மதமாற்றம் செய்யலாமா? (ஹாய் அட்வகேட்!)

ஹாய் அட்வகேட்!

ஒருவரை அவர் சார்ந்திருக்கும் மதத்தில் இருந்து இன்னொரு மதத்துக்குத் திருப்புவது சட்டப்படி தவறானதா?

எஸ். சிவகுமார், மயிலாப்பூர்

ஒரு மதத்தைப் பரப்ப சம்பந்தப்பட்ட நபர்களும் அமைப்புகளும் பிரசாரம் செய்யலாமா? பிரசாரம் செய்கிறேன் என்ற பெயரில் பிற மதங்களைத் தாக்கிப் பேசுபவர்கள்மீது வழக்குத் தொடுப்பது சாத்தியமா?

கண்ணன், வில்லிவாக்கம்

கட்டாய மதமாற்றம், மத சுதந்தரம், மத அவமதிப்பு ஆகிய ஒவ்வொன்றுக்கும் நம் நாட்டில் தனிச் சட்டங்கள் உள்ளன. கட்டாய மதமாற்றத் தடைச் சட்டதை பற்றி தெரிந்து கொள்ளும் தருவாயில் மத சுதந்திரம் மற்றும் மத அவமதிப்பு பற்றி சட்டங்கள் என்ன சொல்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். முதலில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைப் பற்றி பார்ப்போம்.

கட்டாய மதமாற்றம்

மதமாற்றம் தவறில்லை. ஆனால் கட்டாய மதமாற்றம் குற்றம். அதுவும் ஒரு சில மாநிலங்களில்தான். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மதமாற்றச் சட்டம் இயற்றப்படவில்லை. மத்தியப் பிரதேசம், ஒரிசா, சத்திஸ்கர், குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் இயற்றபட்டு அமல்படுத்தபட்டது. ஆனால் அதை செயல்படுத்த தேவையான விதிகள் இயற்றப்படவில்லை.

ராஜஸ்தான் மாநிலத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது, ஆனால் ஆளுநர் (அப்போது இருந்தவர் திருமதி பிரதீபா பாட்டீல்) கையெழுத்துப் போட மறுத்துவிட்டார்.

தமிழ்நாட்டிலும் 2002ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா முதலமைச்சாராக இருந்தபொழுது கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் பொருட்டு ஓர் அவசரச் சட்டத்தை கொண்டுவந்தார். Tamil Nadu Prohibition of Forcible Conversion of Religion Ordinance.  அந்தச் சட்டம் 2004 ஆம் ஆண்டு அதே ஜெயலலிதா அரசால் ரத்து செய்ப்பட்டது.

மேற்சொன்ன சட்டத்தின்படி யாரேனும் ஒருவர் மற்றவரை கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ, ஆசை காட்டியோ, ஏமாற்றியோ அவருடைய மதத்திலிருந்து வேறோர் மதத்துக்கு மாற்றுவது குற்றமாகக் கருதப்பட்டது. இந்தக் குற்றத்தை செய்பவருக்கும், குற்றம் நடப்பதற்குத் தூண்டுதலாக இருப்பவருக்கும் மூன்றாண்டு சிறை தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதே குற்றத்தை இளையோரிடமும் (மைனர்), பெண்களிடமும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரிடமும் நிகழ்த்தினால், குற்றம் செய்தவருக்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ஒரு லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டச் சட்டத்தில் உள்ள ஷரத்துக்களே மற்ற மாநிலங்களில் கொண்டுவரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்திலும் இடம்பெற்றிருந்தன. குற்றாவாளிக்கு வழங்கப்படும் தண்டனையில்தான் வித்தியாசம் இருந்தது.

மதமாற்றத் தடைச் சட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் மட்டும்தான் மதமாற்றத்தில் ஈடுபடுகிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதுவும்கூட மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் வழிகளைப் பின்பற்றினால் மட்டுமே. ஒருவர் தன்னுடைய மதத்தின் அருமை, பெருமைகளைச் சொல்லி மற்றவரை அவரது மதத்தை ஏற்றுக்கொள்ள வைத்தால் அது சட்டப்படி குற்றமாகாது. அத்தகை மதமாற்றச் சடங்குகளில் ஈடுபடுபவரும், அச்சடங்கை நடத்தி வைப்பவரும் அந்தச் சடங்கு நடைபெற்ற சம்பவத்தை, குறிப்பிட்ட காலத்துக்குள் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் தெரிவிக்கவேண்டும். இல்லை என்றால் அதுவும் குற்றமாகக் கருதப்பட்டுத் தண்டனை வழங்கப்படும்.

மத சுதந்தரம்

இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 25 முதல் 28 வரையிலான ஷரத்துக்களின்படி இந்திய குடிமகனாகிய ஒருவர் தனக்குப் பிடித்த மதத்தை பின்பற்றலாம். அந்த மதத்தைப் பற்றி மக்களிடயே பிரசாரம் செய்யலாம். அது அந்த குடிமகனின் அடிப்படை உரிமை (Fundamental Right).

ஒவ்வொரு மதத்தவரும் தம் மத நம்பிக்கைக்கு ஏற்ப கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் கட்டிக்கொள்ளலாம். மதக்கோட்பாட்டுக்கு ஏற்ப கல்வி நிறுவனங்களை நடத்தலாம். தர்மாலயங்கள் நிறுவி தர்மம் செய்து வரலாம். ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய மதநிர்வாகத்துக்காக தேவையான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கலாம்.

அதே சமயம், மத நம்பிக்கைக்குத் தொடர்புடைய பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்தவும் சீரமைக்கவும் தேவையான சட்டங்களை கொண்டுவர அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. இந்து சமயத்துக்கு உட்பட்ட வழிபாட்டுத் தலங்கள், கோவில்கள், மடாலயங்கள் ஆகியவற்றை இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து ஜாதியினரும் பயன்படுத்த அரசால் வழிவகைச் செய்யமுடியும். முழுக்க முழுக்க அரசு வருவாயிலிருந்து நடத்தப்படும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மதம் சம்பந்தமான கோட்பாடுகளை, மதம் சம்மந்தப்பட்ட பாடங்களை மாணவர்களுக்கு போதிக்கக்கூடாது.

மத அவமதிப்பு

ஒருவருடைய மதத்தை அவமதிப்பது குற்றமாகும். இதற்கான சட்ட விதிகள் 150 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றிவிட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (இ.பி.கோ) கொண்டுவரப்பட்டது. இ.பி.கோ 295 ஆம் பிரிவிலிருந்து 298  வரை உள்ள பிரிவுகளில் மத அவமதிப்பு சம்பந்தமான குற்றங்களும் அதற்கான தண்டனைகளும் விளக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில், கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுகிறவர்கள் மத அவமதிப்பு குற்றத்தில் ஈடுபட்டவர்களாகக் கருதப்படுவார்கள். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யமுடியும்.

நாம் இ.பி.கோவுக்கு மறுபடியும் வருவோம். ஒரு மதத்தை அவமதிக்கும் பொருட்டு அந்த மதத்தின் வழிபாட்டுத் தலங்களுக்குச் சேதம் விளைவித்தாலோ, புனிதமாகக் கருதப்படும் பொருள்களை அவமதித்தாலோ அச்செயல் குற்றமாகக் கருதப்பட்டு, தவறு இழைத்தவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும். (இ.பி.கோ 295 வது பிரிவு).

ஒரு மதத்தின் நம்பிக்கைகளை இழிவு செய்யும் நோக்கத்தோடு அல்லது அந்த மதத்தைப் புண்படுத்தும் பொருட்டு, கெட்ட எண்ணத்துடன் வார்த்தைகளாலோ, எழுத்துகளாலோ செய்கையாலோ இழிவுபடுத்தினால், இழிவுபடுத்தியவர்க்கு 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும். (இ.பி.கோ 295 ஆவது பிரிவு).

ஒரு மதக்கூட்டத்தின் போதோ அல்லது மதம் சம்பந்தப்பட்ட விழாக்களின் போதோ அல்லது பண்டிகைகளின் போதோ யாரேனும் பங்கம் விளைவித்தால், அல்லது அமைதியை குலைத்தால், கலவரம் உண்டுசெய்தால், அவ்வாறு செய்பவர்களுக்கு ஓர் ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும். (இ.பி.கோ 296 வது பிரிவு).

ஒருவருடைய மத நம்பிக்கைகளைக் காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அல்லது இவ்வாறு செய்தால் ஒருவர் காயப்படுவார் என்று தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் அவருடைய வழிபாட்டு இடத்தில் நுழைவதோ, அவர் சம்பந்தப்பட்ட சமூகத்துக்குச் சொந்தமான சமாதி, கல்லறை, இறுதிச் சடங்கு செய்யும் இடங்கள் ஆகியவற்றுள் அத்து மீறி நுழைவதோ அல்லது கிடத்தப்பட்டிருக்கும் சடலத்துக்கு அவமரியாதை செய்வதோ அல்லது ஈமச்சடங்கு செய்யவிடாமல் தடுப்பதோ சட்டப்படி குற்றமாகும். குற்றமிழைத்தவர்களுக்கு ஓர் ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படும். (இ.பி.கோ 297 வது பிரிவு).

ஒருவருடைய மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்தில் வார்த்தைகளால் உச்சரிப்பது அல்லது சப்தங்களால் காதுபட கூச்சலிடுவது போன்ற அவமதிப்புச் செயல்களில் ஈடுபடுதல் அல்லது மற்றவருடைய மத உணர்வுகள் பாதிக்கப்படும் விதத்தில் செய்கை செய்வது அல்லது அவர் கண்ணில் படும்படி ஒரு பொருளை வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கான தண்டனை ஒர் ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரணடும். (இ.பி.கோ 298 வது பிரிவு).

நம் நாட்டில் மத சுதந்தரம் உண்டு. யார் வேண்டுமானாலும் எந்த மதத்தையும் பின்பற்றலாம், போதிக்கலாம். ஆனால், மற்றவர்கள் தன் மதத்துக்கு மாறவேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. தான் பின்பற்றுகிற மதம்தான் சிறந்தது என்ற நோக்கில் மற்ற மதங்களை இழிவுபடுத்தக்கூடாது. அதற்குச் சட்டத்தில் இடமில்லை.

0

S.P. சொக்கலிங்கம்

3 comments so far

  1. ஆர்ட்டிகிள் 25
    #1

    இந்த பதிலில் இந்த சட்டங்கள் ஏன் கொண்டுவரப்பட்டன என்பது பற்றியோ அல்லது உச்சநீதிமன்றம் இது குறித்து அளித்த முக்கியமான தீர்ப்பு பற்றியோ ஒரு வாக்கியம் கூட எழுதப்படவில்லை.மேலும் சிறுபான்மையினர் உரிமைகள் குறித்த அரசியல் சட்டவிதிகளும் இங்கு பொருந்தும்.அதையும் குறிப்பிடவில்லை.இபிகோ செக்‌ஷனை அப்படியே எடுத்து போடுவதை விட ஒரு கேள்விக்குக் தொடர்பான அடிப்படை சட்ட விளக்கங்களை அளிப்பது பொருத்தமானது.இந்த மதமாற்றம் குறித்த விவாதம் அரசியல் சட்டம் இயற்றுவதற்காக அமைக்கப்பட்ட குழு மத உரிமை குறித்த உரிமைக்ளை விவாதிக்கும் போதும் எழுந்துள்ளது.அதையும் அவர் குறிப்பிடுவதில்லை.இக்கேள்விக்கான பதிலை அங்கிருந்து துவக்கி,கட்டாய மதமாற்றம் குறித்த சட்டங்கள் ஏன் கொண்டுவரப்பட்டன,அவை செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை சுட்டிக்காட்டி எழுதியிருக்க முடியும்.அத்தீர்ப்பில் மத உரிமை அடிப்படை உரிமை என்றாலும் மதமாற்றம் செய்வதை அடிப்படை உரிமை என்று கொள்ள முடியாது என்று கூறப்பட்டது. இது சர்ச்சைக்குள்ளானது.இருப்பினும்
    இன்று வரை இதுதான் இந்த விஷயத்தில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு என்பதால் அதையொட்டியே உயர்நீதி மன்றங்கள் தீர்ப்பு வழங்கி வருகின்றன.

  2. yaro
    #2

    பின்னர் ஏன் இந்துமதத்தை புண்படுத்தி இழி சொற்களை பகிரங்கமாக வெளிபடுத்தும் தலைவர்களை மத அவமதிப்பு சட்டம் தண்டிப்பதில்லை

  3. vedamgopal
    #3

    Article 25 {Freedom of conscience and free profession, practice and propagation of religion}
    1. Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practice and propagate religion.
    2. Nothing in this article shall affect the operation of any existing law or prevent the State from making any law –
    a. regulating or restricting any economic, financial, political or other secular activity which may be associated with religious practice;
    b. Providing for social welfare and reform or the throwing open of Hindu reli- gious institutions of a public character to all classes and sections of Hindus.
    [Explanation I: The wearing and carrying of kirpans shall be deemed to be included in the profession of the Sikh religion.]
    [Explanation II: In sub-Clause (b) of clause (2), the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion, and the reference to Hindu religious institutions shall be construed accordingly.]
    Article 26 (Freedom to manage religious affairs)
    Subject to public order, morality and health, every religious denomination or any section thereof shall have the right -
    a. to establish and maintain institutions for religious and charitable purposes;
    b. to manage its own affairs in matters of religion;
    c. to own and acquire movable and immovable property; and
    d. to administer such property in accordance with law.
    (Subject to public order, morality) மேலே சொன்ன நமது சட்டப்படி பொதுஜனங்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பாதிக்கப்டும் பொழுதும் அவர்களது பண்பாடு ஒற்றுமை சீர்குலையும் என்னும் பொழுது மாநில அரசாங்கம் அதை தடைசெய்யலாம். (Practice) – நடத்தை – சுதந்திரமாக பழகிக்கொள்ளலாம். (Profess) – தொழில் – சுதந்திரமாக தங்கள் மத போதனைகளை வேண்டும் என்பவர்களுக்கு கூறலாம். (Profess ) இதற்க்கு தமிழ் வர்தமானன் அகராதியில் ” போலியாக நட – இல்லாததை உள்ளதாய் பாசாங்கு செய் என்ற அர்த்தமும் உண்டு. (Propagate) – பரப்புதல் இனபெருக்கம் செய்தல். மேலே சொன்ன மத பழகுதல் போதித்தல் பரப்புதல் எல்லாம் பொதுஜன ஒற்றுமையையும் பண்பாட்டையும் சீர்குலைக்ககூடாது. மத பரப்புதலில் என்று ஈடுபட்டு இனபெருக்கம் செய்ய ஆரபித்தார்களோ அன்றிலிருந்து இன்று வரை பொதுஜன ஒற்றுமையும் பண்பாடும் சீர்குலைந்து வந்திருகின்றது என்பது குருடனுக்கும் தெரியும். இப்பொழுதும் சில மாநிலங்களில் மத மாற்று தடை சட்டங்கள் அழூலில் உள்ளன இருந்தும் அவர்களால் முழுபதுமாமக கட்டுபடுத்த முடியவில்லை. எனவே இந்திய சட்டம் 25 திருத்தப்படவேண்டும். இந்த (Propagate) என்ற வார்தையையே எடத்துவிடுவது இந்திய இறையாண்மைக்கு அவசியம் ஆகும்.
    சட்டம் – 26 இதைப்போல் மத ஸ்தாபனங்களையும் வழிபாட்டு இடங்களையும் (கோவில்கள் சர்ச் மசூதி) இவைகளை மேலே சொன்ன இடையூருகள் ஏற்ப்படும் என்றால் மாநில அரசாங்கம் அவற்றை தங்கள் கட்டுபாடில் கொண்டுவர இந்திய சட்டத்தில் இடம் இருக்கிறது. இந்த சட்டத்தை இன்று இந்தியாவில் பல மாநிலங்களில் அமுல் படுத்தி இந்து கோவிலகளிலும் இந்து மத ஸ்தாபனங்களிலும் மட்டும் தான் தன் கட்டுபாட்டில் வைத்துள்ளது. இதற்க்கு என்ன அர்தம் இந்துக்களின் வழிபாட்டு தளங்களால் மட்டும் தான் பொதுஜன ஒற்றுமை குலையும் பண்பாடு நலிவுரும் செய்கிறது என்பதாகும். மற்றமதத்தவர்கள் எல்லாம் அப்பழுக்கற்றவர்கள். அவர்களது வழிபாடு இடங்களாலும் மத ஸ்தாபனங்களாலும் மட்டுமே ஒற்றுமையை நிலைநிறுத்த முடியும் என்று செக்யூலரிஸம் என்ற பூவை இந்துக்கள் காதில் சுற்றி வைத்திருக்கிறார்கள். இந்த இந்திய சட்டம் 26ல் மாநிலத்திற்க்கு அளித்துள்ள தனிசட்ட சலுகையையும் நீக்கவேண்டும்
    மேலும் இந்த மாநில தனிசட்டங்கள் (FUNDAMENTAL DUTIES UNDER ARTICLE 51(A) – It shall be the duty of every citizen of India ) கூறியுள்ள பல சரத்துக்களுக்கு முரணாக உள்ளது.
    இப்படிப்பட்ட முரண்பாடான சட்டங்கள் இந்தியாவை தவிற வேறு எந்த நாட்டிலும் கிடையாது.

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: