோதனையில் வெற்றியடையவேண்டும். எருமைப் பாலில் இருந்து பவுடர் தயாரித்தாகவேண்டும்.

குரியனின் அவசரமும் தவிப்பும் தலாயாவுக்கு நன்றாகப் புரிந்திருந்தது. ஆனால், அவர் என்ன செய்வார், பாவம்? இந்தப் பரிசோதனை முன்னால் போனால் கடிக்கிறது, பின்னால் போனால் முட்டுகிறது.

அதே சமயம், எப்படியாவது இதைச் சரி செய்துவிடமுடியும் என்று உறுதியாக நம்பிய தலாயா, ராத்திரி பகலாக அந்த இயந்திரத்தின் அருகேதான் நின்றிருந்தார். பலவிதமான கலவைகள், வெப்பநிலைகளை மாற்றி மாற்றி முயன்று பார்த்தும், எருமைப் பால் கெட்டுப்போனதே தவிர, பவுடராக மாறவே இல்லை.

ஒருபக்கம் தலாயா தொடர்ந்து தனது பரிசோதனைகளைத் தொடர்ந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் வர்கீஸ் குரியன் விழா ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். மெல்ல, பிரதமர் வரும் நேரம் நெருங்கியது.

அக்டோபர் 30ம் தேதி, புதிய பால் பண்ணைத் தொழிற்சாலையின் திறப்புவிழாவுக்கு இன்னும் சில மணி நேரங்களே பாக்கியிருந்த சூழ்நிலையில், தலாயாவின் கடும் உழைப்புக்குப் பரிசு கிடைத்தது. அந்த மாய பிளாஸ்டிக் குழாயின் வழியே, எருமைப் பால் பவுடர் கொட்டத் தொடங்கியது.

மகிழ்ச்சியில், வர்கீஸ் குரியனுக்குத் தலை கால் புரியவில்லை. அந்தப் பவுடரை அப்படியே அள்ளி, தலாயாவின் (அமெரிக்காவில் அறிமுகமான நண்பர் ஹரிசந்த் மேகா தலாயா) வழுக்கைத் தலையில் பூசினார் அவர். பதிலுக்குத் தலாயாவும் பவுடரை குரியன் முகத்தில் வீசினார். இருவரும் சின்னக் குழந்தைகளைப்போல் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

பின்னே? அவர்கள் சாதித்திருப்பது சாதாரண விஷயமா? எருமைப் பாலில் பவுடர் வராது என்று ஒட்டுமொத்த உலகமும் சொல்லும்போது, அதை ஏற்றுக்கொள்ளாமல் தங்களுடைய திறமைமீது அவர்கள் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. இன்னொரு பெருமை, எந்த வெளிநாட்டு நிபுணரையும் கலந்து ஆலோசிக்காமல் உருவாக்கப்பட்ட 100% இந்திய தொழில்நுட்பம் இது. அதைவிட முக்கியம், இனிமேல் கேரா மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் சங்கம், உபரிப் பாலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று திணறவேண்டியதில்லை. எவ்வளவு பால் மிஞ்சினாலும், அதைப் பவுடராக்கிப் பாதுகாத்துக்கொள்கிற தொழில்நுட்பம் நமக்குக் கிடைத்துவிட்டது.

எருமைப் பாலில் இருந்து பவுடர் வருகிறது என்றால், இன்னும் சாக்லேட், ஐஸ் க்ரீம், பாலாடைக்கட்டி (சீஸ்), குழந்தை உணவுகள் என்று ஏகப்பட்ட பொருள்களை அதிலிருந்து தயாரிக்கமுடியும் என்றுதான் அர்த்தம். இதன்மூலம், எருமைப் பாலுக்குப் பல புதிய பயன்கள் கிடைக்கவிருக்கின்றன, வருங்காலத்தில், கேரா கூட்டுறவுச் சங்கம் அதிலெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கால் பதிக்கலாம்.

1955ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, ஆனந்தில் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான பால் பண்ணையைத் தொழிற்சாலையைத் திறந்துவைத்தார் நேரு. ஆசியாவிலேயே மிகப் பெரிய பால் பண்ணைத் தொழிற்சாலையான இங்குதான், நம் நாட்டிலேயே முதன்முறையாகப் பால் பவுடர் தயாரிக்கப்பட்டது. அதுவும் எருமைப் பாலைக் கொண்டு!

அதுவரை, இந்தியாவில் எந்தப் பால் பண்ணையை எடுத்துக்கொண்டாலும், அங்கே பாலைப் பாதுகாப்பது, பதப்படுத்துவது ஆகிய இரண்டு விஷயங்களுக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். மிஞ்சிப்போனால், பாலில் இருந்து வெண்ணெய் எடுப்பார்கள். அதை நெய்யாக மாற்றி விற்பனை செய்வார்கள். அதைத் தாண்டி யாரும் சிந்தித்தது கிடையாது. முதல்முறையாக, ஆனந்தில் அமைக்கப்பட்ட கூட்டுறவுப் பால் பண்ணை, பாலில் இருந்து பால் பொருள்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியது. அதன் முதல் படியாகதான், தங்களுக்குச் சொந்தமாக ஒரு பால் பவுடர் தயாரிப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருந்தார்கள்.

ஒருபக்கம் பால் சேகரிக்கப்படும். குளிரூட்டப்பட்டு, பதப்படுத்தப்பட்டு பம்பாய்க்கோ, வேறு நகரங்களுக்கோ அனுப்பப்படும். இதுதவிர மிஞ்சிய பால், பவுடராக்கப்படும். அதிலிருந்து வேறு பல பொருள்களாகத் தயாரிக்கப்படும். இதைத் தனியாக விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம். வர்கீஸ் குரியனின் திட்டம் இதுதான்.

தைரியமாகக் களத்தில் இறங்கலாம் என்று தீர்மானித்தார் வர்கீஸ் குரியன். தங்களுடைய அனுபவக் குறைவை, கடும் உழைப்பால் ஈடுகட்டிக்கொள்ளலாம் என்று கணக்கு போட்டார்.

ஆனந்தில் கூட்டுறவுச் சங்கப் பால் பண்ணை திறக்கப்பட்டு மூன்றே மாதங்களில், அவர்களுடைய தயாரிப்புகள் நேரடியாக மக்களைச் சென்றடையத் தொடங்கின. 1956 பிப்ரவரியில் தங்களுடைய பால் பவுடரை அறிமுகப்படுத்திய கேரா கூட்டுறவுச் சங்கம், அடுத்த மாதம் வெண்ணெய் தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவந்தது.
இந்தத் தயாரிப்புகளைப் பரவலாகப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குக் கேடா கூட்டுறவுச் சங்கம் மிகவும் பாடுபட்டது. அப்போதும், அவர்களால் குறிப்பிடத்தக்க விற்பனையை எட்டமுடியவில்லை.

குறிப்பாக, கேடா கூட்டுறவுச் சங்கம் தயாரித்த வெண்ணெய், பால்ஸன் நிறுவனத்துடன் போட்டியிடமுடியாமல் திணறியது. ஏற்கெனவே பம்பாய் வெண்ணெய்ச் சந்தையை முற்றிலுமாக வளைத்துப்போட்டிருந்த பால்ஸன், இப்போது கூட்டுறவுச் சங்கத்தின் வெண்ணெய்க்கு இடம் தராமல் கடும் போட்டி கொடுத்தது.

என்ன செய்யலாம் என்று வர்கீஸ் குரியன் தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டிருந்த நேரம். அவருடைய உறவினர் கே எம் ஃபிலிப் ஒரு யோசனை சொன்னார்.

‘உங்களுடைய தயாரிப்புகள், மக்கள் மனத்தில் சட்டென்று பதியவேண்டுமானால், அதற்கு ஒரு நல்ல பெயர் தேவை.’

அதாவது, ‘கேரா மாவட்டக் கூட்டுறவுச் சங்கத்தின் வெண்ணெய்’ என்று நீட்டி முழக்குவதைவிட, சிறியதாக, சுலபத்தில் ஞாபகம் வைத்துக்கொள்ளும்படியான பிராண்ட் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அதன்பிறகு, அந்த பிராண்ட் தயாரிப்புகள் தரமானவை என்கிற எண்ணத்தை மக்களிடையே உருவாக்குவதற்குச் சரியான விளம்பரங்களைச் செய்யவேண்டும்.

அமுல் (Anand Milk Union Limited ) பிறந்தது இப்படித்தான்.

0

வர்கீஸ் குரியன் விக்கிபீடியா பக்கம்

Dr Varghese Kurien – From mechanical engineer to milkman

2 comments so far

  1. kashyapan
    #1

    வேண்மைப்புரட்சியை உருவாக்கியவர்களில் குரியன் முதன்மையானவர். ஆனலும் அவருக்கு எதிர்ப்பு பலவகைகளில் வந்தது. Cow milkகு பதிலாகbuffellow milk புனிதமான பசும் பாலை முக்கியமானதாக கருதியவர்களின் எதிர்ப்பு இருந்தது. எருமைப்பால பவுடராக ஆக்க முடியது என்ற அறிவியல் பிரச்சாரமும் தொடர்ந்தது.கூட்டுறவு இயக்கத்தை விரும்பாத நிலமுள்ள பண்ணையார்களின் எதிர்ப்பும் சேர்ந்தது.கூட்டுறவில் தலித்துகள் கறக்கும் பாலும் சேருமே! என்று எதிர்ப்பு வந்தது. (ஷ்யாம் பெனிகல் தயாரித்து கிறீஷ் கர்னாட், ஸ்மிதா பட்டில் நடித்த “மந்தன்”படம்) .இதையெல்லாம் பற்றி விவாதிக்கத்தான் மொரார்ஜி வந்தார். பின்னாளில் பசிவதைதடைபற்றிய கமிட்டியில் குரியனையும் சேர்த்தர்கள். அதே கமிட்டியில் குருஜி கோல்வால்கரும்செயல்பட்டார். குரியன் பசுவதையை தடை செய்யக்க்கூடாது. அது கறவை மாடுகளின் தீனியத் திண்றுவிடும். கூட்டுறவு சங்கங்கள் அதனை தாங்க முடியாது என்று வாதிட்டார். தன்னுடைய நூலில் இதைக்குறிப்பிட்டுள்ள குரியன் “குருஜி கோலவால்கர் போன்ற தேச பக்தர்களை பார்ப்பது அரிது” என்றும் குறிப்பிட்டுள்ளார்—காஸ்யபன்

  2. Guru
    #2

    http://www.livemint.com/2012/09/09172055/Kurien-the-man-who-redefined.html

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: