தோழர்
அத்தியாயம் 47
எங்கெல்ஸ் முன்னறிவித்தபடி மிகப் பெரிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட ஆரம்பித்திருந்தது. மூன்றுமாத கால ஓய்வுக்குப் பிறகு எங்கெல்ஸ் மான்செஸ்டர் திரும்பியபோது, மார்க்ஸின் கடிதம் அந்தச் செய்தி தாங்கி அவருக்காகக் காத்திருந்தது. செய்தித்தாள்களும் பொருளாதார வீழ்ச்சி பற்றியே விவாதித்துக்கொண்டிருந்தன. வெளியுலகுக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் இதனை முன்னரே எதிர்பார்த்திருந்தனர்.
முதலாளித்துவ வரலாற்றில் முதல் முறையாக உலகம் தழுவிய அளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல் என்று 1857 நெருக்கடியைச் சொல்லலாம். வங்கிகளையும் பங்குச்சந்தைகளையும் வர்த்தக நிறுவனங்களையும் பெரிய அளவில் இந்த நெருக்கடி பாதித்தது. அமெரிக்கா, ஐரோப்பா உள்பட உலகம் முழுவதும் இதன் தாக்கங்கள் வெளிப்பட்டன. Panic of 1857 என்று பொருளாதார உலகம் இதனை அழைக்கிறது.
1850களில் உலகம் ஒரு பொருளாதார வலைப்பின்னலை உருவாக்கும் முயற்சியில் இருந்தது. பல நாடுகள் வெற்றிகரமாக இந்த வலைப்பின்னலில் இணைந்து உள்நாட்டு வர்த்தகத்தை விரிவுபடுத்திக்கொண்டிருந்தன. 1850களின் தொடக்கத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் செழிப்பானதாக இருந்தது. அதற்கு சர்வதேச வர்த்தகம் ஒரு முக்கியக் காரணம். இந்நிலையில், 1857 தொடக்கத்தில் ஐரோப்பிய சந்தை பலமிழந்தபோது அது அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கியது. அயல்நாட்டுச் சந்தையை முதன்மையாகப் பாவித்து வர்த்தகம் புரிந்துவந்த அமெரிக்காவைப் பொருளாதார நெருக்கடி தாக்கியபோது அந்நாடு நிலைகுலைந்துபோனது.
1857க்கு முன்னால் ரயில்பாதை அமைக்கும் பணி அமெரிக்காவில் மும்முரமாக நடைபெற்றுவந்தது. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அமெரிக்காவின் வடக்குப் பகுதிக்கு, குறிப்பாக கான்ஸாஸுக்குக் குடிபெயர்ந்துகொண்டிருந்த காலகட்டம் அது என்பதால் ரயில் பாதை பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனங்கள் லாபகரமாகத் தங்கள் தொழிலை நடத்திவந்தனர். ரயில் என்றால் லாபம் என்பதை நேரடியாகக் கண்டுகொண்ட வங்கிகள் இத்தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு தாராளமாக கடன் அளித்தன. ஒரு கட்டத்தில் வட அமெரிக்க நிலங்களின் மதிப்பு சரிய ஆரம்பித்தபோது, மக்கள் பிற பகுதிகளிலிருந்து கான்ஸாஸுக்குக் குடிபெயர்வதை நிறுத்திக்கொண்டனர். அப்போதுதான் பிரச்னை வெடித்தது. பெரும் முதலீட்டில் ரயில் பாதைகளை அமைத்துக்கொண்டிருந்த நிறுவனங்கள் செய்வதறியாது அதிர்ச்சியடைந்தன. திடீரென்று பணிகள் நிறுத்தப்பட, வங்கிகள் கொடுத்த பணத்தைத் திரும்ப கேட்க, அமெரிக்கா புயலில் சிக்கிக்கொண்டது. ரயில்வே துறையில் முதலீடு செய்திருந்த நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்தித்தன.
நிலைமையை மேலும் மோசமாக்கும் விதமாக, Ohio Life Insurance and Trust Company என்னும் பெரும் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் செய்த மோசடி காரணமாக, அந்நிறுவனமும் அதன் கிளைகளும் பெரும் கடனில் சிக்கிக்கொண்டு தள்ளாடின. பிற அமெரிக்க வங்கிகளும் நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களும்கூட இதனால் பாதிக்கப்பட்டன.
மற்றொரு பக்கம், விளைபொருள்களின் விலை முன்னெப்போதும் இல்லாதபடி திடீரென்று படு உயரத்துக்குச் சென்றது. இந்த விலையேற்றத்தை அதிக லாபம் என்று புரிந்துகொண்ட விவசாயிகள், லாபத்தை மேலும் அதிகரிக்கும் பொருட்டு அதிக நிலங்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தனர். ஆனால் 1858ல் உணவு தானியங்களின் நிலை கடும் வீழ்ச்சியைக் கண்டபோது விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார நெருக்கடி விரைவில் சர்வதேச அளவில் விரிந்தபோது, ஐரோப்பாவும் திணற ஆரம்பித்தது. குறிப்பாக பிரிட்டன் அபரிமிதமான உற்பத்தியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
1857 பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாகவும் உருவெடுக்கும் என்று எங்கெல்ஸும் மார்க்ஸும் எதிபார்த்தனர். புதிய போராட்ட அலைகளும் புரட்சிகர மாற்றங்களும் ஏற்படும் என்று அவர்கள் கணித்தனர். மான்செஸ்டரைச் சுற்றிவந்த எங்கெல்ஸ் தான் கண்ட காட்சிகளால் மகிழ்ச்சியுற்றார். இந்த தடுமாற்றம் முதலாளித்துவத்துக்குப் பல பாடங்களைப் புகட்ட வல்லது. ஒட்டுமொத்த மான்செஸ்டரும் இருளில் மூழ்கிக்கிடந்தபோது எங்கெல்ஸ் துள்ளலும் துடிப்புமாகக் காணப்பட்டார். ‘நீச்சலைப் போலவே இந்த நெருக்கடியும் என் உடல் நிலையை முன்னேற்றும் என்று எதிர்பார்க்கிறேன்.’
எங்கெல்ஸ் எதிர்பார்த்தது போல் அரசியல் களத்தில் பெரும் புரட்சிகர மாற்றங்கள்ஏற்படவில்லை என்றாலும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்திடம் புரட்சிகர கண்ணோட்டத்தை வளர்த்தெடுத்தது. நெருக்கடியின் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்காக பல ஆலை நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களிடமிருந்து புள்ளிவிவரங்களைப் பெற்றுக்கொண்டார் எங்கெல்ஸ். இவற்றைக் கொண்டு மார்க்ஸ் பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். ஒரு பிரசுரத்தை எழுதவேண்டும் என்று எங்கெல்ஸ் நினைத்திருந்தார். எண்ணம் ஈடேறவில்லை.
ஆனால், இத்தாலி பற்றி எழுதினார். மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் இத்தாலியில் புரட்சிக்கான சூழல் தீவிரமடைந்திருப்பதாக எங்கெல்ஸ் கருதினார். ஒருகாலத்தில் புகழ்பெற்றிருந்த ரோம சாம்ராஜ்ஜியம், இடைக்காலத்தில் சிதறுண்டு போனது. சிறு சிறு ராஜ்ஜியங்களாகச் சிதறிப்போனது. வெனிஸ் உள்ளிட்ட நகரங்களை ஆஸ்திரயா கைப்பற்றிக்கொண்டது. ஆஸ்திரிய மன்னர்கள் இத்தாலியின் நகரங்களைத் தங்களுக்குள் பிரித்துக்கொண்டனர். போர்பன் மன்னர் நேபிள்ஸ் உள்ளிட்ட மேற்கு பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டார். பிட்மாண்ட் மற்றும் சார்டீனியா தீவு ஒன்றிணைக்கப்பட்டு விக்டர் இம்மானுவேல் என்னும் மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டது.
நெப்போலியனின் வருகைக்குப் பிறகு நவீன இத்தாலிக்கான அடித்தளம் போடப்பட்டது. அதிகார மிடுக்குடன் பிரான்ஸின் விரிவாக்கத்தில் ஈடுபட்டிருந்த நெப்போலியனுக்கு ஐரோப்பாகூட சிறியதாகவே காட்சியளித்தது. 1796ம் ஆண்டு இத்தாலியின் ராணுவ கமாண்டராக நெப்போலியன் நியமிக்கப்பட்டார். வடக்கு இத்தாலியில் நெப்போலியன் காட்டிய தீவிரத்தைக் கண்டு ஐரோப்பா திகைத்து நின்றது. உபரிகளாகச் சிதறிக்கிடந்த இத்தாலியர்களுக்கு நெப்போலியன் சுதந்தரம் அளிப்பதாக வாக்களித்தார். நெப்போலியன் பாதி இத்தாலியனும்கூட என்பதால் ஒரே சமயத்தில் அவரால் பிரான்ஸையும் இத்தாலியையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிந்தது.
ஆஸ்திரியாவின் ஆதிக்கத்தை வீழ்த்திவிட்டு இத்தாலியை ஒருங்கிணைத்தார் நெப்போலியன். ஆனால் நெப்போலியனுக்குப் பிறகு மீண்டும் ஆஸ்திரியா இத்தாலியை கையகப்படுத்திக்கொண்டது. ஆனால் இந்த முறை இத்தாலியர்களின் மனநிலை மாறியிருந்தது. இனிமேலும் அவர்களால் தங்களை உதிரிகளாகக் காணமுடியவில்லை. நாம் இத்தாலியர்கள் என்னும் உணர்வு அவர்களிடையே பரவி, ஒருமித்த தேசிய உணர்வை ஏற்படுத்தியிருந்தது. ஆஸ்திரியாவின் ஆதிக்கத்தையும் ஆங்காங்கே குடியேறத் தொடங்கியிருந்த பிரெஞ்சு கொள்ளையர்களின் ஆதிக்கத்தையும் முறியடிக்க உறுதி பூண்டனர்.
இத்தாலியர்களை வழிநடத்த மூன்று தலைவர்கள் களத்தில் குதித்தனர். மாஜினி (1805-1872), கரிபால்டி (1807-1882) மற்றும் காவர் (1810-1861). இத்தாலியப் புரட்சிக்கு மாஜினி ஆன்மாவாகவும், கரிபால்டி ஆயுதமாகவும், காவல் அறிவாகவும் விளங்கினார். ‘வாருங்கள், என் படையில் சேருங்கள். வீரமுரசு ஆர்க்கும்போது வீட்டுக்குள்ளிருப்பவன் கோழை. உங்களுக்கு நான் போரும் துன்பமும் களைப்பும் அளிக்கிறேன். ஒன்று நாம் வெல்வோம் அல்லது வீழ்வோம்.’ கரிபால்டியின் இந்த முழக்கம் இத்தாலிய இளைஞர்களை வீட்டுக்குள்ளிருந்து வெளியில் இழுத்து வந்தது.
1831ல் மாஜினி உருவாக்கிய இளம் இத்தாலி என்னு இயக்கம் இளைஞர்களை பெருமளவில் ஈர்த்தது. ‘தேசம் என்பது வெறும் எல்லைக் கோடல்ல. மண்ணும் கட்டடங்களும் மட்டுமே தேசமல்ல. மக்களின் பாசமும் நேசமும் பிசைந்த உணர்வில் கலந்த ஒரு மாபெரும் உணர்வில் கலந்த ஒரு மாபெரும் கருத்தாக்கம். அவர்கள் உரிமையும் வளர்ச்சியும் கலந்த மாபெரும் கனவு.’
காவர், பிட்மாண்ட் மன்னர் இம்மானுவேலின் முதலமைச்சராக இருந்தவர். ராஜதந்திரி. மீண்டும் மன்னராட்சி மலரவேண்டும் என்பதுதான் இவர் விருப்பம் என்றாலும் கரிபால்டியோடும் மாஜினியோடும் இணைந்து குடியரசு உருவாக்கத்துக்காகப் பணியாற்றினார்.
ஜெர்மனியைப் போலவே இத்தாலியும் புரட்சிகர ஜனநாயக வழியில் ஒன்றுபடவேண்டும் என்று எங்கெல்ஸ் எழுதினார். நெப்போலியன் பாணியிலான ஒருங்கிணைப்பைக் காட்டிலும் புரட்சிகர ஜனநாயக முறையிலான ஒருங்கிணைப்பே உறுதியானது, சரியானது என்பது அவர் நம்பிக்கை. ‘1820 தொடங்கி ஆஸ்திரியா இத்தாலியை வன்முறையாலும் தீவிரவாதத்தாலும் ஆண்டு வருகிறது.’ இந்த நிலை தொடர்ந்தால் இத்தாலியர்கள் ஜெர்மானியர்களை இன்னமும் அதிகமாக வெறுப்பார்கள். இதற்கு ஒரே வழி, ‘ஆஸ்திரியாவின் மேலாதிக்கத்தை முறியடிப்பது.’ இத்தாலியில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதற்கும் இது பொருந்தும் என்றார் எங்கெல்ஸ்.
இத்தாலியர்களின் முதன்மையான நோக்கம், அந்நியர்களைத் தங்கள் பூமியில் இருந்து விரட்டியடிப்பது. ஆஸ்திரியாவிடம் இருந்து விடுவிப்பதாகச் சொன்ன நெப்போலியன் உண்மையில், ஆஸ்திரியாவை விடுவிப்பதைவிட தன்னைப் பலப்படுத்திக்கொள்வதிலேயே ஆர்வம் காட்டினான். எனவே நெப்போலியன் பாணியிலான ஒருங்கிணைப்பை இத்தாலியர்கள் நம்பக்கூடாது. நெப்போலியக் கட்சிகளை ஏற்கக்கூடாது.
1859ம் ஆண்டு பிரான்ஸும் பிட்மாண்டும் போரிட்டுக்கொண்டன. இந்தப் போர் இத்தாலியர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டது. நாடு முழுவதும் ஏற்பட்ட எழுச்சிகள் தேசிய விடுதலைப் போராட்டமாக உருவெடுத்தது. இதனை சற்றும் எதிர்பாராத மூன்றாம் நெப்போலியன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டான். ஏப்ரல் 1860ல் சிசிலியில் இன்னொரு எழுச்சி ஏற்பட்டது. மே மாதம் கரிபால்டி தலைமையில் தன்னார்வலர்களின் பெரும்படை ஒன்று புறப்பட்டு தெற்கு நோக்கிச் சென்றது. செப்டெம்பர் 7ம் தேதி, கரிபால்டியின் படை நேபிள்ஸில் நுழைந்தபோது வெற்றி கண்களுக்குத் தெரிந்தது. விரைவில் தெற்கு இத்தாலி விடுவிக்கப்பட்டது.
எங்கெல்ஸ் கரிபால்டியை வெகுவாகப் புகழ்ந்தார். கரிபால்டியின் அசாதாரணமான ராணுவத் திறனையும், வீரத்தையும், முடிவெடுக்கும் திறனையும், செயல்திட்டத்தையும் எங்கெல்ஸ் பாராட்டி எழுதினார். ‘ஆயிரம் பேரைக் கொண்டு நேபிள்ஸை கரிபால்டி வீழ்த்தியிருக்கிறார். போனபார்ட்டின் அரசியலை முறியடித்து, இத்தாலியை ஒருங்கிணைத்திருக்கிறார்.’
(தொடரும்)
0
மருதன்








