பழைய பேனாவும் அண்ணா நூலகமும்

தமிழ் கூறும் நல்லுலகில் வாழும்படி நேர்ந்தோருக்கு சில அனுபவங்கள் தவிர்க்க முடியாதது.

“அந்தக் காலத்து வால்வு ரேடியோ மாதிரி வருமா? என்ன க்லியரான சவுண்டு? ட்ரான்ஸிஸ்டர்லையெல்லாம் அப்பிடி க்லியரா வருமா?” சமீபத்தில்கூட நண்பரொருவர் சலித்துக் கொண்டிருந்தார் – “என்னதான் இருந்தாலும் பிலிம் கேமரா மாதிரி வருமா? ஏதோ டிஜிட்டல்ங்குறாய்ங்ய.” இத்தனைக்கும் அவர் 20களின் இறுதியில் உள்ள ஒரு இளைஞர்.
ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும்போதும் வழக்கொழிந்து கொண்டிருக்கும் முந்தையதுதான் சிறந்தது என்று வாதாடும் ஒரு தலைமுறை எல்லா இடங்களிலும் இருக்கலாம். நமக்கு தமிழ் பேசத்தெரியும், இந்தப் புலம்பல்களையெல்லாம் அன்றாடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம், இதனால் சமயங்களில் பாதிப்புகூட அடைந்திருக்கிறோம் என்பதனால் தாள முடியாமல் இப்படிப் புலம்ப வேண்டியிருக்கிறது.

எண்பதுகளின் இறுதியில் ball point பேனா தொழில்நுட்பம் செறிவடைந்து மலிவு விலைகளில் அதிகம் புழக்கத்துக்கு வர ஆரம்பித்தது (அறிவு ஜீவிகளுக்கு – ballpoint பேனா 1880 களிலேயே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்று எனக்கும் தெரியும்; ஆனால் எனது அனுபவத்தில் 80களின் இறுதியில்தான், குறைந்த பட்சம் இந்தியாவில் அதன் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்ததாக உணர்கிறேன்.) மேலும், எழுதுவதற்கும் அது சுலபமானது. ஆனால் 90% 2 தலைமுறைக்கு முந்தைய, பாடபுத்தகங்களில் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை கண்ணை மூடிக்கொண்டு ஒப்பிக்கும் திறம்கொண்ட , ஆசிரியர்கள் (அவ்வாறுதான் அழைக்கப்பட்டார்கள்) கொண்ட ஒரு பள்ளியில் அனைவரும் மை பேனா கொண்டுதான் எழுத வேண்டும் என்ற ஒரு மொக்கைச் சட்டம். ஏன் ball point பேனாகொண்டு எழுதக் கூடாது என்று கேட்டுவிடவும் முடியாது. மூஞ்சியை 5 வினாடி உற்றுப் பார்த்தாலே 3 வருடம் ஒரே வகுப்பில் உட்கார வைத்துவிடும் அகந்தைகொண்ட வாத்திகளிடம் வாயைத் திறந்து கேள்வி கேட்பதென்பது சொந்தமாக செலவு செய்து சூனியம் வைத்துக் கொள்வதற்கு ஒப்பானது என்பது தமிழ்கூறும் நல்லுலகில் உள்ள பள்ளிகளில் படித்த அனைவருக்கும் தெரியும். கல்வி இந்த முறையில் கற்பிக்கப்பட்டு இவர்களும் இன்னும் 2 தலைமுறைக்கு முன்பு ஆசிரியர்களாய் பணியாற்றியிருந்தால், மைக்கூடுகொண்டு வந்து மயிலிறகால்தான் எழுத வேண்டும் என்று ஆணையிட்டிருப்பார்களாயிருக்கும். தப்பித்தோம்.

இவ்வாறான தமிழ்ச் சூழலில், நமது அரசியல் சூழல் எப்படியென்றால், அய்யா செஞ்சா அம்மாவுக்குக் குத்தம், அம்மா செஞ்சா அய்யாவுக்குக் குத்தம். நூலக இடமாற்றம். இது அவர்களுக்குள்ளே நடக்கும் அகந்தை யுத்தம். கடந்த அம்மா ஆட்சியில் புதிய சட்டமன்ற கட்டடத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒரு இடம், ஆட்சியை இழக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன், அடுத்த ஆட்சியில் வேறு எதற்கும் பயன்பட்டு விடக் கூடாது என்பதற்காக, அய்யாவால் அவசர அவசரமாக, குயுக்தியுடன்,கட்டப்பட்டது இந்த நூலகம். இதற்கெல்லாம் அசருகின்ற ஆளா அம்மா? “தூக்குடா நூலகத்தை” என்று ஆணையிட்டு விட்டார். ஆனாலும், இந்த இரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பாக, தேவைப்படும் அளவைவிட, இருமடங்கு செலவு செய்து, அய்யா `ஒரே கல்லில் இரண்டு மாங்காய்` அடித்துக் கொண்டார். மொத்ததில், குழந்தைகள் படித்து, அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை அய்யா (ஐயா?) வுக்கோ அல்லது சர்வதேச தரத்தில் (முதலில் இந்தப் பதத்துக்கு, தமிழகத்தில் ஒரு தடையுத்தரவு வேண்டுமைய்யா) ஒரு குழந்தைகள் மருத்துவமனை அமைத்து, தமிழ்க் குழந்தை ஒவ்வொன்றும் குஷ்பு போல (நன்றி குஷ்புவின் தேர்தல் பிரசாரம்) கும்மென்றிருக்க வேண்டுமென்ற அக்கறை அம்மாவுக்கோ சிஞ்சித்தும் இல்லை. இவை இரண்டில் ஒன்றை நீங்கள் மறுத்தாலும் இந்தக் கட்டுரையை இதற்கு மேற்கொண்டு படிப்பது உங்களுக்கு (ம் எனக்கும்) நேர விரயம்தான்.

இவை அன்றாடம், நமது தோல்களின் தடிமனைக் கூட்டி விட்ட ஒரு, தமிழ்நாட்டு, அரசியல் நிகழ்வுதான். ஆனால், இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர்கள் என்று அழைக்கப்ப்டும் ஒரு குழுவினர் இதற்கு ஆற்றிய எதிர்வினைதான் மிகவும் அருவருக்கத்தக்கதாய் இருந்தது. அதிலும், விகடனில் யாழ் நூலகத்தைக் கொளுத்திய நிகழ்வுடன்கூட ஒரு எழுத்தாளர் ஒப்பிட்டிருந்தார்.

இந்த சர்ச்சை ஆரம்பித்து (அநேகமாக முடிந்து) நூற்றாண்டுகளாகி விட்ட பின்பு எதற்கு இப்படி ஒரு பேத்தல் என்று யாருக்கேனும், ஐயமிருந்தால் – அப்போதே இது போன்றதொரு கட்டுரை வந்திருந்தால், ஒன்று, இதற்கு கட்சி சாயம் பூசப்பட்டிருக்கு அல்லது பத்தோடு பதினொன்றாக இதுவும் ஒரு கோவிந்தாவாகியிருக்கும். இன்று, நூலகத்தின் எதிர்காலம் என்ன என்று எந்த சத்தமுமில்லை. ஏதாவது ஒரு சர்ச்சை வரும்போது ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ காட்டுக்கத்தல் கத்தி விட்டு ஓய்ந்து விடுவதுதான் தமிழ் கலாசாரம். இதுதான் என்னுடைய தன்னிலை விளக்கம்.

ஒரு பத்து ஆண்டுக்கு முன்பு கூட, நூலகம் என்பது சமுதாய அறிவூக்கத்துக்கு ஒரு இன்றியமையாத தேவையாயிருந்திருக்கலாம். எனது சொந்த அனுபவத்தில், 97-ல், ஒரு குறிப்பிட்ட தகவலுக்காக, அதற்கான புத்தகத்துக்காக, நானும், எனது நண்பனும், நாங்கள் பயணித்த ஊர்களில், கண்ணில் பட்ட நூல் நிலையங்கள் அனைத்துள்ளும் நுழைந்து வெகு நேரம் செலவிட்டுத் தேடியிருக்கிறோம்; சென்னையில், பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது, ஏதாவது நடைபாதைப் புத்தகக் கடை தென்பட்டு விட்டால் கூட, ஓடும் பேருந்தில் இருந்து குதித்துச் சென்று தேடியிருக்கிறோம் (தாகம்! அறிவுத்தாகம்!!) மோட்டார் வாகனக் கண்டுபிடிப்புக்குப் பின்னர், நடந்து ஊர்களைக் கடந்த அனுபவத்தை நினைத்துப் பார்ப்பது போல் உள்ளது. இன்றைய நிலையில், சில விநாடிகளுக்குள், அன்று நாங்கள் ஊர்தோறும் அலைந்து தேடிய தகவல், எங்களுக்குக் கிடைத்துவிடும். சொல்லப் போனால், 2000 வரை நான் ஒரு புத்தகப்புழு. (ஐயோ அதற்காக நான் ஒரு பெரும் படிப்பாளி என்ற பிம்பத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டாம்.) பிறகு மெல்ல மெல்ல புத்தகம் படிக்கும் பழக்கம் அருகி, இன்று, இணையத்தில், கிடைக்கவில்லை, புத்தகத்தில்தான் கிடைக்கிறது என்ற நிலை வந்தாலொழிய புத்தகம் படிப்பதில்லை.அதற்காக வாசிப்பதில்லை என்பதில்லை. சொல்லபோனால் இன்று அதிகம் வாசிக்கிறேன்.

கோட்டூர்புரத்தில் ரூ230 கோடி செலவில் ஒரு நூலகம் அதுவும் 2010-ல் தேவையா? இந்த நூலகத்தால் பயன் பெறப் போகின்றவர் யார்? இந்த நூலகத்துக்காக ஒருவர் அதிகபட்சம் எவ்வளவு தூரம் பயணிப்பார்? ஒருவருக்குத் தேவையான தகவல் அருகிலிருக்கும் (அல்லது தனது வீட்டிலிருக்கும்) இணயத்தில் கிடைக்கப் பெறும்போது, இவ்வாறு ஒரு நூலகத்தின் தேவை என்ன? ஆனால், தமிழில், இருக்க வேண்டிய அனைத்தும் மிண்ணனு வடிவத்தில் இருக்கின்றனவா? இந்த நுலகம் மிக அதிக பட்சமாக சென்னைவாழ் மக்களுக்கும், என்றாவது சென்னைக்கு வரும் ஒருவருக்கு ஒரு சுற்றுலா தளமாக (அதுவும் கூட, இந்த நூலகம் மாற்றப்படாமல் இருந்திருந்தால், இன்னும் ஓரிரு ஆண்டுகள்க்கு மட்டும்தான்; அதன் பின்தான் நமது அரசாங்கப் பராமரிப்பின் வள்ளல் தெரியுமே) மட்டுமே பயன்பட்டிருந்திருக்கும். இன்று பல மி-நூல் கருவிகள் (e-book readers) வந்து விட்டன. ஒவ்வொன்றும் சில ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொள்ளளவாகக்கொண்டவை. அண்ணா நூலகம் 12 இலட்சம் புத்தகங்கள்கொண்ட தாக அமைக்கப்பட்டதென்று அறிகிறேன். அதிகபட்சமாக, 2TB, கொள்ளும் இந்தப் புத்தகங்களை ஒரு வழங்கியின் மூலமாக இணயத்தில் கிடைக்கச் செய்தால், சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு மட்டுமல்ல, உலகத் தமிழர் அனைவருக்கும் பயன் தருமல்லவா? இந்த நூட்களை மிண்ணனு வடிவில் மாற்றுவதற்கு செலவும், இடமும் இப்போதுள்ளதை விட பல ஆயிரம் மடங்கு குறைவே. இதற்கு எடுக்கும் முயற்சியில் (அதாவது, நூட்களைப் மிண்ணனுவடிவில் மாற்றும்) ஒரு புதிய தொழில்நுட்பம் கூடக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கலாம். (தமிழ் OCR தொழில்நுட்பம் எந்த அளவில் உள்ளதென்று தெரியவில்லை.)

ஆனால் அறிவு ஜீவிக் குழாம் இது பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அய்யாவின் அரசியலுக்கு எண்ணெய் ஊற்றும்விதமாகத்தான் பேசுகிறார்கள் – வேண்டுமென்றோ, அதுபற்றிய பிரக்ஞை இல்லாமலோ அல்லது வருங்காலத் தொழில்நுட்பம் பற்றி எந்தவிதமான அக்கறையும் இல்லாமலோ. குழந்தைகள் சுமக்கும் புத்த மூட்டைகள் பற்றி, நாம் குழந்தைகளாக இருந்ததற்கு முன்னாலிருந்தே, பல்லாண்டுகளாக கவலை மட்டுமே பட்டுக் கொண்டிருக்கிறோமே? இப்படிப்பட்ட – பளுவையும் குறைக்கக் கூடிய, அதே நேரத்தில் குழந்தைகள் எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய வகையில், மலிவு விலையில் (பள்ளிக்கு ஆயிரக்கணக்கில் புத்தகக் கொள்ளளவுகொண்ட மி-நூல் கருவி தேவையில்லையே) கிடைக்கக் கூடிய மி-நூல் கருவிகளை பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்து அறிமுகப்படுத்தக் கூடிய ஆலோசனகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் செலவிடலாமே? எல்லாவற்றிற்கும், வெள்ளைக்காரனுக்காக் காத்திருக்க வேண்டுமா? நாம் முன்னோடியாக இருக்கக் கூடாதா (அது சரி, இவர்களுக்கெல்லாம் வாக்களித்துவிட்டு நாம் சிலவற்றில் மட்டும்தான் உலகின் முன்னொடியாக உள்ளோம்.)

பள்ளிகளில் நாம் படிக்கும் பாடங்கள் என்னென்ன? பொதுவாக, ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் வரலாறு & புவியல். ஒவ்வொன்றும் பின்னாட்களில் நாம் தேர்ந்தெடுக்கும் துறைக்கு ஏதாவதொரு வகையில் அடிப்படையாக அமையக்கூடியவை (இன்றைய நிலையில், தமிழ் மட்டுமே ஒப்புக்குச் சப்பாணி. ஏதோ மரியாதைக்காக பள்ளியில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.) வருங்காலத்தில் கணினி (அல்லது அதற்கு இணையான அல்லது அதனை அடிப்படையாகக்கொண்ட  ஏதோ ஒன்று) இல்லாத துறை என்று ஒன்று இருக்கப் போவதில்லை. மற்ற பாடங்களைப் போல் கணினியையும் ஒரு பாடமாக ஏன் சேர்க்கக் கூடாது?(எவ்வாறாகிலும் நமது கல்விமுறையில் மாற்றமென்பது தேவை; அது பற்றி தனிக் கட்டுரை தேவை.) மற்ற பாடங்களைப் போல் கணினியையும் ஆரம்பப்பள்ளியிலிருந்தே போதிக்கத் தேவையான ஆராய்ச்சி பற்றி, இந்நூலக இயக்கம்/மாற்றம் பற்றி கிளர்ந்தெழும் அறிவு ஜீவிகள் கொஞ்சம் சிந்தித்திருக்கலாமே?

வெளிப்படையாகச் சொன்னால், காகித நூல்களின் உபயோகத்தைக் குறைத்துக் கொண்டு, மின் நூல்களின் உபயோகத்துக்காக நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே இந்தக் கட்டுரை சொல்கிறது. உடனே “புத்தகத்தை ஒழிப்பதாவது?” என்று அதே யாழ் நூலக `ரேஞ்சு`க்குக் கிளம்பத்தான் செய்வார்கள். அவர்கள் ஓலைச்சுவடிகளில் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களாய் இருந்திருந்தால், காதித நூட்கள் வர ஆரம்பித்திருக்கும்போது `ஓலைச் சுவடிகளை ஒழிப்பதாவது?” என்றுதான் கிளம்பியிருப்பார்கள். எது எப்படியிருந்தாலும், இன்னும் அதிகபட்சம் இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் காகித நூட்கள் அருங்காட்சியகங்களுக்குள்ளும், வீடுகளில் பரண்கள் இருந்தால் அவைகளுக்குள்ளும் தஞ்சம் புகுந்துவிடும். இது தவிர்க்க முடியாதது. இன்றே எத்தனை பேர் பேனாகொண்டு எழுதும் முறையை கவிட்டிருப்பார்கள் கொஞ்சம் எண்ணிப் பார்க்கலாம்.

இவ்வளவு கூறியும், நிகழ்காலத்தை கவனித்துப் பார்த்தால், இந்தக் கட்டுரை பேசும் பொருளுக்கு ஏதாவது பொருளுண்டா, இதற்கு செலவிட்ட நேரத்துக்கு எதுவும் மதிப்புண்டா என்று ஆயாசமே உண்டாகின்றது. நாம் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியை நமது நடைமுறைக் கல்விப் பயிற்சிக்குப் பயன்படுத்தலாம், நமது படைப்புகளை அதனைப் பயன்படுத்தி எவ்வாறு பரவலாகக்கொண்டு செல்லலாம் என்று பேசும் அதே வேளையில், நமது கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பயிற்றுவிக்கப்படும் தொழில்நுட்பம், குறிப்பாக கணினி சார்ந்த தொழில்நுட்பம், எந்த அளவுக்கு சமகால வளர்ச்சியோடு ஒட்டியுள்ளது என்று பார்க்கப் புகுவதனால் வரும் விளைவுதான் இது. திறமூலம் பற்றி நானறிந்த வரையில் எந்த கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் எதுவும் போதிக்கப்படுவதோ ஏன் அறிமுகப்படுத்துவதோகூட இல்லை. முக்கிய காரணம், `பெரும்பாலான` ஆசிரியர்களுக்கு, சமகால நிகழ்வுகள் பற்றி அறியும் ஆர்வமோ, அதனை பாட திட்டமாக கொண்டுவருவதற்கான முயற்சியில் அக்கறையோ இருப்பதில்லை. ஊதிய உயர்வு சார்ந்த போராட்டங்களுக்கு மட்டும்தான் ஒற்றுமையாகக் குரல் கொடுப்பார்கள்.

சமீபத்தில்கூட அண்ணா பல்கலை திறமூலம் சார்ந்த பட்டறைகளை நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்லுரிகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தி, ஏனோ உடனே திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது. கணினி என்றால் விண்டோஸ் மட்டுமே என்ற அளவில் பொதுவாக போதிக்கப்படுகிறது. அதிலும் அண்மைய மென்பொருள் மொழிகளும், இயங்குதளங்களும் போதிக்கப் படுவதில்லை; பெரும்பாலும் காலாவதியான தொழில்நுட்பங்களே போதிக்கப்படுகின்றன. இதில் இன்னொரு ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்த நடைமுறை என்னவென்றால், அனேகமாக அனைத்து கல்விநிலையங்களும் திருட்டு விண்டோஸ் பயன்பாட்டையே சார்ந்திருக்கின்றன (மைக்ரோசாப்ட், இதனை அறியாது என்பதில்லை; இதனை அறிந்தாலும் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது என்பது தனி அரசியல்.) திருட்டுப் பிரதி பயன்படுத்துவதை எந்த ஒரு உறுத்தலுமின்றி மேற்கொண்டு வருகின்றனர். இதுவும் மாணவர்களுக்குத் தெரிந்தே நடக்கிறது. நமது வருங்காலத் தூண்களுக்கு, பாட திட்டத்தில் இல்லாத போனஸ் பயிற்சி இது.

ஆனால் காலாவதியாகப் போகின்ற ஒரு விஷயத்துக்கு, இரு அரசியல் யோக்கியர்கள் தங்களுக்குள் அகந்தை யுத்தம் நடத்திக் கொள்ளும்போது, கட்சி கட்டிக்கொண்டு கிளம்பும் `படைப்பளிகள்` மற்றும் `சமூக ஆர்வலர்கள்` என்று உண்மையான சுரணை அடயப் பெறுவார்களோ? நல்ல வார்த்தைகளில் சொல்லப் போனால், இருவரும் நமது தோள்பட்டையில் ஏறியமர்ந்து நமது காதிலேயே ஓ…லமிடுகிறார்கள். இதில் இது சரி இது தவறு என்று `சீரியஸ்` ஆன விவாதம் வேறு.

-அனானிமஸ்

18 comments so far

 1. Baskar
  #1

  அய்யாவுக்கும் அம்மாவுக்கும் எல்லாவற்றிலும் அகந்தை யுத்தம் என்பது நாடறிந்த ஒன்று. அதைவிட, கட்டுரையாளருக்கு அகந்தை அளவுக்கதிகமாக இருக்கும்போல் தெரிகிறது. இவர்தான் மற்றவர் காதில் ஓ…லமிட முயற்சிக்கிறார்

 2. தேவன்
  #2

  தமிழ் பேப்பர் போன்ற இணைய இதழ்களில் இது போன்ற அனானிமஸ் கட்டுரைகளை அனுமதிப்பது தவறு.

  தன்னுடைய பெயரை மறைத்து கட்டுரையெழுதும் இவரை விட தனக்கு தோன்றியதைத் தைரியமாகச் செய்யும் (சொல்லும்) கருணாநிதியும் ஜெயலலிதாவும் எவ்வளவோ மேல்.

  தனக்கு தோன்றியதைத் தைரியமாக சொல்வதும் செய்வதும் அகந்தையன்று தைரியம்.

 3. CHAKRA R
  #3

  எவ்வளவு பேரிடம் மின் புத்தகம் படிப்பதற்கான வசதி உள்ளது?
  எவ்வளவு பேரிடம் இன்டர்நெட்டுடன் கூடிய கணினி வசதி உள்ளது?
  தனம்பிக்கை இல்லாத கோழைகள்தான் தம் பெயரை மறைத்து கட்டுரை எழுதுவார்கள்

 4. Velmurugan
  #4

  அனானி எழுதுனது தப்புன்னு எப்போவோ ரெண்டு கமெண்ட் வந்துடுச்சு… ‘e-reading’ தான் வருங்காலம்… இப்போ வர சாதாரண போன்ல கூட smart phone’sல இருக்கின்ற வசதிகளை கொண்டுள்ளது… இதை எதுக்கு எடுத்தாலும் பொங்கியெழும் தமிழ் கூறு நல்லுலகின் தலையாய ‘புத்திரர்களுக்கு’ எப்பவும் புரியாது, புரிஞ்சிக்கவும் முயற்சிக்க மாட்டாங்க… ஏனேனென்றல் இப்படி எல்லாத்தையும் எதிர்தால்தான் அவர்கள் ‘பொழப்பு’ ஓடும்..

 5. prabakaran
  #5

  அப்படியே, தமிழில் எப்படி எழுதுவது என்றும் சொல்லித் தந்து விட்டால், பேசி தீர்ப்பதை எல்லாம் எழுதி தீர்த்து விடுவோம்.
  பின்னர் அய்யா, அம்மா, அண்ணன் அரசியல்களின் சாதக, பாதகங்களை விட்டு ஒழித்து விடுவோம்.

  நாம் இப்போது இருக்கும் நிலையில் நூலகமும் வேண்டாம், கணினியும் வேண்டாம். பஞ்ச பாட்டை கவனிக்க முடிந்தால் போதும் என்று தோன்றுகிறது.

 6. பணிவரையன்
  #6

  இங்கு கட்டுரை எழுதுபவர்கள் பெயர்கள் எல்லாம் உண்மைப் பெயர்கள் தானா? இந்தக் கட்டுரையாளர் தனது பெயரை எதோ குப்பன் அல்லது சுப்பன் என்று போட்டிருந்தால் மட்டும் கட்டுரை ஒத்துக்கொள்ளத் தக்கதோ?

 7. Karthikeyan G
  #7

  நல்ல கட்டுரை.. மாற்று யோசனை. இதே இடத்தில் கணினிகளை நிறுவி அதன் மூலம் மின் புத்தகங்களாக படிக்க உதவலாம். (E-reader வாங்க முடியாதவர்களுக்காக). இதை எதிர்த்து எழுதுவது சும்மா என்பது எழுதுபவர்களுக்கே தெரியும்.

 8. அ. சரவணன்
  #8

  அய்யா அறிவு ஜீவி அனானி…! இந்தக் கட்டுரை எழுதுறதுக்கு முன்னாடி ஒரு தடவை கன்னிமராவுக்கோ அண்ணா நூலகத்துக்கோ போய் பார்த்துவிட்டு வந்திருந்தால் இப்படியெல்லாம் உளறிக் கொட்டியிருக்க மாட்டீர். அங்கே போய் பாரும்… அதிலும் கல்வி சம்பந்தமான technical reference பகுதிகள் எத்தனை மாணவ மாணவிகளின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது என்று புரியும்.

  எல்லாத்தையும் இணையத்தில் கொடுங்கள் என்று கேட்கிறீரே.. copyright… copyright என்று சொல்வார்களே அப்படியென்றால் என்ன என்று தெரியுமா? பெரும்பாலும் இணையத்திலேயே படித்து விடுவேன் என்று சொல்லும் நீங்கள்தான் திருட்டு விண்டோஸ் பற்றியும் சொல்கிறீர்கள்..? என்ன கொடுமை சரவணன்?!

 9. rangarajan
  #9

  //எவ்வளவு பேரிடம் மின் புத்தகம் படிப்பதற்கான வசதி உள்ளது?
  எவ்வளவு பேரிடம் இன்டர்நெட்டுடன் கூடிய கணினி வசதி உள்ளது?
  தனம்பிக்கை இல்லாத கோழைகள்தான் தம் பெயரை மறைத்து கட்டுரை எழுதுவார்கள்//

  பெயரைச் சொல்லி எழுதி இருக்கலாம்தான். ஆனால் விஷயத்தின் சாரம் சரிதானே. பத்து வருடங்களுக்கு முன்பு எத்தனை பேரிடம் செல் போன் இருந்தது ? அது போல கணினி வசதியும் கண்டிப்பாக வரும். மரத்தைப் பாதுகாக்க வேணும் என்று சொல்லிக்கொண்டு இன்னும் பேப்பர் தயாரித்துக் கொண்டிருந்தால் எப்படி !!!

 10. chinnappayal
  #10

  கரண்ட் என்னமோ இருபத்திலநாலு மணிநேரமும் இருக்குறாமாரி இ-நூல்,டேப்லெட்,கிண்டில்,ஐ-பேட், ஐ-பாட்,,,ன்னு என்னன்னமோ பிதற்றுகிறீர்களே
  அன்பரே அனானி..:-))))

 11. Ganpat
  #11

  ஆங்கில பின்னூட்டங்களை தடை செய்திருப்பதைப்போல “பெயரில்லா” நபர்கள் எழுதும் கட்டுரைகளையும் தடை செய்யவும்.

  அல்லது “அனானிமஸ்”என்பதே புனைப்பெயரா?பாமரன்,பைத்தியக்காரன் என்றெல்லாம் (புனை)பெயர்வைத்துக்கொல்வதைப்போல?

 12. சீனு
  #12

  இந்த நூலக இடமாற்றத்தை யாழ் ரேஞ்சுக்கு ஒப்பிட்டு ஆ.வி.யில் கட்டுரை வந்த போது அந்த கேணைத்தனத்தை நினைத்து சிரிப்பும் எரிச்சலும் தான் வந்தது.

  இருந்தாலும், அம்மாவின் இந்த நூலக இடமாற்றத்தை நான் எதிர்க்கிறேன், கடுமையாக.

 13. சரவணன்
  #13

  உண்மை அறியாமல் பல உளறிக்கொட்டல்கள் கட்டுரையில். உதாரணமாக, தமிழக அரசு மேல்நிலை வகுப்பு கணினி பாடத்திட்டத்தில் எம்.எஸ் ஆபீஸ் கிடையாது. திறந்த மூலமான ஓப்பன் ஆபிஸ்தான் உள்ளது. திறந்த மூலம் என்பதால் திருட்டுக்காப்பியும் இல்லை.

  சரவணன்

 14. Sriram
  #14

  அரசியல்வாதி: நல்ல ஐடியா – இந்த புத்தகத்தை எல்லாம் மின் புத்தகமாக மற்ற எதாவது ஒரு சிங்கப்பூர் அல்லது மலேசியா கம்பெனிக்கு காண்ட்ராக்ட் குடுத்தா நல்ல காசு.

 15. bandhu
  #15

  கட்டுரையாளர் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. முற்றிலும் மாறுபட்ட பார்வை. சொன்ன கருத்து சரி. அவர் யாராக இருந்தால் என்ன?

 16. அனானிமஸ்
  #16

  செத்துப் போனவனுக்கு நெப்போலியன்னு பேரு வச்சா எந்திரிச்சு கத்தியெடுத்துச் சண்டை போட்ருவானா என்ன? கோழி பிரியாணி திங்கப் போனா அதோட குல கோத்திரமெல்லாம் பாத்தா வேலைக்காகுமா? பிரியாணி நல்லாருக்கா அவ்வளவுதான். என்னோட பெயர் காரணமே இது போன்ற பின்னூட்டங்கள்தான். அதுக்கும் மேல பேரு தெரிஞ்சுதான் ஆகணுமுன்னா, `கொஸக்சி பசப்புகழ்`னு வச்சிக்கிட்டு இன்னோரு முறை கட்டுரையைப் படிச்சுப் பாருங்களேன்; ஏதாவது வித்தியாசம் தெரியுதான்னு :).
  நிற்க, ஊர் பேர் தெரியாத அனானிமஸின் அகந்தைக்கே இவ்வளவு அடக்கம் காட்டுகிறீர்களே? என் கையிலே மை தடவி, என் தலையிலே வெண்ணெயத் தடவி, என் சட்டைப் பைல இருந்து ஆட்டையப் போட்டு இவிங்ய அகந்தையோடு ஆட்டம் போடும் போது, இந்த மட்டுக்கு எனக்குச் சுரணை வந்தா அது தப்பா? முடிஞ்மட்டுக்கும் திருத்திக்கிறேன் நண்பா.
  ”எவ்வளவு பேரிடம் மின் புத்தகம் படிப்பதற்கான வசதி உள்ளது? எவ்வளவு பேரிடம் இன்டர்நெட்டுடன் கூடிய கணினி வசதி உள்ளது?” இதப் பத்தி தான் இந்தக் கட்டுரையே; இதுல பாருங்க – “இப்படிப்பட்ட – பளுவையும் குறைக்கக் கூடிய, அதே நேரத்தில் குழந்தைகள் எளிமையாகப் பயன்படுத்தக்கூடிய வகையில், **மலிவு விலையில்** கிடைக்கக் கூடிய மி-நூல் கருவிகளை பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்து அறிமுகப்படுத்தக் கூடிய ஆலோசனகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் செலவிடலாமே?”. அது போக ஒவ்வோராண்டும் புத்தகத்துக்கு அரசாங்கமும் மாணவர்களும் செலவழிக்கு அவசியமே இருக்காதே நண்பா. மேக்கொண்டு தமிழ்நாட்ல அவ்வளவு பேருக்கும் இலவசமா கணினி கொடுக்கப் போறாங்களாமே? இந்த விசயமே உங்களுக்குத் தெரியாதா தேவன்?:)
  நன்றி வேல்முருகன்.
  “பஞ்ச பாட்டை கவனிக்க முடிந்தால் போதும் என்று தோன்றுகிறது.” – என்றால் வீடு வாசல், பள்ளிக்கூடம், திரையரங்கு, தேர்தல், அடிதடி இத்யாதி இத்யாதி எதுவுமே தேவையில்லை ஐயா. எல்லாரும் மறுபடியும் காட்டுக்குள்ளே போய்ட்டா எல்லாம் தீர்ந்தது. சோத்துப் பிரச்ச்னை மட்டும் கவனிக்க வேண்டியதென்றால், கட்டுரைக்கு பின்னூட்டம் கூட அனாவசியம்தானே ஐயா.
  ”மேலும் காகிதப் புத்தகமாக படிப்பதே நல்லது என்று நினைக்கிறேன். ஏனெனில் கண் கெடுவதற்கான வாய்ப்பு அதில் சற்றுக் குறைவு என்பது என் எண்ணம்-நம்பிக்கை.” – எனக்கும் கூட அந்த எண்ணம் இருக்கிறது. `ஆராய்ச்சி` பற்றி பேசும்போது ஆராய்ச்சியில், `பாதுகாப்பான` பயன்பாடும் உள்ளடங்கும்தானே? அதிலும் இப்போது வரும் மின்னூட்களில் இது பற்றிய கவனம் செலுத்தப் படுகிறது என்றே எண்ணுகிறேன். அது போக தொழில்நுட்ப வளர்ச்சியில் இது போன்ற பக்க விளைவுகளைத் தவிர்க்க நாமும் முயல வேண்டும்தானே? இன்று நம்மில் பலருக்கும் வரும் நீரழிவு நோயின் காரணமென்ன? அதற்காக தொழிநுட்பத்தைப் புறக்கணிப்போமா?

 17. Its me!
  #17

  //மேக்கொண்டு தமிழ்நாட்ல அவ்வளவு பேருக்கும் இலவசமா கணினி கொடுக்கப் போறாங்களாமே?//
  அம்மா சொன்னதை அப்படியே நம்பிடும் அம்மாஞ்சியா நீங்க ?!

  இலவசங்கள் ஆட்சிக்கு உத்திரவாதம் தருவது இல்லை என்பதை அய்யாவின் (நீங்கள் “ஐயா” என்றெ விளிக்கலாம் – இயல்பாக உள்ளது!) அனுபவத்தை கண்ட பின்னும் அம்மா தொடர்ந்து செய்வாரா என்ன ?

  தொழில்நுட்பம் எல்லாம் இருக்கட்டும், அதனை தங்களைப் போன்றோரும், பொதுமக்கள்ளும் பயன்படுத்துவதற்கு தேவையான மின்சாரத்தை எப்போது உங்கள் அம்மா தருவார்கள் என்று கேட்டு ஒரு கட்டுரை எழுதினால், நீங்களும் உங்கள் பந்துக்களும் ஷேமமாக இருப்பீர்கள்.

 18. RAJA RAJENDRAN
  #18

  இப்போ அறிவியல் எந்த அளவு வளர்ந்திருக்குன்னா பெண், ஆண் துணையே இல்லாமல், அதாவது செக்ஸ் வைக்காமலேயே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். பெண்ணடிமையைக் கண்டிக்கும் ஒருவர் பெண்களை நோக்கி, “நீங்கள் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஏன் குழந்தை பெற வேண்டும், ஆண்களைத் தவிருங்கள்” என்று சொல்வது போன்ற அபத்தக் கட்டுரை இது ! இ-புத்தகம் புதுபுரட்சியாய் அதுபாட்டுக்கு வளரட்டும்.

  (edited)

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: