மண்டலும் அம்பேத்கரும்

ஜூலை 2010. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில், பொய்த்தம்கடவு கிராமத்தில், வினீஷ் என்கிற தலித் இளைஞரின் பிணம் ஒரு பொது இடத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. அந்த இளைஞர் பிணமாவதற்கு முன்னர் படு பயங்கரமாகச் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை அவர் உடலில் இருந்த காயங்கள் காட்டின. தற்கொலை என்றார்கள். ஆனால், இது தலிபான் முறையில் வழங்கப்பட்டிருக்கும் கொடூரத் தண்டனை எனச் சொல்கின்றன கேரள தலித் அமைப்புகள். இப்போது காவல்துறை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்கிற அமைப்பினைச் சார்ந்தவர்களை இது தொடர்பாகக் கைது செய்திருக்கின்றது. வினீஷ் இஸ்லாமியப் பெண்களை அவமதித்துவிட்டாராம். அதற்காகவும் பிறருக்கும் ஓர் எச்சரிக்கையாக இருப்பதற்காக இந்தத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதாம். இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒரு PFI ஆசாமி சொல்வதாகக் கூறுகிறார் தெக்கன் சுனில் குமார் – கேரள பட்டிக ஜன சமாஜம் எனும் தலித் அமைப்பின் தலைவர்.

இதே PFIன் மதானி, வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டபோது, தமிழ்நாட்டின் பிரபல தலித் அமைப்பின் தலைவர் ஒருவர் குரல் கொடுத்தார். PFI அமைப்பே தன்னை சமூகநீதி அமைப்பாக ஊடகங்களில் வெளிக்காட்டிக் கொள்கிறது. ஆனால் இந்தப் பிரசார மாயைகளின் பின்னால் ஒரு வரலாற்று யதார்த்தம் உண்டு. வரலாற்றிலிருந்து பாடம் கற்காத சமுதாயத்துக்கு வரலாற்றின் கொடும் நிகழ்வுகள் மீண்டும் சம்பவிக்கும் என்பது விதி. எனவே வரலாற்றின் பக்கங்களில் சிறிது பின்னோக்கிச் செல்வோம்.

1930-களின் இறுதியிலும், தொடர்ந்து 1940-களிலும், இஸ்லாமியப் பிரிவினைவாதம் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து அனலடித்துக் கொண்டிருந்தது. முஸ்லீம் லீக் ஓர் அருமையான வியூகத்தை வகுத்திருந்தது. இஸ்லாமிய அரசியலை சமத்துவத்தின் குரலாக முன்வைத்தது. இந்தியாவில் இருக்கும் சமுதாயப் பிளவுகளைத் தங்களுக்கு வலிமை சேர்க்க எப்படியெல்லாம் பயனபடுத்த முடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்த முயன்றது.

ஜோகேந்திர நாத் மண்டல். வங்காளத்தைச் சேர்ந்த தலித் தலைவர். நாமசூத்திரர்கள் எனும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அம்பேத்கரால் உத்வேகமடைந்து அரசியலில் இறங்கியவர். இஸ்லாமியவாதிகளின் குரலை அப்படியே நம்பி ஏற்றவர். இஸ்லாமிய இயக்கமும் அவரைப் பிரசாரக் கருவியாக நன்றாகப் பயன்படுத்திக்கொண்டது. வங்கப் பிரிவினைக்கு முன்னர் சமூகநீதி என்கிற போர்வையில் இஸ்லாமிய வகுப்புவாதம் ஒவ்வொரு துறையாகத் தன் கைக்குள் போட்டுக்கொண்டே இருந்தது. மண்டல் எந்தக் கவலையும் இல்லாமல், அந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும், தமது தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை ஆதரிக்க வைத்துக்கொண்டே இருந்தார்.

வங்காளத்தில் அப்போது ஆட்சி செய்த ஃபஸூல் ஹக் அமைச்சரவை 1938-ல் ஒரு நிலை எடுத்தது: “போலீஸ் கான்ஸ்டபிள்களைத் தேர்ந்தெடுக்கும்போது 50% வேலை இடங்களில் முஸ்லிம்களே எடுக்கப்படவேண்டும்.” சமூக நீதி! அடுத்ததாக “60% அரசுப் பணியிடங்கள் முஸ்லீம்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும்.” சமூக நீதி! 1940-ல் மற்றொரு மசோதா. மேல்நிலைப்படிப்பு நிர்வாகம் அதுவரை வங்காளப் பல்கலைக்கழகத்திடம் இருந்தது. அது அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு இஸ்லாமியர்களுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் தரப்படும் ஒரு குழுவிடம் கொடுக்கப்படும். பட்டவர்த்தனமான இந்த வகுப்புவாத விஷமத்தனம் ஹிந்து மக்களைச் சாதி பேதமில்லாமல் வெகுண்டெழச் செய்தது. ஆச்சார்ய பி.சி.ராய், மேகநாத் சாகா போன்ற அறிவியலாளர்களும், ஷியாமா பிரசாத் முகர்ஜி போன்ற அரசியல்வாதிகளும், தாழ்த்தப்பட்ட சமுதாயத் தலைவர்களும், மாணவர்களும் இதை எதிர்த்தனர். மண்டலை அனுப்பி இந்த மசோதாவுக்குத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஆதரவு திரட்டச் செய்தது முஸ்லீம் லீக்.

வகுப்புவாதத்தின் கோர விளைவுகளை மண்டல் பல நேரங்களில் நிதர்சனமாகச் சந்தித்தார். ஆனால் இஸ்லாமிய பிரசார மாயையை உதறித்தள்ள அவர் சிறிதும் தயாராக இல்லை.

”கல்கத்தா கலவரங்களைத் தொடர்ந்து அக்டோபர் 1946-ல் நவகாளி கலவரங்கள் நிகழ்ந்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான ஹிந்துக்கள் மதம் மாற்றப்பட்டனர். ஏராளமான ஹிந்துப் பெண்கள் கடத்திச் செல்லப்பட்டனர், வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டனர். நான் கலவரங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றேன். ஹிந்துக்கள் படும் துன்பம் என்னைக் கடுமையான வேதனைக்கு உள்ளாக்கியது. ஆனாலும் நான் முஸ்லீம் லீக்குடன் ஒத்துழைக்கும் என் நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கவில்லை.”

இந்திய விடுதலையும் பாகிஸ்தானியப் பிரிவினையும் தவிர்க்க இயலாதது என்ற சமயத்தில் முஸ்லீம் லீக் இந்தியாவின் சமுதாயப் பிளவுகளையும், மொழி சார்ந்த பிரிவினைகளையும் தன்னாலான விதத்தில் ஊதிப் பெரிதாக்கி இந்தியாவைப் பலவீனப்படுத்த பல தந்திரங்களை மேற்கொண்டது. அதில் ஒன்று ‘தனி வங்காள அரசு’ அமைக்கக் கோருவது. சரத் போஸ்-சுஹ்ராவாதி தலைமையில் ஐக்கிய வங்காள ராஜ்ஜியம். பாகிஸ்தான் லாகூர் தீர்மானத்தின்படி தனி இஸ்லாமிய அரசுகளை இந்தியாவில் உருவாக்கும் திட்டத்துக்கு ஏற்றதாக, இதனைக் கருதியது முஸ்லீம் லீக். அதற்கு மறைமுகமாக ஆதரவும் தந்தது. தனி வங்காள அரசு உருவானால் போதும். அதிக இஸ்லாமிய மக்கள் தொகை இருப்பதைக் காரணம் காட்டி அதனை பாகிஸ்தானுடன் கண் இமைக்கும் நேரத்தில் இணைத்துவிடலாம். ஜோகேந்திர நாத் மண்டல் இந்தத் திட்டத்தையும் மனப்பூர்வமாக ஆதரித்தார். வங்காளத்தைப் பிரிக்கக்கூடாது என்றார். “கிழக்கு வங்காளத்தில் இருக்கும் சாதி இந்துக்கள், செல்வந்தர்கள் எளிதாக மேற்கு வங்காளத்துக்கு நகர்ந்துவிடுவார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்குத்தான் கஷ்டம்” என்று காரணம் சொன்னார். இதர தாழ்த்தப்பட்ட தலைவர்கள் எதிர்த்தார்கள். உதாரணமாக ராதாநாத் தாஸ் என்கிற தாழ்த்தப்பட்ட தலைவர் வங்கப் பிரிவினையும், மேற்கு வங்கம் இந்தியாவுடன் சேருவதும்தான் நல்லது என்று கூறினார். “தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அசையாச் சொத்து என்று எதுவும் இல்லை, அவர்கள் வாழும் குடிசையைத் தவிர. எனவே, எளிதாக அவர்கள் இந்தியா வந்துவிட முடியும்.” ஆனால் கிழக்கு வங்காளத்தின் மக்கள் மண்டலை முழுமையாக நம்பினார்கள். அவர் சொன்னபடியே அவர்கள் கிழக்கு வங்காளத்திலேயே இருந்தார்கள்.

இறுதியாக வங்கப்பிரிவினை நடந்து கிழக்கு பாகிஸ்தானுக்கு மண்டல் சென்றார். முதலில் எல்லாம் நன்றாக இருப்பதுபோலத்தான் இருந்தது. மண்டல், சட்டம் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சராக ஜின்னாவால் அறிவிக்கப்பட்டார். ஆனால் 1947-லிருந்தே பாகிஸ்தானில் அரசு இயந்திர உதவியுடன் கலவரங்கள் நடத்தப்படுவதை அவர் பார்த்தார். சிறிய சிறிய தகராறுகளுக்குக் கூட – மீன் பிடிப்பதில், மாடு மேய்ப்பதில் நடக்கும் தகராறுகள் உட்பட – காவல்துறையும் இஸ்லாமிய மதவாதிகளும் தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களையும், அவர்களின் முழு கிராமங்களையும் தண்டிப்பதை அவர் கண்டார். மீண்டும் மீண்டும் தன் சமுதாய மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அவர் கிழக்கு பாகிஸ்தானில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கும், மேற்கு பாகிஸ்தானில் இருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் கூறிவந்தார். நடவடிக்கைகள் எடுப்பதாக அவருக்கு வாக்குறுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தன. கொடுமைகள் சகிக்கமுடியாத அளவு உச்சமடைந்தன. ஜோகேந்திர நாத் மண்டல் பாகிஸ்தானிய அரசுக்கு எழுதுகிறார்:

“ராணுவம் ஹிந்துக்களைக் கொடுமைப்படுத்துகிறது. அவர்களைத் தூக்கிச்சென்று விடுகிறது. ஹிந்துக்கள் தங்கள் பெண்களை ராணுவ முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்த நிகழ்ச்சிகளைக் குறித்து நான் தங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தேன். இவை குறித்து அறிக்கை அனுப்புவதாகச் சொன்னீர்களே. இன்னும் அந்த அறிக்கை வரவில்லை.”

மேலும் கூட்டப் படுகொலைகள் தொடர்ந்தன. 1950-ல் உருவாக்கப்பட்ட கலவரங்களில், மண்டலின் கணக்குப்படி, 10,000 ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். வேறு வழியில்லை. இனி இங்கு இருந்தால் தனது வாழ்க்கைக்கும் தனது குடும்பத்தின் மானத்துக்கும்கூடப் பாதுகாப்பில்லை. எப்படியாவது தப்பினால் போதும். கதறக் கதற ஒரு ராஜினாமா கடிதத்தைப் பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பிவிட்டு, மண்டல் இந்தியாவுக்குத் தப்பி ஓடினார். ஆனால் பரிதாபமாகிவிட்ட விஷயம், அவரை நம்பி கிழக்கு பாகிஸ்தானுக்குள் அகப்பட்டுக்கொண்ட நாமசூத்திர மக்களின் நிலைதான். அவர்கள் இப்போது திருட்டுத்தனமாக எல்லைகளைக் கடந்து இந்தியாவுக்குள் அகதிகளாக வரவேண்டிய நிலை.

வங்காளத்தின் தலித் இயக்கத்தின் முன்னணியில் இருந்தவர்கள் நாமசூத்திரர்கள். மண்டல் அவர்களைக் கட்டுப்பாடுள்ள அரசியல் சக்தியாக வளர்த்தெடுத்திருந்தார். அரசியலில் எவரும் புறந்தள்ளிவிட முடியாத சக்தி. ஆனால் இப்போது அந்த மக்கள், தங்கள் அரசியல் சக்தியை இழந்துவிட்டிருந்தனர். முழுக்க முழுக்க மேல்சாதியினரின் சாதிய வெறிக்கும், அரசியல் சக்திகளின் ஊழலுக்கும் அடிபணியவேண்டிய அகதிகளாக நாமசூத்திரர்கள் எஞ்சினார்கள். அவர்கள் தங்கள் போராட்டத்தை மீண்டும் முதல் புள்ளியிலிருந்தே தொடங்க வேண்டியிருந்தது. தம்மை கிழக்கு பாகிஸ்தானில் தங்கச் செய்து, பின்னர் தான் மட்டும் தப்பி வந்துவிட்ட துரோகியாகத்தான் மண்டலை வங்காள தலித்துகள் காணத் தொடங்கினர்.

மண்டல் செய்த தவறு என்ன? இஸ்லாமியருக்கும் தலித்துகளுக்கும் அடிப்படைப் பொருளாதார சமூகப் பிரச்னைகள் ஒன்றே என அவர் நம்பினார். எனவே அவர்களின் அரசியல் நோக்கங்களும் ஒன்றாகத்தான் இருக்க முடியும் என அவர் கருதினார். ஆனால், தலித்துகளின் அரசியல் சமூக நீதிக்கான போராட்டம், இஸ்லாமிய அரசியல் சமூகநீதிக்கான போராட்ட அரசியலிலிருந்து அடிப்படையிலேயே மாறுபட்டது. இஸ்லாமிய அரசியல் சமூக நீதிக்கான போராட்டத்துக்குத் தெளிவான மதமேன்மைவாத நோக்கு இருந்தது. அதற்கு அது பயன்படுத்தும் ஒரு கருவி மட்டுமே தலித் அரசியல்.

அம்பேத்கர்

அம்பேத்கர்

இதனை முதலில் கண்டுகொண்டவர் பாபா சாகேப் அம்பேத்கர்தான். ஏற்கெனவே அவர் தலித் மக்களை எச்சரித்திருந்தார். மேல்சாதி வெறியர்களின் உறைந்து போன, உளுத்துப் போன மனச்சாட்சிகளை அதிர்வூட்டி உலுக்க மதமாற்றம் நல்ல ஆயுதம்தான். ஆனால் அதைக் கவனமாகப் பயன்படுத்தவேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் தலித்துகள் தேசவிரோதச் சக்திகளுக்குத் துணை போய்விடக்கூடாது. அநியாயங்களை எதிர்த்து சிறுதுளி சமரசமும் இல்லாமல் போராடுவோம். ஆனால் அதனை வைத்துக்கொண்டு அந்நியர்கள் நம்மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது. எனவே, அம்பேத்கர் எச்சரித்தார்: “கிறிஸ்தவத்துக்கோ இஸ்லாமுக்கோ தாழ்த்தப்பட்ட மக்கள் மாறும்போது அவர்கள் தேசியத்தை இழந்துவிடுகிறார்கள்.” (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 27-ஜூலை-1936)

பாகிஸ்தானியப் பிரிவினை அலை அடித்துக்கொண்டிருந்தபோது அம்பேத்கர் இந்த இஸ்லாமிய இயக்கத்தின் ஒரு முக்கியத் தன்மையைக் கண்டறிந்தார். அவர்கள் சமூக நீதி என்று முன்வைப்பது ஆதிக்க உணர்வு கொண்ட ஆக்கிரமிப்பாளனின் குரல்தான். அவர் எழுதினார்:

“முஸ்லீம்கள் இப்போது ஹிட்லரின் மொழியைப் பேசுகிறார்கள். ஹிட்லர் ஜெர்மனியில் கேட்பது போன்ற கோரிக்கையையே முன்வைக்கிறார்கள். அவர்களின் 50% கோரிக்கை என்பது நாஸிகளின் கோரிக்கையைப் போன்றதே ஆகும். (A counterpart of the German claims for Deutschland Uber Alles and Lebensraum.) அவர்களுக்கு மற்ற சிறுபான்மைக் குழுக்கள் குறித்த கவலையே இல்லை.”

அம்பேத்கர் ஒருபோதும் இந்திய அரசியல்வாதிகளை – குறிப்பாக காங்கிரஸ்காரர்களை – நம்பியதில்லை. ஆனால், சாதிய மதத்தை உதறித்தள்ளும் அதே நேரத்தில் ஹிந்துப் பண்பாட்டுக்கு வெளியே தலித்துகள் செல்வது அவர்களுக்கு நல்லதல்ல என்பதில் தெளிவாக இருந்தார். அதோடு, இந்தியாவின் அரசியல் அதிகாரத்தில் தலித்துகள் எல்லாத் துறைகளிலும் பெரும் சக்தியாக வரவேண்டும், அது ஒன்றே தீர்வு என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். எனவே, தலித்துகளை இந்திய ராணுவத்தில் இணையச் சொன்னார்.

‘மகர்கள் ராணுவத்துக்கு ஏற்ற இனம் அல்ல’ என்று இனவாதக் கோட்பாடுகளின் அடிப்படையில், அவர்கள் ராணுவத்தில் சேர பிரிட்டிஷ் அரசாங்கம் தடைகளை உருவாக்கியிருந்தது. அம்பேத்கர் மகர்களைப் பெரிய அளவுகளில் ராணுவத்தில் சேரச் சொன்னார். வீர சாவர்க்கர் அம்பேத்கரின் இந்த நிலைப்பாட்டுக்குப் பெரும் ஆதரவு கொடுத்தார்.

பிரிவினை நெருங்கியது. பாகிஸ்தானில் சிக்கிக்கொண்ட ஹிந்து தலித்துகளுக்கு 2-ஆகஸ்ட்-1947 இல் அவர் விடுத்த செய்தி முக்கியமானது:

“இந்தியாவிலுள்ள ஷெட்யூல்ட் வகுப்பினரின் வருங்காலம் கவலை தரக்கூடியதாக இருந்தாலும், உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வசதிகளைக் கொண்டு இந்தியாவுக்கு வந்துவிடுங்கள் என்று பாகிஸ்தானில் சிக்கிக் கொண்டிருக்கும் ஷெட்யூல்ட் வகுப்பினரைக் கேட்டுக்கொள்கிறேன். மற்றொரு விஷயமும் கூற விரும்புகிறேன். பாகிஸ்தானிலும் சரி, ஹைதராபாத்திலும் சரி, ஷெட்யூல்ட் வகுப்பினர்… முஸ்லீம் லீக்கை நம்பக்கூடாது. ஹிந்துக்களைத் தாங்கள் விரும்பாததால், முஸ்லீம்களைத் தங்கள் நண்பர்களாக மதிப்பது ஷெட்யூல்ட் வகுப்பினருக்கு வழக்கமாகிவிட்டது. இது தவறு. இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்படுவதற்குப் பணியவேண்டாம் என ஷெட்யூல்ட் வகுப்பினரை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். பலாத்காரத்தில் மதம் மாற்றப்பட்டவர்கள்… மீண்டும் திரும்ப விரும்பினால் அவர்கள் வரவேற்கப்படுவார்கள் என்று உறுதி கூற விரும்புகிறேன்.”

நாடு விடுதலை பெற்றபோது பாகிஸ்தானில் வாழ்ந்த ஹிந்து தலித்துகளை ‘அத்யாவசிய சேவை’ என்று அனுப்ப மறுத்தது பாகிஸ்தான் அரசு. அம்பேத்கர் நேருவிடம் மகர் ரெஜிமெண்ட்களை அனுப்பி பாகிஸ்தானிய ஹிந்துக்களைப் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வரச் செய்தார். ‘போலோ ஹிந்துஸ்தான் கி ஜெய்’ என்கிற மகர் ரெஜிமெண்ட் கோஷமே, அன்று எல்லாம் இழந்து மரண பயத்துடன் பாகிஸ்தானிலிருந்து நடுங்கியபடி வந்த மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் அமுத ஒலியாக இருந்தது. தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டதற்கு, பாகிஸ்தானிலிருந்து அகதிகளாகத் தப்பி வந்த ஹிந்துக்கள் அம்பேத்கருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

மண்டலுக்கும் அம்பேத்கருக்கும் இடையில் இருந்த வேறுபாடு இன்று தாழ்த்தப்பட்ட மக்கள் சமுதாயங்களின் வரலாற்றுப் போக்கையே மாற்றிவிட்டது. இன்றைய தலித் இயக்கங்களுக்கும் தலைவர்களுக்கும் இதில் பாடங்கள் உள்ளன. இதனை அண்மையில் நடந்த இரு முக்கியச் சம்பவங்கள் மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அண்மைக் காலமாக தலித் தலைவராக மிக அதிகப் பொருட்செலவில் முன்னிறுத்தப்படும் ஒருவர், இஸ்லாமிய வகுப்புவாதிகளின் ஆட்சேபணைக்கு இணங்கி, பழைய பட்டினம் எனும் ஊரில் தலித் மக்களின் வேண்டுகோளையும் மீறி, நீதிமன்ற உத்தரவையும் பொருட்படுத்தாமல், அம்பேத்கர் சிலையை அகற்றச் சம்மதித்த நிகழ்ச்சி ஒன்று. மற்றொன்று இக்கட்டுரையின் முதலில் கூறப்பட்ட நிகழ்ச்சி.

இச்சூழ்நிலையில் நம் தலித் தலைவர்கள் யாரைப் பிரதி எடுக்கிறார்கள்? அம்பேத்கரையா மண்டலையா? சமூக நீதிக்கான போராட்டத்தில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்வி இது. ஏனெனில் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதவர்களுக்கு வரலாற்றின் கொடுஞ்செயல்கள் மீண்டும் சம்பவிக்கும்.

மேலதிக விவரங்களுக்கு:

* Taliban-Model Attack Suspected in Dalit’s Death, The New Indian Express, 12-Oct-2010
* பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், Thoughts on Pakistan, Thacker and company limited, 1941
* தனஞ்ஜய் கீர், Dr. Ambedkar: life and mission, Popular Prakashan, 1971
* Rakesh Batabyal, Communalism in Bengal: from famine to Noakhali, 1943-47, SAGE, 2005
* குமரன் 2-8-1947
* Infantry, a glint of the bayonet, Directorate General of Infantry, in association with Lancer Publishers, 2000
* அம்பேத்கரை அவமதிக்கும் திருமாவளவனும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும்: சுட்டி: http://natputanramesh.blogspot.com/2010/03/blog-post_31.html
* ஜோகேந்திர நாத் மண்டலின் ராஜினாமாக் கடிதம் முழுமையாக இங்கே:
* http://en.wikisource.org/wiki/Resignation_letter_of_Jogendra_Nath_Mandal

9 comments so far

  1. commie.basher
    #1

    //
    வரலாற்றிலிருந்து பாடம் கற்காத சமுதாயத்துக்கு வரலாற்றின் கொடும் நிகழ்வுகள் மீண்டும் சம்பவிக்கும் என்பது விதி. எனவே வரலாற்றின் பக்கங்களில் சிறிது பின்னோக்கிச் செல்வோம்.
    //

    வரலாற்றுப் பாடத்தை திரிப்பதே முழுநேர வேலையாகக் கொண்டுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றாசிரியர்கள் எழுதும் புத்தகத்தைப் படித்து வரலாற்றைத் தெரிந்துகொண்டால் நம் தேசம் விளங்காமல் போவது உறுதி. சமீபத்திய அயோத்தியா வழக்கின் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இந்த பல்கலைக்கழக வரலாற்றாசிரியர்கள் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் படித்துப் பார்த்தால் உண்மை விழங்கும்.

    இப்படி வெக்கங்கெட்டத் தனமாக வரலாற்றுத் திரிபு செய்வதைவிட விபச்சாரம் செய்து பிழைக்கலாம்.

  2. அஞ்சனாசுதன்
    #2

    திருமாவளவன் போன்ற வேடதாரிகள் தலைவ்ர்களாக இருக்கும்வரை தமிழகத்தில் ஷெட்யூல்ட் வகுப்பினருக்கு விமோசனம் கிடையாது. கிறுத்துவ, இஸ்லாமிய, திராவிட தலைகளுக்கு ஏஜெண்டாக வால்பிடித்துக் கொண்டிருப்பவர் அவர். தன்னுடைய சுயநலத்தையும், சுய முன்னேற்றத்தையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அரசியல் நடத்திக் கொண்டிருப்பவர். திண்டுக்கல் மாவட்டம் மெய்க்கோவில் பட்டியில் சடையாண்டி என்னும் இந்து ஷெட்யூல்ட் வகுப்பினர் கிறுத்துவ வன்னியர்களால் அடித்து நொறுக்கி வாயில் மலத்தைத் திணித்து கொடுமைப் படுத்தப்பட்டபோதும், பெருமாள் கோவில்பட்டியில் ஆண்டி என்கிற இந்து ஷெட்யூல்ட் வகுப்பினர் கிறுத்துவ வன்னியர்களால் மாரியம்மன் கோவில் வாசலில் படுகொலை செய்யப்பட்டபோதும், அதே சமயத்தில் அவர்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் வேலூரில் கோட்டையினுள் முஸ்லிம் சமுதாயத்திற்காக மசூதி நுழையும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார் இந்த மைனாரிடி ஏஜெண்ட் திருமா. நம்நாட்டு சரித்திரத்தை திரித்து இடது சாரிகளும், திராவிட கட்சிகளும் மக்களை ஏமாற்றுவதைப்போல், அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கையைத் திரித்து அவர் சொன்னதையெல்லாம் மாற்றிச் சொல்லி தலித் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர் திருமா.

    நல்ல கட்டுரை அரவிந்தன், பாராட்டுக்கள்! தொடரட்டும் உங்கள் சிந்தனை. அதன் மூலம் வேடதாரிகளின் சுயரூபம் வெளியில் வரட்டும்.

    நல்ல கட்டுரை அரவிந்தன்

  3. Shayan
    #3

    //இதே PFIன் மதானி, வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டபோது, தமிழ்நாட்டின் பிரபல தலித் அமைப்பின் தலைவர் ஒருவர் குரல் கொடுத்தார்.//

    மதானி எப்போது PFI என்கிற இயக்கத்தில் இருந்தார் ? இது போன்ற எந்த உழைப்போ , கள ஆய்வோ இல்லாத அரவிந்தனின் எந்த பலனுமற்ற ,கீழ்த்தரமான, ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதலாம் என்கிற சர்வாதிகார மேம்போக்கு மனப்பான்மைக்கு ராகவனும் , பத்ரி யும் சொல்லும் விளக்கம் தான் என்ன? தமிழ் பேப்பர் இன் நம்பகத்தன்மை இதிலிருந்து விளங்குகிறது , அரவிந்தனின் அரை வேக்காட்டு கட்டுரைகள் போல.

  4. அஞ்சனாசுதன்
    #4

    பி.எஃப்.ஐ. (PFI) அனைத்து ஜிகாத் இயக்கங்களின் கூட்டணியின் பெயர். ஜிகாத் கமிட்டியில் (Jihad Committee) பழனி பாபாவுடன் இருந்த ஹைதர் அலி தான் இன்று த.மு.மு.க வில் (TMMK) இருக்கிறார். த.மு.மு.க. வருவதற்கு முன்னால் அல் உம்மாவில் (Al Umma) பாஷாவுடன் சுற்றிக் கொண்டிருந்தார்.

    கோவை குண்டு வெடிப்பில் ஈடுபட்டதால் அல் உம்மா தடை செய்யப்பட்ட பிறகு, அதுவே மனித நீதி பாசறை என்று புதிய பெயர் வைத்துக் கொண்டது. கேரளாவில் என்.டி.எஃப் (NDF) தான் தமிழகத்து எம்.என்.பி (MNP), மற்றும் கர்நாடகாவில் உள்ள கே.எஃப்.டி. (KFD) ஆகியவற்றுடன் சேர்ந்து பழைய சிமி (SIMI) தலைகளைக் கொண்டு பி.எஃப்.ஐ (PFI) அவதாரம் எடுத்துள்ளது. சிமி தான் நாடு முழுவதும் ஐ.எம் (IM – Indian Mujahideen)) என்கிற பெயரில் குண்டுகள் வெடித்து வருகிறது. நாளை பி.எஃப்.ஐ-யைத் தடை செய்தால் இதே ஜிகாதிகள் வேறு பெயரில் உலா வருவார்கள்.

    இயக்கங்களின் பெயர்கள் தான் வேறு வேறே தவிர ஜிகாதிகள் எல்லாம் அதே தலைகள் தான். வால்கள் மட்டும் அதிகம் ஆகிக்கொண்டிருக்கின்றன. ஆகையினால் அரவிந்தன் மதானியைப் பற்றிச் சொன்னதில் தவரொன்றுமில்லை.

    இந்த அற்புதமான கட்டுரையை அரை வேக்காட்டுக் கட்டுரை என்று கூறிய உமது அறிவு உலக்கைக் கொழுந்துதான்.

    சரி, இந்த அரை வேக்காட்டுக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள எதேனும் ஒரு பாயிண்டுக்கு ஆதாரப் பூர்வமாக மறுப்பு எழுதுங்களேன் பார்ப்போம்!?

  5. Ganesh
    #5

    உங்கள் எழுத்துக்கள் உங்களை அடையாளம் காட்டுகிறது. PDP or PFI என்ன வித்தியாசம் எழுத்துக்களைத் தவிர? 99.99 சதவிகித கருத்துக்களை உங்களால் மறுக்க முடியவில்லை அல்லவா? கட்டுரையின் கடைசியில் references போட்டுள்ளதே கவனித்தீர்களா?! ஓ நீங்கள்தான் கட்டுரையின் 9வது வரிக்குப் பின்னால் உள்ளவற்றை உளறல் என்று தீர்மானித்துவிட்டீர்களே! என் அனுதாபங்கள். தயவு செய்து மணலில் புதைத்துள்ள தலையை வெளியே எடுங்கள்.

  6. களிமிகு கணபதி
    #6

    //நாடு விடுதலை பெற்றபோது பாகிஸ்தானில் வாழ்ந்த ஹிந்து தலித்துகளை ‘அத்யாவசிய சேவை’ என்று அனுப்ப மறுத்தது பாகிஸ்தான் அரசு. //

    அது என்ன “அத்யாவசிய சேவை” ?

    வேறொன்றும் இல்லை. பாக்கிஸ்தானிய முஸ்லீம்கள் கழிக்கும் மலத்தை சுத்தம் செய்யும் சேவைதான் இந்த “அத்தியாவசிய சேவை”.

    மனித மலத்தை மனிதர் சுமக்கும், சுத்தம் செய்யும் ஒரு வழக்கத்தை இந்தியாவின்மீது கொள்ளையடிக்க,ஜிகாத் செய்ய, வந்த முஸ்லீம்கள் ஏற்படுத்தினார்கள் என்பது வரலாற்று உண்மை.

    இதற்காகவே பாகிஸ்தானில் தலித்துகளை முஸ்லீம்களாக மாற்றுவதில்லை.

  7. மலர்மன்னன்
    #7

    முஸ்லிம் லீகுடன் இணைய மண்டல் ஆலோசனை கேட்கவும், அதற்கு அனுமதி வழங்கியவர் அம்பேத்கர்தான். முகமதிய மத வெறியரை ஆதரிப்பதால் ஏற்படகூடிய பின் விளைவுகளை எடைபோடஅப்போது அம்பேத்கரும் தவறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இந்துக்கள் பாடம் கற்க வேண்டிய நிக்ழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் ஹிந்துக்கள் சிறிதும் பாடம் கற்றுக் கொண்ட தாகத் தெரியவில்லை. இதை உணராதவரை ஹிந்து சமூகத்துக்கு விமோசனமில்லை.
    கோத்ரா, கோத்ரா என்பவர்கள் ஹிந்து சமூகம் முகமதிய மத வெறியரால் இன அழிப்புக் கொடுமைகளை அனுபவித்துவரும் நிகழ்வுகளை அறிய வேண்டும்.

    இப்போதெல்லாம் எனது தியான நேரம் முழுவதும் ஹிந்து சமூகத்திற்கு விரைவில் விழிப்புணர்வு கொடு என்று தீவிரமாய் வேண்டுவதாகவே அமைந்துவிட்டது.
    -மலர்மன்னன்

  8. Ganesh
    #8

    இவருக்கும் மண்டல் கமிஷனுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா? மிக அருமையான கட்டுரை.

  9. saran
    #9

    மிகவும் அவசியமான கட்டுரை நன்றி

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

2 Trackbacks/Pings

Facebook comments: