ஆதாம் கடித்த மிச்சம் – அத்தியாயம் 20
ஆப்பிள் செல்போன் தயாரிப்பதற்கு முன்னரே பல கம்பெனிகள் பல செல்போன்களை பல்வேறு ஆப்ஷன்களோடு விற்றுக்கொண்டு தான் இருந்தன. புது செல்போன்களையும் அவ்வப்போது அறிமுகப்படுத்திக் கொண்டு தான் இருந்தன.
அப்படியிருக்க ஒரு கம்பெனி ஒரே ஒரு செல்போன் மூலம் எப்படி ஒரு துறையின் தலையெழுத்தை மாற்றி அமைத்தது? அதற்கு முன் இருந்த செல்போன்கள் அவ்வளவு மோசமாக இருந்ததா? அல்லது ஆப்பிளின் செல்போன் அவ்வளவு மேம்பட்டதாக இருந்ததா? இல்லை என்பதுதான் பதில்.
செல்போன் எவ்வளவு சிறிதாக இருக்கிறதோ அந்தளவு சிறப்பானது என்ற நிலைமையில் ஐ-போன் கொஞ்சம் பெரிதாகத்தான் இருந்தது. ஒரே ஒரு நெட்வொர்க்கில் அதுவும் நொட்டை நொடிசலான நெட்வொர்க்கில் மட்டும்தான் கிடைக்கும். அதிலும் செல்போனை ஆக்டிவேட் செய்வதில் பல பிரச்னைகள். ஆபீஸ் மெயில்கள் பார்க்க முடியாது. மெசஞ்சர் கிடையாது. ஒரு செல்போனுக்கான விலையா இல்லை செல்போன் கடைக்கான விலையா என்னுமளவு அதிகமான விலை. இப்படி பல குற்றங்குறைகள் இருந்தும் ஸ்டீவ் ஜாப்ஸை தலைக்கு மேல் வைத்துக் கொண்டாட காரணம் என்ன? அத்தனை குறைபாடுகளையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு, மணிக்கணக்கில் கால் கடுக்க க்யூவில் நின்று அறிமுகனான முதல் நாளே வாங்கிக் குவித்த மாயம் என்ன? ஆப்பிளின் அம்சமான அழகா? ஸ்டீவ் ஜாப்ஸின் மந்திர மார்க்கெட்டிங்கா?
முன்பும் சரி இப்போதும் சரி, அமெரிக்காவில் ப்ரீ பெயிட் அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லை. போஸ்ட்பெய்ட் தான். ஏர்டெல், ஏர்செல் போல முதலில் நீங்கள் ஒரு நெட்வொர்க்கை தேர்ந்தேடுக்க வேண்டும். பிறகு மாதாந்திர பிளான். அப்புறம் அவர்கள் தரும் போனில் இருந்து ஒன்றைத் தேர்ந்தேடுக்க வேண்டும். போனில் இன்ன இன்ன ஆப்ஷன்கள் தான் இருக்கும் என்பதையும் நெட்வொர்க் தான் முடிவு செய்யும். போனுக்குத் தனியாகப் பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இத்தனை வருடம் காணட்ராக்ட் என்று அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தால் போன் விலையை மாதாந்திர தவணையில் கழித்துக் கொள்வார்கள். நம்பர் மொபிலிட்டி இருந்தாலும் நெட்வொர்க்கை யாரும் அவ்வளவு எளிதில் மாற்ற மாட்டார்கள். விசுவாசம் எல்லாம் காரணமில்லை. காண்ட்ராக்ட், கட்டணம் என்ற கண்றாவிகள் தான் காரணம்.
கஸ்டமர்களைக் கவர பொதுவாக என்ன செய்வார்கள்? வருடம் முழுவதும் ஒரு நம்பருக்கு எவ்வளவு வேண்டுமானால் பேசிக் கொள்ளுங்கள் என்று அறிவிப்பார்கள். ஒரு போனைப் பொறுத்து கஸ்டமர் நெட்வொர்க்கைத் தேர்ந்தேடுப்பார்கள் என்று யாரும் யோசித்துப் பார்க்கவில்லை, நம்பவும் இல்லை. செல்போன் தயாரிப்பாளர்கள் நெட்வொர்க்கின் தயவில் தான் இருந்தனர்.
அப்படி இருக்கையில், ஸ்டீவ் ஜாப்ஸ் சிங்குலர் என்ற கம்பெனியிடம் சென்று, நான் செல்போன் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். ஐந்து வருடத்துக்கு உங்களுக்கு மட்டுமே விற்கிறேன், சம்மதமா என்றார். தன் எதிர்பார்ப்புகளையும் சொன்னார். ‘நானும் விற்பேன். நீங்களும் விற்கலாம். ஆனால் அதில் எனக்கு பத்து சதவிகிதம் வேண்டும். என் போனை பயன்படுத்துபவர்கள் மாதா மாதம் பில் கட்டுவார்கள், அதிலும் எனக்கு கொஞ்சம் பங்கு கொடுத்துவிடுங்கள். அதிகம் வேண்டாம். மாதம் பத்து டாலர். பிறகு, என் போன் அளிக்கும் வசதிக்கேற்ப உங்கள் வாய்ஸ் மெயில் சிஸ்டத்தை மாற்ற வேண்டும். உங்களிடம் போன் கனெக்ஷன் வாங்க ஆன்லைனில் பாரத்தை பூர்த்தி செய்வதற்குள் உலகம் முடிந்துவிடும். இதை மாற்றுங்கள். சில மில்லியன் டாலர்கள் செலவு ஆகும். பொருட்படுத்த வேண்டாம். மற்றபடி போன் எப்படி இருக்கும் எப்படி வேலை செய்யும் எப்படி மார்க்கெட் செய்வோம் எல்லாம் நாங்கள் தான் முடிவு செய்வோம். இதில் எதிலும் நீங்கள் தலையிடக் கூடாது. சம்மதமா?’ போன் என்ற ஒன்றை உருப்படியாக தயாரிக்கும் முன்னே. அதுவும் தயாரிப்பு முன் அனுபவம் எதுவுமில்லாமலேயே ஸ்டீவ் ஜாப்ஸால் இப்படிப் பேரம் பேசமுடிந்தது ஆச்சரியம்தான்!
இவ்வளவு பஞ்சாயத்தையும் பேசி முடிக்க ஒன்றரை வருடம் பிடித்தது. ஒவ்வொரு முறை பேரம் பேச செல்லும் போதும் ஆப்பிள் ஆட்கள், இன்பீனியன் என்ற கம்பெனியின் ஆட்கள் என்று சொல்லி விட்டு தான் செல்வார்கள். ரகசியம் காக்க வேண்டுமே. சிங்குலரிடம் பேச்சு வார்த்தை முடிக்கும் முன் அதன் பெயர் ஏடி அண்ட் டி என்று மாற்றப்பட்டது. அவ்வளவு ரகசியம்!
கணிணியை கைக்குள் கொண்டு வந்ததை விட நெட்வொர்க்கை கைக்குள் போட்டுக் கொண்டது தான் ஒரு வகையில் உண்மையான சாதனை. ஆப்பிள் ஐ-போன் தயாரிக்க அதிகம் பாடுபட்டதா அல்லது பேச்சு வார்த்தைக்கு அதிகம் பாடுபட்டதா என்று பட்டிமன்றம் நடத்தினால் தீர்ப்பு சொல்வது கடினம்.
வெரிசான் என்ற நிறுவனம், இந்த கண்டிஷன்களை எல்லாம் கேட்ட பின் ஆப்பிளிடம் சொன்ன ஒற்றை வரி, கதவு அந்தப் பக்கம் வெளியே போங்கள்.
சிங்குலர் இப்படி அனைத்துக்கும் ஒப்புக்கொண்டதற்கு காரணம், நாம் ஒப்புக்கொள்ளாவிடில் என்ன ஆகும் என்ற பயம் ஒருபுறம். மறுபுறம் ஆப்பிளின் செல்போன் நிறைய கஸ்டமர்களை கொண்டு சேர்க்கும். பேசுவதையும் தாண்டி மற்ற சேவைகளிலும் பணம் பார்க்கலாம் என்ற விருப்பம். இது போன்ற மாற்றங்கள் செல்போன் கம்பெனிகளுக்கு தேவையாக இருந்தது. ஆனால் இவர்களுக்கு இதை எடுத்துச் சொல்லவும் வழிக்கு கொண்டு வரவும் ஸ்டீவ் ஜாப்ஸ் செல்போன்களின் பக்கம் பார்வையைத் திருப்ப வேண்டி இருந்தது.
ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன அனைத்துக்கும் ஆமாம் சாமி போட்ட ஏடி அண்ட் டி க்கு ஆனந்த கொண்டாட்டம். விற்பனைக்கு வந்த ஆறு மாதத்தில் மூன்று மில்லியன் ஐ-போன்கள். நியூ யார்க், சான் பிரான்ஸிஸ்கோ போன்ற நகரங்களில் நெட்வொர்க்கின் டிராபிக் மூன்று மடங்கு அதிகரித்தது. ஆறே மாதத்தில் ஏடி அண்ட் டி க்கு ஐ-போன் மூலமாக மட்டும் சுமார் 12 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள்!
இந்த வானளாவிய விற்பனை வெற்றியிலும் ஸ்டீவ் ஜாப்ஸின் பங்கு இல்லாமல் இல்லை. அறிமுகப்படுத்தி விற்பனைக்கு வரும் முன்னரே அனைவரும் ஐ-போனுக்கு அப்ளிகேஷன் எழுதும் ஆப்ஷன் இருக்கும் என அறிவித்தார். அப்படி அப்ளிகேஷன் எழுதியே மில்லியன் டாலர் வருமானம் பார்த்தவர்களும் உண்டு.
ஒரு பொருள் சரியாக விற்பனை ஆகவில்லையென்றால் விழாக்கால சலுகை என்று விலையைக் குறைத்து விற்பார்கள். அல்லது ஆரம்ப கால சலுகை தருவார்கள். ஆனால் விற்பனைக்கு வந்த முப்பது மணி நேரத்தில் 2,70,000 ஐ-போன்கள் விற்றிருந்தும் 68 நாட்களில் 600 டாலருக்கு விற்றுக் கொண்டிருந்த ஐ-போன் விலையை 400 டாலருக்கு குறைத்தார், ஸ்டீவ் ஜாப்ஸ்.
விலை குறைப்பின் விளைவாக கொண்டாட்டத்துக்கு பதில் கொந்தளிப்பு. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆற பொறுத்தவனுக்கு அதிர்ஷ்டமா? சீறினார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு கடிதம் எழுதினார். ‘உங்கள் வருத்தம் புரிகிறது. நியாயமானது. ஆனால் அது விலைகுறைப்பு சரி என்பதை உறுதிப்படுத்துகிறது. பண்டிகைக் காலம். விற்பனைக்காக விலையை நான் குறைத்தே ஆக வேண்டும். வேறு வழியில்லை. என் முப்பது வருட கால டெக்னாலஜி வாழ்க்கையிலிருந்து சொல்கிறேன். இது போன்ற மேடு பள்ளங்கள் டெக்னாலஜி சாலையில் சகஜம்.எப்பவும் ஒன்றை விட ஒன்று பெட்டராக வ்ந்துக் கொண்டு தான் இருக்கும் அப்படி காத்துக் கொண்டு இருந்தால் யாரும் எதையும் வாங்க முடியாது. அதே சமயம் உங்கள் நம்பிக்கை எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஆகையினால் இதற்கு முன்னர் வாங்கிய அனைவரும் ஆப்பிள் ஸ்டோர்களில் 100 டாலருக்கு ஏதாவது வாங்கிக் கொள்ளலாம்.’
பின்னாளில் ஐ-போன் 4 வந்து ஆண்டெனா பிரச்னை செய்த போதும் ஸ்டீவ் ஜாப்ஸ் களத்தில் குதித்தார். ஆண்டெனாவில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால் முன்பு போல் இல்லாமல் பேசும் போது பாதியில் கட் ஆகி விடுகிறது. இது எங்கள் போனில் மட்டும் இல்லை எல்லா போனிலும் இருக்கிறது என டெமோ காட்டினார். உங்களுக்கு போனை சரியாகப் பிடிக்கத் தெரியவில்லை. அதான் இவ்வளவு பிரச்னை. ஒரு ரப்பர் பம்பர் தருகிறேன். போட்டால் சரி ஆகிவிடும். அதை இலவசமாக தருகிறேன். முன்பே வாங்கி இருந்தால் காசு திருப்பி கொடுக்கப் பட்டு விடும் என்றார்.
சிறப்பான பொருட்கள் மூலம் குஷிப்படுத்துவது மட்டுமில்லாமல் இப்படி எல்லாம் கஸ்டமர்களை கஷ்டப்படுத்தாமல் பார்த்துக் கொள்வதால் தான் ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் பக்தர்களுக்கு ஆண்டவராகக் காட்சி அளிக்கிறார்!
பிளாக்பெரி, நோக்கியாவின் சரிவை ஆரம்பித்து வைத்த ஐ-போனின் ஆட்சி லேசாக ஆட்டம் கண்டது கூகிள் ஆண்ட்ராயிடும் சாம்சங்கும் வந்தபிறகே. ஐ-போன் தயாரிக்கும் போது பதிவு செய்த 200 பேடண்ட்களை காரணம் காட்டி மற்ற செல்போன் தயாரிப்பாளர்களுக்கு தலைவலி கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது ஆப்பிள்!
ஆப்பிள் 11, மேக்கின்டாஷ், ஐ-பாட், ஐ-போன் என உலகை உலுக்கிய நான்கு பொருள்களை அறிமுகப்படுத்தியும் ஸ்டீவ் ஜாப்ஸ் அடங்குவதாக இல்லை! அடுத்த ஆட்டத்துக்கு ஆயுத்தமாகிக் கொண்டிருந்தார்.
(தொடரும்)
0
அப்பு









September 21st, 2011 at 2:52 pm
” ANTENNAGATE” என்றால் ஆன்டெனா பிரச்னை என்று அர்த்தமா? 1500 வார்த்தகள் தெரிந்தால் சரளமாக ஆங்ககிலம் பேசலாம் என்று VETA சொல்லுதே அந்த 1500 வார்த்தைகளில் இந்த வார்த்தை அடக்கமா ?
“சிறப்பான பொருட்கள் மூலம் குஷிப்படுத்துவது மட்டுமில்லாமல் கஸ்டமர்களை கஷ்டப்படுத்தாமல் பார்த்துக் கொள்வதால் தான் ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் பக்தர்களுக்கு ஆண்டவராகக் காட்சி அளிக்கிறார்!”
என்ற வரிகள்..ஸ்டீவ் ஜாப்ஸ் எப்படி வெற்றி கொடி கட்டுகிறார் எனப்தை விளக்குகிறது.
September 22nd, 2011 at 1:26 am
//சிங்குலரிடம் பேச்சு வார்த்தை முடிக்கும் முன் அதன் பெயர் ஏடி அண்ட் டி என்று மாற்றப்பட்டது. அவ்வளவு ரகசியம்!//
சின்குலரை AT&T வாங்கிவிட்டது. பெயர் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இதில் ரகசியம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லையே !!
ஆப்பிள் வாடிக்கையாளர்களின் விசுவாசத்தை Steve Jobs AT&T-க்கு விற்றார் – அது தான் உண்மை.
September 22nd, 2011 at 7:46 am
ஆப்பிள் ஒரு புதிய பொருளை வெளியிடும் போது வாங்கக் கூடாது. ஏனென்றால் தொழில்நுட்ப ரீதியாக அவை பழமையாக இருக்கும். உதாரணமாக முதல் இபோன்களில் எம்.எம்.எஸ் அனுப்ப முடியாது. உலக அளவில் அனைத்து நிறுவனங்களும் போட்டியின் காரணமாக அவசர கோலத்தில் தான் அனைத்தையும் வெளியிடும். எ.கா. முதல் ஐபேடில் ஒரு காமிரா இருக்காது. இரண்டாவது ஐபேடில் சொத்தை காமிரா இருக்கும். மூன்றாவதில் தரமான காமிரா வரும். இப்படித் தான் அனைத்து பொருட்களும் வெளியிடப்படுகின்றன. இரண்டு மூன்று வருடங்கள் பொறுத்து நன்றாக வடிவமைத்து இவர்கள் தரமான பொருளை வெளியிடாலாம். ஆனால் போட்டியாளர்கள் முந்திவிடுவார்கள் என்ற பயத்தில், எதையாவது வெளியிட்டு லாபம் பார்த்து விடுவார்கள்.
September 22nd, 2011 at 7:56 am
ஆப்பிளோட யுக்தியே எதை வெளியிட்டாலும் தாங்கள் தான் முதன்முதலில் வெளியிடுவது போல் விளம்பரம் படுத்துவது தான். ஐபோன் வருவதற்கு பல வருடங்களுக்கு முன்பே தொடுதிரை போன்கள் இருந்தன. ஆனால் ஆப்பிள் அதை சாதாரணவர்களும் எளிதாக உபயோகிப்பது போல் செய்து விற்பனை செய்து லாபம் நாட்டியது.
உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா? ஆப்பிள் பொருட்களை உபயோகிப்பவர்கள் தான் தங்கள் பொருட்களைப் பற்றி அதிகம் குறை சொல்லி கொண்டிருப்பார்கள். ஆப்பிள் விவாத தளங்களுக்குப் போய் பார்த்தால் அது தெரியும்.