காஷ்மிர் டைரி – 1

 

 

‘உலகத்திலுள்ள தலைசிறந்த விஷயம் ஊர்சுற்றுவதுதான்’ என்கிறார் ராகுல் சாங்கிருத்யான். இரண்டு சேர் நெய்யை கீழே கொட்டிவிட்டதால் பயந்துகொண்டு, 22 ரூபாயை வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியேறிய ராகுல்ஜி, தன் வாழ்நாளின் பெரும்பாலான பகுதியை ஊர்சுற்றுவதில்தான் செலவிட்டார். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் விரியும் அவருடைய சுயசரிதையை இப்போது படித்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. பிரயாணச் செலவுகளை விட்டுவிடுங்கள், அடுத்த வேளை உணவுக்குக்கூட கையில் காசிருக்காது. இருந்தும் துணிச்சலாக கிளம்பிவிடுவார்.

காசியில் தொடங்கிய அவர் பயணம், இலங்கை, ஐரோப்பா, அமெரிக்கா என்று படர்ந்து சோவியத் யூனியனில் முடிவடைந்தது. ரகுவம்சமும் லகுகௌமுதியும் அஷ்டவக்ர கீதாவும் பகவத் கீதையும் வாசித்துக்கொண்டிருந்த ராகுல்ஜி, மார்க்ஸையும் லெனினையும் கண்டுகொண்டது பயணங்கள் வாயிலாகத்தான். தன் வாழ்வை மட்டுமல்ல ஒவ்வொருவரின் வாழ்வையும் மாற்றியமைக்கக்கூடிய சக்தி பயணங்களுக்கு உண்டு என்பது ராகுல்ஜியின் நம்பிக்கை.

ராகுல்ஜியைப் போல் பயணம் செய்வது இன்றைய தேதியில் சாத்தியப்படாது. முகம் தெரியாத பலரும் வாருங்கள் என்று வரவேற்று குதிரையிலும் பேருந்திலும் ரயில் வண்டியிலும் அவரை அழைத்துச் செல்வார்கள். வரவேற்பு கிடைக்காவிட்டால் மகிழ்ச்சியுடன் நடக்க ஆரம்பித்துவிடுவார். மாநில எல்லைகளை மட்டுமல்ல, நாட்டு எல்லைகளையும்கூட நடந்தே கடந்திருக்கிறார். என் வீட்டில் தங்கிக்கொள்ளலாமே என்று அந்நியர்கள் வரவேற்பார்கள். சத்திரங்களும் பௌத்த மடங்களும் இருந்தன. எதுவும் சிக்காவிட்டால் கண்ணில் படும் இடம் படுக்கையறையாக மாறும். உணவு ஒரு பிரச்னையே இல்லை.

விசா வாங்கி செல்லும் காலம் வருவதற்குள் காஷ்மிர் செல்வதற்கான வாய்ப்பு சென்ற மாதம் கிடைத்தது. ஸ்ரீ நகரில் தங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பே இணையம் வாயிலாக சகாய விலையில் ஓட்டல் அறைகளை புக் செய்துவிட்டோம் (அந்த அறையை மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டது தனிகதை). மார்ச் 13 மாலை கிளம்பி, அன்றைய இரவை டெல்லியில் ஓர் உறவினர் வீட்டில் கழித்துவிட்டு, மறுநாள் டெல்லியைக் கொஞ்சம் சுற்றிவிட்டு, 15 தொடங்கி 18 வரை காஷ்மிரில் ஊர்சுற்றுவது திட்டம். (கோகுலம்) சுஜாதா, (குங்குமம்) வள்ளிதாசன், தோழர்கள் சுத்தானந்தம், மோகனா என்று 12 பேர் கொண்ட ஒரு குழுவில் நானும் என் மனைவியும் இணைந்துகொண்டோம்.

நாங்கள் தங்கியிருந்தது தெற்கு தில்லியில் உள்ள சஃப்தர்ஜங் டெவலப்மெண்ட் ஏரியாவில் (எஸ்டிஏ). சென்று சேர்வதற்குள் நள்ளிரவு ஆகிவிட்டதால், மறுநாள் காலை ஆறு மணிக்கு (இதமான குளிர்) கண்விழித்து, அருகிலுள்ள தெருக்களைச் சுற்ற ஆரம்பித்தோம்.

இந்தியாவைப் புரிந்துகொள்ள டெல்லியை ஒருமுறை வலம் வந்தால் போதும். ஒரு பக்கம் அகலமான, சுத்தமான சாலைகள், பளபளக்கும் ஷாப்பிங் மால்கள். பிரதான சாலையைக் கடந்து ஒரு கிளைப் பாதையைப் பிடித்து, ஒரு சந்துக்குள் நகர்ந்தால் சாக்கடைகள், குப்பைக்கூளங்கள், பாலிதின் விரித்து படுத்துறங்கும் மக்கள்.

சில வாரங்களுக்கு முன்பு, உலகப் புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக பிரகதி மைதானில் இருந்து சாணக்கியபுரா வழியாக விமான நிலையம் சென்றபோது இந்த வேறுபாடு முகத்தில் அறைந்தது. வழுக்கிக்கொண்டு ஓடும் கப்பல் சைஸ் கார்கள், நெரிசலில் சிக்கி நிற்கும்போது, கண்ணாடி கதவைத் தட்டி, அலுமினியத் தட்டை நீட்டுகிறார்கள். கந்தல் ஆடை பெண்களும் பரட்டைத் தலை குழந்தைகளும் சேதன் பகத், சிட்னி ஷெல்டன் புத்தகங்களை பிளாஸ்டிக் கவருக்குள் போட்டு விற்றுக்கொண்டிருந்தார்கள். கண்ணாடி கதவை கீழிறக்கி, பைசாக்களை உதிர்த்துவிட்டு சிறிது நகர்ந்தால், நந்தவனமாக சாலை விரிகிறது. பிரத்தியேகப் பூங்காக்களுடன் சீனத் தூதரகமும் பிரெஞ்சு தூதரகமும் ஹங்கேரிய தூதரகமும் கடந்து செல்கின்றன. அடுத்த சிக்னலில் மீண்டும், அம்மா தாயே!

இதமான குளிர். ஐ.ஐ.டி வளாகத்தில் ஸ்வெட்டர், கேன்வாஸ் ஷூக்களுடன் குதித்துக்கொண்டும் ஓடிக்கொண்டும் பாட்டு கேட்டுக்கொண்டும் டெல்லிவாசிகள் விரைந்துகொண்டிருந்தனர். ஆட்டோக்களைவிட ரிக்ஷாக்கள் அதிகம். நடைபாதை தேநீர் கடைகள் கேக், பன் தேநீருடன் சேர்த்து சுவையான குக்கீஸ் வகைகளையும் விற்றுக்கொண்டிருந்தன.

ஏசியாட் கிராமம், சஃப்தர்ஜங் செல்லும் பரபரப்பான நெடுஞ்சாலையை ஓட்டியுள்ள நடைபாதையில் மரத்தடியில் ஒரு நாற்காலி போட்டு, முடி திருத்திக்கொண்டிருந்தார் ஒரு கடைக்காரர். அதே மரத்தில் ஆணியடித்து கண்ணாடி மாட்டியாகிவிட்டது. உபகரங்களுக்கு ஒரு கையடக்கப் பெட்டி.

ஏழு மணிக்கு எழுந்து சாக்ஸ் மாட்டி, செருப்பு போட்டு பட்டன் பால் வாங்கிவந்து, குக்கர் வைத்து டெல்லி மக்கள் பொழுதை ஆரம்பிக்கிறார்கள். எஸ்டிஏ என்பது இங்குள்ள வீட்டு வசதி வாரியம் போன்றதுதான். ஆனால், ஒவ்வொரு அடுக்குமாடி கட்டடத்துக்கு அருகிலும் ஒரு பூங்கா இருக்கிறது. மரங்களும் பூச்செடிகளும் சாலையின் இரு பக்கங்களிலும் அணிவகுக்கின்றன. இரண்டு அறைகள் கொண்ட ஒரு வீடு, ஒரு கோடி ஆகும் என்றார்கள்.

அருகிலுள்ள சரோஜினி மார்க்கெட்டில் ஜீன்ஸ்களையும் (டெல்லியின் தேசிய ஆடை) டி ஷர்டுகளையும் குவித்துவைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள். கொட்டை எழுத்தில் 300 என்று எழுதியிருந்தால், இருபத்தைந்துக்குத் தருகிறாயா என்று ஆரம்பிக்கிறார்கள். பல்வேறு கிளை சந்துகளையும் குறுகலான வழித்தடங்களையும் கொண்ட இந்தச் சந்தையில் மிகச் சரியாக ஒரு வழியில் நுழைந்து, அதே வழியில் வெளியேறுவது சவாலான செயல்.

மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு டெல்லி விமான நிலையம் சென்றடைந்தோம். காஷ்மிரில் எதுவும் கிடைக்காது, இது இருந்தால்தான் பிழைக்கமுடியும் என்று சொல்லி ஒரு புட்டியில் வத்தக்குழம்பு ஊற்றி, நான்கு பிளாஸ்டிக் கவர் சுத்தி, ரப்பர் பேண்ட் போட்டு பெட்டியில் வைத்துவிட்டார்கள்.  இரண்டு கட்ட எக்ஸ்ரே பரிசோதனையைக் கடந்து வத்தக்குழம்புடன் காஷ்மிர் சென்றடைவது சாத்தியமா? கையெறிகுண்டு கொண்டு செல்லும் உணர்வுடன் விமான நிலையம் சென்றடைந்தோம். ராகுல்ஜி வீட்டை விட்டு ஓடிச் சென்றதன் காரணம் புரிந்தது.

(தொடரும்)

11 comments so far

 1. Karthikeyan G
  #1

  //விசா வாங்கி செல்லும் காலம் வருவதற்குள் காஷ்மிர் செல்வதற்கான வாய்ப்பு சென்ற மாதம் கிடைத்தது.//காம்ரேடுகளின் எண்ணம் நிச்சயம் ஈடேராது.. நீங்கள் ஒரு வேலை சீனாவின் குடிமகன் ஆனால் அப்போது உங்களுக்கு விசா தேவை.. காஷ்மீர் செல்ல மட்டும் அல்ல.. இந்தியாவினுள் நுழைய … 🙂

 2. S.Rengasamy
  #2

  ஏசியாட் கிராமம், சஃப்தர்ஜங் செல்லும் பரபரப்பான நெடுஞ்சாலையை ஓட்டியுள்ள நடைபாதையில் மரத்தடியில் ஒரு நாற்காலி போட்டு, முடி திருத்திக்கொண்டிருந்தார் ஒரு கடைக்காரர். அதே மரத்தில் ஆணியடித்து கண்ணாடி மாட்டியாகிவிட்டது. உபகரங்களுக்கு ஒரு கையடக்கப் பெட்டி.ஒரு நல்ல நகரம் நாலுவிதமான, அதே நேரத்தில் கௌரவமான ஜீவனோபாய வாய்ப்புக்களை வழங்க வேண்டும்.
  பரபரப்பான டெல்லி சாலை முடிதிருத்துவோருக்கும் ஒரு வாய்ப்பு தந்துள்ளது.சாலையில் முடிதிருத்துவது வறுமையின் அடையாளமாக தெரியலாம். எனக் கென்னவோ பெருநகரங்களின் அத்துனை அவலங்களுக்கு மத்தியில் தெரியும் நல்ல நம்பிக்கை

 3. Dr. P.Saravanan
  #3

  நண்பரே முதல்பகுதியே சிறப்பாக உள்ளது. இனி வரும் பகுதிகளும் சிறப்பாக அமையும். தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்.
  முனைவர் ப.சரவணன்

 4. ஹரப்பn
  #4

  ‘விசா வாங்கி செல்லும் காலம் வருவதற்குள் காஷ்மிர் செல்வதற்கான வாய்ப்பு சென்ற மாதம் கிடைத்தது’.
  வெளிநாடு ஒன்றில் குடியேறப் போகிறீர்களா-எங்கே-க்யுபா,சீனா,வெனிசூலா?

 5. rathnavelnatarajan
  #5

  அருமையான பதிவு.
  நன்றி.

 6. களிமிகு கணபதி
  #6

  தங்களைக் கம்யூனிஸ்ட்டுகளாக மாற்றிக் கொள்பவர்களுக்குக் கொஞ்சம்கூடத் தாய்நாட்டுப் பற்று இருக்காது என்பது தெளிவு. காஷ்மீருக்கு விசா வாங்கிக்கொண்டு போகும் காலம் வரப்போகிறது என்று ஆரம்பத்திலேயே தோழர். மருதர் எழுதி விட்டார்.

  சீனக் குடிமகனான மருதனின் இந்தத் தொடர் எப்படி இருக்கும் என்பது தெரிந்ததுதான். தீவிரவியாதிகளை இந்தியா கொடுமைப் படுத்துகிறது. அதனால் அவர்கள் தீவிரவாதிகள் ஆனார்கள் என்று எழுத நல்ல வாய்ப்பு. கம்யூனிச அபத்தங்களுடன் இந்தத் தொடர் இருக்கும்.

  உதாரணமாக, தோழர் மருதர் சொல்கிறார். இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் டெல்லிக்குப் போக வேண்டுமாம் – அங்குதான் காரில் போகிறவர்களும் அவர்களிடம் பிச்சை எடுப்பவர்களும் இருப்பார்களாம்.

  கம்யூனிஸ்ட்டுகளைப் பார்த்துக் காப்பி அடித்த நேருவிய சோஷியலிச நாட்டில் இப்படித்தான் இருக்கும்.

  இதை எழுதும் மருதன் காரில் இருந்து இதைப் பார்த்தாரா, அல்லது பிச்சைக்காரர்களோடு பலவீட்டுச் சாப்பாடு சாப்பிடும்போது இதைப் பார்த்தாரா என்பது தெரிய வேண்டும்.

  காஷ்மீருக்குப் போகும் வசதி படைத்தத் தோழர்கள் ஏழ்மை பற்றி புளிச்ச ஏப்பம் விடுவது எப்போதும் நடப்பதுதான்.

  இந்தச் சமநிலையற்ற சமூகத்தை தோழர் மருதர் டெல்லி வரை போய்த்தான் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அவர் ஊரிலேயே அந்த மாதிரி இருப்பது அவரது கண்ணுக்குப் படவில்லை போலும் !

  இதில் தன்னை ராகுல சங்க்ருத்யாயன் அளவில் தூக்கிப் பிடித்துக் கம்யூனிசப் பீடந்தாங்கியாக வேறு காட்ட ஆரம்பித்தாயிற்று. ஏரோப்ளேனில் போய்க்கொண்டே ராகுல சங்க்ருத்யாயனின் நடைப்பயணம் பற்றி எழுத அவர்களுக்குத்தான் கை கூசாமல் வரும்.

  பிழைக்கத் தெரிந்தவர்கள்தான் தோழர்கள்.

  .

 7. ராஜா
  #7

  சில வாலை நிமித்த முடியாது.

 8. right
  #8

  விசா வாங்கி செல்லும் காலம் வருவதற்குள் காஷ்மிர் செல்வதற்கான வாய்ப்பு சென்ற மாதம் கிடைத்தது’////

  ரஷ்யா துண்டு துண்டா உடைஞ்சும் – இந்தியா நல்லா STRONGa இருக்கேன்னு வயிற்றெரிச்சல் – இஙகே சில பேர்வழிகளுக்கு இருக்கு. அதுல இந்த கட்டுரையாளனும் ஒரு ஆள். துரோக எண்ணங்கள் இந்தியாவுக்கு புதுசா,

 9. அ. சரவணன்
  #9

  //இந்தச் சமநிலையற்ற சமூகத்தை தோழர் மருதர் டெல்லி வரை போய்த்தான் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அவர் ஊரிலேயே அந்த மாதிரி இருப்பது அவரது கண்ணுக்குப் படவில்லை போலும் !

  இதுதான் என்னுடைய கருத்தும்.

  எனினும், கட்டுரை நன்றாகவே உள்ளது. தொடருங்கள்… காஷ்மீரைப் பற்றி கட்டுரையிலேனும் தெரிந்து கொள்கிறோம். சமீபத்தில் தொலைக்காட்சியில் தேன்நிலவு படம் பார்த்தேன். அதில் காட்டியிருக்கும் அளவிற்கு கூட மணிரத்னம் ரோஜாவில் காட்டியிருக்க மாட்டார். சரியான வியாபாரி…ஏமாற்று பேர்வழி!

  நீங்களாவது படங்களுடன் எழுதுங்கள் (சீன புராணம் இல்லாமல் 🙂 )

 10. கோ.சந்திரசேகரன்
  #10

  இத்தனை காரமிகு விமர்சனம் கண்ட பிறகும் தோழர் தொடர்வாரா ?

 11. rada
  #11

  why this is NOT continued?

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: