தோழர்

அத்தியாயம் 43

கம்யூனிஸ்ட் லீக் சிதறிவிட்டது. தொழிலாளர் வர்க்கத்துக்கான ஓர் உறுதியான கட்டமைப்பு இல்லை. புதிதாக ஒன்றைத் தொடங்குவதும் சாத்தியமல்ல. இருந்தாலும் அப்படிப்பட்ட ஓர் அமைப்புக்கான ‘வரலாற்றுத் தேவை’ இருப்பதாக மார்க்ஸும் எங்கெல்ஸும் கருதினர். உழைக்கும் மக்களிடமும் அவர்களுக்காகச் சிந்திக்கும் தலைவர்களுடனும் இருவரும் உறவு வளர்த்துவந்தனர். ஜெர்மனியில் மீண்டும் ஒரு புரட்சிப் புயல் பரவும் என்று எங்கெல்ஸ் எதிர்பார்த்தார். புதிதாக உருவாகப்போகும் அமைப்பு, முந்தைய அமைப்புகள் செய்த தவறுகளிடம் இருந்து பாடம் படித்துக்கொண்டு வளரவேண்டும் என்று எங்கெல்ஸ் விரும்பினார்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் செல்வாக்கு பரவிக்கொண்டிருந்த சமயம் அது. அறிக்கை முன்வைத்த கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பலர் கம்யூனிசம் குறித்த விவாதங்களில் ஈடுபட்டு வந்தனர். ‘தலைமறைவாக இருந்த காலத்திலும் நாங்கள் கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளோம்’ என்று மகிழ்ந்தார் எங்கெல்ஸ். பிற நாடுகளில் உள்ள புரட்சிகர தலைவர்களின் ஆதரவையும் எங்கெல்ஸும் மார்க்ஸும் திரட்டிக்கொண்டிருந்தனர். தீவிர கண்காணிப்பு காரணமாக ஜெர்மனியை மட்டும் நெருங்கமுடியவில்லை. ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் லீக் அமைப்பை ஏற்படுத்தலாமே என்று நண்பர்கள் கேட்டுக்கொண்டபோது அவர்கள் மறுத்துவிட்டார்கள். ‘இப்போதுள்ள நிலையில் அவ்வாறு செய்வது பலனற்றது, முட்டாள்தனமானது.’

1850களில் சாசன இயக்கத்தின் செயல்பாடுகளிலும் தேக்கநிலை ஏற்பட்டது. ஒரு பக்கம் தொழிற்சங்கங்களின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது ஒரு காரணம். பிரிட்டிஷ் தொழிலாளர்களைச் சரியான திசையில் செலுத்தவேண்டிய கடமையில் இருந்து சாசன இயக்கத்தினர் பின்வாங்கிக்கொண்டிருந்தனர். தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வு குறைந்துபோயிருந்தது. அதற்குக் காரணம் பிரிட்டனின் செல்வச் செழிப்புதான் என்று புரிந்துகொண்டார் எங்கெல்ஸ். காலனியாதிக்கத்தின் மூலம் திரட்டப்பட்ட செழிப்பு. முதலாளிகள் அச்சமின்றி, கவலையின்றி இருந்தனர் தொழிற்சங்கங்கள் வாயிலாக தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதில் அவர்களுக்கு சிரமம் எதுவும் இருக்கவில்லை. இதுவே போதும் என்று தொழிலாளர்களும் திருப்திப்பட்டுக்கொண்டனர்.

முதலாளிகள் தங்கள் பணபலத்தை வைத்துக்கொண்டு லஞ்சம் கொடுத்து தொழிலாளர்களை வளைத்துக்கொள்கின்றனர் என்று மார்க்ஸுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார் எங்கெல்ஸ். அதனால் போர்க்குணம் மங்கிபோயிருக்கிறது. வர்க்க உணர்வு தொலைந்துபோயிருக்கிறது. புரட்சிகர மாற்றம் தேவையில்லை, ‘சீர்திருத்தங்களே’ போதும் என்று தொழிலாளி வர்க்கம் நினைக்கிறது. அப்படிப்பட்ட கருத்தாக்களையே அவர்கள் ஆதரிக்கிறார்கள். சீர்திருத்தம் வாயிலாகவே உடனடி லாபம் பெறமுடியும் என்று அவர்கள் நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். சுருக்கமாகச் சொல்வதானால்,‘ஆங்கிலேய பாட்டாளி வர்க்கம் பூர்ஷ்வா வர்க்கமாக மாறிக்கொண்டிருக்கிறது.’ இந்தப் போக்கு வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்படியே தொடர்ந்தால் பூர்ஷ்வா வர்க்கமும் அதற்கு ஆதரவான பூர்ஷ்வா தொழிலாளர் வர்க்கமும் உருவாகிவிடும் என்று எழுதினார் எங்கெல்ஸ்.

முற்போக்கான பூர்ஷ்வா பத்திரிகைகளுக்கு எழுதிக்கொண்டிருந்தார் எங்கெல்ஸ். அவரது பல கட்டுரைகள் நியூ யார்க் டெய்லி ட்ரிப்யூனில் வெளியாகிக்கொண்டிருந்தன. மார்க்ஸுக்கு தன் ஆங்கிலத்தின்மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்பதால் எங்கெல்ஸ் அவர் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். இருவரும் இணைந்தும் எழுதினர். கிரிமியன் யுத்தம் பற்றி எங்கெல்ஸ் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளை மார்க்ஸ் ஜெர்மனியில் மொழிபெயர்த்தார். ரஷ்ய மொழி உள்ளிட்ட ஸ்லாவ் மொழிகளிலும் எங்கெல்ஸ் தேர்ச்சி பெற்றிருந்ததால் கிழக்கு பகுதி அரசியல் குறித்தும் எங்கெல்ஸ் விரிவாக எழுதினார். துருக்கியில் நிகழும் மாற்றங்களைக் கவனித்து அதையும் பதிவு செய்தார்.

ரஷ்யா, ஜெர்மனி, துருக்கி, பிரிட்டன், பிரான்ஸ் என்று எந்தவொரு நாட்டின் அரசியல், சமூக நிலவரத்தைப் பற்றி எழுதினாலும் மேலாதிக்கத்தை எதிர்த்தும் ஒடுக்குமுறைக்கு ஆளான மக்களுக்கு ஆதரவாகவும் எழுதினார் எங்கெல்ஸ். அதற்கான சரியான மதிப்பீட்டை உருவாக்கிக்கொண்ட பிறகே எழுதினார். ஸ்லாவிய மக்களை துருக்கிய சாம்ராஜ்ஜியம் ஒடுக்குவதை எங்கெல்ஸ் எதிர்த்தார். பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் துருக்கிக்குத் தரும் ஆதரவை விமரிசித்தார். ரஷ்ய ஜார் ஆட்சியை எதிர்த்தார். ஜாரின் பிரதேச நீட்டிப்பு ஆர்வத்தைச் சுட்டிக் காட்டி எச்சரித்தார். ஜாரின் பலம் அதிகரித்தால் அது ‘ஐரோப்பாவின் ஜனநாயக மற்றும தொழிலாளர் அமைப்புகளை ஆபத்தில் தள்ளிவிடும்’ என்றார்.

எங்கெல்ஸுடன் மார்க்ஸும் இணைந்து ஜார் ஆட்சியை விமரிசித்தார். பால்கன் நாடுகளுக்கு நான் நண்பன் என்று ஜார் சொல்வதை நம்பவேண்டாம். ஜாரின் ஆட்சி ஜனநாயகத்தன்மையற்றது. ஜார் ரஷ்யாவால் யாருக்கும் நன்மை ஏற்படப்போவதில்லை. பால்கன் மக்களை மட்டுமல்ல ரஷ்யர்களுக்கும்கூட அது ஆபத்தில்தான் போய்முடியும். ரஷ்யாவின் ராணுவ பலத்தைக் குறைக்க பிரிட்டனும் பிரான்ஸும் திட்டமிட்டு வருகின்றன. மத்திய கிழக்கிலிருந்தும் பால்கன் பிரதேசத்திலுமிருந்தும் ரஷ்யாவை விரட்டியக்க அவர்கள் விரும்புகிறார்கள். அதே சமயம், ஜார் ஆட்சியை பட்டவர்த்தனமாக எதிர்க்கவும் அவர்கள் துணியமாட்டார்கள். ஜார் ஆட்சி நடைபெறவேண்டும் என்றும் அதே சமயம் அது தமக்கு தொந்தரவளிக்காதவாறு இருக்கவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஜார் ஆட்சி ஒருவேளை அகற்றப்பட்டால் வேறு புரட்சிகர, மக்கள் ஆதரவு, ஜனநாயக ஆட்சி அமைந்துவிடக்கூடும் என்னும் பயமும் அவர்களுக்கு இருக்கிறது.

துருக்கிய ஒட்டமான் சாம்ராஜ்ஜியத்தின் பிடியில் சிக்கியிருக்கும் நாடுகள் புரட்சிகரமான போராட்டங்களின் மூலமும் நடவடிக்கைகள் மூலமும் மட்டுமே சுதந்தரத்தை அடையமுடியும் என்று மார்க்ஸும் எங்கெல்ஸும் நம்பினர். அதே போல் ரஷ்ய ஜார் ஆட்சியை வீழ்த்தவேண்டிய அவசியத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். பிரிட்டனும் பிரான்ஸும் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் ரஷ்யாமீது போர் தொடுக்கத்தான் போகின்றன. அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், ‘மக்களின் ஒத்துழைப்புடன் புரட்சிகர யுத்தத்தின் மூலம் ஜார் ஆட்சியை அகற்றவேண்டும்.’

கிரிமியன் யுத்தம் 1854 முதல் 1856ம் ஆண்டு வரை நடைபெற்றது. துருக்கியைப் பங்குபோட்டுக்கொள்வதுதான் போரின் நோக்கமாக இருந்தது. ஒரு பக்கம் ரஷ்யா திரண்டு நிற்க இன்னொரு பக்கம் ரஷ்யாவை வீழ்த்த துருக்கி பிரான்ஸுடனும் பிரிட்டனுடனும் சார்டீனியாவுடனும் இணைந்துகொண்டது. துருக்கியைப் பங்கு போடுவதற்காக இரு அணிகள் மேற்கொள்ளும் போராக இதனை எங்கெல்ஸ் கண்டார். அன்றாட போர் செய்திகளையும் திட்டங்களையும் வியூகங்களையும் தயாரிப்புகளையும் விளைவுகளையும் பற்றி எங்கெல்ஸ் பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார். கிட்டத்தட்ட 70 கட்டுரைகள் ட்ரிப்யூனில் வெளிவந்தன.

கிரிமிய யுத்தத்தில் மார்க்ஸும் எங்கெல்ஸும் யாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர்? ரஷ்யாவில் ஜார் ஆட்சி அகற்றப்படவேண்டும் என்பதால் எங்கெல்ஸ் வெளிப்படையாகவே தனது ரஷ்ய எதிர்ப்பைப் பதிவு செய்தார். ரஷ்யாவின் ராணுவ பலத்தை அவர் குறைத்தே மதிப்பிட்டார். அதே சமயம், பிரான்ஸையும் பிரிட்டனையும் அவரால் ஆதரிக்கவும் முடியவில்லை. ரஷ்யாவை ஒடுக்குவதற்காக அவர் இந்த இரு நாடுகளையும் ஆதரிக்கவில்லை. துருக்கியை ஆக்கிரமிப்பதுதான் இவற்றின் நோக்கம் என்பதால் அவற்றை எங்கெல்ஸ் கண்டித்தே எழுதினார். அதே சமயம், ஒட்டமான் சாம்ராஜ்ஜியம் ஸ்லாவ் மக்களை ஒடுக்குவதையும் எங்கெல்ஸ் கண்டித்தார்.

தீர்வாக அவர் முன்வைத்தது ஒன்றை மட்டும்தான். புரட்சிகர நடவடிக்கை. இந்தப் போரைப் பயன்படுத்திக்கொண்டு ஜார் ஆட்சிக்கு எதிராக ரஷ்ய மக்கள் அணிதிரண்டு புரட்சியில் ஈடுபடவேண்டும். பிரிட்டனிலும் பிரான்ஸிலும் ஜெர்மனியிலும் உழைக்கும் மக்கள் தங்கள் அரசாங்கத்துக்கு எதிராகத் திரளவேண்டும். ஒட்டமான் சாம்ராஜ்ஜியத்தின் ஆதிக்கத்தை ஸ்லாவ் மக்கள் எதிர்க்கவேண்டும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், கிரிமியப் போர் அரசாங்கங்கள் நடத்தும் போராக அல்லாமல் மக்கள் நடத்தும் புரட்சிப் போராக மாறாகவேண்டும் என்று எங்கெல்ஸும் மார்க்ஸும் விரும்பினர். ஆனால், இந்தக் கனவு நிறைவேறவில்லை. ரஷ்யா தோற்கடிக்கப்பட்டது. ஆனால் ரஷ்யர்கள் ஜார் ஆட்சிக்கு எதிராகத் திரளவில்லை. பிரிட்டனிலும் பிரான்ஸிலும் துருக்கியிலும்கூட மக்கள் புரட்சி நடைபெறவில்லை.

எங்கெல்ஸ் தனது பிரசாரத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. காலனியாதிக்கத்துக்கு எதிராகவும் முதலாளித்துவத்துக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காதபோது அவர் துவண்டுவிடவில்லை. மக்கள் போராட்டங்கள் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் தன் ஆதரவை நீட்டித்துக்கொண்டிருந்தார். மார்க்ஸின் ஆதரவு அவரைத் தொடர்ந்து இயங்கவைத்தது. குறிப்பாக, ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நடைபெறும் விடுதலை இயக்கங்களை மார்க்ஸும் எங்கெல்ஸும் தீவிரமாக ஆராய்ந்தனர். 1850 தொடங்கி சீனாவிலும் இந்தியாவிலும் நடைபெற்று வந்த மக்கள் இயக்கங்களை அவர்கள் ஆய்வு செய்தனர். பிரிட்டனின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்நாடுகளில் திரண்டு வந்த மக்கள் ஆதரவைக் கண்டு இருவரும் உற்சாகம் கொண்டனர்.

(தொடரும்)

0

- மருதன்

No comments yet

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: