அய்யோ பாவம் விராத் கோஹ்லி!

திறமை இருக்கிறது. வேகம் இருக்கிறது. துடிப்பு இருக்கிறது. பொறுப்பு இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ள விராத் கோஹ்லிக்கு எல்லாம் இருக்கிறது. இத்தனைக் குறுகிய காலத்தில் பதினோரு சதங்களை அடித்துள்ளது நம்ப முடியாத சாதனைதான்.

பெரிய அணி, சிறந்த பந்துவீச்சாளர் என்று எதைப் பற்றியும் கோஹ்லி கவலைப்படுவது இல்லை; எதிரணி பந்துவீச்சாளர்கள் கொடுக்கும் நெருக்கடிகளைக் கண்டு கலங்குவதில்லை; விக்கெட் விழுவதைக் கண்டு பதற்றம் கொள்வதில்லை. இமால இலக்குகளைக் கண்டு மலைப்பதில்லை; வெற்றி.. வெற்றி. அதை மட்டுமே இலக்காக வைத்து விளையாடுகிறார் கோஹ்லி. இப்படியான வீரர்கள் அமைவது  எப்போதாவது நடக்கும் விஷயம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது இந்தியாவுக்கு நடந்திருக்கிறது.

ஓரிரு போட்டிகளில் மட்டும் சிறப்பாக விளையாடுவது அல்லது முக்கியமான போட்டிகளில் மட்டும் சிறப்பாக விளையாடுவது என்றில்லாமல் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார் கோஹ்லி. ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிகளில் நம்முடைய பெரிய வீரர்கள் அத்தனைபேரும் சொல்லிவைத்தது போல சொதப்பிய சமயத்தில், கோஹ்லி மட்டும் தன்னுடைய பங்களிப்பைக் கணிசமான அளவுக்குச் செய்தார். முக்கியமாகச் சொல்லவேண்டிய ஒன்று, அவர் அடித்த சதம். நெருக்கடியான நிரம்பிய சமயத்தில் அடித்த சதம் அது.

அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் அந்த இமாலய ரன் குவிப்பைச் சொல்லவேண்டும்.  அதற்குரிய அங்கீகாரமாகவே அவருக்குத் துணை கேப்டன் பதவியைக்க் கொடுத்துக் கௌரவப்படுத்தியது இந்திய கிரிக்கெட் வாரியம்.

வங்கதேசத்தில் நடந்த ஆசியக்கோப்பைப் போட்டியின்போது மூன்று போட்டிகளிலுமே சிறப்பாக விளையாடி, துணை கேப்டன் பதவிக்குத் தான் பொருத்தமானவனே என்று நிரூபித்திருக்கிறார் விராத் கோஹ்லி. வாழ்த்துகள்.

கோஹ்லியின் சாதனைகளை முன்னணி வீரர்கள் தொடங்கி முன்னாள் வீரர்கள் வரை அத்தனை பேரும் பாராட்டுகிறார்கள். புகழ்கிறார்கள். கோஹ்லியைப் புகழ்வதில் ஊடகங்களுக்கு இடையே போட்டாபோட்டி நடந்துகொண்டிருக்கிறது. எல்லா ஊடகங்களும் இப்போது கோஹ்லி புராணத்தைத்தான் விடாமல் பாடிக்கொண்டிருக்கின்றன.

ஊடகங்கள் கோஹ்லியைக் கொண்டாடும் விதத்தைக் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால் மனத்துக்குள் மகிழ்ச்சிக்குப் பதிலாக அச்சமே உருவெடுக்கிறது. ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றுவிட்ட சூழ்நிலையில் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை கோஹ்லியே இந்தியாவின் அடுத்த டிராவிட் என்ற தலைப்பில் ஒரு சேனல் நிகழ்ச்சி நடத்துகிறது. அதில் கருத்து சொல்வதற்கென்று பல முன்னாள் வீரர்கள் முன்னால் வந்து நிற்கின்றனர்.

அதற்குப் போட்டியாக இன்னொரு சேனல், ஒருநாள் போட்டிகளில் சச்சினின் இடத்தை கோஹ்லியால் மட்டுமே நிரப்பமுடியும் என்று அடித்துச் சொல்கிறது. அந்தக் கருத்தை வலியுறுத்த இன்னொரு முன்னாள் வீரர்கள் குழு ஆவேசமாக இயங்குகிறது. இன்னும் இன்னும் பல கருத்துகள். பல ஆசைகள். பல விருப்பங்கள்.

புதிய வீரர் ஒருவர் இப்படியான அதிரடிகளை நிகழ்த்திக்காட்டுவது ஒன்றும் புதிய விஷயமில்லை. இந்தியாவிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, பல காலகட்டங்களில் பல வீரர்கள் பல அதிரடிகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். சாகசங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். அசாரூதீன்,சச்சின் என்று பலரைச் சொல்லலாம்.

விஷயம் என்னவென்றால், அப்போதெல்லாம் ஊடகங்கள் அவர்களுடைய ஆட்டத்திறனையோ, சாதனைகளையோ, சாகசங்களையோ இந்த அளவுக்குத் தூக்கிப்பிடிக்கவில்லை. அந்த வீரர்கள் மீது அளவுக்கு அதிகமான விளம்பர வெளிச்சத்தைப் பாய்ச்சவில்லை. அதேசமயம், அந்த வீரர்களைச் சுத்தமாகக் கண்டுகொள்ளாமலும் விட்டுவிடவில்லை. பேசினர். பாராட்டினர். அளவோடு நிறுத்திக் கொண்டனர்.

ஆனால் கோஹ்லி விஷயத்தில் ஊடகங்கள் எல்லை மீறிப் போகின்றன. செய்தி சானல்கள், விளையாட்டு சானல்கள், பொதுவான சானல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள் என்று எல்லாவற்றிலும் கோஹ்லியைப் பற்றியே பேசுகின்றன. ஊடகங்கள் கொடுக்கும் கூடுதல் முக்கியத்துவம் காரணமாக கோஹ்லி புராணம் இன்னும் இன்னும் விரிவடைந்துகொண்டே போகும்.

அது எங்கே சென்று முடியும்?

வர்த்தக நிறுவனத்தினர் அவருடைய வீட்டுவாசலில் அணிவகுக்கத் தொடங்குவர். என்னுடைய  நிறுவனத்து விளம்பரத்தில் நடி என்பார்கள். திடீரென கோஹ்லிக்கு ரெஸ்ட் கொடுப்பார்கள். ஆமாம்.. இத்தனை அடிக்கிற அவருக்கு ஓய்வு தேவைதான் என்பார்கள். ஓய்வு நேரத்தில் விளம்பரப் படப்பிடிப்பில் பிஸியாகிவிடுவார்.

விளம்பரங்கள் காரணமாகப் பணம் சேர்கிறது என்றால் அந்த இடத்தில் அரசியல் நுழைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அரசியல் என்று இங்கே நான் சொல்லவருவது பெட்டிங், மேட்ச் பிக்சிங் போன்ற அம்சங்களை. மிகச்சிறப்பான முறையில் ஆடிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அசாருதீன், ஜடேஜா, ஹன்ஸி குரோனே போன்ற வீரர்கள் புக்கிகளின் பிடியில் சிக்கினார்கள் என்பதை மறுக்கமுடியாது. மிக இளம் வயது கொண்ட, சாதனைகளை நிகழ்த்த ஆரம்பித்துள்ள கோஹ்லி போன்ற வீரர்களின் வளர்ச்சிக்கு இதுபோன்ற அதிகபட்ச ஊடக வெளிச்சம் நல்லதல்ல.

கோஹ்லி இப்போது சிறப்பாக ஆடுகிறார். வாழ்த்துகிறார்கள். கொண்டாடுகிறார்கள்.  ஒருவேளை, வரவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகளிலோ அல்லது அடுத்துவரும் போட்டிகளிலோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத பட்சத்தில் என்ன ஆகும்? இப்போது ஊதிவிடும் அத்தனை ஊடகங்களும் ஓவர்நைட்டில்  அவருக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள்.

கண்ணுக்குத் தெரிந்த உதாரணம் சச்சின். அவருடைய தொண்ணூற்றி ஒன்பது சதங்களையும் கொண்டாடியவர்கள், நூறாவது சதத்தை அடிப்பதற்குக் கால அவகாசம் எடுத்துக்கொண்டபோது என்ன பேசினார்கள்? எப்போது ஓய்வு பெறுவார் என்று கேட்ட்து ஒரு சேனல். ஒழுங்காக ஆடாத சச்சினை நீக்கும் அளவுக்கு தேர்வுக்குழுவின் முதுகெலும்பு வலுவாக இல்லையோ என்று கேலி செய்தது ஊடகம். நரம்பில்லா நாக்குகள் நாலும் பேசின. நூறாவது சதத்தை அடிப்பதற்குள் தனக்குத் தரப்பட்ட நெருக்கடிகள் பற்றி சமீபத்தில் சச்சினே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

ஆகவே, ஊடகங்கள் இப்போது அளவுக்கு மீறி கோஹ்லியைப் பாராட்டுவதையும் புகழ்வதையும்  ஊக்கமருந்துகளாக எடுத்துக்கொள்ள முடியாது.  அவை அனைத்தும் அவர் மீது திணிக்கப்படும் நெருக்கடிகள். கொடுக்கப்படும் அழுத்தங்கள். அவை கோஹ்லியின் இயல்பான ஆட்டத்தைப் பாதிக்கும். எல்லா போட்டிகளிலும்  அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு  எழும்பும். இது எல்லோருக்கும், எப்போதும் சாத்தியமான விஷயமல்ல. இதன் காரணமாக, கோஹ்லிக்கு மெல்ல மெல்லப் பிரச்னைகள் ஏற்படும்.

இன்றைய நிலையில் கோஹ்லிக்கு உருவாகும் பிரச்னை இந்திய அணிக்கான பிரச்னை. ஆகவே, ஊடகங்கள் கோஹ்லியைத் துரத்தும் காரியத்தைக் கொஞ்சம் தள்ளிவைக்க வேண்டும். அவருடைய ஆட்டத்தை, அவருடைய போக்கைக் கொஞ்சம் தள்ளியிருந்து அமைதியாக வேடிக்கை பார்க்கவேண்டும். அதுதான் கோஹ்லிக்கு நல்லது. அவருடைய எதிர்காலத்துக்கு நல்லது. முக்கியமாக, இந்திய அணிக்கு!

0

தமிழ்

4 comments so far

 1. Dr. P.Saravanan
  #1

  ஊடகங்கள் புகழ்பெறத் தகுதியுடையோரையே மையமிடுகின்றன. அவருக்குப் புகழ்சேர்க்கின்றன. ஆனால் அவரின் திறமையைப் பறித்துவிட்டு வெறும் புகழைமட்டுமே அவர் கையில் கொடுத்தும்விடுகின்றன. இதுஊடகங்களின் பின்வளைவுகளுள் ஒன்று. ஒருவிதத்தில் ஊடகக்கொடுமை. இவற்றிலிருந்துத் தப்பிப்பது புகழ்பெற்றோரின் தனித்திறமைகளுள் ஒன்றாகவே கருதப்படும்.
  முனைவர் ப. சரவணன்.

 2. அ. சரவணன்
  #2

  சானியா மிர்சாவுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. ஒற்றையர் தரவரிசையில் 31-வது இடத்தை எட்டிப்பிடித்தவர்… முதல் 10 இடங்களுக்குள் வருவதே லட்சியம் என்றவர்… விளம்பரங்கள், ஊடக சர்ச்சைகள் என விளையாட்டிலிருந்து திசை திரும்பி இப்போது தரவரிசையில் 140-ஆவது இடத்திலிருக்கிறார்.

  கிட்டத்தட்ட சாய்னா நேவாலும் இதுபோன்ற மாய வலைக்குள் சிக்குண்டு இருந்தாலும் இதுவரையில் ஒருவழியாக சமாளித்து இருக்கிறார். கிரிக்கெட் வீரர்களில் பலரைச் சொல்லலாம். குறிப்பாக இர்ஃபான் பதான், ரோஹித் சர்மா ஆகியோரை வந்த புதிதில் மீடியா ஆஹா, ஒஹோ என புகழ்ந்து தள்ள ஒருவித நெருக்குதலுக்கும், விளம்பர படையெடுப்புக்கும் ஆளானவர்கள் இப்போது டீமில் இருப்பதற்கே போராட வேண்டியுள்ளது.

 3. அ. சரவணன்
  #3

  பூஸ்ட் நிறுவனம் கபில்தேவ், சச்சின், சேவாக் வரிசையில் அடுத்து கோஹ்லியை வளைக்கும் என எதிர்பார்க்கலாம்

 4. Baabu
  #4

  Well Said..

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: