ஆதாம் கடித்த மிச்சம் – அத்தியாயம் 23

 

Log off

கேன்சர் வந்து உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் படுத்துக்கிடந்த சமயத்திலும் தன் தயாரிப்புகளை அவரால் மறக்கமுடியவில்லை.

‘மக்களே, உங்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தி சொல்லவேண்டும். அதை நானே உங்களுக்குச் சொல்வதுதான் சரியாக இருக்கும். இணையப் புற்றுநோயினால் நான் அவதிப்பட்டு வந்தேன். பயப்பட வேண்டாம், இது அறுவை சிகிச்சையினால் குணப்படுத்தக் கூடிய ஒன்று. போன வார இறுதியில் ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. வேறு சிகிச்சை எதுவும் தேவைப்படாது. இந்த மாதம் ஒய்வெடுத்துக் கொண்டு அடுத்த மாதம் மீண்டும் வேலைக்கு வந்துவிடுவேன்… பிறகு, 17 இன்ச் பவர்புக் மற்றும் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மூலம் இந்த மெயிலை அனுப்பியிருக்கிறேன்.’

இப்படி ஒரு மெயிலை 2004-ல் ஸ்டீவ் ஜாப்ஸே அனுப்பிய பிறகுதான் அவருக்கு உடல்நிலை சரியில்லாதது உலகுக்குத் தெரியவந்தது. ஆனாலும் இதற்கு மேல் எந்த விவரத்தையும் யாரும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை! பின்னாளில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் தன்னைப் பற்றி சற்றே கூடுதல் விவரங்கள் அளித்தார் ஸ்டீவ்.

வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இது தான் கடைசி நாள் என்று நினைத்து கழியுங்கள். ஒரு நாள் அது நிச்சயம் உண்மையாகி விடும். என்னுடைய 17-வது வயதில் இதைப் படித்தேன். கடந்த 33 வருடங்களாக காலையில் எழுந்தவுடன் கண்ணாடியைப் பார்த்து, இது தான் என்னுடைய கடைசி நாள் என்றால் அதை எவ்வாறு கழிக்கப் போகிறேன் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் சீக்கிரம் இறந்து விடுவேன் என்பதை நான் நன்கு அறிந்துகொண்டதுதான் என் வாழ்வின் மிகப் பெரிய முடிவுகளை எடுக்க உதவியாக இருந்திருக்கிறது. ஏனெனில் இறப்புக்கு முன் மானம், அவமானம், தோல்வி எல்லாம் காணாமல் போய் விடுகிறது.

இந்தத் தத்துவங்களை உதிர்த்தபிறகு தன் புற்றுநோய் கதையைச் சொன்னார். காலை செக்கப் போனபோது கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மூன்று முதல் ஆறு மாதங்கள் என்று வாழ்க்கைக்குக் கெடு விதிக்கப்பட்டதாகவும், பிறகு சாயங்காலம் மேலும் சில பரிசோதனைகள் செய்த பிறகு, கவலைப்படவேண்டாம் குணப்படுத்தக்கூடிய கான்சர்தான் என்று சொல்லப்பட்டதாகவும் சொன்னார்.

அவர் சொல்லாமல் விட்ட விஷயம், அறுவை சிகிச்சை பற்றியது. இவருடைய புற்றுநோயை ஆபரேஷன்மூலம் குணப்படுத்தமுடியும்.  ஆபரேஷன் செய்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் பத்து வருடங்கள் தாண்டியும் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். இருந்தும் ஸ்டீவ் ஜாப்ஸ் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. சுற்றி இருந்தவர்கள் பைத்தியம் பிடிக்காத குறையாக கெஞ்சிய பிறகும் ஸ்டீவ் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

பத்திய உணவு சாப்பிட்டு கேன்சரைக் கரைக்க முடியுமா என்றெல்லாம் ஆராய்ச்சியில் இறங்கினார். ஒன்பது மாதங்களுக்கு பின்னர், அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்கினார் என நம்பத் தகுந்த தகவல்கள் உள்ளன. பிறகுதான் மேலே பார்த்த மெயில் அவரிடம் இருந்து வந்தது.

2006 வாக்கில் ஸ்டீவ் ஜாப்ஸ் மிகவும் மெலிந்து காணப்பட்டார். 2008ல் முன்பைவிட மோசம்.  என்ன பிரச்னை என்ற துருவி கேட்டவர்களுக்கு கிடைத்த ஒரே பதில், அது அவருடைய அந்தரங்கம்.

ஆப்பிள் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம். நிறுவனத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி உள்ளிட்ட லாப நஷ்டத்துக்கு சம்பந்தப்பட்ட எந்த ஒரு செய்தியையும் சட்டப்படி பங்குச் சந்தைக்கு தெரிவித்தாக வேண்டும். ஆனால் அமெரிக்காவில் ஒரு மனிதனின் உடல் நிலை அவனுடைய தனிப்பட்ட அந்தரங்க விவகாரம். சட்டப்படி தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. என்றாலும் தார்மீக அடிப்படையில் ஆப்பிள் ஸ்டீவின் உடல் நிலை பற்றிய உண்மையை தெரிவிக்கவேண்டும் என்ற கூக்குரல்கள் எழுந்தன. வழக்கம் போல ஆப்பிளும் ஸ்டீவ் ஜாப்ஸும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்துவிட்டார் என்று ப்ளூம்பர்க் நிறுவனம் தவறாகச் செய்தி வெளியிட்டது. பிரபலமானவர்கள் திடீரென இறந்து விட்டால் அவர்களைப் பற்றி செய்திக் குறிப்பு வெளியிட செய்தி நிறுவனங்கள் அவ்வப்போது செய்திகளை சேகரித்து வைக்கும். அப்படி செய்யும்போது,  தவறுதலாக மரணச் செய்தி வெளிவந்துவிட்டது.

சும்மா இருப்பாரா? இதே போன்ற ஒரு சூழலில், எழுத்தாளர் மார்க் ட்வைன் அளித்த பதில் சுவாரஸ்யமானது.  ’என் இறப்பு பற்றிய செய்திகள் மிகவும் மிகைப்படுத்தப் பட்டவை.’  ஸ்டீவ் இதை வேறு வகையில் கையாண்டார். ஆப்பிள் தயாரிப்புகள் பற்றிய ஸ்லைட்ஷோ ஒன்றின் இறுதியில் எனது ரத்த அழுத்தம் 110/70 என்று ஒரு ஸ்லைட் போட்டு காட்டினார். அதாவது, நான் உயிருடன்தான் இருக்கிறேன் என்று அர்த்தம்.

ஆனால் அடுத்த சில மாதங்களில், 2009-ல் ஆப்பிளின் முக்கிய நிகழ்ச்சிக்கு அவர் வராமல் தன் சார்பாக ஒருவரை அனுப்பிவைத்தபோது மீண்டும் சந்தேகங்கள் கிளம்பின. வழக்கம் போல் மீண்டும் ஸ்டீவ் கடிதம் எழுதினார். ஆம், என் எடை குறைந்துகொண்டிருக்கிறது. ஹார்மோன் பிரச்னையாக இருக்கலாம்.  11 வருடங்களாக ஆப்பிளுக்கு உழைத்துக் கொண்டிருக்கிறேன். என் கடமைகளை செய்யமுடியாத சூழல் உருவானால், முதல் ஆளாக நானே அதைத் தெரிவிப்பேன்.

பத்து நாள்கள்கூட ஆகவில்லை. மீண்டும் ஒரு கடிதம் எழுதும் கட்டாயம் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு!  நாங்கள் எதிர்பார்த்ததைவிட நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. என் பொருட்டும் என் குடும்பத்தினரின் பொருட்டும் கம்பெனியின் நன்மையைக் கருதியும் விடுமுறையில் செல்லவிருக்கிறேன். தினசரி கடமைகளில் கவனம் செலுத்த மாட்டேன். ஆனால் தலைமைச் செயல் அதிகாரி என்ற பொறுப்பில் இருப்பதால் அனைத்து முக்கிய முடிவுகளிலும் என் முத்திரை இருக்கும்.

இரண்டு மாதங்களுக்குமுன் ஸ்டீவுக்குக் கல்லீரல் மாற்று சிகிச்சை நடந்த விஷயம் அப்போது வெளியானது. ஆபரேஷன் செய்த ஆஸ்பத்திரி முதலில் இதை ஒப்புக்கொண்டாலும் பின்னர் மாற்றி சொன்னது. ஸ்டீவிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை. மாற்று கல்லீரல் எப்படி உடனடியாகக் கிடைத்திருக்கும்? வரிசையில் காத்திருந்து அல்லவா பெறவேண்டும்? பணம் இருந்ததால் இந்த ஒழுங்கு முறை மாற்றப்பட்டதா? எதற்கும் பதிலில்லை.

பின்னாளில் வழக்கம் போல வீடியோ கேமரா, கேமரா செல்போன் எல்லாம் தடை செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் ஸ்டீவ் தோன்றினார். அப்போது பதிலளித்தார். உங்களில் சிலருக்கு எனக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை நடந்தது தெரிந்திருக்கும். கார் விபத்தில் உயிர் இழந்த 20 வயதுக்காரர் தன் உறுப்புகளை பெருந்தன்மையாக தானம் செய்ய முன்வந்த காரணத்தால் நான் இன்று உங்கள் முன் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, கலிபோர்னியா மாகாணத்தில், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்கும் போது, விபத்தில் உயிர் இழந்தால் உறுப்புகளை தானமாக கொடுக்க விருப்பமா என்று அனைவரையும் அரசு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.  கவர்னர் அர்னால்ட்டை கட்டாயப்படுத்தி இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது என்றும் சொல்வார்கள்.

இது ஒரு பக்கமிருக்க, 2011 ஜனவரியில் மறுபடியும் கடிதம் எழுதினார் ஸ்டீவ். என்னுடைய உடல் நிலையைக் கவனித்துக் கொள்ளும் பொருட்டு எனக்கு விடுமுறை வேண்டும் என கேட்டேன். லீவு கொடுத்தப்படியால் விடுமுறையில் செல்கிறேன். வழக்கம் போல் நான்தான் இன்னும் தலைவராக இருக்கிறேன். தினசரி நடவடிக்கைகளை டிம் குக் பார்த்துக் கொள்வார். எவ்வளவு விரைவில் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பி வருவேன்.

ஆகஸ்ட் மாதம் ராஜினாமா கடிதம் வந்தது. என்னால் என் வேலைகளைச் சரிவர கவனிக்க முடியவில்லை என்று தோன்றும் தினத்தில் நானாக பதவி விலகி விடுவேன் என்று பல நாட்களாகச் சொல்லி வருகிறேன். துரதிருஷ்டவசமாக அந்த நாள் வந்துவிட்டது. தலைமைச் செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்கிறேன். போர்ட் உறுப்பினர்களுக்குச் சம்மதம் என்றால் போர்ட் சேர்மனாகவும் ஆப்பிளின் தொழிலாளியாகவும் தொடர விரும்புகிறேன். ஆப்பிள் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க என்னால் இயன்றதைச் செய்வேன். ஸ்டீவ் ஜாப்ஸின் இறுதிக் கடிதம் இது.

(அடுத்த இதழில் முடியும்)

0

அப்பு

3 comments so far

  1. கே. தியாகராஜன்
    #1

    கட்டுரையின் நாயகன் ஸ்டீவ் ஜாப்ஸின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே அவ்ருடைய குணாதிசயங்கள் மற்றும் அவரதது கடைசி நாட்கள் பற்றிய இப்பகுதி அமைந்துள்ளது.

  2. அப்பு
    #2

    அஞ்சலியை மனதில் குறிக் கோளாக வைத்து எழுதப் பட்டது தான் :)

  3. Abarajithan
    #3

    //இணையப் புற்றுநோயினால் நான் அவதிப்பட்டு வந்தேன்.//

    கணையப் புற்றுநோய். தயவுசெய்து திருத்தவும்.

    இப்பதிவிலும் கடந்த பதிவிலும் எழுத்து நடை சிறிது விட்டு விட்டு தொடர்ச்சியாக இல்லாமல் சுவாரஸ்யம் குன்றியதுபோல உள்ளது. இழப்பு சம்பந்தப்பட்ட பதிவுகளாக இருப்பதால் பிரச்சனை இல்லை. பொருத்தமாக உள்ளது.

    Let Steve escape the cycle of rebirth.

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: