சாரு எழுதும் எக்ஸைல் விமரிசனம்

குழப்பம் வேண்டாம். தலைப்பில் எந்தப் பிழையும் இல்லை. சாருவின் எக்ஸைல் நாவல் பற்றி ஒரு விமரிசனம் எழுதலாம் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். பின்னர் திட்டத்தை மாற்றிக்கொண்டேன். எக்ஸைல் நாவலுக்கு நான் எழுதுவதைவிட சாருவே விமரினம் எழுதினால் நன்றாக இருக்கும் அல்லவா? இதோ ஒரு கற்பனை விமரிசனம்.

நான் பொதுவாக தமிழ் இலக்கிய சூழலில் புகழப்படும் நாவல்களைப் படிப்பதில்லை. சரி, எல்லோரும் பரபரப்பாகப் பேசுகிறார்களே என்பதாலும் இந்த நாவலுக்கு என் விமர்சனம் வேண்டும் என்று இந்த நவீன் தினமும் தொல்லை செய்ததாலும் படித்தேன்.

ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி. தமிழ் எழுத்தாளனுக்கு தமிழ் எழுத்தாளன் தான் எதிரி.

எக்ஸைலை ஒரு நாவல் என்று அழைக்க முடியுமா தெரியவில்லை. நாவலோ இல்லையோ இதனை ஒரு வாசிப்பு அனுபவமாகவே முன்வைத்துப் பேசுவோம். இந்த புத்தகத்தின் மொத்தக் கொள்ளளவில் கதை என்று சொல்லக் கூடியது ஒரு மிகச் சிறிய அங்கத்துக்குள் முடிந்துவிடுகிறது. மற்றபடி புத்தகத்தின் முக்கால்வாசிப் பக்கங்கள் கீழ்கண்டவாறு நிரம்பியுள்ளன.

1 . ஒரு பிரபல சாமியார் செய்யும் மோசடிகள். அவரிடம் பணம் கட்டி ஏமாந்தது. அவர் நடத்திய விழாவுக்குச் சென்றபோது ஏற்பட்ட கஷ்டங்கள். அவரின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தனக்கு ஏற்படுத்திய துன்பங்கள்.

2 . இன்னொரு பிரபல சாமியாரை தான் முழுக்க முழுக்க நம்பியது. அவர் ஒரு நடிகையுடன் கட்டிப் புரண்டது. அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்ட பாடம். அதற்கான விளக்கங்கள். அவரிடம் ஏமாந்த கதை. அவர் தனக்கு கொடுத்த இன்னல்கள். சாமியார் தன் மனைவியின் பெயரில் வெளியிட்ட கடிதம். அதன் விளக்கங்கள்.

3 . தனது இயக்குனர் நண்பனை தன் விழாவுக்கு அழைத்தது. அவர் தன் புத்தகத்தை தவறாகப் பேசியது. அவருடைய திரைப்படத்தின் ஒரு பாடல் முழுவதும் தன்னை நடிக்க வைப்பதாகச் சொல்லி ஏமாற்றியது. இது குறித்த விவாதங்கள், விளக்கங்கள்.

4 . ஒரு வாசகியுடன் தான் நடத்திய (அல்லது இருவரும் சேந்து நடத்திய) செக்ஸ் சாட். தான் செய்தது நியாயமா இல்லையா? அந்தப் பெண் நல்லவளா இல்லையா? இது தொடர்பான விளக்கங்கள், பதில்கள்.

5 . தமிழில் ஒரு எழுத்தாளனாக வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை உணர்த்தும் 30 வருட வாழ்க்கையும் தியாகங்களும். தன்னைக் கண்டுகொள்ளாமல் போன தமிழ் மக்களின் மீது தனக்குள்ள கோபம்.

6 . தமிழ் நாட்டில் ஒரு குடிமகனாக வாழ்வது குறித்த கஷ்டங்கள். இந்தியாவில் வாழ்வது எவ்வளவு ஒரு கொடுமையான விஷயம் என்பது பற்றிய பிரஸ்தாபங்கள். ஐரோப்பாவே தனக்கான தேசம் என்பது பற்றிய ஆதங்கம்.

7 .சிறுவயதில் நடந்த துக்கங்கள். முதல் திருமணத்தில் தனக்கு நடந்த கொடுமைகள். கடந்து வந்த இன்னல்கள்.

8 . இதுவரை கேட்டுக் கேட்டுச் சலித்துப் போன சுய புராணங்கள்.

ஒருவர் தன்னை தானே அறிவாளி, நல்லவன் என்று சொல்லிக் கொள்வார். அவராகவே ஒரு யோக்கியனைத் தனது குருநாதராக ஏற்றுக்கொள்வார். ஒரு சாமியாரிடம் பணம் கட்டி ஏமாறுவார். ஒரு பெண்ணுடன் செக்ஸ் சாட்டில் ஈடுபடுவார். நண்பனிடம் சண்டையிடுவார். புதிதாக ஒரு பெண்ணைக் காதலிப்பார். இதனை எல்லாம் எழுத்தாக்கி நாவல் என்று வெளியிடுவார். அதைப் படித்துவிட்டு புது முயற்சி, மைல்கல் என்று பாராட்டுகள் வேறு. நான் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று நினைக்க எனக்கே வெட்கமாக உள்ளது.

ஏன் அய்யா, நான் புரியாமல் தான் கேட்கிறேன். இதை எல்லாம் பக்கம் பக்கமாக உங்கள் தளத்தில் வடித்துவிடீர்களே. அதைப் படித்தவர்களே பரிதாபத்துக்கு உரியவர்கள்தான். அதனை அப்படியே அச்சடித்து நாவலாக வேறு வெளியிடவேண்டுமா? நாவல் என்றால் பர்சனல் டயரி எழுதுவது என்று அர்த்தமா? சுயசரிதை எழுதப் போகிறேன் என்று சொல்லியிருக்கலாமே. நான் புத்தகத்தைத் தொட்டுக்கூட பார்த்திருக்க மாட்டேனே. சுயசரிதை கூட சுவாரஸ்யமாக இருந்தால் மட்டுமே படிக்க முடியும். வெறும் புலம்பல்களை எப்படிப் படிப்பது?

இது போதாது என்று நாவலில் பாதி இடங்களில் பிரெஞ்சு. ஓரிரு இடங்களில் தவிர்க்க முடியாமல் வந்தால் பரவாயில்லை. அப்படியே பக்கம் பக்கமாக தனக்குத் தெரிந்ததை எல்லாம் கொட்டுவதா? ஒரு தமிழ் நாவல் எழுதுகிறோம் என்கிற நினைப்புக்கூட இல்லாமல்? அது சரி, தமிழ் நாவல் எழுதுவாதால் தான் இந்த தைரியம். இங்கே எழுத்துக்கே மதிப்பில்லாதபோது அதில் நடக்கும் அநியாயங்களை எங்கே தட்டிக் கேட்பது?

தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆனாலும் ஒரு பிரெஞ்சு எழுத்தாளன் இப்படித் தன் நாவலில் பக்கம் பக்கமாக தமிழை எழுதிவிட்டு இருந்துவிட முடியுமா? அவனை பிரெஞ்சு மக்கள் விட்டுவிடுவார்களா? அந்தக் கொடுமை எல்லாம் இங்கே மட்டும் தான் நிகழும் .

தமிழர்களுக்கு ஏமாறுவது என்பது பிறப்போடு கிடைத்த ஒன்றாகத் தான் இருக்க வேண்டும். அதனால் தான் ஒருவன் தான் ஏமாந்த கதை எல்லாம் சொல்லிப் புலம்பி நாவல் என்று விற்கிறான். அதனை வாங்கி ஏமாறுகிறார்கள்.

இப்படி ஒருவர் தன்னைப் பற்றியே எழுதி, தான் இதுவரை கொண்ட காதலைப் பற்றி ஒவ்வொரு நாவலிலும் எழுதுவார். அதற்கு பாராட்டு ஒரு கேடா?

கொக்கரக்கோ கூறிய விளக்கம் அப்பட்டமான உண்மை.

/இந்த உதயா ஒவ்வொரு நாவல் எழுதும் போதும் இப்படித்தான் காதலில் விழுகிறான். அந்தக் காதலைப் பற்றி இப்படித்தான் ஆஹா ஓஹோ என்று அளக்கிறான். வேண்டுமானால் பாருங்கள். அவனுடைய அடுத்த நாவலை எழுதும் போதும், இப்படித்தான் வேறொரு காதலில் விழுந்து அதைப் பற்றியும் இதே மாதிரிதான் சொல்லப் போகிறான்./

நாவலில் வரும் பொதுவான சம்பவங்கள் கூட சுவாரசியமானதாகவோ ரசிக்கும்படியாகவோ இல்லை. இம்மாதிரியான பொதுவான சம்பவங்கள் ராசலீலாவில் நிறைய உண்டு என்றாலும் அவை தேர்ந்த அனுபவங்களையும் உள்ளார்ந்த உணர்வுகளையும் உள்ளடக்கியிருந்தது. தபால் துறையில் பணிபுரிவது பற்றிய சம்பவங்கள், அன்ரிசர்வ்டு பெட்டியில் தினமும் பயணிப்பவர்களின் நிலை போன்றவை சிறந்த எடுத்துக்காட்டுகள். ஆனால் இந்நாவலில் வருபவை மிகுந்த சலிப்பை ஏற்படுத்துபவை. வாகன ஓட்டுனராக வந்த சாரதிகள், உணவகங்கள் தேடி அலைந்த சம்பவங்கள், பாஸ்போர்ட் விண்ணப்பித்தலின் சிரமங்கள், எழுத்தாளனின் இன்னல்கள் என்று எல்லாமே முழுக்க முழுக்க புலம்பல்களின் வடிவங்கள்.

உங்களுக்கு வேண்டுமானால் இது புறக்கணிக்கக்கூடிய விஷயமாக இருக்கலாம். எனக்கு இது ஒரு குற்றமாகத் தெரிகிறது. நாவலைப் படிக்கும்போது எனக்கு ஒரு சினிமா வசனம் தான் நினைவிற்கு வருகிறது. ’தான் செய்வது குற்றம் என்றே தெரியாத அளவுக்கு உங்களுக்கு குற்றம் பழகிப் போச்சு’. அது தான் இங்கே நடக்கிறது. அதனை பெருமையாக இதே நாவலில் சொல்கிறார் நமது எழுத்தாளர்

/உதயாவை நிர்வாணமாக்கிக் கழுதையில் ஊர்வலம் விட்டது பற்றி அவனுக்குக் கவலை இல்லை. அடிப்படையில் அவன் ஈனமானம் எதுவும் இல்லாதவன். அந்த நிர்வாண ஊர்வலத்தையே தன் எழுத்துக்கான கச்சாப் பொருளாக ஆக்கி விடக் கூடிய மேஜிக் தெரிந்தவன்./

இது மேஜிக்கா? சரி விடுங்கள்.

காதலியுடன் நடக்கும் அரட்டைகள், சொந்த ஊர் போன அனுபவம், தீவு சென்று தங்கிய அனுபவம், தன் வீட்டு நாய் புணர்வதைப் பார்த்த அனுபவம், தான் சென்ற உணவகங்களில் ஏற்பட்ட அனுபவம், சபரி மலை அனுபவம், ஜாதகம் பார்ப்பது எப்படி, மந்திரம் சொல்வது எப்படி, என்றும் பதினெட்டாக வாழ்வது எப்படி, சமையல் குறிப்புகள், புலம்பல்கள், சுய புராணங்கள் போன்றவைகளால் பக்கங்களை நிரப்பிவிட்டால் போதுமா? நான் இங்கே சுயபுராணங்கள் என்று ஒரு வார்த்தையில் சொல்கிறேன். அதன் நீளம் எத்தனைப் பக்கங்கள் என்று புத்தகத்தைப் படிப்பவர்களுக்குத் தான் புரியும்.

காதலியுடனான நீண்ட காதல்/காம அரட்டைகள் இல்லாமல் நாவல் எங்கே நகர்வது? அதனையும் எழுத்தாளரே அரட்டையில் (அல்லது நாவலில்?) குறிப்பிடுகிறார்.

/உதயா :  the novel is going without spice

shall i add this chat as a chapter?/ 

இதற்கு நான் விமர்சனம் வேறு கொடுக்க வேண்டுமா அய்யா?

கொக்கரக்கோ சொன்னதுபோல் நாவல் முழுக்க முழுக்க உதயா தான். நாவலின் ஒரே சந்தோசம் நமக்குத் தோன்றும் எண்ணங்களை அப்படியே கொக்கரக்கோ என்னும் பாத்திரம் சொல்லிக் கொண்டிருக்கும். அது மட்டுமல்ல நாவலின் பாசிடிவான ஒரு விஷயம் – சுவாரஸ்யமாக மற்றும் விறுவிறுப்பாகச் செல்லும் கொக்கரக்கோ பற்றிய கதையும் கொக்கரக்கோவின் கடைசி பக்க விவாதங்களும்.

இவை அல்லாமல் நாவலில் நீண்ட பட்டியல்கள் பல கிடைக்கின்றன. பட்டியல் என்றால் வெறும் பத்து பெயர்கள் கொண்டவை அல்ல. எவ்வளவு நீண்டவை என்பதை நீங்கள் நாவலில் தான் பார்க்க வேண்டும் :

– எதுவும் கிடைக்காத தீவுக்குச் சென்றால் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களின் பட்டியல்
– உதயாவின் சொந்த ஊரான நாகூரில் இருக்கும் அனைத்து தெருக்களின் பெயர்களைக் கொண்ட பட்டியல்
– தன் ஊரில் தான் கண்ட அனைத்து பாம்பு வகைகளின் பட்டியல்
– பெண்கள் அணியக் கூடிய உடைகளின் பட்டியல் (விளக்கங்களுடன்)
– 108 சரவண கோஷம் அடங்கிய பட்டியல்

பட்டியல்களின் பட்டியலே இப்படி நீண்டுகொண்டே போகிறதே. இவற்றை எல்லாம் படிக்கும்போது வாசகர்களின் மனநிலை எப்படி இருக்கும்? இந்த கொடுமை எல்லாம் போதாதென்று ஜாதகம் எப்படி பயன் தருகிறது, சூன்யம் செய்வது எவ்வளவு பாதிப்பை உண்டாக்குகிறது, கெட்டவனைத் தான் பாம்பு கடிக்கும், விரதங்களை கடைபிடிக்காமல் சபரி மலைக்குப் போனால் எவ்வளவு துன்பங்கள் நேரிடும் போன்ற விஷயங்களும் பக்கம் பக்கமாக வருகின்றன. இதற்கெல்லாம் நம் தமிழ் வாசகர்கள் கொடுக்கும் பெயர் ஆன்மிகம். என்ன கொடுமை அய்யா இது?

தன்னை ஒரு எழுத்தாளனாக அடையாளம் காட்டிக் கொள்பவன் ஒரு தெளிவான சிந்தனையாளன், சிறந்த படைப்புகளை அடையாளம் காண்பவன், சிறந்த படைப்புகளை கொடுக்க வல்லவன், சராசரி மனிதனின் சிந்தனையிலிருந்து மேம்பட்டவன் என்றே அவனை மறைமுகமாகக் கூறிக் கொள்கிறான். ஆனால் மேலே குறிப்பிட்டவை அப்படியா உள்ளன?

சுருக்கமாகச் சொல்லப் போனால், நான் உலக சினிமா ரசிகன் என்று சொல்லிப் பெயர் வாங்கி, கூட்டம் சேர்த்து பெரிய ஹீரோவாகி கடைசியில் விஜய் படம் போன்ற ஒரு மசாலாப் படத்தைக் கொடுத்தால் எப்படி இருக்கும்? படம் பிடிக்கிறதோ இல்லையோ, அது எப்படிப் பட்ட எதிர்மறையான செயல்? இவற்றுக்கெல்லாம் பதில்கள் வேண்டாம். படிக்கும் வாசகர்களுக்குக் கேள்வியே எழவில்லையே என்பது தான் என் ஆச்சரியம்.

இந்தக் கொடுமைகளை எல்லாம் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் இதை எல்லாம் தாண்டிய கொடுமை ஒன்று உள்ளது. இப்படிச் சம்பவங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே போகும்போது நடுநடுவே இந்தச் சம்பவங்கள் நாவலை முடிக்கத் தடையாக உள்ளது, தொந்தரவுகள் இல்லாமல் நாவலை எழுதி முடிக்க வேண்டும் என்கிறார்.

உடனே நாவலை முடிக்க கொடைக்கானல் போகிறார். அங்கே அவர் நண்பர் வீட்டில் நடந்த சம்பவங்கள், பின்பு நாவலை எழுதி முடிக்க பெங்களூர் போகிறார். அங்கே நடந்த சம்பவங்கள். அதாவது – பெங்களூர் லாட்ஜில் நண்பருடன் தங்கியிருந்தது, நண்பர் அளவுக்கு அதிகமாக குடித்து அறையில் வாந்தி எடுத்தது, அதனால் அறை முழுவதும் துர்நாற்றம் அடித்தது, தானே தன் கையால் அவற்றை எல்லாம் சுத்தம் செய்தது, இதனால் நாவலை முடிக்கத் தாமதமானது என்ற கதை எல்லாம் சொல்லி இவற்றையும் நாவலிலேயே சேர்த்துவிடுகிறார். என்ன கொடுமை அய்யா இது? இந்த அநியாயம் உலகத்தில் எங்காவது நடக்குமா?

இது வெறும் குப்பை மட்டுமல்ல. பணத்திருட்டு. இப்படிப்பட்ட கொடுமைகளை எல்லாம் எழுதி நாவல் என்ற பெயரில் விற்பதும் என்னைப் பொறுத்தவரையில் திருட்டு தான். தமிழகம் என்பதால் இது மறைமுக திருட்டாகத் தெரிகிறது. பிரான்சில் மட்டும் இப்படி ஒருவன் எழுதியிருந்தால் அவனை அன்றிலிருந்து திருடன் என்று தான் அழைத்திருப்பார்கள். பிரெஞ்ச்சில் திருடனுக்கு என்னவென்று சொல்லுவேன். அது மட்டும் உங்களுக்குப் புரியவா போகிறது?

இது போன்ற நாவல்கள் தமிழகத்தின் சாபக்கேடு. இவை தான் இது எனக்கான இடமல்ல என்பதை உறுதியாகச் சொல்கின்றன. இனி என்னை எந்த தமிழ் நாவலுக்கும் விமர்சனம் எழுதச் சொல்லி தொந்தரவு செய்யாதீர்கள். எழுத்துக்காக தன்னையே அர்பணித்து 35 வருடங்களாக எழுதிவரும் என்னைப் போன்ற எழுத்தாளனையும் நான் கொடுத்த உலகத் தரமான நாவல்களையும் கண்டுகொள்ளாத தமிழினத்துக்கு இப்படிப்பட்ட நாவல்கள்தான் தேவை.

இந்த விமர்சனத்தை வெளியிடவும் கூட பயமாகத் தான் இருக்கிறது. எழுத்தாளர் இதைத் திட்டி எழுதி அதையே தன் அடுத்த நாவலுக்கான கச்சாப் பொருளாகப் பயன்படுத்திக் கொள்ளமாட்டார் என்று என்ன நிச்சயம்?

0

ந. நவீன் குமார்

25 comments so far

 1. @gpradeesh
  #1

  ”சாரு” எழுதிய விமர்சனம் படிக்க சுவாரசியமாய் இருக்கிறது.உண்மையும் கூட.

 2. @kolaaru
  #2

  ஆவணபடுத்துகய்யா.. எல்லாத்தையும் ஒரு எழுத்தாளனே செய்யனுமா..என்ன ஒரு அவலமான சூழல் !வெட்கபடுறேன் வேதனபடுறேன் !!!

 3. Guru
  #3

  மாமே சாரு டாரு டாரு..நல்லா இருந்தது…இனிமே எவனாவது அந்த புக்க வாங்குவான் 🙂

 4. amas32
  #4

  unbelievable style. LOL congratulations!
  amas32

 5. @thoatta
  #5

  மிக மிக நல்ல முயற்சி 😉 மேம்போக்காக படிக்கவே எனக்கு கஷ்டமாக இருந்தது 😉 முழுதும் படித்தமைக்கு முதலில் வணக்கங்கள்.! சாருவின் எழுத்து நடையை ஒத்திருந்தாலும் சிறிது வித்தியாசம் தெரிகிறது. ஆனால் விமர்சன கருத்தும் கருத்தாக்கமும் அற்புதம், உண்மை.!

 6. SUPPAMANI
  #6

  I wonder how nothing has been mentioned about ‘BEGGING IN THE INTERNET” either in the NOVEL or in this review? So this is not written by the referred author;

  Suppamani

 7. sowmya @arattaigirl
  #7

  உச்சகட்ட நையாண்டித்தனம் 🙂 இந்த விமர்சனம் படித்து இதைப்பற்றி சாரு விமர்சனம் எழுதுவதற்கு உங்க எழுத்து பேருதவி புரியும் போலிருக்கே:-)

 8. MS
  #8

  //இது வெறும் குப்பை மட்டுமல்ல. பணத்திருட்டு. இப்படிப்பட்ட கொடுமைகளை எல்லாம் எழுதி நாவல் என்ற பெயரில் விற்பதும் என்னைப் பொறுத்தவரையில் திருட்டு தான்//

  I agree.

 9. PERUMAL KARUR
  #9

  மிஸ்டர் நவீன், உங்களை பார்த்து எனக்கு பரிதாபப்படுவதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
  நுண்ணுணர்வு என்றால் வீசம் என்ன விலை என்று கேட்கிறீர்கள்!

  எக்சைல் நாவலை விட்டு விட்டு தமிழின் சிறந்த பத்து நாவல்களை எந்த கொம்பனும் பட்டியலிட்டு விட முடியாது.

 10. அமர்
  #10

  தைரியமான விமர்சனம். நன்றி.

 11. தேவன்
  #11

  நான் இதுவரை சாருவின் நாவல் எதையும் படிக்கவில்லை. படிக்கவும் வேண்டாம் என்று தோன்றுகிறது.

 12. டெல்டா நேத்தன்
  #12

  பிச்சாவரம் தீவில் கார்னிவல் கொண்டாட தேவையான பொருட்களின் பட்டியலை எட்டு பக்கத்தில் படித்ததும் என் நுண்ணுணர்வு சீறி எழுந்து பிராண்டி விட்டது மை லார்ட்.

 13. karthibsr
  #13

  ஏற்கனவே கோணல் பக்கங்கள் படிச்சுட்டு புத்தி பேதலிச்சுட்டது, நல்ல வேலை எகஸல் வாங்காம தப்பித்தேன். நன்றி

 14. chinnappayal
  #14

  விமர்சனத்தில் மாமல்லனின் ஸ்மெல் அடிக்கிறதே..!

 15. நவீன் @navi_n
  #15

  கருத்துக்களுக்கு நன்றி தோழர்களே ..!

 16. நவீன் @navi_n
  #16

  @PERUMAL KARUR

  மிஸ்டர் பெருமாள்.. தமிழின் சிறந்த பத்து நாவல்களுக்கான உங்களின் பட்டியலைக் காண மிக ஆவலுடன் இருக்கிறோம்

 17. நவீன் @navi_n
  #17

  @chinnappayal

  விமர்சிக்கும்போது சாருவுக்குள் ஒரு மாமல்லன் இருந்திருக்கார் போல ..

 18. vasanth
  #18

  சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு வெளிவந்த சபாபதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் இதைப் போன்று தான் செய்திருப்பார்கள்.

  http://www.youtube.com/watch?v=Qxs94r_J7-U

 19. Siddarth
  #19

  Excellent review Naveen. Your review is applicable to all of ultimate writer Charu’s novels. What’s your facbook profile?

 20. புதியவன்
  #20

  சூப்பர் டூப்பர் விமர்சனம்.
  இனிமே அந்தக் ……..தைப் படிக்கனும்னு அவசியமில்லை.

  பின்னிட்டீங்க.
  விமர்சனத்துக்கு வாழ்த்துக்களும்,
  விமர்சனம் எழுதுவதற்காக அதைப்
  படிச்சதுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் உரித்தாகுக!!

 21. மார்க்
  #21

  சாரு, சாருபாஷையில் எழுதிய சுருக்கமான விமர்சனம்:
  “எக்ஸைல் = ஒரு காலிப் பெருங்காய டப்பாவின் மீள்புலம்பல்கள்னு சொல்லப்படத் தகுதியுள்ள, படிக்காமலேயே விமர்சனம் செய்யத்தக்க, பின்நவீனத்துவத்தின் முன்புலத்தில் , எக்ஸிஸ்டென்ஷியலிசம் தனது அழுக்குக் கோவணத்தைக் கழட்டாமல் பேண்ட பீ ”

 22. நவீன் @navi_n
  #22

  @Siddarth : எல்லா நாவலுக்கும் இந்த விதி முழுமையாக பொருந்தாது நண்பா… பேஸ்புக்கில் நான் எதுவும் எழுதுவதில்லை நண்பா 🙂

 23. அருண் @arunlikes
  #23

  படிக்கலாம்னு முன்பதிவு செஞ்சு வாங்குன புக்குல, ஏற்கனவே அவர் வெப்சைட்ல எழுதுனதே எழுதி வெச்சுருக்காரு. இன்னும் முழுசா முடிக்கல.
  உங்க/ சாரு விமர்சனம் செம..

 24. suresh
  #24

  superb..
  innuma avara intha ooru nambuthu

 25. Balachandar
  #25

  You can be really proud about your creativity. Whatever you wanted to say, you have said, using charu’s style. !!!

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: