அண்ணா நூற்றாண்டு நூலகம்: நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

 

‘என்ன சொல்வதென்றே தெரியவில்லை! நண்பர் ஒருவரை அழைத்துச் செல்வதற்காக முதல் முறையாக இன்றுதான் வந்தேன். இதை அரசு நூலகம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஸ்பென்சர்ஸ், எக்ஸ்பிரஸ் அவென்யூ, சிட்டி சென்டர் என்று பல ஷாப்பிங் மால்களுக்குச் சென்றிருக்கிறேன். இத்தனை வசதிகளை எங்கும் பார்த்ததில்லை!’ உமருக்கு இது முதல் வருகை என்பதால் அவரால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளமுடியவில்லை. ‘இனி ஒவ்வொரு வாரமும் குழந்தைகளுடன் வந்திருந்து முழு நாள் செலவிடப்போகிறேன்.’ நூலக இடமாற்றம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  ‘வெளிநாடுகள் பலவற்றுக்குச் சென்றிருக்கிறேன். உண்மையாகவே இது முதல் தரம்.  இந்தியாவுக்கே பெருமை அளிக்கக்கூடிய இந்த அடையாளத்தை என்ன நடந்தாலும் விட்டுக்கொடுக்கக்கூடாது.’

பிரஸிடென்சி கல்லூரியைச் சேர்ந்த பார்வை குறைபாடு கொண்ட 70 மாணவர்களுக்கு அண்ணா நூலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள பிரைல் பகுதி இரண்டாவது வீடாக மாறியிருக்கிறது.  தமிழ் செவ்விலக்கியத்தில் முனைவர் படிப்பு படிக்கும் மாணவர் கே. சுதன் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு மணி நேரம் இங்கே செலவிடுகிறார். ‘நற்றினை பற்றிய நூல்களைத் தேடும்போது, பேராசிரியர் பொற்கோவின் ஆடியோ ரிக்கார்டிங் ஒன்று கிடைத்தது. என்னால் விரைவாக குறிப்புகள் எடுக்கமுடியாது என்பதால் இந்த ஆடியோ பதிவுகள் மிகவும் உபயோகமாக இருக்கின்றன. நல்ல பல பிரைல் புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள். என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உபயோகமான இடம் இது.’ (தி இந்து, நவம்பர் 11).

பார்வைத் திறன் தேவைப்படாத தொடுதிறை கணிணிகள் (NVDA : Non-visual Desktop Access) இப்பகுதியின் முக்கியமான ஓர் அம்சம். எழுத்துகளை ஒலிகளாக மாற்றியமைக்கக்கூடிய மென்பொருளைப் பயன்படுத்தி பல நூல்களை கேட்டு மகிழ்கிறார்கள். ‘ஜெயகாந்தனின் நாவலை டெக்ஸ்ட் டு ஸ்பீச் முறையில் வாசித்தேன். மறக்கமுடியாத அனுபவம்.’ என்றார் ஒரு மாணவர்.

இரண்டாவது மாடியில் பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தளம் அமைந்துள்ளது. சில நிமிடங்கள் சுற்றிவர அனைவரும் தற்போது அனுமதிக்கப்படுகிறார்கள் என்றாலும், எதிர்காலத்தில் ஒரு குழந்தையுடன் ஒரு மூத்தோர் மட்டுமே உள்நுழையலாம். குளிர் அறையின் நடுவே கண்ணைப் பறிக்கும் அழகுடன் படர்ந்து விரிந்திருக்கும் அந்த பிளாஸ்டிக் மரத்தின் அடியில் சுகமாக குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டு பக்கங்களில் விரிந்திருந்த ஒரு காண்டாமிருகத்தின்மீது தன் இரு கைகளையும் படரவிட்டு ரசித்துக்கொண்டிருந்தாள் ஒரு சிறுமி.

ஒவ்வொரு மூலையும், ஒவ்வொரு அடுக்கும் குழந்தைகள் நினைவில் அழுத்தமாகப் பதிந்திருந்ததால் ‘டாம் அண்ட் ஜெர்ரி இடம்’ எங்கிருக்கிறது என்றும் ‘அமர் சித்ர கதா வரிசை’ எங்கிருக்கிறது என்றும் ‘ரோபோ நாய் புத்தகம்’ எங்கிருக்கிறது என்றும் அவர்களுக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கிறது. சென்றமுறை படிக்க ஆரம்பித்து இடையில் நிறுத்திய பக்கத்தைத் தேடிப்பிடித்து, விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறார்கள்.

கார்டூன்ஸ், பஞ்ச தந்திரக் கதைகள், நாடுகள், தலைவர்கள், அறிவியல், பொது அறிவுக் களஞ்சியம், தேவதைக் கதைகள் என்று ஆயிரக்கணக்கான நூல்கள் பொந்து போன்ற அடுக்குகளில் சீராக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. கட்டைவிரல் அளவுக்கு எழுத்துகள் கொண்ட பெரிய புத்தகங்களைக் கண்கள் விரிய குழந்தைகளும் பெரியவர்களும் ஒருங்கே எடுத்து பார்க்கிறார்கள். வண்ண வண்ண எபிசிடி, ஸ்பைடர் மேன், டின்டின், கோஸ்ட் ரைடர் தொடங்கி டால்ஸ்டாய், ஆஸ்கர் ஒயில்ட், மார்க் ட்வைன் வரை வயதுக்கேற்ற புத்தகங்கள் காணக்கிடைக்கின்றன.

சனிக்கிழமை காலை 10.30 மணிக்குள் கிட்டத்தட்ட நூறு குழந்தைகள் திரண்டுவிட்டார்கள். பள்ளி மாணவர்கள் பலர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இங்கே தவறாமல் வந்துவிடுகிறார்களாம். மினி சறுக்கு மரம், சீசா என்று சிறு விளையாட்டுத் திடலும் உள்ளது. குழந்தைகள் பிரிவில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் புத்தகங்கள் உள்ளன. பெரும்பாலானவை ஆங்கிலம். தமிழ் மற்றும் பிற மொழி ஆக்கங்கள் சில ஆயிரம் இருக்கும். பிரிக்கப்படாத புத்தகக் கட்டுகள் ஒரு சிறு மலை போல் ஓரத்தில் காத்திருக்கின்றன. ‘மேலும் பல புத்தகங்களை ஆர்டர் செய்திருக்கிறோம், எப்போது வேண்டுமானாலும் வரலாம்.’ என்றார் அந்தப் பகுதியின் பொறுப்பாளர்.

குழந்தைகளின் உயரத்துக்கு ஏற்ற புத்தக அடுக்குகள், அமர்ந்து வாசிப்பதற்கு ஏற்ற வட்ட மேசைகள், பல வண்ண நாற்காலிகள் என்று கவர்ந்திழுக்கும் அம்சங்கள் பற்பல. பதினான்கு வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தனியோர் உலகம் அது. டிவி, கம்ப்யூட்டர் கேம்ஸ் என்றே வளர்ந்து பழகிய ஒரு தலைமுறைக்கு வாசிப்பின் ஈர்ப்பை இதைவிட சிறந்த முறையில் அறிமுகப்படுத்தமுடியாது.

நூலகப் பதிவேட்டின்படி ஞாயிற்றுக் கிழமைகளில் சராசரியாக 2500 பேர் வருகை தருகிறார்கள். முந்தைய வாரத்தோடு ஒப்பிடும்போது இது இரு மடங்கு அதிகரிப்பு. முதல் முறையாக வருபவர்களின் எண்ணிக்கையும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது ஒரு காரணம். பள்ளி, கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து, குடும்பமாக வருபவர்களின் கூட்டமும் அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி அக்டோபர் வரை 26,500 பேர் நூலகத்துக்கு வருகை தந்திருக்கிறார்கள். (தி இந்து, நவம்பர் 9.)

செய்தித் தாள்கள், பத்திரிகைகள் தனியே ஒரு தளத்தில். கொண்டுவரும் புத்தகங்களைப் படிக்க ஒரு பிரிவு. மற்ற நூலங்களில் இல்லாத ஒரு வசதி இது. எப்போது சென்றாலும் இங்கே கூட்டம் நிரம்பியிருக்கிறது. ஒரு தளம், தமிழ் நூல்களுக்கானது. குடும்ப நாவல்கள், துப்பறியும் கதைகள், இலக்கியம், கவிதை, பயண நூல்கள், கட்டுரைத் தொகுப்புகள், செவ்விலக்கியம், இலங்கைத் தமிழர் படைப்புகள், ஆன்மிகம், அம்பேத்கர் தொகுப்புகள் (பெரியார் அகப்படவில்லை!), வரலாறு என்று மாறுபட்ட ரசனைகளுக்கேற்ற தலைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. நியூ செஞ்சுரி, கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு, அலைகள், விடியல் என்று பல்வேறு பதிப்பாளர்களின் புத்தகங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது நான்கு பிரதிகள் துறைவாரியாகப் பிரித்து அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடுக்கிலும் எழுத்தாளர்களின் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளதால், வண்ணதாசனையோ, ஜெயமோகனையோ, ஜெயகாந்தனையோ, பொன்னீலனையோ தேடியெடுப்பது சிரமமாக இருக்காது.

‘பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று ஒவ்வொரு நாளும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். நூலகத்தை மாற்றப்போவதாக அறிவிப்பு வந்தவுடன், உடனே பார்த்துவிடவேண்டும் என்று முடிவு செய்து வந்துவிட்டேன்.’ எம். சரண்யா சென்னை பல்கலைக்கழகத்தில் ஃபார்மகாலஜி படிக்கும் மாணவி. ‘நான் பெரும்பாலும் ஐந்தாவது தளத்தில்தான் இருப்பேன்’ என்கிறார் டாக்ஸிகாலஜி படிக்கும் பொற்பாதம். ‘என் துறை சார்ந்த புத்தகங்கள் என் கல்லூரி நூலகத்தைவிட அதிகமாக இங்கே இருக்கின்றன.’ ‘நூலகங்கள் மட்டுமல்ல, புத்தகக் கடைகளிலும்கூட கிடைக்காத பல எஞ்சினியரிங் புத்தகங்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன!’ என்கிறார் மெக்கானிகல் எஞ்சினியரிங் மாணவர், செல்வம். (தி இந்து, நவம்பர் 9).

‘நல்ல வெளிச்சம், இதமான குளிர், அற்புதமான மேசை, நாற்காலிகள் என்று வாசிப்பவர்களுக்கான சொர்க்கம் இது. வீடு, ஆபிஸ் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மணிக்கணக்கில் இங்கே வந்து படிக்கமுடியும்.’ என்கிறார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பார்கவி. ‘எனக்குத் தெரிந்து, சாஸ், ஸ்டாடிஸ்டிக்ஸ், புரோகிராமிங் என்று என் பணிக்குத் தேவைப்படும் அத்தனை புத்தகங்களையும் இப்படி ஒரே இடத்தில் இதற்கு முன்னால் பார்த்ததில்லை.  ஒவ்வொரு புத்தகமும் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் இருக்கும். வசதியில்லாதவர்களுக்கு இது பொக்கிஷம்.’

நூலகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள குறைந்தது நான்கைந்து முறை வரவேண்டும் என்று நினைக்கிறேன். தமிழுக்கான தளம் தவிர்த்து பிற தளங்களில் துறை வாரியாக ஆங்கில நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மதங்கள் என்னும் பிரிவில், சூஃபிஸம் பற்றிய களஞ்சியம் மட்டும் இருபது பாகங்களில் உள்ளது. இந்தியத் தத்துவம் என்றால் வேதங்கள், உபநிஷத்துகள், லோகாயதம், நியாயா தத்துவம், வைசேஷிகம், சாங்கியம், சமணம், பௌத்தம், பகவத் கீதை, யோகம், வேதாந்தம், பக்தி இயக்கம் என்று ஒவ்வொரு தலைப்பிலும் நூற்றுக்கணக்கான பிரதிகள் உள்ளன. எந்தவொரு தேவாலயமும் பொறாமை கொள்ளும் வகையில் கிறிஸ்தவம் குறித்தும் தேவாலயங்களின் வரலாறு குறித்தும் பல ஆயிரம் நூல்கள். Baptists, Calvinism, Adventists, Puritans, Mormons, Pietism, Methodists, Lutherans, Anglicanism, Syrian Malabar Nasranis, Oriental Orthodox, Assyrian Church, Syrian Rites, Saint Thomas Christian groups, Vatican Council History, Restorationism என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

ஐந்தாவது தளத்தில் உள்ள துறைகள் இவை. Natural Sciences, Mathematics, Astronomy, Physics, Chemistry, Earth Sciences, Palaeontology, Biology, Medicine & Health, Botany, Zoology. கன்னிமரா உள்ளிட்டநூலகங்களிலும் இந்தத் துறைகள் கிடைக்கும் என்றாலும் இங்குள்ள வகைகளும் பிரிவுகளும் பிரமிக்க வைக்கக்கூடியவை. வேறு எங்கும் காணவியலாத பல துறைகள் இங்கே அநாயசமாக நிறைந்துள்ளன. உதாரணத்துக்கு, Metal Working, Lumber (Wood) Technology, Paper Technology, Elastomers, Precision Instruments, Printing Technology, Beverage Technology, Design Source Books, Video Production, Stenciling, Glass Art, Remote Sensing, Military Engineering, Calligraphy. பெயருக்கு ஒரு சில நூல்கள் அல்ல, ஒவ்வொன்றையும் பற்றிய மிக விரிவான சேகரிப்புகள் இங்குள்ளன. Metal Working என்று எடுத்துக்கொண்டால், Casting, Mechanical Working, Welding என்று உள்ளுக்குள் புகுந்து தலைப்புகள் விரிகின்றன.

இசை என்று எடுத்துக்கொண்டால், Instruments, Classical, Pop, Jazz, Country, Blues, Instrumental Ensembles, Keyboard Instruments, Electrophones, Percussion Instruments, Stringed Instruments, Wind Instruments, Recreational and Performing Arts என்று பிரிவுகள் படர்கின்றன. ஒவ்வொன்றிலும் குறைந்தது சில நூறு நூல்கள். மேஜிக் பற்றி எந்தவொரு புத்தகத்தையும் இதுவரை நான் பார்த்ததில்லை. இங்கே பி.சி. சர்க்கார் தொடங்கி பல நாடுகளில் உள்ள புகழ்பெற்ற நிபுணர்கள் பற்றியும் அவர்களுடைய கலை பற்றிய விவரங்களும் வரலாறுகளும் தனி அடுக்குகளில் உள்ளன.

கன்னிமராவில் வரலாற்றுக்கு ஒரு வரிசை இருக்கும். அதில் தோராயமாக பத்து அடுக்குகள் இருக்கும். ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா என்று பிரித்து வைத்திருப்பார்கள். இங்கே வரலாற்றுக்குத் தனியொரு தளம். ஏழாவது மாடி முழுவதும் வரலாற்று நூல்கள். Historical Periods என்னும் வகையில் நாற்பதுகள், ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள் என்று தேடிக்கொண்டே போகலாம். லிபியா, எகிப்து, சூடான், கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, காமன்வெல்த் நாடுகள் என்று ஒவ்வொரு நாட்டுக்கும் குறைந்தது நூறு, நூற்றைம்பது நூல்கள். அல்ஜீரியா பற்றியும் மொராக்கோ பற்றியும் பெரு பற்றியும் பாலினேஷியா பற்றியும் ஆர்க்டிக் தீவுகள் பற்றியும் இங்குள்ளது போன்ற நூல்களை வேறு எங்கும் கண்டதில்லை.  நூற்றாண்டுகள் அடிப்படையிலும் காலவரிசையிலும்கூட பிரிவுகள் உள்ளன. 6th century to 12th centuries, 13th century, 14th century என்று தொடங்கி Modern History  வரை தனித்தனி வரிசைகள். இரண்டாம் உலகப் போர் என்று எடுத்துக்கொண்டால் சில நூறு நூல்கள். படங்களும் வரைடபங்களும் அடங்கிய பெரிய அளவு புத்தகங்கள் தனி.

சிறிது நடந்தால், Earth – Physical Geography, Historical and persons treatment.  நாடு வாரியாக, லோன்லி பிளாணட் வழிகாட்டிகள். அது போதாது என்றால் வேறு இரு பதிப்பகத்தாரின் நாடு வாரியான வழிகாட்டிகளை நாடலாம். அரசியல் அறிவியல் பிரிவில் Local Government, City Government, Political Situation & Conditions போன்ற தலைப்புகள் கிடைக்கின்றன.  Political Situations என்னும் பிரிவில், ரஷ்யா, நார்வே, ஸ்வீடன், கிரீஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இரான், மத்திய ஆசியா, பிலிப்பைன்ஸ், போலந்து என்று நாடுவாரியாக வரிசைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலப் புதினப் பிரியர்களுக்கு ஒரு மாடிப் புத்தகங்கள் காத்திருக்கின்றன. அமெரிக்க, பிரிட்டிஷ், லத்தீன் அமெரிக்க, இந்திய இலக்கியங்களுக்கு இணையாக, ஆப்பிரிக்கா, சீனா, ஜப்பான், மொராக்கோ, ஜெர்மன் நாட்டுப் படைப்புகளும் நிறைந்துள்ளன. மற்ற தளங்களைக் காட்டிலும் இங்கே கூட்டம் அதிகம்.

Immigration Law and Procedure, Law of Income Tax, Commentaries on Indian Constitution என்று பல ஆயிரம் பக்க நூல்களின் அணிவகுப்புகள் ஒரு பக்கம். சட்டம், பொருளாதாரம் இரண்டுக்கும் தனிப் பெரும் தடுப்புகள். மலைப் பாம்பு போல் நீண்டு விரிந்திருக்கிறது தத்துவத்துறை. Knowledge என்னும் அடக்கமான தலைப்பின் கீழுள்ள பகுதிகள் இவை. Structure of Knowledge, Origin and Sources of Knowledge, Belief, Causation, Determination and indeterminism, Chance, Freedom, Necessity, The Self, Soul, Mind, Attributes and faculties.

இங்குள்ள ஹிப்னாடிசம் பிரிவை ஒருமுறை வெறுமனே கடந்து சென்றிருந்தால்கூட ஏழாம் அறிவு போன்ற விபத்துகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இது ஒரு சுருக்கமான பட்டியல் மட்டுமே. Perceptual Processes, Will (Self Contol), Intelligence and Aptitudes, Reasoning, Subconscious and altered states and process, Daydreams, fantasies, reveries, Sleep phenomena, Differential and developmental psychology, Individual psychology.

ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் காணப்படுவதைப் போன்ற வரவேற்பறைகள் ஒவ்வொரு தளத்திலும் அமைந்துள்ளன. குறிப்பிட்ட துறை சார்ந்த புத்தகம் எங்கே கிடைக்கும் என்பதை இங்குள்ள நிர்வாகிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு அறையிலும் நுழைவுப் பதிவேடும் ஆலோசனைப் புத்தகமும் வைக்கப்பட்டுள்ளது. பத்து பக்கங்களைப் புரட்டினால் நூலகத்தை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிந்துவிடும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், மென்பொருள் பணியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், வடிவமைப்பாளர்கள், புகைப்படக்காரர்கள், ஓவியர்கள்… இன்னும் பலர். மாணவர்களும் ஆய்வாளர்களும் அதிக எண்ணிக்கையில் நூலகத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

நூலக இடமாற்றத்தை எதிர்க்கும் ஆயுதமாக ஆலோசனைப் புத்தகம் மாறியிருந்தது. ‘தயவு செய்து நூலகத்தை மாற்றாதீர்கள்’ என்னும் மென்மையான ஆதங்க வெளிப்பாடுகள் தொடங்கி, ‘சென்னைக்குப் பெருமை சேர்க்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நாம் விட்டுக்கொடுக்கக்கூடாது’, ‘நூலகத்தை மாற்றினால் ஒன்றிணைந்து தடுப்போம்’ போன்ற போராட்டக் குரல்களும் பதிவாகியுள்ளன. ‘It’s senseless to shift this beautiful library’ என்றும் ‘நூலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஒரு பாசிஸ்ட் கூட சிந்திக்கமாட்டான்.’ என்றும் பலர் சீறியிருக்கிறார்கள். ஆ.சுப்பிரமணியன் என்பவர் இவ்வாறு எழுதியிருந்தார். ‘நூலகம் மாற்றுவது, என் கண்ணின் பார்வையை பிடுங்குவது போலிருக்கிறது. மாற்ற வேண்டாம்.’

இடிக்கவேண்டும் என்று சொல்பவர்கள் மட்டுமல்ல, இருக்கவேண்டும் என்று சொல்பவர்களும் ஒருமுறை நூலகத்தை வந்து பார்த்துவிடவேண்டும். முதல் பார்வையிலேயே அதன் பிரமாண்டமும் வீச்சும் முக்கியத்துவமும் விளங்கிவிடும். ஒரே ஒருமுறை, ஒரு சில தளங்களை மட்டும் பார்த்துவிடுங்கள். புத்தக அடுக்குகளைக்கூட நீங்கள் நெருங்க வேண்டியதில்லை. எந்தவொரு பிரதியையும் தீண்டவேண்டியதில்லை. பரந்து விரிந்திருக்கும் கார்பெட் தரையில் அமைதியாக நடை போட்டால் போதும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திருத்தியமைக்கவேண்டும் என்று ஜெயலலிதா துடித்துக்கொண்டிருப்பது ஏன் என்பது விளங்கிவிடும்.

நூலகத்தைவிட்டு வெளியேறி, சிறிது தூரம் நடந்தபோதுதான் சட்டென்று உறைத்தது. எம்ஜிஆர் பேட்டிகளும், வாழ்க்கை வரலாறுகளும், நினைவுக் குறிப்புகளும் இருந்தன. ஜெயமோகனின் புனைவுகளும் அபுனைவுகளும் இருந்தன. ஜெயகாந்தன், வாலி, வைரமுத்து ஆய்வுக் கோவை தொடங்கி சங்க இலக்கியங்கள் வரை பல்லாயிரம் பிரதிகள் இருந்தன. கருணாநிதி பெயர் தாங்கிய ஒரு புத்தகத்தையாவது பார்த்தேனா? அல்லது கவனக்குறைவால் கடந்து வந்துவிட்டேனா? அல்லது அவர் நூல்கள் இன்னமும் அடுக்கப்படவில்லையா? அல்லது அவற்றுக்கான அடுக்குகள் தயாராகவில்லையா? அல்லது ஆர்டர் செய்து இன்னமும் வரவில்லையா? அல்லது இன்னமும் திறக்கப்படாமல் இருளில் மூழ்கிக்கிடக்கும் ஒரு சில பகுதிகளில் அவருடைய புத்தகங்களும் தேங்கிக்கிடக்கின்றனவா?

தெரியவில்லை. ஆனால், ஒரு புத்தகம், ஒரே ஒரு புத்தகம்கூட அவர் பெயரில் பார்த்த நினைவில்லை. எந்தவோரிடத்திலும் அவர் முகம் பார்த்த நினைவில்லை. அமர்ந்துவாசிக்கும் அண்ணாவின் உருவச்சிலை முகப்பில் இருக்கிறது. திறந்து வைத்தவர் என்னும் முறையில் முதல்வர் கருணாநிதியின் பெயர். அவ்வளவுதான்.

0

மருதன்

35 comments so far

 1. puthiyavan
  #1

  அருமையான கதை. நல்ல விறுவிறுப்பு.

 2. வினோ
  #2

  இந்த அரிய கட்டுரை அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அறிவுலகத்தின் மீதான தமிழக அரசின் தாக்குதலை முறியடிக்க உதவும்.

 3. முத்துகணேஷ்
  #3

  நேரில் சென்று பார்த்த உணர்வு ஏற்படுகிறது. இப்பொழுதே செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. மிக அருமை.

 4. ஜெயக்குமார்
  #4

  ///கருணாநிதி பெயர் தாங்கிய ஒரு புத்தகத்தையாவது பார்த்தேனா? அல்லது கவனக்குறைவால் கடந்து வந்துவிட்டேனா? அல்லது அவர் நூல்கள் இன்னமும் அடுக்கப்படவில்லையா? அல்லது அவற்றுக்கான அடுக்குகள் தயாராகவில்லையா? அல்லது ஆர்டர் செய்து இன்னமும் வரவில்லையா? அல்லது இன்னமும் திறக்கப்படாமல் இருளில் மூழ்கிக்கிடக்கும் ஒரு சில பகுதிகளில் அவருடைய புத்தகங்களும் தேங்கிக்கிடக்கின்றனவா?
  தெரியவில்லை. ஆனால், ஒரு புத்தகம், ஒரே ஒரு புத்தகம்கூட அவர் பெயரில் பார்த்த நினைவில்லை. எந்தவோரிடத்திலும் அவர் முகம் பார்த்த நினைவில்லை. அமர்ந்துவாசிக்கும் அண்ணாவின் உருவச்சிலை முகப்பில் இருக்கிறது. திறந்து வைத்தவர் என்னும் முறையில் முதல்வர் கருணாநிதியின் பெயர். அவ்வளவுதான்.//

  நாளை முரசொலியில் மறுபதிப்புக் காணப்போகும் இந்தக் கட்டுரைக்கு வாழ்த்துக்கள்.

  நூலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது, மருத்துவமனையை வேறு இடத்தில் கட்டிக்கொள்ளலாம் என்பதே எனது நிலையும்..ஆனால் அரசியல் ஏதுமின்றி

 5. வினோ
  #5

  என்வழியில் இந்தக் கட்டுரையை மறுவெளியீடு செய்துள்ளோம். அதற்கான சுட்டி…

  http://www.envazhi.com/?p=29596

 6. வினோ
  #6

  http://www.envazhi.com/?p=29596

 7. Vijay R
  #7

  நான் சென்னையில் இருந்தவரை இதைப் போய் பார்த்ததில்லையே!! அடுத்த வருடம் நான் வருவதற்குள் இருக்குமா?? இருக்காதா?? நீயா நானா கோபிக்கு ஒரு டாபிக் கிடைச்சிருக்கும்.. இதப்பத்தி பேசிட்டாரோ என்னவோ!!!

 8. saravanan
  #8

  இந்த கட்டுரை ஒரு ஏழு எட்டு மாதங்களுக்கு முன்பே வந்திருந்தால் நூலகத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். நான் சென்னைக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. போனவாரம்தான் கன்னிமரா சென்றேன். இணையதளம் வந்ததால் எத்தனை சோம்பேறியாகிப் போனோம் என்று உணர முடிந்தது. கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னதெல்லாம் பழமொழி. “Library இல்லா ஊரில் Live செய்யவேண்டாம்” என்பது என் மொக்கைமொழி.

  கோட்டூர்புரம் அருகே வீடு மாற்றிக் கொள்ளலாமா என்று நினைத்திருந்தேன். இப்போது கொஞ்சம் பொறுத்துத்தான் செய்யவேண்டும் 🙁

 9. saravanan
  #9

  இந்த கட்டுரை ஒரு ஏழு எட்டு மாதங்களுக்கு முன்பே வந்திருந்தால் நூலகத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். இப்போது அம்மா புண்ணியத்தால் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நான் சென்னைக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. போனவாரம்தான் கன்னிமரா சென்றேன். இணையதளம் வந்ததால் எத்தனை சோம்பேறியாகிப் போனோம் என்று உணர முடிந்தது. கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னதெல்லாம் பழமொழி. “Library இல்லா ஊரில் Live செய்யவேண்டாம்” என்பது என் மொக்கைமொழி.

  கோட்டூர்புரம் அருகே வீடு மாற்றிக் கொள்ளலாமா என்று நினைத்திருந்தேன். இப்போது கொஞ்சம் பொறுத்துத்தான் செய்யவேண்டும்

 10. களிமிகு கணபதி
  #10

  மருதனின் கட்டுரையை முதன் முதலாக ஆதரிக்கிறேன்.

  .

 11. பிச்சைக்காரன்
  #11

  என்ன பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது என்பதே புரியாமல் , நூலகம் அழகாக இருக்கிறது என ஒரு கட்டுரையா ?

 12. பிச்சைக்காரன்
  #12

  நூலகம் அழகாக இல்லை . எனவே அதை மாற்ற வேண்டும் என்பதா தற்போதைய பஞ்சாயத்து ? அல்லது அதில் புத்தகங்கள் இல்லை என யாரேனும் சொன்னார்களா ?

 13. rathnavel
  #13

  அருமையான கட்டுரை.

 14. Vijay R
  #14

  இதைப் படித்தவுடந்தான், சென்னையிலிருந்தும் இந்த இடத்திற்கு போகவில்லையே!! என்று தோன்றுகிறது… நான் அடுத்த வருடம் இந்தியா வரும்போது… இவ்விடத்தில் நூலகம் இருக்குமா??

 15. பிச்சைக்காரன்
  #15

  எளிய மக்களின் பணத்தை திருடி ஒருவர் கார் வாங்கி இருக்கிறார் என்பது குற்றச்சாட்டு. இதற்கு பதில் சொல்லாமல் , அந்த கார் அழகாக இருக்கிறது. வேகமாக செல்கிறது , வசதியாக ஓடுகிறது என்று பேசிகொண்டே போவது நல்ல நகைச்சுவை…

 16. Raja
  #16

  Hallo Pichaikkaran avarkalae… eliya makkalin panam upayokamillatha car.aga irunthaal neenkal varuththap padalaam. caril pothu makkalum payanam seivathu makizhchiyaan visayam…thaaenae. carin parts.yaik kooda ellarum vaanka iyalaathu enpathu unmaithanae…

 17. anjana
  #17

  Karunanidhiyin ‘Nenjukku Needhi’ paartha ninaivu – veru sila noolkalum. Stalin alitha pala puthagankalum irukku.
  oru noolagathukku ivvalavu grandeur thevai illai enpathu en karuthu. Yaarum entha eliyavarum pukakkudiathaga irukkiratha?konjam intimidating aagathan irukku. irundhum – oru aadambapiriyar saathithu vittaar – innoru aadamba piriyar enna seivaaro?

 18. பிச்சைக்காரன்
  #18

  “eliya makkalin panam upayokamillatha car.aga irunthaal neenkal varuththap padalaam”

  ஆம் நண்பரே.. எளிய மக்கள் உபயோகப்படுத்த முடியாத இடத்தில் நூலகம் கட்டப்ப்ப்ட்டு இருப்பதால்தான் பிரச்சினையே.. கிராமங்கள், தாழ்தப்பட்ட மக்கள் வாழும் ஊர்கள், இஸ்லாமிய மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் , இது போன்ற ஐந்து நட்சத்திர நூலகம் வேண்டாம். சாதாரண நூலக வசதிகூட கிடையாது.. ஆனால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை எடுத்து , இங்கு ஆடம்பரமாக ஒரு கட்டடம் கட்டி இருக்கிறார்கள். இந்த அயோக்கியத்தனத்தை திரும்ப பெற இயலாது. குறைந்த பட்சம் அனைவரும் வர வசதியான எக்மோருக்கு அருகிலாவது மாற்றினால் போதும் என்பதே மக்கள் கோரிக்கை

 19. பிச்சைக்காரன்
  #19

  எளிய மக்களின் வயிற்றில் அடித்து மாட மாளிகைகள் அமைப்பதும், அதை துதி பாடிகள் வியந்து போற்றுதலும் , சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடுகளில் நடப்பது வாடிக்கை. அது இங்கும் நடைபெற ஆரம்பிப்பது யாருக்குமே நல்லதன்று

 20. பொன்.முத்துக்குமார்
  #20

  பிச்சைக்காரன், நீங்கள் எல்லா இடத்திலும் இதே குற்றச்சாட்டை வைக்கிறீர்கள். அப்படி மற்ற மாவட்ட நூலக ஆணைக்குழுவின் நிதியை எடுத்தது தவறென்றே (இப்படி ஒரு துறையின் நிதியை அது பயன்படுத்தப்படாதபோது தேவையான வேறு துறைக்காக எடுத்து பயன்படுத்தப்பட்டதே இல்லையா அரசுத்துறைகளில் ? சட்டத்தில் இடமில்லை என்பீர்கள். சட்டத்திருத்தம் செய்துவிட்டு பின்னர் அப்படி செய்தால் ?) வைத்துக்கொள்வோம். அப்படி எடுக்கப்பட்ட நிதியை சம்பந்தப்பட்ட மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்கு திருப்பிக்கொடுக்க இந்த அரசுக்கு என்ன சுணக்கம் ?

 21. பொன்.முத்துக்குமார்
  #21

  இப்போது உங்கள் பிரச்சினைதான் என்ன ? கோட்டுர்புரத்திலிருந்து கன்னிமாராவுக்கு மாற்றிவிட்டால் மகிழ்வீர்களா ? அப்போது இந்த “எளிய மக்களின் பணத்தை திருடி”-ன பிரச்சினை எழாதா ?

 22. karikaalan1
  #22

  அறிவுப் பசி உனக்கு
  அல்லாதுப் போனதெப்படி
  எச்சிலிலை ”பிச்சைக்காரா”..??!!

 23. பிச்சைக்காரன்
  #23

  கரிகால மன்னரே . பிச்சைக்காரனாகிய நானே , மற்றவர் பசித்திருக்க , நான் ருசித்திருக்கலாகாது என்கிறேன் . மன்னராகிய நீங்கள் மற்றோரே மறக்கலாமோ ?
  அறிவுப்பசி எனக்கும் உண்டு . அதைவிட அதிகமாய் மனிதாபிமானம் உண்டு

 24. பிச்சைக்காரன்
  #24

  எச்சிலிலை உணவை நான் கேவலமாக நினைக்கவில்லை . ஆனால் எச்சிலிலை சாப்பாடு சில இடத்தில் , லட்சங்கள் கோடிகள் சில இடத்தில் என்ற நிலைக்கு அரசுதான் வருந்த வேண்டும்

 25. பிச்சைக்காரன்
  #25

  அப்படி எடுக்கப்பட்ட நிதியை சம்பந்தப்பட்ட மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்கு திருப்பிக்கொடுக்க இந்த அரசுக்கு என்ன சுணக்கம் ?”

  ந்ண்பரே..அப்படியே கொடுத்தாலும், இந்த ஆடம்பர மாளிகையை பரமாரிக்க ஆண்டுக்கு 30 கோடி செலவாகும். எதை எங்கு இருந்து எடுப்பார்கள்?

 26. sivaguru
  #26

  dear maruthan this article of yours had a extensive coverage about libraries book abundance and variety. jayalalitha does not know the values of books and their contributions to change in empires. lets teach a lesson.

 27. C.Ranganathan
  #27

  A saying goes “A room without a book is like a body without a soul”. Google can search out everything in a jiffy but cannot replace a hard cover book for taking notes,references, xerox and many other advantages. It is foolish to say that libraries have become outdated.C.Ranganathan

 28. Saha, Chennai
  #28

  @பிச்சைக்காரன்
  //எளிய மக்களின் பணத்தை திருடி ஒருவர் கார் வாங்கி இருக்கிறார் என்பது குற்றச்சாட்டு. இதற்கு பதில் சொல்லாமல் , அந்த கார் அழகாக இருக்கிறது. வேகமாக செல்கிறது , வசதியாக ஓடுகிறது என்று பேசிகொண்டே போவது நல்ல நகைச்சுவை…//

  அண்ணே, இத பத்தி நான் மணி அண்ணே ப்ளாக்குல போட்ட கமெண்ட் உங்க பார்வைக்கு.

  அட, ஆமாண்ணே, இதுவரைக்கும் அந்த பணத்தவச்சு எத்தினபேரோட வாழ்க்கையில ஒலி / ஒளி அமச்சுக்குடுத்தாங்க. நாயமா பாத்தா அந்த பணத்த பொதிகை டிவி ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்கிதான் குடுத்துருக்கணும். அத வந்து இந்த கானா நீனா கெடுத்துப்புட்டாரே. ஆனா, நீங்க ரொம்ப அறிவாளிண்ணே, நூலகதுக்குனு தனியா ஒரு நிதி இருக்குன்னு முன்னாடியே ஒங்களுக்கு தெரிஞ்சிருக்கு. ஊரக “நூல்நிலயங்களுக்குனு ” உள்ள நிதிய எடுத்து “சாராய கட” தொறந்தாதான அண்ணே தப்பு, மெட்ராசுல “நூல்நிலையம்” தொறந்தா தப்பா அண்ணே? ஆமா, அந்த “ஊரக நூல்நிலயங்களுக்குனு” உள்ள நிதிய எடுத்து “ஊரக சாராய நிலையம்” ஆரம்பிச்சு இருந்தா உங்களுக்கு தெரியுமா அண்ணே? இப்புடி கேள்வி கேக்க முடியுமா அண்ணே?

  அந்த லிங்கு
  http://maniblogcom.blogspot.com/2011/11/blog-post_13.html

 29. Saha, Chennai
  #29

  @ பிச்சைக்காரன்
  // அப்படி எடுக்கப்பட்ட நிதியை சம்பந்தப்பட்ட மாவட்ட நூலக ஆணைக்குழுவிற்கு திருப்பிக்கொடுக்க இந்த அரசுக்கு என்ன சுணக்கம் ?”

  ந்ண்பரே..அப்படியே கொடுத்தாலும், இந்த ஆடம்பர மாளிகையை பரமாரிக்க ஆண்டுக்கு 30 கோடி செலவாகும். எதை எங்கு இருந்து எடுப்பார்கள்?
  //
  அப்புடி பாத்தா, புதுசா ஆரம்பிக்க போற அந்த கொழந்த ஆசுபத்திரிய பராமரிக்க ஆண்டுக்கு 100 கோடிக்கு மேல தேவைப்படுமே, அத எங்கேருந்து அண்ணே எடுப்பாங்க? மக்களுக்காக, அறிவு சார்ந்த வருங்காலம் உருவாக வருசத்துக்கு 30 கோடி செலவு பண்ண முடியாத அரசாங்கம் என்ன —க்கு அண்ணே இருக்கணும்?

 30. பிச்சைக்காரன்
  #30

  “புதுசா ஆரம்பிக்க போற அந்த கொழந்த ஆசுபத்திரிய பராமரிக்க ஆண்டுக்கு 100 கோடிக்கு மேல தேவைப்படுமே, அத எங்கேருந்து அண்ணே எடுப்பாங்க? ”

  இது குழந்தைத்தனமான வாதம்.

  மருத்துவமனை என்பது அனைவருக்கும் பயன்படக்கூடியது. கீழக்கரையில் இருக்கும் சுலைமான் சேட்டோ, தொண்டியில் இருக்கும் குப்பனோ கூட , முக்கிய சிகிச்சை தேவைப்பட்டால், சென்னை வந்து தங்கி தன் குழந்தைக்கு சிகிச்சை செய்ய முடியும். ஆனால் இந்த அண்ணா நூலகம் என்பது கோட்டூர்புரதில் இருக்கும் அண்ணா பல்கலை மாணவர்களுக்கும், அதிக பட்சம் சுற்றுப்புற மக்களுக்கு மட்டுமே பயன்பட கூடியது.எனவேதான் இங்கு நூலகம் வேண்டாம். அனைவரும் வந்து செல்ல ஏதுவான டி பி அய்க்கு மாற்றுங்கள் என எளியவர்கள் கூறுகிறார்கள்.

 31. poovannan
  #31

  நீதிமன்றத்தில் வழக்கு வரிசையாக தோற்று கொண்டிருக்கும் போதே இரு நூறு கோடிக்கு பழைய புத்தகங்களை அடித்தார்களே அதுவும் மக்கள் விரும்பியதால் தானா.அந்த பணத்தை வீணாக்காமல் இருந்தால் புதிதாக DPI இலும் இன்னொரு நூலகத்தை கட்டலாமே
  குழந்தைகள் மருத்துவமனைக்கு வருவதற்கு அங்கு பேருந்து,ரயில் வசதிகள் உள்ளனவா
  சென்னையில் இருக்கும் குழந்தைகள் மருத்துவமனை ஆசிய அளவில் பெரிய மருத்துவமனைகளில் ஒன்று ஆயிற்றே.அங்கேயே இன்னும் பல கட்டிடடங்களை கட்ட முடியுமே
  தலைமை செயலக கட்டிடத்தை நான் உபயோகிக்க மாட்டேன் என்று கூறியது போல் அண்ணா நூலகத்தை பற்றியும் முதல்வர் கூறி வோட்டு கேட்டாரா

  பத்திரிக்கைகள் ஆட்சிக்கு போட்டி போடும் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிடும் போது இவர் கட்டிய நூலகத்தை என்ன செய்வீர்கள்,பாலத்தை உடைப்பீர்களா,புத்தகங்களை மாற்றுவீர்களா,அண்ணாவின்,எம் ஜி ஆர் பெயரை மாற்றுவீர்களா என்று கேள்விகள் அனுப்பி அவர்கள் தரும் பதில்களை பிரசுரித்தால் மக்களுக்கு நன்மை.இனியாவது செய்ய வேண்டும்
  மாவட்டங்களுக்கு வைக்கபட்ட தலைவர்களின் பெயர் எடுக்கப்பட்ட போது நான் ஆட்சிக்கு வந்தால் அவற்றை மறுபடியும் வைப்பேன் என்று கூறியவர் அதற்க்கு பிறகு இரு முறை ஆட்சிக்கு வந்தும் அதை செய்யவில்லை ஆனால் தமிழ் புத்தாண்டை உடனே மாற்றி விட்டார்.அவர் மேல் யார் கை ஓங்கியிருக்கிறது எனபது தெளிவாக தெரிகிறது.

 32. பிச்சைக்காரன்
  #32

  செக்ஸ்பியர்? தமிளை வலர்த்து வாள வைக்கும் அண்ணா நூல…

 33. பிச்சைக்காரன்
  #33

  ”கருணாநிதி பெயர் தாங்கிய ஒரு புத்தகத்தையாவது பார்த்தேனா? அல்லது கவனக்குறைவால் கடந்து வந்துவிட்டேனா? அல்லது அவர் நூல்கள் இன்னமும் அடுக்கப்படவில்லையா? ”

  அதெல்லாம் காரணம் இல்லை… நீங்கள் சரியாக பார்க்கவில்லை அல்லது பார்த்தும் அதை சொல்ல மறுக்கிறீர்கள்.. இன்னொரு முறை சென்றால் பாருங்கள்.. கருணானிதி பெயர் தாங்கிய புத்தகங்கள் ஒரு பகுது முழுதும் உள்ளன.. இந்த ஆட்சியிலேயே இப்படி என்றால் போன ஆட்சியில் எப்படி இருந்து இருக்கும் என யோசித்து பாருங்கள்

 34. Its me!
  #34

  //அதெல்லாம் காரணம் இல்லை… நீங்கள் சரியாக பார்க்கவில்லை அல்லது பார்த்தும் அதை சொல்ல மறுக்கிறீர்கள்.. இன்னொரு முறை சென்றால் பாருங்கள்.. கருணானிதி பெயர் தாங்கிய புத்தகங்கள் ஒரு பகுது முழுதும் உள்ளன.. இந்த ஆட்சியிலேயே இப்படி என்றால் போன ஆட்சியில் எப்படி இருந்து இருக்கும் என யோசித்து பாருங்கள்//
  ஒரு பகுதி முழுக்க வைக்க வேண்டும் என்று ஹைக்கோர்ட் ஆர்டர் ஏதும் வந்து விட்டதா, நமக்கு தெரியாமல் ?!

 35. அனிதா
  #35

  தமிழக அரசு இணைய தளத்தில் முதல் அமைச்சர் என்று தேடினால், அவர் பல்கலை நிபுணர் என்றும் ஆங்கிலம்,தமிழ்,மலையாளம், தெலுங்கு,கன்னடம் போன்ற பல மொழிகளில் புகழ் பெற்ற நூல்களை எழுதியவர் என்று போட்டிருந்தது. எங்கு தேடியும் எந்த நூலையும் நான் பார்க்க முடியவில்லையே! ஏன்?

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: