அணுமின்னாற்றல் – ஐயங்களும் தெளிவுகளும்
மக்களிடம் நிலவும் ஐயங்களுக்குப் பதில்களைச் சொல்கிறார் எல்.வி. கிருஷ்ணன். எல்.வி.கிருஷ்ணன், இந்திய அணுசக்திக் கழகத்துக்காக இந்தியாவில் பல இடங்களில் பணியாற்றியுள்ளார். இறுதியாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றார்.
ஐயங்களும் தெளிவுகளும்…
மக்களின் தேவைக்காகத்தான் அணுமின் நிலையங்கள் என்னும்போது மக்களின் நம்பிக்கையைப் பெறாமல் ஒரு திட்டம் வெற்றிபெறும் என்று எப்படி எதிர்பார்ககமுடியும்? ஒரு கருத்துக்கேட்புக் கூட்டத்தைக் கூட நேர்மையாக நடத்ததாவர்கள், எப்படி பாதுகாப்பு விதிகளை தொடர்ச்சியாகக் கடைப்பிடிப்பார்கள் என்று நம்புவது?
அனல்மின் நிலையமோ, அணுமின் நிலையமோ, இரசாயன ஆலையோ, எஃகு ஆலையோ, எதுவானாலும், நிலையத்தை அமைக்குமுன் அங்குள்ள மக்களிடம் கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்துவது ஒரு சிறந்த திட்டம் என்பதில் ஐயமில்லை. கருத்துப் பரிமாற்றம்தான் அக்கூட்டத்தின் குறிக்கோள். இந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்தும் பொறுப்பு மாவட்ட ஆட்சியருடையது. மக்கள், மாவட்ட ஆட்சியர், நிலையத்தினர் எல்லாரும் ஒன்றுபட்டு, அமைதியான முறையில் நடந்தால்தான் கூட்டம் வெற்றிபெறும். பாராளுமன்றத்தில் நடப்பதுபோல் கூச்சலும் குழப்பமுமாக இருந்தால், அது தோல்விதான்.
ஏன் இப்படிப்பட்ட நிலையங்களோ, அதற்கான தொடக்க வேலைகளோ வெளிப்படையாக நடப்பதில்லை?
ஒரு மாநில அரசின் ஆதரவு இன்றி அணு மின் நிலையங்களை நிறுவமுடியாது. அதற்கான நிலம் கையகப்படுத்துவது வெளிப்படையான செயல்தான். தவிர மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரவையின் ஒப்புதலும் தேவை. இந்த ஒப்புதலை அமைச்சரவையின் இணையத்தளத்தில் காணமுடிகிறது. பணிகள் துவங்குமுன் ஏ.இ.ஆர்.பி என்னும் மத்திய அரசின் அணுசக்தி கட்டுபாட்டு வாரியத்தின் ஒப்புதல் தேவை. இந்த ஒப்புதல்கள் எல்லாம் மாநிலமொழியிலும் இருந்தால் பொது மக்களுக்கு உதவியாக இருக்கும். நிலையம் தனது இணைய தளத்தில் இவற்றை மொழியாக்கி தர ஆவன செய்யவேண்டும்.
அணுமின்நிலையம் என்றாலே ஒரு வித பயமும் தவிப்பும் அதிருப்தியும் மக்களிடையே பரவியதற்கு என்ன காரணம்? இந்தத் தயக்கத்தை நீக்க அரசு என்ன செய்திருக்கிறது?
அணுமின் நிலையங்களை அணுகுண்டுடன் இணைத்து மக்களை அச்சுறுத்துவது, அறிவியல் ஆய்வுகளின் முடிவை ஒதுக்கிவிட்டு, எந்த அளவிலிருந்தாலும் கதிர்வீச்சு ஒரு மாபெரும் உயிர்க்கொல்லி என்று விமரிசிப்பது – இவை இரண்டும் மக்களிடையே பயத்தை உண்டாக்குகின்றன. எந்த நாட்டிலும் மக்கள் அரசின்மீது நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரியவில்லை. அணுசக்தித் துறை பணியாளர்கள் கல்லூரிகளுக்குச் சென்று கதிரியக்கம் குறித்து விளக்கங்கள் அளித்து வருகிறார்கள். மாணவர்கள் அணுஆய்வு மையங்களுக்குச் சென்று அங்கு நடப்பதை அறிந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். என்றாலும், எந்த அரசுத்துறை மீதும், அணுசக்தித் துறை உட்பட, மக்களுக்கு நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை.
இதுவரை நிறுவப்பட்ட அணுமின் நிலையங்களின் செயல்பாடு (பெர்ஃபார்மன்ஸ்) எப்படி இருந்திருக்கிறது? அதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறீர்களா?
அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்குகின்றனவா என்பதை கண்காணித்துக் கண்டறிவது ஏ.இ.ஆர்.பி அமைப்பின் பொறுப்பு. நிலையங்களின் செயல்பாட்டில் உள்ள முக்கியக் குறைபாடுகள் இதன் ஆண்டறிக்கையில் இடம் பெறுகின்றன. இந்த ஆண்டறிக்கையை யாரும் இணையத்தளத்தில் காணலாம். குறைபாடுகள் குறித்த அறிக்கையை அவ்வப்போது மாநில மொழிகளிலும் வெளியிடுவது புரளிகளை தவிர்க்க உதவும்.
ஒரு அணுமின் நிலையத்தை ஒரு இடத்தில் அமைக்க என்ன என்ன விதிமுறைகள் உள்ளன? கூடங்குளத்தில் இதெல்லாம் முறையாகப் பின்பற்றப்பட்டதா?
இந்த விதிமுறைகள் அனைத்தையும் ஏ.இ.ஆர்.பி அமைப்பின் இணையத்தளத்திலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரவையின் இணையத்தளத்திலும் காணலாம். இவற்றை மாநில மொழிகளில் தர வேண்டியது அவசியம். அணுமின் நிலையம் இதைச் செய்ய முன்வந்தால் நல்லது.
போபால் விபத்தையே இன்னும் மக்கள் மறக்கவில்லை. அதன் பாதிப்பே இன்னும் மறையவில்லை. இந்நிலையில் அதே போன்ற ஆபத்தை விளைவிக்கும் (என்று அஞ்சத்தக்கக) மற்றொரு பிராஜெக்ட். அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்று எந்த தைரியத்தில் சொல்கிறீர்கள்? மற்ற இடங்களில் ஏற்படும் விபத்துக்கும் அணுமின்சார வளாகத்தில் ஏற்படும் விபத்துக்கும் உள்ள வேறுபாட்டைக் கருத்தில் கொண்டால், இது தேவையா என்ற கேள்விதானே எழுகிறது.
அணுமின் நிலையங்களில் ஏற்படக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் விபத்துகளுடன் போபால் விபத்தை ஒப்பிடமுடியாது. இவ்விரண்டிற்குமிடையே பெருத்த வேறுபாடுகள் உள்ளன. போபால் ஆலையிலிருந்து வெளிப்பட்ட விஷக்கசிவின் விளைவுகள் என்னவென்று அறியாமலேயே ஆலை அமைக்கப்பட்டு இயங்கத்துவங்கியது. சுற்றுச்சூழலில் விஷக்கசிவின் அளவை உடனுக்குடன் அறிந்திட கருவிகள் இல்லை. அக்கசிவு உயிரினங்களை உடனடியாகத் தாக்கவல்லது. ஆலையை ஒட்டினாற்போல நிறைய மக்கள் குடியிருப்புகள் இருந்தன. ஆகையால் அதிக உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
மாறாக, அணு உலையில் கசிவு நிகழ்ந்தால், கதிர்வீச்சின் அளவை உடனுக்குடன் எளிதாக அறிந்திட முடியும். உடனடி பாதிப்பு இருக்காது. உலையிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை மக்கள் குடியிருப்புகள் தவிர்க்கப்படுவதால், அங்கு கதிர்வீச்சளவு குறைந்துபோகிறது.
ஒரு அணுமின் நிலையத்தைச் சுற்றி எத்தனை கிமீ வரை மக்கள் இருக்கலாம்/கூடாது?
உலகில் எல்லா நாடுகளிலும் அணு உலையைச்சுற்றி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை குடியிருப்புகள் இருக்கக்கூடாது என்கிற கட்டுப்பாடு உள்ளது. சில நாடுகளில் இந்த தூரம் குறைவாக, அதாவது சில நூறு மீட்டர்கள் என்கிற அளவிலேதான் உள்ளது. நம் நாட்டிலே ஒரு அணு உலையைச் சுற்றி ஒன்றரை கிலோமீட்டர் வரையிலான இடத்திற்குள் குடியிருப்புகளைத் தவிர்க்கவேண்டும் என்பது நியதி. கூடங்குளத்தைச் சுற்றி 30 கிலோமீட்டர் வரை மக்கள் குடியிருப்பு அனுமதிக்கப்படாது என்பது உண்மையல்ல, புரளிதான்.
ரஷ்யா போன்ற நாடுகள் இந்தியா போன்ற 3ம் உலக நாடுகளிடம் அணுமின் நிலைய கட்டமைப்பு சாதனங்களைக் குறைந்த விலைக்குத் தள்ளிவிடுகின்றன. அவை second hand. எந்த துணிச்சலில் அதை நாம் வாங்குகிறோம்?
இந்தக் கருத்திற்கு ஆதாரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மற்றெல்லாத் தொழில்துறைகளைவிட அணுசக்தித் துறையில் தரக்கட்டுப்பாட்டுக்குச் சிறப்புக் கவனம் அளிக்கப்படுகிறது. அணுமின் நிலையச் சாதனங்களைத் தயாரிப்பவர்கள், சாதனங்கள் மீது நியூக்ளியர் என்கிற முத்திரை குத்துவதற்குத் தகுதி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இதற்காக, அவர்களின் ஆலைகள், மூன்றாம் தரப்பினரால் கண்காணிக்கப்படுகின்றன.
வெளிநாடுகளில் கடைப்பிடிக்கும் அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நாம் கடைப்பிடிப்போம் என்பதற்கு- என்ன உத்தரவாதம்? அதிலும் இந்தியா போன்ற, எவ்விதச் சட்டத்தையும் ஒழுங்காகக் கடைப்பிடிக்காத மக்கள் வாழும் நாட்டில் இது எப்பேற்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்?
எவ்வித சட்டத்தையும் ஒழுங்காகக் கடைப்பிடிக்காத மக்கள் வாழும் நாட்டிலும், இராணுவத்தில் பணிபுரிபவர்கள் கட்டுப்பாட்டுக்கு அடங்கி இருப்பதைக் காண்கிறோம். தக்க பயிற்சி மூலம் இது சாத்தியமாகிறது. அணு மின் நிலைய பணியாளர்களுக்கும் இது போல பயிற்சி தரப்படுகிறது. பயிற்சி முடிந்தபின் உலையில் பணிபுரிய ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு லைசென்சு வழங்கப்படுகிறது. அக்காலமுடிவில் மறுபயிற்சிக்குப் பிறகு லைசென்சு புதுப்பிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் நிர்ப்பந்தம் ஏதேனும் இதில் உள்ளதா?
அமெரிக்காவின் நிர்ப்பந்தம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அமெரிக்க கம்பெனிகளிடமிருந்து இந்தியா அணு உலை வாங்கும் என்கிற எதிர்பார்ப்பு அமெரிக்காவிற்கு உள்ளது. இந்தியாவில் அணு உலை நிறுவ ரஷியா, பிரான்சு இவை இரண்டும் முந்திக்கொண்டதால், அமெரிக்காவிடமிருந்து வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை.
ஜப்பானில் நடந்த விபத்துக்குப் பிறகு வளர்ந்த நாடுகள் மாற்றுத்திட்டங்களை நோக்கி நகர்ந்து வரும் போது நாம் மட்டும் ஏன் பின்னோக்கி நடக்க வேண்டும்? ஜப்பான் போன்ற ஒரு நாட்டாலேயே அச்சூழ்நிலையைக் கையாள முடியவில்லை என்றால், இந்தியா எப்படி திணறும் என்று யோசித்துப் பாருங்கள்.
மின்சாரம் தயாரிக்க அணுவாற்றல் தேவை என நினைக்கும் நாடுகள் மாற்றுத்திட்டங்களோடு கூடவே அணு உலையையும் நோக்கித்தான் உள்ளன. குறிப்பாக, அமெரிக்கா, சீனா, தென்கொரியா இவற்றைக் கூறலாம். அணு உலைக்கான திட்டங்கள் தற்காலிகமாகத்தான் கைவிடப்பட்டுள்ளன. பொருளாதார நிலைமை இப்போது சீர்குலைந்திருக்கும்போது, அதிக செலவாகும் சூரியசக்திக்கு பலநாடுகளில் தகுந்த ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை.
ஜப்பான் நாட்டில் விபத்தை சமாளிப்பதில் பல சிக்கல்கள் இருந்தன. நாட்டின் ஒரு பகுதியில் 50 அதிர்வு எண் கொண்ட மின்சாரம், மற்றதில் 60 அதிர்வு எண் கொண்ட மின்சாரம் தயாரிப்பு. ஆகவே நாடு தழுவிய மின்சார இணைப்பு இல்லாததால், நாட்டின் மற்ற பகுதிகளில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தை உலைப்பகுதிக்கு அனுப்பமுடியாத நிலை. 10லிருந்து 18 நாட்கள் வரை விபத்துக்காளான நிலையத்தில் கும்மிருட்டு, கருவிகள் செயலாற்ற இயலாமை. நம் நாட்டு நிலைமை எவ்வளவோ மேல். ஆனாலும், அப்பகுதி மக்களின் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் வேறெந்த நாட்டிலும் காணமுடியாது.
அணு உலைக் கழிவு ஒரு பெரிய பிரச்னை. கூடங்குளம் அணுமின் நிலையக் கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும், பின்னர் அது மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் என்று சொல்லி அணு உலைகள் நிறுவப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அணு உலைகள் வெளித்தள்ளும் கழிவுகள் எப்படிக் கையாளப்படுகின்றன? கூடங்குளத்தில் இந்தக் கழிவுகளை நாம் எப்படி சமாளிக்கப்போகிறோம்?
இங்கு உலைக் கழிவு என்று குறிப்பிட்டிருப்பது உலையிலிருந்து அகற்றப்பட்ட எரிபொருள்தான். இதில் புளுட்டோனியம் என்கிற எரிபொருள் இருப்பதால் இதைக் கழிவு என்று சொல்வதற்கில்லை. இதை நம் நாட்டிலேயே பிரித்தெடுத்து மறுபடி பயன்படுத்தும் திட்டம் உண்டு. அப்படிப் பிரித்தெடுத்தபின் எஞ்சியதுதான் கழிவு. அதைக் கண்ணாடிக் கட்டி வடிவத்தில் மாற்றிப் பாதுகாப்பாகப் பராமரிப்பதுதான் வழி. இது நம் நாட்டில் மட்டுமல்ல, பிரான்சு, இங்கிலாந்து மற்றும் ரஷியா நாடுகளில் ஏற்கப்பட்ட ஒன்று.
தற்போது புளுட்டோனியத்தை பிரித்தெடுக்கும் ஆலைகள், மும்பையிலும், தாராபூரிலும், கல்பாக்கத்திலும் உள்ளன. அடுத்த ஆலை எங்கு நிறுவப்படும் என்று இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிகிறது.
அவசரகாலத்தில் எப்படிச் செயல்படுவது (Emergency plans) என்பது பற்றி இதுவரை எத்தனை முறை மக்களுக்கு விளக்கப்பட்டுள்ளது? கூடங்குளத்தில் கடந்த 20 ஆண்டுகளில் எத்தனை முறை மக்கள் இதனைப் பற்றித் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்?
உலைக் கட்டுமானப்பணிகள் முடியும் தருவாயில்தான் இத்திட்டம் பறைசாற்றப்பட்டு, ஒத்திகைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அண்மையில் கூடங்குளத்தில் இந்த ஒத்திகை அறிவிக்கப்பட்டபோது, அது அப்பகுதியில் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.
விபத்து நேரும்போது அதை அறிந்துகொள்ளவும் தற்காத்துக்கொள்ளவும் தனிமனித வழிகளே இல்லை என்றால் என்னதான் மக்களால் செய்யமுடியும்? அணுக் கதிர் பரவுகிறதா இல்லையா என்பதைக் கூடத் தெரிந்துகொள்ளாத சூழலில் இப்படி ஒரு திட்டம் இனியும் அவசியம்தானா?
செய்திகள் ஒளிவேகத்தில் பரவும் இன்றைய வாழ்க்கையில், விபத்து நேர்ந்தால் கணநேரத்தில் உலகமே அதைப்பற்றி அறிந்து கொண்டுவிடும். கூடவே புரளிகளும். அதை சமாளிப்பது எப்படி என்பதில்தான் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு ஊரிலும் கதிரியக்கத்தை கண்காணிக்கும் கருவிகள் அமைத்தால் அது உதவக்கூடும்.
இத்தனை அபாயங்களையும் தாண்டி திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்பதற்கு என்னதான் காரணம்?
அரசு தரப்பில் மின்தேவைதான் காரணம் என குறிப்பிடப்படுகிறது.
அனல்மின் நிலையம்போல அணுமின் நிலையம் நாள்முழுவதும் இயங்கக்கூடியது. சூரிய சக்தி ஒருநாளில் சுமார் 8 மணி நேரம் மட்டுமே, அதுவும் மேகமூட்டம் இல்லாதபோது . காற்றாலைகள் காற்றுள்ளபோதுதான். ஆயிரம் மெகாவாட்டு திறன் கொண்ட இந்த நான்கு வித நிலையங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சூரிய சக்தி மற்றும் காற்று இவற்றால் ஓராண்டில் தயாரிக்கப்படும் மின்சாரம் மற்ற இரண்டைவிட சுமார் ஐந்தில் ஒரு பங்கு தான்.
பூமியின் வெப்பநிலை அதிகரிப்பைச் சுட்டிக்காட்டி, இந்தியாவில் மின்சாரம் தயாரிக்க நிலக்கரியைப் பயன்படுத்துவது வெகுவாகக் குறைக்கப்படவேண்டும் என்கிற வற்புறுத்தலும் ஒரு காரணம்.
அணுமின்சாரம் யூனிட்டுக்கு எவ்வளவு தண்ணீர் செல்வாகிறது? கல்பாக்கத்தை மாதிரியாக வைத்துச் சொல்லுங்கள். கூடங்குளத்துகு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? தாமிரபரணியில் இருந்து எடுப்பார்களா?
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் இரண்டு உலைகளின் நீர் தேவை நாளொன்றுக்கு 6,200 கனமீட்டர் என்று கணக்கிடப்படுள்ளது. இதத்தனையும் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உப்புநீக்கி ஆலைமூலம் கடல்நீரை குடிநீராக மாற்றிப் பெறப்படுகிறது. நிலையத்தின் பணியாளர்கள் வசிக்கும் குடியிருப்புத் தேவைகளுக்கும் இதுபோதுமானது. ஆக வேறெங்கிருந்தும் நீர் பெறப்படுவதில்லை. இது குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹிந்து ஆங்கில நாளேட்டில்கூட ஒரு விரிவான கட்டுரை வெளிவந்துள்ளது.
மரபு முறையில் மின்சாரம் தயாரிக்க எவ்வளவு செலவாகிறது, அணு மின்சாரத்துக்கு எவ்வளவு செலவாகிறது? எது செலவு குறைந்த முறை?
மின்சாரம் தயாரிப்பதற்கு அனல்மின் நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், எரிவாயு அல்லது எண்ணையை மூலப்பொருளாகக்கொண்ட நிலையங்கள் என்று பல மரபு வழிகள் உள்ளன. நிலையத்தை நிறுவுவதற்குத் தேவையான முதலீடு, எரிபொருளுக்கானச் செலவு, நிலையத்தின் ஆயுட்காலம், இயக்குவதற்கான செலவு இவற்றைப் பொருத்துதான் மின்சாரத்தின் விலை அமையும். அணுமின் நிலையங்களுக்கு அதிக முதலீடு தேவை, ஆனால் எரிபொருளுக்கான செலவு மிகக்குறைவு. நீர்மின் நிலையங்களுக்கும் அணைக்கான முதலீடு அதிகம், ஆனால், எரிபொருள்செலவு மிச்சம். மழை பொய்த்தால், தயாரிப்பு குறைந்து போகும்.
இப்போது என்.டி.பி.சி. ரூ 5,700 கோடி செலவில் ஆயிரம் மெகாவாட்டு அனல்மின் நிலையத்தை நிறுவிவருகிறது. அடுத்தகட்டமாக 1,320 மெகாவாட்டு நிலையம் அமைக்க உள்ளது. அதற்கு ரூ8,500 கோடி செலவாகும் என்று கூறுகிறது. என்.பி.சி. நிறுவனம், ஆயிரம் மெகாவாட்டுக்கு ரூ 6,000 கோடி செலவில் தனது கனநீர் அணு உலைகளை அமைக்கமுடியும் என்கிறது. இவ்விரண்டு வகை நிலையங்களையும் அமைக்கத் தேவையான முதலீடு ஏறத்தாழ ஒன்றுதான்.
வெளிநாட்டு அணு உலைகளுக்குத் தேவையான முதலீடு நம்நாட்டு கனநீர் அணு உலைகளைவிட அதிகம்தான். அந்த நாடுகள் உலைகளின் கூடவே அவற்றுக்குத் தேவையான எரிபொருளையும் வழங்குகின்றன. ஒருக்கால் எரிபொருளுக்கான செலவும் முதலீட்டில் அடங்கியிருக்கலாம். இது பற்றிய குறிப்புகள் தேவை.
முதலீடு எதுவானாலும், பயனாளிகளின் கவனம் ஒரு யூனிட்டு மின்சாரத்திற்கு எவ்வளவு வசூலிக்கப்படும் என்பதில்தான் இருக்கும்.
அணுமின் நிலையங்கள் ஒரு யூனிட்டு மின்சாரத்திற்கு வசூலிக்க அனுமதிக்கப்பட்ட தொகை நிலையத்தின் வயதைப் பொருத்தது. எடுத்துக்காட்டாக, மிகப்பழமையான தாராபூர் 94 பைசா, கல்பாக்கம் ரூ1.82, புதிதாக நிறுவப்பட்ட நிலையங்கள் ரூ 2.80.
நீர்மின் நிலையங்களிலும் இதே போல, மிகப்பழமையானவை ஒரு யூனிட்டுக்கு 78 பைசா என்றும், அண்மையில் நிறுவப்பட்டவை ஒரு யூனிட்டுக்கு ரூ2.5 லிருந்து ரூ 3.5 வரை என்றும் வசூலிக்கின்றன.
காற்றாலைகள் வசூலிப்பது ஒரு யூனிட்டுக்கு ரூ 2.63 லிருந்து ரூ 3.7 வரை ஆகும். சூரியசக்தி ஆலைகள் வசூலிப்பது ஒரு யூனிட்டுக்கு ரூ 12.85 லிருந்து ரூ 14.95 வரை உள்ளது. இந்த விவரங்கள் கீழ்க்காணும் இணையத்தளத்தில் கண்டவை.
http://www.cercind.gov.in/2011/Annual_Report/CERC_Annual_Report_English_2009-10.pdf
மத்திய மின்சார ஆணைக்குழுவின் புள்ளியியல் விவரங்களின்படி மாதம் 100 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தும் ஒரு கிராமத்துக் குடும்பத்திற்கு ஒரு யூனிட்டுக்கான விலை தமிழ்நாட்டில் ரூ1.20, பீஹாரில் 76 பைசா, உத்தரபிரதேசத்தில் 59 பைசா, கேரளாவில் ரூ1.87, ஆந்திராவில் ரூ2.38, கர்நாடகாவில் ரூ2.61, குஜராத்தில் ரூ 2.64 என்று இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. நிலையம் அமைக்கத்தேவையான முதலீடு ஒன்றாக இருக்கலாம், எரிபொருள் விலை அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம், ஆனால் மாநிலங்கள் பயனாளிகளுக்கு வெவ்வேறு அளவில் உதவிப்படி (மானியம்) வழங்குவதால், மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவுக்கும் ஒரு யூனிட்டின் விலைக்கும் என்ன சம்பந்தம் என்பது ஒரு புதிராகவே உள்ளது.
-எல்.வி. கிருஷ்ணன்
தொடர்புடைய பதிவுகள்:








September 29th, 2011 at 11:12 am
//ஜப்பானில் நடந்த விபத்துக்குப் பிறகு வளர்ந்த நாடுகள் மாற்றுத்திட்டங்களை நோக்கி நகர்ந்து வரும் போது நாம் மட்டும் ஏன் பின்னோக்கி நடக்க வேண்டும்? ஜப்பான் போன்ற ஒரு நாட்டாலேயே அச்சூழ்நிலையைக் கையாள முடியவில்லை என்றால், இந்தியா எப்படி திணறும் என்று யோசித்துப் பாருங்கள்.//
இந்த கேள்விக்கான பதில் அளிக்கபட்டதாக உணரவில்லை; இந்தியாவை பற்றி தற்போதய நிலைக்கு எந்தவித விளக்கமும் இல்லை !
September 29th, 2011 at 6:34 pm
thanks for the information.. we should soon shift to solar power.
if the demand for solar power generators are high then there cost/unit would come less.(just a guess) . Also encouraging people to make use of solar power must take place. govt should give subsides to house hold solar devices.
September 29th, 2011 at 7:49 pm
நல்ல பதிவு.
மக்கள் படிக்க வேண்டும்.
September 29th, 2011 at 8:06 pm
இத்தனை அபாயங்களையும் தாண்டி திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்பதற்கு என்னதான் காரணம்?
மின்சார தேவை எல்லாம் சும்மா. அணு ஆயுத தயாரிப்பு தான் உண்மையான காரணம்.
September 30th, 2011 at 4:10 pm
எல்லாத்துக்கும் பண்ணனும் பண்ணனும்னு மட்டும் சொல்லி இருக்கீங்களே எப்போ பண்ணுவாங்க அணு உலை விபத்து நடந்த அப்புறமா?
September 30th, 2011 at 4:13 pm
60000 idiots… http://www.dianuke.org/pictures-60000-people-on-tokyo-streets-against-nuclear-power-mochizuki-ioris-report/