எக்ஸைல் : ஆண்களை அம்பலப்படுத்தும் நாவல்
எக்ஸைல் நாவலைப் படித்துவிடவேண்டும் என்பது நான் எப்போதோ எடுத்துவிட்ட முடிவுதான். ராஸலீலா, காமரூபக் கதைகள், தேகம், செக்ஸ் சாமியார் சல்லாபம், மனங்கொத்திப் பறவை என சாருவின் எல்லாப் புத்தகங்களையும் வாங்கிப் படித்துவிடுவது எனது வாடிக்கையான செயல்களில் ஒன்றுதான். ஆனால் எந்த நூலுக்கும் விமரிசனம் எழுதும் பழக்கம் இருந்ததில்லை. ‘சக எழுத்தாளர்கள் எழுத்தை விமர்சிப்பது இல்லை’ என்னும் ஜெயகாந்தனின் நிலைப்பாடுதான் எனக்கும். ஆனால் தமிழ்பேப்பரில் வெளியான சரவண கார்த்திகேயனின் ‘விமர்சனத்தை’ பார்த்ததும், என் முடிவை மாற்றிக்கொண்டேன்.
எக்ஸைலைப் பற்றி எழுதுவதற்கு முன், ‘ரைட்டர்’ சி.எஸ்.கேயின் விமர்சனத்தைப் பார்த்துவிடலாம். முதலில், அவர் எழுதியதை எப்படி விமர்சனம் என்று வரையறுப்பது என்றே புரியவில்லை. கிட்டத்தட்ட எக்ஸைல் நாவலின் வடிவத்தில் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறார். இப்படி அவர் நாவலை விமர்சிக்கக் காரணம், சாருவின் மீதான கோபமே என்பதிலெல்லாம் எனக்கு அக்கறை இல்லை. ஆனால் உண்மையில் அது ஒரு விமர்சனமே இல்லை என்பதைத்தான் சொல்லவருகிறேன்.
ஒரு சுக்கும் பெறாத நான்கு வரிகளையெல்லாம் தொகுத்துப் போட்டு அதனைக் கவிதை என்றாக்கி அவர் கவிதைப் புத்தகம் எழுதுவதும், அதனை யாரைக் கொண்டாவது வெளியிடுவதும் அவர் உரிமை. ஆனால், அவரைத் திட்டி எழுதுபவர்களும் கூடவா அவரைக் கவிஞர் என்று விளிப்பார்கள்? இவரெல்லாம் கவிஞர் என்றால் தேவதச்சனை என்னவென்று அழைப்பது? மனுஷ்யபுத்திரனை என்னவென்று அழைப்பது? இவரது கவிதைத் திறனுக்கும் இவர் எக்ஸைலை விமர்சிப்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது வேறு. கவிதைத் தொகுப்பு என்று இவர் வெளியிட்டதில் எப்படி கவிதைகள் இல்லையோ அப்படியே இவரது விமர்சனத்திலும் விமர்சனம் இல்லை.
‘ரைட்டர்’ சிஎஸ்கே எழுதியதில் ஹாஸ்யத்தையெல்லாம் விலக்கிவிட்டு அதன் விமர்சனப் பகுதிகளை மட்டும் பட்டியலிட்டுப் பார்த்தால் ஒருவரிகூடத் தேறாது. ஆனால் ஒரு விஷயம் தெரியவரும். ‘ரைட்டருக்கு’ எக்ஸைல் பிடிக்கவில்லை என்பதுதான் அது. இது தவறல்ல. எவருக்கும் எதுவும் பிடிக்காமல் போகலாம். ஆனால் விமர்சனம் என்பது தனக்கு எது பிடிக்கவில்லை என்பதைச் சொல்வது மட்டும்தானா? மாறாக, எதனால் தனக்கு ஒரு விஷயம் பிடிக்காமல் போனது, எப்படி அது மற்ற படைப்புகளுடன் ஒப்பிடப்படலாம் என்பதை விளக்குவதே ஆகும். அப்போதுதான் அது விமர்சனம். ‘ரைட்டருக்கு’ விளக்கம் இவ்வளவு போதுமென்றே கருதுகின்றேன்.
நாவலுக்கு வருவோம். சம்பிரதாயமான நாவல்களை வாசிக்கவேண்டும் என்றால், தமிழில் நாவல்கள் வந்த வண்ணம் உள்ளன. எதையொன்றையும் எடுத்துப் படித்துக்கொள்ளலாம். இன்னார் பிறந்தார், இன்னார் வளர்ந்தார், இன்னார் இறந்தார் என்று வாழ்க்கையைப் படிக்க விரும்புகிறவர்கள் எக்ஸைல் பக்கம் தலைவைக்காமல் இருப்பது நல்லது.
கதை ஒன்றிலிருந்து கதையை நீக்கிவிடுவது என்பது திடீரென்று சாரு கண்டுபிடித்தது அல்ல. நெடுங்காலமாகவே அது மீண்டும் மீண்டும் உலகெங்கும் பரீட்சித்துப் பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒன்றே. திரைப்படங்கள் நம் மக்களுக்குப் பழகியதுபோல இப்படி நாவல்களின் பரீட்சார்த்த முயற்சிகள் பழகிப்போவதில்லை. நம் சமூகத்தின் அவலநிலைக்கு ஓர் எழுத்தாளனை நாம் பொறுப்பாக்கத் தேவையில்லை.
எக்ஸைல் நாவலில் கதையைத் தேடுபவர்கள் நாவலின் பக்கங்களில் தொலைந்துபோய்விடுவார்கள். வாசிப்பனுபவத்தையும் புத்துணர்ச்சியையும் தேடுபவர்களும்கூடத் தொலைந்தே போவார்கள். ஆனால் இந்தத் தொலைந்துபோதல் முற்றிலும் அனுபவரீதியாகஇருக்கும். புத்துணர்ச்சி தருவதாக இருக்கும்.
இந்நாவல் பின்நவீனத்துவ நாவலா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லவேண்டியிருக்கும். பின்நவீனத்துவ நாவலுக்கான கூறுகள் இதில் உள்ளன என்பதை மறுக்கவியலாது. ஆனால் தமிழ்நாடு போன்ற ஒரு மண்ணில் பின்நவீனத்துவத்தின் கூறுகளைஅப்படியே முழுக்க அரசியல் சார்ந்து பிரயோகிக்கும் நிலைமை வந்துவிட்டதாக நான் கருதவில்லை. இந்நாவலில் சாரு தொடும்அரசியல் புள்ளிகள் எந்தவொரு ஜூனியர் விகடன் வாசகனும் புரிந்துவிடக்கூடியதே. எனவே இது பின்நவீனத்துவ நாவல் இல்லை. நிச்சயம் நவீனத்துவ நாவலும் இல்லை. நவீனத்துவத்தின் அடிப்படைகளையெல்லாம் கேள்வி கேட்டேதான் நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. எந்த வகை நாவல் என்று சொல்வதில் நம் எண்ணத்தைச் செலுத்துவதைவிட, நாவலின் அனுபவத்தில் கவனத்தைச் செலுத்துவது நல்லது. உண்மையில் ஒரு நாவலை வாசிப்பதின் அடிப்படை நோக்கமும் இதுவாகவே இருக்கமுடியும்.
எக்ஸைல் நாவலில் சாருவே ஒரு பாத்திரமாக வருகிறார். இன்னொரு பாத்திரமாக வரும் உதயாவும் சாருவே. இப்படி இரண்டு சமநிலைகள் மூலம் நாவலை சாரு கொண்டுசெல்வது இந்நாவலின் ஆதாரப்புள்ளிகளுள் ஒன்று. இதனால் சாருவால் பலப்பல விஷயங்களை நினைத்த நேரத்தில் தொட்டுவிட்டு ஓடமுடிகிறது. கூடவே கொக்கரக்கோ என்றபாத்திரத்தைப் பேசவிட்டிருப்பதன்மூலம், சாருவின் ஆல்டர் ஈகோ சமனாக்கப்படுகிறது. இந்த ஆல்டர் ஈகோவினால் நாவல் இன்னும் ஒரு படி மேலே போய்விடுகிறது. கடைசியில் கொக்கரக்கோ நாவலில் பேசத் தொடங்கும்போது, எழுத்தாளர்கள்-வாசகர்கள் மரபு முற்றிலும் கலைத்துப்போடப்பட்டு, படிப்பவர்களையும் நாவலுக்குள் பிடித்துப்போடும் சாகசத்தைச் செய்துவிடுகிறார் சாரு. இதுபோல ஆங்காங்கே நாவல் உச்சம் தொடும் இடங்கள் பல உள்ளன. சாரு ஸ்டைலில் உச்சம் தொடும் இடங்களும் உள்ளன.
ஆரவல்லி சூரவல்லி கதைகளைச் சொல்கிறார் சாரு. இதிலென்ன என்று தோன்றலாம். எதையாவது பிட்டு பிட்டாகச் சொல்லிச்செல்லவேண்டும் என்பதனால் சொல்கிறார் என்று ஒரு சாதாரண வாசகன் மேலே ஓடிவிடக்கூடும். ஆனால் அந்தக் கதையின்முடிவில் அதனை எப்படி உதயாவுடன் அல்லது சாருவுடன் இணைக்கிறார் என்னும்போது, அந்தக் கதை சொல்லலின் பின்புலம் கொள்ளும் விரிவு அசாத்தியமானதாகப் போய்விடுகிறது.
இதேபோலப் பல இடங்கள். உறங்காவில்லியின் கண்களை ஒரு வரியில் காதலின் காத்திருப்போடு ஒப்புமைப்படுத்துவதைச் சொல்லலாம். பக்கிரிசாமியின் ஆவி பேசும் இடத்தைச் சொல்லலாம். எப்படிச் சொல்கிறார் என்பதை விட்டுவிட்டு, எதைச் சொல்கிறார் என்பதை மட்டும் பார்த்தால், இந்நாவல் ஒரே சீராகச் செல்வதைக் கண்டுபிடிக்கமுடியும். கலைடாஸ்கோப்பில் சிதறிக்கிடக்கும் நிறங்களுக்குள்ளே ஓர் உருவம் பிடிபடுவதுபோல.
சிவா என்ற பாத்திரத்தின் படைப்பைத் தனியே சொல்லவேண்டும். அதை மட்டுமே தனியாக ஒரு சிறந்த குறுநாவல் என்று சொல்லிவிடலாம். இந்நாவலின் சிகரமே இந்த காரக்டர்தான். கடைசியில் சிவாவைப் பற்றி வரும் ஒரு வரி, இக்குறுநாவலின் மாயத் தன்மையைக் கலைத்துவிட்டு, தரையில் காலூன்ற வைத்தாலும், சிவாவின் மாயத்தன்மை உருவாக்கப்படும் விதம் கச்சிதமாக வந்துள்ளது என்றே சொல்லவேண்டும்.
அதேபோல் உதயாவின் கொண்டாட்டங்கள் பற்றிய பகுதிகளையும் சொல்லலாம். சந்தேகமே இல்லாமல் இவை இளமையின் கொண்டாட்டங்கள். இதனை ஏன் சாருவின் வாசகர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை எளிதில் புரிந்துகொண்டுவிடமுடியும்.
இந்நாவலின் அடிநாதம் காதல் என்பதே. ஆனால் என்னால் இந்நாவலை ஓர் ஆணின் கொதிப்பாகவே பார்க்கமுடிந்தது. பெண்கள் இந்நாவலைப் பெண்ணின் பார்வையிலிருந்து வாசிக்கக்கூடும். அது பெண்கள் பிரச்னை. ஆனால் நிச்சயம் ஓர் ஆண் இந்நாவலைப் படிக்கும்போது, அவனது ஈகோவைத் தரிசிக்காமல் அவனால் நாவலை முடிக்கவே முடியாது. அப்பட்டமாக ஆண்களைஅம்பலப்படுத்தும் நாவல் இது. தன் பெற்றோருக்கு உதயா எழுதும் கடிதம் தொடங்கி, அஞ்சலியிடம் கிட்டத்தட்ட அடிமைபோல்சுயமிழக்கும் உதயாவரை ஆண்களின் அந்தரங்கம் அப்படியே மேடையேற்றப்படுகிறது. இப்படித் தத்தம் ஈகோக்களை நாவலில் காணப் பயந்தே ‘ரைட்டர்’ போன்றவர்கள் எகிறி ஓடுகிறார்கள் என நினைக்கிறேன்.
கடைசியாக சாரு மேற்கொண்டிருக்கும் ஆன்மிகச் சோதனை பற்றி. எப்படியும் ஒருநாள் இங்கே வந்து சேரவேண்டியிருக்கும் என்று சாருவின் எழுத்தைப் படித்தவர்கள் எளிதில் சொல்லியிருக்கமுடியும். இத்தனை அலைச்சல்களுடன் அலைபவர்கள் முடிவில்அடிபணியும் இடமாக ஆன்மிகம் எப்படி ஆகிவிடுகிறது என்பது ஆச்சரியப்படுத்துகிறது. ஆனால் அது கடவுள் நம்பிக்கையிலும் வந்துசேர்ந்துவிடுகிறது. வாழ்க்கையே முரண்களால் ஆனது என்பதை உதயாவும் மெய்ப்பிக்கிறான். ஐயப்பனுக்கு மாலை போடும் உதயாவை எந்த வகையில் சேர்ப்பது! அடிப்படையில் கடவுள் நம்பிக்கையற்ற எனக்கு இந்நாவலின் பிடிபடாத சங்கதி இதுவே. ஆனால் இதன் தேவைகளை ஒருவாறாகப் புரிந்துகொள்ளவும் முடிகிறது! அதிலும் ஐயப்பனின் பதினெட்டுப் படிகளை பகவத்கீதையின் சாரங்களோடு தொகுக்குமிடம் – சந்தேகமே இன்றிப் பிரசங்கம்தான்.
இந்நாவலில் குறைகளே இல்லையா என்றால், நிச்சயம் உள்ளன. அஞ்சலி சரியாகப் படைக்கப்படவில்லையோ என்கிற கேள்வி எழுகிறது. கொக்கரக்கோ கடைசியில் அதிகமாகப் பேசிவிடும்போது, அதுவரை கொக்கரக்கோ கொண்டிருந்த அழுத்தம் மறைந்துபோகிறது. கடைசிவரை திடீர் திடீரென்று வந்துகொண்டேயிருக்கும் பாத்திரங்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஏன்இப்படி? நான் முதலில் சொன்னதுதான். எப்படியோ நம் ஆழ்மனத்தில் ‘நாவல்’ என்ற சம்பிரதாயமான ஒன்றைப் படிக்கிறோம் என்பது படிந்துபோயிருப்பதால்தான். அதனை நீக்கிவிட்டுப் படித்தால், நாவலை முடிக்கும்போது நீங்களும் எக்ஸைல் ஆகியிருப்பீர்கள்.
பின்குறிப்பு: எத்தியோப்பியப் போர்களில் சிக்க விரும்பாததால் இந்நாவல் விமர்சனம் ‘அழகுராஜனால்’ எழுதப்படுகிறது. இது நிச்சயம் ‘உதயா’வுக்கும் எத்தியோப்பியக் கவிஞருக்கும் புரியும்.
0
அழகுராஜன்








December 16th, 2011 at 10:25 am
ஆங்கிலத்தில் வரும் மறுமொழிகள் அனுமதிக்கப்படமாட்டாது.பேப்பர் இது என்ன தமிழ் வார்த்தையா
December 16th, 2011 at 11:47 am
அன்புள்ள அழகுராஜன் ,மனமார்ந்த நன்றி .சரியான வார்த்தைகளில் சரவண கார்த்திகேயனின் விமரிசனத்தை ,அது வெறும் வயிதெரிச்சல் தான் என்று விளக்கி உள்ளீர்கள் .திருப்தி .
December 16th, 2011 at 12:05 pm
நந்தனின் பின்னூட்டதுக்கு ஒரு லைக்
December 16th, 2011 at 12:30 pm
அழகுராஜன், நீங்க ஆர்.அபிலாஷ் தானே!
December 16th, 2011 at 1:39 pm
நந்தனின் பின்னூட்டம்/ மறு மொழிக்கு ஒரு விருப்பம்
December 16th, 2011 at 1:59 pm
ஆங்கிலத்தில் வரும் மறுமொழிகள் அனுமதிக்கப்படமாட்டாது.பேப்பர் இது என்ன தமிழ் வார்த்தையா//
.
.
ஆங்கில பொருள் கொண்ட மறுமொழிகளை அனுமதிக்கப்படும்!ஆங்கிலத்தில் எழுத கூடாது!கொஞ்சம் யோசிங்க விளங்கும்!
December 16th, 2011 at 2:00 pm
பழைய பாட்டில் புது லேபில்-எக்ஸில்
December 16th, 2011 at 3:51 pm
ஒவ்வொருவருக்கும் பார்வை வித்தியாசப்படும், நவீனங்களை படைப்பிலக்கியத்தில் ஏற்றுக்கொள்ளும் போது., அதற்கான விமர்சனத்தில் நவீனத்தையும் , மனதில் தோன்றியவற்றையும் வெளிப்படுத்தினால் அதை விமர்சனமே இல்லை என்பீர்களா.
வழக்கம் போல நாவலில் இருந்து ரெண்டு வரி, ஆகா , ஒஹோ, கொஞ்சம் திட்டு, பாத்திரம் சரியாக உருவாக்கபடவில்லை, இருந்தாலும் நாவல் ஆஹா ஓஹோ என்ற விமர்சனங்களை தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா.
ஒருவர் தைரியமாக & தனக்கான பாணியில் எழுதிவிட்டால் கும்மி அடிப்பது, அதிலும் சில சாருவின் அறிவுஜீவிகளின் எழுத்தை படித்தாலே ஒரே ஜால்ரா மயம் தான்.
சி எஸ் கேயை விமர்சிக்கும் அனைவரையும் நான் கேட்பது ஒன்று தான் அவரின் புத்தகம் வெளிவந்த போது அது குப்பை என்று சொல்வது தானே, ஒருவருக்கு எதிராக விமர்சனம் எழுதிய பின்தான் எழுத்தாளனின் புத்தகத்தை குப்பை என்பீர்களா.
(Edited)
December 16th, 2011 at 5:21 pm
ஆங்கிலத்தில் எழுத கூடாது என்பதை நான் வரவேற்கிறேன்!அப்போதாவது மக்கள் தமிழில் எழுத கற்றுக்கொள்ளட்டும்!
*
எக்சைல் பத்தி சொல்லனும்னா ஒரு சுமாரான படைப்பெண்ட்ரே சொல்ல இயலும்!
December 16th, 2011 at 7:16 pm
பிளாச்சிமடா வீரர் சாரு, குமுளிக்குப் போய் முல்லைப்பெரியாறுக்காக முதல்ல போராடட்டும், நாவலை அப்புறம் வாங்கறேன். இல்லேன்னா அவர் மலையாளிகள் தன்னைக் கொண்டாடுவதாகச் சொல்வதில் என்ன அர்த்தம்?
December 16th, 2011 at 9:59 pm
nandan,
பேப்பர் தமிழ்தான். Paper-தான் ஆங்கிலம். ஸோ யூ கேன் டைப் இன் திஸ் சார்ட் ஆஃப் டமில்.
December 16th, 2011 at 10:46 pm
CSK இன் விமர்சனத்தை படித்துவிட்டு சிரிப்பு அடங்க ஒரு நாள் ஆனது.இந்த விமர்சனம் படிக்க போர் அடிக்கிறது. அலனின் பின்னும் நன்று-சாரு ரசிகன்
December 16th, 2011 at 11:33 pm
“அவரின் புத்தகம் வெளிவந்த போது அது குப்பை என்று சொல்வது தானே”
அது குப்பையா இல்லையா என்பது பஞ்சாயத்து இல்லை.. குப்பையை படைத்தவர் கூட , தாராளமாக விமர்சிக்கலாம். அதில் தவறு இல்லை.. ஆனால் விமர்சனமும் குப்பையாக இருக்கிறதே என்பதுதான் பிரச்சினைக்கு காரணம். எனவே அதற்கு காரணம் என்ன என விளக்க வேண்டியதாயிற்று, அதிவும் தமிழ் பேப்பர் என்ற பொதுவான இடத்தில் வாந்தி எடுத்ததால்தான், தலையிட வேண்டியதாயிற்று, தன் வலைப்பூவில் பிதற்றி இருந்தால் , பக்கத்தில் கூட யாரும் போய் இருக்க மாட்டார்கள்
December 17th, 2011 at 4:57 am
wow wonderfull review..
December 17th, 2011 at 7:17 am
இப்படி ஒரு விமர்சனம் எழுத உங்களுக்கு நல்ல மனசு இருந்திருக்க வேண்டும்.
December 17th, 2011 at 7:14 pm
பிச்சைகாரனுக்கு,
விமர்சனம் குப்பையா?( ஒரே நகைச்சுவை தான் உங்களுடன் அட போங்க ) எந்த அளவுகோளில் விமர்சனம் குப்பை என்கிறீர்கள். சாருவை கடுமையாக விமர்சித்தார் என்பது மட்டும் தான் நீங்கள் எடுத்துக்கொண்ட அளவுகோளில் மொத்த நீளமும் .
எந்த அளவு எக்ஸைலை கொண்டாடுகிறீர்களோ பிடிக்காதவர்கள் அதே அளவு நிராகரிக்கவும் உரிமையுண்டு. சக எழுத்தாளரின் புத்தகத்தை கிழித்துப்போட்டு நிராகரிப்பை காட்டியதை விட கேவலமாக சி.எஸ்.கே எழுதிவிடவில்லை. இதை யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சாரு கிழித்து போட்ட போது கைதட்டி சிரித்துவிட்டு .., எதிராக ஒரு வார்த்தை கூட பேச தெரியாத உங்களுக்கு விமர்சனம் குப்பை என்று
சொல்ல ஒரு முகாந்திரமும் கிடையாது.
உங்கள் வலை பக்கத்திலிருந்து..
இதை விமர்சனம் என சொல்லாமல் ஏன் அவதூறு என்கிறேன்? ஏன் உள் நோக்கம் கொண்ட கட்டுரை என்கிறேன் ?
அந்த விமர்சனத்தின் சில வரிகளை பாருங்கள்
”அவரது கடைசி நாவலான தேகம் படித்த பின் அவர் மீதான நம்பிக்கை கிழவன் குறி போல் சுத்தமாகப் படுத்து விட்டது. ஆனாலும் விதி அப்படி சும்மா விடுமா?”
// இதை தான் கேவலம் என்கிறீகளா? நிர்வாண எழுத்தாளனின் ரசிகனாக இருந்துவிட்டு இப்படி பேசலாமா //
” கடந்த இருபது வருடங்களுக்கு மேலாய் சாரு அரைத்து வரும் அதே பழைய புளித்த மாவு ”
// கண்டிப்பாக அரைத்த மாவை தான் மீண்டும் அரைக்கிறார். கார்த்தி சொன்னது போல எஸ்.ராவின் துயிலின் பக்கத்தில் கூட வர முடியாது //
இந்த மாதிரி வரிகளை வைத்து தான் விமர்சனம் குப்பை என்று முடிவு செய்து விட்டீர்களா பிச்சைக்காரன்? அப்படி என்றால் இந்த விமர்சனத்தை விட குப்பை நீங்கள் விவாதித்துக்கொண்டிருக்கும் புத்தகம், ஏனென்றால் இந்த வரிகளை விட அஜால் குஜால் வரிகள் நிரம்ப இருக்கிறது எக்ஸைலில்.
( பின் குறிப்பு : வாதத்திற்காகத்தான் புத்தகம் குப்பை என்றேன் , எனக்கு தனிப்பட்ட முறையில் பரவாயில்லை என்ற ரகம் தான் எக்ஸைல் )
December 17th, 2011 at 8:21 pm
“விமர்சனம் என்பது தனக்கு எது பிடிக்கவில்லை என்பதைச் சொல்வது மட்டும்தானா? மாறாக, எதனால் தனக்கு ஒரு விஷயம் பிடிக்காமல் போனது, எப்படி அது மற்ற படைப்புகளுடன் ஒப்பிடப்படலாம் என்பதை விளக்குவதே ஆகும்.”…..சாரு என்றைக்காவது எதனால் ஜெ.மோ நாவல்கள் பிடிக்கவில்லை என்பதை மற்ற படைப்புகளுடன் ஒப்பிட்டு ஒரு கட்டுரையாவது எழுதியுள்ளாரா? சும்மா இளையராஜா இசையமைத்த பாடல்கள் பிடிக்காது, ஜேசுதாசின் குரல் கர்ண கொடூரமாக இருக்கிறது என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார். தென் அமெரிக்க எழுத்தாளர்களின் சில பெயர்கள், நாவல் பெயர்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு அவர மாதிரி இவர் இல்ல இவர மாதிரி அவர் இல்ல அப்படின்னு உளறிக்கொண்டிருக்கிறார். எஸ்.ரா மாதிரி ஒரு முறையாவது அவர் மற்ற மொழிகளில் உள்ள நாவல்களை பற்றி, என்ன பிடிக்கிறது, என்ன பிடிக்கவில்லை என்று என்றாவது எழுதியுள்ளாரா? கோணல் பக்க காலத்தில் இருந்து அவரை வாசித்துவருகிறேன்..இன்றுவரை உருப்படியான சாருவின் விமர்சனக் கட்டுரையை பார்க்கவில்ல..படிக்கவில்லை…
December 17th, 2011 at 10:06 pm
தான் எழுதினா விமர்சனம், அடுத்தவன் எழுதினா வயித்தெரிச்சலா? நல்லா இருங்கடே.
December 18th, 2011 at 7:05 pm
இந்த மாதிரி வரிகளை வைத்து தான் விமர்சனம் குப்பை என்று முடிவு செய்து விட்டீர்களா பிச்சைக்காரன்”
இல்லை நண்பரே.. இதை விட கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியெல்லாம் பலர் விமர்சித்து இருக்கிறார்கள். சிலர் , அய்யப்பன் சரண கோஷம் போன்ற சில விஷ்யங்களுக்காக நாவலை படிக்காமல் புறக்கணித்து அதை வெளிப்படையாக் அறிவிக்கவும் செய்தனர். இதில் எல்லாம் பிரச்சினை இல்லை.. ஆனால் இந்த நபர் நாவலை படிக்காமலேயே, நாவலை படித்தது போல பாசாங்கு செய்து , விமர்சனம் செய்கிறார் என்றால் அதற்கு ஒரே காரணம் ஹிட்ஸ் கிடைக்க வேண்டும் , கவனத்தை பெற வேண்டும் என்பதுதான்..( நாவலைப்பற்றியொ, அதன் கேரகடர்கள் பற்றியோ, ஏன் பிடிக்கவில்லை என்பது குறித்தோ அவர் தெளிவாக ஏதும் சொல்லவில்லை என்பதை கவனியுங்கள் ) இதை இப்படியே விட்டு விட்டால், இந்த நபரை அவர் பாணியிலேயே விமர்சித்து இன்னொருவர் கேவலமாக விமர்சித்து கவனம் பெற முயல்வார், இப்படி ஒருவரை ஒருவர் கேவலமாக பேச ஆரம்பித்தால் அதற்கு முடிவே இல்லாமல் போய் விடும். ஒட்டு மொத்த சூழ்லும் விஷயமாகி விடும். அவர் மயிர் , குறி என திட்டியது போல அவரையும் மற்றவர்கள் திட்ட ஆரம்பித்தால், நெட் என்பது ஆபாச குப்பை என்ற எண்ணம் தோன்றிவிடும். அதனால் சுட்டி காட்ட வேண்டியதாகிவிட்டது . மற்றபடி நாகரீகமான நேர்மையான விமர்சனம் வரவேற்கத்தக்கதே
(Edited.)
December 19th, 2011 at 1:54 am
“பேப்பர்” என்று தமிழ் வார்த்தைல எழுதினால் அது தமிழ் ஆகிடுமா? என்னய்யா உங்க ஞானம்? “நாவல்” என்பதே ஆங்கிலம் தான்! இந்த காமென்டு போடும்போது “பெயர் தேவை”, “மின் அஞ்சல் முகவரி தேவை”ன்னு போட வேண்டியது தானே? இப்படி எல்லாம் தமிழ் வளர்க்க முடியாதுங்க அண்ணா!!!
December 19th, 2011 at 1:22 pm
//அவர் மயிர் , குறி என திட்டியது போல அவரையும் மற்றவர்கள் திட்ட ஆரம்பித்தால், நெட் என்பது ஆபாச குப்பை என்ற எண்ணம் தோன்றிவிடும்//அய்யா சாமி, இவ்ளோ சுத்தபத்தமானவரா இருந்துகிட்டு எப்படி சாரு கொலவெறி ரசிகராவும் ஒரே நேரத்துல இருக்கீங்க? எதுனா ஸ்பிளிட் பர்சனாலிட்டிங்களா – ஒன்னுமே புரியல போங்க.
December 19th, 2011 at 11:05 pm
அவரைத் திட்டி எழுதுபவர்களும் கூடவா அவரைக் கவிஞர் என்று விளிப்பார்கள்?”
திட்டுவதில் கூட நாகரிகத்தை கடைபிடுக்கிறோம் என்றால் அதற்கு காரணம் அல்ட்டிமேட் ரைட்டர் சாருவும் எழுத்துக்கள்.. அந்த நபரை விட கீழ்த்தரமாக எழுத எங்களுக்கும் தெரியும். ஆனால் அப்படி எழுதினால் சாருவின் வாசகர்கள் என எங்களை சொல்லிக்கொள்ளும் தகுதியை இழந்து விடுவோம்..
December 20th, 2011 at 12:15 pm
ஒரு ஆண் வாசித்தால்//அவனது ஈகோவைத் தரிசிக்காமல் அவனால் நாவலை முடிக்கவே முடியாது. அப்பட்டமாக ஆண்களைஅம்பலப்படுத்தும் நாவல் இது. தன் பெற்றோருக்கு உதயா எழுதும் கடிதம் தொடங்கி, அஞ்சலியிடம் கிட்டத்தட்ட அடிமைபோல்சுயமிழக்கும் உதயாவரை ஆண்களின் அந்தரங்கம் அப்படியே மேடையேற்றப்படுகிறது. இப்படித் தத்தம் ஈகோக்களை நாவலில் காணப் பயந்தே ‘ரைட்டர்’ போன்றவர்கள் எகிறி ஓடுகிறார்கள் என நினைக்கிறேன்.// இந்த பகுதி யோசிக்கவத்த ஒன்று. நாவலை இன்னும் படிக்கவில்லை, ஆனால் இந்த விமர்சனம் ஆவலைத்தூண்டுகிறது.
January 7th, 2012 at 7:48 pm
//ஆனால் இந்த நபர் நாவலை படிக்காமலேயே, நாவலை படித்தது போல பாசாங்கு செய்து , விமர்சனம் செய்கிறார் என்றால் அதற்கு ஒரே காரணம் ஹிட்ஸ் கிடைக்க வேண்டும் . //
அட பாவமே ! சிஎஸ்கே நாவலை படிகாமலேயே விமர்சனம் எழுதினாரா? மன சிதைவிற்கு உள்ளாயிருக்கிறீர்கள் என தெரிகிறது. ஒரு நாவலை படிக்காமல் எப்படி ஒருவரால் விமர்சனத்தால் ஒரு நாவலை இப்படி கந்தல் கந்தலாய் ஆக்க முடியும்.
// ..( நாவலைப்பற்றியொ, அதன் கேரகடர்கள் பற்றியோ, ஏன் பிடிக்கவில்லை என்பது குறித்தோ அவர் தெளிவாக ஏதும் சொல்லவில்லை என்பதை கவனியுங்கள் ) //
விமர்சனம் எப்படி செய்யவேண்டும் என்பது எழுதுபவரை பொறுத்தது. மற்றவர் எப்படி விமர்சனம் எழுதவேண்டும் என்று நீங்கள் சொல்லித்தராதீர்கள் பிச்சைக்காரன்
//நெட் என்பது ஆபாச குப்பை என்ற எண்ணம் தோன்றிவிடும். அதனால் சுட்டி காட்ட வேண்டியதாகிவிட்டது //
அட அட அட மனிதருள் மாணிக்கமல்லோ நீர். இணையத்தில் இருக்கும் ஆபாசத்திற்கு எதிராக நீங்கள் போராடுவது இந்திய பேரண்டத்திற்கு மிக தேவையானது. இணைய ஆபாசத்திற்கான உங்களில் அடுத்த போராட்டங்களை ஆவலுடல் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்