ஆதாம் கடித்த மிச்சம் – அத்தியாயம் 24

Restart

ஸ்டீவ் ஜாப்ஸின் ராஜினாமா கடிதத்தை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு சிறிய விடுமுறைக்குப் பிறகு மீண்டும் வழக்கம் போல் திரும்பி வந்துவிடுவார் என்றுதான் அவர்கள் எடுத்துக்கொண்டனர். ஐ-பேட்-2ஐ அறிமுகப்படுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் வந்தது போல் ஐ-போன் 5ஐ அறிமுகப்படுத்தவும் ஸ்டீவ் ஜாப்ஸ் வருவார் என்றுதான் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். ஆப்பிள், ஐ-போன்4S என்று அறிமுகப்படுத்தி அனைவரையும் ஏமாற்றியது என்றால் அதற்கு அடுத்த நாள் ஸ்டீவ் ஜாப்ஸ் அதை விட பெரிதாக ஏமாற்றினார். அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி வெளியிடப்பட்டது.

ஸ்டீவ் ஜாப்ஸின் இறுதி தினம்கூட திட்டமிட்டபடியேதான் கழிந்தது. விருந்து நிகழ்ச்சிகள், அழைப்புகள் அனைத்தையும் அவர் தவிர்த்துவிட்டார். வீட்டில் நேரத்தைச் செலவழித்தார். தன் வாழ்வில் மிக முக்கியமானவர்கள் என்று கருதியவர்களை எல்லாம் நேரில் பார்த்து பேசினார். என் வாழ்வின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டேன் என்று அனைவரிடமும் சொல்லி விடைபெற்றுக்கொண்டார். எதிர்காலத்தை நிகழ்காலத்தில் உருவாக்கியவருக்குத் தன்னுடைய எதிர்காலமும் தெரிந்திருந்தது விந்தைதான்.

சுயசரிதத்தை எழுதுவதற்காக நியமிக்கப்பட்டவரை நேரில் அழைத்து பேட்டி கொடுத்தார். ‘என் குழந்தைகளுடன் நான் அவ்வளவாக நேரம் செலவழிக்கவில்லை. ஏன் என்று அவர்களுக்குப் புரிய வேண்டும். அதற்காகத்தான் சுயசரிதம் எழுதுவதற்கு ஒப்புக்கொண்டேன்.’  ஆனால், பெற்ற தந்தையை கடைசிவரை அவர் பார்க்கவில்லை, பேசவில்லை. அவர் அனுப்பிய மெயில்களுக்கு ரிப்ளையும் செய்யவில்லை. தத்து கொடுத்த கோபம் சாகும் போதும் போகவில்லை.

ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம் பற்றி வெளிவந்த செய்திகளிலும் பல விஷயங்கள் வழக்கம் போல் ரகசியமாகவே வைக்கப்பட்டன. குடும்பத்தார் சூழ்ந்திருக்க அமைதியாக உயிர் பிரிந்தது என்று மட்டுமே சொன்னார்கள்.  ஏன், எப்படி, எப்பொழுது போன்ற விவரங்கள் எதுவுமில்லை. அவருடைய இறப்புச் சான்றிதழில், புற்று நோயின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் பிரிந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மற்றபடி, பொதுவான அஞ்சலியோ அரசு மரியாதையோ இல்லை. அக்டோபர் 16 இனி ஸ்டீவ் ஜாப்ஸ் தினமாக அனுசரிக்கப்படும் என்று கலிபோர்னியா கவர்னர் சமீபத்தில் அறிவித்தார். அத்தோடு சரி.

ஸ்டீவின் இறுதிச் சடங்குகள் எங்கு, எப்பொழுது நடைபெற்றன? யாரெல்லாம் கலந்துகொண்டார்கள்? எதுவும் தெரியாது. அவருடைய சொத்து என்ன ஆனது? யாருக்கு இனி? தெரியாது. உயில் எழுதியிருக்கிறாரா? தானம் செய்துவிட்டாரா? தெரியாது.

குறிப்பிட்ட சிலர் மட்டும் அழைக்கப் பட்ட அஞ்சலி கூட்டத்துக்கு சாம்சங்கின் முக்கிய அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். அதே சாம்சங்கோடு உலகெங்கும் உள்ள கோர்ட்களில் சட்டை கிழியும் அளவு ஆப்பிள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது தனி விஷயம். ஸ்டீவின் ரசிகர்கள் அவரால் பார்த்துப் பார்த்து கட்டப்பட்ட ஆப்பிள் கடைகளில் அஞ்சலி செலுத்தி ஆறுதல் அடைந்தனர்.

உண்மையில், ஸ்டீவ் குடும்பத்தினர் உள்ளூர் போலிஸுக்கு முன்பே தகவல் தெரிவித்து வைத்திருந்தனர். இறப்புச் செய்தி வெளியாகி, வீட்டுக்கு முன்னால் பெரும் கூட்டம் கூடிவிட்டால் சமாளிக்கவேண்டும் என்பதற்காக. ஆனால், அதற்கான அவசியம் ஏற்படவில்லை.

பில் கேட்ஸ் முதல் ஒபாமா வரை அஞ்சலி செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்க ஆப்பிள், வழக்கம்போல் இயங்கிக்கொண்டிருந்தது. அதைத்தான் ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பியிருப்பார். எனவே, நாங்கள் அவருக்குச் செலுத்தும் அஞ்சலி இதுதான் என்றார்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸுக்குப் பிறகு ஆப்பிள் என்னாகும்? அடுத்த பல வருடங்களுக்கு என்னென்ன ஆப்பிளில் இருந்து ரிலீஸ் ஆகவேண்டும் என்பதற்கான திட்டத்தை ஸ்டீவ் முன்கூட்டியே போட்டுக்கொடுத்துவிட்டார் என்கிறார்கள். ஆண்டிராய்ட் ஆப்பிளை விழுங்குமா? டிம் குக் ஸ்டீவ் ஜாப்ஸ் பெயரைக் காப்பாற்றுவாரா? போகப் போகத்தான் தெரியவரும்.

புத்த மதத்தைத் தழுவிய ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை பலருக்கும் பல விதங்களில் போதி மரம் தான். அவரால், ஆப்பிளால் பலர் மகிழ்ந்திருக்கிறார்கள் என்றபோதும் அவருடைய வாழ்க்கை பெரும்பாலும் சோகத்திலேயே கழிந்தது. அவற்றை மீறித்தான் அவரால் சாதிக்கமுடிந்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ் நமக்கு அளித்திருக்கும் மிக முக்கியமான ஒரு படிப்பினை, அவருடைய  ஸ்டான்ஃபோர்ட் உரையில் இருக்கிறது.

யாரும் இறக்க விரும்புவதில்லை.சொர்கத்துக்குப் போக வேண்டும் என விரும்புவன்கூட அங்கு போவதற்காக இறக்க விரும்புவதில்லை. இறப்பே நம் அனைவருக்கு இறுதி முடிவு. அதில் இருந்து தப்பித்தவர் யாரும் இல்லை. சாவு தான் உலகின் மிக உன்னதமான கண்டுபிடிப்பு. பழையதைக் கழித்து புதியதற்கு வழி செய்கிறது. இன்று புதிதாகப் பிறந்தவர்களான நீங்களும் நாளை பழையதாகி மறைந்து போவீர்கள்.  கஷ்டமாக இருந்தாலும் இது தான் சாசுவதமான உண்மை.

வாழும் காலம் கொஞ்ச காலமே. அதை மற்றவர்களின் வாழ்க்கையாக வாழ்ந்து வீணாக்காதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேட்பதை விட உங்கள் மனம் என்ன சொல்கிறது என்று கேளுங்கள். உங்கள் உள்ளுணர்வு காட்டும் வழியில் தைரியமாகச் செல்லுங்கள்.  நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களை விட உங்கள் மனதுக்கு மிகச் சரியாகத் தெரியும்.

‘ஸ்டீவ் ஜாப்ஸ் செய்தது ஒன்றுமே இல்லை, இதையெல்லாம் புரட்சி என்று சொல்வது வீண். உண்மையில் புரட்சி என்னவென்றால்…!’ என்று சொல்லி யாராவது ஒருவர் மெய்யாகவே ஸ்டீவ் ஜாப்ஸின் சாதனைகளை முறியடிக்கவேண்டும். அதுதான் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு மனித குலம் செலுத்தும் மரியாதை. இந்தச் சாதனையைச் செய்துமுடிக்க ஸ்டீவே வழியையும் காட்டியிருக்கிறார்.

‘பசியோடு இருங்கள்.முட்டாளாக இருங்கள்!’.

(முற்றும்)

0

அப்பு

10 comments so far

  1. Saravanakumaran
    #1

    அருமையான தொடர், அப்பு. நடுவில் தான் ஆரம்பித்தேன். இடைவிடாமல் படிக்க தூண்டியது, உங்கள் எழுத்து. வாழ்த்துக்கள்.

  2. புலவர் தருமி
    #2

    நேர்த்தியான தொடர். அருமையான பத்தியோட முடித்துள்ளார் எழுத்தாளர் அப்பு. மேலும் பல நல்ல தொடர்களை அப்புவிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

  3. Arivazhagan
    #3

    avarukkana anjaliyei naam endrum seivom

  4. மாணவன்
    #4

    ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றுத் தொடரை மிகவும் சுவாரசியமாகவும் சிறப்பாகவும் நிறைவு செய்துள்ளீர்கள் அப்பு சார் பாராட்டுகள்

    மேலும் பல சிறப்பான தொடர்களை எழுத வாழ்த்துகள்!

  5. Velu
    #5

    Everybody hails Steve, the reality is he is not a role model to follow, he was an aggressive & ruthless businessman with gifted marketing skills. For last one week there is so much uproar and condolence messages for Steve. But the World simply forgets about the death of the Real Master Dennis Ritchie the man who was behind many technical advancement in the modern day Computer History.

    Steve was remembered as a life changer or like an archangel based on these trivia facts,
    fact No.1: he created a huge wealth fact No.2: a well known personality with a cult of following.

    Just face the facts,

    Did he makes his products to be accessible to everyone (He never reduced the cost of his products in India, in fact There is no place for India in his business policies).

    The answer is Simply No.

    He had an attitude to make more and more money.

    Whats the difference he makes nothing. Look at the world around you, so many people in this Industry makes the world more beautiful than him. I will name a few, Richard Stallman, Linus Torvalds, Jimmy Wales, Michael Widenius and many more faceless contributors who makes our life easy & better than Steve Jobs.

    Just wake up and open your eyes buddies.

  6. Suganya
    #6

    Wonderful style of narration, Appu ! Keep going !

    I am so blessed to read a biography of the man whom I admired a lot….

  7. கே. தியாகராஜன்
    #7

    ஸ்டீவ் ஜாபஸின் சுயரிதையை எழுத யாரையோ நிய்மித்துள்ளாராமே.

    நம்ம அப்பு அவர்களின் தொடரில் இருந்த விஷயங்களும் விறு, விறுப்ப்பும் அதில் இருக்குதா பார்ப்போம்.

    அப்புறம்.. அப்பு.. ஆப்பிளுக்கு அப்புறம் ஆரஞ்சு ஆரம்பிக்கிறதாக சொன்னீங்களே அது எப்போ?
    வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறோம்…

  8. அப்பு
    #8

    அனைவருக்கும் மிக்க நன்றி :) அடுத்து என்ன எப்பொழுது என்று தெரியவில்லை. எதிர்பாராவிதமாய் சில வேலைகள்!

  9. கிரி
    #9

    அப்பு அருமையான தொடர். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    கடைசியில் கொஞ்சம் விரைவாக முடித்தது போல இருந்தது அதற்கு ஸ்டீவ் இறப்பு ஒரு காரணமா?

    நீண்ட நாட்களுக்குப் (வருடங்கள்!) பிறகு ஒரு நல்ல தொடர் படித்து இருக்கிறேன். சும்மா சொல்லக்கூடாதுங்க அப்பு பட்டாசா இருந்தது தொடர்.

    இதை வெளியிட்ட தமிழ் பேப்பர் க்கும் நன்றி.

  10. Abarajithan
    #10

    சுவாரஸ்யமான தொடர். ஜாப்ஸ் தொடர்பான எனது சில எண்ணங்களை மாற்றியது. தேர்ந்த எழுத்துநடை. பாராட்டப்படவேண்டிய உழைப்பு.

    வாழ்த்துக்கள்…

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: