தேவதை புராணம்
முன்னுரையல்ல
இப்பிரபஞ்சத்தில் முன்னுரை எதுவும் தேவைப்படாத மிகச்சில விஷயங்களுள் முதன்மையானது காதல். “சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” – காதல் அக்கலையின் பிரதானக்கூறு. காதலோடு தான் ஜனிக்கிறோம்; காதலோடு தான் ஜீவிக்கிறோம்; காதலோடு தான் மரிக்கிறோம். காதல் நம் ஜீன்களில் இருக்கிறது; காதல் நம் ஹார்மோன்களில் இருக்கிறது; காதல் நம் நியூரான்களில் இருக்கிறது.
“LOVE is nothing but a genetically deep-rooted, self-hypnotised belief that initiates with the instinct for legal sex and security, propagates by the warmth of mutual caring and sharing and sustains with its uniqueness of infinite understanding and tolerance.” – பல ஆண்டுகளுக்கு முன் காதலைப் பற்றி நான் எழுதி வைத்திருந்த ஒரு டைரிக்குறிப்பு இது. இத்தனை காலம் கடந்து இப்போதும் காதல் பற்றிய அத்தனை அதீதப்படுத்தல்களையும் மீறி இந்த விளக்கம் எந்த மாற்றமும் தேவையின்றி கச்சிதமாய்ப் பொருந்திப் போகிறது.
“காதல் புனிதமானது” என்கிற க்ளீஷே தத்துவம் ஆபாசமானதாகவே தோன்றுகிறது. காதல் ஒரு விசித்திர மனப்பழக்கம்; தர்க்கம் தாண்டிய உணர்ச்சி; ஒரு வகையில் மகா முட்டாள்தனம். அது நன்கு புரிந்தே, அதை விரும்பிச் செய்து வருகிறது பூமி ஜனம். அதற்காக சிரிக்கிறார்கள், அழுகிறார்கள், துடிக்கிறார்கள், நடிக்கிறார்கள், சாகிறார்கள்.
“பெண்மீது காதலும் வெற்றிமீது வெறியும் இல்லையென்றால் இன்னும் இந்த பூமி பிறந்த மேனியாகவே இருந்திருக்கும்” என்று கவிப்பேரரசு வைரமுத்து ‘தண்ணீர் தேசம்’ நாவலில் எழுதியிருப்பார். வெற்றி மீது வெறி என்பதே கூட பெண் மீதான காதலில் தான் பிறப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அவ்வகையில் காதல் மனித முன்னேற்றத்திற்கான ஆதாரஅச்சு.
*
காதலைப் பற்றி எழுதாமல் எந்த ஒரு கவிஞனின் ஆளுமையும் பூர்த்தியடைவதில்லை. பாரதி எழுதினார்; பிரமிள் எழுதினார்; மனுஷ்யபுத்திரன் எழுதுகிறார். நானும் விலக்கல்ல. இவை சுவாரஸ்யத்தைப் பிரதான நோக்கமாகக் கொண்ட மிகையுணர்ச்சிக் கவிதைகள் என்பதில் நான் அவர்களிலிருந்து வேறுபடுகிறேன். மற்றபடி இயல்போ மிகையோ எப்படிச் சொன்னாலும் காதல் காதல் தானே!
இன்றைய பெண்களின் காதல் இங்கு முறையாகப் பதிவு செய்யப்படவேயில்லை. சங்க இலக்கியங்களிலும், காப்பியங்களிலும், இதிகாசங்களிலும், பக்தி இலக்கியங்களிலும், சிற்றிலக்கியங்களிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களின் காதலும் விரிவாகவும் ஆழமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. சமகாலத்தில் அது போன்ற பதிவுகள் இல்லை என்ற குறையை இந்த ‘தேவதை புராணம்’ தொகுப்பு நிவர்த்திக்க வேண்டும் என்பதே என் ப்ரியம். சங்ககாலத் தலைவி கூற்று போல் இது சமகாலத் தலைவி கூற்று என்பேன்.
இதில் ஒரு பெண் காதலிக்கிறாள். தன் ஐந்து வயது முதல் நாற்பது வயது வரை அவள் தனக்கானவனுடன் அல்லது தனக்கானவன் பற்றிப் பேசும் வசனகவிதைகளே இவை. அவள் தன் ஏழு பருவங்களிலும் காதல் முனையில் உணர்ச்சிக் குவியலாய் உணர்வுச் சிதறலாய் நிற்கிறாள்.
பேதை (5-7), பெதும்பை (8-11), மங்கை (12-13), மடந்தை (14-19), அரிவை (20-25), தெரிவை (26-31), பேரிளம் பெண் (31-40) – அடைப்புக்குறிக்குள் இருப்பவை அளவல்ல; வயது! – ஆகிய ஏழும் பெண்பாற் பருவங்களென உலா என்கிற பிரபந்த வகையில் குறிப்பிடப்படுகிறது (யானை, குதிரை அல்லது தேரில் ஏறி, இசைக்கருவிகள் சூழ்ந்திசைக்க, பொது மக்கள் புடைசூழ, நகர வீதிகளில் இறைவனோ அரசனோ உலா வருவதைக் கண்டு பெண்டிர் காதல் கொள்தலைக் கலிவெண்பாவில் பாடுவதே உலா என்ற சிற்றிலக்கிய வகை).
அவ்வகையில் இந்த ‘தேவதை புராணம்’ தொகுப்பும் ஓர் உலா தான் – காதலன் உலா.
*
இக்கவிதைகளில் பெரும்பாலானவை கிட்டதட்ட எட்டாண்டுகளுக்கு முன்பாக என் பதின்மத்தின் அந்திமத்தில் எழுதப்பட்டவை. அந்த வயதுக்கு உரிய மற்றும் மீறிய விஷயங்கள் இவற்றில் கலந்திருக்கின்றன. இதில் சொல்லப்பட்டவற்றில் பூச்சுக்கள் இருக்கலாம்; ஆனால் அதில் அடிநாதமாய் இழையோடியிருக்கும் காதல் நிஜமானது.
அப்போது காதலித்து மணக்க விழைந்த பெண்ணும் இப்போது மணந்து காதலித்துக் கொண்டிருக்கும் பெண்ணும் ஒருத்தியே தான் என்பது தான் இதில் விஷேசமானது. அவ்வகையில் இது எங்கள் பத்தாண்டுக் காதலின் பெருமிதமிக்க ஓர் அடையாளம். இப்பத்தாண்டுகளும் தன் இருப்பால் என் தினங்களை உயிர்ப்பித்தவள் என்ற முறையில் அவளைப் பற்றிய இக்கவிதைத் தொகுதியை அவளுக்கே சமர்ப்பிப்பதில் ஓர் அலாதி திருப்தியுணர்வு பற்றிக் கொள்கிறது
*
கல்லூரியில் படிக்கும் போது என் நண்பன் இரா.இராஜராஜன் இக்கவிதைகளைப் தன் சொந்த செலவில் உட்சுற்றுக்கு மட்டுமான குறைந்த பிரதி எண்ணிக்கையில் அழகிய சிறுநூலாக வெளியிட்டான். பின்னர் இவற்றை ஆனந்த விகடன், குங்குமம் ஆகிய இதழ்களில் பிரசுரிக்க எடுத்த முயற்சிகள் பல்வேறு காரணங்களால் பலிக்கவில்லை.
இந்த ஆண்டு எழுத்தாளர் பா.ராகவன் இவற்றை தமிழ்பேப்பர்.நெட் இணையதளத்தில் ஃபிப்ரவரி-14 அன்று தொடங்கி தொடர்ந்து 15 நாட்கள் காதலர் தின சிறப்புத்தொடராக வெளியிட்டார். என் வேண்டுகோளிற்கிணங்க ஒரு சுவாரஸ்யத்திற்காக எழுதியவர் யார் எனப்போடாமல் வெளியிட்டு தொடரின் இறுதியில் என் பெயரை அறிவித்தார். இடைப்பட்ட தினங்களில் தமிழ் பேப்பரிலும், ட்விட்டரிலும் தொடரை யார் எழுதுகிறார் என்பது பற்றி சில விவாதங்கள் நிகழ்ந்தன – அதில் நானும் கலந்து கொண்டது தான் irony.
தமிழ்பேப்பரில் வெளியான போதே குறிப்பிடத்தகுந்த நல்ல எதிர்வினைகளைப் பெற்ற இத்தொகுப்பு, இப்போது கற்பகம் புத்தகாலயம் ஆர்.நல்லதம்பி அவர்களின் மூலம் புத்தக ஆக்கம் பெறுகிறது. பரவலான வாசகத்திரளை சென்றடைய இது உதவும் என நம்புகிறேன்.
புத்தகத்தை ஓர் உச்சபட்ச அழகியல் உணர்வோடு வடிவமைத்துத் தந்த ஆர்.சி.மதிராஜ் அவர்களுக்கு என் வந்தனம். அதே போல் தமிழ் பேப்பரில் வெளியான பின் புத்தகத்தை மிக விரும்பித் தன் பொறுப்பில் பிரசுரிக்க முன் வந்த அமெரிக்காவிலிருக்கும் நண்பன் க. நாகராஜனை நினைத்துக் கொள்கிறேன்.
இவர்களத்தனை பேரின் அன்பிலும், ஆதரவிலும் இத்தொகுப்பு புத்தக ஆக்கம் பெறுகிறது.
*
என் முதல் கவிதைத் தொகுப்பினைப் போல் இதற்கும் தலைப்பு வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. கிட்டதட்ட ஐம்பது தலைப்புகள் வரை யோசித்திருப்போம்.
முதன் முதலில் இதை எழுதிய போது சுஜாதாவின் நாவல்களுள் ஒன்றான ‘ஒருத்தி நினைக்கையிலே’ என்பதையே தலைப்பாக வைத்திருந்தேன் (இப்போதும் அதுவே மிகப் பொருத்தமானதாகத் தோன்றுகிறது). பின் குங்குமம் இதழில் எனது முதல் கவிதை அதே தலைப்பில் வெளியானதால் குழப்பம் தவிர்க்க இத்தொகுப்பின் பெயரை ‘காதலி புராணம்’ என்று மாற்றினேன் (கவிஞர் வைரமுத்து தன் படைப்புகளுக்கு ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’ என்று பெயர் வைத்ததன் பாதிப்பில் உருவானது ‘காதலி புராணம்’).
பின்னர் தமிழ் பேப்பரில் வெளியிட்ட போது பா.ராகவன் ‘காதல் புராணம்’ என மாற்றினார். பின்னர் பதிப்பகத்தார் வேண்டுகோளுக்கிணங்க பழமை வாசனை தவிர்க்கவும், பொருள் குழப்பம் அகற்றவும் பல தலைப்புகள் யோசிக்க நேர்ந்தது (உதாரணம்: ‘காதல்காரி’, ‘பெண்பா’). நீண்ட தேடலின் இறுதியில் உறுதியானது தான் ‘தேவதை புராணம்’.
புராணங்கள் தெய்வங்களுக்கானவை; தேவதைகளுக்குப் புனையப்படுவதில்லை. முதல்முறையாக இங்கே ஒரு தேவதைக்குப் புராணம் இயற்றப்படுகிறது. காதலிக்கும் ஒவ்வொரு பெண்ணுமே தேவதை தானே!
*
ஆச்சரிய ஒற்றுமையாய் இதுவரையில் அச்சு கண்ட என் கவிதைகளனைத்தும் பெண்குரலிலேயே அமைந்திருக்கின்றன. முதலில் ‘ஒருத்தி நினைக்கையிலே’; பிற்பாடு ‘பரத்தை கூற்று’; தற்போது ‘தேவதை புராணம்’. அடுத்தது என்னவோ?
*
தேவதை புராணம் / சி.சரவணகார்த்திகேயன் / கற்பகம் புத்தகாலயம் / பக்கம் 168 / விலை ரூ.75
சி.சரவணகார்த்திகேயன்









February 14th, 2012 at 8:31 pm
இதற்கு முந்தைய கட்டுரையை எழுதிய ‘அனானிமஸ்’ சொல்வார்.. அதான் மி-நூலாகவே படித்து விட்டேனே…அப்புறம் எதற்கு புத்தகம் என்று..? ஐய்யோ…ஐய்யோ!
எனக்கு பிடித்திருந்தது. “ஒரு புத்தகம் பார்சேல்…”
February 28th, 2013 at 4:43 pm
பயணப் பொழுதுகளின்
சன்னலோரக் காட்சிகளில்
இப்போதெல்லாம்
துயரம் மட்டுமே
துண்டு துண்டாய்
நான்கு வழிப் பாதைகளின்
நடைபாதைக் கல்லறைகளாய்
வாடிச் செத்த வயற்காடுகள்
மண்ணைக் கொன்று
அதன் உயிரைத் தின்ற நினைவாய்
நடு நடுவே
புறநானூறு போற்றாத
நடு’ங்கு’ கற்கள்
’வாரலை வாரலை
என்பது போல்
மறித்துக் கைகாட்டும்
வண்ணக் கொடிகள்’
சன்னலோரம்
அமர்ந்தாலும் – இனி
பக்கவாட்டில்
பார்க்காமலிருப்பதைத்தவிர
வேறு வழியில்லை
சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.