ஃபேஸ்புக்கின் கதை

படம் எப்படி இருக்கும்? பிரச்னைகளின்றி வெளி வருமா? வந்தால் ஓடுமா? என்று ஒரு வருடத்திற்கு மேலாக மிகுந்த எதிர்பார்ப்போடிருந்த கேள்விகளுக்கு எல்லாம் அக்டோபர் முதல் தேதி பதில் கிடைத்தது. விமர்சனம் எழுதுபவர்களுக்குக் கூட டிக்கெட் கிடைப்பது கடினமாக இருந்தது. பார்த்த விமர்சகர்களில் பெரும்பானவர்கள் பாராட்டித் தீர்த்தனர். பெரும்பாலான ஐடி அலுவலகங்களில் இது தான் ஹாட் டாபிக் ஆக இருந்தது.வெளியான வார இறுதியில் மட்டுமே 23 மில்லியன் டாலர் வசூலை வாரியது. நிச்சயம் அந்தப் பெயருக்குப் பணத்தை ஈர்க்கும் வசிய சக்தி இருக்கிறது.

எந்திரனல்ல இது.  பேஸ்புக் என்னும் வெப்சைட் உருவான கதையைச் சொல்லும்,  “த சோஷியல் நெட்வொர்க்” என்ற  கொலம்பியா பிக்சர்ஸ் படம்.

தி சோஷியல் நெட்வொர்க் படத்தில் ஒரு காட்சி

காலேஜ் படிக்கும் காலத்தில், சக நண்பர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள காலேஜ் ரூமில் வடிவமைக்கப்பட்ட ஒரு வெப்சைட் 500 மில்லியன் பயனீட்டாளர்கள் கொண்ட, 15 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனமாக மாறியதற்குக் காரணமாக இருந்தவர்கள், இந்த ஐடியா என்னுடையது தான் என சொந்தம் கொண்டாடியவர்கள், நண்பர்களை இணைக்க உருவான தளத்திற்கு இருந்த எதிரிகள்,  நண்பேண்டா என கொஞ்சிக் கொண்டவர்கள், கோர்ட்டில் சண்டை போட்டுக் கொண்டது  என பேஸ்புக்கின் அனைத்து முகங்களும் கொஞ்சம் கொஞ்சம் காட்டப்படும் படம்.

பெரும்பாலான படங்களில் டெக்னாலஜி என்ற பேரின் டகுல் பாச்சா விடுவார்கள். நம் கேப்டன், மீடியா ப்ளேயரில் டைப் செய்வது ஓர் உதாரணம். இதை விடக் கொடூரமான அபத்தங்கள் எல்லாம் ஹாலிவுட்டிலும் காட்டப்படுவது உண்டு. ஆனால் இந்தப் படத்தில் டெக்னாலஜி சமாசாரங்களை அந்த அளவுக்கு சாவடிக்காமல் (அல்லது நாரடிக்காமல்) இருப்பது சந்தோஷத்தைத் தரும் முக்கிய அம்சம். படு கூர்மையான வசனங்களாகட்டும், விறுவிறுப்பு கெடாத  திரைக்கதையாகட்டும், காசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகனை மனசுவிட்டு வாழ்த்தச் சொல்கின்றன. .

ஆனால், பாக்க மாட்டேன் பாக்க மாட்டேன்… நான் இந்தப் படத்தைப் பார்க்க மாட்டேன் என படத்தின் உண்மைக் கதாநாயகன் மார்க் சொல்லியிருப்பதும் ஆர்வத்தை எகிறவைக்கிற விஷயம். ‘நான் இது வரை பார்த்திராத, யார் என்று எனக்கு சரியாகத் தெரியாத, எனக்கு ஒரு தீங்கும் செய்யாத இளைஞனுக்கு நான் அநியாயம் இழைக்க விரும்பவில்லை. என் மனச்சாட்சிக்குத் தெரிந்து அப்படிச் செய்யவில்லை’ என்றெல்லாம் படத்தின் திரைக்கதை ஆசிரியர் ஆரொன் சொர்கின் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பது, இன்னும் ஆர்வம் தூண்டுகிற விஷயம். படம் சொல்லும் கதைக்கு அப்பால் என்னென்னவோ சொல்லப்படாத நிஜ சங்கதிகள் இருக்கிறது போலிருக்கிறதே என்று ஃபேஸ்புக் பிரியர்கள் குடையத் தொடங்க ஒரு குட்டி வாய்ப்பு.

சிலிக்கன் வேலியில் இருக்கும் ஒரு கம்பெனியை சைதாப்பேட்டை வரை கொண்டு வருவது சாமானியமல்ல. ஆனால் அப்படி உலகம் முழுக்க சோஷியல் நெட்வொர்க்கைக் கொண்டு செல்லக் காரணமாயிருந்தவருக்கு, சோஷியல் சென்ஸ் இல்லாத மாதிரி காட்டுவது எல்லாம் – ஆரொன் சார் கொஞ்சம் ஓவர் சார் என்று சொல்லவைப்பவை.

ஃபேஸ்புக் தொடங்குவதற்கு முதன் முதலில் முதல் போட்டவர், எட்யூர்டொ செவரின். பணம் போட்டதோடு சரி. கம்பெனியை முன்னேற்ற, கலிபோர்னியாவில் மார்க் இரவு பகலாக உழைத்துக்கொண்டிருந்தபோது, அந்தப்பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்கவில்லை அவர். எப்போதாவது அத்தி பூத்து, வந்தாலும், சண்டைதான் போடுவார். உதவி செய்யாது போனாலும் உபத்திரவம் செய்யாதிருக்காதே என்பது அவரது நல்ல கொள்கைகளுள் ஒன்று. மிக நெருக்கடியான ஒரு சந்தர்ப்பத்தில் கம்பெனியின் வங்கிக் கணக்கை முடக்கி வைத்து,  கம்பெனிக்குக் கபால மோட்சம் தரவிருந்தவர் எட்யூர்டோ செவரின்.

ஆனால் இந்தப் படம் அவரை ஓர் உத்தமோத்தமராக, சரித்திரத்தில் ‘பலிகடா’வாக்கப்பட்டவராகக் காட்டுகிறது.

ஆரம்ப காலத்தில் தளத்திற்குச் சில விளம்பர ஆர்டர்கள் பிடித்துக் கொடுத்ததைத் தவிர சொல்லிக்கொள்ளும் படி எதையும் கிள்ளிப் போடாத ,எட்யூர்டொ செவரின், பேஸ்புக் ஆரம்பிக்க கிள்ளுக் கீரையாகக் கொடுத்த கொஞ்சப் பணம் இன்று பில்லியன் டாலர் ஆல மரமாக வளர்ந்து விட்டது. நோகாமல் நோன்பு கும்பிடுவது எப்படி என்று இவரது பேஸ்புக் வாலில் யாராவது எழுதிக் கேட்டு சொன்னால் புண்ணியமாய்ப் போகும்.

.மனஸ்தாபங்கள் முற்றி, பாதியில் பணம் தராமல் எட்யூர்டொ செவரின் கிளம்பிப் போனபின், பல் மருத்துவராக இருந்த மார்க்கின் அப்பா, பண உதவி மட்டுமில்லாமல் கம்பெனிக்கு போன் அட்டெண்ட் செய்வது வரை உதவியது எல்லாம் படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. அது மட்டுமில்லாமல் பேஸ்புக்கின் ஆரம்பக் காலத்தில், தன் சொந்த உபயோகத்திற்காகப் பயனீட்டாளரிகளின் ப்ரைவேட் டேட்டாவை மார்க் சுட்டது போன்ற பேஸ்புக்கின் கருப்பு பக்கங்களையும் படம் காட்டுவதில்லை. காட்டியவரை போதும் என நினைத்திருப்பார்கள் போல.

ஒரு சம கால சரித்திரத்தைப் பதிவு செய்வதில் இவ்வளவு சிரமமா? என்ன செய்ய? தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போல சினிமா.

கொசுத் தொல்லை தாங்கலடா, துரத்தி விடுவோம் என்ற ஃபேஸ்புக்கால் துரத்தப்பட்ட எட்யூர்டொ செவரினின் உதவியுடன் பென் மெச்ரிச் [Ben Mezrich] என்பவர் எழுதிய  “த ஆக்ஸிடண்டல் பில்லியனர்ஸ்”என்னும் புத்தகத்தை மையமாகவைத்து எடுக்கப்பட்ட படம்தான் இது. இந்த பென் மெச்ரிச் இதற்கு முன்னர் நிஜம் ஆனால் நிஜமல்ல என்ற கணக்காய் “Bringing down the house”என்று ஒரு புத்தகத்தை எழுதினார். அதுதான் 21 என்ற ஹாலிவுட் படமாகவும், டீன் பட்டி என்று அமிதாப் நடித்த படமாகவும் மாறியது என்பதெல்லாம் உப கதை.

துரத்தப்பட்ட எட்யூர்டொ செவரின் வழக்குத் தொடங்கி பின்னர் அது சமரசமாகி இன்று இவரையும் ஒரு நிறுவனர் என்று கம்பெனி கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார்கள்.

பேஸ்புக் படக்கதையின் ஓட்டைகள் என்று உங்கள் பேஸ்புக் வலைப்பக்கங்களில் எழுத இப்போதே தயாராகுங்கள். அக்டோபர் 21, மும்பை திரைப்பட விழாவில் திரையிடும் வரையோ, டிசம்பர் 10 இந்தியத் தியேட்டர்களில் வெளிவரும் வரையோ காத்திருக்கப் பொறுமையில்லையெனில் அமெரிக்காவுக்கு இன்றே டிக்கெட் வாங்கிவிடுங்கள்.

மற்றபடி கெட்ட டவுன்லோடில் பார்க்க நினைத்தால் சாமி கண்ணைக் குத்தும்.

5 comments so far

 1. சிவசுந்தர்
  #1

  வாழ்த்துக்கள் அப்பு.. உங்கள் எழுத்தும் வர்ணனையும் அற்புதம். தொடர்ந்து நீங்கள் எதுத வேண்டும்….

 2. சிவசுந்தர்
  #2

  வாழ்த்துக்கள் அப்பு … நீங்கள் தொடர்ந்து அழுத வேண்டும் .. வர்ணனை அற்புதம்…

 3. Suresh
  #3

  எந்த கெட்ட டவுன்லோடுன்னு ஒரு சுட்டி கொடுத்திருந்தா சாமி கண்ணைக் குத்தாம பாத்துக்குவோம் இல்ல?

 4. Deepak
  #4

  engaluku tamil mel patru illai endru yar sonnathu.Ungalai pondravargal ungal eluthukalal engalai irthal ,nichiyam patru kudam..arumayana eluthukal.. mikka nandri..

 5. Girish
  #5

  Vimarsanam thedi padikkavittalum, ungal ezhuthu pramadham.. thodarnthu ezhutha vazhthugal!

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: