தேவர் மகன்: அம்மிகள் சிலைகளாவதில்லை – 1

சர்வ தேச அளவிலான விருதாக இருப்பதால் ஆஸ்கர் விருது கமிட்டியினர் பல்வேறு விலைகளைக் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று இந்தியப் படங்களை, குறிப்பாகத் தமிழ்ப் படங்களை அவ்வப்போது பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுவதுதான்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யத் தெரிந்தவர்கள் எல்லாம் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்ற தாராளக் கொள்கையை இனியும் கடைப்பிடிக்கத்தான் வேண்டுமா என்ற எண்ணத்தை அவர்களுக்கு மீண்டும் அழுத்தமாகத் தந்திருக்கக்கூடிய படம் 1992-ல் கமல்சார் கதை-திரைக்கதை-வசனம் எழுதி, நடித்து, தயாரித்து வெளியான தேவர் மகன்.

இந்தப் படத்தை இயக்கியவர் பரதன். பொதுவாக, கமல்ஹாசன் தான் நடிக்கும் படங்களில் இயக்குநர்களுடைய பணிகளில் ஆர்வமிகுதியால் (!?) குறுக்கிடுவது வழக்கம். சந்தான பாரதி, சுந்தர் சி. போன்றவர்கள் இயக்கியதாகச் சொல்லப்படும் படங்கள் உண்மையில் கமலால் இயக்கப்பட்டதுதான் என்பது திரையுலகில் இருப்பவர்களுக்குத் தெரிந்த ஒரு ரகசியம். கமல்ஹாசனின் இத்தகைய செயல்பாடுகளினால் பிற இயக்குநர்களுடன் அவருக்கு முரண்பாடுகள் ஏற்படுவதும் ஒருவழியாகப் படம் முடிக்கப்பட்டு வெளிவருவதும் ஊருக்கே தெரிந்த ஒரு ரகசியம்.

இந்தப் படத்திலும் இயக்குநருடன் கமல்ஹாசனுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. டைட்டிலில் பெயர் போடும்போது கமல்ஹாசனின் பெயர் அடர் பச்சைப் பின்னணியில் வெண் எழுத்துகளில் மிகத் தெளிவாக இடம்பெற்றிருக்கிறது. இயக்குநரின் பெயர் சூரிய ஒளி பட்டுப் பிரதிபலிக்கும் வெண்ணிற நதி நீரின் பின்னணியில் அதே வெண்ணிற எழுத்துகளாக அதாவது, பெயர் என்ன என்பதே தெரியாதவகையில் இடம்பெறுகிறது. இயக்குநர் இந்தப் படத்துடனான தனது தொடர்பை கவுரவமாக நினைக்கவில்லையா… தயாரிப்பாளர் இயக்குநரை இருட்டடிப்பு செய்தாரா… எது காரணம் என்பது தெரியவில்லை. ஆனால், படம் பார்த்து முடித்தபோது முந்தைய காரணம்தான் உண்மையாக இருக்கும் என்றே தோன்றியது.

அடர்பச்சை கமல்

வெளிறிய பரதன்

படத்தில் தென் தமிழகத்தில் நடக்கும் கலவரங்கள் இடம்பெறுகின்றன. சண்டையால் மூடப்பட்டுக் கிடக்கும் கோயில் இடம்பெறுகிறது. அணையை உடைத்து ஊருக்கு அழிவை ஏற்படுத்துவது இடம்பெறுகிறது. பொதுப் பயன்பாட்டுக்கான சாலையை மறித்து ஒரு பிரிவினரை அதன் வழியே போகவிடாமல் தடுக்கும் செயல் நடக்கிறது. தேர் திருவிழாவின் போது குண்டு வெடிக்கிறது. இப்படியாக சம கால சாதி, மதக் கலவர நிகழ்வுகள் அனைத்தும் படத்தில் இடம்பெறுகின்றன. ஆனால், இவையெல்லாமே சாதி, மதச் சண்டையாக இடம்பெறாமல் கேவலம் பங்காளிச் சண்டையால் நடப்பதாகக் காட்டப்பட்டிருக்கின்றன.

தேவர் சாதிக்குள் பங்காளிச் சண்டைகள் உண்டு என்பது உண்மைதான். ஆனால், அது இப்படியான பரிமாணங்களில் ஒருபோதும் வெளிப்படாது. இரு குடும்பத்து சண்டை என்பது அந்தக் குடும்ப உறுப்பினர்களைத் தாக்குவது என்ற அளவில்தான் நடக்கும். அதிகபட்சம் அவர்களுக்கு உதவும் மிக நெருங்கிய நபர்களுக்கு பயமுறுத்தல் என்ற அளவுக்கு வேண்டுமானால் நடக்கலாம்.. இங்கோ இரண்டு சாதிகளுக்கு இடையிலான சண்டைபோல் குடிசைகளைக் கொளுத்துதல், அணையை உடைத்தல், தேருக்குத் தீ வைத்தல் என பொதுமக்களைக் குறிவைத்து பயங்கரமாக நடக்கிறது.

நிஜத்தில் ஒருவேளை இப்படி நடந்தால் அது சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாறி அடுத்த நிமிடமே இரு குடும்பத்து உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுவிடுவார்கள். படத்திலோ ஏராளமான வெட்டும் குத்தும் கொலையும் நடந்த பிறகும் ஒரே ஒரு சாட்சிகூடக் கிடைக்காமல் காவல்துறை திணறுகிறது. என்னதான் தேவர் பூமி பஞ்சாயத்தை மட்டுமே நம்பியதாக இருந்தாலும் காவல்துறை என்பது ஓரளவுக்குத்தான் ஒதுங்கி நிற்கும். அதுவும்போக கதை என்ன 18-19-ம் நூற்றாண்டிலா நடக்கிறது? கிட்டத்தட்ட படம் வெளியான 1990-களில் தானே நடக்கிறது.

இந்தக் கதையின் அபத்தம் நன்கு புரியவேண்டுமென்றால், ஒரு உதாரணம் சொல்கிறேன். அழகிரி-ஸ்டாலின் சண்டையில் ஸ்டாலினின் ஊரான சென்னையை அழகிரி ஸ்கட் ஏவுகணை தாக்கி அழிக்கிறார்… ஆட்கொல்லி வைரஸை ஊருக்குள் பரவவிட்டு அனைவரையும் கொல்கிறார் என்றெல்லாம் காட்டினால் எப்படி இருக்குமோ அதுபோல முட்டாள்த்தனமானது.
எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. இரு சாதிகளுக்கு அல்லது மதங்களுக்கு இடையிலான சண்டையாகப் படம் எடுத்தால் பிரச்னை வரும் என்றால் எதற்காக சாதியையோ மதத்தையோ மையமாகக்கொண்டு படம் எடுக்கவேண்டும். யாராவது வசனகர்த்தா நகைச்சுவை ததும்ப எழுதிக் கொடுத்தால், சரியான ஏற்ற இறக்கத்தோடு பேசி நடிக்க கமலுக்குத்தான் தெரியுமே. யானைக்கு நிலத்திலும் முதலைக்கு நீரிலும் கமலுக்கு லைட் சப்ஜெக்டிலும் பலம் என்பது உலகுக்குக்கே தெரிந்த விஷயம்தானே. அப்படியே கனமாக எதையாவது கையாள வேண்டும் என்று நினைத்தால் அன்னார் ஜிம்முக்குப் போவதுதானே சாலச் சிறந்தது.

தமிழ்ச் சூழலில் சாதி பற்றி படம் எடுப்பது சிரமம் என்றால், சாதியைப் பற்றி வெளிப்படையாகப் பேச முடியவில்லை என்பதை அல்லவா முதலில் எடுக்க வேண்டும். பிற தமிழ் திரையுலகப் படைப்பளிகள் சாதி என்ற ஒன்று இருப்பதாகவே காட்டாமல் இருக்கும் நிலையில் நாம் ஏதாவது ஒரு சாதியையாவது காட்டுகிறோமே… சம்திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங் என்று கமல் நினைத்திருக்கக்கூடும். ஆனால், நத்திங் ஈஸ் பெட்டர் தேன் நான்சென்ஸ் என்ற ஒரு வசனமும் உண்டு என்பது அன்னாருக்குத் தெரியாது போலிருக்கிறது.

நம்மவாளை வேணும்னா எப்படி வேணும்னாலும் விமர்சிக்கலாம். மத்தவாளைப் பத்திப் பேசினா லாங் சைஸ் அருவாளை எடுத்துண்டு வந்துடுவா என்று கமல் மாமா பயப்படுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அதனால், தேவர் சமூகத்துக்குள்ளாகவே அந்த வன்முறை வெளிப்படுவதாகக் காட்டி அதன் மூலம் அவர்களை சுய பரிசீலனைக்கு உட்படுத்தலாம் என்ற நல்லெண்ணம் கமலுக்குத் தோன்றியிருக்கவும்கூடும். ஆனால், ஒரு பிரச்னையை அதன் முழு வடிவில் அணுகுவதுதான் முறை. ஆணாதிக்கத்தை எதிர்ப்பதாக இருந்தால் ஒரு பெண்ணுக்கு ஆண் இழைக்கும் அநீதிகளைச் சித்திரித்துத்தான் அதை விவாதப் பொருளாக ஆக்கமுடியும். ஆண்களுக்கு இடையே நடக்கும் வன்முறையைக் காட்டிவிட்டு ஆணாதிக்கத்தைக் கைவிடு என்று சொல்வது அசட்டுத்தனமானது. நிற வெறியைப் பற்றிப் படம் எடுப்பதானால், கறுப்பர்களுக்கு வெள்ளையர்கள் செய்யும் தீங்கை காட்டித்தானே அதை விமர்சிக்க முடியும்.

***

தேவர் மகன் படத்தை உருப்படியாக எடுப்பதென்றால் இரண்டுவிதங்களில் எடுக்கமுடியும். ஒன்று, சாதிப் பிரச்னையை மையமாக வைத்து தைரியமாக, நேர்மையாக எடுக்கலாம். அல்லது பங்காளிச் சண்டையை உருப்படியாக எடுக்கலாம். இரண்டாவதை முதலில் பார்ப்போம்.

அண்ணன் பசங்களுக்கும் தம்பி பசங்களுக்கும் இடையிலான சண்டை என்றதும் பொதுவாக எல்லாருக்கும் மனதில் தோன்றக்கூடிய ஒரு விஷயம்: மகாபாரதம்.

ஆதி காவியங்களில் ஒன்றான அது நிமிர்ந்து பார்ப்பவர்களுக்கெல்லாம் தென்படும் வானம் போல் பிருமாண்டமாக பேரழகுடன் விரிந்துகிடக்கிறது. இந்தப் படம் வெளியான அதே வருடம்தான் சத்தியவான் சாவித்திரி கதையை மையமாக வைத்து ரோஜா படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். மலையாள இயக்குநர் லோகித தாஸ் தன் பல படங்களை இதுபோல் புராண, பாரம்பரிய கதைகளின் நவீன வடிவமாக இயக்கியிருக்கிறார். அது கலை அழகும் வணிக வெற்றியும் ஒரு சேர வாய்க்கப்பெற்ற ஃபார்முலா.

கமல் தன்னைப் பெரியாரியவாதியாக அடிக்கடி சொல்லிக்கொள்வதுண்டு. அது ஒருவேளை மகாபாரதத்தின் சாயலில் தன் படத்தை எடுப்பதில் இருந்து அவரைத் தடுத்திருக்கக்கூடும். அதை யாரும் தவறு என்று நிச்சயம் சொல்லவே முடியாது. ஆனால், பெரியாரிய சிந்தனைகளை அவர் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறாரா என்பது சந்தேகமே. கறுப்புச் சட்டை அணிந்தபடி பல படங்களில் தோன்றி இருக்கிறார் என்பது உண்மைதான் (அன்பே சிவத்தில் கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும்போதுகூட கறுப்புச் சட்டைதான்). ஆனால், பெரியாரிய சிந்தனைகளில் அவருக்கு அந்தக் கறுப்புச் சட்டையை அணிவது மட்டுமே பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதுவும் அவருடைய சிவந்த மேனிக்கு கறுப்புச் சட்டை எடுப்பாக இருக்கிறது என்பதால்தான் பெரியாரிய சிந்தனையே அவருக்குப் பிடித்திருக்கிறதோ என்னமோ? இல்லையென்றால், ஆதிக்க சாதியான தேவர் சாதியை மட்டுமே பெருமிதப்படுத்தி அவர் படங்கள் எடுப்பதை ஒருவர் எப்படித்தான் விளக்கமுடியும்?

படத்தின் ஒன்லைன் கதை அருமையான ஒன்றுதான். வன்முறையே கூடாது என்று சொல்லும் ஒருவனுக்கு கடைசியில் வன்முறையில் ஈடுபடவேண்டி வந்துவிடுகிறது. இதற்கான திரைக்கதைதான் படு பலவீனமாக இருக்கிறது. முதலாவதாக, வன்முறையைத் தவிர்க்க கதாநாயகன் செய்யும் செயல்கள் புத்திசாலித்தனமானவையாக இல்லை. காவல்துறையை துணைக்கு அழைக்கிறார். கலெக்டரை பயன்படுத்திக் கொள்கிறார். கல்யாணம் செய்துகொள்கிறார். எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடுகின்றன.

பெரிய தேவரின் மொடாக்குடியரான மூத்த மகனை கதாநாயகன் ஒரே நாளில் ஒரே உத்தரவின் பேரில் திருத்திவிடுகிறார். பெரிய தேவர் இறந்தபோது கொள்ளி வைக்கக்கூட முடியாத நிலையில் குடித்துவிட்டு கீழே விழுந்து கிடந்த அவருக்கு நாயகன் உத்தரவிட்டதால் சாராயம் கொடுக்கமாட்டேன் என்று காய்ச்சுபவர்கள் சபதம் செய்துவிடுகிறார்கள். வேறு வழியில்லாமல் அவர் திருந்த வேண்டியதாகிவிடுகிறது. இப்படியாக, மீட்பரின் இரண்டாம் வருகைக்காக உலகம் காத்திருப்பதுபோல் தேனி மாவட்டம் நாயகனின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்து, அவர் வந்ததும் திருந்த ஆரம்பித்துவிடுகிறது. அதுபோல், கடைசியில் வன்முறையை நோக்கி நாயகன் தள்ளப்படுவதும் இயல்பாக இல்லை. அணை உடைக்கப்பட்டு ஊர் மக்கள் கொல்லப்படுவதைக் கண்டு கலங்கி கிராமத்திலேயே தங்கிவிட முடிவெடுக்கும் நாயகன், தேர்த்திருவிழாவில் அதே ஊர் மக்கள் கொல்லப்பட்டதைக் கண்டதும் அருவாளை எடுத்துக்கொண்டு வேட்டியை மடித்துக்கொண்டு களமிறங்கிவிடுகிறார்.

எனது திரைக்கதையைப் பெருமளவுக்கு மகாபாரதத்தின் அடிப்படையிலேயே அமைப்பேன். தருமராக சக்திவேல் (கமல்). துரியோதனனாக மாயத் தேவன் (நாஸர்). பாண்டுவாக சின்ன அய்யா (சிவாஜி). திருதிராஷ்டிரனாக பெரிய அய்யா (காகா ராதா கிருஷ்ணன்). திரௌபதியாக பஞ்சவர்ணம் (ரேவதி). இதுதான் என் தேவர்மகன்.

கதாநாயகன் சக்திவேல் லண்டனில் இருந்து தன் கிராமத்துக்கு நண்பர்களை அழைத்து வருவான். அவர்களில் அவனுடைய காதலியும் இருப்பாள். எனது திரைக்கதை அப்படித்தான் ஆரம்பிக்கும்.

இப்போதைய படத்தில் காதலியை மட்டும் அழைத்து வருவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. அது தவறான காட்சி அமைப்பு. சக்திவேல் தன் அப்பா மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதாகவும் தூணுக்குப் பின்னால் இருந்து பவ்யமாகப் பேசுபவதாகவுமே காட்டியிருக்கிறார்கள். அது உண்மையென்றால் தான் காதலிக்கும் வேற்று மொழிப் பெண்ணை பழமையில் ஊறிய தந்தைக்கு முன்பாக அதுவும் திருமணத்துக்கு முன்பே தனியாக அழைத்துக் கொண்டுவர மாட்டான். என்னதான் அண்ணியிடம் கடிதத்தில் காதல் பற்றித் தெரிவித்திருந்தாலும் இப்படி முழங்கால் தெரிய, மாராப்பும் இல்லாமல் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டுவரமாட்டான். காதலியை மட்டும் அழைத்து வந்தால் அப்பா கோபித்துக்கொள்வார். நண்பர்கள் வேறு சிலரையும் அழைத்துக்கொண்டுவா. மெதுவாகப் பேசிப் பார்க்கலாம் என்றுதான் அண்ணியே கூடச் சொல்லியிருப்பார். மாடர்ன் டிரெஸ் அணிந்து வருவது, அதிலும் தொடை தெரிய உடை அணிந்தபடி ஊருக்குள் வலம் வருவது என்பதெல்லாம் பணிவான மகன் என்ற கதாபாத்திர வார்ப்புக்குப் பொருத்தமாக இல்லை. தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமென்றால் கமல் அதற்கு வேறு வழிகளை நாடியிருக்க வேண்டும்.

என் கதையில் சக்திவேல் லண்டனில் இருந்து வந்ததும் அவனுடைய அப்பா சின்ன ஐயா, நேராக அவனை ஜெயிலுக்கு அழைத்துச் செல்வார். அங்கு பெரிய ஐயாவின் மூத்த மகன் பரமன் ஒரு கொலை கேஸில் சிக்கி கம்பி எண்ணிக் கொண்டிருப்பான். சின்ன ஐயா தன் அண்ணனான பெரிய ஐயாவிடம் சக்திவேலைக் காட்டிப் பெருமிதமாகப் பேசுவார். பாரு எம் பையனை வெளிநாட்டுக்கு அனுப்பிப் பெரிய படிப்பு படிக்க வெச்சிருக்கேன். தேவனுக்கு அருவாள்தான் கை… வேல் கம்புதான் கால்ன்னு வெட்டிச் சவடால் விட்டு உன் புள்ளைகளை மிருகமா வளத்து வெச்சிருக்கியே. மூத்த பையன் ஜெயில்ல களி தின்னுட்டு இருக்கான். இளையவன் மாயத்தேவன் என்னிக்கு இங்க வரப்போறன்னு தெரியலை. பேரப் புள்ளைகளையாவது ஒழுங்கா வளக்கப்பாரு. இல்லைன்னா உன் வீட்டுக்காரங்களுக்கே தனி ஜெயில்தான் கட்ட வேண்டியிருக்கும் என்று அறிவுரை சொல்வார்.

அங்கு வரும் மாயத்தேவன், புள்ளையப் பெரிய படிப்பு படிக்க வெச்சிட்டோம்னு கர்வப்படாதீங்க. உம்ம புள்ளையையும் அருவாளை எடுக்க வெச்சு, இதே ஜெயில்ல கொண்டு வந்து அடைச்சுக் காட்டறேனா இல்லையா பாரு என்று சவால் விடுவான். நான் எம் புள்ளையை வெறும் மனுஷனா வளக்கலை… அந்த வானத்துல இருக்கற தேவர்களுக்கு சமமான தேவனா வளத்துருக்கேன். என் உடம்புல உசிரு இருக்கறவரை என் மகன் அருவாளைத் தூக்க மாட்டாண்டா என்று பதிலுக்கு சூளுரைப்பார்.

அப்படியாக என் திரைக்கதையில் கதாநாயகனை வன்முறையை நோக்கித் தள்ளுவதுதான் வில்லனின் லட்சியம் என்பதை முதலில் வலுவாக நிலைநிறுத்துவேன். பின்னால் நடக்கும் சம்பவங்கள் எல்லாமே அதில் நாயகன் எப்படி மீண்டுவருகிறான் என்பதை மையமாகக் கொண்டதாகவே இருக்கும்.

சக்திவேல் தன் அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம் விழாவை வெகு விமர்சையாகக் கொண்டாடத் தீர்மானிப்பான். ஊரில் உள்ள பெரிய மனிதர்களில் ஆரம்பித்து அரசாங்க உயரதிகாரிகள், பிரபலங்கள் என பலரும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருப்பார்கள். பெரிய அய்யாவும் அவருடைய மகன் மாயத் தேவனும் இதைப் பார்த்து ஆத்திரப்படுவார்கள். அந்த விழாவுக்கு வந்து விருந்து சாப்பிடுபவனுகெல்லாம் வாயாலயும் வயத்தாலயும் போக என்று பெரிய ஐயா சபிப்பார். அவருடைய சாபத்துக்கு ஏற்ப அந்த விருந்தில் பரிமாறப்படும் மட்டன் பிரியாணியைச் சாப்பிட்டு பலருக்கு வாந்தி பேதி வந்துவிடும். சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். சின்ன அய்யாவுக்குப் பெரிய அவமானமாகப் போய்விடும். இதெல்லாம் மாயத்தேவனின் சதி என்று எல்லாரும் சொல்வார்கள். சக்திவேலோ, அப்படியெல்லாம் இருக்காது. கறி சரியாக வெந்திருக்காது. அல்லது வேறு ஏதாவது கிருமித் தொற்று இருந்திருக்கும் என்று சொல்லி சண்டையைத் தவிர்த்துவிடுவான்.

ஊரில் இருக்கும் நாட்களில் நண்பர்களுடன் வாழைத்தோப்பில் ஓடியாடி விளையாடுவான். அதைப் பார்க்கும் மாயத்தேவனுக்கு கோபம் தலைக்கு ஏறும். மறுநாள் பச்சைப் பசேல் என்று இலை விரித்துக் குலை தள்ளி இருந்த அந்த வாழைத் தோப்பு வெட்டிச் சாய்க்கப்பட்டு கிடக்கும். இதுவும் மாயனின் வேலைதான் என்று சிலர் சொல்வார்கள். சின்ன அய்யாவுக்குக் கோபம் வந்து அருவாளை எடுத்துக்கொண்டு சண்டைக்குப் புறப்படுவார். ஆனால், ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்லக்கூடாது என்று சக்திவேல் அவரை சமாதானப்படுத்திவிடுவான். அதோடு வாழை மரம்தான் வெட்டப்பட்டிருக்கின்றன. வாழைக் குலைகள் சிதைக்கப்படவில்லை. நாம் குலையை வெட்டிவிட்டு மரத்தை வெட்டுவோம். இங்கு மரத்தை முதலில் வெட்டியிருக்கிறார்கள். நமக்கு ஒரு வேலை மிச்சம் என்று சொல்லி மாயத்தேவன் பார்வையில் படும்படி வாழைக்குலைகளை வண்டியில் ஏற்றி அனுப்புவான்.

காதலியுடன் ஆடுகளைப் பிடித்து பால் கறந்து விளையாடுவான். அடுத்த சில நாட்களில் சின்ன அய்யாவின் மந்தை ஆடுகள் எல்லாம் வயிறு வீங்கி நுரை தள்ளிச் செத்துக் கிடக்கும். மாயத்தேவனோ தனக்கும் இவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோலவே நடந்துகொள்வான். சக்திவேலுக்கு அழகான கார் ஒன்றைப் பரிசாகக் கொடுப்பான். சக்திவேல் அதை ஓட்டிச் செல்லும்போது எதிர்பாராதவிதமாக அது தீப்பிடித்து எரிய ஆரம்பித்துவிடும். ஒருவழியாக சக்திவேல் அதில் இருந்து தப்பித்துவிடுவான்.

இப்போதைய படத்தில் இரும்புக் கம்பி ஏற்றிய லாரிக்கும் வேறோரு லாரிக்கும் இடையில் சக்திவேல் ஓட்டிவரும் காரைச் சிக்க வைத்துக் கொல்லத் திட்டமிடுவதாகக் காட்டியிருப்பார்கள். அது மிகவும் அருமையான காட்சிதான். என்றாலும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களால் செய்யப்பட்ட கார் எரிவதாகவே என் திரைக்கதையில் இடம்பெறச் செய்வேன்.
தங்கள் குலப் பெருமை காலமெல்லாம் நிலைத்திருக்க வேண்டும் என்று ஊரில் ஒரு பெரிய பள்ளிக்கூடம் கட்ட சக்திவேல் தீர்மானிப்பான். மாயத் தேவன் அதற்குப் பலவகைகளில் தொந்தரவு கொடுப்பான். தனது நிலத்தில் கொஞ்சத்தை பள்ளிக்குக் கொடுத்துவிட்டு தன் பெயரையும் பள்ளிக்குச் சூட்ட வேண்டும் என்று பிரச்னையைக் கிளப்புவான். அது முடியாதென்று சக்திவேல் சொல்லிவிடவே, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று அடுத்த அஸ்திரத்தை ஏவுவான். அனைத்து சாதியினரும் வந்து படிக்கும் இடம் என்பதால் எந்த தனிப்பட்ட அடையாளமும் வேண்டாம். பொதுவான பள்ளியாக இருக்கட்டும் என்று சக்திவேல் தீர்மானித்திருப்பான். மாயத்தேவன் கிளப்பிய புதிய பிரச்னை பெரிதாகிவிடவே, பள்ளிக்கு ஊர் பெயரை மட்டும் சூட்டிவிட்டு பள்ளி வளாகங்களுக்கு காந்தி, நேதாஜி, முத்துராம லிங்கத் தேவர், அயோத்தி தாஸ பண்டிதர் என பல தலைவர்களின் பெயரைச் சூட்டி சக்திவேல் பிரச்னையைச் சமாளிப்பான்.

இப்படிப் பல சம்பவங்கள் நடக்கும் நிலையில் பக்கத்து ஊரில் ஒரு பெரிய திருவிழா நடக்கும். அதில் சிலம்பாட்டப் போட்டியும் இருக்கும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்குத் தன் பெண்ணையே பரிசாகக் கொடுக்கப்போவதாக ஒருவர் அறிவித்திருப்பார். போட்டி அறிவிப்பு முடிந்த பிறகுதான் சக்திவேல் தன் நண்பர்களுடன் அங்கு வந்து சேருவான். போட்டியில் அனைவரையும் வென்று வீழ்த்திய ஒருவன், என்னைத் தோக்கடிக்க மீசைமுளைச்ச ஆம்பளை யாருமே இல்லையா… என்று சவால் விடுவான். சக்திவேலுக்கு வீரம் பொத்துக்கொண்டுவரும். களத்தில் குதிப்பான். பரிசுப் பணமாக பொண்ணு தரப்போகிறார்கள் என்பதை பொன்னு தரப்போகிறார்கள் என்பதாக சக்திவேலும் நண்பர்களும் புரிந்துகொண்டுவிடுவார்கள். போட்டியில் சக்திவேல் ஜெயித்துவிடுவான்.

பரிசுப் பொருளாக ஒரு பெண்ணை அழைத்து வந்து தாலி கட்டும்படிச் சொல்வார்கள். சக்திவேலோ அதிர்ந்துபோய் இந்த விஷயம் தனக்குத் தெரியாது என்று சொல்லி மறுப்பான். ஆனால், தாலியை எடுத்துக் கொடுத்து உடனே கட்டச் சொல்வார்கள். அந்த சிக்கலைச் சமாளிக்க என் அப்பாவிடம் கேட்டுத்தான் எதுவும் செய்ய முடியும் என்று சக்திவேல் சொல்வான். அதன்படியே பெண்ணின் அப்பா பெண்ணை அழைத்துக்கொண்டு சின்ன ஐயாவின் வீட்டுக்கு வருவார். அங்கோ சின்ன ஐயா எதிர்பாராதவிதமாக நெஞ்சுவலி வந்து படுத்த படுக்கையாக இருப்பார். இந்தப் பொண்ணு இனிமே உனக்குத்தான் சொந்தம். நீ பொண்டாட்டியா வெச்சிப்பியோ வைப்பாட்டியா வெச்சிப்பியோ அது உன் இஷ்டம் என்று சொல்லிவிட்டு பொண்ணின் அப்பா போய்விடுவார். உண்மையில் சின்ன ஐயா குடும்பம் தன் பொண்ணை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான் அப்படிச் செய்துவிட்டுப் போவார்.

வேறு வழியில்லாமல் சக்திவேல் தன் அண்ணியிடம் விஷயத்தைச் சொல்லி அந்தப் பெண்ணுக்கு அடைக்கலம் தரும்படிச் சொல்வான். அப்பாவின் உடம்பு குணமான பிறகு அவர் மூலமாக அந்தப் பெண்ணை பெற்றவர்களிடம் அனுப்பிவிடலாம் என்று தீர்மானித்திருப்பான். நாலைந்து நாட்களில் சின்ன ஐயாவின் உடல் நிலை குணமாகும். விஷயத்தைக் கேள்விப்பட்ட அவர், என் மகனுக்கு உன் மீது விருப்பம் இல்லை. உனக்கு வேறோருவனைத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று அந்தப் பெண்ணிடம் சொல்வார். ஆனால், இத்தனை நாள் இன்னொருத்தர் வீட்டில் வாழ்ந்தவளை வேறு யாரும் இனிமேல் கல்யாணம் செய்துகொள்ளமாட்டார்கள் என்று சொல்லி அந்தப் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ளப் பார்ப்பாள். ஊரார் அவளைக் காப்பாற்றிவிடுவார்கள். அந்தப் பெண்ணும் அவளுடைய அப்பாவும் சின்ன ஐயாவின் காலில் விழுந்து கெஞ்சவே தன் மகனை திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பதாக வாக்குக் கொடுத்துவிடுவார். அப்பாவின் வாக்கை மீற முடியாமல் சக்திவேல் திருமணத்துக்கு சம்மதிப்பான். அப்படியாக அவனுக்கும் பஞ்சவர்ணத்துக்கும் அவன் காதலி முன்னிலையிலேயே திருமணம் நடக்கும்.

கன்னி கொண்டு வந்திருக்கிறேன் என்பதை கனி எனப் புரிந்துகொண்டு ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொன்னதாக மகாபாரதத்தில் இடம்பெற்றிருக்கிறது. உண்மையான காரணம் மகாபாரதக் கதைகளின் பழங்குடி வேர்களில் பொதிந்திருக்கக்கூடும். அல்லது வருணனைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். எது காரணமாக இருந்தாலும் வார்த்தைப் பிழையால் அது நடந்ததாகச் சொல்லப்பட்டிருப்பதையே என் கதையிலும் இடம்பெற வைப்பேன். ஒருவேளை, இன்றைய நவீன யுகத்தில் இப்படியான ஒன்று சாத்தியமில்லை என்று கதை விவாதத்தின்போது மறுதலிக்கப்படும் என்றால் வேறொரு திரைக்கதையும் எழுதுவேன்.

விளை நிலத்தில் பள்ளிக்கூடம் கட்டுவதாகச் சொல்லி மாயத்தேவன் தடை வாங்குவான். அது எடுபடாமல் போகும். அந்த நிலத்தில் ஒரு பகுதி மாயத்தேவனிடம் வேலை பார்க்கும் செல்லையா என்பவருக்குச் சொந்தமாக இருக்கும். அந்த நிலத்தைக் கடந்துதான் பள்ளிக்கூடம் கட்டப்படவிருக்கும் நிலத்துக்குப் போகமுடியும். அதோடு அந்த இடமும் கிடைத்தால்தான் பள்ளியை கட்டவே முடியும் என்ற நிலை இருக்கும். செல்லையாவை மிரட்டி அந்தப் பகுதியை தன் பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டுவிடும் மாயன் அதில் ஒரு வேலியைக் கட்டி எழுப்பிவிடுவான்.

வழக்கு நீதிமன்றத்துக்குப் போகும். செல்லையாவின் நிலத்தை அவருடைய அப்பா, பேத்தி பஞ்சவர்ணம் பெயருக்கு மாற்றி எழுதிக் கொடுத்துவிடுவார். எனவே, செல்லையாவிடம் இருந்து மாயத்தேவன் எழுதி வாங்கியது செல்லாது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பாகிவிடும். பஞ்சவர்ணம் அந்த நிலத்தை பள்ளிக்கூடம் கட்ட தைரியமாக எழுதிக் கொடுத்துவிடுவாள். இதனால் கோபப்படும் மாயத் தேவன் ஒருநாள் இரவில் பஞ்சவர்ணத்தைக் கடத்திக் கொண்டுசென்று பாலியல் பலாத்காரம் செய்துவிடுவான். மறுநாள் பஞ்சாயத்தில் யார் அந்தப் பாதகத்தைச் செய்தது என்று விசாரிப்பார்கள். இரவென்றதால் அடையாளம் தெரியவில்லை என்று பஞ்சவர்ணம் அழுதபடியே சொல்வாள். விரைவில் நல்ல வழி சொல்வதாக சின்ன ஐயா அவளை சமாதானப்படுத்தி அனுப்புவார்.

சக்திவேலை சம்பவம் நடந்த இடத்தில் அந்த நேரத்தில் பார்த்ததாக அப்போது தோப்புக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஒருவர் சின்ன அய்யாவிடம் தனியாக வந்து சொல்லுவார். சக்திவேலின் அறுந்த செருப்புகள் சம்பவ இடத்துக்கு அருகில் இருந்து கிடைத்ததாகக் கொண்டுவந்து காட்டுவார். சந்தர்ப்ப சாட்சியங்கள் சக்திவேலுக்கு எதிராக இருக்கவே விஷயத்தை வெளியில் தெரியாமல் சுமுகமாக்த் தீர்த்துவைக்க முடிவு செய்வார்.

இதனிடையில் பஞ்சவர்ணம் கிணற்றில் விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ள முயற்சி செய்வாள். ஊரார் காப்பாற்றிவிடுவார்கள். கெடுத்தவனைக் கண்டுபிடிச்சு கட்டிக் கொடுத்தா அதுக்குப் பிறகும் நான் நாண்டுக்கிட்டுத்தான் சாவேன். நல்லவனுக்கு வாக்கப்படத்தான் இந்த ஜென்மமே எடுத்திருக்கேன்.. என்னைக் கட்டிக்க இனி எந்த நல்லவனும் வரப்போறதில்லைன்னு ஆயிப்போச்சு. இனி நான் வாழறதுல அர்த்தமே இல்லை என்று பஞ்சவர்ணம் கதறி அழுவாள். கவலைப்படாத… நீ எந்தத் தப்பும் செய்யலை. உன்னை நான் மருமகளா ஏத்துக்கறேன். என் ரெண்டாவது மகன் நான் சொன்ன வாக்கை மீறமாட்டான் என்று சத்தியம் செய்து தருகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் சக்திவேல் கடைசியில் அப்பாவின் உத்தரவை மீற முடியாமல் பஞ்சவர்ணத்தைத் திருமணம் செய்துகொள்வான்.

இப்போதைய கதையில் பஞ்சவர்ணத்துக்கு திருமணம் நிச்சயம் ஆகிறது. மாயத் தேவனுக்கு பயந்து மாப்பிள்ளை திருமணத்தன்று கடிதம் எழுதிவைத்துவிட்டு ஓடிப் போய்விடுகிறான். ஊரில் இருக்கும் வேறு ஆளுக்குத் திருமணம் செய்து வைத்தால் அவனும் இப்படி கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடிப் போய்விடுவான் என்று பெண்ணின் அப்பா கலங்கி அழவே வேறு வழியில்லாமல் பஞ்சவர்ணத்தை சக்திவேல் திருமணம் செய்து கொள்வதாகக் காட்டப்பட்டிருக்கிறது. திருமணம் நின்று போவதென்பது எப்போதும் நடக்கும் விஷயம் இல்லைதான். என்றாலும் கதாநாயகன் தான் காதலித்த பெண்ணை விட்டுவிட்டு வேறொருவரைத் திருமணம் செய்து கொள்ள அது வலுவான காரணமாக இருக்க முடியாது. அந்த ஊரில் இருப்பவர்கள் வேண்டுமானால் மாயனுக்கு பயப்படுபவர்களாக இருக்கலாம்.வேறு ஊரில் ஆண்களே இல்லையா என்ன? அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தால் அவர்களும் கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடிவிடுவார்களா என்ன? எனவே, பஞ்சவர்ணத்தை சக்தி வேல் மணக்க வேண்டுமென்றால் அதற்கு நிச்சயம் டிரமாட்டிக்கான காட்சி அவசியம். எனவே, என் திரைக்கதையில் மேலே கூறிய இரண்டில் ஒன்றையே இடம்பெற வைப்பேன்.

சில மாதங்கள் கழித்து, மாயத்தேவன் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்வான். அந்த விருந்துக்கு சின்ன அய்யா, சக்தி வேல், அவனுடைய அண்ணன் என எல்லாரும் போயிருப்பார்கள். அங்கு நடக்கும் சீட்டாட்டத்தில் பங்கெடுக்கும்படி மாயத்தேவன் சக்திவேலைச் சீண்டுவான். வீடு வாசல், தோட்டம் துரவு எல்லாத்தையும் வெச்சு ஆடத் தயாராக இருப்பதாக மாயத்தேவன் சொல்வான். இல்லாவன் கிட்ட போய் இதைச் சொல்லு என்று சக்திவேல் மறுத்துவிடுவான்.

எப்படியும் சக்திவேலை வலையில் விழவைக்க வேண்டும் என்று நினைக்கும் மாயத்தேவன், போட்டில நான் தோத்துட்டா நீ என்ன சொன்னாலும் கேட்கறேன். சண்டை சச்சரவு வேண்டாம்னு சொல்றியா அதையும் கேட்கறேன் என்று சொல்வான். இது சக்திவேலை யோசிக்க வைக்கும். போட்டியில தோத்துட்டா வீட்ல இருக்கற அருவாள், வேல் கம்பு எல்லாத்தையும் கொண்டுவந்து என் காலடில போட்டுட்டு இனிமே எக்காலத்துலயும் வம்பு தும்புக்குப் போகமாட்டேன்னு ஊர்க்காரங்க முன்னால வாக்குக் கொடுக்கணும் என்று சக்திவேல் சொல்வான். மாயத்தேவனும் அதற்கு சம்மதிப்பான்.

ஆனா நான் ஜெயிச்சா நான் கேக்கறதை எல்லாம் தந்துடணும் என்று சொல்வான். தான் தோற்கமாட்டோம் என்ற தைரியத்தில், பெரியப்பா பையனை தீய வழியில் இருந்து காப்பாற்ற கிடைத்த ஒருவழி என்று நினைத்து சக்திவேல் ஆட்டத்துக்கு ஒப்புக்கொள்வான். ஆனால், வீடு வாசல், தோட்டம், வயல் என சக்திவேல் ஒவ்வொன்றாகத் தோற்க ஆரம்பிப்பான். விட்டதைப் பிடிக்கிறேன் என தொடர்ந்து விளையாடி குடும்பத்தினரையும் பணையம் வைத்து கடைசியில் தன்னையும் வைத்து ஆடித் தோற்றுவிடுவான்.

மாயத்தேவன் முதல் வேலையாக பஞ்சவர்ணத்தை சபை நடுவில் அழைத்துவந்து மானபங்கப்படுத்துவான். சக்திவேலும், சின்ன ஐயாவும் ஊர் பெரிய மனிதர்களும் எதுவும் செய்ய முடியாமல் தலைகுனிந்து நிற்பார்கள்.

பள்ளிக்கூடம் கட்டும் பணியில் சக்திவேலுக்குத் துணையாக அந்த கிராமத்தில் தங்கியிருக்கும் பழைய காதலி பானுவுக்கு இங்கு நடக்கும் விஷயங்கள் பெரும் கோபத்தை வரவைக்கும். நான் உடம்பு தெரிய டிரெஸ் போட்டதுனால உங்க மானமும் கலாசாரமும் போச்சுன்னு கத்தினீங்களே. இன்னிக்கு நீங்க என்ன செஞ்சு வெச்சிருக்கீங்க. பொண்ணை தாயா தெய்வமா மதிக்கறதா சொன்னீங்களே. இப்ப கேவலம் ஆடு மாடு மாதிரி அடுத்தவன் கிட்டப் பணயம் வெச்சுட்டு ஒருத்தன் ஆடியிருக்கான். எல்லாரும் வேடிக்கை பாத்துட்டு நிக்கறீங்களே.. சூதாட்டத்துல ஆடு மாடை வைச்சு ஆடலாம். வீடு வாசலை வெச்சு ஆடலாம். ரத்தமும் சதையுமான மனுஷியை எப்படி வெச்சு ஆடமுடியும். அவ என்ன உயிரில்லாத ஜடமா என்று சீறுவாள்.

என்ன சக்தி… உங்க அப்பா வாக்குக் கொடுத்திட்டாருன்னு என் வாழ்க்கையை நாசமாக்கின. இப்ப உன்னை நம்பி வந்த இந்தப் பொண்ணையும் நட்டாத்துல விடறியே… நீயெல்லாம் ஒரு மனுஷனா… இந்தத் தாலிதான பஞ்சவர்ணத்தை உனக்கு மனைவியா அடிமையா ஆக்கிவெச்சிருக்கு என்று ஆக்ரோஷமாக பஞ்சவர்ணத்தின் கழுத்தில் கிடக்கும் தாலியை அறுக்கப் போவாள். பஞ்சவர்ணமோ கதறியபடியே பானுவின் காலில் விழுவாள். என் புருஷன் என்னை வெச்சு சூதாடினதுல எந்த தப்பும் இல்லை. இந்த வாழ்க்கையே எனக்கு அவர் கொடுத்ததுதான். அவருக்கு இல்லாத உரிமை வேற யாருக்கும் கிடையாது. அவரைத் திட்டாதீங்க என்று அழுவாள். பானுவோ அதிர்ச்சியில் உறைந்துபோவாள்.

மாயத்தேவன் கைகளைத் தொடையில் தட்டியபடி பஞ்சவர்ணத்தின் புடவை முந்தானையில் கை வைத்து இழுக்கப் போவான். ஆத்திரமுறும் பானு அவனைத் தடுத்து நிறுத்தியபடி, அவ முந்தானையை அவுக்கறதுக்கு முன்னால என் முந்தானை அவு என்று குறுக்கே நிற்பாள். மாயத்தேவன், கரும்பு தின்னக் கூலி கொடுத்து போனஸும் கொடுத்தா விட்டுடுவேனா என்று சிரித்தபடியே அவளை நெருங்குவான். சட்டென்று இன்னொரு பெண், பானுவைத் தொடும் முன் என் முந்தானையை அவு என்று முன்வருவாள். மாயத்தேவன் மேலும் மகிழ்ந்து அவளை நெருங்கிப் போவான். வேறொரு பெண் என் முந்தானையை முதலில் அவு என்று முன்னால் வந்து நிற்பாள். இப்படியே மாயனை ஒவ்வொரு அடியாகப் பின்னால் போக வைத்தபடியே வரிசையாக ஊர்ப்பெண்கள் ஒவ்வொருவராக வந்து பஞ்ச வர்ணத்துக்குக் காவல் அரணாக நிற்பார்கள். பஞ்சவர்ணம் ஆயிரத்தெட்டு கைகள் கொண்ட துர்காதேவி போல் விஸ்வரூபம் எடுத்து நின்றுகொண்டிருப்பாள். கடைசியாக மாயத் தேவனின் அம்மா முன்னால் வந்து நின்று, அவ கிட்ட இருக்கறதுதாண்டா என் கிட்டயும் இருக்கு… வா வந்து அவுடா என்று முந்தானையை மாயனின் முகத்தில் வீசி எறிவாள். மாயத்தேவன் வெட்கித் தலை குனிந்து அம்மாவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பான்.

ஆனால், சின்ன ஐயா குடும்பத்தை அவர்களுடைய வீட்டில் இருந்து மூர்க்கத்தனமாக அடித்துத் துரத்திவிடுவான். நடுத்தெருவில் நிராதரவாக நிற்கும் சக்திவேல் குடும்பத்தினருக்கு அவர்களுடைய ஆட்கள் தங்கள் வீட்டை தருவதாகச் சொல்வார்கள்… சக்திவேலோ வேண்டாம் என்று சொல்லி மறுத்து ஊருக்கு வெளியே இருக்கும் பொட்டல் காட்டில் கூடாரம் அடித்து குடும்பத்தினருடன் தங்குவான். மாயத்தேவன் தன்னுடைய தோப்பில் அவர்களுக்கு கூலி வேலை செய்யும்படி தண்டனை கொடுப்பான். சின்ன ஐயாவையும் வேலை செய்யச் சொல்லி அவமானப்படுத்துவான். தன் குடும்பம் படும் துயரத்தைப் பார்க்க சகிக்காமல் சின்ன ஐயா நெஞ்சுவலி வந்து இறந்துவிடுவார். பூர்விக நிலத்தில் சிறு பகுதியை கெஞ்சிக் கேட்டு வாங்கி அதில் சின்ன ஐயாவை சக்திவேல் அடக்கம் செய்வான்.

மறுநாள் எழுந்து பார்க்கும்போது அந்த கல்லறை தோண்டிச் சிதைக்கப்பட்டு சின்ன ஐயாவின் உடலை நாய்கள் கடித்துத் தின்று கொண்டிருக்கும். இதைச் செய்தது மாயன்தான் என்று ஊரே திரண்டு போய் அவனை அடிக்கப் புறப்படும். மாயனின் ஆட்களும் அருவாள் வேல்கம்புடன் சண்டைக்கு இறங்குவார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் சக்திவேல், எங்களுக்காக ஊரார் சண்டை போடவேண்டாம் போய்விடுங்கள் என்று கெஞ்சுவான். தம்பி… இதுவரை நீங்க சொன்னதுக்காக பொறுத்துக்கிட்டு இருந்தோம். இனியும் அப்படி இருக்க முடியாது. சின்ன ஐயாவை உயிரோட இருக்கும்போதுதான் அவமானப்படுத்தினான்னு பார்த்தா செத்த பிறகும் இப்படி கேவலப்படுத்தியிருக்கான். அவரு உங்களுக்கு அப்பா மட்டும்தான். எங்களுக்கு அவரு தெய்வம் மாதிரி தம்பி… உங்களுக்கு சண்டை, ரத்தம் பிடிக்கலைன்னா ஒதுங்கிப் போயிருங்க என்று சீறுவார்கள்.

சண்டையே வேண்டாம்னு சொன்னவருக்காக சண்டை போடறது ரொம்பத் தப்பு… என்று அவர்களிடம் மன்றாடுவான். அப்படி நாங்க வெட்டிக்கிட்டுச் சாகக்கூடாதுன்னு நீ நினைச்சா, நீ போய் மாயனை வெட்டி அவன் தலையைக் கொண்டுட்டு வா என்று அவர்கள் சொல்வார்கள். ஊரார் ரத்தம் எங்க அப்பாவைப் புதைச்ச இந்த மண்ணுல விழ வேண்டாம். நானே சண்டைக்குப் போறேன் என்று சொல்லி அவர்களிடமிருந்து அருவாள் வேல் கம்பைப் பிடுங்கி கீழே போட்டுவிட்டு, அதில் இருந்து ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு மாயனுடன் மோதத் தயாராவான். அப்படி வாடா தேவன் மகனே… இதுக்குத்தாண்டா காத்திட்டுருந்தேன் என்று கொக்கரித்தபடியே மாயனும் களத்தில் குதிப்பான். பூமி நடு நடுங்க இரண்டு பேரும் சண்டையிடுவார்கள். கடைசியில் சக்திவேல் மாயனை வெட்டிச் சாய்ப்பான். சக்திவேல் ரத்தம் படிந்த தன் கையைப் பார்த்தபடியே கதறி அழுவான். சூரியனை மறைத்தபடி வானில் கழுகுக் கூட்டம் சூழத் தொடங்கும். புள்ள குட்டிகளைப் போய்ப் படிக்க வைய்யுங்க ஐயா என்று கதறி அழுதபடியே சக்திவேல் காவல் துறையிடம் சரணடைவான்.

தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற ஆதிக்கக் கோணத்தில் ஆரம்பித்து பிற்படுத்தப்பட்ட யாதவ சாதியைச் சேர்ந்த கிருஷ்ணர் ஆதிக்க சாதியான சத்திரியர்களுக்கு இடையில் தூண்டிவிட்ட போர்தான் அது என்ற கலகக் குரல் வரை அனைத்து வாசிப்புகளுக்கும் இடம் கொடுக்க்க்கூடிய ஒரு படைப்பு மகாபாரதம். இன்னும் சொல்லப்போனால் ஆணாதிக்க சக்திகளின் பேரழிவைக் கொண்டுவந்த பெண் என்ற பெண்ணிய நோக்கிலான வாசிப்புகூட அதில் சுற்றி வளைத்து சாத்தியமே. ஆனால், இதில் எந்த ஒன்றும் கமல்ஹாசனின் குருவி மூளைக்கு எட்டாமல் போய்விட்டது.

நான் மேலே சொல்லியிருக்கும் கதையைக்கூட இடையர் சாதியைச் சேர்ந்த ஒருவர் இரண்டு தேவர் பிரிவுகளுக்கு இடையே சண்டையை மூட்டிவிட்டு அழிப்பதாகக் காட்டலாம். விருந்தின்போது உணவில் நோய்வாய்பட்ட ஆட்டுக்கறியைக் கலத்தல், ஆடுகளை விஷம் வைத்துக் கொல்லுதல், வாழைத்தோப்பை நாசமாக்குதல், பஞ்சவர்ணத்தைக் கெடுத்தது சக்திவேல் என பொய் சொல்லியது என பெரிய அய்யாவுக்கும் சின்ன அய்யாவுக்கும் இடையிலான போட்டி பொறாமையை ஊதி ஊதிப் பெரிதாக்கி அவர்களை தமக்குள் அடித்துக் கொண்டு மடிய வைத்ததாகக் காட்டலாம். அல்லது ஆணாதிக்கவாதிகளை அழிக்க பஞ்சவர்ணம் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகமாகக்கூட இந்தக் கதையைக் கொண்டு செல்லலாம்.

(தொடரும்)

14 comments so far

  1. Chandramowleeswaran
    #1

    அம்மிகள் சாமிகள் ஆவதில்லை

    ரொம்ப சரி.. கட்டுரை எழுதினவருக்கு தன்னைப் பத்தி மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது..

    அம்மிகள் வழக்கொழிந்து போய்.. மிக்சி வந்துவிட்ட பின்பும், தமிழ் பேப்பர் இன்னமும் அம்மியில் அரைத்துக் கொண்டிருப்பது,, அவர்களுக்கு என்னமோ பஞ்சம் என்பது போலவே இருக்கிறது

  2. S.S Antony
    #2

    மன்னாதி மன்னனில் பத்மினியை நடனமாடி தோற்கடித்த எம்.ஜி.ஆர்,
    பாசமலர்ல சாப்பாடுக்கு வழி இல்லாத சிவாஜி கம்பெனி வாங்குறது,
    ஜெமினி கணேசனுக்கும் 2 மனைவிகள் சண்டை,
    காலேஜ் போற எம்.ஜி.ஆர்
    விஜயகாந்த் ஹெலிகாப்டரை கைத்துப்பாகிறால் வீழ்த்துறது,காஷ்மீர் தீவிரவாதிகளை எல்லாம் கால்பந்து ஆடுறது,
    பாட்ஷா ரஜினி அடிபம்பபை அப்படியே புடுங்குறது
    வில்லு விஜய் ஃபளைட ல இருந்து போட்டுக்கு குதிக்கிறது…

    இதை எல்லாம் எப்போசார் எழுதுவீங்க, சீக்கிரம் எழுதுங்க அய்யா,, ஏன் இவரையே சாடுரீங்க…2 பேருக்குள்ளே என்னமோ இருக்கு?….

    தமிழ்பேப்பர், அரவிந்த நீலகண்டன் இடத்தை இவருக்கு குடுத்துட்டீங்க. அவர் பூட்டு மட்டும் கொடுத்தார், இவர் சாவிதருகிறார்..என்னைக்கு பூட்ட போறீங்க…..

  3. Ram
    #3

    ஹிஹி.., போய் புள்ளக்குட்டிகள படிக்க வையிங்கடா…

  4. சரவணன்
    #4

    இதுக்கு மகாபாரதத்தையே எடுத்துடலாமே.

  5. arun
    #5

    ”உம்ம புள்ளையையும் அருவாளை எடுக்க வெச்சு, இதே ஜெயில்ல கொண்டு வந்து அடைச்சுக் காட்டறேனா இல்லையா பாரு என்று சவால் விடுவான்” – எந்த கெட்டவனாவது நல்லவன பழி வாங்குவானா இல்ல உன்னையும் கெட்டவனா மாத்துறனு சொன்னா எப்படி கெட்டவ அவனுக்கே குழி தோண்டுற மாதிரி இருக்குது…சுத்தமா லாஜிக் இல்லாம..

  6. ஜென்னி
    #6

    //தேவர் சாதிக்குள் பங்காளிச் சண்டைகள் உண்டு என்பது உண்மைதான். ஆனால், அது இப்படியான பரிமாணங்களில் ஒருபோதும் வெளிப்படாது. இரு குடும்பத்து சண்டை என்பது அந்தக் குடும்ப உறுப்பினர்களைத் தாக்குவது என்ற அளவில்தான் நடக்கும். அதிகபட்சம் அவர்களுக்கு உதவும் மிக நெருங்கிய நபர்களுக்கு பயமுறுத்தல் என்ற அளவுக்கு வேண்டுமானால் நடக்கலாம்.. இங்கோ இரண்டு சாதிகளுக்கு இடையிலான சண்டைபோல் குடிசைகளைக் கொளுத்துதல், அணையை உடைத்தல், தேருக்குத் தீ வைத்தல் என பொதுமக்களைக் குறிவைத்து பயங்கரமாக நடக்கிறது.//

    ஐயா மகாதேவரே,
    நீங்க சென்னையை விட்டு வேறு எங்கும் சென்றது இல்லை போலிருக்கு! தமிழக கிராமத்துக்குள் நுழைந்து பாருங்கள் தெரியும்… எத்தனையோ கோயில்கள் சாதி பிரச்னையால் பூட்டியே கிடக்கின்றன. எவ்வளவோ கிராம மக்கள் சாதிப் பிரச்னையால் வயல், வீடு, உயிர் இழந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்… ’அம்மி’ கமல் புரிந்துகொண்ட அளவு கூட ’சிலை’ மகாதேவர் (தேவர் கிடையாது… மரியாதை விளிப்பு) தமிழக கிராமங்களைப் புரிந்துகொள்ளவில்லை; தெரிந்துகொள்ளவில்லை. விமர்சனத்துக்கு முன்னால கொஞ்சம் இயல்பு வாழ்க்கையை ஸ்ட்டி பண்ணுங்க சார்!

  7. arun
    #7

    படம் எப்படி எடுக்க கூடாது என்பதற்கு சில படங்கள் உதாரணமாக (கண்டிப்பாக தேவர் மகன் அல்ல) இருப்பது போல், விமர்சனம் எப்படி எழுத கூடாது என்பதற்கு இவருடைய விமர்சனங்களை அளவுகோளாக வைக்கலாம். விமர்சகர் எப்போதுமே படத்தையும் அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே விமர்சிக்க வேண்டும். தேவையில்லாமல் கமலையும், அவரின் படத்தை பார்ப்பது ஆஸ்கர் குழுவிற்கு கசப்பாக இருக்கும் என சொல்வது totally untolerable. இவர் எப்போதுமே தன்னுடைய புத்திசாலிதனத்தை முன்னிறுத்தி கொள்கிறார்.

  8. Vijay SA
    #8

    //இவர் எப்போதுமே தன்னுடைய புத்திசாலிதனத்தை முன்னிறுத்தி கொள்கிறார்//
    இல்லாத ஒண்ணை எப்படி முன்னிறுத்த முடியும்?!?

  9. VIVEK KAYAMOZHI
    #9

    இதுவரை நீங்கள் எழுதியது பிரச்சனை இல்லை, ஏனென்றால் (ஹே ராம், அன்பே சிவம்) அவை எல்லாம் வெகு ஜனங்களால் ரசிக்கப்படாத படங்கள்.
    தேவர் மகனோ பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய படம்.பாரதி ராஜாவை விட தேவர் சமூகத்தை பற்றி ஆழமாக வெளிக்காட்டிய படம். சிவாஜி,இளையராஜா,பி.சி.ஸ்ரீ ராம்,நாசர்,ரேவதி என அனைவரின் பங்களிப்போடு கமலின் திரைக்கதை, வசனத்தில் நிஜ கிராம பங்காளி சண்டையை , யதார்த்தத்தை கண் முன் நிறுத்திய படம்.
    கிராம கலவரங்கள் அனைத்தும் தனிப்பட்ட இரண்டு நபர்களின் அல்லது குடும்பத்தின் கைவரிசையாகத்தான் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாதது ஆச்சர்யமே. அவர் சாதி கலவரத்தை , தலித்துகளை பற்றி சொல்லவில்லை என்பது உங்கள் நீலிக்கண்ணீர்.
    கமல் இங்கு எடுத்திருப்பது வேறு பிரச்சினை. அந்த சமூகத்தில் எளிதாக உணர்ச்சிவயப்பட்டு வன்முறையில் இறங்கும் பலரை ப்பற்றிய அக்கறையில்தான் இந்த படமும், ” ஏத்துக்கிட்டு ஜெயிலுக்கு போனதெல்லாம் போதுண்டா, போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்கடா ” போன்ற வசனங்களும்.
    நிதர்சனம் தெரியாமல் உங்கள் விளம்பர அரிப்புக்கு கமலை எடுத்து சொறிகிறீர்கள் . இது நாகரீகமும் அல்ல, நன்றாகவும் இல்ல. உண்மையிலே எரிச்சலாக இருக்கிறது. ரோட்டில் போவோர் வருவோரஎல்லாம் திட்டிக்கொண்டும் தூற்றிக்கொண்டுமிருக்கும் சட்டை கிழிந்த, அழுக்குபிடித்த பைத்தியத்தின் வசைமாரியை விட உங்கள் தொடர் நரகல் விமர்சன கட்டுரைகள் எவ்விதத்திலும் வித்தியாசமாக எனக்குப்படவில்லை.

  10. Sethu
    #10

    இதை பார்த்தால் ஒரு விமரசகன் எழுதுவதுபோல் தெரியவில்லை. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என தேடும் ஒரு கதாசிரியராக தோன்றுகிறது. பாவம்…!

  11. Vijay Sa
    #11

    மகாதேவரே, பொதுவெளிக்கு வரவில்லையென்றால் கூட ஓகே, ஆனால் நான் போட்ட கமென்ட்டுகள் இங்கே வருகிரவர்களின் பார்வைக்கு வைக்கக்கூட உமக்கு தைரியம் இல்லையென, என் கமென்டுகளை அழித்ததன் மூலம் நிரூபித்துவிட்டீர்கள். முதலிலேயே தெரியும், நான் ஒரு கோழையுடன் தான் பேசிக்கொண்டிருக்கிறேன் என! இப்போது ஊர்ஜிதமாகிவிட்டது!!

  12. Prasanna
    #12

    I think Mahadevan is craving for publicity and we knowingly or unknowingly by means of our comments give him undeserved importance. If he thinks he is so genius to review such an enormous movie like Devar Magan, I pity him.

  13. PANDIYAN
    #13

    தேவர் மகன் என தன்னை சோல்லிக்கொள்ளும் கமலய்யர் எப்போதுமே முற்போக்காளர் என்ற முகமூடியணிந்து பிறகு மெல்ல தனது பிராமனீய சில்பா வேலையை குற்ற பரம்பரையினருக்கு கொடி பிடிக்கும் வேலையை சரியாகவே இதுவரை செய்கிறார்.

  14. sabari
    #14

    விமர்சனத்துக்கு முன்னால கொஞ்சம் இயல்பு வாழ்க்கையை ஸ்ட்டி பண்ணுங்க சார்!

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: