காவல் கோட்டம் – ஓர் அனுபவம்

“Good writers write the kind of history good historians can’t or don’t write.” – Daniel Aaron

சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலை நான் வாசித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தாலும், அதற்கு 2011 சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கும் இவ்வேளையில் அதைப் பற்றி எழுத முயல்வது பரிசுத்த‌மான‌ சந்தர்ப்பவாதமாகவே படுகிறது. ஆனாலும் இப்போதேனும் இந்த நாவல் குறித்த கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு அமைந்ததே என்றே எடுத்துக்கொள்கிறேன்.

காவல் கோட்டம் என்கிற பிரம்மாண்டமான நாவல் வெளியாகியிருக்கிறது என்ற தகவல் டிசம்பர் 2008 வாக்கில் சிறுபத்திரிக்கைகள் வாயிலாக அறிந்திருந்தாலும் அது குறித்த முதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆண்டிறுதி ஆனந்த‌ விகடன் இதழில் வெளியிடப்பட்ட விகடன் அவார்ட்ஸ் 2008 தான். அதில் அவ்வாண்டின் சிறந்த நாவல் என்று காவல் கோட்டம் நாவலைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

பிப்ரவரி 2009 காலச்சுவடு இதழில் ஆ. இரா. வேங்கடாசலபதி காவல் கோட்டம் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை (களவியல் காரிகை) வெளியாகி இருந்தது.

மார்ச் 2009 தீராநதி இதழில் வெளியான எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய விமர்சனக் கட்டுரையான ‘காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்’ (பகுதி-1, பகுதி-2) தான் அடுத்த‌ தூண்டுகோல். அதில் விழுந்திருந்தது வெறுப்பின் சாயை மட்டுமே என்பது நாவலைப் படிக்காமல் கட்டுரையின் பாணியிலேயே தெரிந்து விட்டது.

ச.தமிழ்ச்செல்வன் மற்றும் ம.மணிமாறன் ஆகியோர் இதைக் கண்டித்து மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தனர். மேலாண்மை பொன்னுச்சாமியும் ‘காவல் கோட்டம் : மீள் விசாரணை – ஆயிரம் பக்க அதிசயம்’ என்று நாவலைப் புகழ்ந்துரைத்து ஒரு விமர்சனம் எழுதினார். ஜெயமோகனும் சற்று நாசூக்காக இதைக் கடிந்து எழுதியிருந்தார் (“முன்நிலைபாடுகளும் கசப்புகளும் இல்லாமல் வாசிப்பதே”). எஸ்.ரா.வின் மொழியா இது என செல்வேந்திரன், ஹரன் ப்ரசன்னா, யாழிசை லேகா உள்ளிட்ட சில வலைப்பதிவர்களும் ஆச்சரியம் காட்டி இருந்தனர்.

ஜ.சிவகுமார் என்ற சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை ஆகிய நாவல்களுடன் காவல் கோட்டத்தை ஒப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார்.

பிற்பாடு அக்டோபர் 2009ல் ஜெயமோகன் காவல் கோட்டம் பற்றி மிக விரிவாக தன் வலைப்பதிவில் எழுதினார் (பகுதி-1, பகுதி-2, பகுதி-3, பகுதி-4, பகுதி-5). அவர் இதுகாறும் வேறு ஏதேனும் நாவலுக்கு இது போன்றதொரு நீண்ட விமர்சனம் எழுதி இருக்கிறாரா என்பது சந்தேகமே. இந்தத் தனித்துவமே எனை வசீகரித்தது.

அதன் காரணமாகவே சு.வெங்கடேசனின் எந்தப் படைப்பையும் அதற்கு முன்பு படித்ததில்லை என்ற போதிலும் ஜனவரி 2010 சென்னைப் புத்தகக் காட்சியில் காவல் கோட்டம் நாவலை வாங்கினேன். கொஞ்சமும் மெருகு கலையாத புது மணப்பெண் மாதிரி காத்திருந்தது காவல் கோட்டம்.

பின் 2010ன் கோடையில் என்பதாக ஞாபகம் – காவல் கோட்டத்தை முதன் முதல் ஸ்பரிசித்தேன். கிட்டதட்ட ஒரு மாதம் போல் நீடித்த நீண்ட கூடல் அனுபவமது. கூடலை நீட்டிப்பதற்காக அல்லாமல் தொடர்வதற்காக Start and Stop Technique பயன்படுத்த வேண்டி இருந்தது. இடையில் சற்றே இளகிக் கொடுத்தாலும் இறுதி வரை மிகுந்த உழைப்பையும் பொறுமையையும் கோரும் ஓர் அடங்காப் புரவியாகவே இருந்தது காவல் கோட்டம். சமீபத்தைய மறுவாசிப்பிலும் கூட‌ அப்படியே தான்.

எந்த சந்தர்ப்பத்திலும் நாவலின் எந்தப் பகுதியையும் என்னால் தொடர்ச்சியாய் மூன்று மணி நேரத்திற்கு மேல் படிக்க இயலவில்லை. இடைவெளி எடுத்துக் கொண்டு அதுவரை படித்ததை கிரகித்து உள்வாங்கி ஜீரணித்த பின்பே அடுத்த பகுதியை மீண்டும் தொடர வேண்டி இருந்தது. இதன் அர்த்தம் காவல் கோட்டம் நாவல் சுவாரஸ்யமாய் இல்லை என்பதில்லை. இதன் அடர்த்தியும், செறிவும் அத்தகைய அக்கறையை, கவனத்தைக் கோருகிறது. இதை ஒரு வாசிப்பு என்று சொல்வதை விட ஓர் அனுபவம் என்பதே சரி. இதற்கு முன்பு இத்தகையதோர் அனுபவத்தைத் தந்த நாவல் என்றால் அது ஜெயமோகனின் விஷ்ணுபுரம் தான்.

நாவல் இதுவரை மூவாயிரம் பிரதிகள் விற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமற்றதொரு தகவல் வழி அறிகிறேன். அது உண்மையெனில் அதில் ஒரு சதவிகிதம் பேராவது (அதாவது முப்பது பேர்) இந்நாவலை முழுக்க ஊன்றிப் படித்திருப்பார்களா என்கிற என் அடிப்படைச் சந்தேகத்தை நேரடியாக‌வே இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

*

நாவல் பற்றிப் பேசப்புகும்முன் தமிழில் என் வரலாற்று நாவல் வாசிப்புத்தகுதியை கொஞ்சம் எடை போட்டுக் கொள்வோம். இதுவரை கல்கி, சாண்டில்யன், அகிலன், கருணாநிதி, ர.சு.நல்லபெருமாள், ஜெகசிற்பியன், விக்கிரமன், அரு.ராமநாதன், ப.சிங்காரம், பிரபஞ்சன், சுஜாதா, பாலகுமாரன், ரா.கி.ரங்கராஜன், கௌதம நீலாம்பரன், கவிஞர் வைரமுத்து, விசாலி கண்ணதாசன் ஆகியோர் எழுதிய குறைந்தபட்சம் நூறு சரித்திரப் புதினங்களையேனும் வாசித்திருப்பேன்.

அண்ணாத்துரை, ந.பார்த்தசாரதி, கோவி. மணிசேகரன், ஸ்ரீவேணுகோபாலன், கண்ணதாசன், மு.மேத்தா, இந்திரா சௌந்தர்ராஜன், பா.விஜய் ஆகியோர் எழுதிய சரித்திர நாவல்கள் எதையும் படித்ததில்லை. தமிழின் முதல் நாவலான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் படித்ததில்லை. பி. ஆர். இராஜமையர் எழுதிய முதல் தொடர்கதையான கமலாம்பாள் சரித்திரம் படித்தது இல்லை. தமிழின் முக்கிய சரித்திர நாவல் முயற்சிகளாகக் குறிப்பிடப்படும் சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம், பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் இரண்டையும் படித்ததில்லை. கள்ளர் பற்றிப் பேசும் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, வேல ராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை இரண்டையும் கூட இதுவரை படித்ததில்லை.

வாசித்தவரையில் கீழ்க்காணும் நாவல்கள் முக்கியமானவையாகப் படுகின்றன: பொன்னியின் செல்வன் (கல்கி), ஜலதீபம் (சாண்டில்யன்), கல்லுக்குள் ஈரம் (ர.சு. நல்லபெருமாள்), புயலிலே ஒரு தோணி (ப.சிங்காரம்), வீரபாண்டியன் மனைவி (அரு.ராமநாதன்), பொன்னர் சங்கர் (கருணாநிதி), வானம் வசப்படும் (பிரபஞ்சன்), நான் கிருஷ்ணதேவராயன் (ரா.கி.ரங்கராஜன்) மற்றும் உடையார் (பாலகுமாரன்).

சு.வெங்கட்டேசனின் காவல் கோட்டம் இவற்றையெல்லாம் விஞ்சி நிற்கிறது. அவ்வகையில் நான் வாசித்தவற்றில் மிகச்சிறந்த சரித்திர நாவல் இது தான்.

*

காவல் கோட்டம் என்கிற வரலாற்று நாவல் 2 பெரும் பாகங்களாக (முடி அரசு, குடி மக்கள்), 10 உட்பிரிவுகளாக (மதுரா விஜயம், பாளையப்பட்டு, யூனியன் ஜாக், இருளெனும் கருநாகம், தாதுப்பஞ்சத்திற்கு முன், மெஜுரா சிட்டி, பென்னிங்டன் ரோடு, ரயில் களவு, CT ACT, பட்ட சாமி), 115 அத்தியாயங்களில், 1048 பக்கங்களில் மிகப்பிரம்மாண்டமாக விரிகிறது. காவல் கோட்டம் நாவலின் வெளித்தோற்றத்தில் மட்டுமல்லாது உள்ளடக்கம் வரை ஊடுவி நிற்கிறது அந்த‌ மகா பிரம்மாண்டம்.

மதுரையிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ச‌மணமலையின் அடிவாரத்திலிருக்கும் கீழக்குயில்குடி என்கிற கிராமத்தில் களவையும், காவலையும் தம் குலத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்த‌ கள்ளர் இனத்தவரின் அறுநூறு ஆண்டுகால வரலாற்றை, தொடர்புடைய ராஜாங்க நடவடிக்கைகள், அரசியல் நிகழ்வுகளுடன் வழங்குகிறது காவல் கோட்டம். புனைவுக்காக சமணமலை அமணமலை ஆகிவிட்டது; கீழக்குயில்குடி தாதனூர் ஆகிவிட்டது.

1310ல் மதுரையில் நடந்த மாலிக் கஃபூர் படையெடுப்பில் தொடங்கும் நாவல் 1910ல் பெருங்காமநல்லூரில் நடக்கும் பிரிட்டிஷாரின் துப்பாக்கிச் சூட்டில் முடிவடைகிறது. கிட்டதட்ட தொடங்கிய நிலைமையிலேயே முடிகிறது கள்ளர்களின் வாழ்க்கை. வித்தியாசம் பார்த்தால் ஆரம்பத்தில் அகதிகள்; கடைசியில் அடிமைகள். அப்போது முகமதியன்; இப்போது ஆங்கிலேயன்.

இந்த நாவல் பிரதானமாய் கள்ளர் பற்றியது தான் என்றாலும், அதன் ஊடுபாவாய் மதுரையின் சரித்திரம் விளம்ப‌ப்படுகிறது. எப்படி காந்தியின் வரலாற்றை இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தவிர்த்து விட்டு எழுதி விட‌ முடியாதோ, ஹிட்லரின் வரலாற்றை இரண்டாம் உலகப்போரைத் தவிர்த்து விட்டு எழுதி விட‌ முடியாதோ, அது போல் தான் கள்ளரின் வரலாற்றை மதுரை ந‌கரின் சரித்திரத்தைத் தவிர்த்து விட்டு எழுத முடியாது. கள்ளர் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் மதுரையின் அரசியல் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. போலவே மதுரையின் பல‌ முக்கிய நடவடிக்கைக‌ளை கள்ளர்களின் செயல்கள் தாம் தீர்மானிக்கின்றன.

நாவலின் மேலோட்டமான கதைச்சரடை சற்று அறிமுகம் செய்து கொள்வோம்.

மாலிக்கஃபூரின் மதுரைப் படையெடுப்பில் கோட்டைக்காவலனான கருப்பணன் இறந்து பட, அவன் கர்ப்பிணி மனைவி சடச்சி தப்பிப்பிழைத்து சிசு ஈனுகிறாள். அவளது ச‌ந்ததி கள்ளர் இனமாக தாதனூர் என்ற இடத்தில் நிலைகொள்கிறது. விஜயநகர அரசி கங்கா தேவி தன் இனமழித்த முகமதிய சுல்தானை பழிவாங்க மதுரை மீது போர் தொடுக்கிறாள். மதுரை விஜயநகர அரசின் வசமாகிறது. சிலபல வாரிசுச்சண்டைகளுக்குப்பின் கிருஷ்ணதேவராயர் விஜய நகர அரசராகிறார். அவர் திறமையான தளபதியான விஸ்வநாதரை மதுரையை ஆட்சிசெய்ய அனுப்புகிறார்.

மதுரையில் நாயக்கர் ஆட்சி உதயமாகிறது. மதுரைக் கோட்டை விஸ்தரிக்கப்பட்டு பிரம்மாண்டமான முறையில் கட்டப்படுகிறது. மதுரையைச் சுற்றி பாளையங்கள் பிரிக்கப்படுகின்றன. திருமலை நாயக்கர் காலத்தில் தாதனூர்க்காரர்களுக்கு மதுரை கோட்டைக் காவல் உரிமை வழங்கப்படுகிறது. அவருக்குப் பின் நாயக்கர் அரசுகள் பல தலைமுறையாக‌ சதிகளிலும், துரோகங்களிலும் சிக்கி உழன்று தவிக்கிறது.

பின்னர் கிழக்கிந்திய கம்பெனி மதுரையை எடுத்துக் கொள்கிற‌து. தொடர்ந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆளுமைக்குக் கீழ மதுரை வருகிறது. பிளாக்பர்ன் என்ற கலெக்டரின் காலத்தில் இட விஸ்தரிப்பைக் காரணம் காட்டி மதுரைக் கோட்டை இடிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் அரசிலும் தன் மதுரை நகர காவல் உரிமையை தாதனூர்க்காரர்கள் மீட்டுக் கொள்கிறார்கள். அரசு சார்பில் கச்சேரி (போலீஸ் ஸ்டேஷன்) அமைக்கப்படுகிறது. மதுரைக்கு அருகே மிஷனரி பள்ளி, மியூசியம், காட்டன் மில், ரயில் நிலையம் ஆகியன வருகின்றன. மதுரை நவீனமாகிறது.

தாது வருஷத்தில் கடும் பஞ்சத்தையும் பின் தொடர்ந்து கொள்ளை நோயையும் மதுரை சந்திக்கிறது. நிறைய உயிர்ச்சேதம் நிகழ்கிறது. முல்லைப்பெரியாறு அணை கட்ட ஆரம்பிக்கிறார்கள். அரசு தாதனூர்க்காரர்களின் காவல் உரிமையை ரத்து செய்கிறது. எதிர்த்தவர்கள் சிறைபடுகிறார்கள்; சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.

தாதனூர்க்காரர்கள் வேறுவழியின்றி வெளிகிராமங்களில் காவல் பிடிக்கிறார்கள்.

தாதனூருக்கு பென்னிங்டன் ரோடு அமைக்கப்படுகிறது, ஒரு சிறைச்சாலையும் அருகிலேயே கட்டுகிறார்கள். குற்றப்பரம்பரைச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. தாதனூர்க்காரர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்படுகின்றன. தினசரி அந்த சிறைச்சாலையில் ஆஜராக உத்தரவிடப்படுகிறது. நல்லூரிலிருக்கும் கள்ளர்கள் மீது பிரிட்டிஷ் போலீஸார் துப்பாக்கி ச் சூடு நடத்துவ‌தோடு முடிகிறது நாவல்.

இந்த நாவலின் 10 பக்கங்களிலிருந்து தான் வசந்தபாலனின் அரவான் திரைப்படக் கதை எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். படத்தில் வருவதாய்ச் சொல்லப்படும் வரிப்புலி, கொம்பூதி, சிமிட்டி என்ற பெயரில் கதாபாத்திரங்கள் ஏதும் நாவலில் இல்லை. நாவலில் வரும் சின்னான், மாயாண்டி கதை (அத்தியாயங்கள் 37, 38 மற்றும் 40) சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்ப‌ட்டிருக்கலாம் என்பது contextual understanding அடிப்படையிலான என் ஊகக்கணக்கு. அத‌ல்லாதும் இருக்கலாம்.

இது தவிர கமல்ஹாசனின் கனவுப்படமான மருதநாயகம் கதையும் (அத்தியாயம் 32) இதில் வருகிறது. ஆனால் நாயக வழிபாடாக அல்லாமல் சந்தர்ப்பங்களின் காரணமாக கும்பினியை எதிர்க்கும், இக்கட்டின் போது கேட்ட குத்தகையைத் தரத் தயாராகும், இறுதியில் உடல்துண்டாகி ஊருக்கூர் வீசப்படுமோர் அவலச்சித்திரமே மருதநாயகம் யூசுஃப் கான் பற்றி நாவலில் அளிக்கப்படுகிறது. மருதநாய‌மும், கட்டபொம்முவும் ஒரே நாளில் (அக்டோபர் 16) ஆனால் வெவ்வேறு ஆண்டுகளில் தூக்கிடப்பட்டிருக்கிறார்கள் – முன்னவர் 1764ம் ஆண்டு; பின்னவர் 1799ம் ஆண்டு.

*

களவு பற்றிய நான் சுவைத்த முதல் கலை அனுபவம் 1990களின் இறுதியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான களவுக்கலை என்ற சுவாரஸ்யமான நாடகத்தொடர் தான். பின்னர் கல்கியின் கள்வனின் காதலி நாவல் முதல் பாலாவின் அவன் இவன் திரைப்படம் வரை எழு த்திலும், காட்சியிலும் பல கள்வர்கள் கடந்து போய் விட்டார்கள். கடைசியாய் இப்போது சு.வெங்கடேசனின் காவல் கோட்டம்.

கோட்டம் என்ற சொல்லுக்கு இருவிதப் பொருள் கொள்ளலாம். நிர்வாகத்திற்காகப் பகுத்திருக்கும் பிரிவு ஒன்று (உதாரணம் வருவாய் கோட்டம்). மற்றது ஒருவருக்கு எழுப்பப்படும் நினைவிடம் (உதாரணம் வள்ளுவர் கோட்டம்). காவல் கோட்டம் என்ற தலைப்புக்கு இந்த இரு பொருளுமே பொருந்துகின்றன‌. மதுரையின் காவல் பிரிவைக் கவனித்துக் கொண்டவர்களின் கதை என்ற அர்த்தத்திலும். காவல் காரர்களின் நினைவாய் எழுப்பப்படும் ஒரு நினைவுப்புனைவு என்ற வகையிலும்.

ஆனால் நாவலின் உள்ளடக்கத்தோடு ஒப்பிடுகையில் இந்தத் தலைப்பு பொருத்திப் போகிறதா என்று பார்த்தால் ஆம் என்று சொல்வதில் தயக்கம் இருக்கிறது. களவு போவது என்பது காவல் பெறுவதற்கான உத்தி என்ற கருத்து நாவல் நெடுகிலும் மறுபடி மறுபடி வலியுறுத்தப்பட்டிருந்தாலும், நாவல் முழுக்க முழுக்க களவைப் பற்றியே பேசுகிறது, அதைக் கொண்டாடுகிறது, அதை மகத்துவப்படுத்துகிறது.

களவின் சம்பவங்களும், சாத்தியங்களும் மிக நுட்பமாய் விவரிக்கப்படுகிற‌து. மாறாக காவல் என்பது ஆங்காங்கே இடைவெளி நிரப்பும் சிறு செய்தியாய் மட்டுமே சொல்லப்படுகிறது. உண்மையில் இது களவுக் கோட்டம் தான்.

காவல் கோட்டம் நாவலின் இலக்கியரீதியான செவ்வியல் உச்சங்கள் என்றால் களவு பற்றிய விவரணைகளும், கோட்டை இடிக்கப்படும் நிகழ்வுகளும், பஞ்ச காலம் பற்றிய பகுதிகளுமே ஆகும். இது தவிர தாதனூரில் நடக்கும் திருமணம், மரியாதை, சடங்குகள், வரிகள், பலிகள் ஆகியவை பற்றிய பகுதிகள் கள்ளர் இன வரைவியல் ஆவணமாகக் கொள்ளத்தக்கவை. ஆனால் ஆவணம் என்பதைத் தாண்டி இவை யாவும் சுவாரஸ்யமான நடையில், பாந்தமான இடங்களில் உட்செருகப்பட்டிருக்கின்றன எனப்து தான் இந்நாவலை முக்கியமானதாக்குகிறது.

பாலகுமாரனின் உடையார், கடிகை போன்ற‌ நாவல்களிலும் இது போன்றதான‌ விவரணைகள் இடம் பெறுகின்றன. ஆனால் அவை ஒருவித வறட்டு நடையில் எழுதப்பெற்று வெறும் ஆவணமாகத் தேங்கி விடுகின்றன. அதாவது அவற்றில் கலை ஊக்கம் இல்லை; அல்லது குறைவாய் இருக்கிறது. வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் ஆகிய நாவல்களிலும் இது போன்ற சித்தரிப்புகள் வருகின்றன. ஆனால் அவை அந்த நாவலுக்கு தேவையிற்ற துருத்தல்களாய் உருத்திக் கொண்டிருக்கின்றன. அதாவது இவற்றில் கலை ஊக்கம் இருந்த போதிலும் நாவலை செம்மையுறப் பயன்படுவதில்லை.

எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் நாவலில் வெக்கை குறித்து நிறைய இடங்களில் விவரித்திருப்பார். அதில் கணிசமானவை ஒரே மாதிரியானதாகவும் (monotonous), தட்டையானதாகவும் சில இடங்களில் எரிச்சலூட்டுவதாகவுமே அமைத்திருக்கும் (வெக்கை எரிச்சலூட்டத்தானே செய்யும்!). அதே போல் காவல் கோட்டம் நாவலில் பல இடங்களில் – குறைந்தபட்சம் நூறு இருக்கும் – இருள் குறித்த விவரணைகள் இடம்பெறுகின்றன. ஆனால் எவ்விடமும் அவை அலுப்பூட்டுவதில்லை. எல்லாமே கவித்துவத்துடன் தத்துவார்த்தமாக அமைத்துள்ளன. அதை நினைத்துப் பார்க்கும் போதே பிரம்மிப்பு ஏற்படுகிறது. இந்த இருள் குறித்த பகுதிகளை மட்டும் தொகுத்து ஒரு சிறுநூலாக வெளியிடலாம் (கவிதை?) என்று கூட ஓரெண்ணம் ஏற்படுகிறது.

பனைமரத்தில் கட்டிவைத்து கள்ளர்கள் கல்லெறிந்து சிவானந்தய்யர் கொல்லப் படும் காட்சியே நாவலின் புறம் சார்ந்த ஆக‌ உக்கிரமான பகுதி. இது போக‌ அக எழுச்சி உக்கிரங்கள் ஆங்காங்கே மலரவிழ் மொட்டாய் சாத்தியப்பட்டிருக்கின்றன.

*

அறுநூறு வருட காலத்தை அடைத்து நிற்கிறது என்பதால் இந்நாவலில் எந்தப் கதாபாத்திரத்தையும் முதன்மைப் பிரதானமெனக் கொள்ளவியலாது. அப்படிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் கள்ளர்கள் தாம் இந்நாவலின் நாயக‌ர்கள். நாவல் முழுக்க மன்னர்களும் மக்களும் வருகிறார்கள், போகிறார்கள் – ஆனால் இடையில் தம்மை எழுதுமொழி வரலாற்றிலோ, வாய்ப்பாட்டு வரலாற்றிலோ அழுந்தப் பதித்துக் கொள்கிறார்கள். நாவலைப் படித்து முடிக்கையில் விசுவநாத நாயக்கரும், மாயாண்டிப் பெரியாம்பிளையும், ஆங்கிலக் கலெக்டர் பிளாக்பர்னும், சிவானந்தய்யரும், டேவிட் சாம்ராஜும் உச்சம் பெற்று மனதில் நிற்கிறார்கள்.

பொதுவாய் வரலாற்றுப் புதினங்களில் பெண் கதாபாத்திரங்கள் கவர்ச்சித் தாரகைகளாகவோ, மதிப்பிற்குரிய மங்கையராகவோ என்ற இரு எதிரெதிர் நிலைகளில்மட்டும் பதிவு பெற்றிருக்கின்றனர் (பொன்னியின் செல்வன், உடையார் மட்டும் விதிவிலக்கு). ஆனால் காவல் கோட்டம் நாவலில் வரும் பெண்களைப் பற்றிய பதிவுகள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கின்றது. பேரனுக்காக நாட்டை ஆளும் பொறுப்பேற்றுப் பின்னாளில் அவனாலேயே பலி வாங்கப்படும் ராணி, தன் இனத்தை வதைக்க முனையும் ஐரோப்பியக் காவலனின் கழுத்தைக் கடித்துக்குதறும் கிழவி, பஞ்சகாலத்தில் எந்த எதிர்பார்ப்புமின்றி தன் செல்வத்தைக் கரைத்து ஊருக்கே கஞ்சி ஊற்றும் தாசி, தன் இனம் சிந்திய ரத்தத்திற்குப் பழிதீர்க்க நேரடியாக போரிலிறங்கி சுல்தானைக் கொல்லும் அரசி, தமக்குள் மட்டுமல்லாது ஆண்க‌ளுடனும் கூட‌ பாலியலை சர்வ சுதந்திரமாய் பேசித்திரியும் பெண்டிர் என்று பெண்களின் பன்முகங்கள் நாவலெங்கும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. விஜயநகரப்பெண்கள், நாயக்கர் பெண்கள், கள்ளர் பெண்கள், அக்ரஹாரப் பெண்கள் என்று பரவி விரியும் நாவலில் ஆங்கிலேயப் பெண்களில் ஒருவரைப் பற்றிக் கூட பெரிய அளவிலான விவரணைகள் இல்லை.

திருமலை நாயக்கர் அரண்மனையிலேயே புகுந்து ராஜமுத்திரையைக் களவாடி விடும் கழுவன் என்ற தாதனூர்க்கள்வனைப் பாராட்டி கோட்டைக்காவல் உரிமை தருகிறார் மன்னன் என்றொரு செய்தி இடம் பெறுகிறது. ஆனால் இதே கதையில் களவாடியவனை வஞ்சகமாக வரவழைத்துக் கொன்றதாகவும் ஒரு வெர்ஷனை ஏற்கனவே வேறெங்கோ படித்திருக்கும் நினைவு. நாயக்கர் தந்த கோட்டைக்காவல் உரிமை தான் நாவலின் அச்சு. அதை மையமிட்டுத்தான் நாவலின் அத்தனை சம்பவங்களுமே சுழல்கின்றனை. இந்த உரிமையை விட்டுத்தராதிருக்கும் பொருட்டு தான் இறுதியில் கள்ளர் இனமே அழிய நேரும் சூழ்நிலை உருவாகிறது.

மனிதன் எழுத்தின் வழி, கதைகளின் வழி, அகழ்வுகளின் வழி வரலாற்றைத் தரிசிக்கிறான். அஃறிணை பொருட்களோ எத்தனை ஆண்டு கால வரலாறு என்றாலும் தாமே காத்திருந்து நேரிலேயே பார்த்துக் கொள்கின்றன‌! அப்படி சந்திரஹாச வாளும், சாளுவ கட்டாரியும் ஒரு கட்டம் வரை நாவல் முழுக்கவே புராதனக்குறியீடாய் சமயங்களில் மௌனசாட்சியமாய் உடன் பயணிக்கின்றன.

*

நாவலுக்கென்று பத்து ஆண்டு காலம் உழைத்ததாகச் சொல்கிறார் ஆசிரியர். நாவலில் அடங்காமல் பொங்கி வழியும் தகவல்களைப் பார்க்கும் போது அது எள்ளளவும் மிகையில்லை என்று தெரிகிறது. இந்த தகவல்கள் தாம் சாதனை.

நாவல் முழுக்க சு.வெங்கடேசனின் செறிவான மொழிநடை காணக்கிடைக்கிறது. கதையின் போக்கில் நிகழ்வுகளைத்தாண்டி அவரது நடை நம்மைக் கட்டியணைத்த படியே நகர்த்திச் செல்கிறது. இத்தகைய வசீகர‌ நடை சமகால எழுத்தாளர்களில் மூவருக்கு மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது – முதலில் எஸ்.ராமகிருஷ்ணன், அடுத்தது இரா.முருகன், அப்புறம் க.சீ.சிவக்குமார். இத்தனைக்கும் கதையின் கணிசமான பகுதிகள் கள்ளர்களின் பேச்சு மொழியிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதிலும் கூடப் புகுந்து பிரமாதப்படுத்தி இருக்கிறார் சு.வெங்கடேசன் (அது சரி, வசந்தபாலனின் அரவான் படத்துக்கு சு.வெங்கடேசன் தான் வசகர்த்தாவா?).

காவல் கோட்டம் நாவல் எதைப் பேசுகிறது என்பது தெளிவாய் இருக்கிறது – கள்ளர்களின் கதையினூடாய் மதுரை வரலாற்றின் ஒரு அபாரமான‌ குறுக்கு வெட்டுச் சித்திரத்தை அளிக்கிறது. ஆனால் அந்நாவல் முன்வைக்கும் அரசியல் என்ன என்ற கேள்விக்கு தெளிவாய் பதிலிறுக்க முடிவதில்லை. காவல் கோட்டம் களவை நியாயப்படுத்த முயல்கிறதோ எனத் தோன்றுகிற‌து. நமது சமூகத்தின் இன்றைய சிந்தனை முறையானது திருட்டு என்பதை அரசியல் சாசனப்படியான குற்றம் என்று புற‌ அளவில் வரையறுத்ததோடு மட்டுமல்லாது, அதன் அக நீட்சியாக திருட்டை ஓர் ஒழுக்கக்கேடான நடவடிக்கையாகவும் சித்தரித்து வைத்திருக்கிறது. எப்படி யோசித்துப் பார்த்தாலும் அச்சித்தாந்தம் சரியென்றே மனதுக்குப் படுகிற‌து. ஆனால் காவல் கோட்டம் நாவலோ அதற்கு நேரெதிராய் களவை வீரமெனச் சித்தரித்து, சமகால மனங்களில் திருட்டு பற்றி நிலவும் பொதுப்புத்திக் கருத்துக்களைக் கேள்விக்குள்ளாக்குகிற‌து. ஒரு கட்டத்தில் களவு தாம் அறமோ என்று கூட‌ எண்ண வைத்து விடுகிற‌து. என் பாட்டன் திறமான கள்வன் என்பது எவ்வகையில் எனக்குப் பெருமை தரும் என்பது விளங்கவில்லை. ஒருவகையில் அவமானம் ஏதுமில்லை என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

நாவலின் பலவீனமான கட்டங்கள் என நாயக்கர் காலம் நேரடி வரலாறாய்ச் சொல்லப்படும் ஆரம்பப் பகுதியையும், உயிர்ப்பின்றிச் சொல்லப்பட்டிருக்கும் குற்றப்பரம்பரைச்சட்டம் வரும் இறுதிப்பகுதியையும் சொல்லலாம். அதிலும் நாவல் தன் முடிவை நெருங்கிச் செல்லும் உச்ச வேளையிலும் களவுக்கலை பற்றிய நுண்விவரணைகள் தொடர்ந்தபடியே இருப்பது (அத்தியாயங்கள் 110 மற்றும் 112) கவனம் கலைப்பதோடு ஒரு கட்டத்தில் ஆயாசமூட்டுகிறது.

தொடர்புடைய‌ வரலாற்றின் சில பகுதிகளை மட்டும் ஏன் தொடவில்லை என்பது புரியவில்லை. உதாரணமாக ஊமைத்துரை வரலாறு விரித்துச் சொல்லப்படுகிறது (அத்தியாயம் 33); ஆனால் கட்டபொம்மு வரலாற்றை ஒற்றை வரியில் கடந்து விட்டார். குஞ்சரம்மாள் கதை சொல்லப்படுகிறது (அத்தியாயம் 77); ஆனால் நல்லதங்காள் கதை சொல்லப்படுவதில்லை. சொல்லப்படாத பின்னதுகளுக்கும் கள்ளர்களுக்கும் தொடர்பில்லை என்று காரணம் சொன்னால் சொல்லப்பட்ட முன்னதுகளுக்கும் கள்ளர்களுக்குமே அதே அளவு சம்மந்தம் தான் இருக்கிறது.

கள்ளர் இனத்தில் பிறந்து மிஷனரி பள்ளியில் படித்து பாதிரியாராக மாறும் டேவிட் சாம்ராஜ் பாத்திரம் இன்னும் தெளிவோடு கட்டமைக்கப்பட்டிருக்கலாம்.

இவ்வளவு பெரிய வரலாற்று நாவலுக்கு அடிக்குறிப்புகள் இல்லை, விரிவான முன்னுரை மாதிரியான விஷயம் இல்லை (இறுதியில் ஆசிரியர் குறிப்பு என்று சொல்லி மூன்று பக்கங்கள் தரப்பட்டிருந்தாலும் அதில் பெரிதாய் எந்தத் தகவலும் இல்லை). இதன் காரணமாக நாவலில் எவை வரலாற்று ஆவணங்களின் அடிப்படையிலானவை, எவை உறுதிப்படுத்தப்படாத கேள்விப்பட்ட செய்திகள், எவை முற்றிலும் கற்பனை சார்ந்த‌ புனைவு என்பதில் வாசகன் குழம்புகிறான்.

நாவலின் இலக்கியத்தரம் ஒரு சைனுசாய்டல் அலை (Sinusoidal Wave) கணக்காய் அமைந்திருக்கிறது. விஸ்வநாதர் காலத்தில் சமநிலையில் தொடங்கும் நாவல், நாயக்கர் காலத்தில் எதிர்மறை நிலைக்குச் சென்று விட்டு, கும்பினியர் காலத்தில் சமநிலைக்குத்திரும்பி, பிரிட்டிஷ் அரசின் காலத்தில் உச்சமெய்தி, தாதுப்பஞ்சத்தில் சமநிலைக்கு வந்து, குற்றப்பரம்பரைச்சட்டத்தின் போது எதிர்மறைக்குப் போகிறது.

*

ஒரு பத்தாண்டுகளாக அப்துல் ரகுமான், வைரமுத்து, சிற்பி பாலசுப்ரமணியம், ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, புவியரசு என்று அராஜக அட்டூழியம் செய்து வந்த சாகித்ய அகாதமி, கடந்த இரு வருடங்களாகத் தான் மறுபடி தகுதி வாய்ந்த‌ படைப்புகளுக்கு விருது வழங்கி வருகிறது. 2010ல் நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க சிறுகதைத்தொகுதிக்கும், இப்போது 2011ல் சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலுக்கும் தரப்பட்டிருக்கிறது. இரண்டுமே தமிழினி வெளியீடுகள்.

சு.வெங்கடேசனுக்கு அளிக்கப்பட்ட விருது தொடர்பாய் இரண்டு பிழையான தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன. மிக இள‌ம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறுபவர் சு.வெங்கடேசன் என்பது ஒன்று. காரணம் 1972ல் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்ற போது ஜெயகாந்தனுக்கு வயது 38. இப்போது விருது பெறும் சு.வெங்கடேசனின் வயது 40. ஒருவேளை விருது பெறும் இரண்டாவது மிக இளையவராக வேண்டுமானால் இருக்கக்கூடும்.

இரண்டாவது ஒரே நாவல் எழுதிய படைப்பாளிக்கு எப்படி விருது கொடுக்கலாம் என்கிற கேள்வி. உண்மையில் சாகித்ய அகாதமி விருதானது ஒரு குறிப்பிட்ட படைப்புக்கு வழங்கப்படுகிறதே ஒழிய ஒரு படைப்பாளுமையின் ஒட்டுமொத்த எழுத்துச் சாதனையைக் கணக்கில் கொண்டு அளிக்கப்படுவதில்லை (ஞானபீட விருதுகள் வேண்டுமானால் இப்போபோதெல்லாம் அப்படி வழங்கப்படுகின்றன)‌. விருது பெற்றவர்களில் கணிசமானவர்கள் விருது பெறும் காலத்தில் இலக்கிய வாழ்வினின்று ரிட்டயர்ட் ஆகி விட்டிருந்தார்கள் என்பதால் (அதற்குத் தான் ஒருவேளை விருதோ!?) நம் பொதுப்புத்தியில் இது படைப்பாளிக்கான விருது; படைப்புக்கானது அல்ல என்ற எண்ணம் உறைந்திருக்கலாம். அது விருதுக் கமிட்டியின் பிழையல்லவே. அதனால் ஒரே படைப்பு தான் எழுதி இருக்கிறார் என்றாலும் அது தகுதியானது என்றால் சாகித்ய அகாதமி வழங்கப்படுவதே முறையானது. இம்முறை அந்த விதிமுறை சரியாகப் பின்பற்றிருக்கிறது.

இளம் வயதில் அதுவும் முதல் நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றிருப்பது சமீப‌த்தைய சாதனை என்றால் அழகியலும், வரலாறும் ஒத்திசைத்து இயங்கும் ஒரு பிரம்மாண்டத்தைப் யாத்தளித்தது அவரது நீண்ட கால சாதனை என்பேன்.

சு.வெங்கடேசனுக்கு என் மனப்பூர்வமான‌ வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

VERDICT: அவசியம் நிச்சயம் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல். DON’T MISS IT.

பின்னிணைப்புகள்:

 1. சு.வேங்கடேசனின் விக்கிபீடியா பக்கம்
 2. சு.வேங்கடேசனின் தினமலர் பேட்டி
 3. சு.வேங்கடேசனின் சில கட்டுரைகள்

0

சி.சரவணகார்த்திகேயன்

11 comments so far

 1. kashyapan
  #1

  இவ்வளவு பெரிய சிறந்த நாவலுக்கு அருமையான விமரிசனம் அழுதியுள்ளீர்கள். நாவலின் நிறை குறைகளை சார்பின்றி குறிப்பிட்டது மெலும் சிறப்பு.சுவெங்கடேசன் அவர்களுக்கு வழ்த்துக்கள் —காஸ்யபன்

 2. Prem
  #2

  Very impressive review. Balanced review of a 1000+ page novel in four to five pages is laudable effort.

 3. புதுகை அப்துல்லா
  #3

  மாலிக்காபூர் படையெடுப்பு காலங்களிலும், பின்னர் குற்றப்பரம்பரைச் சட்டக் காலங்களிலும் பிரமலைக் கள்ளர்களில் பெரும் பகுதியினர் இஸ்லாமியர்களாக மதமாற்றம் அடைந்த வரலாறு குறித்து நாவலில் குறிப்பிடப்படவில்லை என்று நினைக்கிறேன்.

 4. சீனு
  #4

  //…இஸ்லாமியர்களாக மதமாற்றம் அடைந்த…//

  🙂

  //சாலையோரம் சவுக்கால் தன்னைத் தானே அடித்துக் கொள்பவனைப் பார்த்திருக்கிறீர்களா. சுளீர் சுளீர் என சாட்டை உடலில் பட்டாலும் விடாமல் அடித்து கொள்வானே கிட்டதட்ட அப்படியொரு தண்டனை போலதானிருந்தது இந்த நாவலை வாசித்தது. இவ்வளவு மெனக்கெட்டு எதற்காக படிக்க வேண்டும் என்று கேள்வி எழலாம்.//

  இது எஸ்ரா ‘காவல் கோட்டம்’ பற்றின விமரிசனத்தில் இருந்து எடுத்தது. இதே போன்ற ஒரு கருத்தை தான் அவருடைய ஒரு நாவலுக்கு சொன்னேன். அதற்கு எனக்கு வந்த வசைகள் கொஞ்சம் அதிகம்.

 5. சி.சரவணகார்த்திகேயன்
  #5

  @புதுகை அப்துல்லா

  மாலிக்கஃபூரின் மதுரைப் படையெடுப்பிற்கு பிந்தைய காலத்தில் (பிறமலைக்கள்ளர் என்றில்லாமல், பொதுவாய் மதுரை மக்களை) மதமாற்றம் செய்துள்ளது நாவலின் ரெண்டாம் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் மறைமுகமாக சொல்லப்படுகிறது.

  குற்றப்பரம்பரைச் சட்டக் காலத்தில் மதமாற்றம் நடந்துள்ளது குறித்து நாவலில் எந்தத் தகவலும் இல்லை. தவிர நாவல் கள்ளர்களின் மீதான குற்றப்பரம்பரைச்சட்டத்தின் ஐந்து ஆண்டுகளை மட்டுமே பேசுகிறது (குற்றப்பரம்ப்ரம்பரைச் சட்டம் கள்ள‌ர்களின் மீது அமல்படுத்தப்பட்டது 1915ம் ஆண்டில். 1920ல் நடந்த பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூட்டோடு நாவல் முடிகிறது). நீங்கள் குறிப்பிடும் மதமாற்றம் ஒருவேளை அதற்குப் பிற்பாடு நடந்திருக்கலாம்.

 6. Jee Soo
  #6

  ரைட்டர் CSK மீது அடுத்த கட்ட மரியாதையை ஏற்படுத்தி உள்ளது இந்த விமர்சனம்.படிக்கும் போது எப்படி பட்டவர் இதை எழுதி இருப்பார் என்ற என்னத்தோடே படித்து விட்டு தொடக்கம் வந்து பார்த்த போது CSK என்று இருந்த போது அடைந்த ஆச்சரியம் மிகப் பெரிது.காவல் கோட்டம் குறித்து இணையத்தில் உள்ள அனைத்து சுட்டிகளையும் முழுமையாக தொகுத்து உள்ளார்.இது எனக்கு மிக பயன் உள்ளதாக இருந்தது.நன்றிகள்.

 7. G.Mohanraj
  #7

  What the grizzled hair could achieve, the young comrade, whose penchant for socialism has left an indelible mark in the field of literature. It is all the more gratifying that the story,though not fully read, but observed through the presentation in the column, does not exoll monarchy but reflects the sweat and toil of the lowest mortals in and around the precincts of the temple city.

 8. சி.சரவணகார்த்திகேயன்
  #8

  ஒரு சிறிய‌ திருத்தம்.

  நாவல் 1920ல் நடந்த பெருங்காமநல்லூர் துப்பாக்கிச்சூட்டுடன் முடிவடைகிறது (விமர்சனத்தில் ஓரிடத்தில் இதை 1910 என்று பிழையாகக் குறிப்பிட்டிருந்தேன்).

  புத்தகத்தின் பின்னட்டையில் நாவலின் காலகட்டம் 1310-1910 என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் நேர்ந்த குழப்பம் இது. அது 1310-1920 என்றிருக்க‌ வேண்டும் (ஒருவேளை புதிய பதிப்பில் திருத்தி விட்டார்களா எனத் தெரியவில்லை. நான் வைத்திருப்பது டிசம்பர் 2008ல் வெளியான முதல் பதிப்பு).

 9. சி.சரவணகார்த்திகேயன்
  #9

  காவல் கோட்டம் பற்றி பெத்தானியாபுரம் முருகானந்தம் என்பவரின் முக்கியமான தகவல் பகிர்வு: http://maduraimarxist.blogspot.in/2012/02/blog-post_04.html

  நாவலுக்கு உதவிய தரவுகள் பற்றிய பின்னணிக்குறிப்புகள் பற்றிய குறிப்பு எதுவும் தரப்படவில்லை என்று எனது விமர்சனத்திலேயே நான் குறிப்பிட்டு இருந்தேன். அதைக் குரித்து விரிவாக விமர்சித்து plagiarism என்ற அடிப்படையில் பேசுகிறது இப்பதிவு.

 10. சி.சரவணகார்த்திகேயன்
  #10

  காவல் கோட்டம் குறித்த மாதவராஜின் விமர்சனப் பகுதிகள் இவை:
  http://www.mathavaraj.com/2012/02/blog-post_11.html
  http://www.mathavaraj.com/2012/02/2.html
  http://www.mathavaraj.com/2012/02/3.html
  http://www.mathavaraj.com/2012/02/4.html

 11. Nirmal
  #11

  http://nirmalcb.blogspot.com/2012/03/6.html

  காவல் கோட்டம் பற்றி ஒரு சாதாரன வாசகனின் பதிவு

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: