பட்டாம்பூச்சி குறிப்புகள் 2 : அருந்ததி ராய் செய்தது சரியா?

சமீபத்தில் வெளிவந்த உயிர்மை சிறப்பிதழில் அ. முத்துகிருஷ்ணன் கூடங்குளம் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தனி நூலாக வெளிவந்துள்ளது. புத்தகக் கண்காட்சியில் அவரைச் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தபோது, இரண்டு நாள்களில் தனது பிரசுரம் இரண்டாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். ‘இருபதாயிரம் பிரதிகள் அச்சிட்டிருக்கிறோம். ஒருவரே பத்து, இருபது என்று வாங்கி சென்று விநியோகிக்கிறார்கள். பல இடங்களில் இருந்தும் தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு முக்கியப் பிரச்னை குறித்து ஏதோ என்னால் முடிந்த வரை விழிப்புணர்வு ஊட்ட முடிந்தது திருப்தியளிக்கிறது.’

தனிப்பெரும் கட்டுரையாக அல்லாமல், சிறிய சிறிய பகுதிகளாக உடைத்து ஃபுகுஷிமா, அணு அரசியல், அமெரிக்க நலன்கள், மன்மோகன் சிங், ஜாதுகுடா என்று பகுதிகள் பிரித்து படங்களுடன் இந்நூல் அமைக்கப்பட்டிருக்கிறது. ‘ஏன் ஒரு பக்கச் சார்போடு எழுதியிருக்கிறீர்கள்? சாதகமான விஷயங்களையும் சொல்லியிருக்கலாமே என்று சிலர் கேட்டார்கள். அதைத்தானே ஐயா பிரபல ஊடகங்கள் அனைத்தும் எழுதிக்கொண்டிருக்கின்றன! வெளிப்படாத இன்னொரு பக்கத்தை அல்லவா நான் சொல்லியிருக்கிறேன்.’ (கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள், அ. முத்துகிருஷ்ணன், உயிர்மை, 64 பக்கங்கள், விலை ரூ.15).

தனது பிரசுரத்துடன் இணைத்து வாசிக்க இன்னொரு புத்தகத்தை முத்துகிருஷ்ணன் சிபாரிசு செய்தார். எஸ்.பி. உதயகுமார் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய அணு, ஆட்டம், அரசியல், நூல் வடிவில் வெளிவந்திருக்கிறது. ஆனந்த விகடன் அரங்கில் கிடைக்கிறது.

0

பசிக்கிறதே என்று கேண்டீன் பக்கம் சென்றது பெரும் பிழையாகிவிட்டது. மினி சமோசா என்னும் பெயரில் நான்கு துண்டுகள் 50 ரூபாய். இந்தக் காசில் அ. முத்துகிருஷ்ணனின் பிரசுரம் மூன்று பிரதிகள் வாங்கி நண்பர்களுக்கு விநியோகிக்கலாம். செய்த நன்மைக்குப் பிரதிபலனாக ஒரு தேநீரும் வாங்கி அருந்தலாம்.

0

கிழக்கு பதிப்பகத்தில் இரண்டு கம்யூனிச எதிர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன. ஒன்று விலங்குப் பண்ணை. ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய பகடி கிளாஸிக்கின் தமிழ் வடிவம். வாசிக்க இலகுவாக இருக்கிறது. இன்னொன்று பஞ்சம், பேரழிவு, கம்யூனிஸம். தமிழ் ஹிந்து புகழ் அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் கம்யூனிஸ எதிர்ப்பு நூல். ‘மார்க்ஸ் அடிமைத்தனத்தை ஆதரித்தார்’, ‘மாவோ திட்டமிட்டு பஞ்சங்களை உருவாக்கினார்’ ‘ஸ்டாலின் லட்சக்கணக்கானர்களைக் கொன்றொழித்தார்’, ‘கம்யூனிஸம் காலாவதியான ஒரு மனித விரோத தத்துவம்’, ‘சே குவேரா ஒரு பிழையான புரட்சியாளர்’ போன்ற பல ‘அரியத் தகவல்களை’ இந்நூல் உள்ளடக்கியிருப்பதாகப் பதிப்பாளர் தெரிவித்தார்.  படித்து முடித்த பிறகு மேற்கொண்டு எழுதுகிறேன்.

இன்றைய சிபாரிசு :

ஓப்பன் சோர்ஸ் பற்றிய ஒரு புதிய செயல்முறை விளக்கப் புத்தகத்தை கிழக்கு வெளியிட்டிருக்கிறது. இலவச மென்பொருள்கள் அடங்கிய சிடி இலவசம்.

0

அருந்ததி ராயின் புரோக்கன் ரிபப்ளிக்கின் தமிழாக்கத்தைக் காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அருந்ததி ராய் உரையாற்றியது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜன் லோக்பால் மசோதா என்பது காந்தீயம் அல்ல என்று அவர் சொன்னதால் ஏற்பட்ட ஆச்சரியமல்ல இது. அருந்ததி ராய் எப்படி தன் படைப்பைக் காலச்சுவடு போன்ற ஒரு தலித் எதிர்ப்பு, இலங்கைத் தமிழர் எதிர்ப்பு, புலிகள் எதிர்ப்பு பதிப்பகத்துக்கு அளிக்கலாம்? எப்படி நூல் வெளியீட்டில் கலந்துகொள்ளலாம்?

அருந்ததி ராய்க்கு திறந்த கடிதம் என்னும் பெயரில் ஈமெயிலில் அனுப்பிவைக்கப்பட்ட ஒரு கடிதத்தின் நகல் எனக்கும் வந்திருந்தது. அந்தக் கடிதம் எழுப்பியுள்ள சில தார்மீகக் கேள்விகளுக்கு நாமெல்லாம் சேர்ந்துதான் விடை கண்டுபிடிக்கவேண்டும்.

ஒரு கலைஞனுக்கு எப்படிப்பட்ட சமூகப் பொறுப்புகள் இருக்கவேண்டும்? தன் சமூகத்தை பாதிக்கும் பிரச்னைகள் பற்றி அவர் (இரு பாலினமும் சேர்த்து) தன் படைப்புகளில் விவாதிக்கவேண்டுமா? மக்களின் மனநிலையை அவர் பிரதிபலிக்கவேண்டுமா? அவருக்கு அரசியல் சார்பு இருக்கலாமா? அரசியல் இயக்கச் சார்பு இருக்கலாமா? மக்களை வழிநடத்தும், மக்களுக்குத் தேவைப்படும் கருத்துகளைப் பரப்பும் உரிமை அவருக்கு இருக்கிறதா? படைப்பு வேறு படைப்பாளி வேறு என்பது ஏற்கத்தக்கதா?

அருந்ததி ராயை எடுத்துக்கொண்டால், தன் படைப்பு எப்படிப்பட்ட பதிப்பகத்தின் வாயிலாக வெளிவரவேண்டும் என்பது பற்றி அவர் ஹோம் வொர்க் செய்திருக்கவேண்டாமா? காலச்சுவடு எப்படிப்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறது, அவர்களுடைய ஆசிரியர் குழுவின் பார்வை என்ன? அவர்களுடைய பார்வையும் பங்களிப்பும் எப்படிப்பட்டவை? இவற்றையெல்லாம் அவர் ஆராய்ந்திருக்கவேண்டாமா?

சமீபத்தில், நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இளையராஜாவின் மாபெரும் இசை நிகழ்ச்சியையும் அதற்கு வந்து குவிந்த எதிர்ப்புகளையும் இத்துடன் இணைத்து பார்க்கவேண்டியிருக்கிறது.

அருந்ததி ராயின் கருத்துகள் வரவேற்கத்தக்கவை. இளையராஜாவின் இசை ரசிக்கத்தக்கது. ஐயமில்லை. ஆனால் தன் படைப்பை வெளிப்படுத்த அவர்கள் கையாண்ட கருவி எத்தகையது என்பதையும் அதன் பின்னணியையும் நாம் விமரிசனத்துக்கும் விவாதத்துக்கும் உள்ளாக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?

0

என்னைக் கவர்ந்த புத்தகங்கள். வெளியீடு, பாரதி புத்தகாலயம்.

0

பட்டாம்பூச்சி

No comments yet

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: