பேய்களை நம்பாதே!

பேய்களுக்குப் பயப்படாதவர்கள் என்று இந்த உலகில் யாராவது உண்டா? ஏன் நான் இருக்கிறேனே என்று உங்களில் பலர் துள்ளியெழுவது புரிகிறது. ஆனால் நீங்களும் உங்கள் வயதின் எந்தக் கட்டத்திலாவது பேய்களுக்குப் பயந்துதானே இருப்பீர்கள்? ஆம் என்பதுதான் உண்மை. இல்லை என்று உங்களால் கூறவே முடியாது.

சிலருக்கு பேய்கள் பற்றிய சிறுவயதுப் பயமெல்லாம் தாற்காலிகமாக நீங்கியிருக்கும். சிலருக்கு வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும். பலருக்கு பேய்களைப் பற்றி நினைக்கவே நேரமில்லை. ஆனால் எங்காவது தனியாக இருளில் ஆளில்லா சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் போது உடனடியாகத் துணைக்கு ஓடிவருவது நமது மூளையின் சிந்தனை மையத்தின் சேமிப்பிலிருக்கும் பேய்கள் பற்றிய எண்ணங்கள்தான். விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சிலபேர்தான் பேய்களைப் பற்றிச் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் இருப்பார்கள். அவர்களைப் பற்றி பிறகு சாவகாசமாகப் பார்க்கலாம்.

இப்போது பயப்படுபவர்கள்…

உங்களுக்குத் தெரியுமா பேய்களுக்குப் பயப்படுபவர்களைவிட தாங்கள் பயப்படுவதைக் காட்டிக்கொள்ளாமல் நடிப்பவர்கள்தான் அதிகம். ஒரு நம்பகமான புள்ளிவிபரம் இதைக் கூறுகின்றது. சரி, புள்ளிவிபரம் இருக்கட்டும் ஒருபக்கம். நாம் இந்தப் பேய்கள் எப்படி உருவாயின அல்லது உருவாக்கப்பட்டன என்றும் ஏன் இந்தப் பேய்கள் பற்றிய பயம் மட்டும் கடைசிவரை எல்லோரையும் இப்படிப் பிடித்தாட்டுகின்றது என்றும் சிறிது அலசுவோம்.

சிறுவயதிலே உங்கள் அம்மா அல்லது பாட்டி, பாட்டன்கள் கதைகள் சொல்லி உணவு ஊட்டியிருப்பார்கள் அல்லது தூங்க வைத்திருப்பார்கள். கொஞ்சம் முரண்டு பிடிக்கும் போதெல்லாம் உங்களை மிரட்டி வழிக்குக் கொண்டுவர தங்களுக்குத் தெரிந்த பல வித்தைகளை அவர்கள் முயன்றிருப்பார்கள். அவற்றிலே சுலபமானதும் உடனடிப் பலன் தருவதுமான வித்தை பேய்கள் பற்றிய கதைகளும் பயமுறுத்தல்களும்தான் போலிருக்கின்றது.

தொட்டிலில் ஆட்டிக்கொண்டே தாலாட்டுப் பாடும் தாய் அடங்காமல் அழும் தன் குழந்தைக்கு, “அந்தா பேய் வருது…உன்னைப் பார்த்து பல்லைக் காட்டுது… பேசாமல் தூங்கு!” என்று மிரட்டுவதோடு தானும் பயந்தது போல பாசாங்கு செய்வாள். இந்த நிகழ்ச்சி அந்தத் தாயைப் பொறுத்தவரையில் தனது குழந்தையைத் தூங்கச் செய்யும் வெகு சாதாரண உத்தி அல்லது சிறு ஏமாற்று அவ்வளவுதான். ஆனால் அந்தச் சிறுகுழந்தைக்கோ அதன் மனவளர்ச்சியையும் எதிர்கால ஆளுமையையும் பாதிக்கப்போகும் ஒரு முக்கியமான கல்வெட்டுச் செதுக்கல்!

ஆம், ஒரு குழந்தைக்கு தனது தாயின் வார்த்தைகளின் அர்த்தம் முழுமையாகப் புரியாது போகலாம். ஆனால் அவளது ஒவ்வொரு சிறு அசைவும்கூட உடல்மொழிக்குரிய உணர்வுகளாக அந்தக் குழந்தையினால் மிகவும் கவனமாக உள்வாங்கப்படுகின்றது. ஒரு பூனையையோ நாயையோ குழந்தைக்குக் காண்பித்து அந்தத் தாய் பயமுறுத்துவாளாக இருந்தால் அந்தப் பயத்தின் எல்லை மிகவும் குறுகியதாகவே இருக்கும். குழந்தை சிறிது பெரியவானகியதும் ’ஓ! நாயும் பூனையும் இவ்வளவுதானா?’ என்று தெரிந்து பயம் துறந்து விடுவான். மாறாக, இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பித்து அவன் பயமுறுத்தப்படுவதால் வாழ்க்கை முழுவதும் காணமுடியாத ஏதோ ஒன்றுக்கு பயந்தபடியேதான் இருக்கப்போகின்றான்.

இந்த எண்ணப்பாங்கு அவனது வாழ்வின் இளமைப்பருவத்திலே சிலையில் எழுத்தாகப் பதிந்து விடுவதால், பின்பு எவ்வளவுதான் அறிவியல் தாக்கங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டாலும் மூளையின் எங்கோ ஒரு ஆழமான புள்ளியில் “அந்தப் பயம்” மட்டும் இருந்து கொண்டேதான் இருக்கும். இதனால்தான் அறிவியல் ரீதியாக அமானுஷ்ய சக்திகளுக்கு வாய்ப்பில்லையென்று நன்கறிந்த விஞ்ஞானிகளுக்குக்கூட லேசான பேய்ப்பயம் இருக்கின்றது.

அடுத்து…

ஆதிகால மக்களிடம் பேய்கள் பற்றிய பயம் எவ்வாறு ஏற்பட்டிருக்க முடியும் என்று சற்றுப் பார்ப்போம். வேட்டையாடி நாடோடியாக வாழ்ந்த காலத்தில் மழை, இடி, மின்னல், புயல், நிலநடுக்கம், கடற்கோள், கானல்நீர், வானவில், ஆலங்கட்டி மழை, காட்டுத்தீ, கிரகணங்கள், வால் நட்சத்திரங்கள், தொற்றுநோய்கள் போன்ற இயற்கையின் நிகழ்வுகளுக்குரிய சரியான விளக்கம் மனிதனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
இதனால் காடுமேடுகளில் அலைந்து திரிந்தபோது அவன் கண்ணுற்ற இயற்கையின் பல நிகழ்வுகளுக்கு தான் அறிந்திராத சில சக்திகள்தான் காரணமாக இருக்க வேண்டும் என்று கருதினான். அவற்றில் தனக்கு உவப்பான இயற்கை நிகழ்வுகளுக்கு நல்ல சக்திகளும் அழிவு அல்லது அச்சம் தரும் நிகழ்வுகளுக்கு தீய சக்திகளும் காரணம் என அவன் எண்ணியதில் வியப்பேதுமில்லைதானே. பின்பு அவற்றுக்கு முறையே கடவுள்கள் என்றும் பேய்கள் என்றும் பெயரிட்டிருப்பான்.

ஆரம்பத்தில் எளிமையாக இருந்த மனிதனின் வாழ்க்கை காலப்போக்கில் படிப்படியாக சிக்கலடைந்தது. மனிதனின் அறிவியல் வளர்ச்சியும் வாழக்கைத்தரமும் துரிதமாக வளர்ந்த போது ஆதியில் அவனை மிரட்சிக்குள்ளாக்கிய பல இயற்கையின் விளைவுகளுக்குரிய காரணங்களை கண்டறிந்து தெளிவடைந்தான். எனினும் மனித வாழ்வின் சமூக அமைப்புகளிலும் அதன் போக்கினில் ஏற்பட்ட சிக்கலான மாற்றங்களின் காரணமாக அறிவியல் உண்மைகளை ஏற்றுக் கொள்வதிலும் அதுபற்றிய கருத்தாக்கங்களிலும் வேறுபாடுகள் உண்டாயின.

இதை இன்னும் விளக்கமாகக் கூறுவதானால் காட்டு விலங்குகளில் ஒன்றாக வாழந்திருந்த மனிதன் படிப்படியாக நாகரிகமடைந்து தனது சூழலையும் அவற்றில் நிகழும் மாற்றங்களையும் அவதானித்து ஆய்வுகள் பல புரிய ஆரம்பித்தவுடன் இயற்கையின் மாயத்திரைகள் பல விலகத் தொடங்கின. அவற்றின் விளைவாக பல உண்மைகள் வெட்ட வெளிச்சமாகின.

ஆரம்பத்தில் மனிதனால் கண்டறியப்பட்ட சகல உண்மைகளுக்கும் மதிப்பளிக்கப்பட்டு வந்தது. ஆனால், காலப்போக்கிலே அங்ஙனம் அவன் கண்டறிந்த அறிவியல் உண்மைகள் பலவற்றை-அவை எவ்வளவுதான் ஐயம் திரிபற உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதிலும் கூட- ஏற்றுக் கொள்ள முடியாதளவு மனிதனே உருவாக்கி வளர்த்த சில நம்பிக்கைகளும் சித்தாந்தங்களும் மக்களைத் தடுத்து வைத்தன.

உதாரணமாக ஒருகாலத்தில் நாம் வாழும் பூமியே இந்தப் பிரபஞ்சத்தின் மையமாகக் கருதப்பட்டது. சகல கோள்களும் சூரியனும் நமது பூமியையே சுற்றி வருவதாகக் கருதப்பட்டு வந்தது. இந்தக் கருத்தை ஏற்றுப் பல மத நம்பிக்கைகளும் சித்தாந்தங்களும் உருவாகி வலுப்பட்டிருந்தபோது “பூமியல்ல சூரியன்தான் ஞாயிற்றுத் தொகுதியின் மையம்” என்பதை அறிஞர்கள் பலர் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்தார்கள். ஆனால் இந்தப் புதிய கண்டுபிடிப்பை அன்றைய செல்வாக்கிலுள்ள மத நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் அத்தகைய புதிய உண்மைகளை ஆய்ந்தறிந்து கூறும் அறிவியலாளர்களுக்கு மரணதண்டணை உட்பட பல தண்டனைகளையும் வழங்கியது.
இது போலத்தான் அமானுஷ்ய சக்திகள் பற்றிய பயமும் நம்பிக்கைகளும். இத்தகைய நம்பிக்கைகள் அறிவியலாளர்களால் நிராகரிக்கப்பட்டிருந்த போதிலும்கூட அவற்றை வைத்துக் காசு பார்க்கும் அல்லது தங்களது ஆதிக்க அடக்குமுறை நலன்களுக்குப் பயன்படுத்தி வருகின்ற ஒரு சரரார் விடுவதாக இல்லை.

மின்சார வசதிகள் இல்லாத மன்னர்களின் ஆட்சிமுறை இருந்த நாள்களில் திருடர்களும் வழிப்பறிக் கொள்ளையர்களும் ஓர் உத்தியைக் கையாள்வதுண்டு. நீண்ட காலமாக திருடிச் சேர்த்த சொத்துகளை எங்காவது பாழடைந்த வீடுகளிலும் கட்டடங்களிலும் பதுக்கி வைத்திருப்பர். இதனால் குறிப்பிட்ட அந்தப் பிரதேசத்திலே மக்கள் சுதந்தரமாக உலாவுவதை அவர்கள் விரும்புவதில்லை. இதற்காக அந்தத் திருடர்கள் பகலிலே நன்றாகத் தூங்கி பின்னிரவில் எழுந்து கறுப்புப் போர்வையால் தங்களை மூடிக் கொண்டு அந்தக் கட்டடங்களைச் சுற்றிலும் அவலக்குரல் எழுப்பியபடி உலாவுவார்கள். அப்படிச் செய்வதனால் பேய்களின் நடமாட்டம் இருப்பதாக ஊருக்குள் கதை பரவும். அதனால் அந்தப் பகுதிக்கு பகலிலும் கூட பொது மக்கள் வரத்துணிய மாட்டார்கள். இதனால் பதுக்கிய பொருளும் திருட்டு பற்றிய ரகசியமும் பிறருக்குத் தெரியாமல் பாதுகாப்பாக இருக்கும் என்பதுதான் அவர்களது பயமுறுத்தலின் பின்னாலுள்ள செய்தி.

மேலே நான் கூறிய விடயத்தை பேய்கள் பற்றிய பயத்துக்கு மட்டுமன்றி, இந்த சமூகத்திலே உலாவும் அவசியமற்ற விடயங்களான மூடநம்பிக்கைகள் மற்றும் அறிவியலின் வளர்ச்சியோடு இயல்பாக அழிந்து விடுவதிலிருந்து வேண்டுமென்றே கட்டிக்காத்துக் கொண்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும்கூட அப்படியே பொருத்திப் பார்க்கலாம்.

திருடர்களுக்கு தமது திருட்டுச் சொத்துகளைப் பாதுகாக்க பேய்கள் எனும் கருத்தாக்கம் எவ்வாறு பயன்படுகின்றதோ அவ்வாறுதான் நமது சமூகத்தில் வாழும் மக்களின் விழிப்புணர்ச்சியை மழுப்புவதற்கு பல மூடநம்பிக்கைகள் உதவுகின்றன. பல்வேறு தெய்வங்கள், சூனியம், பேய், பிசாசு, ஆவிகளிடம் பேசுவது, மந்திர தந்திரங்களால் நோய்களைக் குணப்படுத்த நினைப்பது, சாமியார்களிடம் நம்பிக்கை வைத்து ஏமாறுவது போன்ற விடயங்களின் பின்னால் இருப்பதெல்லாம் வெறும் ஏமாற்றுப் பித்தலாட்டங்களன்றி வேறு எதுவும் கிடையாது.

இவ்வாறு மக்களின் அறியாமையைப் பயன்படுத்தியும் தூண்டியும் வயிறு வளர்ப்பவர்களின் கதைகள் தற்போது அம்பலமாகிக்க கொண்டிருப்பதை பத்திரிகைகளிலும் வேறு ஊடகங்களிலும் பார்த்திருப்பீர்கள். இவற்றை நிருபிக்க அண்மைக்காலமாக மிகவும் பிரபலமான சாமியார்களின் ஆசிரமங்களிலே நடந்த மற்றும் நடந்துவரும் சம்பவங்களே போதும்.

0

மூதூர் மொகமட் ராபி

2 comments so far

 1. Abarajithan
  #1

  // “பூமியல்ல சூரியன்தான் ஞாயிற்றுத் தொகுதியின் மையம்”//

  இதை இன்னிக்கு வரைக்கும் நம்பாத கேசுங்களும் இருக்கு சார். இந்த லிங்க் போய் பாருங்க. (http://theflatearthsociety.org/cms/) உண்மையிலேயே பூமி தட்டை, பூமி உருண்டைன்னு மக்களை நம்ப வைக்கறது உலக நாடுகளும் அமெரிக்காவும், முக்கியமா நாசாவும் சேர்ந்து செய்யற கூட்டுச் சதின்னு கூப்பாடு போடறாங்க. இவங்க நம்பிக்கையை நிரூபிக்கறதுக்கு நவீன காஸ்மாலஜி முடுக்கம் வரைக்கும் முயற்சி பண்றாங்க. இவங்க சொல்றத ஒரு ஐந்து நிமிஷம் படிச்சதுல, எனக்கே ‘ஒருவேளை பூமி தட்டைதானோ’ன்னு டவுட் வருது.

 2. JesslyaJessly
  #2

  //மேலே நான் கூறிய விடயத்தை பேய்கள் பற்றிய பயத்துக்கு மட்டுமன்றி, இந்த சமூகத்திலே உலாவும் அவசியமற்ற விடயங்களான மூடநம்பிக்கைகள் மற்றும் அறிவியலின் வளர்ச்சியோடு இயல்பாக அழிந்து விடுவதிலிருந்து வேண்டுமென்றே கட்டிக்காத்துக் கொண்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும்கூட அப்படியே பொருத்திப் பார்க்கலாம்.//

  எனக்கு ஒரு விடயம் மட்டும் புரிவதேயில்லை. அதாவது ஏன் எத்தனை பெரிய அறிவியலாளர்களும் பேய் பூதங்களை மூட நம்பிக்கைகளாக அறிவிக்கின்ற ஆர்வத்தில் சிறு அளவைக்கூட தாங்கள் சார்ந்திருக்கும் அதைவிடப் பெரிய மூடநம்பிக்கைளான சாமி பூதங்கள் பற்றி அம்பலப்படுத்துவதற்காக வாய் திறப்பதில்லை? இதோ இங்கே எழுதியிருக்கும் மூதூர் மொகமட் ராபி, நீங்கள் கூட பூடகமாகத்தானே ஏதோ அது பற்றிச் சொல்கின்றீர்களே தவிர அடித்துச் சொல்ல மாட்டேன் என்கிறீர்களே..? இது ஏன்? பேய்களுக்கே பயப்படாத மூதூர் மொகமட் ராபியே பயப்படுவது எதற்காம்?

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: