வலி மிகும் இடங்கள்

வலி மிகும் இடங்கள்

கள்வரே கள்வரே என்று சன்னமான குரலில் ஷ்ரேயா கோஷல் கொஞ்சிக்கொண்டிருக்க தினேஷ் கணினித் திரையில் கவனமாக இருந்தான். “ஏண்டா,இலக்கணம் அவ்வளவு பிடிச்சுப் போச்சா. இந்த பாட்டையே கேட்கற” என்றபடியே அவனை இழுத்தான் சுரேஷ்.

“இதில் என்னடா இலக்கணம்?”

“இந்த பாட்டோட வரிகளை முழுசாக் கேட்டு இருக்கியா? வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதேன்னு வைரமுத்து எழுதி இருக்காரு. அப்படின்னா என்ன தெரியுமா?”

“நீயே சொல்லிடுடா”

“ஒரு சின்ன எடுத்துக்காட்டு சொல்லறேன். இடைத்தேர்தல் தெரியுமா?”

“ஆமாம் எதாவது தொகுதியில் எம்பி எம்எல்ஏ இறந்துட்டா வைப்பாங்க”

“அதே! ஆனா அதையே இடை தேர்தல்ன்னு சொன்னா?”

“ஆஹா! அந்த காலத்து சிம்ரன் அக்கா சிம்பிளா ஜெயிப்பாங்களே.”

“பார்த்தியா, ஒரு சின்ன த் எப்படி ஒரு வித்தியாசம் காட்டுதுன்னு. இதைத்தான் சொன்னேன். நீ பாட்டு கேட்கும்பொழுது.”

“இதுக்கும் அந்தப் பாட்டுக்கும் என்ன சம்பந்தம்?”

“இந்த மாதிரி கூடுதலா வர எழுத்துகள் நாலே நாலுதான் – க், ச், த், ப். இது நாலுமே வல்லின எழுத்துகள்தான் பார்த்தியா. அதனால இது கூடுதலா வரும் இடங்களை வலி மிகும் இடங்கள் அப்படின்னு சொல்லுவாங்க.”

“இது கூடுதலா வரக்கூடாத இடங்கள்தான் வலி மிகா இடங்களா?”

“அதே! இப்போ புரியுதா வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே அப்படின்னா என்னன்னு”

“தமிழுக்குத் தெரிஞ்சா என்ன புண்ணியம். என்னை மாதிரி ஆளுங்களுக்குத்தானே தெரியணும். இல்லை நாங்க எழுதறதைப் பார்த்தா தமிழுக்குக்கூட தமிழ் மறந்து போயிடும்.”

“இதுக்கு ரொம்ப ஈசியா ஒரு வழி இருக்கு. மு. வரதராசன் அப்படின்னு ஒரு பெரியவர். நிறைய கதை கட்டுரை எல்லாம் எழுதினவரு. அவரு என்ன சொல்லி இருக்காரு தெரியுமா? சொல்லிப் பார், புரிந்து கொள் அப்படின்னு சொல்லி இருக்கார். அதாவது சொல்லிப் பார் அப்படின்னு சொன்னா அங்க ப் வருது. புரிந்து கொள் அப்படின்னு சொன்னா வரலை. சிம்பிளா ஒரு விதிமுறை வேணுமுன்னா அந்த வார்த்தைகளை உச்சரித்துப் பாரு. அப்பவே அங்க வலி மிகுமா மிகாதான்னு தெரியும் அப்படின்னு சொல்லறாரு.

அதாவது, உச்சரிப்பில் முதல் வார்த்தையோட கடைசியில் ஒரு அழுத்தம் இருந்தா அங்க வலி மிகும். உதாரணமா தங்க மகன் அப்படின்னு சொன்னா நடுவில் இல்லாத அழுத்தம் தங்கக்கட்டி அப்படின்னு சொன்னா வருது பாரு.”

”ஆனா இது ஒரு trial and error மாதிரி இருக்கே. இதுக்குன்னு விதிமுறை எல்லாம் கிடையாதா?”

”இல்லாமலா? சொல்ல ஆரம்பிச்சாத் தாங்க மாட்ட. அவ்வளவு இருக்கு. ஆனா இருக்கிறது எல்லாத்தையும் பத்திப் பேசாம நமக்கு இப்போ தேவையா இருக்கிறதைப் பத்தி மட்டும் சொல்லறேன். முதலில் சொன்ன மாதிரி இந்த மாதிரி கூடுதலா வரக்கூடிய எழுத்துகள் க், ச், த், ப் என்ற நான்கு எழுத்துகள்தான். அதனால இரண்டாவதா வர வார்த்தை இந்த நாலு மெய் கொண்ட உயிர்மெய் எழுத்தில்தான் ஆரம்பிக்கணும். புரியுதா?”

“க், ச், த், ப் – ஞாபகம் வைக்க ஒரு நல்ல ஐடியா வேணுமே! கட்டி ச் தரும் பெண் அப்படின்னு ஞாபகம் வெச்சுக்க வேண்டியதுதான்!”

“வேற நினைப்பே கிடையாதாடா உனக்கு?! காப்பி சூடாகத் தரும் பேரர் அப்படின்னு கூடத்தான் சொல்லலாம். அதனாலதான் நாம முன்னாடி பார்த்த உதாரணத்தில் தங்கக்கட்டியில் மிகுந்த வலி, தங்க மகன் என்றபொழுது மிகாமல் ஆச்சு.”

“புரியுது. இரண்டாவது வார்த்தை கசதப மாதிரி உயிர்மெய் கொண்டு தொடங்கலைன்னா வலி மிகாது. ஓக்கே. அப்புறம்?”

“இனிமே என்ன செய்யப் போறேன்னா, இதுக்கு நிறைய விதிகள் இருக்கு. அதோட டெக்னிகல் மேட்டரை எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு, எவ்வளவு சிம்பிளாச் சொல்ல முடியுமோ அப்படிச் சொல்லறேன். சரியா? முதல்ல, எதையா குறிப்பிட்டு சொல்லும்பொழுதோ, கேட்கும்பொழுதோ நாம அந்த, இந்த, எந்த அப்படின்னு எல்லாம் கேட்கறோம் பாரு. இப்படிச் சொல்லும்பொழுது வலி மிகும்.

“உதாரணமா கொத்தனார் நோட்ஸ் நல்லா இருக்கு அப்படின்னு சொல்ல, இந்தப் பத்தி நல்லா இருக்குன்னு சொல்லணும். நானே நாளைக்கு ஒரு புத்தகம் எழுதினா அந்தப் புத்தகமும் நல்லா இருக்கு அப்படின்னு சொல்லணும். யாராவது எந்தப் புத்தகம்ன்னு கேட்டா எல்லாம் இந்தக் கொத்ஸ் எழுதின புக்குதான்னு சொல்லணும்.”

“அடப்பாவி, ரெண்டு வாரம் எழுதலை… அதுக்குள்ள புத்தகத்துக்குப் போஸ்டரா? ஆனா சொன்ன மேட்டர் புரியுது. அந்த, இந்த, எந்த அப்படின்னு வந்தா வலி மிகும்.”

“அந்த, இந்த மட்டுமில்லை, அந்தக் காலம் என்பதை அக்காலம்ன்னு சொல்லுவாங்க. இந்தப் படத்தை இப்படம்ன்னு சொல்லுவாங்க இல்லையா. இந்த மாதிரி அக்காலம், இப்படம், எக்கணம் அப்படின்னு சொல்லும்பொழுதும் வலி மிகும். அது மட்டுமில்லை அப்படி, இப்படி, எப்படி, அந்த, இந்த, எந்த – இது எல்லாம் வந்தால் கூட வலி மிகும்.”

“அது தெரியுமே. அதான் அப்படி ப் போடு போடு தன்னாலே அப்படின்னு இளைய தளபதியே சொல்லி இருக்காரே! அப்படி ப் போடாதே போடாதேன்னு சொல்லலையே! எனவே, அப்படி என்று வந்தால் வலி மிகும் மை லார்ட்!”

“தலையெழுத்து! உனக்கெல்லாம் இலக்கணம் சொல்லிக் குடுக்கக் கிளம்பினேன் பாரு, எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.”

“கோச்சுக்காதேடா! இப்படி எல்லாம் கொஞ்சம் தமாஷ் செஞ்சா எனக்கு நல்லா நினைப்பில் இருக்கும்டா. அதான் அப்படி எல்லாம் நடுவில் சொல்லிக்கிறேன். நீ மேல சொல்லு.”

“அடுத்ததா நாம முன்னாடி குற்றியலுகரம் பார்த்தோம் ஞாபகம் இருக்கா? அந்த மாதிரி குற்றியலுகர வார்த்தைகளுக்குப் பின்னாடி க்ச்த்ப் போன்ற மெய்யில் தொடங்கும் வார்த்தைகள் வந்தாலும் வலி மிகும். ஏண்டா குழப்பறன்னு நீ ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லறேன். பாட்டுப் பாடு.”

“நீயே பாடா படுத்தற. இதில் நான் வேற பாட்டுப் பாடணுமா?”

“உன்னைப் பாடச் சொல்லலைடா. பாட்டுப் பாடுன்னு குற்றியலுகரத்துக்குப் பின்னாடி எப்படி எக்ஸ்ட்ரா மெய்யெழுத்து வருது பாருன்னு எடுத்துக்காட்டினேன்.”

“நல்லாக் காட்டின போ! தேக்கு மரம் அப்படின்னு சாதாரணமா வந்தாலும் தேக்குப் பலகை அப்படின்னு மாறிடும். காரணம் மரம் நம்ம கசதப சூத்திரத்தில் இல்லை ஆனா பலகை இருக்கு. சரியா?”

“ரொம்பச் சரி. இவ்வளவு நேரம் சொன்னதைக் கொஞ்சம் சேர்த்துச் சொல்ல வந்தா – அந்தத் தேக்குப் பலகை – இதுல அந்த பின்னாடியும் சரி, தேக்கு பின்னாடியும் சரி, வலி மிகுந்து வந்திருக்கு பாரு. ஆனா ஒரு கண்டிஷன் இருக்கு. எல்லாக் குற்றியலுகரத்துக்குப் பின்னாடியும் வலி மிகாது. அந்தக் குற்றியலுகரத்துக்கு முன்னாடி ஒரு வல்லின மெய் இருக்கணும். அதாவது தேக்கு, பாட்டு, பேச்சு, காட்டு இப்படி வரணும். அதில்லாம ஒரு மெல்லின எழுத்து வந்தால் பொதுவா வலி மிகாது.”

“பொதுவான்னா? அப்போ அங்கவும் எதாவது எக்ஸெப்ஷன் இருக்கா?”

“இருக்கே. சில சமயங்களில் குரங்குக்குட்டி, மருந்துக்கடை, பாம்புப்புற்று இப்படி சில இடங்களில் மட்டும் வலி மிகுந்து வரும். நான் முன்னாடி சொன்ன மாதிரி இந்த வார்த்தைகளை உச்சரிக்கும்போதே இங்க வலி மிகும் அப்படின்னு ஈசியாத் தெரியும்.”

“ம்ம்.”

“என்னடா சத்தமே அமுங்கிப் போச்சு? இன்னிக்கு கொஞ்சம் ஓவர் டோஸ் ஆச்சோ?”

”ஆமாண்டா. என்னமோ ரொம்பக் கேட்டுட்ட மாதிரி இருக்கு.”

“சரி, இன்னிக்கு இதோட நிறுத்திக்கலாம். போறதுக்கு முன்னாடி இன்னிக்குத் தெரிஞ்சுக்கிட்டதைப் பார்க்கலாமா?”

“ம்ம்.”

“பாயிண்ட் பாயிண்டாச் சொல்லறேன்.

* ரெண்டு வார்த்தைக்கு நடுவில ஒரு மெய்யெழுத்து எக்ஸ்ட்ராவா வந்தா அப்போ வலி மிகும் அப்படின்னு சொல்லறோம்.
* க் ச் த் ப் – இந்த நாலு மெய்யெழுத்துதான் எக்ஸ்ட்ராவா வரும்
* எதாவது ஒண்ணைக் குறிப்பிட்டுச் சொல்லும்பொழுது வலி மிகும் – அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி
* வல்லினத்தைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரத்தோட சேரும்பொழுது வலி மிகும் – பாட்டு, காட்டு, பேச்சு, மூச்சு
* சில சமயங்களில் மட்டும் மற்ற குற்றியலுகரத்துக்குக் கூடவும் வலி மிகும் – மருந்து பாம்பு குரங்கு கன்று”

”நாலஞ்சு பாயிண்ட்தான் சொல்லி இருக்க. அதுக்கே மூச்சு முட்டுதே.”

“ நிதானமாப் போகலாம். என்ன அவசரம். மீதியை அடுத்த வாட்டி சொல்லித் தரேன். இப்போ வா, போய் வேலையைப் பார்க்கலாம்.”

திகாலை நேரம். ஒரு விவசாயி தன்னுடைய மாட்டை விற்பதற்காகச் சந்தைக்குக் கிளம்பினார். கூடவே அவருடைய சின்னஞ்சிறு மகனும் ஒட்டிக்கொண்டான்.

அந்த விவசாயிக்குத் தன்னுடைய மகன்மீது பாசம் அதிகம். ’சின்னக் குழந்தை நடந்து சிரமப்படவேண்டாமே’ என்று அவனைத் தூக்கி மாட்டின்மீது உட்காரவைத்தார். மாட்டை நடக்கவிட்டுப் பின்னாலேயே சென்றார்.

சிறிதுதூரம் போனதும் ஒரு காய்கறிக்கடை எதிர்ப்பட்டது. அங்கே கல்லாவில் உட்கார்ந்திருந்தவன், ‘என்ன ஆளுய்யா நீ? வயசுப் பையன் அவன்பாட்டுக்கு நடந்து வருவான். உனக்குதான் ரொம்ப தூரம் நடந்தா களைப்பாயிடும். பேசாம அவனைக் கீழே இறக்கிட்டு நீ மாட்டுமேலே உட்கார்ந்துக்கோ’ என்றான்.

விவசாயிக்கு அவன் சொல்வது நியாயமாகப் பட்டது. மகனை இறங்கச் சொல்லிவிட்டு இவர் மாட்டின்மீது ஏறிக்கொண்டார். பயணம் தொடர்ந்தது.

சற்றுத் தொலைவில் ஒரு கூடைக்காரி வந்தாள். ‘பாவம், பச்சைப்புள்ளை, அதை நடக்கவெச்சுட்டு நீ ஒய்யாரமா மேலே உட்கார்ந்துகிட்டு வர்றியே, நீயெல்லாம் மனுஷனா?’ என்று காறி உமிழ்ந்தாள்.

விவசாயி யோசித்தார். எதுக்கு வம்பு? மகனையும் தூக்கித் தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். மறுபடியும் பயணம் தொடர்ந்தது.

இப்போது இன்னொருவன் எதிரே வந்தான். ‘வாயில்லா ஜீவன், அதுமேல 2 பேர் உட்கார்ந்து சவாரி போறீங்களே, உங்களுக்கெல்லாம் இரக்கமே கிடையாதா?’ என்றான்.

அதற்குமேல் விவசாயிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தானும் இறங்கிக்கொண்டார். மகனையும் இறக்கிவிட்டார். மாடு முன்னே நடக்க இவர்கள் இருவரும் பின்னால் நடந்தார்கள்.

இப்போதும் ஒருவன் கருத்துச் சொல்ல வந்தான். ‘ஜாலியா மாட்டுமேல உட்கார்ந்துகிட்டுப் போறதை விட்டுட்டு இப்படி நடந்து வர்றீங்களே, உங்களுக்கென்ன பைத்தியமா?’ என்றான்.

முன்னால் போனால் கடிக்கும். பின்னால் போனால் உதைக்கும். அந்த வினோத மிருகம்தான் இந்த உலகம். ஓரளவுக்குமேல் அடுத்தவர்களுடைய கருத்துகள், விமர்சனங்களை நினைத்துக் கவலைப்படுவதை நிறுத்தவேண்டும். அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஏற்ப நம்முடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ளாமல் ரிமோட் கன்ட்ரோலைக் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும். அப்படிச் செய்யாதவர்கள் மனிதர்களே அல்ல, நூலில் ஆடும் பொம்மைகள்!

5 comments so far

 1. Ganesh
  #1

  உள்ளே பாத்தாதான் மேட்டர் தெரியுது. வலின்னு போட்டு ”ஐசு” படம் போட்டாதான் படிக்க ஆளு வரும்னு சொல்றீங்க.

  பாலகுமரன் தமிழ் இலக்கணம் படிக்கும் போது சோற்றில் கல் என்பாராம். அவர் தாய் சோற்றுக்குள் வைத்து முழுங்கு என்பாராம்.

  நல்ல idea. சில இடங்கள் புரியவில்லை. ஆனாலும் கல்லை முழுங்கித்தானே ஆக வேண்டும்.

 2. திவா
  #2

  அட! வலி மிகும் இடங்கள் ன்னா வலது முட்டி, இடது முட்டி, கழுத்து, இடுப்பு ன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். 😛 😛

 3. ராமதுரை
  #3

  மதிப்புக்குரிய மிஸ்டர் கொத்ஸ்
  தாங்கள் கட்டாய்ம் இத் தொடர் முடிவில் இவற்றை ஒரு புத்தகமாக் வெளியிட வேண்டும். நான் பள்ளியில் சம்ஸ்கிருதம் படித்தவன். தமிழ் இலக்கணம் படிக்கவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் இலக்கணம் தெரிந்து கொள்ள பல நூல்களை வாங்கிப் புரட்டிய போது தமிழ் இலக்கணம் என்பது தமிழ்ப் பண்டிதர்கள் தவிர யாருக்கும் தெரியக்கூடாது என்பது போல அவை எழுதப்பட்டிருந்தன. எடுத்துக்காடாக ”ஈற்றில் வரும்” என்பதன் பொருள் என்ன என்று புரிந்து கொள்ள நீண்ட நாள் ஆயிற்று.இலக்கணம் பற்றி எழுதும்போது அது இலக்கண பாஷையில் இருந்தாக் வேண்டும் என்பதில்லை. உங்கள் பகுதியைப் படித்து வருவதன் மூலம் தமிழ் இலக்கணத்தின் அருமையைப் புரிந்து கொள்ள முடிகிறது. இது வரை யாரும் செய்யாத மாபெரும் தொண்டினை செய்து வருகிறீர்கள்
  ராமதுரை

 4. unmaivirumpi
  #4

  ஐயா, இம்முறை நீங்க நடத்திய வலிமிகும்/மிகா வார்த்தைகள் பற்றி தெளிவாக விளக்கி உள்ளீர்கள், மிக்க நன்றி!! சின்ன வயசுல படிச்சேனானு கூட ஞாபகம் இல்ல, ஆனா இந்த இளமை பருவத்தில (!!) நீங்க சொல்லிகொடுக்கறது நல்ல லேசா புரியுது, உபயோகமாகவும் இருக்கு. நீங்க வேற ஐஸ் படம் போட்டுடீங்களா, இனிமே ஐஸ்ஸ பார்த்தா வலிமிகம் அல்லது மிகா இடம் ஞாபகம் வந்திரும் :-)), ஜன்மத்துக்கும் மறக்காது. நீங்க புக் வெளியிடும் போது எனக்கொரு காப்பி. தொடருங்கள் உங்கள் இலக்கண சேவை, நன்றி.

 5. குசும்பன்
  #5

  ரொம்ப உபயோகமாக இருக்கு.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: