நாற்றழகு கீற்றழகு


“படுத்துக்கினு போர்த்திக்கவா, போர்த்திக்கினு படுத்துக்கவா” என்று இலக்கியரசம் மிக்க வார்த்தைகள் டீக்கடை ஸ்பீக்கரின் வழியாகச் சொட்டிக் கொண்டு இருந்தன.

“ஒரு விஷயம்டா தினேஷ். படுத்துக்கிட்டுப் போர்த்திக்கிட்டாலும், போர்த்திக்கிட்டுப் படுத்துக்கிட்டாலும் கடைசியா ஒண்ணும் மாறப் போறது இல்லை. ஆனா எந்த ரெண்டு வார்த்தையை சேர்க்கிறோமோ அதைப் பொருத்து அது எந்த வகைப் புணர்ச்சி என்பது மாறும். தெரியுமா?”

“ஆஹா! நிம்மதியா ஒரு காப்பி குடிக்கலாமுன்னா சைக்கிள் கேப்பில் இலக்கணத்தை ஆரம்பிச்சுட்ட போல. மேல சொல்லு. கேட்கறேன்.”

“இப்போ ரெண்டு வார்த்தைங்கள சேர்க்கறோம் இல்லையா. அப்போ மிக்ஸ் ஆகப் போறது மொத வார்த்தையோட கடைசி எழுத்தும் ரெண்டாவது வார்த்தையோட மொத எழுத்தும்தானே. அது எந்த மாதிரி எழுத்து அப்படிங்கறதை வெச்சு அதை வகை வகையாப் பிரிக்கலாம்.”

“எந்த மாதிரி எழுத்துன்னா என்னடா அர்த்தம்? உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து. இவ்வளவுதானே இருக்கு தமிழ்ல.”

“கரெக்ட். இவ்வளவுதான். ஆனா இங்க இந்த உயிர்மெய் எழுத்துங்களைக் கூட மெய்+உயிர் அப்படின்னு பிரிச்சுடலாம். அதனால மொத்தம் நாலே வகைகள்தான். மொதல் வார்த்தை உயிரில் முடியும் அல்லது மெய்யில் முடியும். ரெண்டாவது வார்த்தை உயிரில் தொடங்கும் அல்லது மெய்யில் தொடங்கும். அவ்வளவேதான்.”

“கமலினி, தமன்னா, அனுஷ்கா எல்லாம் உயிரில் முடியறவங்க. விஜய், விக்ரம், அஜீத் எல்லாம் மெய்யில் முடியறவங்க. சரிதானே!”

“அதே! அப்படியே பார்த்தா கமலினி தமன்னா விஜய் விக்ரம் எல்லாம் மெய்யில் ஆரம்பிக்கறவங்க. அனுஷ்காவும் அஜீத்தும் உயிரில் ஆரம்பிக்கறாங்க. புரியுதா?”

”சரி ஆரம்பிக்கறதும் முடியறதும் உயிரா மெய்யான்னு தெரியுது. அதை வெச்சு என்ன புணர்ச்சி ரூல்ஸ் இருக்கு?”

“சாதாரணமா ஒரு மெய்யில் முடியும் வார்த்தையோட, உயிரில் தொடங்கும் வார்த்தையைச் சேர்த்தா அந்த மெய்யும் உயிரும் சேர்ந்து ஒரு உயிர்மெய் எழுத்தாக மாறி, அப்படியே அந்த ரெண்டு வார்த்தைகளையும் சேர்த்துடும். இது நாம முன்னாடி பார்த்த இயல்புப் புணர்ச்சி வகைதான். கூனழகு, சேயழகுன்னு எல்லாம் பார்த்தோம். அதில் இந்த மாதிரி ஒரு மெய்யும் உயிரும் கலந்து ரெண்டு வார்த்தைகளையும் சேர்க்குது. இல்லையா?”

“ம்.”

“அதுல எக்ஸ்ட்ரா ரூல் ஒண்ணு இருக்கு. ஒரு குறில், அதைத் தொடர்ந்து ஒரு மெய்யெழுத்து. இப்படி முதல் வார்த்தை இருக்குன்னு வெச்சுக்கோ. அதுக்குப் பின்னாடி ஒரு உயிர் வந்தா, இரண்டு மெய்யெழுத்து இருக்கிற மாதிரி மாறும். அதாவது பெண்+அழகு = பெண்ணழகு, கண்+அழகு = கண்ணழகு.”

“பெண் கண் அப்படின்னு சொன்னா ஒரு எக்ஸ்ட்ரா கிக் இல்லைன்னாலும் ஒரு எக்ஸ்ட்ரா க் மட்டுமாவது வரும்ன்னு சொல்லற!”

“ஆமாம். எக்ஸ்ட்ரா மெய்யெழுத்து வரும். அதை நீ அப்படி புரிஞ்சுக்கிட்டாலும் சரிதாண்டா!!”

“இண்ட்ரெஸ்டிங்காத்தான் இருக்கு. மேல சொல்லு.”

”இவ்வளவு நேரம் நாம உயிர் மெய் காம்பினேஷன் பத்திப் பார்த்தோம் இல்லையா. இப்போ உயிர் உயிர் காம்பினேஷனில் என்ன ஆகுதுன்னு பார்க்கலாமா?”

“உயிரே, உயிரே வந்து என்னோடு கலந்து விடு அப்படின்னு ஒரு உயிர் பாடுமா.”

“பாடும் பாடும். வந்து கவனி. உயிரும் உயிரும் சேர முடியுமா? அ+இன்னு வந்தா எப்படி சேர்க்கறது? நேரடியா சேர்க்க முடியாது அப்படிங்கறதால, வ அல்லது ய – இது ரெண்டுல ஒண்ணை எக்ஸ்ட்ராவா சேர்த்துக்கிட்டு அந்த ரெண்டு வார்த்தையையும் கோத்துடணும்.”

“வ அல்லது ய அப்படின்னு ரெண்டு இருக்குன்னு சொல்லிட்ட. அப்போ எப்போ எது வரணமுன்னு ரூல் இருக்கப் போகுது. அதையும் சொல்லிடு.”

“கரெக்டா புடிச்சடா! ரூல்ஸ் இல்லாட்டா வாழ்க்கைல ஏது சுவாரசியம்? வாழ்க்கையே அப்படின்னா, வார்த்தைக்கும் அப்படிதானே.”

“இப்படி கவிஜ கிவிஜ சொன்னே, காப்பிக்கு நீதான் காசு தரணும்.”

“ஃப்ரீயா விடு மாமே.. எங்க விட்டேன்? ரூல்ஸ்.. இங்க மட்டும் இல்லாமலா? ஆனா இது ரொம்ப சிம்பிள்தான். முதல் எழுத்து இ, ஈ, ஐ என்ற எழுத்தில் முடிஞ்சா ய வரணும். இல்லைன்னா வ வரணும். ஆனா ஒண்ணு ஞாபகம் வெச்சுக்கோ. முதல் எழுத்து உயிர்மெய் எழுத்தா இருந்தாக் கூட அதில் இருக்கிற உயிர் எழுத்தைத்தான் கணக்கில் சேர்க்கணும்.”

“ஓஹோ! அதனாலதான் மை+ அழகு = மையழகுன்னு ஆச்சா?”

“ஆமாம். பூ+அழகு = பூவழகு அப்படின்னு ஆகும். இன்னும் ஒண்ணு இருக்கு. முதல் வார்த்தையோட கடைசி எழுத்து ஏ அப்படின்னு முடிஞ்சா அதுக்கு ய அல்லது வ எது வேணாலும் சேர்த்துக்கலாம். நீ ரெண்டும் வெச்சு சொல்லிப் பாரு. எது சொல்லும் பொழுது சரியா இருக்கோ அதையே போட்டுக்கோ.”

”ஆச்சா, இன்னும் இருக்கா?”

“என்னடா நீ. கமல் படம் மாதிரி ஆச்சா மூச்சான்னு பேசிக்கிட்டு. இன்னும் கொஞ்சம் இருக்கு. ஆனா அடுத்த புணர்ச்சி விதியைப் பார்க்கிறதுக்கு முன்னாடி வேற ஒரு மேட்டர் பத்திப் பேசணும். அப்போதான் அடுத்த ரூலுக்குப் போக முடியும்.”

“என்னாது?”

“குற்றியலுகரம், குற்றியலிகரம்னு எப்பமாச்சும் கேள்விப்பட்ட ஞாபகம் இருக்கா?”

“சே. கெட்டவார்த்தையெல்லாம் எனக்குத் தெரியாது.”

“உதைபடுவே. இந்த ரெண்டு மேட்டரைத் தெரிஞ்சுக்கிட்டாத்தான் அதோட சேர்ந்து வர புணர்ச்சி விதிகளைப் பத்திப் பேச முடியும். குற்றியலுகரம்னு நேரா ஆரம்பிச்சா உனக்கு புரியாது. நேத்து ஆஃபீஸ்லே நடந்த ஒரு கதை சொல்றேன். நம்ம வெங்கி இருக்கானில்ல?”

”கொல்டி வெங்கியா?”

”அவனே. நேத்து அவனை பாஸ் தனியா கூப்ட்டு பாராட்டினாராம்.. இல்லாத பந்தா விட்டான். வந்த கடுப்புல சத்தமாவே சொல்லிட்டேன்.. கொல்டிக்கு இன்னிக்கு மவுசுன்னு. கேட்டிருச்சு போல.”

”என்ன பண்ணான்?”

“சீரியஸா கிட்ட வந்து I have track pad, I don’t need a mouse-u அப்படிங்கறான்! ஒரே காமெடி! இதை ஏன் இங்க சொல்றேன்னா, தெலுங்குக்காரங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அவங்க சாதா வார்த்தைக்கே கடைசிலே உ போட்டு இழுப்பாங்க. நாம, உ லே முடியற வார்த்தையையே சில சமயம் சுருக்கமா சொல்லிடுவோம்.”

”புரியுது.”

”இப்போ உலகம் உருண்டை அப்படின்னு சொல்லும் பொழுது உ என்ற எழுத்தை எப்படி உச்சரிக்கிறோம்னு பாரு. ஆனா அதையே காசு போட்டுப் பேசு அப்படின்னு சொன்னா அதில் காசு பேசு அப்படின்னு சொல்லும் பொழுது முழுசா சொல்லாம கொஞ்சம் கம்மி நேரத்துக்குத்தான் உச்சரிக்கறோம் இல்லியா? சிம்பிளா சொல்லணும்னா இதுதான் குற்றியலுகரம்.”

“முதலில் வந்தா ஒரு மாதிரியும் கடைசியில் வந்தா வேற மாதிரியும் உச்சரிக்கறோமா?”

“அதான் இல்லை. பசு, விசு அப்படின்னு சொல்லிப் பாரு. இதுல இருக்கிற கடைசி உ வந்து உலகம் உருண்டை மாதிரியேதான் உச்சரிக்கறோம். இல்லையா. அதனால முதலில் கடைசியில் என்பது கட்டாயம் இல்லை. ஆனா குறுக்கி சொல்லறது எப்பவுமே கடைசியில் வர உ மட்டும்தான்.”

“அப்போ என்னதான் ரூல்? எப்போ முழுசா சொல்லணும் எப்போ பாதியா சொல்லணும்.”

“முதல் ரூலைச் சொல்லிட்டேன். வார்த்தையோட கடைசி எழுத்தாதான் வரணும். ரெண்டாவது என்னன்னா எல்லா உ எழுத்தும் இப்படி குறுகாது. வல்லின மெய்களோட சேர்ந்த கு, சு, டு, து, பு, று – இந்த ஆறு உகரங்கள் மட்டும்தான் குறுகும்.”

“அட ஜாலியே இருக்கே. குசு விடு துன்புறு. இப்படி ஞாபகம் வெச்சுக்கிட்டா இதில் இருக்கற உகரம் எல்லாம் குறுகும்ங்கிற ரூல் மறக்கவே மறக்காது.”

“திருத்த முடியாத ஜென்மம்டா நீ. எப்படியோ ஞாபகத்தில் வெச்சுக்கிட்டா சரி. கடைசியா இந்த எழுத்துங்க ஒரு தனிக் குறில் எழுத்துக்குப் பின்னாடி வந்ததுன்னு வெச்சுக்கோ. அப்பவும் குறுகாது. அதனாலதான் நாம முன்னாடி பசு விசுன்னு சொல்லும் பொழுது முழுசா உச்சரிச்சோம். ”

“இதான் குற்றியலுகரமாடா? ஒத்தை வரியில் டெபனிஷன் சொல்லட்டுமா? ஒரு வார்த்தையோட கடைசி எழுத்து குசுடுதுபுறு என வந்து, அதுக்கு முன்னாடி ஒரு சிங்கிள் குறில் இல்லாம இருந்தா அந்த கடைசி எழுத்தை புல்லா சொல்லாம அதோட உச்சரிப்பை சின்னது பண்ணிடறோம். அவ்வளவுதானே!”

“அவ்வளவே. இதுல முன்னாடி வரும் எழுத்தை வெச்சு ஆறு வகையா இதைப் பிரிக்கலாம். ஆனா அதெல்லாம் இப்போ சாய்ஸில் விடலாம். குற்றியலுகரம் இல்லாத மத்த உகரத்தில் முடியற வார்த்தைகளை முழுசா உச்சரிக்கறதுனால அதுங்களுக்கு முற்றியலுகரம் அப்படின்னு பெயர். இப்போதைக்கு இது போதும்.”

“நன்னி ஹை! சரி. இதை வெச்சு புணர்ச்சி விதி என்ன இருக்குன்னு சொல்லு.”

“இந்தக் குற்றியலுகர மேட்டர் வரதுக்கு முன்னாடி, சேர வேண்டிய ரெண்டு வார்த்தையிலும் உயிர் இருந்தா நடுவில ஒரு யாவோ அல்லது வாவோ வரும் அப்படின்னு பார்த்தோம் இல்லையா. அதோட தொடர்ச்சியா, ஒரு குற்றியலுகர வார்த்தை வந்து அதுக்குப் பின்னாடி ஒரு உயிர் எழுத்தில் தொடங்கற வார்த்தை வந்ததுன்னு வெச்சுக்கோ, அப்போ முதல் வார்த்தையில் இருக்கும் உ காணாமப் போயிடும்.”

“டீடெயில் ப்ளீஸ்”

“உதாரணத்துக்கு வைரமுத்து கிட்ட போவோம். நாற்று, கீற்று – இது ரெண்டுமே குற்றியலுகரத்துக்கு எடுத்துக்காட்டுதான் இல்லையா. இதை அவர் நெல்லுக்கு நாற்றழகு தென்னைக்குக் கீற்றழகுன்னு பாட்டுல பயன்படுத்தறார். இங்க நாற்று + அழகுன்னு சொல்லும் பொழுது நாற்றில் இருக்கும் உ வெளிய போய், அழகில் இருக்கும் அ சேர்ந்து நாற்றழகு அப்படின்னு ஆகுது. இதுதான் குற்றியலுகரப் புணர்ச்சி.”

“ஓஹொ.”

“சமயங்களில் குற்றியலுகரம் இல்லாத உகரங்கள் கூட இந்த மாதிரி சேர்ந்துடும். திரும்ப நம்ம பாட்டுக்கே போனோம்னா, கள்வர்க்கு இரவழகு, காதலர்க்கு நிலவழகுன்னு வருது. இங்க இரவு, நிலவு எல்லாம் குற்றியலுகரம் இல்லை. ஆனாலும் அது அழகுன்னு சேர்ந்தா அந்த உ காணாமப் போய் இரவழகு, நிலவழகுன்னு ஆகுது.”

“ஏன் இப்படி குழப்பறாங்க? ஒரே ரூல் வெச்சா என்ன?”

“குழம்பவே குழம்பாதே. ரெண்டு வார்த்தையையும் சேர்த்து சொல்லிப்பாரு. எது எளிமையா பொருத்தமா இருக்கோ அதுதான் விதியாவும் இருக்கும்.”

“சரி. இவ்வளவு தூரம் வந்தாச்சு. அந்த குற்றியலிகரப் புணர்ச்சியையும் சொல்லிடேன்.”

“ஒரு காலத்துல இருந்ததுடா. இன்னிக்கு நாம பேசற தமிழ்ல அதெல்லாம் சுத்தமா காலியாயிருச்சி. என்னாத்துக்கு அத்தப்போயி டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு? லூஸ்ல விடு.”

“என்னடா இப்படி சொல்லிட்ட?”

“தேவைப்பட்டா அப்புறம் பாத்துக்கலாம், தலைபோற அவசரமில்லைன்னு அர்த்தம் அதுக்கு. வரட்டா? காப்பிக்கு நீயே காச குடுத்துடு.”

13 comments so far

 1. ஆயில்யன்
  #1

  குற்றியலுகரபுணர்ச்சி புரிஞ்ச மாதிரியேத்தான் இருக்கு

  சாம்பிள் டெஸ்ட் பண்ணி பார்க்கணும் !

  ரிவர்ஸ்ல போயி சேர்ந்திருக்கிற வார்த்தைகளை புடிச்சு பிரிச்சுப்போட்டு செஞ்சு பார்க்குறோம் டெஸ்ட்!

  //பெண் கண் அப்படின்னு சொன்னா ஒரு எக்ஸ்ட்ரா கிக் இல்லைன்னாலும் ஒரு எக்ஸ்ட்ரா க் மட்டுமாவது வரும்ன்னு சொல்லற!//

  //எது எளிமையா பொருத்தமா இருக்கோ அதுதான் விதியாவும் இருக்கும்.”//

  //வாழ்க்கைல ஏது சுவாரசியம்? வாழ்க்கையே அப்படின்னா, வார்த்தைக்கும் அப்படிதானே.”//

  கொத்ஸ் டச்
  இது வேற தனியா நோட்’டவேண்டியிருக்கு :)))

 2. பாலகுமாரன்
  #2

  அருமை வாத்தியாரே!!!

 3. பாலகுமாரன்
  #3

  புணர்ச்சிக்கு அப்புறம் “(அசை)சீர்” பற்றி ப்ளிஸ்!!!
  வெண்பாம் போட ஆசை!!!

 4. CN Shankar
  #4

  கொத்தனார் முழு செங்கலை கொல்லறால தட்டி சின்ன சைசுக்கு ஒடைத்துப்பார்!

  சித்தாளு ஒடஞ்ச செங்கலை எல்லாம் சுத்தியால தட்டி, தட்டி ஜல்லியாக ஒடைப்பங்க!!

  நம்ப கொத்தனாரு என்னடான்னா எல்லாத்தையும் ‘க்’ இச்’ என்று ஒட்டவைக்கறாரு!!!

 5. revathinarasimhan
  #5

  வணக்கம் ஐயா. இன்னும் கொஞ்சம் உதாரணங்கள் தேவை.அறிந்த இலக்கணமாக இருந்தாலும், மீண்டும் வகுப்பறையில் உட்காரும்போது கொஞ்சம் சிக்கல் வருகிறது.இதையும் விட இலக்கணம் யார் சுலபமாகச் சொல்ல முடியும் என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்:)
  Thanks Koths,.

 6. lola
  #6

  படுத்துக்கிட்டுப் போர்த்திக்கிட்டாலும், போர்த்திக்கிட்டுப் படுத்துக்கிட்டாலும் கடைசியா ஒண்ணும் மாறப் போறது இல்லை. ஆனா எந்த ரெண்டு வார்த்தையை சேர்க்கிறோமோ அதைப் பொருத்து அது எந்த வகைப் புணர்ச்சி என்பது மாறும். தெரியுமா?”

 7. Venkat
  #7

  Sir,
  Please forgive my writing in english
  very nice approach to teach nanuances in tamizh.
  nice way to cover young audiences similar to a column on english that used to be featured in the hindu

  Best Wishes

 8. unmaivirumpi
  #8

  ஐயா, கொஞ்ச ஸ்பீடா போறீங்களா இல்ல நான் ஸ்லோவானு தெரியல, புரிஞ்சு படிக்க நான் திரும்ப திரும்ப படிக்கவேண்டியதா இருக்கு, எனக்காக ஸ்லோவ வேண்டாம், கீப் கோயிங் .. அப்புறம் அந்த போட்டோவையும் இலக்கணத்தையும் கடைசிவரை முடிச்சி போடவே இல்லையே :-)) நல்ல பாடம் நல்ல படம்

 9. வாஞ்சிநாதன்
  #9

  கொத்தனாரே நல்லா சொல்லிருக்கீங்க.
  இங்கே ஆர்வத்துடன் படித்து வருபவர்களுக்க்உ ஒரு செய்தி:
  இந்த புணர்ச்சி ஷிஷயமெல்லாம், ஏதோ “நாற்றழகு, கீற்றழ்கு” என்று கவிதையோடு
  தொடர்புடையது என்று நினைக்க வேண்டாம். இயல்பான பேச்சிலும் இருக்குறதுதான்.
  “அறிவில்லாதவன்” என்பதுதான் இயல்பாக வருவது. (முற்றியலுகரப் புணர்ச்சியை இரவழகு போன்று கவிதையில் தேட வேண்டாம். )

  “காசுள்ளவன்” என்பதும் இயல்பாக வருவது. (காசுள்ளவங்கிட்டதான் காசு இன்னும் சேந்துகிட்டே இருக்குது)

  அறிவு இல்லாதவன், காசு உள்ளவன் என்று சொன்னால் ஏதோ செண்ட்ரல்
  ஸ்டேஷன் அறிவிப்பாளர் சொல்வதுபோல் தனித்தனியாகச் செயற்கையாக ஒலிக்கும்.

  குற்றியலுகரம், முற்றியலுகரம் வேறுபாடு தெரிய:
  தெலுங்குக்காரர்கள் தமிழ் பேசும் போது முற்றியலுகரமாவே ஒலிக்கும் கவனியுங்கள்.
  (அதேபோல் தமிழ்க்காரர்கள் தெலுங்கு பேசும்போது அப்படியே தலைகீழ்.
  மொழியின் பெயரையே நாம் தப்பாகச் சொல்வோம். அவர்கள் சொல்வது “தெலுகூ” என்பது போல் இருக்கும். நாம் அதை அழுகு என்பது போல் குறைத்துச் சொல்லிவிடுவோம்)

 10. kannabiran Ravi Shankar (krs)
  #10

  சூப்பர்! கொத்தனார் நோட்ஸ் கலக்கல்!
  அது கோனார் நோட்ஸ்! கோ.நோட்ஸ்! இது கொ.நோட்ஸ்! 🙂

  நாற்றழகு, கீற்றழகு என்பது நாத்தழகு, கீத்தழகு-ன்னும் மாறுதுங்களே! அது பொது வழக்குங்களா?

  //பெண் கண் அப்படின்னு சொன்னா ஒரு எக்ஸ்ட்ரா கிக் இல்லைன்னாலும் ஒரு எக்ஸ்ட்ரா க் மட்டுமாவது வரும்ன்னு சொல்லற//

  🙂
  க் மட்டும் தான் வருமா? ச்-உம் வருமா? :))

 11. வடுவூர் குமார்
  #11

  கூப்பிட்டு போய் அடிகிற அளவுக்கு தெம்பு இல்லை அதோடு சொல்லி அடிக்கிற அளவுக்கு இலக்கண அறிவும் கிடையாது ஆனா சொல்லும் முறையில் ஒரு வித்தியாசம் தெரிகிறது.

 12. Nandhu
  #12

  At the end of the article please list down the rules that are being discussed. This will help people summarize and remember. A very very good effort.

 13. இராம.பத்மநாபன்
  #13

  உகரம் குறுகி ஒலிப்பதை குற்றியலுகரம் என்கிறோம்.ஆறு உகரங்களைக் கொண்ட கு,சு,டு,து,பு,று எழுத்துகளை நினைவில் கொள்ள குசு விடு துன்புறு என்னும் சொற்கள் மூவகை நெம்புகோல்களில் ஆதாரம், பளு,திறன் இவற்றைக் குறிக்க —ஆ——
  —ப——-
  —தி——-பயன்படுத்துவதைப் போன்றுள்ளன.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

One Trackback/Ping

Facebook comments: