நாட்டுக் களவாணிகள்

1960களின் தொடக்கம். ஒரிஸாவின் கட்டாக் நகரில் இருக்கிறது மத்திய நெற்பயிர் ஆராய்ச்சி மையம் (CRRI). அதன் இயக்குநர் ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யா. உலகின் சிறந்த தாவரவியலாளர்களில் ஒருவர்.

அவருக்கு வந்திருந்த கட்டளை அவரை நோகடித்தது. CRRI சேகரித்த தானிய வகைகளை மணிலாவில் நிறுவப்பட்டிருக்கும் சர்வதேச நெற்பயிர் ஆராய்ச்சி மையத்துக்கு (IRRI) அளித்துவிடவேண்டும். ஜெர்ம்ப்ளாஸம் (germplasm) என உயிரியல் மொழியில் அறியப்படும் இவை ஒரு நாட்டின் பொக்கிஷம். ரிச்சார்யா தானிய வகைகளின் பரிணாம வரலாற்றை நன்கு அறிந்தவர். தானிய வகைகளின் பன்மை பேணுதலுக்கும் பண்பாட்டுக்கும் இருக்கும் தொடர்பைக் குறித்து அவர் செய்த ஆராய்ச்சி முக்கியமானது. வேத காலத்தில் இந்தியாவில் 4,00,000 அரிசி வகைகள் இருந்திருக்க வேண்டும் என்பது அவரது ஆராய்ச்சிக் கணிப்பு. இதோ இந்த 1960-களில்கூட 20,000 அரிசி வகைகள் இருந்திருக்கின்றன. ஒவ்வொரு தானிய வகையும் ஒரு வாழ்க்கை முறையினால் தலைமுறை தலைமுறையாக வளர்த்தெடுக்கப்படுகிறது.

நமது கட்டாக் இருக்கும் ஒரிஸாவின் தெய்வம் பூரி ஜகன்னாதர். அவருக்கு ஒவ்வொரு நாளும் புதிதாக அறுவடை செய்த நெல்லில் நைவேத்தியம் செய்யவேண்டும் என்பது ஐதீகம். அந்த ஐதீகமே பல நெல்வகைகளைக் காப்பாற்றியிருக்கிறது. அந்த நெல்வகைகள் பல சூழல்களில் பஞ்சங்களிலிருந்து பல மானுடக்குழுக்களைக் காப்பாற்றியிருக்கின்றன.

அப்படி எத்தனையோ தளங்களில் வேர் பதித்து வளர்ந்த தானியவகைப் பொக்கிஷம். அதன் ஆராய்ச்சி உரிமையை, ஒரு சர்வதேச நிறுவனத்துக்கு விட்டுக்கொடுப்பது, தானே முன்வந்து அடிமை சாசனம் எழுதிக்கொடுப்பதுபோல. சர்வதேச அளவில், அதிக விளைச்சல் தரும் விதைகளை உருவாக்கி வருகிறார்கள். தெரியும். அவற்றைப் பெற இவற்றைக் கொடுத்தாகவேண்டும் என்பது எழுதப்படாத, வெளிப்படையாகச் சொல்லப்படாத மிரட்டல். ஆனால் நாளைக்கு அவர்கள் தரும் விதை வகைகளில் பிரச்னைகள் ஏற்படும். அப்போது அதற்கான தீர்வுகள்கூட இதோ இந்த தானிய வகைச் சேகரிப்புகளில் இருக்கக்கூடும். மேலும் அவர்கள் கொண்டுவரும் விதைகளில் வைரஸ் தாக்குதல்கள் உண்டு. அதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நாம் எடுக்க முடியாது. அதற்கான அரசியல் மன வைராக்கியம் நமக்குக் கிடையாது.

பூரி ஜகந்நாதர் ஆலயம்

இதை ரிச்சார்யாவே நேரில் பார்த்திருக்கிறார். அரசு வகுத்திருக்கும் நோய்க் கட்டுப்பாட்டு விதிகளை மீறி, IRRI-ஐச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி, தமது அரிசி வகைகளை இந்தியாவுக்குள் நுழைக்க முயன்றபோது, அதை ரிச்சார்யா கையும் களவுமாகப் பிடித்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் நெருக்கடிகள் ஆரம்பமாகின்றன. போதுமான நோய்க் கட்டுப்பாட்டுக் கண்காணிப்பு இல்லாமல் அந்த நெல்வகையை இந்தியாவில் நுழையவிடச் சொல்லி அமைச்சர் வற்புறுத்தியும் ரிச்சார்யா மறுத்துவிட்டார். கண்களை விற்றுச் சித்திரம் வாங்க முடியாது.

அறிவியல் அமைப்புகளிடையே சர்வதேச அளவில் அறிவுப் பரிமாற்றம் தேவைதான். ஆனால் அது பரிமாற்றமாக இருக்கவேண்டும். கப்பமாக அல்ல. சீனியாரிட்டி என்று பார்த்தால்கூட 1959-ல் IRRI ஏற்படுவதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் CRRI உருவாக்கப்பட்டது. IRRI-ன் புரவலர்கள் அட்லாண்டிஸுக்கு அப்பால் இருந்தனர். ராக்கஃபெல்லர் பவுண்டேஷன், ஃபோர்டு பவுண்டேஷன் ஆகிய அதிகார பலம் வாய்ந்த அமைப்புகளே IRRI-க்கு நிதியுதவி அளித்த அமைப்புகள். முடியாது என்ற சொல், திரைமறைவுச் சக்திகளுக்கு உவப்பானது அல்ல. அரசாங்கமே மண்டியிடும்போது ஒரு தனி ஆளாவது, எதிர்ப்பு தெரிவிப்பதாவது! மேலும் IRRI கூறியது, “நாங்கள் உங்கள் ஜெர்ம்ப்ளாஸத்தைச் சும்மாவா கேட்கிறோம். உங்கள் உபயோகமில்லாத ஜெர்ம்ப்ளாஸத்துக்கு பதிலாக எங்கள் ஆராய்ச்சிச் சாலைகளில் உருவாக்கிய அதிக விளைச்சல் ஜெர்ம்ப்ளாஸத்தைக் கொடுத்துத்தானே வாங்குகிறோம்.” ரிச்சார்யாவிடம் அதே கேள்வியை இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழக ஆசாமிகள் கேட்டார்கள். உணவு மந்திரி கேட்டார். ரிச்சார்யா மீண்டும் மீண்டும் கூறினார்: “நமது அரிசி வகைகள் வைரஸ் தாக்காதவை. அவர்களின் அரிசி வகைகளோ வைரஸ் தாக்குதலுக்கு இரையாகும் தன்மை கொண்டவை. நீங்கள் அந்த ஜெர்ம்ப்ளாஸத்தை வாங்கி அதனை இங்கே விருத்தி செய்து பரப்பினால், கூடவே வைரஸ் தாக்குதலைச் சமாளிப்பதற்கான வேதிப்பொருட்களையும் வாங்கவேண்டியிருக்கும். ஒருபெரிய வலையில் விழுகிறீர்கள்.”

அமைச்சரிடம் அவர் கூறினார்: “வைரஸ் தாக்கும் நெற்பயிர் ஜெர்ம்ப்ளாஸத்தை இந்தியாவில் நுழைத்தவன் என எனது பெயர் வரலாற்றில் பதிவு செய்யப்பட நான் அனுமதிக்க மாட்டேன். நான் இயக்குனராக இருக்கும்வரை இந்த ஜெர்ம்ப்ளாஸம் கப்பத்தைக் கட்டமாட்டேன்.”

அவர்களும் இதைத்தானே எதிர்பார்த்தார்கள்.

ரிச்சார்யா அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். கட்டாக் CRRI யின் தானியவகைகள் சேகரிப்பு, ஜெர்ம்ப்ளாஸம், IRRI-யிடம் கையளிக்கப்பட்டது. ரிச்சார்யாவைத் தூக்கி வீசினார்கள். ரிச்சார்யா அவமானப்படுத்தப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம் கூறியது: “நாங்கள் ரிச்சார்யாவை ஒரு அறிவியலாளராகவே மதிக்கவில்லை.”

மத்திய பிரதேச மாநிலத்தில், மாநில அரசின் ஒரு சிறிய நிதி ஒதுக்கீட்டில் மத்திய பிரதேச நெற்பயிர் ஆராய்ச்சி மையம் (MPRRI) உருவானது. சத்தீஸ்கர் வனவாசி சமூகங்களிடையே பணி செய்த ரிச்சார்யா அவர்களின் பாரம்பரிய நெற்பயிர் ரகங்களைச் சேகரித்தார். அற்பமான நிதி ஒதுக்கீடு. அரசு இயந்திரத்தால் தீயெனப் பரப்பப்பட்டு அதிக விளைச்சல் தரும் சீமை நெல்விதைகள்; அவ்விதைகளின் உள்ளூர்ப் பதிப்புக்கள். இவை அனைத்துக்குமிடையே ரிச்சார்யா 20,000 வட்டார அரிசி வகைகளைச் சேகரித்துப் பாதுகாத்தார். சில அரிசிவகைகள் இந்தியாவில் நுழைக்கப்பட்ட அரிசிவகைகளைக் காட்டிலும் அதிக விளைச்சல் தருவன.

விடாது துரத்தும் மேற்கு, இதையும் மோப்பம் பிடித்துவிட்டது. இந்தத் தானிய வகைகளை உடனே ‘பகிர்ந்து’ கொள்ளக் கோரியது. வழக்கமான ரிச்சார்யாவின் ‘முடியாது’ பதிலுக்குப் பதிலடியாக மூடல் உத்தரவு வந்தது. இப்போது ஒரு அதிகப்படி அசுர எதிரியாக உலக வங்கி. அது கொடுத்த அழுத்தத்துக்குப் பணிந்து MPRRI இழுத்து மூடப்பட்டது. எவ்வித முன்னறிவிப்பும் சடங்கு சம்பிரதாயமும் இன்றி ரிச்சார்யா வெளியேற்றப்பட்டார். அவரது ஆராய்ச்சிக்குழு கலைக்கப்பட்டு ஒவ்வொருவரும் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கு அனுப்பப்பட்டனர். ரிச்சார்யா பாடுபட்டுச் சேகரித்த தானியவகைகள் அனைத்தும் இந்திரா காந்தி கிரிஷி விக்யான் வித்யாலயாவிடம் சென்றது.

அதன் பின்னர் 2003-ல் ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு பிறகு ஸ்வீடனைச் சார்ந்த விவசாயப் பன்னாட்டு நிறுவனம் ஸின்ஜெண்டா (Syngenta) இந்த விவசாயப் பல்கலைக்கழகத்துடன் ஓர் ஒப்பந்தம் போட்டது: “உங்கள் ஜெர்ம்ப்ளாஸத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நாங்கள் ஆராய்ச்சி செய்கிறோம்.” சத்தமில்லாமல் ஒப்பந்தங்கள் பதிவாகின. 22,972 அரிசி வகைகள் முக்கல் முனகல் இல்லாமல் அப்படியே மேற்குக்குப் பயணிக்கும். ரிச்சார்யாவின் வாழ்க்கைப் போராட்டமே அர்த்தமிழந்து குப்பைக் கூடைக்குப் போனது. ஆனால் எப்படியோ செய்திகள் கசிந்தன. எதிர்க்கட்சி வெகுண்டெழுந்தது. பத்திரிகைகள் இந்த அப்பட்டமான தானியவகைக் கொள்ளையை விமர்சித்தன. பல்கலைக்கழகம் பணிந்தது. தங்களுக்குக் கெட்டபெயர் வருவதைக் கண்ட அந்தப் பன்னாட்டு நிறுவனம் “இந்த ஆராய்ச்சியே எங்களுக்கு வேண்டாம். உங்களுக்கு உதவலாம் என்று வந்தால் எங்களை சந்தேகிப்பதா?” எனத் தோள் குலுக்கி வெளியேறியது.

இன்றைக்கு மேற்கத்திய நாடுகளின் இந்த ஜெர்ம்ப்ளாஸம் களவாணித்தனத்தை ஈடுகொடுத்துப் போராடும் விழிப்புணர்வு இந்தியாவில் நன்றாகவே இருக்கிறது. வளரும் நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகவே இந்தியா திகழ்கிறது. ஆனால் அது இங்குள்ள தலைவர்களாலோ அரசியல் கட்சிகளாலோ நிகழவில்லை. சில நேரங்களில் களவாணித்தனத்தில் மேற்கு கிழக்கெல்லாம் மறைந்துவிடுகிறது. நமது கார்ப்பரேட் குருக்கள்கூட பாரத பாரம்பரிய அறிவு சார்ந்த யோக முறைகளைச் சிறிது மாற்றி, தங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் காப்புரிமை பெறுவது நடக்கிறது. அகத்தியரும் திருமூலரும் பதஞ்சலியும் கோராத காப்புரிமையை இந்த கார்ப்பரேட் குருக்கள் கோருகிறார்கள். இதன்மூலம் மேற்கத்திய செல்வம் இந்திய அடித்தட்டு மக்களின் நன்மைக்காக மடை திருப்பப்பட்டால் சரி. ஆனால் பெரும்பாலும் கார்ப்பரேட் குருக்களின் ஆளுமை, கல்ட்டுகளுக்கும் அவர்கள் தங்களை இந்திய பாரம்பரியத்துடன் வேர் கொள்ளாத சுயம்பு போலக் காட்டிக்கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. பின்னர் இந்திய ஆன்மிகத்தையே மேற்கு கவர்ந்துகொள்ள இது எளிதான வழிகாட்டி ஆகிவிடுகிறது. சரி மீண்டும் ஜெர்ம்ப்ளாஸத்துக்கே திரும்புவோம்.

காலனியம் உருவாக்கிய சமூக இயக்கங்கள் இந்நாட்டுப் பாரம்பரிய அறிவை எள்ளி நகையாடித் தூக்கி எறிய, அதனைக் காத்திருந்து எடுத்துப்போகும் திறமையை, பன்னாட்டு கம்பெனிகள் நன்றாகவே வளர்த்திருக்கின்றன. வேப்ப மரங்கள் இந்தியாவெங்கும் பாதுகாக்கப்பட்டு வரும் மரங்கள். அவற்றிலிருந்து எடுக்கப்படும் பலவிதப் பொருள்கள், மருந்தாகவும் பூச்சிக்கொல்லியாகவும் பயனாகின்றன.

1970-களில் இந்தியாவிலிருந்து மரத்தடிகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அமெரிக்க கம்பெனியின் கடைக்கண் பார்வை இந்திய வேப்ப மரங்களின்மீது விழுந்தது. கமுக்கமாக வேம்பிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு பூச்சிக்கொல்லியை அந்த மர-வியாபாரி அமெரிக்கச் சுற்றுப்புறச்சூழல் அமைப்பிடம் பரிசீலிக்கக் கொடுத்தார். 1990-ல் அமெரிக்க கம்பெனியான W R Grace, இந்த மருந்துத் தயாரிப்பு முறையை அவரிடமிருந்து வாங்கியது. பின்னர் தானே இந்தியாவுக்கு வந்து, ஏன் இன்னும் விரிவாக வேம்புவை பயன்படுத்தக்கூடாது எனத் திட்டமிட்டது. இந்தியாவில் வேம்புவை ஆராய்ச்சி செய்த அமைப்புகள் பெரும்பாலும் காந்திய அமைப்புகளே. பாரம்பரிய அறிவை மதிக்கும் அவைதவிர, விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சில தொழிற்சாலைகளே வேம்புவைப் பயன்படுத்தின. இந்தப் பயன்பாட்டை விட்டுவிடச் சொல்லி இந்த அமைப்புகளை W R Grace வற்புறுத்தியது: “எங்களிடம் வேப்பங்கொட்டைகளைத் தாருங்கள். உள்ளூர்ச் சந்தையைக் காட்டிலும் நல்ல விலை கொடுத்து உங்களிடமிருந்து நாங்கள் வாங்கிக்கொள்கிறோம். நாங்கள் எங்கள் முறையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் உற்பத்தி செய்து உங்கள் மக்களுக்கு விற்கிறோம். அதிலும்கூட நீங்கள் இடைத்தரகராக இருந்துகொள்ளலாம். டாலர்களில் சம்பாதிக்கலாம்.” ஆனால் இதற்கும் எதிர்ப்பையே அந்த கம்பெனி சந்திக்கவேண்டியிருந்தது. தன் முயற்சியில் சற்றும் சளைக்காத தந்திரத்துடன் வேப்பங்கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் பூஞ்சணக்கொல்லிக்கு அந்த கம்பெனி அமெரிக்காவில் காப்புரிமை கோரியது. சொல்லிவைத்தாற்போல 1992-ல் அமெரிக்க தேசிய ஆராய்ச்சி மையம் “மேற்கத்திய கார்ப்பரேட்டுகளுக்கு முடிவில்லாத சரக்குகளை உருவாக்கும் ஓர் அற்புத மரம்” என வேப்ப மரத்தை அடையாளம் காட்டியது.

W R Grace தயாரித்த பூஞ்சணக் கொல்லியை தயாரிக்க, வேப்பங்கொட்டைகளை அதிக அளவில் மிகக்குறைந்த விலையில் இந்தியாவிலிருந்து வாங்க உள்ளூரில் ஏஜெண்ட் பிடித்தது. இந்திய சுற்றுப்புற சூழலியலாளர் வந்தனா சிவாவும் ஏறக்குறைய 200 அரசு சாரா தன்னார்வ அமைப்புகளும் இதற்கு எதிராகக் களமிறங்கினர்.

மே 10 2000: வேம்பு அடிப்படையிலான வேதிப்பொருட்கள் குறித்து W R Grace-ம் அமெரிக்க அரசும் கூட்டாகப் பதிவு செய்திருந்த காப்புரிமையை, ஐரோப்பியக் காப்புரிமை அமைப்பு, பாரம்பரிய அறிவினைக் களவாணித்தனமாக எடுத்துக்கொண்டு செய்யப்பட்டது எனச் சொல்லித் தள்ளுபடி செய்தது. இது இந்தியாவுக்கு மட்டுமல்லாது வளரும் நாடுகளுக்கே கிடைத்த வெற்றி.

ஆனால் அது ஒரு தொடக்கம் மட்டுமே.

மேலதிக விவரங்களுக்கு:

* ஆர்.ஹெச்.ரிச்சார்யா, ‘The Crisis in Rice Research’ : ‘ The Crisis in Modern Science’ மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுத்தாள்,பெனாங்க் 1986
* Noël Kingsbury , Hybrid: The history and science of plant breeding, University of Chicago Press, 2009
* க்ளாடே அல்வர்ஸ், The Great Gene Robbery, Illustrated Weekly of India, 23-மார்ச்- 1986
* சதீஷ் குமார், Biodiversity and food security: Human ecology for globalization, Atlantic Publishers & Distributors, 2002
* வந்தனா சிவா, Protect or plunder? Understanding intellectual property rights, Zed Books, 2001

9 comments so far

 1. dr rajmohan
  #1

  அடுத்து வீட்டு களவாணிகளா? கலக்குங்க !!

 2. dr.sidharth
  #2

  உரத்த சிந்தனை

 3. களிமிகு கண்பதி
  #3

  //….நமது கட்டாக் இருக்கும் ஒரிஸாவின் தெய்வம் பூரி ஜகன்னாதர். அவருக்கு ஒவ்வொரு நாளும் புதிதாக அறுவடை செய்த நெல்லில் நைவேத்தியம் செய்ய வேண்டுமென்பது ஐதீகம். அந்த ஐதீகமே பல நெல்வகைகளைக் காப்பாற்றியிருக்கிறது. அந்த நெல்வகைகள் பல சூழல்களில் பஞ்சங்களிலிருந்து பல மானுடக்குழுக்களைக் காப்பாற்றியிருக்கின்றன….//

  கோயிலுக்கு பலி தரப்பட்ட எந்த உயிரினமும் அழிந்ததில்லை.

 4. ஜெயக்குமார்
  #4

  தமிழ் பேப்பர் சிக்கலான கட்டுரைகளைக்கூட ஜனரஞ்சகமாக எழுதும் அருமையான தளமாகியிருக்கிறது. இந்தியா தனது பாரம்பரிய இயற்கைச் சொத்துக்களைக் காப்பாற்ற பட்ட பாட்டை இன்றைய தலைமுறையினரில் எத்தனைபேர் அறிந்திருப்பர்?

  நல்ல பதிவு.

 5. vijayaraghavan
  #5

  அரசியல்வாதிகள்,- வீணாகும் அரிசியை பசித்தவனுக்கு தரமாட்டார்கள்,
  பசித்தவன் சேமித்த அரிசியை அடுத்தவனுக்கு புடுங்கி கொடுப்பார்கள்.

 6. பிரகாஷ்
  #6

  மேற்குக் களவாணிகள் நம் கைக்கடிகாரத்தை நம்மிடமிருந்து வாங்கி,நமக்கே மணி சொல்லி அதற்குக் கூலியும் வாங்கிக் கொண்டு,நம் கைக்கடிகாரத்தை அவர்களுடையது என்று உரிமை கொண்டாடுவர்.
  2000 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வறிக்கையின் படி US Patent and Trade Mark Office (USPTO)-இன் ஆவணங்களில் 90 மூலிகைச் செடிகளைப் பற்றி 4896 மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.இதில் 80% க்கும் மேலாக மேற்கோள் காட்டப்பட்டிருப்பது 7 முக்கிய மூலிகைச் செடிகளையே. இந்த ஏழும் இந்தியாவிலிருந்து தோன்றியவையே.
  அவைகள் முறையே…Kumari, ‘Mustaka, Tamraparna, Garjara, Atasi, Jambira, Kharbuja என்பன.
  இந்த ஆய்வறிக்கையில் வெளிவந்த இன்னுமொரு அதிர்ச்சியூட்டும் விஷயம்,மூலிகைச் செடிகள் வகையில் அவர்கள் செய்த 762 காப்புரிமைகளில் 360 செடிகளை நம் பாரம்பரிய வகை மூலிகைச் செடிகளில் வகைப் படுத்தலாம் என்பது தான்.
  வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதாய் வல்லரசுகள் பதிவதே காப்புரிமை என்னும் நிலையை மாற்றி,நம் பாரம்பரியச் சொத்தை மீட்க வேண்டும்.
  இந்த விஷயத்தில் இந்தியாவின் குரல் இன்னும் உரத்த குரலாய் சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

 7. பேரரசன்
  #7

  மிக நல்ல கட்டுரை..!

  ஏன் இது மாதிரி கட்டுரைகள் வெகுஜன பத்திரிக்கைகளில் வருவதில்லை..?

 8. Kannan
  #8

  Aravindan.. Good one.

  You can see the interview of Richaria’s here,

  http://www.satavic.org/richharia.htm

 9. P.VINCENT
  #9

  எனது வலைப்பூவில் இதனை http://maravalam.blogspot.in/2012/07/2.html என்ற தொடுப்பில் வெளியிட்டிருக்கிறேன்.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: