காஷ்மிர் டைரி – 2
ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது இளஞ்சூடும் இளங்குளிரும் பரவிக்கொண்டிருந்தது. அங்கேயே வண்டி அமர்த்திக்கொண்டு புறப்பட்டோம். உள்நுழையும் வாகனங்களும் வெளியேறும் வாகனங்களும் பல அடுக்கு சோதனைச் சாவடிகளைக் கடக்கவேண்டியிருந்தது. எங்களுடன் வந்திறங்கியவர்களைத் தவிர வேறு ஆள்கள் யாரையும் விமான நிலையத்தில் காணமுடியவில்லை. ஒன்றிரண்டு டாக்ஸிவாலாக்கள் அமைதியாக அமர்ந்துகொண்டிருந்தனர். புகைப்படம் எடுக்கவேண்டாம் என்று ஆயுதம் தரித்த பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதால், ஒன்றிரண்டு படங்களை மட்டுமே எடுத்து திருப்திபட்டுக்கொண்டேன்.
மக்கள் புழங்கும் இடத்தை அடைவதற்கு சில நிமிடங்கள் பிடிக்கின்றன. ஓரடி கடப்பதற்குள் குறைந்தது நான்கு ஏகே 47 ஜவான்களைச் சாலையின் இரு பக்கங்களிலும் காணமுடிந்தது. உருது மொழிப் பலகைகள் கொண்ட சிறு கடைகள் அடுத்தடுத்து விரிகின்றன. இரானியப் படங்களில் வருவதைப் போன்ற நீண்ட அங்கி அணிந்த ஆண்கள் சைக்கிளில் விரைந்துகொண்டிருந்தனர். மீண்டும் இரானியப் படங்களில் வருவதைப் போல் அழகாக வெள்ளை முக்காடு அணிந்த காஷ்மிர் மாணவிகள் எறும்பு வரிசையாக நடந்து சென்றனர். அவர்கள் கடந்து செல்லும்வரை எங்கள் வண்டி நிறுத்திவைக்கப்பட்டது.
நகருக்குள் நுழைய நுழைய, ஜவான்களின் அடர்த்தி சற்றே குறையத் தொடங்கியது என்றாலும், திரும்பும் பக்கமெல்லாம் ஏகே 47 முன்வந்து நின்று பயமுறுத்தியது. இவர்களைக் கடந்துசென்றே காஷ்மிரிகள் காலை தேநீர் அருந்தவேண்டும். பள்ளிக்கும் பள்ளிவாசலுக்கும் செல்லவேண்டும். காய்கறிகள் வாங்கவேண்டும். வேலைக்குப் போகவேண்டும்.
Waugh in Abyssinia என்னும் புத்தகத்தில் Evelyn Waugh, இப்படிப்பட்ட ஒரு காட்சியை வருணித்திருப்பார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் முசோலினியின் இத்தாலியப் படைகள் அபிசீனியாவை ஆக்கிரமித்திருக்கும். ஆனால், அதை ஆக்கிரமிப்பு என்று நேரடியாகப் பளிச்சென்று சொல்ல எவிலின் வாஹ் தயங்குவார். ராணுவ வீரர்கள் அபிசீனியர்களைப் பாதுகாப்பதற்காகப் பணியில் அமர்த்தப்பட்டிருப்பார்கள் என்பார். அவர்கள் அபிசீனியர்களுடன் ஒன்றுகலந்து கொஞ்சிக் குலாவி பழகுவார்கள் என்றும், அபிசீனியக் குழந்தைகள் இத்தாலிய வீரர்களுக்கு பூக்கள் பரிசளிப்பார்கள் என்றும் பதிலுக்கு வீரர்கள் குழந்தைகளுக்கு இனிப்பு மிட்டாய்கள் வழங்குவார்கள் என்றும் உணர்ச்சிபூர்வமாக எழுதியிருப்பார். நமக்கே சந்தேகம் வந்துவிடும், இத்தாலியர்கள் அபிசீனியர்களை ஒழிக்கவந்தவர்களா அல்லது உய்விக்க அனுப்பப்பட்டவர்களா என்று.
சுமார் இருபது நிமிட பயணத்துக்குப் பிறகு, ஹோட்டலை அடைந்தோம். முன்னரே இணையம் வாயிலாக தங்குமிடம் (Srinagar Embassy Hotel) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் இருந்து வருகிறோம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, சாவி வாங்கி அறைக்குள் நுழைந்தபோது, திருவல்லிக்கேணி பேச்சிலர் ரூமுக்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது. போதாக்குறைக்கு, நாற்காலி, கட்டில், பூட்டு, டவல் என்று எதை தொட்டாலும் ஐஸ் குளிர். பாத்ரூமில் ஹாட் வாட்டர் ஹாத்தா நஹி என்று நியூஸ் வாசித்துவிட்டுப் போனார் ஹோட்டல் பணியாளர் ஒருவர். மற்ற நண்பர்கள் மதியத்துக்கு மேல் வரவிருந்தார்கள். பைகளை அங்கேயே போட்டுவிட்டு, இரண்டடுக்கு ஸ்வெட்டர், ஜெர்கின் அணிந்துகொண்டு ஊர் சுற்றக் கிளம்பிவிட்டோம்.
புவிப்பரப்பு, குளிர், மக்கள், கட்டடங்கள், உணவு, சாலைகள், கடைகள் என்று காஷ்மிரின் எந்தவொரு அம்சமும் இந்தியாவை நினைவுபடுத்தவில்லை. ஒரு புதிய நாட்டில் நடைபோடும் உணர்வே ஏற்பட்டது.
காஷ்மிர் மிகத் தாமதமாகவே உறக்கம் கலைந்து விழித்துக்கொள்கிறது. ஒரு சிறிய உணவகத்துக்குள் நுழைந்தோம். மேகி, சப்பாத்தி, உப்புமா மூன்றும் கிடைப்பதாகச் சொன்னார் பணியாளர். உப்புமா ஆர்டர் செய்து கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் காத்திருந்தோம். அந்த உணவகத்தில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். மிக மிக சாவகாசமாக அவர் நடந்து வந்து, தண்ணீர் கொடுத்துவிட்டு, உள்ளே சென்று அடுப்பு மூட்டி, பிறகு வெளியில் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு, ஏதோ ஒரு வகை பாக்கை வாயில் கொட்டி, அசைபோட்டு, இடுக்கில் மாட்டிய விஷயங்களை ஒவ்வொன்றாகக் குத்தி எடுத்து, பிறகு உள்ளே சென்று உப்புமாவை ஒரு கிண்ணத்தில் கவிழ்த்து கொண்டு வந்து கொடுத்தார். அவரே பில் எழுதிக்கொடுத்தார். அவரே பணம் வாங்கிக்கொண்டார். வாசல் வரை வந்து வழியனுப்பினார்.
டால் ஏரியின் கரையில் வரிசையாக ஷிகாரா எனப்படும் படகு வீடுகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு படகு வீட்டுக்குள் எட்டிப் பார்த்தோம். நடுத்தர வயது கொண்ட ஒருவர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தப் படகு வீட்டைப் பராமரித்து, விருந்தினர்களை ஈர்த்து, வரவேற்று தங்கவைப்பது அவர் பணி. பெயர், உமர். ‘சென்னைக்கு ஒரு முறை வந்திருக்கிறேன். கடும் சூடு!’ என்றார். ஒரு பிளாஸ்க் நிறைய தேநீரும் (‘காஷ்மிர் சிறப்பு தேநீர், இடைவெளியின்றி அருந்திகொண்டே இருக்கலாம்’) இரு கோப்பைகளும் கொண்டு வந்து வைத்தார். வீட்டின் முகப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
‘சமீபமாக இங்கே எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றாலும், எப்போதும் எதுவும் நடக்கலாம் என்னும் நிலையே நீடிக்கிறது. நாங்கள் அமைதியையே விரும்புகிறோம். அமைதியான இடத்தில்தான் வியாபாரம் செய்யமுடியும். குழந்தைகளைப் படிக்கவைக்கமுடியும். திருமணம் செய்துவைத்து வாழவைக்கமுடியும்.’
உமரின் ஷிகாரா ஒப்பீட்டளவில் சிறியது. இரு படுக்கையறைகளும் ஒரு வரவேற்பறையும் ஒரு சமையலறையும் கொண்ட நடுத்தர வர்க்கத்துப் பயணிகளுக்கான இருப்பிடம். ஒரு நாளுக்கு ஒருவருக்கு 500 ரூபாய். உயர்ரக வசதிகள் கொண்ட சொகுசு ஷிகாரா என்றால் சில ஆயிரங்கள் வரை பிடிக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர், மின்சார இணைப்பு உள்ளது. கேரளாவில் உள்ள படகு வீடுகளைப் போல் காஷ்மிர் ஷிகாராக்கள் பயணம் செய்வதில்லை. ஏரியின் கரைகளில் நடப்பட்டுள்ள ஆடாத, அசையாத வீடுகள் இவை.
நாங்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போதே சிறு படகுகள் அசைந்து அசைந்து எங்களிடம் வந்து சேர்ந்தன. ஓரிரு வியாபாரிகளைக் கொண்ட சிறிய அசையும் கடைகள் அவை. ஷிகாராவில் தங்கியிருப்பவர்களிடம் வியாபாரம் செய்வதே இவர்கள் நோக்கம். எங்களை நெருங்கியவர்கள் சல்வார், கம்பளி ஆடைகளை விற்பனை செய்பவர்கள். டால் ஏரி முழுக்க இப்படிப்பட்ட பல வியாபாரிகளைக் காணமுடியும். கைவினைப் பொருள்கள், குங்குமப்பூ, பெப்சி, ஸ்வெட்டர் என்று பலவற்றை இவர்கள் படகுகளில் கொண்டுவருகிறார்கள். நீங்கள் கடைகளைத் தேடிச் செல்லவேண்டியதில்லை. கடைகள் தாமாகவே உங்களைத் தேடிவரும்.
உமரின் குடும்பத்தினர் படகு வீட்டுக்குப் பின்புறத்தில் குடியிருந்தனர். வீட்டுக்கு அழைத்துச்சென்று காட்டினார். தகர மேற்கூரையுடன்கூடிய சிறிய கூடாரம் அது. சமைக்க, உறங்க என்று இரண்டு சிறு அறைகள் இருந்தன. கரைக்கு அருகில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்துகொண்டிருந்தார் உமரின் மனைவி. படகு வீட்டில் தங்கும் விருந்தினர்களுக்குச் சமையல் செய்யும் பொறுப்பு இவருடையது. பிற பணியாளர்களைத் தேவைக்கு ஏற்ப அமர்த்திக்கொள்கிறார்கள். படகு வீட்டின் உரிமையாளர் காஷ்மிரில் வேறொரு பகுதியில் தங்கியிருந்தார்.
‘சுற்றுலாவை நம்பித்தான் காஷ்மிர் இயங்குகிறது. கைவினைப் பொருள்கள், துணி, மணிகள், மரவேலைப்பாடுகள் என்று இங்கு நாங்கள் மேற்கொள்ளும் தொழில்கள் அனைத்தும் காஷ்மிரிகள் அல்லாதவர்களுக்காகத்தான்.’
‘ஜவான்கள்மீது எனக்கு அதிக மரியாதை இருந்ததில்லை. இவர்கள் நடத்தும் ஆபரேஷன்கள் அச்சமூட்டக்கூடியவை. விசாரணை எதுவுமின்றி தண்டனை கொடுத்துவிடுவார்கள். இவர்கள் சுட்டுக்கொல்பவர்களில் எத்தனைப் பேர் உண்மையில் தீவிரவாதிகள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.’
(தொடரும்)












June 12th, 2012 at 12:52 pm
//ஜவான்கள்மீது எனக்கு அதிக மரியாதை இருந்ததில்லை. இவர்கள் நடத்தும் ஆபரேஷன்கள் அச்சமூட்டக்கூடியவை. விசாரணை எதுவுமின்றி தண்டனை கொடுத்துவிடுவார்கள். இவர்கள் சுட்டுக்கொல்பவர்களில் எத்தனைப் பேர் உண்மையில் தீவிரவாதிகள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.’// Is it your comment? or Umar’s?
June 12th, 2012 at 12:59 pm
ஜெயக்குமார், அது அவருடைய கருத்துதான்.
June 12th, 2012 at 1:33 pm
//புவிப்பரப்பு, குளிர், மக்கள், கட்டடங்கள், உணவு, சாலைகள், கடைகள் என்று காஷ்மிரின் எந்தவொரு அம்சமும் இந்தியாவை நினைவுபடுத்தவில்லை. ஒரு புதிய நாட்டில் நடைபோடும் உணர்வே ஏற்பட்டது.//
இதனை கஷ்மீரில் மட்டுமல்ல. ஹைதராபாத், லட்சத்தீவுகள், வடகிழக்கு மாகாணங்கள் போன்ற இடங்களில் கூட காணலாம்.
June 12th, 2012 at 3:41 pm
//புவிப்பரப்பு, குளிர், மக்கள், கட்டடங்கள், உணவு, சாலைகள், கடைகள் என்று காஷ்மிரின் எந்தவொரு அம்சமும் இந்தியாவை நினைவுபடுத்தவில்லை. ஒரு புதிய நாட்டில் நடைபோடும் உணர்வே ஏற்பட்டது.// Communist Cat is out of the bag!!
June 12th, 2012 at 5:07 pm
//இதனை கஷ்மீரில் மட்டுமல்ல. ஹைதராபாத், லட்சத்தீவுகள், வடகிழக்கு மாகாணங்கள் போன்ற இடங்களில் கூட காணலாம்.//
டெக்கான் முஜாகிதீனும் இதைத்தான் சொல்கிறது…. ஹைதராபாத் தானே உங்கள் அடுத்த இலக்
June 12th, 2012 at 5:08 pm
இதனை கஷ்மீரில் மட்டுமல்ல. ஹைதராபாத், லட்சத்தீவுகள், வடகிழக்கு மாகாணங்கள் போன்ற இடங்களில் கூட காணலாம்.//
டெக்கான் முஜாகிதீனும் இதைத்தான் சொல்கிறது…. ஹைதராபாத் தானே உங்கள் அடுத்த இலக்கு தீன்?
June 12th, 2012 at 7:25 pm
@சான்றோன்: ஆமாம் இப்படி இலக்கு வைத்து இலக்கு வைத்து நான் எத்தனை ஊர்களை வாங்கிவிட்டேன். அடுத்து ஹைதராபாத்தை இலக்கில் வைக்க. நான் மட்டுமல்ல. ஹைதராபாத் போய் வந்த சிறு குழந்தை கூடச் சொல்லும் இந்த ஊர் நம்மூரைப் போல் இல்லை என.
June 13th, 2012 at 11:35 am
இந்தியாவில் எந்தப் பகுதியும் இன்னொரு பகுதியைப் போல் இருப்பதில்லை மருதன். நிலப்பரப்பு, பருவநிலை, கலாசாரம், மனிதர்கள்… நீங்கள் எந்த வெளிநாட்டுக்கும் இதுவரை சென்றதில்லை என்று நினைக்கிறேன்.
June 13th, 2012 at 12:54 pm
எவ்வளவு அற்புதமான ஊர் ஹைதிராபாத்! ஜமில் கான்,அசரத், ஹுசைன், எத்துணை அருமையான நண்பர்கள்.அவர்கள் வீட்டிற்குப் பொயிருக்கிறேன்.உணவு அருந்தியிருக்கிறேன்..அவர்கள் நமாஸ் சொல்லும்போது அருகில் இருந்திருக்கிறேன்.செகந்திராபாத் ரயில்நிலையம் அருகிலுள்ள கோவிலுக்கு என்னுடன் வருவார்கள்.நான் சென்று வரும் வரை வேளியில்காத்திருப்பார்கள்.நல்லிணக்கம் என்பதை,மரியாதை என்பதை,பெருந்தன்மை என்பதெனக்குக் கற்றுத்தந்த நகரமது(1956-62). தீன் அவர்களே நீங்கள் சொல்வது அநியாயம்!—காஸ்யபன்.
June 14th, 2012 at 12:41 am
‘ஜவான்கள்மீது எனக்கு அதிக மரியாதை இருந்ததில்லை. இவர்கள் நடத்தும் ஆபரேஷன்கள் அச்சமூட்டக்கூடியவை. விசாரணை எதுவுமின்றி தண்டனை கொடுத்துவிடுவார்கள். இவர்கள் சுட்டுக்கொல்பவர்களில் எத்தனைப் பேர் உண்மையில் தீவிரவாதிகள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.’True..the same Indian Jawans destroyed Srilankan Tamils…..
June 14th, 2012 at 2:39 am
கராச்சி, லாகூர், கொழும்பு போன்ற இடங்கள் இந்தியா போல இருக்குதே மருதன்!! அவை ஏன் வேறு நாடாக இருக்கின்றன?
June 14th, 2012 at 10:50 am
எது ஒன்றும் இன்னொன்று மாதிரி இருக்காது. இருக்கவும் முடியாது. தமிழ் நாட்டிலேயே எவ்வளவோ பின்தங்கிய கிராமங்கள் இருக்கின்றன. அங்கிருந்து வருபவர்களுக்குச் சென்னையே அச்சமூட்டக்கூடியதாக இருக்கிறது. நீங்கள் காஷ்மிர், பெங்களூரு, டெல்லி என்று செல்வதோடு, கொஞ்சம் கிராமங்களுக்கும் செல்லுங்கள். அங்குதான் பிரதான இந்தியாவைப் பார்க்க முடியும். தமிழ் நாட்டுக்கு கிராமத்துக்கும் கேரள கிராமத்துக்கும் கர்நாடக, ஆந்திர கிராமங்களுக்கு வித்தியாசம் நிறைய இருக்கும். அவர்கள் உணவு, வாழ்க்கை முறை எல்லாம் வேறுபட்டிருக்கும். ராகுல்ஜியை வைத்து ஆரம்பித்ததால் சொல்கிறேன், நீங்கள் இன்னும் எளிய மக்களைச் சந்திக்கவேண்டும். அவர்கள் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும்…
June 22nd, 2012 at 5:47 pm
கஷ்மீரில் (இது cash meer / kaash meer இல்லை) பணியில் இருக்கும் பாரத ராணுவம் மற்றும் துணை ராணுவம் மற்றும் ஹிந்துஸ்தானத்தின் அன்ய மாகாணங்களிலிருந்து அங்கே பணிபுரியும் சிவிலியன்களை (கஷ்மீரி ஹிந்துக்கள் மற்றும் முஸல்மான்கள் உள்ளடக்கம்) அவமானப்படுத்தும் கட்டுரையாக இது உள்ளது எனில் மிகையாகாது. கஷ்மீரிகள் இந்தியர்களே இல்லை என கட்டுரை ப்ரகடனம் செய்கிறதே!!!!!!!!!!
\\\\ புகைப்படம் எடுக்கவேண்டாம் என்று ஆயுதம் தரித்த பாதுகாப்பு அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டதால், ஒன்றிரண்டு படங்களை மட்டுமே எடுத்து திருப்திபட்டுக்கொண்டேன்.\\\\
கடைந்தெடுத்த அக்ரமம். ஆயுதபாணி பாதுகாப்பு அதிகாரகள் கேட்டுக்கொண்ட பின்னும் இக்காரியம் செய்வது தகாத செயல். பாதுகாப்பு அதிகாரிகள் செய்வது அரசாங்கப்பணி அவர்கள் கட்டளையை மீறுவது தண்டனைக்குகந்த குற்றம். இதன் வீரியத்தை கஷ்மீரில் பணிபுரிபவர் நிதர்சனமாக அறிவர். ஷிகாராவை சுத்திப்பார்த்து நாலைந்து நாட்களில் சென்னைக்கு வந்து இட்லி சாம்பார் சாப்பிடுபவர்களுக்கு பாதுகாப்பின் வீரியம் பற்றி என்ன புரி்யும். கட்டளையை மீறி புகைப்படம் எடுத்த thrill பறைசாற்றப்படுகிறது????
\\நகருக்குள் நுழைய நுழைய, ஜவான்களின் அடர்த்தி சற்றே குறையத் தொடங்கியது என்றாலும், திரும்பும் பக்கமெல்லாம் ஏகே 47 முன்வந்து நின்று பயமுறுத்தியது\\
அங்கே பணிபுரியும் சிவிலியன்கள், ஜம்மு, டோடா, பத்ர்வாஹ்விலிருந்து கஷ்மீருக்கு பணி நிமித்தம் வருபவர்கள், லே கர்கில் ப்ரதேசங்களிலிருந்து வருபவர்கள் மற்றும் கஷ்மீரில் இருக்கும் தீவிரவாதியில்லாத சாதாரண கஷ்மீரிகளுக்கும் இந்த காட்சிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒன்றாகத் தான் இருக்குமேயலாது பயமுறுத்துவதாக இருக்காது. ஏன் சென்னையிலிருந்து வரும் சாதாரண குடிமகன்களுக்கும் அப்படியே. கஷ்மீர் பிரிய வேண்டும் என நினைப்பவர்களுக்குத் தான் இக்காட்சிகள் பயமுறுத்தும்.
\\\இத்தாலியர்கள் அபிசீனியர்களை ஒழிக்கவந்தவர்களா அல்லது உய்விக்க அனுப்பப்பட்டவர்களா என்று.\\\
கட்டுரை என்ன சொல்ல வருகிறது? கஷ்மீரில் பணிபுரியும் பாரத ராணுவத்தினரை மறைமுகமாக ஆக்ரமிப்பு ராணுவம் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறது????
\\டால் ஏரியின் \\
கலைஞர் கருணாநிதி தன் செல்வக் குழந்தைகளுக்கு அழகிரி, கனிமொழி என நாவினிக்க இனிக்க பெயர் சூட்டியிருக்க வடக்கத்தி தொலைக்காட்சி செய்தியாளர்கள் செய்தி வாசிக்கையில் அஜகிரி, கனிமொஜி என படிக்கையில் முதுகுத் தண்டில் கம்பளிப்பூச்சி ஊறுவது போலிருக்கும்.
இத்தனைக்கும் அகர், மகர் போன்ற உருது சொற்களை ஸ்பஷ்டமாக அகழ், மகழ் என்று தான் உச்சரிப்பார்கள். தமிழ்நாடு, அழகிரி, கனிமொழி என்றெல்லாம் வரும்போது தான் சங்கடம்.
டல் ஜீல் என நூறு முறையாவது சுற்றுலாக்காரர்கள் கேட்டிருக்க வேண்டும். கஷ்மீர், டல் ஜீல், ஆதா நஹி (ஹாத்தா நஹி). நாம் பாரதத்தின் பிற மொழிச் சொற்களை மனதுகந்து சிதைத்த பின்னர் பிற மாகாணத்து சோதர பாரதீயர் நம்மொழிச் சொற்களை சிதைப்பது பற்றி எண்ணுவது கூட மடமையே.
\\\\\ஜவான்கள்மீது எனக்கு அதிக மரியாதை இருந்ததில்லை. இவர்கள் நடத்தும் ஆபரேஷன்கள் அச்சமூட்டக்கூடியவை. விசாரணை எதுவுமின்றி தண்டனை கொடுத்துவிடுவார்கள். இவர்கள் சுட்டுக்கொல்பவர்களில் எத்தனைப் பேர் உண்மையில் தீவிரவாதிகள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்\\\\
ஆமாம். அப்படியானால் உள்ளூர் கஷ்மீரிகள் அவ்வப்போது நிகழ்த்தும் கல்லெறி வைபவங்கள் மனதிற்கு நெகிழ்ச்சியளிக்கக் கூடியவை போலும். தீவிர வாதிகள் அவ்வப்போது நிகழ்த்தும் குண்டுவெடி வைபவங்கள் மனதிற்கு நெகிழ்ச்சி அளிப்பவையோ???அதெல்லாம் விசாரணை செய்து நிகழ்த்தப்படும் வைபவங்கள் !)(???
//புவிப்பரப்பு, குளிர், மக்கள், கட்டடங்கள், உணவு, சாலைகள், கடைகள் என்று காஷ்மிரின் எந்தவொரு அம்சமும் இந்தியாவை நினைவுபடுத்தவில்லை. ஒரு புதிய நாட்டில் நடைபோடும் உணர்வே ஏற்பட்டது.//
இந்தியா என்று இடது சாரிகள் நினைப்பது எது பீகிங்கா, ஸ்டாலின்க்ராடா அல்லது லெனின் க்ராடா. இந்த மாதிரியெல்லாம் மனப்ராந்தி இருந்தால் இவர்கள் மேல் விஷாரம் போய் வந்தால் அது கூட இந்தியா இல்லை என்று சொல்லலாம். முஸல்மான்களும் இந்தியர்கள் தான் என்பது சாதாரண இந்தியரின் நிலைமை. இடதுசாரிகளுக்கு அது அவ்வாறு இல்லை போலும்.
பூனை கண்ணை மூடிக்கொண்டு பூவுலகமே இருண்டு விட்டது என்றதாம். அது போலத்தான் இது.
பக்கத்திலே ஹிமாசல் ப்ரதேஷ் போயிருந்தால் புவிப்பரப்பு, கட்டடங்கள் அது போலத்தான் என்று தெரிந்திருக்கும்.
வடக்கு முழுதும் குளிர் ஒரு போலத்தான். கஷ்மீரக்குளிர் ஹிமாசலக்குளிரிலிருந்து பெரிதாக வேறில்லை.
மக்கள் – கஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து ஹிந்துக்கள் விரட்டப்பட்டு விட்டார்கள் தான். அங்கு இருக்கும் முஸல்மான்களை ஹிந்துஸ்தானியராகத் தான் எல்லோரும் எண்ணுகிறார்கள். இடதுசாரிகளுக்கு மட்டும் ஏன் அவர்கள் அன்னியராகத் தெரிகிறார்கள்.
உணவு – ஹா ஹா ஹா, தமிழன் (எல்லா தென்னிந்தியர்), பங்காலி, ஒடியா, அஸாமியா போன்று கஷ்மரிகளும் அரிசிச் சோறு தான் முக்கியமாக உண்ணுகிறார்கள். விட்டால் இடதுசாரிகள் தமிழனே இந்தியன் இல்லை என்று சொல்லலாம்.
ஒரே ஒரு வித்யாசம் கஷ்மீரி உணவுகள் எல்லாவற்றிலும் சோண்ட் என்று சொல்லப்படும் சுக்குப்பொடி மசாலாவில் முக்கியமான பொருள். இது உணவில் ஒரு தனிச்சுவை தரும். நம்மவரில் இச்சுவை சிலருக்குப் பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது. கஷ்மீர் பள்ளத்தாக்கில் சில வித்யாசமான உணவு வகைகள் உண்டு. அவை கஷ்மீர ஹிந்து மற்றும் முஸல்மான்கள் இருவருமே உண்ணுபவை. உப்பிட்ட கெஹ்வா தேநீர், வெயில் காலத்தில் காய வைத்து குளிர் காலத்தில் உபயோகப்படுத்தும் வடகம் போன்ற காய்கறிகள். தாமரைத்தண்டில் அவர்கள் செய்யும் சுவையான உணவு இத்யாதி.
கஷ்மீரில் கஷ்மீரி உணவை விரும்பிச் சுவைத்து அதில் புதிதாக என்ன உள்ளது என்று கட்டுரை குறித்திருந்தால் உண்மையான சுற்றுலா சென்றவரின் தகவலாக அது இருந்திருக்கும். இப்படி அன்னியப்படுத்துதலான வாக்கியங்கள் கட்டுரையாளரின் சார்பு நிலையை ப்ரகடனம் செய்கிறதேயல்லாது நேர்மையான தகவல் அளிக்கும் படிக்கு இல்லை என்பது நிதர்சனம்.
சாலைகள், கடைகள், —– பலே பலே —– ஏன் ஆகாசம், நீர், நெருப்பு —– இதெல்லாம் கூட இந்தியா போல இல்லை என்று அடித்து விட்டால் யாரும் கேட்கப்போகிறார்கள்????
June 26th, 2012 at 4:49 pm
ஹ்ம்ம்… கம்யூனிஸ்டுகளின் முகத்தில் மேற்கு வங்க முஸ்லீம்கள் கரியை பூசியும் புத்தி வரவில்லை….
சொந்த நாட்டு உணவை அந்த உண்டு அந்த நாட்டுக்கே துரோகம் செய்யும் இந்த துரோகிகளை பேச விட்டது நம் தவறே அன்றி மற்றவர்களின் தவறு இல்லை.
பெரும்பாலான விமான நிலையங்களுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது. இது கூட தெரியவில்லை இவர்கள் எல்லாம் கட்டுரையை ஆவணப்படுத்த வந்து விட்டார்கள்…
எழுத்தாளர்… அப்படியே இஸ்லாமிய பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும், கம்யூனிஸ சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் சென்று அதை பற்றி ஒரு டைரி எழுதினால் நன்றாக இருக்கும்
June 26th, 2012 at 4:51 pm
மேலும் எழுத்தாளர் ஒசூர் செக் போஸ்டை கூட தாண்டாத குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர் என்பதை அவருடைய கட்டுரை காட்டுகிறது.