அலெக்ஸ் பால் மேனன் : மாவோயிஸ்டுகள் செய்தது சரியா?

1

‘நான் நலமாக இருக்கிறேன், ஒரு நாள் கழித்து மேற்கொண்டு பேசுகிறேன்!’ கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் மாவோயிஸ்டுகளால் சிறை வைக்கப்பட்டிருந்த சுக்மா மாவட்ட ஆட்சியர் பால் அலெக்ஸ் மேனன் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார். மாவோயிஸ்டுகள் விடுவித்துவிட்டாலும், மீடியா அவரை அவ்வளவு சுலபத்தில் விட்டுவிடாது. வனத்தில் அவர் கழித்த பொழுதுகள் குறித்தும், என்ன உண்டார், எங்கு உறங்கினார், என்ன சிந்தித்தார், எப்படி நடத்தப்பட்டார் என்பது குறித்தும், கடத்தியவர்கள் அவருடன் நடத்திய உரையாடல்கள் குறித்தும், அவருடைய எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் பல கேள்விகள் அடுத்தடுத்து வீசப்படும். குறைந்தபட்சம் சில வாரங்களுக்கு மேனன் மீடியாவால் கடத்தப்பட்டு சிறை வைக்கப்படுவது உறுதி.

இந்தியாவின் முதன்மையான அச்சுறுத்தல் என்று மன்மோகன் சிங் நக்ஸலைட்டுகளை வர்ணித்திருந்தபோதிலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாவோயிஸ்ட் இயக்கம் குறித்த விவாதங்கள் அதிகம் நடைபெற்றதில்லை.  முன்னதாக, ஒடிசா எம்எல்ஏ ஜினா ஹிகாகா கடத்தப்பட்டதும் விடுவிக்கப்பட்டதும் இங்கே செய்திகளாக மட்டுமே வலம் வந்தன. விவாதப்பொருளாக உருபெறவில்லை. காரணம், மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் பெரும்பாலும் மத்திய இந்தியாவில் மட்டுமே குவிந்திருக்கின்றன. அலெக்ஸ் மேனன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் இந்த முறை மாவோயிஸ்டுகள் இங்கே அதிக கவன ஈர்ப்பைச் சம்பாதித்துள்ளனர்.

2

மும்பையைச் சேர்ந்த அருண் ஃபெரைராவுக்கு வயது 38. மே 2007ல் நாக்பூர் ரயில் நிலையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார். அடுத்த சில மாதங்களில் அவர் மீது எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் இரண்டு, கொலை வழக்குகள். அத்தனை வழக்குகளையும் உயர் நீதிமன்றம் செப்டெம்பர் 2001ல் தள்ளுபடி செய்தது. நாக்பூர் மத்திய சிறையில் இருந்து அவர் வெளியே வரும்போது, மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த முறை மேலும் இரு வழக்குகள். ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இன்னொன்றில் இப்போது பெயில் கிடைத்துள்ளது.

38 வயதான அருண், கல்லூரியில் படித்துகொண்டிருந்தபோத, அரசியல் ஈடுபாடு கொண்டவராகவும் சமூக சேவையில் ஈடுபடுபவராகவும் இருந்தார். பஸ்திக்கள் என்று அழைக்கப்படும் சேரிக்களை இடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போதெல்லாம் பகுதி மக்களுடன் இணைந்து எதிர்த்திருக்கிறார். சேரிக்களைச் சீரமைக்கவேண்டும் என்பது இவர் ஆசை. இளைஞர்கள், ஆதிவாசிகள், தலித் மக்கள் ஆகியோருடன் இணைந்து மகாராஷ்டிராவில் பணியாற்றினார். கயர்லாஞ்சி படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று போராடி வருகிறார்.

மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் மிகுந்திருக்கும் கிழக்கு மகாராஷ்டிராவில்தான் அருணும் இயங்கிவந்தார் என்னும் ஒரு காரணம் போதாதா, அவரையும் ஒரு மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்துவதற்கு?

தன் சிறை அனுபவங்களை அருண் ஃபெரைரா ஃபவுண்டன் இங்க் இதழுடன் பகிர்ந்துகொண்டார்.

சிறையில் முதல் சில நாள்களுக்கு உங்களை அடித்துக்கொண்டே இருப்பார்கள். உடைகளைக் களையச் சொல்வார்கள். கைகளில், கால்களில், வயிற்றில் எட்டி உதைப்பார்கள், அடிப்பார்கள். நீங்கள் அவர்களுக்கு முற்றிலும் அடிபணிந்துபோகும்படி செய்வார்கள். எந்தக் கேள்வியும் கேட்கமாட்டார்கள். அடிப்பது மட்டுமே நோக்கமாக இருக்கும்.

நக்ஸல் இயக்கத்துடன் உனக்கு என்ன தொடர்பு என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவர்களைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னபிறகும் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் சித்திரவதைகள் தொடர்ந்தன.

முதலில் பத்து நாள்கள் போலிஸ் கஸ்டடியில் வைத்திருப்பதற்கான அனுமதியை மட்டுமே நீதிமன்றத்தில் இருந்து பெற்றுக்கொண்டார்கள். பிறகு நார்கோ-அனலிஸ் (உண்மை அறிவதற்கான மருத்துவ, மனோதத்துவ முறை) செய்வதற்கான அனுமதி பெற்று மும்மை அழைத்துச் சென்றார்கள். அவர்கள் எதிர்பார்த்த உண்மைகள் என்னிடம் இருந்து கிடைக்காததால், மேலும் பல வழக்குகள் பதிவு செய்து, சிறைத் தண்டனையை நீட்டித்தார்கள்… மீண்டும் மீண்டும் அடித்தார்கள், துன்புறுத்தினார்கள்… என்னுடன் இருந்தவர்கள் மேலும் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்கள் சிறையில் இருந்த ஒவ்வொரு மணித் துளியையும் போலிஸ் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டது. இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மருத்துவர்களை வரவழைத்து, பரிசோதித்து வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லாதபடி பார்த்துக்கொண்டார்கள். நீதிமன்றத்தில் அவர்களை நிறுத்தும்போது சித்திரவதை தழும்புகள் தெரியக்கூடாது அல்லவா?

மிகவும் அடிப்படையான சித்திரவதை, தூங்க விடாமல் செய்வது. பிறகு, உங்களுடைய பலவீனத்தைக் கண்டறிந்து தாக்குவது. உதாரணத்துக்கு, நான் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதைத் தெரிந்துகொண்டு, நீ இப்போது எப்படி இருக்கிறாய் பார்த்தாயா என்று சொல்லிச் சொல்லி என்னை மனம் தளரச் செய்ய முயற்சி செய்தார்கள்… உன் மனைவியைப் பலாத்காரம் செய்வேன், உன் குடும்பத்தைச் சீரழிப்பேன் என்றெல்லாம் மிரட்டுவார்கள்.

அவர்களுக்குத் தேவைப்படும் உண்மைகளை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் என்னும் நோக்கத்துடன்தான் ஒவ்வொருமுறையும் அவர்கள் கைதிகளைச் சந்திக்கிறார்கள். கேட்டது கிடைக்காதபோது, வெறுப்பும் கோபமும் அதிகமாகிறது. சித்திரவதையின் தீவிரமும் அதிகரிக்கிறது.

அருண் ஃபெரைராவின் சிறை அனுபவங்கள் முழுவதுமாக இங்கே கிடைக்கின்றன.

3

பஸ்தாரில் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டாகப் பணியாற்றிய B.D. ஷர்மா என்பவரின் கருத்து இது. ‘மாவோயிஸ்டுகள் பொதுவாக தங்கள் கைதிகளை நன்றாகவே நடத்துவார்கள்.’ (அவுட்லுக், மே 7, 2012). இது உண்மைதானா என்பதை கூடிய விரைவில் பால் மேனனே உறுதி செய்துவிடுவார். மேற்படி அவுட்லுக் இதழில் காணப்படும் ஒரு தகவலின்படி கிட்டத்தட்ட 20,000 ‘மாவோயிஸ்டுகள்’ 9 மாநிலங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் மட்டும் கிட்டத்தட்ட 1,700 பேர் சிறையில் இருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் அருண் ஃபெரைராவைப் போன்றவர்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது. ‘தங்கள் இருப்பிடத்தை விட்டு அகல மறுக்கும் அல்லது தங்கள் வளம் கொள்ளை போவதைத் தடுக்க முயலும் ஒவ்வொருவரும் மாவோயிஸ்டுகளாகவே பார்க்கப்படுகிறார்கள்’ என்கிறார் B.D. ஷர்மா. இதனால்தான் அலெக்ஸ் மேனன் மாவோயிஸ்டுகளால் சிறை வைக்கப்பட்டதையும், அருண் ஃபெரைரா அரசு காவல் துறையால் சிறை வைக்கப்பட்டதையும் ஒப்பிடவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

மேற்கொண்டு விவாதத்தைத் தொடர்வதற்கு முன்னால் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். மாவோயிஸ்டுகளின் ஆள்கடத்தல்களையும் தனிநபர் படுகொலைகளையும் சாகசவாதமாகவே நான் பார்க்கிறேன். சாகசவாதம் புரட்சி ஆகாது என்பதாலேயே அவற்றை நான் எதிர்க்கவும் செய்கிறேன். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மாவோயிஸ்டுகளுக்குக் குறுகிய லாபங்களை மட்டுமே அளிக்கும். மக்களிடம் இருந்து அவர்களை அந்நியப்படுத்தவும் செய்யும். அரசியல் ரீதியில் மக்களை அணி திரட்டாமல், அரசியல் ரீதியில் அவர்களைத் தயார்படுத்தாமல், அவர்களுடைய நம்பிக்கையை வென்றெடுத்து போராட்டத்தில் இணைத்துக்கொள்ளாமல், வெறும் சாகசங்களை மட்டுமே நம்பி ஒரு குழு எந்தவொரு புரட்சியையும் நடத்திவிடமுடியாது. ரஷ்யப் புரட்சியும் சீனப் புரட்சியும் அவ்வாறு நிகழவில்லை. அந்த வகையில், அலெக்ஸ் மேனனைச் சிறைபடுத்திய மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் ஏற்கத்தக்கதல்ல.

நம்மில் பெரும்பாலானோர் இந்தக் கருத்தை ஏற்பார்கள். ஆனால், மாவோயிஸ்டுகளைக் கண்டிக்கும் எத்தனை பேரால்,  ஆயிரக்கணக்கான அருண் ஃபெரைராக்களைச் சிறைபிடித்து சென்று சித்திரவதை செய்யும் அரசின் செயல்பாடுகளைக் கண்டிக்கமுடியும்? மாவோயிஸ்டுகள் புரிவது தீவிரவாதம் என்றால் அரசின் செயல்பாடுகளை எப்படி அழைப்பது?  வன்முறை பாதையை மாவோயிஸ்டுகள் கைவிடவேண்டும் என்று நீட்டி முழக்கும் எத்தனை பேரால் அரசு வன்முறை குறித்து உரையாடமுடியும்?

காந்தியின் அகிம்சை தோற்ற இடம் மிகச் சரியாக இதுவே. காந்தி மேற்கொண்ட உண்ணாவிரதங்கள் அனைத்துமே இந்தியர்களின் வன்முறை நடவடிக்கைகளுக்கு எதிராகத்தான். பிரிட்டனை அவர் தீவிரமாக எந்தவோரிடத்திலும் எதிர்த்ததில்லை. அகிம்சை, மனித உரிமை, அமைதி பற்றி அக்கறை கொண்டுள்ள பலரும் இன்று அவர் வழியில் ஒருதலைபட்சமாக மாவோயிஸ்டுகளின் வன்முறையை மட்டுமே எதிர்க்கிறார்கள். இந்த மனநிலையை எப்படி அழைப்பது? சந்தர்ப்பவாதம் என்றா அல்லது அறியாமை என்றா?

4

ஒரே செயலை ஓர் அரசாங்கம் செய்தால் ஒரு மாதிரியாகவும், ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுவினர் செய்தால் இன்னொரு மாதிரியாகவும் அணுகும் போக்கு உலகம் தழுவியது. இந்தியாவிலேயே காந்திய வழி சிறந்தது என்றும் பகத் சிங்கின் வழி தீங்கானது என்றும் சொல்லப்பட்டது, இப்போதும் சொல்லப்பட்டு வருகிறது. பொதுப் புத்தியில் ஆழமாகப் பதிந்துள்ள சில பிம்பங்கள்தான் இப்படிப்பட்ட புரிதல்களை ஏற்படுத்துகின்றன.

உண்மையில் புரட்சியாளர்கள் வன்முறை மீது நம்பிக்கை கொண்டவர்களா? ரத்த வெறி கொண்டவர்களா? உயிரின் மதிப்பை உணராதவர்களா?  பகத் சிங் பதிலளிக்கிறார். ‘மனித உயிர்களை வார்த்தைகளால் வடிக்க முடியாத அளவுக்கு புனிதமானதாகக் கருதுபவர்கள் நாங்கள். அது மட்டுமல்ல, மனிதகுல விடுதலைக்காக வெகுவிரைவில் எங்கள் உயிர்களையே நாங்கள் அர்ப்பணிக்க இருக்கிறோம். மனச்சாட்சியின் உறுத்தல் கொஞ்சமும் இன்றி கொலை செய்வதற்கென்றே பயிற்றுவிக்கப்பட்ட ஏகாதிபத்திய ராணுவத்தின் கூலிப் படைகள் போன்றவர்கள் அல்ல நாங்கள். மனித உயிர்களை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். ‘

பாராளுமன்ற வெடிகுண்டு வழக்கில் கைதான பகத்சிங், பி.கே. தத் இருவரும் அளித்த வாக்குமூலத்தில் இந்த முழக்கம் இடம்பெறுகிறது. இந்த வாக்குமூலம் 1929 ஜூன் 6 அன்று இந்த இருவர் சார்பாக அசாப் அலி என்பவரால் படிக்கப்பட்டது. (விடுதலைப் பாதையில் பகத்சிங், தொகுப்பு : சிவவர்மா, பாரதி புத்தகாலயம்).

ஏப்ரல் 8, 1929 அன்று பாராளுமன்றத்தில் பகத் சிங்கும் பி.கே. தத்தும் இரு வெடிகுண்டுகளை வீசியபோது, பிரதான எதிரியான சர் ஜான் சைமன் அங்குதான் இருந்தார். அவர்மீதே அந்தக் குண்டுகளை அவர்கள் வீசியிருக்கலாம். செய்யவில்லை. ஏன்? ‘எங்களை அழிப்பதன் மூலம் இத்தேசத்தை அழிக்கமுடியாது. நாங்கள் செய்த செயலுக்குரிய தண்டனையை ஏற்றுக்கொள்ளவும், தனிநபர்களை அழிப்பதன்மூலம் கருத்துகளைக் கொல்லமுடியாது என்பதை ஏகாதிபத்திய சுரண்டல்காரர்கள் அறியச் செய்வதற்கும் நாங்களாகவே வலிய முன்வந்து கைதானோம். ஒரு தேசத்தின் முக்கியத்துவமற்ற இரண்டு நபர்களை அழிப்பதன்மூலம் அத்தேசத்தையே நசுக்கிட முடியாது. நாங்கள் வலியுறுத்திக் கூற விரும்பும் வரலாற்றுப் படிப்பினை இதுதான்.’

புரட்சி என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று கேட்கப்பட்டபோது பகத் சிங் அளித்த விடை இது.

புரட்சி என்பது ரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. புரட்சி என்பதன் மூலம், வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.’

சரியான நேரத்தில் காப்பாற்றவில்லையெனில், இந்த நாகரிகத்தின் முழுக் கட்டமைப்பும் நொறுங்கி விழுந்துவிடும். எனவே இந்த நாட்டில் அடிப்படையான மாற்றம் தேவைப்படுகிறது. இதனை உணர்ந்தவர்களின் கடமை, சமுதாயத்தை சோஷலிசத்தின் அடிப்படையில் புதிதாக மாற்றியமைக்கவேண்டியதே ஆகும்.

புரட்சி என்பதன் மூலம், இவ்விதம் நிலைகுலையக்கூடிய அபாயம் இல்லாததும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுமான ஒரு சமூக அமைப்பை முதலாளித்துவத்தின் அடிமைத்தனத்தில் இருந்தும் ஏகாதிபத்தியப் போர்களின் கொடுமைகளில் இருந்தும் மனிதகுலத்தை விடுவிக்கவல்ல உலகக் கூட்டரசு ஒன்றை இறுதியாக ஏற்படுத்துவதையே நாங்கள் அர்த்தப்படுத்துகிறோம்.

புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை. சுதந்தரம் என்பது அனைவரின் அழிக்க முடியாத பிறப்புரிமை. தொழிலாளர்களே சமுதாயத்தை உண்மையில் தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பவர்கள். மக்கள் அதிகாரமே தொழிலாளர்களின் இறுதி இலக்கு.

இக்கொள்கைகளுக்காகவும் இந்த நம்பிக்கைகளுக்காகவும் எங்களுக்கு வழங்கக்கூடிய தண்டனையின் மூலம் ஏற்படும் எத்தகைய துன்பத்தையும் நாங்கள் வரவேற்கவே செய்கிறோம். புரட்சியின் பலிபீடத்தில் எங்களது இளமையை காணிக்கையாக்குகிறோம். எங்களது மகத்தான லட்சியத்தோடு ஒப்பிடுகையில் நாங்கள் செய்யும் எந்த தியாகமும் பெரிதல்ல. நாங்கள் மனநிறைவுற்றுள்ளோம். புரட்சியின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்.

1931 மார்ச் 22 அன்று பகத்சிங் எழுதிய கடைசி கடிதத்தில் காணப்படும் வரிகள் கீழே.

‘வாழ வேண்டும் என்ற ஆசை இயற்கையானதே. அது என்னிடமும் உள்ளது. அதை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால், அந்த ஆசை நிபந்தனைக்கு உட்பட்டது. ஒரு சிறைக் கைதியாகவோ நிபந்தனை வரம்புகளுக்கு உட்பட்டவனாகவோ வாழ எனக்கு விருப்பமில்லை… துணிச்சலோடும் புன்னகையோடும் நான் தூக்குமேடை ஏறினால், அது இந்தியத் தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டும். தங்களது பிள்ளைகளும் பகத்சிங்கைப் போல் ஆக வேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள். இதன் மூலம் நாட்டின் விடுதலைக்காக தஙுகளது உயிர்களையும் தியாகம் செய்யச் சித்தமாயிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் பிறகு, புரட்சிப் பேரலையை எதிர்கொள்வதற்கு ஏகாதிபத்தியத்தால் முடியாமல் போகும்.’

நம்மோடு சேர்ந்து மாவோயிஸ்டுகளும் பகத் சிங்கிடம் இருந்து சில பாடங்களைப் படித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

0

மருதன்

8 comments so far

 1. மண்குதிரை
  #1

  இந்தியாவிலேயே காந்திய வழி சிறந்தது என்றும் பகத் சிங்கின் வழி தீங்கானது என்றும் சொல்லப்பட்டது, இப்போதும் சொல்லப்பட்டு வருகிறது. பொதுப் புத்தியில் ஆழமாகப் பதிந்துள்ள சில பிம்பங்கள்தான் இப்படிப்பட்ட புரிதல்களை ஏற்படுத்துகின்றன……//

  காந்திய வழியில் கைதிகளின் ஊரிமைக்காக 114 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தது சண்டித்தனம் செய்த பகத்சிங் வழியில் போராடவா ??
  இல்லை அரசின் செயல்பாடுகளை கண்டிக்க வெடிகுண்டு தயாரித்து பாராளுமன்றத்தில் வீசிய பகத் சிங்கின் வழியில் போராடவா ??

 2. உண்மையான பட்டாம்பூச்சி
  #2

  கம்யூனிஸமே சாகசவாதம்தான்! புரட்சி ஆகாது!!

 3. N Ramadurai
  #3

  மாவோயிஸ்டுகள் பொதுவாக தங்கள் கைதிகளை நன்றாகவே நடத்துவார்கள் என்று கூறியிருக்கிறீர்கள். உலக்ம முழுவதிலும் ப்யங்க்ரவாதிகள் தாங்கள் கடத்திச் செல்பவர்களை மிக நன்றாகவே நடத்துவர். இது அவர்களது தந்திரம். கடத்திச் செல்லப்படுவர்கள் பயங்கரவாதிகளை ஆகா ஊகூ என்று பாராட்டுவ்தும் உண்டு. இதன் பெயர் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்.மேனன் இதனால் பாதிக்கப்படாமல் இருந்தால் சரி.

 4. என்கவுண்டர் ஏகாம்பரம்,
  #4

  கலக்டரை கடத்தலாம் தப்பில்லை. மதவாதம் குண்டு வைக்கலாம் தப்பில்லை. பிறகு எது தான் தப்பு. போலீஸ் இவனுகளை என்கவுண்டர் பண்ணா அது தப்பு. சரி தானா தம்பி.

 5. Velmurugan
  #5

  ஐயோ மருதன்,
  இப்போது நீங்கள் எதை எழுதினாலும் அதில் மூடத்தனமும் உளறி கொட்டும் பண்பும் அதிகமாகவே உள்ளது. ‘மாவோயிஸ்டுகள் பொதுவாக தங்கள் கைதிகளை நன்றாகவே நடத்துவார்கள்’ அட அட மாவோயிஸ்டுகலுக்கு என்ன ஒரு கரிசனம்… அவர்கள் சித்திரவதை செய்வது இல்லை மாறாக கொன்றுவிடுகிறார்கள். அலெக்ஸ் பால் மேனனின் இரண்டு பாதுகாவலர்களையும் சித்திரவதை செய்யாமல் நேரடியாக பரலோகத்திற்கு அனுப்பி வைத்து விட்டார்கள் புண்ணியாவான்கள். அது ஏனப்பா ஒரு மனிதனை கொல்லாமல் நீதிமன்றம், சிறைச்சாலை என்று சட்டப்படி நடப்பவர்கள் உங்களுக்கு அமெரிக்க கைகூலிகள் ஏகாதிபத்திய அடிவருடிகள்… கொன்றுபோடுபவர்கள் மீட்பர்கள்… மருதனை போன்ற முட்டாள்கள் இருக்கும் வரை… மாவோயிஸ்டுகலுக்கு எந்த கவலைகளும் இருக்காது… அவர்கள் தங்கள் அராஜகத்தை ‘மானுட விரோத’ மார்க்சிய கொலைகளின் sorry கொள்கையின் அடிப்படையில் தொடரலாம்.

 6. ஏ.பி.தீன்
  #6

  கம்யுனிசம் பெயரளவில் இருந்தே வெறுக்கப்பட்டும் அமெரிக்கக் கண்டத்தைப் போல் இங்கும் புரட்சி என்ற சொல் கெட்டவார்த்தை போல் பார்க்கப்படுகிறது. எல்லாம் சரியாகத்தான் போய் கொண்டிருப்பதாக எண்ணுகிறார்கள். புரட்சியின் அவசியம் தெரியாமல் இருக்கிறார்கள். புரட்சி என்றால் என்னவென்று இக்கட்டுரையில் தாங்கள் தெரிவிக்க முயன்றது. வரவேற்க்கத்தக்கது.

 7. பெவிகால் பெரியசாமி
  #7

  மருதன் அவர்களுக்கு அரசையும்,மாவோயிஸ்ட்களையும் விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள் உ-ம் ராமசந்திர குஹா என்ற எளிய உண்மை தெரியாமல் போயிற்றா இல்லை அருந்ததி ராய் எழுதியதை படித்து புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் போன்றவற்றை படித்து மூளை மழுங்கி விட்டதா.பினாயக் சென் எந்த வழியில் செல்கிறார்- காந்தி வழியா இல்லை புரட்சிகர வழியிலா.மாவோயிஸ்ட்களின் ஆதர்சமான மாவோ எதிரிகளை எப்படி நடத்தினார்.இல்லை ஸ்டாலின் ஆட்சியில் சுதந்திரம் இருந்ததா.

 8. பெவிகால் பெரியசாமி
  #8

  ’காந்தியின் அகிம்சை தோற்ற இடம் மிகச் சரியாக இதுவே. காந்தி மேற்கொண்ட உண்ணாவிரதங்கள் அனைத்துமே இந்தியர்களின் வன்முறை நடவடிக்கைகளுக்கு எதிராகத்தான். பிரிட்டனை அவர் தீவிரமாக எந்தவோரிடத்திலும் எதிர்த்ததில்லை’
  இப்படி எழுதும் நபரை எந்தப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: