வடிவேலு – திராவிட அரசியலின் உரைகல்

‘கிழவன் இன்னும் குமரனாகலையா’ என்று எம்.ஜி.ஆரைப் பற்றி நாகேஷ் கேட்டதாகச் சொல்வார்கள். ‘நினைவின் தாழ்வாரங்கள்’ தொடரில் கலாப்ரியாவும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். ‘தேர்த் திருவிழா’ திரைப்படத்தின் மேக்கப்பில் இருக்கும்போது இப்படி நாகேஷ் கேட்டது எம்.ஜி.ஆரின் காதுக்குப் போகவும், அதற்குப் பிறகு சில காலங்களுக்கு எம்.ஜி.ஆரின் படங்களில் நாகேஷ் நடிக்கவே இல்லை. பின்னர் சமாதானமானார்கள். 1968ல் நடந்தது இது. இதற்கு முன்னரே சந்திரபாபு என்ற ஒரு நடிகரைக் காலி செய்தது எம்.ஜி.ஆரே என்ற பேச்சும் உள்ளது. இப்போது 2012. நாற்பது ஆண்டுகள் கழிந்திருக்கிறது. திராவிட இயக்கம் தந்த இந்தப் பழக்கம் இன்னும் ‘மெருகேறியிருக்கிறது.’

தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராகப் பரிமளித்தவர் வடிவேலு. அவரது கலைப்பயணம் முடிந்துவிட்டது என்ற அர்த்தம் தொனிக்க, ‘பரிமளித்தவர்’ என்று சொல்வதே கொஞ்சம் வருத்தமாகத்தான் உள்ளது. 2011ல் அவர் நடித்து வெளிவந்த படங்கள் மூன்று மட்டுமே என நினைக்கிறேன். 2011ல் காமெடியின் உச்ச நடிகர் இவரே. ஓர் உச்ச நடிகருக்கு நேர்ந்த கதி இது. தமிழில் இதுவரை வந்த காமெடி நடிகர்களில் உச்ச நடிகர் வடிவேலுவே என்பது என் தனிப்பட்ட கருத்து. பெரும்பாலானவர்கள் இத்துடன் ஒத்துப் போவார்கள் என்றே நினைக்கிறேன். ஓர் உச்ச நடிகரை ஒரே தினத்தில் அதள பாதாளத்தில் வீழ்த்தி வைக்க நம் அரசியலால் முடியும் என்ற கேடுக்கெட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்.

விஜய்காந்த் அரசியலுக்கு வந்ததிலிருந்தே வடிவேலுவுக்கு வினை ஆரம்பித்தது. ஏதோ ஒரு திரைப்படத்தில் விஜய்காந்தின் அரசியல் வருகையைப் பாராட்டிப் பேசவேண்டும் என்பது போன்ற ஒரு வசனத்தை (எங்கள் அண்ணா திரைப்படமாக இருக்கலாம்) பேச மறுத்துவிட்டார் வடிவேலு. இதற்கு முன்னர் பல படங்களில் வடிவேலுவும் விஜய்காந்தும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதிலெல்லாம் வடிவேலு தான் ஏற்ற கதாபாத்திரத்தின் வழியே விஜய்காந்தைப் பாராட்டிப் பல தடவை பேசியிருக்கிறார். ஏனோ இந்தப் படத்தில் மறுத்துவிட்டார். அது அவரது உரிமை. தொடங்கியது பிரச்சினை. எப்படித் தன்னைப் பாராட்டிப் பேசுவதை போயும் போயும் ஒரு காமெடி நடிகன் மறுப்பது என்று கதாநாயகனுக்கு வந்துவிட்டது கோபம்.

ஆனால் நாகேஷ் போல வடிவேலு அமைதியாக இல்லை. தன்னை எதிர்ப்பது எம்.ஜி.ஆர் இல்லை என்னும் தைரியமாக இருந்திருக்கலாம். விஜய்காந்தின் மிரட்டல் அரசியலுக்கு இணையான அரசியலில் இறங்கினார் வடிவேலுவும். இரண்டு பக்கமும் பற்றிக்கொண்டது. இதற்கிடையில் வடிவேலுவின் மேனேஜர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இன்றளவும் வடிவேலுக்குப் பிரச்சினையாக இருப்பது இந்தத் தற்கொலை. தொடர்ந்து நிகழ்ந்த மனவேறுபாடுகளின் உச்சத்தில், விஜய்காந்த் எந்தத் தொகுதியில் நின்றாலும் தான் எதிர்த்துப் போட்டிப் போடப்போவதாக அறிவித்தார் வடிவேலு.

2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் கூட்டணி ஏற்பட்டது. 67க்குப் பிறகு கழகங்கள் உருவாக்கி வைத்திருந்த அரசியல் நாகரிகக் கணக்கின்படி, தேமுதிகவுக்கு வேண்டாதவர்கள் எல்லாருமே அதிமுகவுக்கும் வேண்டாதவர்களே என்று அதுவாகவே ஆகிப்போனது. இதனை வடிவேலுவும் நம்பினார். எப்படியும் விஜய்காந்தை வீழ்த்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்ட வடிவேலு அழகிரியின் கரத்தை வலுப்படுத்தி திமுகவுக்குப் பிரசாரத்துக்குப் போனார். பிடித்துக்கொண்டது சன்னும் சனியும்.

சன் டிவி இதனை பயன்படுத்திக்கொண்டது. விஜய்காந்தின் தனிப்பட்ட பிம்ப அழிப்பில் வடிவேலுவும் சன் டிவியும் திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டார்கள். இது மக்களிடையே எடுபடவும் செய்தது. தன் பேச்சுக்கு வரும் கூட்டத்தைக் கண்டு மதி மயங்கிப் போன வடிவேலு தான் என்ன பேசுகிறோம் என்ற விவஸ்தையின்றி வாய்க்கு வந்தது எல்லாவற்றையும் பேசினார். ஜெயலலிதாவை நேரடியாகத் தாக்கி எதுவும் பேசவில்லை என்றாலும், கருணாநிதியை வானளாவப் புகழ்ந்ததையும், கருணாநிதி ஆட்சியின் சாதனைகளாக அவர் பட்டியலிட்டதையும், தனக்கு எதிரானதாகவே அதிமுக தலைமை பார்த்திருக்கும். ஏனென்றால் அதிமுகவும் திமுகவும் இதுபோன்ற விஷயங்களிலெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. ஒருவகையில் ஜெயலலிதா தன்னைத் தாக்குவதைக் கூடப் பொறுத்துக்கொள்வார். ஆனால் தன்னை ஒப்பிட்டுக் கருணாநிதியைப் புகழ்வதைப் பொறுத்துக்கொள்ளவே மாட்டார்.

இதற்கிடையில், தேர்தல் முடிவுகள் வடிவேலுவுக்கு எதிராக அமைந்தன. தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளன்றே வடிவேலுவின் வீடு, தோட்டம் ஆகியவை தேமுதிக குண்டர்களால் தாக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. தான் விரித்துக்கொண்டு தானே விழுந்த வலை மெல்ல இறுகுவதை அவர் அன்றுதான் உணர்ந்திருக்கவேண்டும்.

வடிவேலு செய்த தவறுகள் என்ன? பெருச்சாளிக்குப் பயந்து பாம்பிடம் அடைக்கலம் சென்றது. அரசியல் என்பது வேறு, திராவிட அரசியல் வேறு என்பதைப் புரிந்துகொள்ளாதது. ஆனால் இவையெல்லாம் மிகச் சிறிய தவறுகளே. ஓர் அரசியல் தலைவரைக் குடிகாரர் என்று சொல்வது, நாகரிகக் குறைவே என்றாலும், அதில் உண்மை இருக்குமானால் அது மாபெரும் தவறல்ல. வடிவேலுவும் அவர் பிரசாரம் செய்யும் கட்சித் தலைவர்களும் உத்தமர்களா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. இந்தக் கேள்வியுடன் சேர்த்துப் பார்த்தால், வடிவேலு சொல்வதெல்லாம் தனிப்பட்ட வெறுப்பின் உச்சத்தால் மட்டுமே என்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும். உண்மையில் இதனை எல்லாரும் அறிந்தே இருந்தார்கள்.

ஆனால் அதற்குப் பின்பு நடப்பதுதான் அராஜகத்தின் உச்சமாக இருக்கிறது.

ஒருவர் அதிமுகவுக்கு எதிராக – இல்லை, திமுகவுக்கு ஆதரவாக – பேசினார் என்ற ஒரே காரணத்தினாலாயே அவருக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்படாது என்பது எப்பேற்பட்ட அராஜகம்? இதனை ஜெயலலிதா முன்னின்று நடத்தியிருப்பார் என்று நான் நம்பவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடனேயே, எதற்கு நமக்கு வம்பு என்றுதான் பலரும் ஒதுங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் ஜெயலலிதாவே வடிவேலுவைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க உள்வட்டங்களின் வழியே இயக்குநர்களுக்குக் கட்டளை இட்டிருக்கவேண்டும். வடிவேலுவின் பிரசாரம் வேறு, அவரது நடிப்பு வேறு என்று தெளிவாகச் சொல்லியிருக்கவேண்டும். ஆனால் ஜெயலலிதா ரஜினி அல்ல என்பதுதான் உண்மை. ஜெயலலிதா இதனை வெகுவாக ரசித்திருப்பார் என்றே தோன்றுகிறது. முன்னின்று நடத்துவதற்கும், ரசிப்பதற்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதுவும் உண்மையே.

இப்படி நடப்பது ஏதோ ஒரு சாதாரண நடிகருக்கல்ல. ஓர் உன்னதக் கலைஞனுக்கு இது நேர்ந்திருக்கிறது. தேர்தல் முடிவு ஓர் நடிகனைக் காணாமல் ஆக்கிவிட்டதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். வடிவேலுவை தன் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்.

எந்த அளவுக்கு என்றால் – கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓர் அறிவிப்பு வெளியானது. சுந்தர் சி திரைப்படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக. நான் அன்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னதான் வடிவேலு நாகரிகக் குறைவாகப் பேசியிருந்தாலும், நடிப்பு என்ற வகையில் வடிவேலு ஒப்பற்ற கலைஞன். இன்றும் நகைச்சுவை சானல்களில் வரும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன என்பதை மறுக்கவே முடியாது. எனவே அவர் நடிக்க வரவேண்டியதுதான் தர்மம். அந்த வகையில் சுந்தர் சி பாராட்டுக்குரியவர் என நினைத்துக்கொண்டேன். மறுநாளே மறுப்பு வந்தது. அப்படி ஓர் எண்ணம் தனக்கில்லை என்று சுந்தர் சி சொன்னதாக அறிந்தேன். அதேபோல் ரஜினி படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக ஒரு செய்தியும், அதனை கே.எஸ். ரவிகுமார் மறுத்ததாகவும் அறிந்தேன். இதெல்லாம் உண்மையா என்று தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நாம் வாழ்கிறோம். 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இன்றுவரை வடிவேலு நடித்து ஒரு படம்கூட வெளியாகவில்லை என்பது, இதெல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் என்றுதான் சொல்லவைக்கிறது.

திராவிட இயக்கக் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் இந்த வகையான அரசியலுக்குக் காரணம். தனக்கு எதிராகக் கருத்துச் சொல்பவர்கள் எவருமே தங்களுடைய தனிப்பட்ட எதிரிகள் என்ற கருத்து தமிழ்நாட்டில் வேரூன்றியதற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவுமே காரணம். ஏதேனும் ஒரு நடிகரோ எழுத்தாளரோ தன்னைப் பற்றி எதிராக எழுதினால், அவரை எதிரியாக நினைப்பதும், தேவைப்படும்போது ‘அரவணைப்பது’ போல பேசி அவரை அடிமையாக்குவதும் இவர்களுக்குக் கைவந்த கலையே. அதைக்கூட தானே பார்த்துச் செய்ததாகச் சொல்வார்கள். இழவு வீட்டில் பிணமாகக்கூடத் தாங்களே இருக்க நினைக்கும் மனநிலை.

யாருக்கு வேண்டும் உங்கள் அரவணைப்பு என்று எதிர்த்துப் பேசி உண்மை நெஞ்சுரத்துடன் ஒருவர் இங்கே குப்பை கொட்டிவிடமுடியாது. மேடையில் பகிரங்கமாக, தைரியமாகப் பேசிய அஜித், மறுநாளே கூழைக் கும்பிடு போட்டுக்கொண்டு கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்துவதைப் பார்த்திருக்கிறோம். ஜெயலலிதாவின் முன்னிலையில் கண்டித்துப் பேசிய ரஜினி பட்ட தொல்லைகளுக்கு அளவே இல்லை. அஜித்தும் ரஜினியும் மீண்டும் சமரசம் ஆகியிருக்கலாம். அதற்கான கேவலம்கூட நம்மை இப்படி வைத்திருக்கும் கட்சிகளுக்கு உரியதே அன்றி, அவர்களுக்கு உரியன அல்ல. இப்படி நடக்கும் என்று தெரிந்தும் அவர்கள் அப்படிப் பேசியதே சாதனைதான்.

வடிவேலு போன்ற ஒரு நடிகருக்கு வாய்ப்பில்லாமல் இருப்பது இப்படியான நம் அரசியல் கேவலத்தின் உரைகல்லாகவே விளங்குகிறது. அதே கேவலத்தின் வழியாகவே வடிவேலு வெளிவரவேண்டியிருக்கும். இன்று விஜய்காந்தும் ஜெயலலிதாவும் மோதியுள்ள நிலையில், ஒரே ஒரு பொன்னாடையை வடிவேலு ஜெயலலிதாவுக்குப் போர்த்தினால் போதும். மீண்டும் வடிவேலு என்ற கலைஞனின் பல வெற்றிகளை நம்மால் திரையில் காணமுடியும். கேவலங்களைப் பட்டியலிட்டுவிட்டு, அதே கேவலத்தின் வழியேதான் நாம் வெளியேற வேண்டுமா என்றால், இன்றைய அரசியல் சூழலில் வேறு வழியில்லை என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நல்ல நடிகன் என்ற பெரிய அந்தஸ்தின் முன்பு, இந்த சமரசம் பொறுத்துக்கொள்ளக் கூடியதாகவே தெரிகிறது. கொஞ்சம் அசிங்கத்துடன் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

சந்திரபாபு, என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா போன்ற நடிகர்களுக்கு வாழ்க்கையில் ஓர் பெரிய அடி விழுந்து, அதிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடித்தபோது அவர்களால் முன்பு போல வெற்றி பெற முடியவில்லை. வடிவேலுவுக்கும் இது நிகழ்ந்துவிடக்கூடாது என்றுதான் மனம் வேண்டிக்கொள்கிறது. இனி மீண்டும் நடிக்கவந்தால், தான் எப்படி அரசியல் கட்சிகளாலும் டிவிக்களாலும் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டோம் என்பதை மனத்தில் வைத்துக்கொள்வது வடிவேலுவுக்கு நல்லது. இங்கே நிலவுவது அரசியல் விஷச் சூழல். அதை மெல்ல மெல்லத்தான் மாற்றமுடியும். அந்த மாற்றத்துக்கு வடிவேலு பலியாகவேண்டியதில்லை.

0

ஹரன் பிரசன்னா

36 comments so far

 1. PVR
  #1

  Vary sad situation. Thanks Haranprasanna, for writing about a serious subject. //திராவிட இயக்கக் கட்சிகளான அதிமுகவும் திமுகவும் இந்த வகையான அரசியலுக்குக் காரணம். தனக்கு எதிராகக் கருத்துச் சொல்பவர்கள் எவருமே தங்களுடைய தனிப்பட்ட எதிரிகள் என்ற கருத்து தமிழ்நாட்டில் வேரூன்றியதற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவுமே காரணம். ஏதேனும் ஒரு நடிகரோ எழுத்தாளரோ தன்னைப் பற்றி எதிராக எழுதினால், அவரை எதிரியாக நினைப்பதும், தேவைப்படும்போது ‘அரவணைப்பது’ போல பேசி அவரை அடிமையாக்குவதும் இவர்களுக்குக் கைவந்த கலையே.//

 2. Dr. P.Saravanan
  #2

  நல்ல கட்டுரை நண்பரே!
  அரசியல் மேடைகளைத் தனிப்பட்டப் பகையாளியைத் (களைத்) தாக்கப் பயன்படுத்துவதன் விளைவு இது. வடிவேலு அரசியல் மேடைகளில் முழங்கக் காரணம் அவருக்கும் விஜயகாந்துக்கும் இடையிலுள்ள தனிப்பட்ட பகைதான்.அரசியல் மேடைகள் பொதுக் காரியத்துக்கானவை என்ற சிந்தனை எக்கட்சியினருக்கும் இல்லை. இது தமிழகத்தின் தலைவிதி.
  முனைவர் ப. சரவணன்.

 3. ஞாநி
  #3

  ஹபி.. நான் பல மாதங்கள் முன்பே என் ஓ பக்கங்களில் இதைப் பற்றி எழுதியிருக்கிறேன்.வடிவேலு தமிழகத்தின் பொதுச் சொத்து. நடிகர் சங்கத்தை சேர்ந்த சரத் குமாரும், ராதா ரவியும் வடிவேலுவையும் விஜய்காந்த்தையும் சந்திக்கவைத்து இந்த பிரச்சினையை தீர்க்கவேண்டுமென்று யோசனையும் சொன்னேன். முன்னர் மனோரமா ரஜினி பற்றி அஅரசியல் மேடைகளில் அபத்தமாகப் பேசிய பிரச்சினை தீர்க்கப்பட்டது போல இதையும் தீர்த்திருக்க வேண்டும். இது நடக்காமல் போனதற்கு விஜ்யகாந்த் காரனமல்ல என்றும், வடிவேலுவின் முரட்டு சுபாவ்மே காரணம் என்று சினிமா வடார நண்பர்கள் தெரிவிப்பது மேலும் வருத்தமாக இருக்கிறது.

 4. ஜே ஜே
  #4

  அருமையான கட்டுரை…

  ஏன் மற்றய இயக்குனர்கள் தான் வடிவேலுவை கண்டுகொள்ள பயம் என்றல்…தி மு க வினருக்கு தானே இவர் பிரசாரம் செய்தார்…அவர்கள் எடுக்கும் படங்களில் இவரை சேர்த்து கொள்ளலாம் அல்லவா? ஏன் அதை செய்ய மாறுகிறார்கள்….?

 5. neovasant
  #5

  I can’t understand why you expect CM to play mediator or nattamai role. Don’t belittle the role of CM of a state!

 6. அரவிந்தன் நீலகண்டன்
  #6

  திராவிட பாசிசம்.

 7. Viththakan
  #7

  Leaving aside the merits and demerits of praising an actor like Vijayakanth or MGR on screen when it is irrelevant to the film’s story, you should not forget the fact that it is not okay for an actor or a technician to refuse to do anything while committed to a film. A heroine refusing to kiss or an actor refusing to speak a certain dialogue or a technician refusing to work on a certain day for some social or religious cause may have some individual integrity tag attached to the act that might give them a “holier than thou” glow; but in effect it is against the spirit of the movie making business in which the director and producer decide everything and the crew members will have to comply if they want to be part of the project.

  Vadivelu refusing to speak certain dialogues makes him as political as Vijayakanth and it is not the filmmakers’ headached to stand by his convictions. He will have to fight his own battles; that is the nature of the beast called “professionalism”.

  Santhanam’s arrival as the next comedy genius and the totally throttling salaray Vadivelu was demanding are also the reasons for his fading stardom. It happened to equally good comedians like Vivek and superior talents like Gaaundamani in the past; and it will happen to Santhanam after a while. Linking this natural cycle to bigger social schemes is not more useful beyond “tea kadai” conversations.

 8. LPG
  #8

  நாகேஷ், எம்ஜிஆர் காலத்திற்கும் வடிவேலு வாழ்கிற காலத்திற்கும் உள்ள வேறு பாட்டை வடிவேலு நன்கு உணர்ந்திருந்த போதும், தன் சுய லாபத்துக்காக தேர்தலின் போது ஒரு தனி நபரை மட்டும் தாக்கிப் பேசியது தவறு. விஜயகாந்தை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற போதும் வீர சவடால்களை விட்டதும், திமுகவினருக்கு வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் களத்தில் பணியாற்றியதும் தவறே. ஜெயலலிதாவும் கருணாநிதியும் மட்டுமே இந்த பலி வாங்கல் செய்கிறார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியலின் அர்த்தமே எதிரிகளை அல்லது தனக்கு எதிரான கருத்து உள்ளவர்களுக்கு எதிராக, என்ன செய்தால் தான் நிலைக்க முடியும் என்பதும், தான் நினைத்தால் மட்டுமே நடக்கும் என்பதை அரசியல் எதிரிகளுக்கு, அதிகாரத்தில் இருப்பவர்கள் புரிய செய்வதுதான். இதை நீங்கள் பணியாற்றுகிற அலுவலகங்களில், கட்சி நிர்வாகங்களில், பள்ளிகளில் எங்கும் காணலாம். அரசியலின் சுவாராஷ்யமே, எதோ ஒரு காரணம் கொண்டு வடிவேலு ஜெயலலிதாவிடம் சரண் அடைவதுதான், மீண்டும் அவரைத் திரையில் காண உதவும். அன்னா ஹசாரே போன்றவர்களாலேயே கட்சிகளை எதிர்த்து வெற்றி காண இயலாத போது, வடிவேலு செய்தது முட்டாள்தனம். எழுத்தாளர்களே முடிந்த அளவு பதிப்பகங்களுக்காகவும், கிடைத்த வாய்ப்பில் அடுத்த எழுத்தாளரின் எழுத்தை பாராட்டுவதை தவிர்த்து ( எஸ். ராமகிருஷ்ணன் குறித்து சாரு நிவேதிதா) ரஜினி கடைசியாகப் பேசியது குறித்து எழுதி அரசியல் செய்யும் காலத்தில்,(நான் குறிப்பிடுவது, வாசகர்கள் தங்களின் கவர்ச்சிகரமான எழுத்துக்களைப் படிக்க வைக்க புறப்படக் கையாளும் தன்மையைத்தான் சொல்கிறேன்) ஜெ, மு.க வெல்லாம் செய்தால் தவறா… இதை அன்றாட வாழ்வில் அதிகாரத்தில் இருக்கிற எல்லோரும் செய்கிறார்கள் என்ற நிதர்சனம் புரிந்தால் போதும். வடிவேலு இந்த யதார்த்தத்தைப் புரியாமல் செயல்பட்டதற்கான தண்டனைகளையே அனுபவிக்கிறார். குறிப்பாக சொல்லப் போனால் மு.க. குடும்பம் எடுக்கும் படங்களிலேயே வாய்ப்பு தராத போது மற்ற இயக்குனர்கள் தருவது என்பது எதிர்பார்ப்புக்கு உரியதல்ல.

 9. ஜெகன்
  #9

  தனது சுயலாபத்துக்கும், சொந்த விருப்பு வெறுப்புக்கும் வடிவேலுதான்,தமிழக/திராவிட அரசியலை பயன்படுத்த முயன்று தன் நிலையை தாழ்த்திக்கொண்டாரே தவிர நீங்கள் ஸ்பெஷலாக குறிப்பிடும் திராவிட அரசியல் ஒன்றும், சிவனே என்று இருந்த வடிவேலுவை வம்படியாக இழுத்து சீரழித்துவிடவில்லை. சொத்துப் பிரச்னை தீர்க்க அழகிரியிடம் சென்று, அதற்காக திமுகவை ஆதரிக்கவும், அதனால் விஜயகாந்தை சமாளிக்கவும் முடியும் என்று கற்பனை உலகில் மாட்டிக்கொண்டார். திராவிட அரசியலில் நாகரீகமில்லாமல் பழி வாங்கும் போக்கு இர்ப்பது வருத்தம்தான், ஆனால் வடிவேலு கதை வேறு.

 10. ஜெகன்
  #10

  குறிப்ப்பாக கட்டுரை தலைப்பு – சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது – மகா அபத்தம்.

 11. Arun Radhakrishnan
  #11

  வடிவேலு ” காமெடியின் உச்ச நடிகர் இவரே” என்று சொல்வது மிகச்சிறந்த காமெடி.
  ஏற்றிவிட்ட ஏணியை ( ராஜ்கிரன் ) எட்டி உதைக்கும் இவர் போல ஆசாமிக்கு…..

 12. சான்றோன்
  #12

  கவுண்டமணி நடித்துக்கொண்டிருந்த போது எல்லா நடிகர்களையும் கலாய்ப்பார்….[ நேராகவும் , ஆள் இல்லாதபோதும்] இது திரையுலகம் முழுக்க அறிந்த விஷயம்…….அதற்காக யாரும் அவரை கட்டம் கட்டிவிடவில்லை…….கடைசி வரை நடித்து ஓய்வு பெற்றார்…….காரணம் அவர் தன்னுடைய உயரத்தை அறிந்திருந்தார்……தன்னுடைய சக்திக்கு மீறிய கற்பனையை வளர்த்துக்கொண்டது வடிவேலுவின் குற்றம்…….தான் ஒரு கோமாளி என்பதை மற‌ந்தது அவர் செய்த தவறு……..தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்ள அரசியலை பயன்படுத்தியது அவருடைய அறியாமை….இது அவர் தனக்குத்தானே வெட்டிக்கொண்ட குழி………

  எனக்கும் வடிவேலுவின் நகைச்சுவை பிடிக்கும்……அதற்காக அவரை நகைச்சுவை நடிப்பின் உச்சம் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்…….சொல்லப்போனால் நகைச்சுவையில் யாரும் , எப்போதும் உச்சத்தில் இருந்தது கிடையாது…….என்.எஸ்.கிருஷ்ணன் கொடிகட்டிபறந்தபோது , டி.ஆர். ராமச்சந்திரன் , காளி .என்.ரத்தினம் போன்றோரும் கலக்கினர்……பின்னர் தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ்,சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன்,சோ, ஜனகராஜ் ,கவுண்டமணி-செந்தில் என அந்தப்பட்டியல் மிக நீளமானது…..இதில் வடிவேலுவும் ஒருவர்….அவ்வளவுதான்……

  திராவிட இயக்கங்களின் அரசியல் மீது எனக்கு தீவிரமான மாற்றுக்கருத்துக்கள் உண்டு….ஆனால் இந்த விஷயத்தில் அவர்களை மட்டும் குறைகூறுவது சரியாக எனக்குபடவில்லை….

  தீதும் நன்றும் பிறர் தர வாரா………

 13. அ. சரவணன்
  #13

  தேர்தலின்போது ஜெயா டிவியில், கடந்த ஜெ.ஆட்சியில் திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் வடிவேலுவும் அவரது அடிப்பொடிகளும் கூழைக்கும்பிடு போட்டு அம்மாவை “ஆஹா..ஓஹோ..” என்று ஓவராக புகழ்ந்து தள்ள… அதை அம்மாவே மிகவும் ரசித்து குலுங்கிக் குலுங்கி சிரிப்பதை காட்டி “அன்று..இன்று” என ஒரு clipping காட்டிக் கொண்டிருந்தார்கள்.

  இதிலிருந்து அதிமுக தரப்பு சொல்லவந்தது “வடிவேலு ஒரு பச்சோந்தி… அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் இதுபோல் நடக்கும்…” என்பதுதான். ஆட்சியும் கிடைத்துவிட்டது.. உங்கள் கட்டுரையையும் படித்த பின்பு, அவர்கள் சொன்னதுபோல்தான் நடக்கும்போலிருக்கிறது…

  ஹும்.. கலைஞர்களின் பாடு பரிதாபம்தான்! வடிவேலு வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம்… பிரச்சாரத்தில் இவரை வேடிக்கை பார்க்க கூடுகிற கூட்டத்தைப் பார்த்து மயங்கி, ஒருமுறை “இவனுக்கெல்லாம் எதுக்கு 40 சீட்.. எனக்கு கலைஞர் அய்யா சீட் கொடுத்தா 100 தொகுதியில ஜெயிப்பேன்..” என்று ஒரு flowவில் அடிச்சு விடுவார். கலைஞரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் – ஏன் ஸ்டாலின் – வளர்ச்சியையே பொறுத்துக் கொள்ள முடியாதவர், வடிவேலு இப்படியெல்லாம் பேசினால் பொறுப்பாரா..? இப்போ அங்கேயும் போச்சு.. இங்கேயும் போச்சு..!

  வடிவேலு சார்…! உங்க காமெடியில வர்ற மாதிரியே ரகசியமா அம்மா கால்ல விழுந்துறுங்க.. வெளியே சு..நா பா..நா போய்ட்டே இரு..போய்ட்டே இருன்னு விறைப்பா சொல்லிக்கிங்க..

 14. PVR
  #14

  Tamil Nadu has always been very loud in taste. Music, Celebrations – and of course in Politics. தமிழ்க் கலாச்சாரம் என்று தவறாகச் சொல்லப்படும் பெரும்பாலான நிகழ்வுகள் அருவருப்பூட்டக்கூடிய அளவிற்கு ஆரவாரமானது. இது திராவிடக் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிய காலம்தொட்டு ஆரம்பித்தது. 1950-60களில் ஆரம்பித்தது.

  1) கேவலமான அடைமொழிகளும் (அண்டங்காக்கை, வந்தேறிகள், குல்லுகப் பட்டர்…)

  2) கீழ்த்தரமான, நாக்கூசும் பொதுமேடைப் பேச்சுக்களும் (xxxxx ஒன்றும் படிதாண்டா பத்தினியும் அல்ல; நானும் முற்றும் துறந்த முனிவனுமல்ல..)

  3) பதிலுக்குத் தாக்காதவர்கள் மீது மட்டுமே இனத்தாக்குதல்களும் வசவுகளும் (பாம்பையும் xxxxயும் கண்டால்…)

  4) திசைத்திருப்பும் வசைகளும், (தெற்கு தேய்கிறது, வடக்கு..) வெற்று வாக்குறுதிகளும்(அடைந்தால்..)

  5) மக்களின் பணத்தை சொந்த லாபத்திற்காக பெரிய அளவில் சுரண்டுவதும் (சர்க்காரியா கமிஷன்)

  இப்படி ஆரம்பித்த அவலட்சணம்தான் இன்று, சினிமாவையும் ஆட்சியையும் பின்னிப்பிணைத்தது.

  வடிவேலு எப்படி உரைகல் ஆகிறார்? சினிமா தந்த பிரபலமும், பணமும் ஆரவாரமாக, அரசியலாக வெளிப்பட்டதில் அப்படி ஆகிறார்.

  வடிவேலு இப்போது வேலையில்லாமல் சும்மாயிருந்தால் தப்பில்லை. ஒன்றுமில்லாமல் வந்தவர்தான். இன்னும் பணம் வைத்திருக்கிறார்.

  அதனால் நாம் வருத்தப் படவேண்டியது வடிவேலுவுக்கல்ல; தமிழகத்தின் நிலைக்காக, நம் வருங்கால சந்ததிகளின் எதிர்காலத்திற்காக.

  இதைத்தான் என் முதல் பதிவில் சொல்லியிருந்தேன்.

 15. சரவணன்
  #15

  உண்மை என்ன என்றால், வடிவேலு, விவேக் இருவரது கற்பனையும் வற்றிப்போய் ஒரே மாதிரியாக எல்லாப் படங்களிலும் செய்துவந்தார்கள். வடிவேலு எல்லாப் படங்களிலும் அடிவாங்குவது ஒன்றையே நகைச்சுவை என்று காட்டினார். அதுவும் இக்காட்சிகள் டிவி சேனல்களில் நாள் முழுவதும் திரும்பத் திரும்பக் காட்டப்பட்டு மக்களை மிகவும் சலிப்படையச் செய்துவிட்டன.

  அவரது வாய்ப்புகள் குறைந்து எறக்குறைய திரை வாழ்க்கை முடிய இருந்த நேரத்தில்தான் (எல்லோரையும் போல) அவர் அரசியலுக்கு வந்தார். அரசியலுக்கு வராவிட்டாலும் சினிமாவில் காணாமல்தான் போயிருப்பார்.

 16. poovannan
  #16

  திராவிட அரசியலுக்கும் வடிவேலு படத்தில் நடிக்காமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்.டி ஆர் இன் உண்ணா விரதம்,உண்ணும் விரதம்,வீடு இடிப்பு போன்றவற்றிற்கு பின்னும் அவர் நடித்தார்,நடித்து கொண்டு தான் இருக்கிறார்,இரு கழகங்களுடனும் ஊடல் கொள்கிறார்,சேர்ந்தும் கொள்கிறார்.பாக்யராஜ்,குண்டு கல்யாணம்,செந்தில்,சிம்ரன்,விந்தியா,குஸ்பூ,நபோலியன்,சந்திரசேகர் , என்று பலரும் நடித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.அரசியல்வாதி ஆக வேண்டும் என்று வடிவேலு நினைத்தால் அதில் என்ன தப்பு.எம் ஜி ஆர் மந்திரி பதவி ஏற்றால் நடிக்க கூடாது என்று சொல்லும் உரிமை கட்சி தலைமைக்கு இல்லையா.அவரே நடிக்க வேண்டாம் முழு நேர அரசியலில் ஈடுபடலாம் என்று முடிவு எடுத்தால் தப்பா.
  வடிவேலுவை ஏதோ சொந்த பகைக்கும்,காசுக்கும் பிரச்சாரம் செய்ய வந்தவர் போல கேவலபடுத்துகிறது இந்த கட்டுரை.எழுதியது போதும் என்று ஒதுங்க செயகாந்தனுக்கோ,விளையாடியது போதும் என்று ஒதுங்கி கொள்ள விளையாட்டு வீரனுக்கோ,திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்த விலக அரவின்சாமிக்கோ/நடிகைகளுக்கோ உரிமை இருக்கும் போது நடித்தது போதும் அல்லது சிறிது ஓய்வு வேண்டும் என்று வடிவேலு முடிவு செய்தால் அதற்க்கு இட்டுகட்டி எழுதி நமக்கு வேண்டாததை காரணம் காட்டுவது என்ன அரசியல்
  அவருக்கு இருக்கும் பணத்திற்கு அவரே பல படங்களை தயாரிக்கலாம்.

 17. paul
  #17

  Haran Prasanna,
  Today The Hindu carried a report that a journalist and his family were murdered for writing series of articles on Illegal Mining in Madhya Pradesh. It suspects a minister is also involved in murder .Madhya Pradesh is ruled by BJP Govt which is definitely not a Dravidian Party. So the issue is not related to Dravidian Parties.It is related to Human character in High Powers. I think it’s you(Haran Prassana) is trying to utilise Vadivelu issue as an opportunity to balme dravidian Parties.Please open ur mind.

 18. பொன்.முத்துக்குமார்
  #18

  நல்ல கட்டுரை ஹரன்பிரசன்னா.

  இனியாவது தமது சுயநலத்துக்காக அரசியல்வாதிகளிடம் தம்மையே அடமானம் வைக்கத்துணியும் திரைக்கலைஞர்களுக்கு வடிவேல் ஒரு படிப்பினை.

  திரு.மு.க குடும்பத்தின் இரண்டு தொலைக்காட்சிகளும் எப்படி வறுத்தெடுக்கும் என்று கவலைப்படாமல் ஜெ.யிடம் வடிவேல் சரண் அடையலாம்தான். அதற்கு அவரது மனது இடம் கொடுக்கவேண்டுமே ?

  அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வரும்போது வடிவேல் பிரச்சினை சரியாகும் என்று நினைக்கிறேன்.

 19. வித்தகன்
  #19

  படக்கதைக்குச் சம்பந்தம் இல்லாத போதுகூட விஜயகாந்தையும் எம்ஜிஆரையும் திரையில் புகழ வேண்டியது சரியா தவறா என்ற பேச்சை ஒதுக்கி விட்டு, படம் எடுக்கும் போது சொல்லப் படும் வேலையை மறுப்பது ஒரு நடிகருக்கோ தொழில் நுட்பக் கலைஞருக்கோ அழகில்லை என்பதை முதலில் நினைவு படுத்திக் கொள்வோம்.

  முத்தம் கொடுக்க மறுக்கும் கதாநாயகியும், வசனம் பேச மறுக்கும் நடிகரும், அரசியல்-மதக் காரணங்களைக் காட்டி வேலை செய்ய மறுக்கும் திரைத் தொழிலாளியும், தன்னைத் தானே மெச்சிக் கொள்ளலாம்; ஆனால் தயாரிப்பாளரோ இயக்குனரோ முடிவு செய்ய வேண்டிய விஷயங்களை அவர்கள் தன் கையில் எடுப்பது திரைப்படத் தொழில் தருமத்திற்கு விரோதமானது.

  சில வசனங்களை தனிப்பட்ட காரணங்களுக்காக வடிவேலு பேச மறுப்பது அவரையும் அரசியல்வாதியாக ஆக்குகிறது. அவரது விருப்பு வெறுப்புகளுக்காக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் படம் எடுப்பவர்களுக்கு இல்லை. தன் எண்ணப் படித்தான் நடப்பேன் என்று வடிவேலு நினைத்தால் அதற்கான விலையைத் தந்துதான் ஆக வேண்டும்; அதுதான் காசுக்கு வேலை செய்பவர்களுக்கான விதி.

  சந்தானம் சிறப்பாக நடிப்பதும், வடிவேலு எதிர்பார்க்கும் அதிகப் படியான சம்பளமும் கூட அவர் ஒதுக்கப் படுவதற்குக் காரணங்கள்தான். இவருக்கு இணையான விவேக்கும், இவர்களை விட சிறந்த (என்று நான் நினைக்கும்) கவுண்டமணியும் கூட இந்த நிலைக்கு ஆளானார்கள். சில காலத்தில் சந்தானமும் சரிவார். “சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா” என்று எண்ணாமல் இதை ஒரு சமூக நிகழ்வாக அலசுவது டீக்கடைப் பேச்சுக்குத்தான் லாயக்கு.

 20. Anbu Selvan
  #20

  தலைப்பு மட்டும் அபத்தமல்ல. ஞாநி சுட்டியது போல வடிவேலுவின் அகந்தைதான் காரணம் என்பதை விசாரித்து எழுதாதால் இந்தக் கட்டுரையும் அபத்தம் தான். கொஞ்சமாவது ஹோம் வொர்க் பண்ணுங்க பிரதர்

 21. sandeyar
  #21

  ஜெகன் சொல்வதில் உண்மை இருக்கிறது, மேலும் பழிவாங்கும் அரசியல் என்பது காமராசரின் காங்கிரஸ் காலந்தொட்டு நடந்து வருவது, தென் தமிழகத்தில் கேட்டால் கதைகதையாக சொல்வார்கள். இப்போது நடைபெறுவதை அதன் பரிணாம வளர்ச்சியாக வேண்டுமானால் சொல்லலாம்..

 22. Karun
  #22

  Very Good Analysis Hari and it is sadly very true.

 23. சான்றோன்
  #23

  //அவரே நடிக்க வேண்டாம் முழு நேர அரசியலில் ஈடுபடலாம் என்று முடிவு எடுத்தால் தப்பா.
  வடிவேலுவை ஏதோ சொந்த பகைக்கும்,காசுக்கும் பிரச்சாரம் செய்ய வந்தவர் போல கேவலபடுத்துகிறது இந்த கட்டுரை.//
  பூவண்ணன்……ஹி….ஹி…..சொந்த பகைக்கு பழி தீர்க்கத்தான் பிரச்சாரம் செய்வதாக அவரே மேடைக்கு மேடை கூறினார்…… நீங்க மட்டும் ஏன் சார் இப்படி? நீங்க எப்பவுமே இப்படித்தானா? இல்லை இப்படித்தான் எப்பவுமேவா?

  ..சென்றவாரம் ஒரு பதிவில் நண்பர் விஜயனின் மறுமொழி இதோ…..
  ” ஒரு ஊருல ஒரு ராஜாவுக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வந்து ஊர்ல இருக்கிற எல்லா கல்யாணம் ஆனா ஆண்களையெல்லாம் கூப்பிட்டாராம். கூப்பிட்டு பொண்டாட்டிப் பேச்சை கேட்டு நடக்கிறவங்கல்லாம் இந்தப்பக்கம் நில்லுங்க. கேக்காதவங்கெல்லாம் அந்தப்பக்கம் நில்லுங்க ன்னாராம். ஒரே ஒருத்தனைத் தவிர எல்லாரும் கேட்டு நடக்கிற பக்கம் போயிட்டாங்களாம். ராஜ பயங்கர குஷாலாயிட்டு அவனைப்பார்த்து நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா.. ன்னாராம். அதுக்கு அவன், வீட்டை விட்டு கெளம்பும்போது எம்பொண்டாட்டி “எல்லாரும் நிக்கிற பக்கத்துக்கு எதிர்த்தாப்புல நில்லு. அப்பதான் உன்னை எல்லாருக்கும் தெரியும்” ன்னு சொன்னா.. அதனாலத்தான் இந்தப்பக்கம் நிக்கிறேன் எசமான் அப்படின்னானாம் ” poovannan…..same pinch…….

 24. சான்றோன்
  #24

  திரு.சரவணன் …..உங்கள் கருத்தை நான் முழுமையாக ஏற்கிறேன்…….வழிமொழிகிறேன்……….

 25. சான்றோன்
  #25

  நடிகர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்ய முடிவெடுத்த போது அந்த திருமணத்தை எதிர்த்த பாக்யராஜின் முதல் மனைவி பிரவீணா மர்மமான முறையில் மரணமடைந்தார்…..காவல்துறை பாக்யராஜை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தபோது , பாக்யராஜ் அப்போதைய முதல்வர் எம்ஜியாரிடம் சரணடைந்தார்…..பின்னர் பிரவீணா மஞ்சள் காமாலை நோயால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது…….எம்.ஜி. ஆர் இறக்கும் வரை அதிமுகவில் இருந்த பாக்யராஜ் அவருக்குப்பின் அவரது புகழ் வெளிச்சத்தில் குளிர் காய முடிவெடுத்து படுதோல்வி அடைந்தார்…..பின்பு எம்ஜியாரின் ஜென்ம விரோதியான கருணா நிதியிடம் போய் சேர்ந்தார்……..

  நடிகை மனோரமாவின் மகன் பூபதி ஒரு கொலை வழக்கு விசாரனையில் சிக்கியபோது, அதிலிருந்து மகனை காப்பாற்ற அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைசென்று சந்தித்தார்….பின்பு பூபதி விடுவிக்கப்பட்டார்….அதற்கு செஞ்சோற்றுக்கடனாக மனோரமா அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நேர்ந்தது….ரஜினிகாந்த்தை தரக்குறைவாக விமர்சனம் செய்ததால் சிலகாலம் படவாய்ப்பில்லாமல் தவித்த அவர் ரஜினிகாந்த்தின் பெருந்தன்மையால் அந்த பிரச்சினையில் இருந்து மீன்டார்…..

  அளவுக்கு மீறி குவிந்த பணத்தை வைத்துக்கொண்டு என்னசெய்வது என்று தெரியாமல் தவித்த வடிவேலு , சொத்து வாங்குகிறேன் பேர்வழி என்று சுடுகாட்டு நிலத்தையெல்லாம் வாங்கி ஏமாந்தார்……இதன் எதிரொலியாக அவரது உதவியாளர்கள் இருவர் மர்மமான முறையில் மரண‌மடைந்தனர் …….அந்த விசாரனையில் இருந்து தப்பிக்கத்தான் வடிவேலு அழகிரியை சந்தித்தார்…..அதன்பின்பு நடந்தது நம் அனைவருக்கும் தெரியும்……..

  ஆக இவர்கள் அனைவ‌ரும் தத்தம் சொந்த காரியங்களுக்காக அதிகாரத்தில் இருப்பவகளை அணுகி காரியம் சாதித்துக்கொண்டவர்கள்……..அதற்கு பிரதிபலனாக அரசியலில் இறங்கியவர்கள்……இதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை நம்மைவிட தெளிவாக அறிந்தவர்கள்……இவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திகொப்ண்டார்கள் என்றால் இந்த விஷயத்தில் நம் நாட்டில் எந்த கட்சியும் விதிவிலக்கல்ல…. தடா வழக்கில் இருந்து தப்பிக்க சஞ்சய் தத் காங்கிரசில் சேர்ந்ததும், வருமானவரித்துறை விசாரணை வளையத்தில் சிக்கிய கோவிந்தா காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டதும் சமீபத்திய நிகழ்வுகள்……

  இதில் வடிவேலு திராவிட அரசியலின் பலியாடு என சித்தரிப்பது நியாயமில்லை……….

 26. Ramki
  #26

  ஹரன் பிரசன்னா!
  அபத்தம். வடிவேலுக்குப் படம் இல்லை என்பதைத் தவிர வேறு எந்த உண்மையும் இல்லாத கிசு கிசுக்கள் அடிப்படையில் இவ்வளவு நீண்ட கட்டுரை. சட்டசபையிலேயே சேலையை பிடுத்த இழுத்த தி மு க வை மன்னிக்க வேண்டும் என ஜெயலலிதாவை எதிர்ப்பது நியாயமா? எம் ஜி ஆர் தன் வயதை கேலி செய்தவரை தன் படத்தில் தொடர அனுமதியாமல் இருந்திருக்கலாம் ஆனால் அவர் வேறு படங்களில் நடித்தாரல்லவா? என்ன ஒரு ஒப்புமை. தி மு க, அ தி மு க இரண்டும் ஒரே குப்பை என்பது போல் எழுதுவது ஒரு வசதி. உங்கள் அபத்தமும் அதை கைக்கொண்டுள்ளது.
  தாங்கள் சான்று உரைத்த ரஜினி பொது மேடைகளில் எம் ஜி ஆர் பற்றி ஏன் எந்த கருத்தையும் சொல்வதில்? நான் அனுமானகளில் மூழ்குவதில்லை. தேவையானால் உங்கள் அடுத்த கட்டுரையில் எழுதுங்கள்.

  நடிப்பு, வடிவேல், திராவிட அரசியல் மட்டுமின்றி, எங்கும் ஒரு அளவிற்கான வளர்ச்சிக்குப் பிறகு சில சமாதானங்களை ஏற்க வேண்டியது இந்திய விதி.

 27. VIVEK KAYAMOZHI
  #27

  vadivelu’s comedies are very boring now-a-days. u can realise it in his latest “mambattiyan”. so, no one can survive till the end …. think about kavundamani…. what a successfull comedian? more than 50 films were succeed only for his comedy. now where is he? vadivelu is not such a massive comedian. may be he is a very costly comedian than all others.

 28. Its me!
  #28

  //தனக்கு எதிராகக் கருத்துச் சொல்பவர்கள் எவருமே தங்களுடைய தனிப்பட்ட எதிரிகள் என்ற கருத்து தமிழ்நாட்டில் வேரூன்றியதற்கு கருணாநிதியும் ஜெயலலிதாவுமே காரணம். //
  இப்படி எழுதி தமிழகத்தை இருபது வருடம் பின்னோக்கி கொண்டு சென்ற தேவ புருஷரின் பராக்கிரமங்களை சோற்றில் மறைக்க முயன்றுள்ளீர்கள். அதற்கு, பெரிய பெரிய “ஞானி”களின் துணை வேறு!

  விஜயகாந்திற்கு வரவேண்டிய பெருந்தன்மை ஜெயலலிதாவை வரவேண்டும் என்ற தங்கள் விசனம் – ரொம்ப காமெடியா கீதுப்பா!

 29. ganesh
  #29

  என்னவோ தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படியா… அமிதாப், அமர்சிங்குடன் சேர்ந்ததால் ப்ரசினை வரவில்லயா… குஜராத்தின் சுற்றுலாத் தூதர் என்பதால் ப்ரச்சினை வரவில்லையா. அந்த லெவலிற்குப் போனால் இதெல்லாம் இருக்கும் சார். Krishnan அவர்களின் muddy river படியுங்கள். அதற்கு முன்னால் வடிவேல் எல்லாம் ஒன்றுமே இல்லை.
  ஏதோ அவர் போதாத காலம். மறுபடி வந்து விடுவார். கவலைப் படாதீர்கள்.

 30. சரவணன்
  #30

  காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எந்த அரசியல் கட்சியிடமும் அரசியல் நாகரிகம் என்று எதுவும் எஞ்சியிருக்கவில்லை என்பதே உண்மை. மிகச் சமீபத்திய உதாரணங்கள் என்றால் கர்நாடகாவில் பிஜேபி அமைச்சர்களின் போர்னோ லீலைகளும், சிதம்பரம் கலந்துகொண்ட விழாவை மம்தா புறக்கணித்ததும், சல்மான் குர்ஷித் சோனியா கண்ணீர் விட்டதாகச் சொன்னதைக் காங்கிரஸ் மறுத்ததும், மோடி முஸ்லிம் குல்லாயை ஒரு மரியாதைக்குக் கூடப் பெற்றுக்கொள்ள மறுத்ததும், ஏன் அண்ணா ஹசாரே கூட ஒரு அடி தானா என்று கேட்டதும் என்னவாம்?

  இதெல்லாத்தையும் விட்டுவிட்டு என்னவோ திராவிட கட்சிகளிடம் மட்டும்தான் அரசியல் நாகரிகம் இல்லை என்று பிரசன்னா புலம்புவது விஷமத்தனமானதும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும்.

 31. Ganpat
  #31

  “யாகாவாராயினும் நாகாக்க,காவாக்கால்
  சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு”..
  எனும் குறளுக்கு ஒரு உதாரணமாக மாறிவிட்டார் வடிவேலு.
  கூடிய விரைவில் மீண்டும் தொழிலுக்கு வருவார்.
  வரும் மார்ச் 7 ஆம் தேதி புதன் கிழமை நிறைந்த நாள்.
  மக நட்சத்திரம்;பௌர்ணமி..
  நல்லி கடைக்கு சென்று ஒரு பச்சை பட்டு சால்வையுடன் (விலை min ரூ10000 இருக்கவேண்டும்)அம்பாளை தரிசனம் செய்து காலில் விழுந்து வணங்கினால் அடுத்த 48 மாதங்களுக்கு சுக்கிரதசைதான்!

 32. Rajan
  #32

  பண ஆசை, ஆணவம் மற்றும் அரசியல் அதிகாரபோதை இதில் ஈகோ வேறு..சினிமா தமிழக அரசிலையும், அரசியல் கேவலம் சினிமாவையும் அடக்க நினைக்கும் அசிங்கம்.

  இதில் மக்களின் அறியாமையை நினைத்து வருத்தபட வேண்டாமா?..இதில் “திராவிட பாசிசம்” எங்கே இருக்கிறது அரவிந்த நீலகண்டா?…

  அய்யா அறிவு ராசா, போய் “உடையும் ஆசியா?” அப்படி ஒரு ஆராய்சி செய்,ஆனால் புத்தகம் மட்டும் வேண்டாம், கிழக்கு பாவம்..

 33. Vijay SA
  #33

  வடிவேலுக்குள்ளேயும் ஒரு தன்மான மனிதன் இருக்கின்றான். எதோ ஒரு காரணத்தினால் அவர் அம்மாவிடம் சரணடைவதையும் திமுகவை விட்டு விலகுவதையும் விரும்பவில்லை என தோன்றுகிறது. நாம என்ன அவங்க கால்ல விழுறது? எனக்கிருக்கும் திறமைக்கு என்னை தேடி இல்ல பிரோட்யூசருங்க வரணும் ன்னு நினைக்கிறார் போல.

  வாய்ப்பு இல்லாமையை விட கெஞ்சுதல் அவமானம் என எண்ணுகிறார் போல

  மற்றபடி அவர் காமெடி வெறும் அடிவாங்கும் காமெடி என்று எந்த மடையன் சொன்னது?!? அவர் கவுண்டரைவிட திறமைசாலி. காமெடிக்கு வசனமெழுதும் வசனமர்தா சொல்லாததை எல்லாம், வார்த்தைகளில் எழுத முடியாத உடல் மொழி முக பாவனை, வசன உச்சரிப்பு மாடுலேஷன் எல்லாம் அவர் புதுசு புதுசா செய்வார். அவரின் காமெடியை உரு கவனித்தால் புரியும்

 34. Vijay SA
  #34

  http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2012/feb/240212a.asp

  வடிவேலுவை பயன்படுத்துங்கள் – வைரமுத்து வேண்டுகோள்

  வடிவேலு ஒரு பிறவிக் கலைஞன். உலக நடிகர்களுக்கு இணையானது அவரது உடல்மொழி. வட்டார வழக்கறிந்த மண்ணின் கலைஞன். அவரை திரையுலகம் மீண்டும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் நடிக்கவில்லை என்றால் நட்டம் அவருக்கல்ல, நமக்குதான் என்று கூறியிருக்கிறார் வைரமுத்து.

  வடிவேலுவும் தயாரிப்பாளர்களின் பொருளாதாரம் அறிந்து ஒத்துழைக்க வேண்டும்’ என்று அப்பேட்டியில் கூறியிருக்கிறார் கவிப்பேரரசு.

 35. Rajan
  #35

  அய்யா அரவிந்த நீலகண்டர் அவர்களே,
  காந்தியை கொன்றது ஆரிய பாசிசமா?
  காமராஜரை டெல்லியில் தாக்கியது என்ன பாசிசம்?

 36. அருண்பிரபு
  #36

  திராவிட அரசியல் வடிவேலுவை உரைகல்லாக வைத்துப் பார்க்கும் அளவுக்குக் காமெடியான விஷயம் என்று தலைப்பிலேயே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். ஆனால் மாநில முதல்வர் திரைப்பட இயக்குநர்களுக்குக் கட்டளையிட்டு வடிவேலுவை மீண்டும் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆலோசனை கவைக்கு உதவாது. ஒரு மாநில முதல்வர் இது போன்ற தனியார் தொழில் விஷயங்களில், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத பட்சத்தில் தானே முனைந்து தலையிடுவது தேவையற்ற வேலை.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

2 Trackbacks/Pings

Facebook comments: