ராணுவத்தையும் நாடாளுமன்றத்தையும் உடைக்க ஒரு திட்டம்

இந்திய ரயில்வே துறையை உடைக்க ஒரு நல்ல, விரிவான யோசனையை பத்ரி சேஷாத்ரி அளித்திருக்கிறார் – படிப்படியான தனியார்மயமாக்கல். ரயில்வேயில் உள்ள ஊழலை ஒழிக்கவும், லாபம் கொழிக்கும் நிறுவனமான அதை மாற்றியமைக்கவும் ‘உலகத் தரம் வாய்ந்த ரயில்வே சேவை நமக்குக் கிடைக்கவும்’ இந்தத் திட்டம் பயன்படும் என்பது பத்ரியின் நம்பிக்கை. அவர் பாணியிலேயே சிந்தித்தபோது, மேலும் சில திட்டங்கள் உதயமாயின. ரயில்வே துறையை உடைத்த கையோடு இவற்றையும் அமல்படுத்தினால், கூடிய விரைவில் இந்தியா வல்லரசாகிவிடும்.

1. இந்திய ராணுவத்தை உடைக்கவேண்டும்

இந்திய ராணுவத்தின் தரம் மோசமாக இருக்கிறது. சமீபத்தில் மீடியாவில் கசிந்த வி.கே. சிங் கடிதத்தின்படி பார்த்தால், இந்திய ராணுவம் இன்னொரு டி.என்.ஈ.பி. யாக மாறிவிட்டது. பீரங்கி இல்லை, ரவை இல்லை, விமானம் இல்லை என்று தொட்டதற்கெல்லாம் ஷார்டேஷ் கணக்கு வாசிக்கிறார்கள்.

துரதிர்ஷ்டவசமாக இந்திய ராணுவத்தை அரசாங்கம்தான் நடத்தவேண்டும் என்று சட்டம் போட்டிருக்கிறார்கள்.  இதை உடனடியாக மாற்றவேண்டும். இந்திய அரசியல்வாதிகளை நம்பமுடியாது. ராணுவத்துக்காக அவர்கள் ஒதுக்கும் பட்ஜெட் போதுமானதாக இல்லை.  இந்தத் துறை ஏ.கே. ஆண்டனி போன்றவர்களின் கையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மாட்டி சிக்கித் தவிக்கிறது. ஆயுதங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கா. தென்னகத்துக்கு 100 போர் விமானங்கள் அதிகம் வேண்டும் என்றால் அது நடக்காது. பட்ஜெட்டில் 10 விமானங்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலே அதிகம்.

மேலும், பாதுகாப்பு பற்றிய கவலையே யாருக்கும் இல்லை. அதைவிட மோசம், இந்திய ராணுவம் லாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக இல்லை.  இதையும்விட மோசம், ராணுவத்தை லாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக மாற்ற இயலும் என்பதையே இங்குள்ள அரசியல்வாதிகள் நம்ப மறுக்கிறார்கள். நிஜமாகவே, ராணுவத்தால் மக்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்றால் கீழ்க்கண்ட மாற்றங்களைச் செய்தாகவேண்டும்.

1. ராணுவத்தின் வசமிருந்த அத்தனை சொத்துகளையும் (மேன் பவர், தளவாடங்கங்கள் அனைத்தும்) ஒரு கம்பெனிக்கு மாற்றவேண்டும். அந்த கம்பெனியின் 100% பங்குகள் ஆரம்பத்தில் மத்திய அரசிடம் இருக்கும்.  பிறகு, டெண்டர் விட்டு முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்னும் அடிப்படையில், ஒவ்வொரு துறையாக தனியார்வசம் அளிக்கலாம். 99 வருட லீசுக்குக் கொடுப்பதும் நல்ல ஐடியா. பீரியாடிகலாக ஆடிட் செய்து ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்கின்றவனா என்று ஆராயலாம்.

2. ராணுவத்தைத் துண்டு துண்டாக, பல கம்பெனிகளாக பிரிக்கவேண்டும்.  ஆள் எடுப்பதற்கு ஒரு நிறுவனம். ட்ரெய்னிங் அளிப்பதற்கு ஒரு நிறுவனம். ஆயுதங்களுக்கு ஒன்று. எங்கே, யாருடன் போர் புரியலாம் என்பதை ஆராய ஒரு நிறுவனம். போர் நடத்த ஒரு நிறுவனம். இன்னபிற.

3. ராணுவத்தில் ஆள்குறைப்பு செய்யவேண்டும். அரசின் தேவைகளுக்கு ஏற்ப என்றில்லாமல், முதலாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப ராணுவம் இயங்கவேண்டும். சீன முதலாளிகள், பாகிஸ்தான் முதலாளிகள் உள்பட பிற நாட்டு முதலாளிகளோடு நட்புறவு கொள்ளவே இந்திய முதலாளிகள் விரும்புவார்கள் என்பதால் அநாவசியமாக போர் அச்சுறுத்தல் இருக்காது. எல்லைகளுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெரும்பகுதி ஆள்களை வீட்டுக்கு அனுப்பிவிடலாம். நஷ்டம் குறையும்.

4. தொழில் / லாப அபிவிருத்திக்குப் பங்கம் ஏற்படும்போது ராணுவம் இந்திய முதலாளிகளால் பயன்படுத்திக்கொள்ளப்படும். இந்தப் பங்கம் உள்நாட்டில் இருந்து வந்தாலும் சரி, வெளிநாட்டில் இருந்து வந்தாலும் சரி. உதாரணத்துக்கு, கனிம வளங்களை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று சிறுபிள்ளைத்தனமாக ஆதிவாசிகள் முழங்கினால் அவர்கள்மீது போர் தொடுக்கப்படும். லாபத்துக்கு எப்போது, யாரால் தடை வந்தால் அப்போது, அவர்மீது போர்.

5. முதலாளிகள் தங்கள் தேவைக்காக ராணுவத்தை உபயோகித்துக்கொள்ளும் ஒவ்வொருமுறையும் குறிப்பிட்ட அளவு கட்டணத்தைச் செலுத்தவேண்டும். வெளிநாட்டு தேவைகளுக்குக் கூடுதல் கட்டணம், கூடுதல் வரி.

2. நாடாளுமன்றத்தை உடைக்கவேண்டும்

பணத்துக்கு ஓட்டு, ஓட்டுக்குப் பணம் என்று சீரழிந்து கிடக்கிறது இந்திய நாடாளுமன்றம். இது தேசிய அவமானம். எனவே, நாடாளுமன்றத்தை உடைத்து தனியார்களுக்கு அளிக்கவேண்டும்.

1. மக்களவை, மாநிலங்களை இரண்டும் டாடா, பிர்லா போன்ற பெரும் நிறுவனங்களுக்கு உடனடியாக விற்கப்படவேண்டும்.  கட்சிகள் பொது ஏலத்துக்கு விடப்படவேண்டும். சிறு முதலாளிகள் அல்லது தொழில்முனைவோர் இவற்றை வாங்க ஊக்குவிக்கப்படுவர்.

2. ஏதாவதொரு துறையில் பெரும் லாபம் ஈட்டிக்கொடுத்த CEOக்களே பிரதம மந்திரி, குடியரசுத் தலைவர், முதலமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகிக்கமுடியும். தேர்தல்களை ஒரு கமிட்டி நடுநிலையுடன் நடத்தும். இந்தக் கமிட்டிக்குத் தனியார் அல்லது பன்னாட்டு நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப் செய்யும்.

3. சும்மா வெட்டியாக வந்து பேசி, பொழுதைப் போக்குவதற்கான களமாக நாடாளுமன்றம் இருக்காது. ஒவ்வொருமுறை அவை கூடும்போதும், ஏதாவதொரு அரசுத் துறையை உடைக்கவேண்டும்.  அதன்மூலம் லாபம் ஈட்டவேண்டும். (உடைக்க வேண்டிய பொதுத் துறைகளின் பட்டியல் இங்கே இருக்கிறது. இவ்வளவா என்று ஆயாசம் கொள்ளவேண்டாம். உற்சாகத்துடன் செயல்பட்டால் எதுவும் முடியும் என்கிறார் நமது ரோல் மாடல் ராக்ஃபெல்லர்).

4. நாடாளுமன்றத்துக்கு சப்போர்டாக ராணுவமும், ராணுவத்துக்கு சப்போர்டாக நாடாளுமன்றமும் இருக்கும். இந்த இரு பெரும் அமைப்புகளை மக்கள் சப்போர்ட் செய்யவேண்டும். இப்படி எல்லாரும் ஒருவருக்கொருவர் சப்போர்டாக இருப்பதுதான் ஜனநாயகம்.

5. பணம் அச்சடிப்பதை இனி நாடாளுமன்றமே நேரடியாக கவனித்துக்கொள்ளும். காந்திக்குப் பதிலாக லாபகரமான முக்கியத் தலைவர் ஒருவரின் படம் இடம்பெறும்.

6. பங்குச்சந்தை மற்றும் ஊகத்துறையில் ஈடுபடும் ஏழைகளுக்கு மானியம் வழங்கப்படும். பிற மானியங்களும் இலவசங்களும் (disgusting!) விலக்கிக்கொள்ளப்படும்.

0

நினைவிருக்கட்டும். அரசாங்கம் என்பது ரிசர்வேஷன் போல. எப்போதும் அது நிரந்தரமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. படிப்படியாக அந்தத்துறையை நாம் ஒழிக்கவேண்டும். டார்வின் மற்றும் லாமார்க்கின் தியரியின்படி, ஒரு பொருளின் தேவையும் பயன்பாடும் குறையத் தொடங்கினால், காலப்போக்கில் அந்தப் பொருளே காணாமல் போய்விடும். அரசாங்கம் அப்படிப்பட்ட ஒரு பொருள். இருந்தாலும், இப்போதைக்கு அரசாங்கத்தை முழுவதுமாக ஒழிக்கவேண்டியதில்லை. நாடாளுமன்றத்தின் ஒரு பகுதியாக, ஒரு துறையாக அரசாங்கம் நீடிக்கலாம்.

எப்போது அரசாங்கம் தேவை, எப்போது தேவையில்லை என்பதை உணர்த்த ஒரு உதாரணம். ஒரு காரில் பெட்ரோல் நிரப்பி, அதில் முதலாளிகளை அமர வைத்து, வண்டியை நன்றாகத் துடைத்து, ஜன்னல் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு வழியனுப்பவேண்டியது அரசாங்கத்தின் வேலை. இடையில் வண்டி நின்றால் பெட்ரோல் போடவேண்டும். அல்லது பின்னால் இருந்து தள்ளிவிடவேண்டும். (Bail out என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்). அத்தோடு முடிந்தது அதன் பணி.

0

இதுவெல்லாம் நடந்தால்தான் உலகத்தரம் வாய்ந்த ராணுவ / நாடாளுமன்ற சேவை நமக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால் அடுத்த ஐம்பதாண்டுகள் கழித்தும் இதே நிலையில் பின்தங்கியேதான் இருப்போம்.

0

மருதன்

31 comments so far

  1. vajra
    #1

    சகிக்கல்ல..

  2. Dr.P.saravanan
    #2

    Mr. Maruthan “நாடாளுமன்றத்துக்கு சப்போர்டாக ராணுவமும், ராணுவத்துக்கு சப்போர்டாக நாடாளுமன்றமும் இருக்கும். இந்த இரு பெரும் அமைப்புகளை மக்கள் சப்போர்ட் செய்யவேண்டும். இப்படி எல்லாரும் ஒருவருக்கொருவர் சப்போர்டாக இருப்பதுதான் ஜனநாயகம்”.it’s good. 251 public sectors undertakings in India. How is possible? ‘உற்சாகத்துடன் செயல்பட்டால்’ possible?
    Thanks.
    Dr. P.Saravanan

  3. ஜென்னி
    #3

    இந்தியாவை உடைக்க வேண்டும்! அதுக்கு வழி எல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமில்லை.முன் உதாரணம் இருக்கிறது. என்ன இப்ப கப்பலில் வந்து காலூன்றி, வியாபாரம் செய்து நாட்டைப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. பத்ரி போன்ற முதலாளிகள் மூலம் தாரை வார்த்துக் கொடுத்துவிடலாம். அப்புறம் பாருங்க! இந்தியா ரயில்வே, ராணுவம், உற்பத்தி, விவசாயம், தொழில் நுட்பம் என்று எல்லாவற்றிலும் உலகில் நம்பர் ஒன்னாக இருக்கும்! பத்ரி லண்டனுக்கு எல்லாம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த ஐடியாவை 65 ஆண்டுகளுக்கு முன் இந்த உத்தமர்கள் சொல்லியிருந்தால், சுதந்தரப் போராட்டம் நடைபெற வேண்டிய அவசியமே இருந்திருக்காது. (சுதந்தரம் முக்கியமா, முதலாளிகளின் பணப் பெருக்கம் முக்கியமா!) பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்திருக்க வேண்டாம். வாழ்க முதலாளித்துவம்!

  4. மன்னர் மன்னன்
    #4

    அந்நியர்களின் பிடியில் இருந்து விடுபட்டு அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. அதனால் சுதந்தரம் என்றால் என்ன என்பது அதற்குப் பின் வந்த தலைமுறைகளுக்குத் தெரியவில்லை. முன்பு அவர்களாக இந்தியாவைத் தேடி வந்தார்கள். இன்று நாம் அதிபுத்திசாலிகளாக இருப்பதால் அவர்களை நாடிச் சென்று கொடுக்கிறோம். இதன் விளைவைச் சந்திக்கப் போவது அடுத்த தலைமுறைதானே? நமக்கென்ன கவலை?

  5. Siva
    #5

    Dear Marudhan sir,
    Why this Kolaveri on Badri?
    -Siva

  6. Karthikeyan G
    #6

    மருதன், உங்கள் உள்ளக்கிடக்கை புரிகிறது… ஆனால் அது நடக்காது.. சீனாவில் முயன்று பாருங்களேன்..

  7. ஜோன்
    #7

    கார்த்திகேயன், இங்கு நடக்காது; நடக்கக்கூடாது என்றுதான் மருதன் எழுதியிருக்கிறார். நீங்கள் பத்ரியின் பிளாக் படித்துவிட்டு, இதைப் படித்திருந்தால் புரிந்திருக்கும்.

    இதுபோன்ற விஷயங்களைக் கூட இவ்வளவு போல்டாகச் சொல்கிறாரே பத்ரி. அசாத்திய தைரியம்! மருதன் காமடியில் கலக்கியிருக்கிறீர்கள்!

  8. Lakshmana Perumal
    #8

    முதலாளித்துவ கொள்கையின் மீதுள்ள கோபம் தங்கள் கட்டுரையில் நன்கு தெரிகிறது. பல அரசியல்வா(வியா)திகள் தங்கள் கட்டுரையைப் படித்தால், முயற்சி செய்ய வாய்ப்புண்டு.

  9. bandhu
    #9

    கலக்கியிருக்கிறீர்கள், மருதன்.. பொதுத்துறைகளை தனியார்மயமாக்கியதில் இதுவரை பெரிய நன்மை எதில் கிடைத்திருக்கிறது? தொலை தொடர்பு துறை என்று சொல்பதற்க்கு முன் கொஞ்சம் யோசித்தால், செல் பேசிகள் பரவலாக ஆர்ம்பப்படுத்தும்போது அதை தனியார் மயமாக்கியதால், என்னவோ தனியார் வந்ததால் தான் அந்த துறை வளர்ந்தது என்பது போல தெரிகிறது.
    ஆனால் உண்மை அதற்கு வெகு தூரத்தில்!

  10. ramachandran
    #10

    மருதன்

    அரசாங்கத்தின் வேலை என்ன ? நல்ல அரசாட்சி தருவதா இல்லை, தொழில் செய்வதா ?

  11. Chandramowleeswaran
    #11

    :-)
    இந்த ஸ்மைலியுடன் நிறுத்திடனும்னு தான் நினைச்சேன்

    ஆனால் இரண்டு வரி எழுதலாம்னு ஆசை

    பத்ரியின் ரயில்வே உடைப்பு ப்ளான் பற்றி படிச்ச உடனே சுப்ரீம் கோர்ட்/ ஹகோர்ட் இதெல்லாம் உடைக்கனும்னு ஒரு கட்டுரை எழுதி வச்சேன்..

    “அவ்வை சண்முகம்” சாலையில் அந்தக் கட்டிடத்தின் சமீபமாகப் போனதிலிருந்து தான் இப்படியெல்லாம் பத்ரி யோசிக்கிறார்னு நினைக்கிறேன்

    But I appreciate the liberty and freedom of expression

  12. observer
    #12

    பொறுப்பில்லாத நையாண்டி. துணைக்கு லாமார்க்கிசம் வேறே. Chaos Theory, Nash Equilibrium இதையெல்லாம் ஏன் விட்டுட்டீங்க?

  13. ராஜ மாணிக்கம்
    #13

    இந்த idea கூட நல்லாத்தான் இருக்கு.முயற்சி செய்து பார்க்கலாம்.

  14. pandiarajan
    #14

    A great writeup answering Mr.badri.these people always say that capitalism is pancea for all ills.let them go and see medical colleges and eng colleges were parents are swindled by the way of capitation fees.please continue Mr.Marudhan

  15. Ganpat
    #15

    Capitalism,Communism,Socialism,Naziism,Fascism,இவைகளிலுள்ள அனைத்து குறைபாடுகளையும் ஒன்று சேர்த்து ஒரு கொள்கையை உருவாக்கினால் அதன் பெயர்
    Indiangovernmentism..அதுதான் நாம் இப்போ கடைபிடிப்பது.

  16. களிமிகு கணபதி
    #16

    போக்குவரத்துத் துறைகளில் ஒன்றான ரயில்வே, அடிப்படையில் லாப-நட்டங்களினை ஒட்டிச் செயல்படும் துறை.

    ஆனால், பாராளுமன்றமோ ராணுவமோ பொருளாதார லாப-நட்டங்களின் அடிப்படையில் செயல்படுபவை அல்ல.

    இந்த அடிப்படையான வித்தியாசம்கூடத் தெரியாமல் மருதன் எழுதுகிறார். மார்க்ஸிய வைரஸ் தரும் மனக்குழப்பம்தான் காரணம்.

    மார்க்ஸியத்தின்படி, அனைத்தும், தாய்-மகனுக்கு இடையிலான உறவுகூட லாப-நட்டக் கணக்கு பார்க்கும் காசு வியாபாரம்.

    அதனால், பொருளாதாரம் நோக்கமாக இராத துறைகள், பொருளாதார நோக்கம் கொண்ட துறைகள் இந்த இரண்டிற்கும் இடையேயான வித்தியாசம் கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தெரியாது.

    இந்தக் கம்யூனிசக் கிறுக்குத்தனம் புரியாமல் மற்றவர்களும் இந்தக் கட்டுரைக்கு ஆகா ஓகோ என்று லால்சலாம் போடுகிறார்கள். கம்யூனிசம் என்பது இப்படித்தான் மூளையைச் செல்லரிக்க வைக்கும்போல.

    இந்தியாவில் இப்போது நடைபெற்றுவரும் நியோ-ஜமீந்தாரிய ஆட்சிமுறை ஒழிய வேண்டும் என்றால், அரசின் வசம் உள்ள துறைகள் அடித்தள மக்களின் வசம் வந்தாக வேண்டும். கம்யூனிஸ்ட்டுகளின் வசம் போய்விடக்கூடாது.

    அதற்குத் தனியார்மயம்தான் சரியான வழி.

    உதாரணமாக, தனியார்வசம் இருப்பதால்தான் பல அருமையான நல்ல புத்தகங்களைப் பதிப்பகங்கள் வெளியிட முடிகிறது.

    இல்லாவிட்டால், கம்யூனிசப் பெயர் சொல்லி உளறிக் கொட்டும் காம்ரேடுகளின் விளம்பரங்களை வெளியிடுவதுதாண்டி சாதாரண மக்களுக்கு பதிப்பகங்களிடம் இருந்து என்ன கிடைத்துவிடும்?

    தனியார் வசம் இருப்பதால்தான் மருதன் போன்றவர்கள் இப்படிக் கெட்டுரைகள் (sic) எழுத முடிகிறது. அரசு வசம் போனால், பத்ரி போன்றவர்கள் கமெண்ட்டுகூடப் போட்டுவிட முடியாது.

    தனியார்வசம் ஓரள்வு இருக்க முடியும் என்ற சூழல் இருப்பதால்தான், வியாபாரம் செய்து பிழைக்க பத்ரி போன்றவர்கள் ரிஸ்க் எடுக்கிறார்கள்.

    இல்லாவிட்டால், தோழர் மருதன் எப்போது லைசன்ஸ் தருவார் என்று மைல்கணக்கில் நீளும் வரிசையில் நிற்பவர்களில் பத்ரியும் ஒருவராக இருப்பார்.

    இது ரயில்வேக்கும் பொருந்தும்.

    .

  17. பூவண்ணன்
    #17

    உலகத்திலேயே அதிக சொத்துள்ள நிறுவனம் இந்திய ரயில்வே தான்.ஒரு காலத்தில் உலகத்திலேயே அதிக பணியாளர்களை கொண்டுள்ள நிறுவனமாகவும் இருந்தது
    ஓரிரண்டு விமான நிலையங்களை வைத்து நடத்தவே பெரிய தனியார் முதலைகள் முழிபிதுங்குவதை பார்த்தும் ரயில்வே தனியார்மயம் என்று பேச தோன்றுவது ஆச்சரியம் தான்
    தமிழகத்தில் உள்ள ரயில்வே குடியிருப்புகளை விற்றாலே பல லட்சம் கோடி கிடைக்கும்.ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தை வாங்குவதே தனியாரால் செய்ய முடியாது.
    ரயில் நிலையங்கள்/ரயில்கள் ஊர்களை,மாவட்டங்களை முன்னேற்றுகின்றன.அவை அரசியல் சார்புடைய முடிவுகளாக இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று
    போர்,பஞ்சம் பயிற்சி troops movement ,அவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள்/காயமடைந்தவர்கள் லட்ச லட்சமாக அனுப்பபடுவதும் ரயில் மூலம் தான்.
    சாலைகளை தனியார்மயமாக்க முடியுமா.அதே போல் தானே ரயில் ட்ராக்க்குகளும் .ஒரு நிறுவனத்தின் ரயில் ஓடும் போதே ஆயிரம் குழப்பங்கள் விபத்துக்கள்.
    இன்னும் ஆயிரக்கணக்கான km ட்ராக்க்குகள் ஒரு வழி பாதை தான்.இரட்டை வழி பாதையிலேயே இரு நிறுவனங்கள் இயங்க முடியாது
    ரயில்வே போலீஸ் force என்று ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் தனியாருக்கு விடப்படுமா

  18. பூவண்ணன்
    #18

    தொழில்நுட்பதுறையில் விக்ஞான வளர்ச்சியால் பலருக்கு இடம் கிடைத்தது.fixed லைன் மூலம் தான் தொலைபேசி என்றால் எத்தனை பேருக்கு/தனியாருக்கு வாய்ப்பு இருந்திருக்க முடியும்
    ராணுவத்திற்கு என்று தனி frequency உண்டு.அவர்களின் தொலைதொடர்பு தனியார் நிறுவனங்களை நம்பி அல்ல
    அவர்களுக்கு என்று தனியாக விமான தளங்கள் உண்டு,துறைமுகங்கள் உண்டு அதே போல் தனியாக ரயில் கிடைக்குமா.இந்தியா முழுவதும் ராணுவத்திற்கென்று தனியாக ரயில் நிலையங்கள் உண்டு.ட்ராக்குகள் உண்டு.தேவை ஏற்படும் போது எல்லாம் அங்கிருந்து பொருள்கள்/தளவாடங்கள்/டாங்குகள் ஏற்றப்பட்டு சென்னையில் இருந்து ராஜச்தானோ ,குவ்ஹாட்டியோ செல்லும்
    ரயில்வே போர்டிலும் ராணுவ அதிகாரிகள் இருப்பார்கள்.ராணுவ வீரர்கள் பணம் குடுத்து டிக்கெட் எடுக்க மாட்டார்கள்.ஒவ்வொரு சிறு யூனிட் கூட வார்ரன்ட் புத்தகம் வைத்து இருக்கும்.அந்த காகிதத்தை கொடுத்தால் கன்யாகுமரி வரை ஜம்மு வரை எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.ஒவ்வொரு நாளும் இப்படி செல்பவர் லட்சகணக்கில் இருக்கும்.CRPF ,BSF ,ITBP ,எல்லாவற்றிருக்கும் இதே தான்.சென்னை தாம்பரம் ஒருவரிடம்,தாம்பரம் பெங்களூர் ஒருவரிடம் என்று இருந்தால் இது எல்லாம் சாத்தியமா
    மற்ற நாடுகளை போல கடல் சார்ந்த,விமானம் சார்ந்த ராணுவ நடமாட்டம் இங்கு கிடையாது.இந்தியா ரயில் சார்ந்த போர் வீரர் MOVEMENT நாடு.
    அதே போல் தனியாக ரயில் ட்ராக்குகள் கிடைக்குமா
    இப்போது சென்னை பெங்களூர் தனியாக மெட்ரோ ட்ராக் போட்டு நடத்த தனியார் முன் வருவார்களா.அரசு செலவில் போட்ட ட்ராக் களை இலவசமாக தனியாருக்கு கொடுத்து அவர்கள் அதில் வருமானம் பார்க்க வேண்டும் என்று எண்ணுவது சரியா

  19. N Ramadurai
    #19

    மருதன்,பத்ரியைக் கிண்டல் செய்வதற்கு முன்னர் சீனாவில் போய் பாருங்கள், முதலாளித்துவம் மூலம் தான் கம்யூனிசத்தை அடைய முடியும் என்ற கோஷத்துடன் எந்த அளவுக்கு அமெரிக்க முதலாளிகளுக்கு கதவைத் திறந்து விட்டிருக்கிறார்கள் என்பது புரியும்.சீனாவின் நிலக்கரி சுரங்கங்களில் வாரம் தோறும் நடக்கிற விபத்துகளை, சீனாவில் எளிய மக்கள் சுரண்டப்படுவதை, அங்கு சுற்றுச்சூழல் மாசுபடுவதை அமெரிக்கா கண்டு கொள்வதில்லை.காரணம் அமெரிக்க முதலாளிகளுக்கு சீனா சிவப்புக் கம்பளம் விரித்துள்ளதே.
    இந்தியாவின் சோஷலிசம் நிர்வாகத் திறமையற்றதாக, செய்யப்பட்ட முதலீட்டுக்குப் பலன் தராததாக, யூனியன்களுக்கு அடிமையாகியதாக மாறியதால் எளிய மக்களுக்குப் பலன் அளிக்கத் தவறியதாகியது.இதுவே தனியார் துறை மீது மக்களிடையே மெச்சுதலை ஏற்படுத்தியது.இன்னமும் சில நூறு அரசு நிறுவனங்கள் மத்திய மானில அரசுகளின் பட்ஜெட்டின் ஆதரவால் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன.எல்லாவற்றுக்கும் அரசியல்வாதிகளின் தலையீடே காரணம்.அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாத அரசியல் நிறுவனங்கள் உண்டா? எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் என்று யாரும் கூறவில்லை.

  20. மருதன்
    #20

    அன்புள்ள ராமதுரை, சீனா கம்யூனிசத்தைக் கைவிட்டு பல பத்தாண்டுகள் ஆகின்றன. நீங்கள் குறிப்பிட்ட நிலக்கரி சுரங்க விபத்துகளும் சுரண்டலும் ஊழலும் சுற்றச்சூழல் பாதிப்பும் முதலாளித்துவத்தின் நன்கொடைகள். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இன்று பெரிதாக வித்தியாசங்கள் எதுவுமில்லை. அதனால்தான் மறைமுகப் போட்டியையும் பொறாமையையும் மறைத்துக்கொண்டாவது இரு நாடுகளும் புன்சிரிப்புடன் கைகுலுக்கிக்கொண்டிருக்கின்றன.

    இந்தியாவின் சோஷலிசம் (அது சோஷலிசம்தானா என்னும் விவாதத்துக்குள் இப்போது போகவேண்டாம்)பலனளிக்கத் தவறிவிட்டது எனவே சோஷலிசம் வேண்டாம் என்பது உங்கள் வாதம். இதே வாதத்தை முதலாளித்துவத்துக்கு ஏன் பொருத்திப் பார்க்கக்கூடாது?

  21. பூவண்ணன்
    #21

    இதை விட எளிமையான,சுலபமான தனியார் மயமாக்கினால் பணம் கொழிக்க கூடிய இடம் ஒன்று இருக்கிறது
    காவிரி,கிருஷ்ணா,கோதாவரி,நெய்யார்,முல்லை பெரியார் எல்லாவற்றையும் தனியார்மயமாக்கினால் பணம் கொட்டாதா
    காவிரி நீரை தனியார் ஏலம் விடும் போது அதையும் நேரடியாக ஒளிபரப்பி இன்னும் பல கோடி அள்ளி விடலாம்
    தவிக்கும் தமிழகம் திணறும் கர்நாடகம் ஜெயிக்க போவது யாரு என்று இரு நாள் விளம்பரம் செய்தால் போதுமே.TRP சாதனைகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடலாம்
    அம்மாவும் கெளடாவும் ஏலம் கேட்பதும்,அதற்க்கு நடுவே STRATEGIC டைம் அவுட்,டி பிரேக் எல்லாம் விட்டு பல நிபுணர்களின் கருத்துக்களை ,விவாதங்களை நடத்தி பலரின் வளமான வாழ்வுக்கு வழி வகுக்கலாமே

  22. சான்றோன்
    #22

    இந்தியாவை தங்கள் விருப்பப்படி ஆட்டி வைக்க நேரு குடும்பத்துக்கு சோவியத், கே.ஜி.பி மூலம் படியளந்தது [மித்ரோகின் ஆவணங்கள் ]……அதற்கு விசுவாசமாக நேரு குடும்பம் செயல்பட்டதை நாடறியும்…..அணிசேரா நாடுகள் என்ற பெயரில் இந்தியா தெளிவாக சோவிய‌த்துக்கு ஜால்ரா அடித்து வந்தது….தாஷ்கண்ட் பேச்சுவார்த்தையின் போது ” நண்பன்” ரஷ்யாவின் நிர்பந்தத்தால் லால் பகதூர் சாஸ்திரி மர்மமான முறையில் மரணமடைந்தார்….

    தற்போது மட்டும் என்ன? ஆயுத புரோக்கர்களுக்கு ஒத்துழைக்க மறுத்த ராணுவ தளபதிக்கு கொடுக்கப்பட்ட தொல்லைகளை நாடறியும்……இரண்டு நாள் யுத்தத்துக்கு கூட இந்திய ராணுவம் தயாரில்லாத நிலவரம் வெட்டவெளிச்சமாகிவிட்டது…..

    இந்த லட்சணத்தில் மருதனின் நையான்டி உன்மையாகிவிட்டால் கூட அப்படி என்ன குடிமுழுகிவிடப்போகிறது?

  23. சான்றோன்
    #23

    தொழிற்சங்க அரசியல் என்பது ஒரு தொழிலை ஒழித்துக்கட்டுவதன் முதல் படி……வெள்ளை யானைகளான பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவது சோஷியலிச‌ம் தந்த அருட்கொடை….எல்லா துறைகளிலும் தேவைக்கு மீறி ஆட்கள்….அவர்களுக்கான சம்பளங்கள்….தகுதிக்குமீறிய‌ சலுகைகள்,……இத்யாதி……அரசின் சலுகைகள் இல்லாவிட்டால் இந்த நிறுவனங்கள் எப்போதோ திவாலாகியிருக்கும் …. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்…….வருடம் 365 நாளும் ஏதாவதொரு வேலை நிறுத்தம்…..த‌னது உற்பத்தி இலக்கை என்.எல்.சி எட்டியதே இல்லை……தமிழக அரசு போகுவரத்துக்கழகங்களில் வேலைக்கே போகாமல் தண்ட சம்பளம் வாங்கும் தொழிற்சங்கவாதிகளை களையெடுத்தாலே போதும்….அந்த நிறுவனம் நஷ்டத்தில் இருந்து விடுபடும்…..

    இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் பொதுவான இலக்கணம் என்ன? பொறுப்பின்மை…சேவைக்குறைபாடு…..காரணம் கேட்டால் பொறுப்பற்ற ,திமிரான பதில்……காரணம் தொழிற்சங்கங்க‌ள் தரும் தைரியம்…..இவைதானே? …..இவற்றுக்கு மாற்றே கிடையாதா? ஏர் இந்தியாவானாலும் ,இந்தியன் ரயில்வே ஆனாலும் நாறும் கழிவறைகள் தான் நம் தலையெழுத்தா? சற்று மாற்றி யோசித்தால் அதற்கு இவ்வளவு நையாண்டியா?

  24. சான்றோன்
    #24

    பூவண்ணன் அவர்களே….

    நாம் வசிக்கும் வீடே நமக்கு நிரந்தரம் கிடையாது…….. நியாயமான காரணங்களுக்காக அரசு எப்பொது வேண்டுமானாலும் கையகப்படுத்தலாம்….. இவ்வாறிருக்க , தேசிய அவசர காலத்தில் ரயில்வே டிராக்கை ராணுவ தேவைக்கு எடுத்துக்கொள்வதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?

  25. Dr A Shyam Sundar
    #25

    SUPER! KALAKKITEENGA MARUDHAN! BEST ANSWER FOR Badri’s article…

  26. பூவண்ணன்
    #26

    சான்றோன் அவர்களே போர் ஒரு நாள் என்றால் அதற்க்கான பயிற்சி,தயார் நிலை 365 நாளும் உண்டு. லட்சக்கணக்கில் வீரர்கள் ,தளவாடங்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்வது அன்றாடம் நடைபெறும் ஒன்று.பொத்தாம் பொதுவாக அனைத்து துறைகளையும் கேவலமாக பேசுவது சரியா
    மனிதனின் அனைத்து விஞ்ஞான வளர்ச்சிகளும்,ஆராய்சிகளும் பாதுகாப்பால் வந்தது தான்.
    ராணுவங்கள் இருக்கும் வரை தனியார்மயம் எனபது நகைச்சுவை தான்.பூட்டானில் தங்க சுரங்கம்/எண்ணெய் வளம் கண்டு பிடிக்கப்பட்டால் அதிக பணம் தருகிறார்கள் என்று இந்தியா,சீனாவை ஒதுக்கி விட்டு மெக்ஸிகோ நாட்டு நிறுவனத்திற்கு தர முடியுமா
    இந்தியாவிலேயே அதிக நிலம் வைத்திருக்கும் துறை ரயில்வே தான்.அதற்க்கு எப்படி மதிப்பீடு போடுவீர்கள்.
    முக்கிய விமான நிலையங்களை தவிர மற்ற எந்த விமான நிலையத்தையும் தனியார் சீந்துவதர்க்கு தயாராக இல்லை.இதில் பல ஆயிரம் ரயில் நிலையங்களை எப்படி எடுத்து கொள்வர்.
    ராணுவத்திற்கு தனியாக frequency தரப்பட்டதால் spectrum அவர்களிடம் இருந்து தனியாரிடம் வந்தது.அடுத்தவரை நம்பாமல் தனித்து செல்ல சாலை போக்குவரத்தில் அவர்களுக்கு வாகனங்கள் உண்டு.விமானங்களிலும் ,கப்பலகளிலும் அதே நிலை தான்.அது போல் ரயில்களில் உண்டா.அது இல்லாதவரை தனியார்மயம் எனபது புரியாத வெட்டி பேச்சு தான்.அதுவும் இந்தியாவில் அதன் எதிரிகள்,கண்டோன்மென்ட்கள்,ஆயுத கிடங்குகள் இருக்கும் இடங்களுக்கு ரயில் மூலமாக தான் அதிக அளவில் பரிமாற்றங்கள் நடைபெறும்
    இப்போது புதிதாக திண்டிவனம் மரக்காணம் இடையே மெட்ரோ போட வேண்டுமானால் தனியாரிடம் விடலாம்.யாரவது தயாரா

  27. Vijay Anand
    #27

    மருதன் அண்ணே சோசியலிசம் இன்னும் இந்தியாவுக்கு தேவையா … ? பின்னூடத்தை பாருங்க நிறைய பேருக்கு நீங்க கிண்டலடிக்கிறீங்கன்னே தெரியலே

  28. kashyapan
    #28

    பெற்ற தாயின் பிணைத்தைக்கூட தனியாருக்கு விற்றால் லாபம் கிடைக்குமா என்ற தேடல் மனநீலை! பத்ரியின் கட்டுரையைப் படிக்கவே அருவருப்பாக இருக்கிறது. அதற்கான மறுமொழியாக மருதன் கட்டுரையைப் போட்ட தமிழ் பெப்பரின் நேர்மைக்கு வாழ்த்துக்கள்—காஸ்யபன்.

  29. Coca Cola
    #29

    ராணுவம் மற்றும் நாடாளுமன்றமும் இரயில்வேவிற்கு இணையா? லாபம் என்பது ஏன் கெட்ட வார்த்தையாகிறது? ஒரு நிறுவனம் லாபமில்லையென்றால் அடுத்து ஆண்டு எப்படி நடத்த முடியும். பயனர்களுக்கு அடிப்படை சேவைகள் கூட பல்லாண்டுகளாகக் கிடைக்காத நிறுவனத்தை மாற்றலாம் என்பது யோசனை. அதற்கு உங்களின் யோசனை கிண்டல். எது எடுபடும்?

  30. பேப்பர்பாய்
    #30

    பத்ரி இங்கிலாந்து போய்விட்டு வந்து அப்படி எழுதினார்.உங்களை வட கொரியாவிற்கு அனுப்பி வைத்தாரா,அதன் விளைவா இக்கட்டுரை.

  31. களிமிகு கணபதி
    #31

    // நீங்கள் குறிப்பிட்ட நிலக்கரி சுரங்க விபத்துகளும் சுரண்டலும் ஊழலும் சுற்றச்சூழல் பாதிப்பும் முதலாளித்துவத்தின் நன்கொடைகள்.
    .
    இந்தியாவின் சோஷலிசம் (அது சோஷலிசம்தானா என்னும் விவாதத்துக்குள் இப்போது போகவேண்டாம்)பலனளிக்கத் தவறிவிட்டது எனவே சோஷலிசம் வேண்டாம் என்பது உங்கள் வாதம். இதே வாதத்தை முதலாளித்துவத்துக்கு ஏன் பொருத்திப் பார்க்கக்கூடாது?//

    கம்யூனிசத் தக்கியா !

    சீன நிலக்கரி சுரங்க விபத்துக்கள் இப்போதுதான் வெளியே தெரிகின்றன. சீனக் கம்யூனிச அரசு செய்யும் படுகொலைக்குக் காரணம் அமெரிக்கா என்று பழிபோட்டாயிற்று.

    ஆனால், ருஷ்யாவில் இதையொத்த எத்தனையோ மரணங்கள் (அரசு கொலைகள்) தூய கம்யூனிச உலகில் நடந்தன. இப்போதுதான் அவை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிகின்றன.

    அவையெல்லாம் கேப்பிட்டலிசத்தின் கொடைகளா ?

    இப்போது ஜனாப் மருதன் அவர்கள் ருஷ்யாவிலும் உண்மையான கம்யூனிசம் உருவாகிவிடவில்லை என்று ஜல்லி அடிப்பாராக இருக்கும்.

    தான் போன இடங்களில் எல்லாம் தோல்வியையே பெற்றது, கொடுத்தது மார்க்ஸியம். ஆனால், அந்தத் தோல்விகள் மார்க்ஸியத்தின் தவறல்ல அமெரிக்காவின் தவறு என்பது கம்யூனிசத் தக்கியா.

    கேப்பிட்டலிசம் ஒன்றும் ஆகச் சிறந்த கொடுப்பினை அல்லதான். ஆனால், அதில் ஒரு வசதி இருக்கிறது. சுதந்திரம் இருக்கிறது. மானுட உரிமை ஓரளவு இருக்கிறது. அது மார்க்சியத்தில் இல்லை.

    உதாரணமாக, மருதன் அமெரிக்காவைப் பற்றி மோசமாக எழுதலாம் பேசலாம். ஆனால், நம்மூர் லோக்கல் கம்யூனிசத் தோழர்களின் அடாவடி பற்றி, அவர்கள் நடத்தும் கொலைகள் பற்றிப் பேசமாட்டார். (கேரளாவில் பல்லாண்டுகளாக நடந்துவரும் கொலைகள் பற்றி – போன மாதம்கூடச் சிலகொலைகள்.)

    கொஞ்சம் அழுத்தம் கொடுத்துக் கேட்டால், அதெல்லாம் உண்மையான கம்யூனிசம்தானா என்ற சந்தேகம் இருப்பதாகக் கூறி எஸ்கேப் ஆகிவிடுவார்.

    தன் ஆரம்ப காலத்தில் இருந்து பல நாட்டு அரசுகளின் மதமாக இருந்த கம்யூனிசம் இன்றும் ஒரு மனிதாபிமான உலகைப் படைக்க முடியவில்லை, அடிப்படை உரிமைகள் தர முடியவில்லை எனும்போது அதன் பரப்பியல் தாண்டாத பலவீனம் பல்லிளிக்கிறது.

    அதற்குக் கேப்பிட்டலிசம் தேவலாம்.

    .

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: