2011 சென்னை மார்கழி இசைவிழா – 01

வந்துவிட்டது மற்றொரு மெட்ராஸ் மார்கழி சங்கீத சீஸன். வந்துவிட்டது மற்றொரு விமர்சன கட்டுரை. படித்துவிட்டு பாடகர்கள் மெர்ஸலாகி தங்களை உடனே உடைத்து வார்த்துக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் “பாட்டுக்கே” இனியும் பாடுவர். படித்துவிட்டு ரசிகர்களும் பெரும்பாலும் தங்கள் அபிமானங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். “கேட்பர்களையே” கேட்பார்கள். இலக்கியவிமர்சனங்களைப் போன்ற பயன்களுடையவையே மரபிசை சங்கீத விமர்சனங்களும்.

டிசெம்பர் இருபதன்று நடுப்பகலில் அகதெமியில் ”பாட்ரன்” வாயில் வழியே இருட்டோரமாய் நுழைந்து இருக்கையில் அமிழ்கையில், அமர்களமான மேடையில் திருச்சூர் பிரதர்ஸ் (கிருஷ்ன மோஹன், ராம்குமார் மோஹன்) ஆஹிரியில் மாயம்மா என்றபடி நல்ல குரல் வளம். நல்ல கூட்டம்.

சீஸனில் அரிதாக (ஒரே முறை?) வரும் பூபாளம் ஆலாபனையில், பிரதர்ஸ் சில மேற்கத்திய ஒத்திசைவு சாத்தியங்களைப் புகுத்தினர். ஒருவர் ஆலாபனை செய்து முடிக்கும் தருவாயில் அடுத்தவர் இடைபுகுந்து மேல் ஸ்தாயிலோ, கவுண்டர்பாயிண்ட் எனப்படும் எதிர்புள்ளியிலுள்ள ஸ்வரத்திலிருந்தோ தொடங்கி பாடுவது. பொதுவாக கர்நாடக சங்கீதத்தில் இவ்வகையில் பிரஸ்தாபம் கிடையாது. அவ்வப்போது நாகஸ்வரக் கச்சேரிகளில் தொட்டுகாட்டுவர். கணீர் தொண்டையுடன் வளமான குரலில் பாடுகையில் கேட்கும்படியே இருந்தது.

வயலின் பரூர் பாணி. எம்எஸ்ஜியின் தந்தை பரூர் சுந்தரேச ஐயர் கட்டுமானித்தது. இளம் வித்வான் திலீப் ஆலாபனையில் கோர்வையாய் கவனமுடன் ஆரோஹன அவரோஹன ஸ்வரங்களை பிரித்தும் கூட்டியும் வேகமாய் வாசித்ததில், இன்று பூபாளம் ஓரளவே தட்டுப்பட்டது.

கரஹரபிரியா கச்சேரி பிரதான ராகம். ராம நீ சமானமெவரு மெயின் உருப்பிடி. ஆலாபனை கட்டுமானத்திலும், உதவும் மூக்கிலும், ராம்குமார் மோஹன் செம்மங்குடியை நினைவுபடுத்துகிறார். பலுகு பலுகு என்று எதிர்பார்த்த இடத்தில் தொடங்கிய நிரவலில் நல்ல வேகம். ஆரவாரமான க்ளைமாக்ஸ் இன்னமும் கைகூடவில்லை. ஆனால் ஸ்வரங்கள் கரஹரபிரியாவாய் பிரவகித்தது. குறைப்பிலும் ஸ்தாயி வேறுபாடுகளுடன் குரல்களை பரிமாரிக்கொண்டார்கள்.

பிரதர்ஸ் அமர்க்களமாய் பலுகு பலுகு விற்கு ஒரு பொருத்தம் வைத்து ஸ்வரங்களை முடிக்க, மிருதங்கம் தனியில் விறுவிறுத்து, அதே பொருத்தத்தை வைத்து முடித்தது பிரமாதம். கர்ரா ஸ்ரீநிவாஸ ராவ் ஆந்திரா மிருதங்கம். வாசிப்பும், மிருதங்க நாதமும், கமலாகர் ராவ் பாணியில்.

அடுத்த மத்தியான கச்சேரி இரட்டை வீணை. இன்றளவில் கல்கத்தாவில் ஒரு முத்துஸ்வாமி தீக்‌ஷதர் கீர்தனைகளஞ்சியமான இசைப்பள்ளி இருக்கிறது. தீக்‌ஷதரின் நேரடி சிஷ்யர்களில் தொடங்கும் இதன் வரலாறு சுவாரஸ்யமானது. தனிக் கட்டுரை வேண்டும். இன்றைய வீணை வித்வான்கள் ஜெயராஜ் கிருஷ்ணன் மற்றும் ஜெயஸ்ரீ ஜெயராஜ் இப்பள்ளியைச்சார்ந்தவர்கள். பேகடாவில் வல்லபநாயகவில் தொடங்கி, ஸ்ரீரஞ்சனியில் பூவினிதாஸுடனே, காசிராமக்ரியாவில் விஸாலாக்‌ஷி என்று வெயிட்டான அயிட்டங்கள்.

ராக ஆலாபனை தொடக்கப் பிடி (ப்ரத்யேக மெலடி) கரஹரபிரியாவை நினைவூட்டினாலும், விரிவாக்கம் ஸ்ரீரஞ்சனியே. பூவினிதாஸுடனே கீர்த்தனையை அணுகியமுறை, அக்கீர்தனையை பல காலப்பிரமாணங்களிலும் நிர்வகித்து பிராபல்யமடையச்செய்த ராம்நாட் கிருஷ்ணன் மெச்சும்படியானது. வீணைகளிடையே ஸ்வரப் பரிமாற்றங்களுக்குப்பிறகு காசிராமக்கிரியா ராக ஆலாபனை.

அடுத்து காம்போஜியில் தீக்‌ஷதரின் மாஸ்டர்பீஸ்களில் ஒன்றான ஸ்ரீ சுப்ரமணியாய நமஸ்தே. திஸ்ர ஏக தாளம் (எளிமையாய் சொன்னால், மூன்று மூன்று கூறுகளாய், த்ருதங்களாய், ஒரு காலப்பிரமாணத்தில், ஸ்பீடில், தட்டிக்கொண்டே போவது). கீர்த்தனை அதன் சங்கதிகளுடன் தெரிந்து அரங்கில் கேட்டவர்களுக்கு வீணையில் வாசித்தவிதத்தின் உழைப்பும் நேர்த்தியும் பிடிபட்டிருக்கும். ஸ்ரீ என்று பாடுவதற்குள்ளேயே காம்போதி ஜூஸ் அழுத்தி, அழுத்தி பிழியப்பட்டு ஓடும்.

”மன்மதனோட கோடி தபா அழகாக்கிர லார்டு சுப்ரமணியரை கும்பிட்டுகரேன்” என்பதன் செவ்வியல் பொருளுறையும் ”ஸ்ரீ சுப்ரமணியாய நமஸ்தே நமஸ்தே; மனஸிஜ கோடி கோடி லாவன்யாய தீன சரண்யாய” என்ற பல்லவியை மூன்று காலங்களிலும் திஸ்ரத்திலும் இரண்டு வீணையிலும் ஒத்திசைந்து வாசித்து அமர்க்களப்படுத்தினர்.

வழக்கமான ”வாசவாதி சகல தேவ” வரியில் நிரவல் செய்து அதைப் பலவகைகளில் காம்போதி ஸ்வரங்களால் இட்டு நிரப்பு (நிரவி), நீட்டி மடித்து, விரட்டி, திரட்டி, மிளிரச்செய்து பதியவைத்து ஆனந்திக்கவைத்தனர்.

இளைபாற பசுபதிபிரியாவில் முத்தையாபாகவதரின் சரவனபவாவை துரித காலப்பிரமாணத்தில் வாசித்தனர். நான் கேட்டவரையில் இக்கிருதியின் உச்சவெளிப்பாடு சேஷகோபாலனுடையதே (அறிந்திராதவருக்கு: இவர் முத்தையா பாகவதரின் சிஷ்யர் சங்கரசிவத்தின் சிஷ்யர்). சமீபத்தில் இரண்டு வருடம் முன்பு அகதெமியில் மண்டா சுதா ராணி வயலினில் நர்மதா (பரூர் பாணி) துணையுடன் இக்கிருதியை விறுவிறுப்பாக நிர்வகித்தார்.

அடுத்து ராகம் தானம் பல்லவியில் தோடி. பிரத்யேக ஸ்ருதித் தந்திகளுடனான வீணையின் சுநாதத்திலும், தேர்ந்த வாசிப்பிலும் தானம் கேட்டு அனுபவ பரவசிக்க அகதெமியின் சூழல் அலாதி.

வேலவனே நினது பதமே | தரவேணும் மயில்நடன || என்று எளிமையான ஆதிதாள திஸ்ர நடை பல்லவி. பாடிக்குறிப்பிடுமுன் ஒலிகுறைத்து படுத்திய மைக், நன்”மைக்”கில்லை.

வீணை கச்சேரி முழுவதுமே ஒருவித எலக்ட்ரானிக் பஸ். ஆதார சட்ஜத்திலிருந்து சற்றே தூக்கலான ஸ்வரத்தில் ஒலித்து, கேட்கும் சௌக்கியத்தை குலைத்தபடி.

செவிக்குணவில்லாதபோது சிறிது வயிற்றிற்கும் காண்டீனில் ஈயில்லாமல் ஈயப்பட; இச்சீசனில் அகதெமி காபி ஜோர். காண்டீன் அக்கபோர்கள், உடையலங்காரங்கள் என வெகுஜன வாராந்திரிகளில் சங்கீத விமர்சனம் வரும், மேலும் படித்துக்கொள்ளுங்கள்.

மாலை பிரதான கச்சேரிகளில் முதலாவது விஜய் சிவாவினுடையது. விஜய் சிவா ராஹுல் டிராவிட் போல. மிஸ்டர் ரிளையபிள். என்று கேட்டாலும் கன்சிஸ்டென்ட்டாக ஒரு தரத்திற்கு மேல் கச்சேரி செய்வார். டோட்டல் பெயிலியர் என்றும் கிடையாது. பாஸ் மார்க்கிற்கு மேல் எவ்வளவு என்பது அன்றைய தினத்தை பொறுத்தது. இன்று மதிப்பெண் அதிகமில்லை.

நின்னுஜூச்சி என்று சௌராஷ்ட்ரத்தில் விறுவிறுவென தொடங்கி மன்னார்குடி ஈஸ்வரன் மிருதங்கத்திலும் அநிருத் ஆத்ரேயா கஞ்சீராவிலும் உடன் கணகணக்க, அடுத்து வந்த கமாஸ் ராகத்திலமைந்த சுஜன ஜீவனா ராமாவையும் அவ்வகை காலப்பிரமாணத்திலேயே பாடினார். கமாசு கமாசு கமாசு என்று சொல்லிகொண்டிருந்தால் சுகமா சுகமா என்று ஒலிக்கும். அப்படியான ராகத்தில் சுகுணபூஷனராய் ராமர் சற்று மெதுவான காலப்பிரமாணத்தில் நிதானமாய், சுஜனமாய் ஜீவித்திருக்கலாம்.

சிவாவின் கல்யாணி ஆலாபனை மல்லிகைப்பூ போல இருந்தது எனலாம். ஆனால் முன் சீஸன்களில் வேறு பிரபல பாடகர்களின் சாருகேசிக்கு அவ்வகை உதவாத உவமைகளை பிரபல விமர்சகர்கள் எழுதிவிட்டனர். அதனால் ஆலாபனை பிரமாதம் என்போம்; முடிக்கையில் ராகபாவத்தில் ஒட்டாத சில ஸ்தாயி தாவல்களை தவிர்த்திருந்தால் ஏ-க்ளாஸ் கல்யாணி என்றிருக்கலாம்.

தள்ளி நின்னு நெரநம்மிநானுவெனவே கிருதி, விஜய் சிவாவின் கல்பித சங்கீத பிரதாமான குருகுல பயிற்சியில், பரிமளித்தது. கல்பன சங்கீத ஸ்வரங்கள் சற்று ஆயாசம்.

அடுத்து சம்பூர்ண மேள ராக மானவதியில் முன்சென்ற கீர்த்தனைகளின் காலப்பிரமாணத்திலேயே எவரித்தோ நீ தில்பதே ராமா என்று தியாகையரின் ஏகைகராக கிருதி. நேரம் கடந்தால் வெளியே போக்குவரத்து அதிகரித்து ஊடாடி வீடுசேர தாமதமாகிவிடும் என்கிற சாக்கில், பக்கத்து சீட்டினரின் முட்டிகளை மடக்கச்சொல்லி பக்கவாட்டில் ஊர்ந்து, விட்டேன் ஜூட்.

கொசுறாக சங்கீத வம்பு: அகதெமி உட்பட சபாக்களில் தினச்சம்பளத்திற்கு தம்பூரா கலைஞர்களை அமர்த்துகிறார்கள். இரண்டு நாள் முன் ஒப்பந்தமாகியிருந்த வயதான தம்பூரா கலைஞரை தன் எலக்ட்ரானிக் தம்பூராவே போதும் என்று மெயின் ஸ்லாட் நாரீமணி ஒதுக்கிவிட்டாளாம். நான் பாட்டுக்கு மேடையில் ஓரத்திலமர்ந்து மீட்டிவிட்டு ஒரு ஆயிரம் ரூபாய் பார்த்தால் இவருக்கு என்னவாம் என்று அங்கலாய்த்தார். அகதெமிக்கு வெளியே.

– அருண் நரசிம்மன்

19 comments so far

 1. அ. சரவணன்
  #1

  இந்த மார்கழி கச்சேரி வருடந்தோறும் சென்னையில் சிறப்பாக நடக்கிறது. ஆனால் இது ‘இசை விழா’ என்று சொல்ல முடியாது. இசைக்கு சாதி,மதம் ஏன் மொழி கூட கிடையாது. ஆனால் இவை ஒரு குறிப்பிட்ட ‘சமுதாய விழா’ போலத்தானே இருக்கிறது…? பாடுவதும் அவாதான், கச்சேரிக்கு பணம் செலவு செய்வதும் அவாதான், கேட்டு ரசிப்பதும் அவாதான். வெகுஜனங்களும் ரசிக்கும்படி இதை ஏன் எளிமையாக்கவில்லை..? நான் கேட்பது குத்துப்பாட்டை அல்ல. கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட தமிழ்ப் பாடல்கள். (இசையை அடிப்படையாகக் கொண்ட தமிழ் திரை இசைப் பாடல்கள் கூட தவறில்லை)

  அபூர்வமாக பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி பாடல்கள் சில பாடி, ‘தமிழ் கீர்த்தனைகளும்’ பாடுகிறோம் என கணக்கு காட்டும் வேலைதான் நடக்கிறது.

 2. Arun
  #2

  இது ஒரு சமுதாய விழாதான்….சந்தேகம் வேண்டாம் 🙂
  ஆனால் அந்த சமுதாயத்தினால்தான் கர்நாடக இசை 50 வருடமாக வளர்ந்து வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது….
  எந்த சபாவிலும் Brahmins ஒன்லி allowed என்று போர்டு மாட்டவில்லையே

 3. Pavalar Sokkalingam
  #3

  வட இந்தியாவில், பிரித்தாளும் சூழ்ச்சியினால் முஸ்லீம்களைத் தனிமைப்படுத்தி வெற்றி கண்ட பிரிட்டிஷ் அரசு, அவ்வகை முயற்சிகளால் தென்னிந்தியாவில் & குறிப்பாகச் சென்னை மாகாணத்தில் & வெற்றிபெற முடியவில்லை. எனவே, அதற்கு மாற்றாகப் ‘பிராமணர் – பிராமணர் அல்லாதோர்’ இயக்கங்களை ஊக்குவித்தது.” இதோ இன்னுமொன்று . வெள்ளைக்காரன் போட்ட பிட்டு இன்னும் நல்லா அ.சரவணன் வரை வேலை செய்யுது. சென்னையில் தமிழ் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. நாம்தான் தேடிபோகவேண்டும். தமிழ் மன்னர்கள் பெரும்பாலும் ஒழிந்த நிலையில் தெலுங்கு நாயக்கர், மராட்டிய பேசுவா, மலையாள வர்மாக்கள் ஆதிக்கம் தான் கடந்த 400 ஆண்டுகளில். அவர்கள் புரவலராய் ஆதரித்ததால் அவர்கள் பேசிய மொழி இக்கச்சேரிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. இது ஒன்றும் “அவா” வேண்டுமென்றே செய்யவில்லை. இப்பழக்கம் சிறிது சிறிதாய் மாறும். மாறித்தான் வருகிறது. முழுத்தமிழ்க் கச்சேரிகள் பல நூறு நடக்கும். (அது சரி வாய் கிழிய திராவிட இயக்கம் திராவிட நாடு என்று கதை அளந்தவர்கள் திராவிட மொழிகளான தெலுங்கு, மலையாளத்தில் பாடினால் திராவிட ரத்தம் பூரிப்படையாமல் ஏன் கூக்குரல் இடுகிறது ??)

 4. சிமுலேஷன்
  #4

  பல வருடங்களாக நடக்கும் தமிழ் இசை சங்கம் நடத்தும் நிகழ்ச்சியிலும், (http://www.tamilisaisangam.in/tamilisaifuntion69.html) ராமதாஸ் நடத்தும் பொங்கு தமிழ் இசை நிகழ்ச்சியிலும் சரவணனை எதிர்பார்க்கலாமா?

 5. அ. சரவணன்
  #5

  யாரையும் காயப்படுத்திப் பார்க்கவோ, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பகடி செய்யவோ நினைத்து நான் எழுதவில்லை. எனவே நான் மேலே சொன்னது யாரையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

  நான் தமிழ் மட்டும்தான் வேண்டும் என்று சொல்லும் ராமதாஸ் வகையறாவோ, ‘தமிழின’ காப்பாளன் என்று படம்போடும் சீமான் வகையறாவோ இல்லை. நான் குறிப்பிட்டதை கோபப்படாமல் படித்திருந்தால் கவனித்திருப்பீர்கள் “…கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட தமிழ்ப் பாடல்கள்.”

  தமிழிசையோ கர்நாடக இசையோ… இசை மனிதனை பண்படுத்தும். தமிழிசை என்றால் மக்களுக்கு தானாகவே புரியும். கர்நாடக இசை பலருக்குப் புரியாது. அதையும் புரியவைத்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் என் ஆசை. வெறுமனே வந்து உட்கார்ந்து நிகழ்ச்சியில் காது கொடுத்து கேட்டால் புரிகிற நிலையில் இல்லை. (ஒருவேளை என் சிற்றறிவுக்குத்தான் புரியவில்லையோ என்னவோ).

  உங்களுக்கெல்லாம் புரியவைக்க வேண்டும் என்று எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை என்பதுதான் பலரின் (மன) குரலாக உள்ளது, ஹும்..

  பெற்றோர்களில் ஒரு சாரார் டிவியில் வரும் ‘ஆடல்’ நிகழ்ச்சிகளால் தூண்டப்பட்டு தங்கள் குழந்தைகளை ‘டான்ஸ் கிளாஸ்’ அனுப்புகிறார்கள், இன்னொரு சாரார் ஏரோபிக்ஸ், பிரெஞ்சு ட்யூஷன் என்று அவர்களைப் படுத்தி எடுத்து விடுகிறார்கள். என்னுடைய ஆசை எல்லாம்… இதுபோன்ற குழந்தைகள் வாய்ப்பாட்டோ, இசைக்கருவியோ.. ஏதேனும் ஒன்றை கற்றுக்கொள்ளும்போது , அவர்கள் வளரும் காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய மன அழுத்தங்களுக்கு அது ஒரு சிறந்த மருந்தாக அமையும்.

 6. A.K.Chandramouli
  #6

  இன்னும் எத்தனை ஆண்டுகள் எல்லாவற்றையும் ஜாதிக்கண் கொண்டு நோக்கி குழப்பிக்கொண்டு இருப்பீர்கள். பொதுவாக சிந்தித்து நாட்டை முன்னேற விடுங்கள்.

 7. ரங்கநாயகி
  #7

  ”உங்களுக்கெல்லாம் புரியவைக்க வேண்டும் என்று எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை என்பதுதான் பலரின் (மன) குரலாக உள்ளது, ஹும்”

  மன்னிக்கவும். கரநாடக சங்கீதத்தை புரியவைக்க பற்பல புத்தகங்களும் இக்காலத்தில் பல வலைப்பூக்களும் உள்ளன. உ.ம். இந்த கட்டுரையை எழுதிய அருண் அவர்கள் எழுதிய “ராகம் தானம் பல்லவி” என்னும் கட்டுரை சீரீஸ் அனைவருக்கும் புரியும் வகையில் சொல்வனம் எனும் வலை பத்திரிகையில் வந்துள்ளது. இதைப்போல் பல உண்டு.

  எந்த கர்னாடக பாட்டு ஆசிரியரும் இந்த சமூகத்திற்கு தான் சொல்லி தருவேன் என்று சொல்வதில்லை. கலாக்‌ஷேத்ரா போன்ற கலை கல்லூரிகள் உட்பட.

  கலைஞர்களுள், நாதஸ்வர வித்வான்களுள் பிராமணர் அல்லாதவர்கள் தான் அதிகம். நம் கோயில்களிளும், ஏன், பிராமண திருமணங்களிளும் இவர்கள் மிக முக்கியமானவர்கள்.

  உங்களுக்கு புரியவேண்டும் என்று நிஜமாகவே ஆசை இருந்தால் பல வழிகள் உண்டு. நீங்களாக சாதி பேரைச் சொல்லிக்கொண்டு செய்யாமல் இருந்தால் யார் மேல் தவறு?

  நானும் ஒரு பாட்டு டீச்சர் தான். என் மாணவர்களுள் தமிழ் பிராமணர்களை விட, மளையாளாம், தெலுங்கு பிராமணரல்லாத குழன்ந்தைகள் தான் அதிகம்.

  தமிழரிடம் மட்டும் ஏன் இந்த பாரபட்சம்? நானா சொல்லிதர மாட்டேன் என்கிறேன்?

 8. poovannan
  #8

  இது ஒரு சமுதாய விழாதான்….சந்தேகம் வேண்டாம் 🙂
  ஆனால் அந்த சமுதாயத்தினால்தான் கர்நாடக இசை 50 வருடமாக வளர்ந்து வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது….

  இந்த கோவம் எதை கட்டுகிறது.என் வழி தான் சரி என்பதை தானே
  பாலசரஸ்வதி அவர்களும் எம் எஸ் அவர்களும் சிகரெட்டோடு இருக்கும் இந்த அரிய புகைப்படம் ஒரு முழு பூசணிக்காயை காட்டும்
  பாலசரஸ்வதி ருக்மிணிதேவி அவர்களும் ருக்மிணிதேவி,கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் இடையே நடந்த நடனத்தை ஒழுங்கு,பிராம்மணபடுத்தும் முயற்சிகளை படித்தால் சரவணனின் கேள்விகளின் அர்த்தம் புரியலாம்.

  திரு எம் எஸ் அவர்களின் வாழ்கையை பார்த்தால் எப்படி பாரத் ரத்னா வாங்கினாலும் ஆயா தான் எனபது புரியும்.கிழக்கு வெளியிட்ட எம் எஸ் அவர்களின் வாழ்கை வரலாறு புத்தகம் வாங்கி படித்தேன்.அவருக்கு உடன் பிறந்தவர் சக்திவேல் என்ற பெயரில் இருந்தார் எனபது யாருக்காவது தெரியுமா .அவர்களை விட அவரின் தாயை விட மடிசார் கட்டியதால் காஞ்சி சங்கராச்சாரியார் கோவப்பட்டதர்க்கு அதிக இடம் .
  தன உற்றார்.உறவினர்,மொழி,உணவு ஆசைகள் அனைத்தையும் உதறினால் தான் இடம் கிடைக்கும் எனபது தானே நிதர்சனம்

  http://www.outlookindia.com/article.aspx?226113

  http://www.narthaki.com/info/bookrev/bkrev1a.html

  http://www.outlookindia.com/article.aspx?279255
  இஸ்லாமியர்கள் பரதத்தை,இசையை கைப்பற்றி அவர்களின் கடவுளை பற்றி மட்டும் பாடுவது,பாரசீக மொழியில் தான் பாடுவது என்று முழுதாக குத்தகை எடுத்து கொண்டு யாரையும் நாங்கள் தடுக்கவில்லை என்று கூறுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்
  http://www.narthaki.com/info/articles/art87.html

 9. பாரி வையவன்
  #9

  பூவண்ணரே …. சம்பந்தமில்லாமல் நீங்கள் டைவர்ட் செய்கிறீர்கள் … அது ஒரு சமூகத்தின் தனிவிழாவாகவே இருக்கட்டும் …. உங்களுக்கு விருப்பமிருந்தால் உங்கள் சமூகமும் தனியாக அதுபோல் தனித்தமிழ்விழா அமைத்து ரசித்து மகிழுங்களேன் …. அதைத்தானே மருத்துவர் ராம்தாசு செய்கிறார். இது நல்ல கால்கோள். இங்கே சொக்கலிங்கர் கூறியுள்ளதுபோல் இசையின் மொழி புரவலர்களின் மொழி சார்ந்தது … இத்துணை நாள் பிற மொழியினரால் ஆதரிக்கப்பட்டதால் அவர்கள் மொழி, சமயம் சார்ந்து வளர்ந்தது. இனி தமிழ்ப் புரவலர்களின் ஆதரவில் தமிழ்க் கச்சேரிகள் வளரும். ஏன் நித்தியசிரீ போன்ற பார்ப்பனர்கள் முழுதும் தமிழில் கச்சேரிகள் நிகழ்த்தவில்லையா என்ன??? “….உற்றார்.உறவினர்,மொழி,உணவு ஆசைகள் அனைத்தையும் உதறினால் தான் இடம் கிடைக்கும் எனபது தானே நிதர்சனம் …” இது பெரும்பாலான கலப்பு மணங்களில் நடப்பதே … எம் எஸ் என்கிற பார்ப்பனரல்லாதார் சதாசிவம் என்னும் பார்ப்பனரை மணந்தபோது அவர் விதித்திருக்கலாம். இதை எதிர்ப்பதில் தவறில்லை ஆனால் ஏதோ இந்த சமூகம் மட்டும் செய்வதுபோல் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்கிறீர்களே. இன்று ஒரு இந்துப்பெண் இசுலாமியரை மறந்தால் பேரைக்கூட மாற்ற கட்டாயப்படுத்தப்படுவது இல்லையா ?? நடிகை அய்சுவரியா ஒரு இசுலாமியரை மணக்க தன் பெயரை அஃப்சான் அகமது என்று மாற்றவில்லை?? ஒரு கிறித்தவ ஃபெர்ணான்டோவை வேளாளக்கிறித்தவர் மணக்கும்போது அவர்கள் திருமணக்கூட்டத்தில் நடக்கும் உரையாடல்களைக் கேட்டுப்பாருங்கள். இந்த எதிர்ப்பெல்லாம் பார்ப்பன சமூகத்தின் மீது வெறும் அழுக்காறு சார்ந்த எதிப்புபோலத்தான் தோன்றுகிறது

 10. poovannan
  #10

  ஐயா எம் எஸ் அவர்கள் சதாசிவ ஐயர் வீட்டிற்கு குழந்தைகளை வளர்க்கும் ஆயாவாக(அது தான் அவர்கள் குல தொழில்.கலைஞர் ஜெமினி கணேசனுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை ஒரு விழாவில் குறிப்பிட்டார்.அவர் அத்தை சந்திராம்மாவை ஜெமினியின் தாத்தா மனைவியை இழந்து கஷ்டப்பட்ட போது குழந்தைகளை வளர்க்க அழைத்து சென்றார்.சில சமயம் ஆயாக்களுக்கும் சாமிகள் குழந்தை அருள் வரம் வழங்குவார்கள்.அப்படி பிறந்தவர் தான் முத்துலட்சுமி ரெட்டி தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.தேவதாசிமுறை ஒழிப்புக்காக போராடியவர்.பாவம் எம் எஸ் அவர்களுக்கு அந்த வரம் கிட்டவில்லை ) போகாமல்
  shekh mohammedukku மனைவியாகவோ இல்லை செந்தமிழ் செல்வனுக்கு மனைவியாகவோ சென்று

  குறை ஒன்றும் இல்லை பேரறிஞர் அண்ணா
  கழக அரசில்
  குறை ஒன்றும் இல்லை அண்ணா
  என்றோ இல்லை

  இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொல்லுவதில்லை

  என்று பாடியிருந்தால் சுப்புடுக்களும் சபாக்களும் அவரை இப்போது கலைஞரை திட்டுவதை,சபிப்பதை விட அதிகமாக சபித்திருக்கும் (பால சரஸ்வதி அவர்களையும் ருக்மிணிதேவி அவர்களின் நிலையையும் ஒப்பிட்டால் புரியும்)
  துரோணர் எஹலைவன் கதையை விட கொடுமையான நிகழ்வு திரு எம் எஸ் அவர்களின் வாழ்கை நிகழ்வு.அப்படி முஹம்மத் ghazni போல கலையை அபகரித்து விட்டு நாங்கள் தான் வளர்த்தோம்,வளர்க்கிறோம் எனபது (இப்படி திமிராக பேசுகிற நிலையில் இருந்து கொண்டு கழக ஆட்சியினால் கஷ்மீர் பண்டிட்டுகள் நிலை போல் தான் நாங்களும் இருக்கிறோம்,நடத்த படுகிறோம் என்று உலகமெங்கும் கூப்பாடு வேறு)சரியா
  ஓவிய கலையோ,சிற்ப கலையோ,கிரிகட்டோ ,முடி வெட்டும் கலையோ அனைவரும் கற்கும் போது பொது முறைகள் உருவாகிறது.psalm 140 சொல்லி விட்டு தான் மைதானத்தில் இறங்க வேண்டும் என்று கூறினால் சரியா.ஆனால் கர்நாடக சங்கீதம்,சதிராட்டம் இரண்டையும் சாதியோடு இணைந்த ஒரு சாதி சடங்கு போல மாற்றி விட்டு நாங்கள் கற்று தர மாட்டோம் என்றா சொல்லுகிறோம் என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது தான்.

 11. பாரி வையவன்
  #11

  பூவண்ணரே …. உங்கள் வாதத்தில் வெறும் வெற்று வெறுப்பே உள்ளது. சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் வரிகளை அடுக்குகிறீர்கள். எம்.எஸ். திராவிட இயக்கப்பாடகி ஆகியிருந்தால் பார்ப்பன ஏடுகள் ஏசியிருக்கும் என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் இப்போது ??? எம்.எஸ். சிகரெட்டுடன் இருக்கும் புகைப்படத்தை மகிழ்வோடு போடுகிறீர்களே .. அவர் நீங்கள் சொன்ன சேக்மொகம்மதுவின் மனைவியாயிருந்தால் போட்டிருப்பீர்களா … இதற்குப் பெயர்தானா ஈயத்தைப்பார்த்து இளித்ததாம் பித்தளை என்பது ? பரவாயில்லை என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். புலம்புங்கள். அழுக்காறின் வெறுப்பில் வெந்து குமுறுங்கள். வெள்ளையனின் கைக்கூலி இயக்கங்களின் பொய்ப்பரப்புரையில் மகிழ்ந்து இன்புறுங்கள். உண்மை எக்காலத்திலும் மடியாது. பார்ப்பனர்கள் பல தவறுகளை செய்தனர். மற்ற சாதியினரும் பல தவறுகளை செய்தனர். மனித இயல்பு. என்னவோ அந்த சமூகத்தினர்தான் எல்லாம் செய்தனர் என்று பரப்புரை செய்வதுதான் ஃபாசிசம். பரவாயில்லை. செய்யுங்கள் 🙂

 12. poovannan
  #12

  வெள்ளையனின் கைக்கூலி இயக்கங்களின் பொய்ப்பரப்புரையில் மகிழ்ந்து இன்புறுங்கள். உண்மை எக்காலத்திலும் மடியாது.
  பாரி வையவன்

  ஐயா தோழரே, ஆம். உண்மை எக்காலத்திலும் மடியாது.
  திரு எம் எஸ் அவர்கள் ஒரு குறியீடு.
  அவர் எப்படி கைபற்றப்பட்டாரோ,மாற்றி,அடக்கி அவர்கள் மொழி பேச வைக்கப்பட்டார் என்பதற்கான எடுத்துகாட்டு.பெற்ற தாயை,தாய் மொழியை ,கூட பிறந்த அனைவரையும் வெறுக்க வைத்த குழுவிடம் அவரை போலவே இசையும் சிக்கி கொண்டிருப்பது தான் செய்தி.
  சாமிக்கு சுருட்டு வைக்கும் குழுக்களும் இங்கு நிறைய உண்டு.அதை கேவலம் என்று எண்ணுபவர்களுக்கு தான் அந்த புகைப்படம் தவறாக தெரியும்.அது தைரியத்தை காட்டும் குறியீடாகவும் கொள்ளலாம்.அப்படி பட்டவர் ஆயாவாக வைத்திருந்தவர் இறந்து விட்டதால் பாட மாட்டேன் என்று அடிமைத்தனத்தின் மொத்த உருவமாக ஆக்கப்பட்டது தான் சோகம்.எத்தனை,மருத்துவர்கள்,பொறியாளர்கள் ,விளையாட்டு வீராங்கனைகள் ,நடிகைகள்,போலீஸ் அதிகாரிகள் கணவர் அல்லது வைத்து கொண்டிருந்தவர் இறந்த பிறகு ஆற்றலை/தொழிலை உடன்கட்டை செய்கிறார்கள்.அதை புகழும் கூட்டத்தின் கையில் சிக்கி இருப்பதை நாங்கள் தான் சோறு போடுகிறோம் நெய் ஊற்றுகிறோம் என்று திமிராக கூறுவதை பார்த்து கேள்வி கேட்டால் ஏன் உங்களுக்கு இவ்வளவு பொங்குகிறது.
  பல நூற்றாண்டுகளாக இருக்கும் முறைகளை கிருஷ்ண மூர்த்தி ஐயரும் ,ருக்மிணி தேவியும் மாற்றினால் சரி ஆனால் அதை திராவிட இயக்கங்கள் கூறினால் அவர்கள் சீர்குலைக்க வந்தவர்கள்.கைகூலிகள்.இங்கே புலம்புவது யார்
  இப்போது பற்றிகொண்டிருக்கும் முல்லை பெரியாறு அணியோடு சேர்ந்து பென்னி குய்க் என்ற பெயர் அடிபடுகின்றது.பல லட்சம் மக்கள் பஞ்சத்தால் மடிவதை பார்க்க பொறுக்காமல் மலையை குடைந்து,அரசு கைவிட்டாலும் தன் சொந்த செலவில் அணையை கட்டினார் என்று.அதனால் வெள்ளையர் இந்தியாவை சுரண்டினர் என்று கூறுவது பொய்யாகி விடும்மா.இல்லை வெள்ளையரை திட்டினால் நீர் தான் பொங்குவீரா
  முகலாய ஆட்சியின் போது இந்தியாவின் பொருளாதாரம் உலகின் கால்பகுதியாய் இருந்ததை எடுத்து கூறும் ஹிந்டுத்வவ்யாதிகள் அதை வெள்ளையர் சீரழித்தனர் என்று கூறும் போது முகலாயர்கள் தங்கங்கள் என்று புகழ்கின்றார்களா
  முகலாயர்களை திட்டினால் குளிர்ச்சியாக உள்ளது,வெள்ளையரை திட்டினால் சாந்தி பிறக்கிறது ஆனால் அவர்களை போல் சுரண்டிய ,தங்கள் பழக்க வழக்கங்களை உயர்ந்தது என்று மற்ற அனைத்தையும் தாழ்த்திய குழுவினரை திட்டினால் கோவம் ஏன் பொத்து கொண்டு வருகிறது.

 13. பாரி வையவன்
  #13

  அய்யா பூவண்ணரே …. நன்றாகத் திட்டிக்கொள்ளுங்கள் … எனக்கு ஒன்றுமில்லை … நான் அந்த சாதியைச் சேர்ந்தவனும் அல்லன் … ஏதோ என் அனுபவத்தில் எனக்குத் தோன்றியவற்றைக் கூறினேன் …. என் கூற்றை முழுதும் நீங்கள் ஏற்கத்தேவையுமில்லை … உங்கள் வாதங்களை முழுதும் நானும் ஏற்கப்போவதுமில்லை …. வாழ்க

 14. பூவண்ணன்
  #14

  ஐயா சாமி யார் எந்த சாதியாக இருந்தால் என்ன
  எனக்கும் சங்கீததிற்கும் காத தூரம்.

  ஆமாம் அது ஒரு சமுதாய விழா தான்.நாங்கள் தான் காம்ப்ளான் ஊட்டி உயிரோடு வைத்திருக்கிறோம்,மாட்டோம் என்றா சொல்கிறோம்,brahmins ஒன்லி போர்டா வைத்திருக்கிறோம் என்ற பதிலுக்கு தான் எதிர் வினை.
  ஒரு விதத்தில் இந்த கர்நாடக் சங்கீத நிகழ்வுகளுக்கு நன்றி கூற வேண்டும்.திராவிட இயக்கம் என்று ஒன்று இல்லை என்றால் அரசியல்,அதிகாரிகள்,பொறியியல்,மருத்துவம்,கல்லூரி பேராசிரியர்கள்,நடிகர்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள் என்று எல்லா துறையிலும் இந்த நிலை தான் இருந்து இருக்கும்
  யாரவது ஏன் இந்த துறைகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் மட்டுமே இருக்கின்றன என்று கேட்டால் இதே பதில்கள்(ஆமாம் அது ஒரு சமுதாய விழா தான்.நாங்கள் தான் காம்ப்ளான் ஊட்டி உயிரோடு வைத்திருக்கிறோம்,மாட்டோம் என்றா சொல்கிறோம்,brahmins ஒன்லி போர்டா வைத்திருக்கிறோம்) தான் கொட்ட பட்டிருக்கும்.
  திரை இசைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்.அதிலும் ஒதுக்கீடு எதுவும் இல்லை.ஆனால் இளைய ராஜ,தேவா,ரெஹ்மான்,கங்கை அமரன்,டி ராஜேந்தர் ,பாக்யராஜ்,எம் எஸ் விஸ்வநாதன் ,ஹாரிஸ் என பல வகுப்பை சார்ந்தவர்கள் உருவாகியுள்ளனர்.ஆனால் இங்கு ஏற்கனவே வாய் பாட்டு,இசைகருவிகளில் ஈடுபட்டிருந்த சமூகங்கள் கூட மொத்தமாக ஓரம் கட்ட பட்டிருப்பதன் பின்னணி என்ன.யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.

 15. Arun
  #15

  வெறும் விதண்டாவாதத்திற்காக எழுதும் பூவண்ணன் போன்றோருக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை
  ரங்கநாயகி மிக அழகாக சொல்லி இருக்கிறார்…நன்றி
  வெறுமனே M S அம்மாவை பற்றி (மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்து) நிறைய பேர் எழுதுகிறார்கள்….88 வயது வரை வாழ்ந்த பெண்மணியிடம் அப்போது நேருக்கு நேர் கேள்வி கேட்கவோ\ விளக்கம் பெறவோ யாருக்கும் துப்பில்லை

 16. poovannan
  #16

  ஐயா ஏகலைவனோ எம் எஸ் ஆயாவோ (அம்மா என்று அழைக்க பிள்ளைகள் இருந்தால் எந்த சாதியில் சேர்ப்பது,உருப்படாத கைக்கூலி இயக்கங்கள் வந்து விட்டதே என்று அதை தவிர்த்து விட்டு இந்த நாடக அம்மா அழைப்புகளுக்கு குறைச்சல் இல்லை)போடா என்றிருந்தால் வரலாறு அன்றே மாறியிருக்குமே
  அவர்கள் அப்படி கடவுள்,சாமி மாயையில் மறுபடியும் விழாமல் தடுக்க தானே வெள்ளையனும் அவர்கள் கைகூலிகளும் போராடுகின்றன
  அதை விட்டு விடுங்கள்.உங்கள் பொன்னான பதில் கிடைக்காத சோகம் தாங்க முடியாத துயரம் என்றாலும் பொறுத்து கொள்கிறேன்.திரை இசையில் பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் வர முடியும் சூழல் இருக்கும் போது மார்கழி மைனர்களில் இடம் பிடிக்க முடியாத மர்மம் என்ன
  சுயம்பாக வர முடியாத,வருபவர்களை துரோணர்கள் அழிப்பதாலா ,அல்லது சொல்லி கொடுக்கும் இடத்திலேயே சாணக்கிய தந்திரங்கள் புரிவதாலா

 17. Arun
  #17

  நன்றி….ஆமாம் இது ஒரு சமுதாய விழா தான்.நாங்கள் தான் காம்ப்ளான் ஊட்டி உயிரோடு வைத்திருக்கிறோம்…..எங்கள் சமூகம்தான் இசையை வளர்கிறது என்ற என் கருத்தில் இருந்து நான் பின்வாங்க போவதில்லை 😀
  இன்றைக்கும் பிராமணர்கள் அல்லாத இசை மேதைகள் குட்சேரி செய்கிறார்கள். சீர்காழி, எண்ணற்ற தவில் வித்வான்கள் (வலயபட்டி, ஹரித்வாரமங்கலம்) போன்றோர். ஹரித்வாரமங்கலம் தான் தியாகராஜா ஆரதனை செயலாளர். வலயபட்டி வித்வானுக்கு சங்கீத கலாநிதி பட்டம் குடுக்கபட்டது

 18. Arun
  #18

  எதுவே என் கடைசி கமெண்ட் எதற்கு மேல் எழுதி என் நேரத்தை வீணாக்க விருப்பமில்லை 😀

 19. poovannan
  #19

  மன்னர்களாலும் ஜமீன்தார்களாலும் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டாலும் கர்நாடக இசையின் ‘கட்டுப்பாட்டு அறை’ அக்ரஹாரத்திலிருந்து அகற்றப்படவில்லை.

  “கத்தியா, தொப்பியா” என்று கங்கணம் கட்டிய மாலிக் கப்பூர்களாலும் ‘அச்சுத் தொழில், புத்தகங்கள்’ என ஆசை காட்டிய வீரமாமுனிவர்களாலும் விலைக்கு வாங்க முடியாத வித்தையாய் விளங்கிவந்தது.

  தொடக்கக் காலத்தில் இறைப்பணிகளிலும் ஆன்மீகச் செயல்களிலும் அதிகமாகப் பிராமணர்களே ஈடுபட்ட காரணத்தினால் இறைவனைப் போற்றி இசைக் கீர்த்தனங்களை இயற்றுவதும் அவர்களாகவே இருந்தது அதிசயமான ஒன்று அல்ல. ஆனால் அப்படி அமைந்த இசை அவர்களின் தனி அடையாளமாகவும் கலாச்சார வெளிப்பாடாகவும் மாறியதுதான் ஆராயப்பட வேண்டிய விஷயமாகும்.

  பிராமணர்களுக்கும் கர்நாடக இசைக்கும் இடையே நிலவிவரும் நீண்டகால உறவின் அடிப்படையாக நாம் எடுத்துக்காட்ட விரும்புவது பிராமணர்களுடைய ஆன்மீக உணர்வும் அதன் வழியாக இறைவனை அறிந்துகொள் வதற்கு அவர்கள் இசையின் ஊடகத்தைப் பயன்படுத்திக்கொண்டதும் ஆகும். இவ் விதமான இறை தேடலில் ஈடுபட்ட அக்கால பிராமணர்களின் சச்சரவற்ற சாந்தமான சன்மார்க்க சுபாவத்திற்கு கர்நாடக இசையின் ராகங்களின் அமைப்புகளும், தாளங்களின் கோர்வைகளும் தடையின்றி துணை நின்றன. சாமவேதத்திலிருந்து பிறந்ததாகக் கூறப்படும் கர்நாடக இசை சாமவேதிகளால் ஆதரிக்கப்பட்டும் அரவணைக்கப்பட்டும் ஆலமரமாய் அரசாட்சி செய்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை

  http://www.brahmintoday.org/magazine/2011_issues/bt94-1202_brahmins.php இல் இருந்து எடுக்கப்பட்டது

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: