தோழர்

அத்தியாயம் 46

உலகெங்கும் நடைபெற்றுவரும் தேசியப் போராட்டங்கள் குறித்து ஆழமாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, வரலாற்று நூல்களைத் தேடிப்பிடித்து படித்துக்கொண்டிருந்தார் எங்கெல்ஸ். துருக்கியிலும் ஆஸ்திரியாவிலும் உள்ள ஸ்லாவ் மக்கள் குறித்து 1853-56 காலகட்டத்தில் விரிவாகப் படித்து தெரிந்துகொண்டார் எங்கெல்ஸ். ஸ்லாவ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் பற்றியும், வரலாற்றில் அவர்கள் வகித்த பாத்திரம் பற்றியும், அவர்களுக்கு எதிரான ஜார் அரசாட்சி பற்றியும் அவர் ஆழமாக வாசித்தார்.

பிரிட்டிஷ் நூலகத்துக்கு அவ்வப்போது சென்றுவந்த மார்க்ஸ், எங்கெல்ஸுக்குத் தேவைப்பட்ட நூல்களையும் அவருக்கான குறிப்புகளையும் தந்து உதவினார். ரஷ்ய வரலாறு பற்றி எங்கெல்ஸ் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்னென்ன என்பதை மார்க்ஸ் ஒரு நீண்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். கிழக்குலக நாடுகள் பற்றிய அவர் ஆர்வம் அதிகாரித்துக்கொண்டிருந்தது. அதே சமயம், தனக்கு அணுக்கமான துறையான, மதக் கோட்பாடுகளின் வரலாறு பற்றியும் அவர் வாசித்துக்கொண்டுதான் இருந்தார்.

கடவுள்மீதான பிடிப்பு விலகியிருந்தாலும் பைபிள்மீதான அவர் ஆர்வம் விலகிவிடவில்லை. உதாரணத்துக்கு, வேதாகமத்தை அணுகும்போது, அதை ஒரு புனித நூலாக அல்லாமல், தொன்மம் பற்றியும் வரலாறு பற்றியும் பண்டைய மக்கள் பற்றியும் தெரிந்துகொள்வதற்கான ஒரு கருவியாகவே கருதினார். அரபு மக்கள் பற்றியும் யூதர்கள் பற்றியும் தொல் பழங்குடியின மக்கள் பற்றியும் தகவல்களை அவர் திரட்டிக்கொண்டிருந்தார்.

முன்னரே பரிச்சயமாகியிருந்த பெர்ஷியனையும் அரபியையும் மீண்டும் படிக்கத் தொடங்கியிருந்தார் எங்கெல்ஸ். பெர்ஷியன் குழந்தை விளையாட்டு போல உள்ளது என்று மார்க்ஸுக்கு எழுதினார். ‘முழுவதும் கற்றுத் தேற மூன்று வாரங்கள் ஒதுக்கியிருக்கிறேன்.’ கோதிக், நார்டிக் உள்ளிட்ட பண்டை ஜெர்மானிய மொழிகளைக் கற்பதற்கும் நேரம் ஒதுக்கினார். பிறகு, இயற்கை அறிவியல். இயற்பியல், உயிரியில், ஒப்பீட்டு உடற்கூறியல் ஆகியவற்றையும் தெரிந்துகொள்ள முயன்றார். வரலாறையும் அறிவியலையும் ஒன்றாக அவர் அணுகியதன் காரணம், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை இயற்கை அறிவியலில் பொருத்திப் பார்க்கமுடியுமா என்பதைத் தெரிந்துகொள்ளவே. உயிரணு பற்றி புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டிருந்த சமயம் அது என்பதால் எங்கெல்ஸும் அதில் ஆர்வம் காட்டினார்.

சார்லஸ் டார்வின் எழுதி வெளிவந்திருந்த On the Origin of Species புத்தகத்தை 1850களின் இறுதியில் எங்கெல்ஸ் வாசித்தார். டார்வினின் புத்தகம் நவம்பர் 24, 1859 அன்று வெளிவந்தது. தன் கண்டுபிடிப்புகளைத் தன்னுடன் மட்டுமே வைத்துக்கொள்ள விரும்பிய டார்வின் தன் முடிவை அவசரமாக மாற்றிக்கொண்டு புத்தகத்தை வெளியிட ஒப்புக்கொண்டார். அதற்குக் காரணமாக இருந்தது அதே ஆண்டு தொடக்கத்தில் ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ் என்னும் சக இயற்கையியலரிடம் இருந்து வந்து சேர்ந்த கடிதம். டார்வினைப் போலவே வாலஸும் உயிர்களின் தோற்றம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார். இருபது ஆண்டு கால ஆய்வின் முடிவுகளைச் சுருக்கமாக எழுதி வெளியிட வாலஸ் முடிவு செய்திருந்தார். தன் முடிவை அவர் டார்வினுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். சார்லஸ் டார்வின் வாலஸை ஒரு போட்டியாளராகக் கருதியிருக்கவேண்டும். தனது ஆய்வுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், எதற்காக ரகசியமாக அவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்கவேண்டும். வாலஸின் நூல் வெளிவருவதற்குள் தன்னுடையது வெளியாகவேண்டும் என்று விரும்பிய டார்வின், நேரத்தைக் கடத்தாமல் ஒரு பதிப்பாளரை அணுகி, தன் பிரதியை ஒப்படைத்தார்.

டார்வினின் புத்தகம் வெளிவருவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான் கார்ல் மார்க்ஸ் எழுதிய A Contribution to the Critique of Political Economy வெளியானது. ஒரு வகையில், இரண்டு நூல்களும் சமூகத்தில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் விருப்பத்தின் விழைவோடு கொண்டுவரப்பட்டவை. முதலாளித்துவத்தின் தத்துவார்த்த அடித்தளத்தை உடைத்து நொறுக்கும் நோக்கத்துடன் மார்க்ஸ் எழுத ஆரம்பித்த ஆய்வுக் கட்டுரைகளின் ஆரம்ப அத்தியாயங்களையே மார்க்ஸ் வெளியிட்டிருந்தார். அதே பொருளில், அவர் மேற்கொண்டு பின்னர் எழுதவிருந்தார்.

கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளியான இரு நூல்களுள் ஒன்று மட்டுமே தன் நோக்கத்தில் துரித வெற்றியை அடைந்தது. மார்க்ஸின் நூல் பின்தங்கியது. ‘என்னை விமரிசிப்பார்கள் என்றும் ஏசுவார்கள் என்றும் எதிர்பார்த்தேன். நிச்சயமாக, உதாசீனப்படுத்தப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை.’ தன் புத்தகம் வெளிவந்துவிட்டதா இல்லையா என்பதையே தன் பதிப்பாளருக்கு எழுதிக் கேட்கவேண்டிய நிலையில் இருந்தார் மார்க்ஸ். டார்வினின் புத்தகம் 1250 பிரதிகள் அச்சிட்டிருந்தார்கள். இருபத்து நான்கு மணி நேரத்தில் அத்தனை பிரதிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்கிறார்கள்.

டார்வினின் நூலை வாசித்து, உள்வாங்கி முதலில் வினையாற்றியவர் எங்கெல்ஸ். தன் கருததை டிசம்பர் 12ம் தேதி மார்க்ஸுடன் அவர் பகிர்ந்துகொண்டார். ‘நான் இப்பொழுது படித்துக்கொண்டிருக்கும் டார்வின் மிகச் சிறந்தவர்… வரலாற்று வளர்ச்சியை இதுவரை யாரும் இயற்கையில் இவ்வளவு அற்புதமாகப் பொருத்திப் பார்க்கவில்லை. அதுவும், இந்த அளவுக்கு வெற்றிகரமாக.’

அதற்கு அடுத்த மாதம், மார்க்ஸ் டார்வினின் நூலை வாசித்தார். எங்கெல்ஸின் கருத்தையே அவரும் பிரதிபலித்திருந்தார். ‘(உடல்நலக் குறைவு ஏற்பட்ட சமயத்தில)நான் வாசித்த நூல்களில் இயற்கை தேர்வு குறித்து டார்வின் எழுதிய நூலே சிறந்தது…மிக முக்கியமானது; என் நோக்கத்தோடு ஒத்துப்போவது. வர்க்கப் போராட்ட வரலாற்றுக்கு இயற்கை அறிவியலில் ஓர் அடிப்படையை உருவாக்கிக்கொடுக்கிறது.’

பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துக்கும் டார்வினின் கொள்கைக்கும் உள்ள உறவையும் பிணைப்பையும் முதன்முதலில் வெளிச்சம் போட்டுக் காட்டியவர் மார்க்ஸ். Karl Marx: Biographical Memoirs என்னும் நூலில் ஜெர்மானிய எழுத்தாளரான Wilhelm Liebknecht குறிப்பிடும் விஷயங்கள் முக்கியமானவை. ‘டார்வினின் கண்டுபிடிப்புகளில் உள்ள முக்கியத்துவத்தை முதல் முதலாகப் புரிந்துகொண்டவர் மார்க்ஸ். 1859ம் ஆண்டுக்கு முன்னரே, டார்வினின் முக்கியத்துவத்தை அவர் அறிந்துவைத்திருந்தார். டார்வின் தன் கொள்கையை பொதுவெளியில் சமர்ப்பித்தபோது, மாதக்கணக்கில் மக்கள் அவர் அளித்த புரட்சிகர அறிவியல் சக்தியைப் பற்றியே விவாதித்தார்கள். மார்க்ஸ், டார்வினின் படைப்பை அறைமனத்துடன்தான் ஏற்றார் என்றும் அதன் மீது பொறாமை கொண்டிருந்தார் என்றும் பேசுபவர்களுக்கு நான் அழுத்தமான மறுப்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’

எங்கெல்ஸ், டார்வினை வேறு திசையில் இருந்து அணுகினார். இறைவாதிகளையும் கடவுள் நம்பிக்கையாளர்களையும் தகர்க்கவல்ல ஓர் ஆயுதமாக டார்வினின் படைப்பை அவர் கண்டார். இயற்கையின் அதிசயங்களை கடவுளே உருவாக்கினார் என்னும் வாதத்தை உடைக்க டார்வினின் இயற்கை தேர்வை அவர் முன்வைக்க விரும்பினார்.

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் டார்வினின் கண்டுபிடிப்பைக் கருத்துமுதல்வாதத்துக்கு எதிரான ஒரு சித்தாந்தமாகவே கருதினார்கள். உலகம் பற்றியும் உயிர்கள் பற்றியும் இதுவரை மனிதகுலம் சிந்தித்து வந்ததற்கு மாறாக புதிய திசையில் சிந்திப்பதற்கு டார்வின் உதவுவார் என்று அவர்கள் நம்பினார்கள். இயற்கையை, அதிசயங்களை கடவுள் படைக்கவில்லை. உலகம் என்பது கடவுளின் திட்டம் அல்ல. இயற்கையையும் மனிதர்களையும் கடவுளைக் கொண்டு விளங்கிக்கொள்ளமுடியாது. மனித குல முன்னேற்றத்துக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இயற்கையின் வளர்ச்சிக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. இந்த இரண்டையும் கடவுள் எழுதவில்லை.

ராணுவ அறிவியல் என்னும் துறைமீதும் எங்கெல்ஸுக்குத் தீராக் காதல் இருந்தது. பாட்டாளி வர்க்கத்தைத் திரட்டி அவர்களைப் போர்க்குணம் மிக்க ஒரு சக்தியாகத் திரட்ட, ராணுவ வழிமுறைகளையும் சூட்சுமங்களையும் கற்றுத்தேறவேண்டும் என்று எங்கெல்ஸ் நினைத்தார். ஜெர்மனி, பவேரியா, ஆஸ்திரியா, பெல்ஜியம் போன்ற பல நாடுகளின் வரைபடங்களை ஆழமாக வாசித்து கிட்டத்தட்ட மனனம் செய்துகொண்டார் எங்கெல்ஸ். ‘அடுத்த தாக்குதலின்போது தேவைப்படும்’ என்று சொல்லிக்கொண்டார்.

ஒரு முழுமையான உலகப் பார்வையை உருவாக்கிக்கொள்ளவே அறிவியல், அரசியல், போர் தந்திரம், தத்துவம், மதம், மொழியியல் போன்ற துறைகளை மார்க்ஸும் எங்கெல்ஸும் கற்று வந்தனர். ஒவ்வொரு சிறு வாசிப்பையும் சமூகத்தின்மீது பொருத்திப் பார்க்க அவர்கள் முயன்றனர். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தின்போது, ஒரு பெருளாதார வீழ்ச்சியின் நிழலை அவர்கள் 1856ல் கண்டறிந்தனர். அதன் அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருந்தன.

செப்டெம்பர் இறுதியில் எங்கெல்ஸ் எழுதினார். ‘இந்த முறை இதற்கு முன் கண்டிராத அளவுக்கு தீர்ப்பு நாள் தீவிரமாக இருக்கப்போகிறது. அனைத்து ஐரோப்பிய தொழிற்சாலைகளும் பொடிப் பொடியாகச் சிதறப்போகின்றன. சந்தைகளில் பண்டங்கள் பிதுங்கப்போகின்றன. சொத்துள்ளவர்கள் அனைவரும் பாதிக்கப்படவிருக்கிறார்கள். பூர்ஷ்வா வர்க்கம் திவாலாகப்போகிறது. யுத்தமும் அழிவும் நெருங்கிவிட்டது. 1857ல் இது நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.’ எங்கெல்ஸின் நம்பிக்கை பொய்க்கவில்லை.

(தொடரும்)

0

மருதன்

One comment

  1. mani
    #1

    marudhan sir,

    I already told u. இது ஒரு fixed width template. இதை fluid widthஆக மாற்றச் சொல்லுங்கள். என் கம்யூட்டர் மிக பெரிதாக இருந்தாலும் கட்டுரையின் width நீண்டு கொள்வதில்லை. இது easyயே. Pixelலில் உள்ள widthத்தை percentageஜுக்கு மாற்ற வேண்டும். (as usually u dont need to accept this comment)

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: