டெசோவும் ஈழ அரசியலும் – ஒரு பேட்டி

‘வெகுஜன ஊடகங்களால் மக்களுக்குச் சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட செய்திகளைத் தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்’ என்று அறிவிக்கும் கலையரசன் ஓர் ஈழ அகதி. தற்போது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். சர்வதேச அரசியல், வரலாறு, சமூகவியல், ஈழம் என்று இணையத்தில் விரிவாக எழுதிவருகிறார். முகவிரி : http://kalaiy.blogspot.in/ டெசோ குறித்தும் ஈழ அரசியல் குறித்தும் தன் கருத்துகளை மருதனுடன்  இங்கே  சுருக்கமாகப் பகிர்ந்துகொள்கிறார்.

டெசோ மாநாட்டை நடத்துவதற்கு, ஈழத் தமிழர்கள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு, தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு திமுகவுக்கு தகுதி இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

கலையரசன் : தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் தமது எல்லைக்குட்பட்ட ஈழ அரசியலை செய்து கொண்டிருக்கின்றன. எல்லாக் கட்சிகளும், தமது அரசியல் இலாபத்திற்காக ஈழம் பற்றி பேசுவது வாடிக்கை. தற்பொழுது பதவியிழந்த திமுக வும், ஈழத்தைக் கையில் எடுப்பதால் எதையும் இழக்கப் போவதில்லை. திமுக மட்டுமல்ல, தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் தகுதி இருப்பதாக கூற முடியாது. இந்திய மத்திய அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறி எந்தக் கட்சியும் செயற்படப் போவதில்லை.

ஈழம் என்னும் வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என்று மத்திய அரசு இந்த நிமிடம் வரை திமுகவுக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இலங்கைத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் இரண்டில் எது சரியான பதம்?

கலையரசன்: போர் தொடங்குவதற்கு முன்னர் இலங்கைத் தமிழர் என்ற பதம் பயன்பாட்டில் இருந்தது. இன்றைக்கும் அதுவே உத்தியோகபூர்வமாக பயன்படுத்தப்படுகின்றது. போர் நடந்த முப்பதாண்டு காலத்தில் ஈழத்தமிழர் என்ற பதம் செல்வாக்குப் பெற்றது. தமிழகத்தில் இருந்துதான் அத்தகைய அடையாளப்படுத்தல் தோன்றியது.

ஈழத் தமிழர் என்பது பிரிவினை என்ற அர்த்தம் கொண்டுள்ளதாக, இலங்கை அரசும் இந்திய அரசும் நம்புகின்றன. அதனால்தான் மத்திய அரசு அதற்கு தடை விதித்தது. இதிலே வேடிக்கை என்னவென்றால், இருபதாண்டுகளுக்கு முன்னர் இந்திய, மத்திய அரசு அந்தப் பதத்தை பயன்படுத்தி வந்தது. ஈழத் தமிழர், இலங்கைத் தமிழர் இரண்டுமே தற்பொழுது ஒரே அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகின்றது. என்னைப் பொறுத்த வரையில், இரண்டுமே ஒன்று தான்.

இலங்கைத் தமிழ் தேசியம், ஈழத் தமிழ் தேசியம் என்று எப்படி அழைத்தாலும், இலங்கையில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களின் தேசிய அடையாளமாகப் பார்க்கப்படுவதில் தவறில்லை. தேசிய இனப்பிரச்சினை இருப்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், தமிழ் தேசியவாதிகள் ஈழத் தமிழர் என்பதை, ஈழம் என்ற தனி நாட்டைச் சேர்ந்தவர்களாக கருதுகின்றனர். அதே எண்ணத்தில்தான் மத்திய அரசும் எதிர்க்கின்றது. தமிழ்த் தேசியவாதிகள், ஈழத் தமிழர் என்பதை ஒரு பிரிவினைக் குறியீடாக காட்டிக் கொள்ளும் வரையில், மத்திய அரசின் எதிர்ப்பும் தொடரவே செய்யும். ஏனெனில், இலங்கை இரண்டாகப் பிரிந்தால், அது இந்தியாவிலும் எதிரொலிக்கும்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தை தமிழகத்தால் தடுத்திருக்கமுடியுமா?

கலையரசன் : தமிழக மாநில அரசுக்கு அதிக அதிகாரம் இல்லா விட்டாலும், அரசியல் தலைவர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்து அழுத்தம் கொடுத்திருக்க முடியும். இதனால், திமுக மக்கள் ஆதரவையும் பெருக்கி இருக்கலாம். இந்த விடயத்தில், மத்திய அரசை பகைத்துக் கொள்ள திமுக தயாராக இருக்கவில்லை. அதே நேரம், கடந்த காலங்களில் புலிகளின் தொடர்பால் ஏற்பட்ட மனக்கசப்பும் அவர்களை எதிர்நிலையில் தள்ளி இருந்தது. புலிகளை ஆதரித்தவர்களை விட எதிர்த்தவர்களின் அணி பலமாக இருந்தது. அதே நேரம், எதிர்க் கட்சிகள், வெகுஜன அமைப்புகள், பொது வேலைநிறுத்தங்களையும் ஒழுங்கு படுத்தி இருக்க முடியும். அது நடக்காமல் தடுப்பதில், மத்திய அரசு அதிக கவனம் எடுத்து செயற்பட்டது. அதி தீவிர புலி ஆதரவு கட்சிகளும், ஒரு எல்லைக்கப்பால் செல்ல விடாது பார்த்துக் கொள்ளப்பட்டது. தமிழகத்தில் இருந்து யாரும் கடல் தாண்டி வர மாட்டார்கள் என்ற நம்பிக்கை இலங்கை அரசுக்கும் இருந்துள்ளது. ஏற்கனவே இந்திய மத்திய அரசு, தமிழகத்து நிலைமையை ஆய்வு செய்து அறிவித்துக் கொண்டிருந்தது.

இப்போதிருக்கும் நிலை. தனி நாடாகப் பிரிதல். கூடுதல் அதிகாரம். இந்த மூன்றில் எது ஈழத் தமிழர்களுக்கு நல்லது? அல்லது, வேறு மாற்று உள்ளதா?

கலையரசன் : உண்மையில் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழீழம் என்ற பிரிவினையை அதிகபட்ச கோரிக்கையாக வைத்துக் கொண்டே, நடைமுறையில் சமஷ்டி அதிகாரம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். மிதவாத தமிழர் விடுதலைக் கூட்டணி, ‘பாராளுமன்ற பாதையில் தமிழீழம்’ காணும் அரசியல் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் இது வெளிப்படையாக தெரிந்தது. புலிகள் ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில், சமாதானப் பேச்சுவார்த்தைகளிலும் அது பற்றித் தான் பேசப்பட்டது. அதாவது. தமிழீழப் பிரிவினையை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள முன்வராது என்பது பிரபாகரன் உட்பட பல தலைவர்களுக்கு தெரிந்திருந்தது. ஆனால், ஆயுதப் போராட்டத்தின் மூலம் தமிழீழம் அடையாளம் என்பது பிரபாகரனின் தளராத நம்பிக்கையாக இருந்தது.

புலிகளைப் பொறுத்த வரையில், சமாதானப் பேச்சுவார்த்தைகள் தீர்வுக்கான வெளிப்பாடல்ல. அது ஒரு யுத்த நிறுத்தம், மீண்டும் போருக்கான தயார்படுத்தல் மட்டுமே. இறுதியில், அதையும் இலங்கை அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதாவது, சர்வதேச சமூகம் (மேற்கத்திய நாடுகள்) பிரிவினைக்கு எதிராக இருந்ததை சரியாகக் கணக்குப் போட்டிருந்தது. 90 % மேற்கத்திய சார்பு வலதுசாரிகளைக் கொண்ட ஈழத் தமிழரின் தலைமை அதனை புரிந்து கொள்ளாதது வியப்புக்குரியது. அமெரிக்கா மட்டுமல்ல, ஐ.நா. வரை சென்று முறையிட்டாலும், இலங்கை அரசுடன் பேசி தீர்வைக் காணுமாறு கூறுகின்றனர். அதன் அர்த்தம், தனி நாடாக பிரிவதென்பது சாத்தியமல்ல. ஆனால், முடிந்தளவு அதிகளவு அதிகாரங்களை பெறுவதற்கு முயலலாம். அந்த முடிவுக்கு வருவது துரோகம் என்று சொல்பவர்களுக்கு, தமிழ் மக்கள் மீது அக்கறை இருப்பதாக நினைக்கவில்லை. தனிநாடு கோரிக்கையை பிரச்சாரம் செய்வதன் மூலம் ஆதாயம் பெறுவதே அவர்களது குறிக்கோளாக உள்ளது.

ஒப்பீட்டளவில் இலங்கை ஆசியாவில் பலம் குறைந்த ஒரு சிறிய தீவு. எப்படி அவர்களால் துணிச்சலாக தமிழர்களை ஒடுக்கவும் அவர்கள்மீது போர் தொடுக்கவும் விளைவுகள் குறித்து அச்சமில்லாமல் இருக்கவும் முடிகிறது?

கலையரசன் : ஆசியாவில் சிறிய நாடாக இருந்த போதிலும், மாறி மாறி பலமான வல்லரசுகளுடன் நல்லுறவைப் பேணும் இராஜதந்திரத்தை இலங்கை தெரிந்து வைத்திருக்கிறது. சுதந்திரமடைந்த காலத்தில் பிரிட்டன், பின்னர் இந்தியா, சோவியத் யூனியன், இப்பொழுது அமெரிக்கா, சீனா என்று எதிரும் புதிருமான வல்லரசுகளுடன் இலங்கையின் சிங்கள ஆளும் வர்க்கம் உறவுகளைப் பேணி வந்துள்ளது. எந்த வல்லரசும் அரசைக் கவிழ்ப்பதற்கு முன்னர், அரசே அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளும். காலனிய காலத்துக்கு முன்னர், இலங்கையில் சிங்களவர், தமிழர் பிரச்சினை இருக்கவில்லை. பிரிட்டிஷ்காரர்கள் அந்தப் பிரிவினையை திட்டமிட்டு உருவாக்கினார்கள். அதனை வளர்ப்பதிலும் அக்கறை காட்டுகின்றனர். ஜனநாயகம், பாராளுமன்றம், தேர்தல் போன்ற அரசியல் விளையாட்டுகளைச் சரியாக நடத்திக் கொண்டிருக்கும் வரையில், மேற்கத்திய நாடுகள் தலையிடப் போவதில்லை. இதெல்லாம் இலங்கை அரசுக்கும் தெரியும். அதற்கேற்றவாறு நடந்து கொள்கிறார்கள்.

***

11 comments so far

  1. அருண் பாபு
    #1

    இந்த இடதுசாரிகளே மகா குழப்ப வாதிகள்தான் என்பதற்கு கலையரசனின் பதில் ஒரு உதாரணம். ஈழம் வேண்டாம், சிங்களர்களோடு ஒற்றுமையாக கை கோர்த்து வாழலாம் என்கிறார் இவர். ஈழ்த்தை விடடு வெளியேறியதோடு ஈழ உணர்வை விட்டும் வெளியேறிவிட்டார் போலும். வேதனை.

  2. குரு
    #2

    சேகுவாரா படம் தாங்கிய பனியனை போட்டு கொண்டவர் அகதியாக கியூபாவுக்கு போக வேண்டியது தானே. பிழைக்க போனதோ மேற்கத்திய நாட்டில்… ஆனால் பாசமெல்லாம் கொலைக்கார கம்யூனிஸ்ட்கள் மீது. இத்தகைய பேர்வழிகளால் தான் புலிகளின் போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது.

  3. kashyapan
    #3

    ஐய அருண் பாபு,குரு அவர்களே! காலைலை இட்லிசம்பாரு,சட்னி, மதியம் கறி,மீனு,இரவு ஊத்தப்பம் தின்னுப்பொட்டு ஈழ விடுதலபத்தி பேசுங்கய்யா! ஊர் ஊரா போய் துப்பாக்கி எடுத்து அந்த ஊர் மக்களின் விடுதலைக்காக போராடியவன் “சே”! உங்களமாதிரி வேளியூருக்காரனுக நாற்காலி போட்டு உட்காந்து ஈழம் பற்றி பெசுவதை நீறுத்தினாலே போதும். நாங்க எங்க பாட்டைபத்துக்கிடுதம்னு அங்குள்ளவங்க சொல்லுதாங்க! அவங்களுக்கு பட்டுவேட்டி தரேன்னு சொல்லி இப்ப கோவானம்கூட இல்லாம பண்ணினது உங்களை போல ஆசாமிகள் தான்! நல்லருங்கப்பா!—காஸ்யபன்

  4. பேப்பர்பாய்
    #4

    காஸ்யபன் போன்ற போலி இடதுகளுக்கு இருக்கும் இலங்கை தேசபக்தியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.ஜேவிபியையே இடதுசாரி கட்சியாக ஏற்றவர்களாயிற்றே.

  5. பேப்பர்பாய்
    #5

    க்யுபா,வெனிசுலா போன்ற இடதுசாரி நாடுகள் ஐநாவில் யாருக்கு ஆதரவாக வாக்களித்தன.ஏன் அவை இலங்கை அரசை ஆதரித்தன.காஸ்யபனைக் கேட்டால் இதற்கும் ஒரு காரணம் கூறுவார்.

  6. Jesslya Jessly
    #6

    Hi Friends,

    சரியாகக் கூறப்போனால், ஒருபுறம் கண்ணை மூடிக்கொண்டு புலிகளை ஆதரித்தவர்களாலும் மறுபுறம் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்ள மனமின்றி வரட்டுத்தனமாக நிராகரித்தவர்களாலும்தான் ஈழப்போராட்டம் படுதோல்வியடைந்தது.

    இன்று இருதரப்பினருமே தாம் கைசேதப்பட்டதை உணர்ந்து கொண்டபோதிலும் தமது கடந்தகாலத் தவறுகளை சுயவிமர்சனத்திற்குட்படுத்தி புதிய போராட்டவடிவங்களை அறிமுகப்படுத்தி அதற்கேற்றவாறு மக்களைத் தயார்படுத்துவதற்குப் பதிலாக பரஸ்பரம் சேற்றை வீசியடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.

  7. prakash
    #7

    தற்பொழுது பதவியிழந்த திமுக வும் ஈழத்தைக் கையில் எடுப்பதால் எதையும் இழக்கப் போவதில்லை. திமுக மட்டுமல்ல, தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் தகுதி இருப்பதாக கூற முடியாது. இந்திய மத்திய அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை மீறி எந்தக் கட்சியும் செயற்படப் போவதில்லை//

    தெளிவான பார்வை. இவருக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் தெரிவிக்க வேண்டியது என்னவெனில்.. இப்போதைக்கு எந்த தேர்தலும் தமிழகத்தில் இல்லை. எனவே அரசியல் ஆதாயத்துக்காக டெசோ மாநாடு நடைபெறுகிறது என்பது அடிப்படையிலேயே பொய்யான பரப்புரை. ஏற்கனவே இருமுறை இலங்கை வாழ் தமிழர்களுக்காக தி.மு.க. ஆட்சியை துறந்தபோதும் இலங்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டு விடவில்லை. தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க. எனும் இன்னொரு கட்சியை தமிழகத்தில் வளர்க்க மத்திய அரசுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததை தவிர. இந்திய மத்திய அரசு, இலங்கை அரசு, பிற நாடுகள், வெளியுறவு கொள்கைகள்… இவற்றை மீறி எதுவும் நடந்து விடாது.

  8. Arun
    #8

    In tamil nadu still Vaiko and Nedumaran are supporting seperate ellam, they personally lost so many things just because of Seperate eelam stand.Tigers are the true represntatives for tamilan in Sri Lanka.

  9. மலையரசன்
    #9

    சரியா சொன்னீங்க குரு. போட்டுக்கிறது சேகுவாரா பனியன். பொழைக்கிறது ஐரோப்பா யூனியன். நல்லா வருவீங்க கலையரசன்.

  10. சுக்ராச்சாரி
    #10

    இப்போதைக்கு எந்த தேர்தலும் தமிழகத்தில் இல்லை. எனவே அரசியல் ஆதாயத்துக்காக டெசோ மாநாடு நடைபெறுகிறது என்பது அடிப்படையிலேயே பொய்யான#
    தம்முடைய தவறுகளை மறைக்கவும், தம்முடைய கட்சிக்காரர்களை 2014 தேர்தலுக்கு தயார் படுத்தவும் ஒர் வாய்ப்பு என்பது சிதம்பர இரகசியமா?

  11. அ. சரவணன்
    #11

    பிரிவினை என்பது அத்தனை எளிதல்ல! ராஜபக்சேக்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி இறுதிக்கட்டப் போரில் நடந்த போர்க்குற்றங்களை நிரூபித்து தண்டனை வாங்கித்தரும் பட்சத்தில் பிரிவினையின் அவசியத்தை உலக நாடுகள் உணர்ந்து கொள்ளும். தமிழீழம் தானே மலரும்! அதற்குரிய முயற்சிகளை முன்னெடுத்துச் செய்யாமல் ‘அக்கார்டு’ ஹோட்டலில் அமர்ந்து ஆய்வரங்கம் நடத்துவதாலும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதாலும், ‘தமிழ் ஈழமே என் இறுதி மூச்சு’ என்றெல்லாம் வசனம் பேசுவதாலும் அம்மண்ணின் மக்களின் வயிற்றெரிச்சல் தவிர வேறு எதுவும் கிடைத்து விடாது.

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: