கிரிக்கெட் என்றொரு தேசபக்தி லேகியம்

ஒலிம்பிக் போட்டிகளின்  தொடக்க நாள் விழாவில் குத்துச்சண்டை வீரர் முகமது அலி கௌரவிக்கப்பட்டார். முதன்முதலாக குத்துச்சண்டை ஒலிம்பிக்கில் அவர் தங்கம் வென்று நாடு திரும்புகையில் அவரை வரவேற்க ஒருவரும் வந்திருக்கவில்லை. அவரது ஊரிலிருந்த ஓட்டலின் சர்வர் கூட அவருக்கு பரிமாறத் தயாரில்லை. கருப்பின தோலின் முன் தங்கம் கூட மினுமினுக்கவில்லை. தன் பதக்கத்தை கழற்றி ஆற்றில் வீசி எறிந்தார். அவருடைய மனஉளைச்சல் எந்த அளவு இருந்திருக்கும்!  இது போன்ற உளைச்சலில் தான் நம் இந்திய விளையாட்டு வீரர்கள் உள்ளார்கள். நம் விளையாட்டு அமைச்சகம் அவர்களை அவ்வாறு தான் நடத்துகிறது.

இந்திய கால்பந்து அணி வீரர்கள் ஷுக்கள் வாங்க கிரிக்கட் ஸ்டேடியத்தை சுத்தம் செய்த செய்தியைப் பார்த்திருப்பீர்கள்.   ஹாக்கி வீரர்கள் உலகளவிலான சாம்பியன் பட்டம் வென்று வந்த போதும் அவர்களை வரவேற்க ஒருவரும் இன்றி ஆட்டோவில் வந்திறங்கியதைக் கண்டோம். அதிசயமாக பதக்கம் வெல்லும் வீரர்களையும் பாலின சோதனை என்று அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள் வேலை கேட்டு மன்றாடினாலும் அரசின் காதுகளுக்கு விழுவதில்லை.

இதே நிலையில் கிரிக்கெட் வீரர்கள் உள்ளூர் போட்டிகளை வென்றாலும் கூட மாலை மரியாதை, மேல தாளத்துடன் நகர் வலம் வர அரசு வழி செய்கிறது. அவர்கள் கேட்காமலேயே ராணுவத்தில் கௌரவ பதவிகள் அளிக்கிறது. ஏன் இந்த பாகுபாடு?

கிரிக்கெட்டைக் கொண்டாடும் இத்தனைக் கோடி மக்களில் எத்தனை பேருக்கு BCCI ஒரு தனியார் அமைப்பு என்பது தெரியும்? உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பும் கூட அது என்பதை அறிவார்களா? இந்திய அரசின் விளையாட்டுத் துறையின் கீழ் வராத, அதன் அதிகாரங்களுக்கு கட்டுப்படாத ஒரு தனியார் விளையாட்டு நிறுவனம் BCCI. விளையாட்டு அமைச்சகத்தின் விதிகளை ஏற்றுக் கொள்ளமுடியாது, அவை எங்களுக்கு பொருந்தாது என்று அண்மையில் வெளிப்படையாகவே எதிர்த்தார்கள்.

இப்போது சொல்லுங்கள், ஒரு தனியார் விளையாட்டு அமைப்புக்கு இவ்வளவு சலுகைகள் தேவையா? அவர்கள் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கும், அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நம் வரி பணத்தை வாரிக் கொடுப்பதையும் ஏற்கமுடியுமா?

உதாரணமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மாட்ச் பிக்சிங் செய்தது தேசத்துரோக குற்றமாக பாவிக்கப்பட்டது. சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தியாவில் நிலையென்ன? மாட்ச் பிக்சிங் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளவர் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

கிரிக்கெட் ஒரு விளையாட்டாக மட்டுமே இருந்திருந்தால் பிரச்னையில்லை. இந்த தனியார் நிறுவனத்தார் “இந்திய அணி” என்ற லேபிள் ஒட்டி, தேசபக்தி லேகியம் விற்றே பெரும்பணக்கார அமைப்பாகி விட்டார்கள். தேசப்பற்றுக்கு எத்தனையோ விடயங்கள் இருக்க, கிரிக்கெட் தான் உடனடி தேசபக்தியை உசுப்பேற்றுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டை ரசித்தால், ஆதரித்தால் தேசத்துரோகியாம். இலங்கை அணியை ஆதரித்தால் தமிழின துரோகியாம். கலைஞரின் பேரன் மைதானத்தில் இலங்கை அணியின் தொப்பியை மாட்டிக் கொண்டதற்கு தமிழின துரோகி பட்டம் கட்டினார்கள், என்னவோ குடும்பத்தில் அவர் மட்டும், அப்போது மட்டும் தான் துரோகியாக இருந்தது போல. மக்கள்தான் அறியாமையில் செய்கிறார்கள் என்றால், சமூக பொறுப்புணர்வு சிந்திக்கும் திறனோடு இருக்க வேண்டிய பத்திரிக்கைகள் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள்.

BCCI யின் கிரிக்கெட் அணி வென்றதற்கும், ஈழப் போருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? இதே போலத் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வென்றால், அவர்கள் ராணுவத்தையே வென்று விட்டது போல் மகிழ்வதும்.

BCCI vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமாம். சொல்கிறார்கள். ஊடகங்களின் இந்த கற்பனை தான் இன்னும் நம்மை ஏமாளியாக வைத்திருக்கிறது

IPL சென்னை அணியில் இலங்கை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதும் முட்டாள் ஊடகங்கள் தமிழின உணர்வையெல்லாம் மூடிக் கொண்டு பிராந்திய துவேஷத்தை வளர்க்கலாயின. பழிவாங்குமா சென்னை என்னும் வாசகத்தை அடிக்கடி காண முடிந்தது. ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் வென்றால் தான் BCCI அணி இறுதிச் சுற்றுக்கு செல்ல முடியும் எனும் போது ‘தேசத்துரோகம்’ என்றும் பாராமல் பாகிஸ்தான் அணி வெற்றி பெறவேண்டிக் கொண்டார்கள்! இது போன்ற ரோதனைகளை படித்தவர்களின் ஊடகங்களான டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும்கூட காண இயலும்.

சானியா, சாய்னா, பூபதி, ஆனந்த் போன்றோரை இப்படிக் கொண்டாடியிருப்போமா? தனியார் நிறுவனங்களின் தொடர்ச்சியான விளம்பரங்களின் மூலமே நம் மூளையில் கிரிக்கெட் ஏற்றப்பட்டு பைத்தியமாக்கப்பட்டுள்ளோம்! நல்ல வேளை, ஹாக்கியில் ஹாலந்தையும் கால்பந்தில் பிரேசிலையும் ரசிப்பதெல்லாம் இன்னும் தேசத்துரோகமாக்கப்படவில்லை!

நுகர்வு கலாசார ஊடகங்களின் தாக்கம் அண்டை நாட்டிலும் இருக்கிறது. BCCI அணியின் ‘உலகக்கோப்பை?’ வெற்றியைக் கொண்டாடிய இலங்கை வாழ் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். அடுத்த நாள் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள் ;  இப்போதும் BCCI அணியின் இலங்கை சுற்றுப்பயணம் குறித்து #TNfisherman தமிழக மீனவர்கள் மிகவும் அச்சத்துடனே இருக்கிறார்கள். இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமென பிரார்த்திக்கிறார்கள்.

ஐயா, ஒரு தனியார் அமைப்பின் விளையாட்டு  தேசபக்தி போதையை உங்களுக்குத் தரலாம். ஆனால் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு அது உயிரின் வாதை.

IPL போட்டிகள் நடந்த போது கலாசாரத்தை சீரழிக்கிறது என்றும், மின்சாரத்தை வீணடிக்கிறது என்றும் சிலர் வழக்கு தொடுத்தார்கள். அந்தப் பொதுநல ஆர்வலர்களிடம் நான் வேண்டிக் கொள்வது ஒன்றுதான்.  இந்திய விளையாட்டு அமைச்சகத்துக்கும் BCCI கிரிக்கெட் அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நாங்கள் ஒரு தனியார் அமைப்பு என்று அவர்களைப் பகிரங்கமாக அறிவிக்கச் செய்யுங்கள். அரசு சாராத ஓர் அமைப்பு ‘இந்திய அணி’ என்று எப்படி பேனர் மாட்டிக் கொள்ளலாம்? இதை எதிர்த்து வழக்கு போடவேண்டாமா?

ஒரு விளையாட்டு 55 நாடுகளில் விளையாடப்பட்டால்தான் அது ஒலிம்பிக்ஸில் இணைத்துக்கொள்ளப்படும். அப்படி இல்லாத ஒரு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மற்ற விளையாட்டு வீரர்களை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டு, பதக்கப் பட்டியலில் இடம் தேடுவது நியாயமா? அரசு இந்த விஷயத்தில் மாறுமா என்று தெரியாது. ஆனால், நாம் மாறியாகவேண்டும். அண்மையில் EURO கால்பந்து போட்டிகளுக்கு இந்தியர்கள் அளித்த உற்சாகம் அதற்கு முதல் படியாக இருக்கும்.

0

கரையான்

17 comments so far

  1. kashyapan
    #1

    கரையான் அவர்களே! தொலைக்காட்சியில் பாப்பையா அவர்களின் பட்டி மன்றம் என்றால் வெளிநாட்டு தமிழ்மக்கள் உட்பட ஆர்வத்தோடு பார்த்த காலம் உண்டு! over kill அவருடைய நிகழ்ச்சி அலுப்புத்தட்ட ஆரம்பித்து விட்டது! கிரிக்கெட்டும் அந்த நிலைக்குதள்ளப்படும்! தள்ளப்பட வேண்டும்! அருமையான,கட்டுரை!—காஸ்யபன்

  2. N.Krishna Gopika
    #2

    the greatest indian சச்சின் தான் என்று ஒரு விவாதம் ஒரு மணி நேரமாக அண்மையில் தேசிய தொலைக்காட்சி ஒன்றில் அருவருப்பூட்டும் வகையில் அரங்கேறியது.எம்பி பதவி அளிக்கப்பட்டு விட்டதால் ரத்ன சர்ச்சைகள் தற்காலிகமாக அமுக்கப் பட்டுவிட்டன.

    பொழுதன்னைக்கும் கிரிக்கெட் சுவாசித்து கொண்டிருப்பவர்களை நோக்கி எழுப்பியிருக்கும் கேள்விகள் அவர்களின் மயக்கம் கலைத்தால் நல்லது.ஆனால் அவர்கள் அடுத்து வரும் உலககோப்பைக்கு தயாராகி கொண்டு தானே வருகிறார்கள்.ரசிப்பது ஒன்றும் கேள்வி இல்லையே.. அதனதன் தகுதிக்கேற்ப அது கொண்டாடப்படும் படும் படுவதை தாமே நாம் எதிர்க்கிறோம்..

    நிறைவான அலசல்.. நன்றி தோழர் கரையான்!

  3. N.Krishna Gopika
    #3

    //மாட்ச் பிக்சிங் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளவர் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.//

    இந்த வரி கட்டுரையில் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.. காரணம் பகிர தெரியவில்லை..

  4. N.Krishna Gopika
    #4

    எனது முதல் கமெண்டில், “அதனதன் தகுதிக்கேற்ப அதனது கொண்டாடப்பட வேண்டும்.அவ்வாறு இல்லாத சூழலையே நாம் எதிர்க்கிறோம்..” என்று இருந்திருக்க வேண்டும்.கவனக் குறைவிற்கு மன்னிச்சூ..!!

  5. Deepak R
    #5

    வழக்கம் போல் பிற விளையாட்டுகள் சோபிக்கததற்கு கிரிக்கெட்டை பழி சொல்லும் கட்டுரை. பிசிசிஐ தனியார் நிறுவனம் தான். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச கிரிக்கெட் கமிட்டி (ICC) போன்ற ஒரு தனியார் நிறுவனம். ஐசிசியால் இந்தியாவில் கிரிக்கெட்டை நடத்த உரிமை பெற்றுள்ள நிறுவனம். இந்திய அரசே நினைத்தாலும் இந்தியா சார்பாக அணியை அனுப்ப முடியாது. அதை ஐசிசி அங்கீகரிக்க வேண்டும். உலகின் அத்தனை விளையாட்டுகளும் தனியார் நிறுவங்களால் நிர்வகிக்கப்படும் விளையாட்டுகள்தான். ஹாக்கியிலும் அப்படியே. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (FIH) எந்த அமைப்பை அங்கீகரிக்கிறதோ அவர்கள் தான் இந்திய அணியாக FIH நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்ளமுடியும். அதை அரசு நடத்துகிறதா இல்லை தனியார் நிறுவனமா என்பது அவர்க்ளைக்குத் தேவையில்லை. அந்த விளையாட்டை சரிவர நிர்வகிக்கும் திறமை இருந்தால் போதும். சில வருடங்கள் முன்னால் இந்தியாவில் ஹாக்கியை நடத்திக் கொண்டிருந்த இந்திய ஹாக்கி சம்மேளனத்துக்கான அங்கீகாரம் ரத்து செய்யப் பட்ட போது உருவானது தான் தற்போது இந்திய ஹாக்கியை நிர்வகிக்கும் ஹாக்கி இந்தியா. இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையிலான குழாயடிச் சண்டையால் இந்தியா ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட இருந்தது. பிசிசிஐக்கு சற்றும் சளைத்ததில்லை ஹாக்கி இந்தியா. இந்திய ஹாக்கி சம்மேளனம் இந்தியாவில் ஹாக்கியை மேம்படுத்த ஐபிஎல் பாணியில் வோர்ல்ட் சீரிஸ் ஹாக்கி நடத்தியபோது, அதில் விளையாண்ட இந்திய வீரர்களை இந்திய அணியில் இருந்து நீக்கியது. இவ்வளவு குளறுபடிகளை கண்டுக்காமல் கிரிக்கெட் மீது பழி போட்டு கொண்டிருந்தால் எப்படி உருப்படும் ஹாக்கி. இப்போது ஒலிம்பிக்கிற்கு முன் லியாண்டர்,பூபதி,சானியா,போபண்ணா குழாயடி சண்டை. சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது குறித்து அடித்துக் கொள்வார்களாம் ஆனால் அதில் அவர்கள் சரியாக விளையாடாத் போது பழி மட்டும் கிரிக்கெட்டுக்கா?

    இத்தனைக்கும் ஹாக்கிக்கு கடந்த பத்து வருடங்களில் நல்ல அங்கீகாரம் இருந்து வருகிறது. பிரீமியர் ஹாக்கி லீக் ஆகட்டும், வோர்ல்ட் சீரீஸ் ஹாக்கி ஆகட்டும் விளையாட்டு அமைச்சகத்தின் துணை இருந்தது. சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை வென்ற போதும், இப்போது மூன்றாவதாக வந்த போதும், ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற போதும் நிதி உதவி, அங்கீகாரம் எல்லாம் வழங்கப்பட்டது. இந்தியாவின் பெரும்பாலான ஹாக்கி மைதாங்கள் நவீனப்படுத்தப் பட்டுவிட்டன. இன்னமும் தோற்பதற்கு வீரர்கள் முனைப்பின்மையும் மக்களின் பங்கேற்பின்மையும் தான் காரணம். இதற்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தமே இல்லை. இந்த ஹாக்கி போட்டிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. பிரீமியர் லீக் ஹாக்கி போட்டிகளில் மைதான நுழைவுச்சீட்டு இலவசம். அப்படியும் மக்கள் பார்க்கவில்லை. தனியார் நிறுவனமான ஈஎஸ்பிஎன்னின் ஆதரவும் இருந்தது. ஒரு மாதம் முழுக்க ஹாக்கி. மக்கள் ஆதரவில்லாமல் 4 வருடங்களில் நிறுத்தப்பட்டது.

    மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படாத பிசிசிஐ மேல் எதற்கு இவ்வளவு வன்மம் என்றே புரியவில்லை. பிசிசிஐ பணம் கொழிக்கும் நிறுவனம். உணமைதான்.அவர்களிடம் இருந்த விளையாட்டை வணிகப்படுத்தி அவர்கள் விளையாட்டை மேம்படுத்துகிறார்கள்.கூடவே பணம் தின்று கொழுக்கிறார்கள். அது யாருடைய வரிப்பணமும் அல்ல. வெற்றி பெறும் போது அரசு வீரர்களுக்குத்தான் பணம் வழங்குகிறது. பிசிசிஐக்கோ மற்ற கிரிக்கெட் அமைப்புகளுக்கோ இல்லை. அது கூடத் தவறுதான், அதற்கு அரசை கண்டிக்காமல் பிசிசிஐ மீது பாய்வது எதற்கு? ஸ்ரீசாந்தின் அம்மா கர்நாடகாவில் பிறந்ததால் ஸ்ரீசாந்துக்கு சன்மானம் வழங்கிய கர்நாடக அரசு மீது வழக்கு தொடுக்காமல் பிசிசிஐ மேல் வழக்கு தொடர்ந்தால் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. மற்ற விளையாடுகளைப்போல் தான் கிரிக்கெட்டும் பார்க்கப்படுகிறது. ஆனால் கிரிக்கெட்டின் வீச்சு புரிந்த புத்திசாலிகள் அதை நிர்வகிக்கிறார்கள் அவ்வளவே. மாநில/மாவட்ட அளவில் ஒழுங்காக நிர்வகித்திருந்தால் ஹாக்கியும் கால்பந்தும் என்றைக்கோ கிரிக்கெட்டை தின்று முன்னேறியிருக்கும்.

    பிசிசிஐ மீதிருக்கும் வன்மத்தில் பிரச்சனை இதெல்லாம் கிரிக்கெட் மீது திரும்புவது. கிரிக்கெட்டும் ஒரு அருமையான விளையாட்டுதான். இலங்கை கடற்படையினரின் மனநோய்க்கு கிரிக்கெட் என்ன தவறு செய்தது. நடுத்தர வர்கத்திலிருந்து வந்தவர்கள் தான் தோனி,சேவாக் போன்ற இன்னும் பல இந்திய வீரர்கள். அரசின் கருணைப்பர்வையெல்லாம் இவர்களை வெற்றி பெற வைக்கவில்லை. அவர்கள் திறமை மட்டுமே வெற்றிக்கு காரணம். அவர்களுக்கு இவ்வளவு வெளிச்சம் தருவது மக்களின் கிரிக்கெட் ஆர்வம். அது வருவது வெற்றியால். வெற்றி பெறும் வரை எந்த விளையாட்டும் கவனிக்கப்படாது. கிரிக்கெட்டும் வெற்றி பெறும் வரை கவனிக்கப்படவில்லை. சாய்னா, விஜேந்தர் இவர்களுக்கெல்லாம் அங்கீகாரம் போன ஒலிம்பிக்கில் இருந்தே கிடைத்து வருகிறது. அதிலும் விஜேந்தர் சினிமாவிலெல்லாம் நடிக்கப் போனார், இப்போது கூட இந்திய காலபந்து விரர் சுனில் சேட்ரி போர்த்துகீசிய ’தனியார்’ அணிக்கு விளையாடப் போகிறார். வெற்றி பெற்றால் கொண்டாடப்படுவார் இல்லையென்றால் யாரும் அறியாமல் காணாமல் போவார்.

    பிற விளையாட்டுகளில் சோபிக்காததற்கு காரணம் கிரிக்கெட் அல்ல. இந்தியார்களின் மனப்பான்மை தான். நமக்கு விளையாட்டு முக்கியமில்லை வெற்றி தான். போட்டியிடுவதற்கு மரியாதை கிடையாது. வெற்றி பெற்றால் மட்டும் தான். விளையாடுவதையே கவுரவிக்கும் போது இன்னும் நிறைய பேர் விளையாட வரலாம். அதைச்செய்யாமல் கிரிக்கெட்டை திட்டிக் கொண்டிருந்தால் இன்னும் பல வருடங்கள் அதையே செய்து கொண்டிருக்கலாம்.

  6. அ. சரவணன்
    #6

    Deepak R சொல்வதை வழிமொழிகிறேன். இந்தக்கட்டுரையும்கூட கிட்டத்தட்ட கம்யூனிச சிந்தனை போலத்தான்.. ஹாக்கிக்கு பசிக்கிறது என்றால் கிரிக்கெட்டுக்கு சோறு போடாதே என்பார்கள்.

    மக்கள்-ஸ்பான்சர்கள்-அரசாங்கம் எல்லோரும் கூட்டுச்சேர்ந்துதான் விளையாட்டையும் வீரர்களையும் ஊக்குவிக்கவேண்டும்!

  7. Venkat
    #7

    1)மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படாத பிசிசிஐ மேல் எதற்கு இவ்வளவு வன்மம் என்றே புரியவில்லை.
    2)அது யாருடைய வரிப்பணமும் அல்ல
    3)ஐசிசியால் இந்தியாவில் கிரிக்கெட்டை நடத்த உரிமை பெற்றுள்ள நிறுவனம். இந்திய அரசே நினைத்தாலும் இந்தியா சார்பாக அணியை அனுப்ப முடியாது.
    4)அதை ஐசிசி அங்கீகரிக்க வேண்டும்.

    Explanation :
    1 & 2- BCCI is just a private society registered under tamilnadu societies act, and headquartered in chennai.
    It uses without any cost – the land of the state(the people) and free services by police and without paying any entertainment taxes

    3) ICC has a rule that only bodies recognised by the respecitive national governments will be recognised by ICC
    In this regard, BCCI doesnt qualify for recognition by ICC – but may be they had cheated ICC.
    But Indian Govt can easily get recognition from ICC – if they start a body this very minute.

  8. சான்றோன்
    #8

    கிரிக்கெட் ஒரு நல்ல பொழுதுபோக்கு …அவ்வளவே……தீபக் அவர்கள் குறிப்பிட்டதைப்போல அதன் வெற்றிக்கு மார்க்கெட்டிங்கும் முக்கிய காரணம்….

    சோ அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டதைப்போல இந்தியர்களின் ஜீன் ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்….. உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் விளையாட்டுக்களில் எப்போதுமே நாம் கடைசிதான்…..இப்போதுகூட நாம் பதக்கம் அதிகம் வெல்லும் துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு உடல் உழைப்பு அதிகம் தேவையில்லை…..

    பொருளாதாரம் , மற்றும் இட வசதி போன்றவை மற்றொரு காரணம்…..வாலிபால் , ஹாக்கி, புட்பால் , கூடைப்பந்து போன்ர விளையாட்டுக்களுக்கு தனி மைதானம் வேண்டும்…….கிரிக்கெட் விளையாட ஒரு அறை போதும்…………. ஒரு நல்ல ஹாக்கி ஸ்டிக் அல்லது ஒரு வாலிபால் வாங்க குறைந்த பட்சம் முந்நூறு ரூபாயாவது வேண்டும்………கிரிக்கெட்டுக்கு பத்து ரூபாய் பந்தும் ஒரு தென்னை மட்டையும் போதும்….. பெருவாரியான மக்களால் விளையாடப்பட்டால்தானே திறமையானவர்களை அடையாளம் காண முடியும்…..?

  9. மகிழ்வரசு (@Anandraaj04)
    #9

    இந்தக்கட்டுரையின் நோக்கமும் அதன் பின்னூட்டமாக தீபக் சொல்லியிருப்பதும் எங்கெங்கோ போகிறது. தீபக் சொல்லுவது பற்றி பார்த்தால் அவர் இந்தியாவின் விளையாட்டு நிலைபற்றி அறிந்திருக்கவில்லை போலும். கிரிக்கெட்டைத் தவிர.

    ஆனால் சொல்லியிருப்பதில் ஒன்று உண்மை. இந்தியாவிடம் இருந்து மக்களின் வரிப்பணத்தில் இருந்து பி சி சி ஐ நடத்தப்படவில்லை.
    முழுமையான தனியார் நிறுவனம். சமீபத்தில் இதற்கு ஏன் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என வருமானவரித்துறையும் அமலாக்கப்பிரிவும் விளக்கம் கேட்டிருக்கிறது.

    பிற நாட்டு நிறுவனங்கள் வறுமைப்பட்ட இந்தியாவில் முதலீடு செய்யவருவதென்பது இங்குள்ள மக்கள் தொகையையையும் பயன்பாடையும் கணக்கில் கொண்டுதான். அப்படிப்பார்த்தால் கட்டுரையில் சொல்லியது போல் “இந்திய அணி” என்ற லேபிள் ஒட்டி, தேசபக்தி லேகியம் விற்று தேசியத்தை வியாபாராமாக்கி விட்டனர்.

    தனியார் விளையாடும்.., நாட்டிற்க்காக விளையாடாத இந்த வீரர்களுக்கு, எந்தவொரு அரசு சார்பில் வேலைவாய்ப்பில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கூட இல்லாத இந்த கிரிக்கெட் விளையாட்டிற்கு அர்ஜுனா அவார்ட் கூட பெறத்தகுதி இல்லை. இந்தியாவில் எந்த ஒரு விளையாட்டும் தீபக் சொன்னது போல் தனியார் விளையாட்டு அமைப்பில் இல்லை. உலக அளவில் விளையாட இந்திய அரசு சார்பில் அனுப்பபடுபவரே விளையாட முடியும் ..அதற்கான அமைப்புத்தான் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா. இந்தியா ஒலிம்பிக் கமிட்டியிலும் அரசு நியமித்த நபரே இருப்பார். இந்த அமைப்பின் கீழ் எல்லா விளையாட்டுக்குமான அமைப்பு இருக்கும். இதற்கு தனி தேர்வில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    மற்ற விளையாட்டைப்பற்றியோ அதன் நிலை பற்றியோ பேசவது இல்லை. கிரிக்கெட் நல்லபடி ஆடட்டும், ஆனால் சென்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதன்முதலாக இந்த கிரிக்கெட் விளையாட்டுப்போட்டி சேர்க்கப்பட்ட போது.., நாட்டுப்பற்று பேசும் நமது கிரிக்கெட் வீரர்கள் விளையாட சம்மதிப்பார்கள் என்றெண்ணியிருந்தேன்.. அந்தோ பரிதாபம் .., பைசாவுக்கு விளையாடுவதால் நாட்டுக்கான பதக்கங்கள் தேவையில்லையென பி சி சி ஐ விளையாட மறுத்து விட்டது . வீரர்கள் இருந்தால் தானே அமைப்பும்.. நாட்டுப்பற்று மிக்க வீரர்கள் இந்தியாவுக்காக விளையாட சம்மத்திருந்தால் பி சி சி ஐ மறுப்புத் தெரிவித்திருக்க இயலாது. நாட்டிற்காக விளையாட மனமில்லாத இந்த அமைப்பினர் எந்த உள்நோக்கத்தில் வரி விலக்கு மட்டும் வேண்டும் என கூறுகிறார்கள் தெரியவில்லை, ஆனால் இந்தியா அரசும் அதை மறுத்து விட்டது.

    டென்னிசில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் தனியார் அமைப்பில் நடைபெறும் .. அதே சமயம் , டேவிஸ் கப் போட்டிகள் நாடுகளால் அங்கீகரிப்பட்ட போட்டிகள். உலக செஸ் போட்டிகள் அங்கீகரிப்பட்டவை அல்ல .., செஸ் ஒலிம்பியாட் எனும் சதுரங்க போட்டி தான் அங்கீகரிக்கப்பட்டது. அப்படிப்பார்த்தால் உலக சாம்பியன் இந்தியா நாட்டுக்காராயிருந்தாலும்.., அது ஆரம்பித்த நாற்பது ஆண்டுகளாக இந்தியாவால் முதல் பத்து இடத்தில் கூட வர இயலவில்லை. ஏனென்றால் விஸ்வநாதன் ஆனந்தும், செஸ் அமைப்பு இந்தியாவில் இருந்தும் இந்தியாவிற்காக என்றுமே விளையாடியதில்லை.

    இப்படிப்பட்டவர்களுக்காக மக்களும் மீடியாவும் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவளிப்பதில் தவறில்லை. ஆனால் மக்களின் வரிப்பணம் உண்மையிலேயே நாட்டுக்காக விளையாடும் வீரர்களை புறக்கணித்துவிட்டு இவர்களுக்காக “அவார்ட்” ..”ரிவார்ட்”.. “பரிசுப்பணம்”.. என அரசுகளால் தவறாக அறிவிக்கப்படும் போது தான் “நாட்டுக்காக இவர்கள் என்ன செய்தார்கள் ” .. என்ற கேள்வி எழுகிறது.

    இந்தக்கட்டுரையின் நோக்கம் நாட்டுப்பற்றை தவறாக உபயோகப்படுத்துபவர்களின் மீதான வெறுப்பே தவிர கிரிக்கெட் என்ற விளையாட்டின் மீதல்ல என்பதை தீபக் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.
    மீடியாக்கள் வியாபாரத்துக்காக தவறிழைக்கலாம்
    படிப்பறிவில்லா மக்கள் அறியாதிருக்கலாம்.

    எல்லாமறிந்தும் இதை கிரிக்கெட்டின் மீதான துவேஷமே என படித்தறிந்த அன்பர்கள் நினைத்தால் அவர்கள் இந்தியாவின் விளையாட்டுத்துறை பற்றி அறியா அறிவிலிகளாய் இருக்கின்றனர் என்றே பரிதாபப்படத் தோன்றுகிறது.

  10. Sriram
    #10

    நன்றாக சொன்னீர்கள் தீபக். கிரிக்கெட்டை இழுத்து மூடி விட்டால் ஹாக்கி வளர்ந்துவிடுமா? ஆனால் BCCI-யில் நிறைய அரசியல்வாதிகள் புகுந்திருப்பது கவலை தரும் விஷயம். கரையான் போல் அரித்து விடுவார்கள்.

  11. Ganesh
    #11

    If BCCI is so good why they are not ready to accept RTI?
    Also why people with so much of influence wants to head the BCCI? The issue is it is another corrput institution with no accountability to society. How IPL auction takes place. If they want they will keep kochi otherwise they throw them… the issue is long… Any organisation without transparency creates issues and attention. BCCI is no exception.

  12. மீரான்
    #12

    ஹாக்கியில் நாம் ஒரு அசுர அணி என்பதை மறந்து விடக் கூடாது. இது வரை ஒலிம்பிக்கில் அதிக தங்கப் பதக்கம் பெற்றுள்ளோம். ஆனால் 2008 ஒலிம்பிக்கில் தகுதி கூடப் பெறவில்லை. 2012 ஒலிம்பிக்கில் வெளியேறி விட்டோம். இப்படி அவல நிலைக்கு தள்ளி விட்டு ஹாக்கி விளையாட்டை மேம்படுத்த உதவ வேண்டும்னு விளையாட்டுத் துறை அமைச்சரே BCCIஇடம் கெஞ்சுகிறார். :(

    இலங்கையவர்கள் மீனவர்களை துன்புருத்துவதர்க்கு ‘இந்திய அணி’ என்கிற லேபிள் ஒட்டிக் கொள்வதே காரணமாக நினைக்கிறேன். அந்த மாயையைத் தான் தகவல் அறியும் வழக்கின் மூலம் அகற்றப்பட வேண்டும்.

    மக்கள் வரிப்பணத்தில் இயங்கவில்லை என்றாலும், வரி ஏய்ப்பு செய்வது குற்றமாக ஆகாதா?
    காவல்துறை மற்றும் அரசு வசதிகளை பயன்படுத்திக் கொண்டு ஏய்ப்பதை வெங்கட் சுட்டிக் காட்டியுள்ளார். பெரும்பதவிகளில் உள்ளவர்களை நிர்வாகிகள் ஆக்கிக் கொள்வதன் மூலம் பல ஊழல்கள் மறைக்கப் பாடவும், அரசு சார் நிறுவனம் போன்ற தோற்றமும் ஏற்படுத்துகிறார்கள்.

    நாடுகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பையில் BCCI அணி விளையாட மறுத்ததை ஆனந்த ராஜ சுட்டிக் காட்டியுள்ளார். இந்த அமைப்பினைத் தான தேச பக்தி அடையாளமாக காட்டிக் கொள்ள வேண்டும்?

    கிரிக்கெட்டை ஒழிப்பதால் ஹாக்கி வளரும் என்று சொல்வதற்கு இல்லை. நமது ஹாக்கியின் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலைப் பார்த்தீர்களானால் தெரியும். இரண்டு விளையாட்டுகளுமே மிக சிறப்பாக இருந்துள்ளன. ஒலிம்பிக் ஹீரோ தயான் சந்த்திற்கு ஹிட்லர் ராணுவ பதவி வழங்க முன்வந்தும் மறுத்து விட்டார். இந்தியாவில் அது போன்ற கவுரவங்கள் தனியார் வீரர்களுக்கு கேட்காமலே வழங்கப்படுவதன் இரகசியம் என்ன?

    கபில் தேவ் ஆரம்பித்த கிரிக்கெட் அமைப்பு முடக்கப்பட காரணம் என்ன.. ஒரு அமைப்பின் ஏக போக உரிமைக்கு உட்பட்ட விளையாட்டில் என்ன sportsmanship இருந்து விடப் போகிறது.

    கம்யுனிச சிந்தனை என ஒதுக்கும் முன் ஒரு கேள்வி, ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு அரசு பொங்கப்படி கொடுத்தால் பொறுத்துக் கொள்வோமா? அதே தான் எனது கோவமும். தனியார் அமைப்பொன்று அத்தனை வழிகளிலும் இந்திய அரசு அணி போன்ற பாவனையில் ஏய்த்துப் பிழைப்பதை பொறுக்க இயலவில்லை.

  13. கரையான்
    #13

    கிரிக்கெட்டையும், மற்ற விளையாட்டுகளையும் மக்கள் எப்படி பாகுபாடாக ரசிக்கிறார்கள் என்பதற்கு ஹிந்துவில் ஒரு கட்டுரை : http://www.thehindu.com/opinion/columns/nirmal_shekar/article3758296.ece?homepage=true . இந்திய அரசால் BCCI அங்கிகரிக்கப்படவில்லை என விளையாட்டுத் துரை அமைச்சர் அவர்களே தெளிவாக கூறி விட்டார். http://news.vikatan.com/?nid=10043 . இந்திய அரசால் அங்கிகரிக்கப்படாத ஒரு தனியார் விளையாட்டு அமைப்பிற்கு மத்திய மாநில அரசியல்வாதிகள் சலுகைகளை அள்ளிக் கொட்டினால் இனி கேள்வி கேக்கலாம் தானே!

  14. கரையான்
    #14

    BCCI யின் கிரிக்கெட் அணி இந்திய அரசால் அங்கிகரிக்கப்படாத விளையாட்டு அமைப்பு என விளையாட்டுத்துறை அமைச்சரே தெளிவாக கூறி விட்டார். அரசின் நிபந்தனைகளுக்கு உட்படாமலும், கேட்கும் தகவல்களை அரசிடம் சமர்பிக்க மறுப்பதாகவும் கூறுகிறார். http://news.vikatan.com/?nid=10043 இத்தகையதொரு தனியார் அமைப்பு ‘இந்திய அணி’ என லேபிள் ஒட்டிக் கொள்வதை தடை செய்ய வேண்டும். அத்தோடு நாட்டின் உயரிய,மரியாதைக்குரிய ராணுவ பதவிகள் அரசின் அங்கிகாரம் பெறாத, கட்டுப்படாத ஒரு தனியார் அமைப்பின் வீரர்களுக்கு வழங்கப்பட்டது பறிக்கப்பட்டாள் என்ன? மீனவர் தாக்குதல் வழக்குகளில் இதையும் கிளையாக சேர்க்கலாம். ஒரு தனியார் அமைப்பின் போலியான வேசத்திறகு அப்பாவி மீனவர்கள் மூத்திரம் குடிக்கவும், பச்சை மீன் திங்கவும், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்படவும், பாராங்கல்லால் தாக்கப்படுவதும் பொறுத்துக் கொள்ள கூடியதா..? மாண்புமிகு அமைச்சர் அவர்களின் செய்தி இலங்கை ஊடகங்களின் வாயிலாக பரப்பபட வேண்டும். அத்தோடு தடையாணையும் ‘இந்திய அணி’ பெற்று விட்டால், BCCI-இலங்கை கிரிக்கெட் காலங்களில் மீனவர்கள் வீட்டில் முடங்காமலும், உயிர் பயத்துடன் உழைக்க செல்லும் அவல நிலையிலும் இருக்க மாட்டர். இந்த லேகிய வியாபாரிகளின் கூத்திற்கு அன்றாடம் பிழைத்து வாழ்வோரின் நிலை ஏன் அச்சத்திற்கு உள்ளாக வேண்டும். இதெல்லாம் அவசியமா என கேலியாகத் தோன்றலாம். இந்த கிரிக்கெட்டால் இரண்டு அப்பாவிகள் உயிர் விட்டுள்ளனர் என்பதை மறந்து விடாதீர்கள். அவர்களின் வலி அவர்களுக்கு தானே தெரியும். BCCI இந்திய அணி இல்லை என மாயை இங்கும், இலங்கையிலும் தெளிவுறச் செய்யப்பட வேண்டும். இல்லையேல் இந்திய அரசைப் போல் இலங்கையின் ‘நட்புறவு’?க்காக கிரிக்கெட் நடத்தி, எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் பழி கொடுக்கலாம்.

  15. கரையான்
    #15

    நாடுகளுக்கிடையே நட்புறவை வளர்க்க வேண்டிய விளையாட்டுகளில், கிரிக்கெட் வெறுப்பையே எண்ணையிட்டு வளர்க்கிறது என்பதே நிதர்சனம். கிரிக்கெட் போட்டிகளின் போது, சமூக ஊடகங்களில் பாக்,இலங்கை அண்டை நாட்டு சகோதரர்கள் வெறுப்பை வெளிப்படுத்துகையில் தெளிவுபடுத்தலாம், ‘ BCCI அணி இந்திய அரசின் அணி அல்ல, அதன் பொருட்டு இந்தியர்களை வெறுக்க வேண்டாம்’ என.
    மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஒரு தீர்வாகவும், நூறு கோடி மக்களை ஏய்க்கும் நாட்டின் மிகப்பெரிய நம்பிக்கை மோசடிக்கு முடிவாகவும் அமையும். அத்தோடு, ‘இந்திய அணி’ என்பதற்கு தடை ஏற்பட ‘தமிழக(இந்திய) மீனவர்கள் மீதான தாக்குதல்’ பிரச்சனையே காரணமென ஒரு கவன ஈர்ப்பு ஏற்படவும் காரணமாகும் என நம்புகிறேன். நடந்தால் நலமே!

  16. கரையான்
    #16

    2004 – 2010 வரை BCCI இந்திய அரசுக்கு 201.36கோடி வரி நிலுவை வைத்துள்ளது என மத்திய இணை அமைச்சர் நாராயண சாமி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதில் வியப்பென்னவெனில் கால்பந்து கிளப்களை விட, உலகில் முதல் பெரும் பணக்கார விளையாட்டு அமைப்பு BCCI தான். 2007 ல் சொத்து மதிப்பு 245மில்லியன் டாலர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரியில் நிலுவை வைத்து விட்டு 1175.86 கோடியை வங்கிகளில் முதலீடு செய்து 2011-2012 ல் மட்டும் 97.55கோடி ரூபாய் வட்டியாக பெற்றுள்ளார்கள் இந்த கபடதாரிகள். 2010-2011 balance sheet மதிப்பு 2530.88 கோடி!!!. மேலும் பார்க்க http://cricket.yahoo.com/news/bcci-has-deposited-rs-1-176-cr-in-banks.html . இருந்தும் வரி ஏய்ப்பு செய்யும் இந்த தனியார் அமைப்பு தான் தேச பக்தி வேடம் போடுகிறது. அத்தோடு 2009 IPL க்காக RBI யின் விதிகளை மீறி 13 மில்லியன் டாலர்கள் இந்தியாவுக்கு வெளியே முதலீடு செய்துள்ளதும் தெரிய வந்து இப்போது பாராளுமன்ற குழு BCCI க்கு விளக்கம் கேட்டுள்ளது. இது தேசத் துரோகம் ஆகாதா? ஹவாலா வகை மோசடி இல்லையா? ‘இந்திய அணி’ என்ற பொய்வேடத்தில் இந்திய மக்களை ஏமாற்றி சம்பாதித்தது தானே இத்தனை சொத்தும்?! இனியும் இந்த அமைப்பின் வீரர்களை கொண்டாடினால் நாம் ஏமாளியாகத் தான் இருக்க முடியும்! அதை இந்தியாவுடன் இணைத்துப் பேசுவதே தேசத்துரோகம்!

  17. கரையான்
    #17

    சலுகைகள் வழங்கியது பற்றிய வழக்கில் இந்திய அரசுக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்று உச்ச நீதிமன்றத்தில் BCCI வெளிப்படையாக தெரிவித்து உள்ளதாம். ஆனாலும் இன்னும் உணராமலே பலர் உள்ளனர். பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களை சேர்க்கா விட்டால் வரவேற்கும் வட இந்திய ஊடகங்கள், இலங்கை வீரர்களை சேர்க்கா விட்டால் ஒப்பாரி வைக்கின்றன. அப்போது ஒரு நியாயம் இப்போது அதுவே அநியாயம். உண்மைகளை உணர்ந்து ஏமாளியாய் இல்லாமல் இருப்பது நம் சாமர்த்தியம் :)

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: