காலட்சேபம், கீலட்சேபம்!

அண்ணா மரணம் அடைந்திருந்த சமயத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் நெய்வேலி பகுதியில் தொடர் சொற்பொழிவில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு கூட்டத்தில், ‘ஆண்டவனை நம்பாதவர்கள் அமெரிக்காவுக்கே போனாலும் டாக்டர் மில்லரே வந்தாலும் இப்படித்தான் முடிவு ஏற்படும்’ என்று பேசியதாக செய்திகள் கசிந்தன. அண்ணாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயர் டாக்டர் மில்லர்.

போதாது? அண்ணாவை இழிவுபடுத்திவிட்டதாகக்கூறி திமுக தொண்டர்கள் கிருபானந்த வாரியார் மீது தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, எம்.ஜி.ஆர் தொண்டர்கள் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக எம்.ஜி.ஆருக்குத் தகவல்கள் வந்தன. தாக்குதலின் தொடர்ச்சியாக வாரியாரின் சொற்பொழிவுக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. போலீஸாரின் உதவியுடன் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டார் வாரியார்.

வாரியார் தாக்கப்பட்ட செய்தி சட்டமன்றத்தில் எதிரொலித்தது. வாரியாரைத் தாக்கியது தவறு என்று ஆவேசமாகப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் கொறடாவான சட்டமன்ற உறுப்பினர் விநாயகம். அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் வாரியார் பேசியது தவறுதானே என்று எதிர்க்கேள்வி எழுப்பினர் திமுகவினர்.

பிரச்னை சட்டமன்றத்தில் எழுந்த சமயத்தில் வாரியாரைத் தாக்கியவர்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்தான் என்ற செய்தி எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. வாரியார் பேசியது தவறுதான். என்றாலும் அவரைத் தாக்கியது மோசமான காரியம். அந்தப் பெரியவரின் மனம் புண்பட்டிருக்கும். அவரைச் சமாதானம் செய்யும் வகையில் ஏதேனும் செய்யவேண்டும் என்று விரும்பினார் எம்.ஜி.ஆர். உடனடியாக ம.பொ.சியைத் தொடர்புகொண்டுபேசினார் எம்.ஜி.ஆர். வாரியாரை சமாதானப்படுத்த யோசனை ஒன்றைக் கொடுத்தார் ம.பொ.சி. அந்த யோசனையைப் பார்ப்பதற்கு முன்னால் கடந்த கால வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்துவிடுவது நல்லது.

நெய்வேலியில் வாரியார் தாக்கப்பட்டதற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஆன்மிக, புராண சொற்பொழிவில் வாரியார் தீவிரத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பகுத்தறிவுப் பிரசாரத்திலும் சுயமரியாதைப் போராட்டங்களிலும் வீரியத்துடன் இயங்கிக் கொண்டிருந்தது. புராண சொற்பொழிவுக் கூட்டங்களுக்குள் சுயமரியாதை இயக்கத்தினர் ஊடுருவி, கேள்விகள் எழுப்புவதும் சுயமரியாதைக் கூட்டங்களில் ஆன்மிகவாதிகள் சந்தேகம் எழுப்புவதும் வழக்கம். பல கூட்டங்கள் வன்முறையில் முடிந்துள்ளன.

1944 ஆம் ஆண்டில் நடந்த புராண சொற்பொழிவுக் கூட்டம் ஒன்றில் வாரியார் பேசும்போது, தமிழ்நாட்டில் பெரியார் என்றொரு நச்சு ஆறு ஓடுகிறது என்று பேசிவிட்டார். அவ்வளவுதான். பெரியாரின் தொண்டர்கள் கொதித்து எழுந்துவிட்டனர். வாரியாருக்குக் கண்டனம் தெரிவித்தே தீரவேண்டும் என்று ஆவேசப்பட்டனர். பெரியாரின் தளபதி அண்ணாவுக்கும் தகவல் வந்தது. அரசியல் ஆசானை நச்சு ஆறு என்று விமரிசித்த கிருபானந்த வாரியாரைக் கண்டித்து கட்டுரை ஒன்றை எழுதினார்.

காட்டமான வார்த்தைகள் நிரம்பிய கட்டுரை. நச்சு ஆறாம், பெரியார்.. நாராசச் சேற்றிலே அமிழ்ந்து கிடக்கும் புராண வாயார் கூறுகிறார் என்று தொடங்கிய அந்தக் கட்டுரை வாரியாரையும் அவருடைய போக்கையும் கடுமையாகச் சாடியது. காலட்சேபம் ஒன்றில் வாரியார் அப்படிப் பேசியிருந்ததால் தன்னுடைய கட்டுரைக்கு கீலட்சேபம் என்று எதிர்மறைத் தலைப்பை வைத்தார் அண்ணா. 2 ஜூலை 1944 அன்று திராவிட நாடு இதழில் கீலட்சேபம் கட்டுரை வெளியானது.

ஆறுதான் அய்யா! பெரிய ஆறுதான்! குப்பைக் கூளத்தையும் மேட்டையும் காட்டையும் அடித்துச் செல்லும் ஆறுதான். ஆரியத்தின் அடிவேருக்கு நச்சுநீர் பாய்ச்சும் ஆறு.. பெரியாரின் உழைப்பில் இருந்து உதித்து ஓடி வருகிறது. அதைக்கண்டு ஆரியம் ஓலமிடுகிறது. உம்முடைய ஓட்டைப் படகிலேறி, அந்த ஆற்றைக் கடக்க நினைக்காதீர்.. ஜாக்கிரதை.. ஆபத்தை அணைத்துக் கொள்ளாதீர் என்று வாரியாருக்குக் கூறுகிறேன்.. பின்னர் போச்சே பிழைப்பு என்று மனம் கரையாதீர். காலட்சேபக்காரர்களின் போக்கு இந்த என்னுடைய கீலட்சேபத்தின் பலனாக மாறக்கூடும்.. மாறாவிட்டால் அவர்களின் போக்கு நாறிப்போகும். நான் அதைத் தடுக்கமுடியாது. சுயமரியாதைச் சக்தியோடு மோதிக்கொள்ள வேண்டாம்!

அறிக்கை வெளிவந்து ஆயிற்று இருபத்தைந்து ஆண்டுகள். எச்சரிக்கைகள் நிரம்பிய அந்தக் கட்டுரைக்கான எதிர்வினையைத்தான் வாரியார் நெய்வேலியில் ஆற்றியிருக்கிறார் என்பது திராவிட இயக்கத்தினரின் குற்றச்சாட்டு. ஆனால் எம்.ஜி.ஆரோ வாரியாரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அதைப் பற்றி ம.பொ.சி எம்.ஜி.ஆருடன் எனக்கிருந்த தொடர்பு என்ற தன்னுடைய புத்தகத்தில் பதிவுசெய்திருக்கும் தகவல் இங்கே:

எம்.ஜி.ஆர் அவர்கள் தம் சொந்தச் செலவில் ஒரு கூட்டத்தை நடத்தி, வாரியாரையும் அழைத்துப் பேசச் செய்து, பொன்மனச் செம்மல் என்னும் பட்டத்தைத் தனக்குத் தரச் செய்தார். எம்.ஜி.ஆரின் ஒரே எண்ணம் வாரியார் மீது பக்தி செலுத்தும் ஆத்திகர்களுக்கும் அறிஞர் அண்ணாவிடம் பக்தி செலுத்தும் அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்ட பகை தீரவேண்டும் என்பதுதான்.

0

ஆர். முத்துக்குமார்

9 comments so far

  1. அ. சரவணன்
    #1

    வாரியார் ஓர் அதிசயப்பிறவி! 64வது நாயன்மார் என்று கூட சொல்வார்கள். அவருடன் அண்ணாவுக்கு ஏற்பட்ட மோதல் ஆச்சர்யத்தை தருகிறது.

    மேடைப்பேச்சில் வல்லவரான அண்ணா, வாரியார் அவர்களுக்கு மேடைப்பேச்சு மூலமே பதிலளித்திருக்கலாம். அதை விடுத்து கட்டுரை எழுதி மறைமுகமாக மிரட்டியிருப்பது திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தைக் காட்டுகிறது. அன்று முதல் இன்று வரை தொண்டர்களை உசுப்பேற்றியே பிழைப்பை ஓட்டுகிறார்கள் ( சமீபத்தில் ‘தீக்குளிப்பேன்’ என்று சொன்னதுவரை )

  2. Shan Riyaz
    #2

    அப்போ 65வது நாயன்மார் ஜெயேந்திரரா?? #டவுட்டு

  3. அ. சரவணன்
    #3

    @shan
    உங்களுக்கு ஜெயேந்திரரைப் பற்றி என்ன தெரியும்…? வாரியாரைப் பற்றி என்ன தெரியும்?

    எந்த அடிப்படையில் நீங்கள் வாரியாரை ஜெயேந்திரரோடு ஒப்பிட்டீர்கள்?

  4. சீனு
    #4

    Shan Riyaz வேற அப்படி பேசுவார்?

  5. Kannabiran Ravi Shankar (KRS)
    #5

    முருகா…
    இதென்ன இப்படி ஒரு தகவலைப் பகிர்ந்து….மனம் கனக்கச் செய்து விட்டீர்கள்!:(

    முதற்கண், வாரியார் அப்படிப் பேசியது தவறே!

    வாரியாரின் மேல் பெரும் மதிப்புள்ளவன் என்கிற முறையில், மறைந்த வாரியார் சார்பாக நானே மன்னிப்பு கேட்கவும் எனக்குத் தயக்கமில்லை! மன்னிக்க!!
    ——-

    எதுவானாலும்….
    இறந்துவிட்ட ஒருவரை, அப்படிப் பேசி இருக்கவே கூடாது!
    “என் முருகனை நம்பாததால் தான் செத்த” ன்னு பேசுவது, முருகனுக்கே உவப்பைத் தராது அல்லவா!

    வாரியார் அப்படி பேசி இருக்கத் தேவையில்லை!
    இதன் பின்னணி = பெரியார் குறித்த வாரியாரின் முந்தைய பேச்சு என்றால்….

    அது சம்பந்தப்பட்டவர்கள் உயிரோடு இருக்கும் போது ஏற்பட்ட கருத்து மோதல்!
    அண்ணா அதற்கு எதிர்வினை ஆற்றியதை, வாரியார் இப்படி மனசுக்குள்ளேயே வச்சிருந்து….இப்படி அண்ணாவின் மறைவு குறித்துப் பேசியது…..எனக்கு வியப்பிலும் வியப்பே!

    “அபகார நிந்தை பட்டு உழலாதே”
    -ன்னு நாள்தோறும் திருப்புகழ் ஓதிய வாரியாரா இப்படிப் பேசினார்? ன்னு மனம் துணுக்குறுவது என்னமோ உண்மை!

    எதுவாயினும்…யாரும் இப்போது உயிருடன் இல்லை!
    மறைந்தவர்களை, எவராயினும், இப்படிப் பேசக் கூடாது என்பதற்கு இதை ஒரு பாடமாகக் கொள்வோம்!

    “எத்தனை குறைகள், எத்தனை பிழைகள்
    எத்தனை அடியேன் எத்தனை செயினும்
    பெற்றவன் நீயே, பொறுப்பது உன் கடன்!”

  6. சான்றோன்
    #6

    அனைவருக்கும் [ஆர். முத்துக்குமாருக்கும் ] என் இனிய நந்தன தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்……..

  7. nethra
    #7

    இந்துக்களையும், இந்துக்களின் மன உணர்வுகளையும் பெரியவர் என்று பெயர் வைத்துக் கொண்ட சின்னத்தனம் கொண்டவர்கள் செய்த வன்முறைகளை யாருமே கண்டு கொள்ளவில்லை. காரண்ம் மனித உருவில் இருக்கின்ற மிருகங்களை அவர்கள் பின்னால் இருந்தார்கள், இருக்கின்றனர். எனவே தான் இந்துக்கள் மௌனமாக இருக்கிறார்கள், இருந்தார்கள். ஆனால் அந்த அண்ணாவும் சரி, அவருக்குப் பின் வந்தவர்களும் சரி இந்துக்களின் ஓட்டினைப் பெற்றே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்கள் என்பதை வரலாறு மறைக்க முடியாது.

  8. Gokul
    #8

    Is this @kryes resurfacing?

  9. krishnan
    #9

    “திராவிடத்தால் வீழ்ந்​தோம்”, “திராவிடத்தால் எழுந்​தோம்” என்ப​தைவிட திராவிடம் எவ்வாறு வீழ்த்தப்பட்டது என்ற வரலாற்​றை ​அண்ணா மற்றும் எம்ஜீஆர் ஒப்பீட்டின் வழியாக இக்கட்டு​ரை ஆசிரியர் காட்ட விரும்புகிறார் என்ற வரலாற்றுப் பார்​வை​யே இக்கட்டு​ரையின் முக்கியமான விசயமாகப்படுகிறது,

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: