ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 1

மீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம், இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்டவாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாகஉண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும் படாமல் இதை வெறும் ஒரு பத்தி செய்திக்குறிப்பாக்கிக்கொண்டிருக்கின்றன.

பலரும் ஏதோ திடீரென இந்தப் போராட்டம் உதித்துவிட்டதாக நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். கூடங்குளம் அணு உலை திட்ட நிலையில்இருக்கும்போதே அதற்கு எதிர் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துபிட்டன. அப்போது நடந்த மக்கள் குறை கேட்கும் கூட்டங்கள் மிகச்சாதுர்யமாக அணு உலை அமைக்கப்படும் இடத்திற்கும் 87 கிலோ மீட்டர்கள் தள்ளி நடத்தப்பட்டன. மக்களுக்கும் நம் அரசுக்குமான தூரத்தின் சிறியஅளவைதான் அந்த 87 கி.மி. ஒரு மீனவனாக, ஒரு ஏழை பனையேறியாக, மழை பொய்த்துப்போன மண்ணிலும் ஏதேதோ விளைவித்துக்கொண்டிருக்கும் ஒரு விவசாயியாக, ஒரு தினக்கூலியாக இருந்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் அவர்களுக்கு அது எண்பத்தேழாயிரம் கிலோமீட்டர்கள் என.

இருந்தும் மக்கள் கூட்டமாய் சென்று தங்கள் எதிர்ப்பை அப்போதே பதிவு செய்தனர். தொடர்ந்து அணுஆலை திட்டம் ஒவ்வொரு மைல்கல்லைத் தொடும்போதும் போராட்டங்கள் நடந்துகொண்டேயிருந்தன. பலரும் மதில்மேல் பூனையாய் இருந்துவந்தனர் என்பதும் உண்மை. சிலர் ஒரு ‘தொழிற்சாலை’ புதிதாய் வருவதால் நமக்கு இலாபம்தானே, வேலைகள் கிடைக்குமே பூமி விலை ஏறுமே என தற்காலிக இலாபங்களை எண்ணி மௌனமாயிருந்தனர். ஃபுக்குஷிமா பேரழிவுக்குப் பின் எல்லோரும் ஒன்றாய் விழித்துக்கொண்டுள்ளனர்.

மார்ச் 11ல் ஜப்பானை உலுக்கிய 9 ரிக்டர் நிலநடுக்கத்தினாலும் அதில் விளைந்த ஆழிப்பேரலைகளினாலும் ஃபுக்குஷிமாவின் அணுசக்தி ஆலை இடிபட்டு, அங்கிருந்த அணு உலைகளை குளிரூட்டச் செய்யும் கருவிகள் செயலிழந்து, மூன்று உலைகள் 2800 டிகிரி செல்ஷியஸுக்கும் மேல்வெப்பமடைந்து வெடித்துச் சிதறின. இதில் ஃபுக்குஷிமாவுக்கும் 20 முதல் 25 கி.மி சுற்றளவு வரைக்கும் மெல்லக் கொல்லும் கதிரியக்கப் பொருட்கள் வெடித்துப் பரவின. மிகுந்த குளறுபடிகளுக்குப் பின் இந்தப் பகுதிகளில் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பலர் கிடைத்த வழிகளில்இடங்களை விட்டு வெளியேறினர். ஆறுமாதங்களுக்குப் பின்னும் இன்னும் பலரும் தம் பழைய குடியிருப்புகளுக்கு திரும்பி வர முடியாமல்உள்ளனர். திரும்பி வந்த சிலரும் அன்றாட வாழ்வின் சின்னச் சின்ன தேவைகளையும் அவநம்பிக்கையுடனும் சந்தேகங்களுடனும் செய்யவேண்டிய நிலையிலுள்ளனர். பலரும் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி மீண்டும் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் பலர் தீவிர மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களில் பலர் விவசாயிகள்.

ஃபுக்குஷிமாவைச் சுற்றி மண் முதல் விண்வரை கதிரியக்கம் பரவியுள்ளது. பள்ளிகளில் மைதானங்களின் மேற்பரப்பில் 50சென்டிமீட்டர் வரைக்குமான மண்ணை அள்ளி அப்புறப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.  குழந்தைகள் எப்போதும் முகக்கவசமணிந்துகொண்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் விளையும் எந்த காய்கனியையும் யாரும் உண்ண முடியாது. அங்கிருக்கும் காடுகளின் இலைகளில் கதிரியக்கம் ஊடுருவியுள்ளது. அவற்றை உண்ணும் கால் நடைகள் வழியாக மனிதர்களுக்கும் கதிரியக்க தாக்கம் வருகிறது. இன்னும் எரிந்துகொண்டிருக்கும் அணு உலைகளில் வெப்பத்தைக் குறைக்க நீரை இறைத்துக்கொண்டேயிருக்கிறார்கள். அது பெரும் நீராவி மேகமாக மேலெழும்புகிறது. அவற்றிலும் கதிரியக்கம் ஊடுருவியுள்ளது. அது மேகமாக பல இடங்களுக்குச் செல்லும் அபாயம் நிலவுகிறது. உலகின் மிகப் பெரிய அணுசக்தி உலை வெடிப்பாகக் கருதப்படும் செர்னோபில் விபத்தைவிட ஃபுக்குஷிமாவின் பாதிப்பு பெரிதானது எனக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 966கிமீ சுற்றளவு நிலம் வாழத்தகுந்ததல்ல என்று சொல்லப்படுகிறது.

50 கிமீ வரையிலும் நேரடிபாதிப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால் ஆறுமாதங்கள் ஆகியும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் அரசுகளும் தலையிட்டும் ஃபுக்குஷிமாவில் ஏற்பட்டிருக்கும் கதிரியக்கத்தின் துல்லிய அளவையோ அதன் பின்விளைவுகளையோ யாராலும் அறியமுடியவில்லை.

கதிரியக்கம் என்பது கண்ணுக்குத் தெரியாத அலையாகச் செல்லும் சக்தி. அது நம் மரபணுவை (டி.என். ஏ) ஊடுருவும் சக்திகொண்டது. கதிரியக்கத்துக்கு ஆளானவர்கள் சிறிய அளவில் தைராய்ட் பிரச்சனைகள் முதற்கொண்டு மிக மோசமான கேன்சர் வரைக்கும் அனுபவிக்கநேர்கிறது. அளவுக்கதிகமான நேரடி கதிரியக்க ஊடுருவல் உடலைச் சிதைத்து உயிரைப் பறிக்கும். மிகவும் கொடூரமான கதிரியக்க விளைவாகத் தலைமுறைகளைத் தாண்டி கதிரியக்கம் ஊடுருவி, பிறக்கும் குழந்தைகளின் உடற்கூறுகளை மாற்றியமைத்துவிடுகிறது.

உண்மையைச்சொல்லப்போனால் கதிரியக்கத்தின் மத்தியில் உருவாகி வளரும் கரு ஒன்று எப்படி பிறப்பெடுக்கும் என்பதை யூகிக்கக்கூடமுடியாது. அத்தனை கொடூரமான விளைவுகளை உருவாக்கக்கூடியது கதிரியக்கம். மனிதன் இதுவரை கண்டுபிடித்த ஆயுதங்களிலேயே அதிக உடனடிப் பேரழிவையும் தலைமுறைகள் தாண்டி நீடிக்கும் தாக்கத்தையும் உருவாக்கும் ஒரே ஆயுதாம் அணு குண்டுதான். செர்னோபிலுக்குப் பிறகுஅதன் சுற்றுப்பரப்பில் 30,000 முதல் 90,000 பேர்வரைக்கும் புற்றுநோயால் அவதியுற்றனர். கதிரியக்கத் தன்மையுள்ள மூலப்பொருட்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்த நிலத்தில் கிடந்து தலைமுறை தலைமுறையாக பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக உலகின் மிக முன்னேற்றமடைந்த நாடுகளில் ஒன்றான ஜப்பான் அரசாங்கம், தன் மக்களைக் கைவிட்டுவிட்டதாக மக்கள் நம்புகின்றனர். இத்தகைய பேரழிவை ஜப்பான் எதிர்பார்த்துத் திட்டமிடவில்லை என்பதே உண்மை. பின்னர் உலகஅளவில் உதவிகள் வந்தபோதும் விபத்தையோ, கதிரியக்கப் பேரழிவுகளையோ அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது ஜப்பான்அரசு ஒரு விபரீத விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிறது. அது இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த கதிரியக்க உச்ச வரம்புகளைஉயர்த்திவிட்டு பிரச்னைகள் இல்லை என்று கணக்கிடுகிறது.

கதிரியக்கச் சூழலில் வேலைபார்ப்பவர்களுக்கு பாதுகாப்பான கதிரியக்க அளவாக100 மில்லிசீவெர்ட்ஸிலிருந்து திடீரென 250மில்லிசீவெர்ட்ஸாக மாற்றியது. இதே போல உணவுக்கான கதிரியக்க உச்சவரம்பையும், கடலில் கலப்பதற்கான வரம்பையும் உயர்த்தியுள்ளது. உலகின் அரசுகள் பலவும் செய்துகொண்டிருப்பதையே ஜப்பான் அரசும் செய்கிறது. தகவல்கள்மறுக்க்கப்படுகின்றன, திரிக்கப்படுகின்றன, குறைக்கப்படுகின்றன. பாலுக்கு அழும் குழந்தையின் வாயில் ரப்பர் சூப்பியை வைத்து ஆறுதல்சொல்வதைப்போல அரசு பல பொய்களின் மூலமும் அரைத் தகவல்களின் மூலமும் மக்களை நம்பிக்கையுடன் வைத்திருக்கிறது. ஆனால் உண்மை மிகக் கொடியாதாக இருக்கிறது.

செப்டம்பர் 16, 2011ல் வெளிவந்துள்ள சைன்ஸ் பத்திரிகையில் ‘அடுத்த ஃபுக்குஷிமாவைத் தடுப்பது’ எனும் தலைப்பில் அணுசக்தி தொழில் நுட்பத்தில் பல வருடங்கள் அனுபவமுள்ளவர்களும், தற்போதைய ஹார்வர்ட் விரிவுளையாளர்களுமான மாத்தியூவ் டன், ஒள்ளி ஹெயீனொனென்ஆகியோர் எழுதிய கட்டுரை ஃபுக்கொஷிமாவுக்குப் பின் உலக அளவில் மேற்கொள்ளப்படவேண்டிய பல முக்கியமான அணு சக்தி திட்டமாற்றங்களை அலசுகிறது. அதில் மிகுந்த அக்கறையுடன் கீழ்கண்ட வரிகள் எழுதப்பட்டுள்ளன. ‘உலகின் மிகப் பணக்கார நாடுகளில் ஒன்றானதும், அணு சக்தி தயாரிப்பில் மிகுந்த அனுபவம் கொண்டதுமான ஜப்பானிலேயே இத்தனை குறைகள் இருக்குமென்றால் இது இன்னும் கடுமையான அரசியல் மற்றும் நிர்வாகச் சமநிலையையும், பலனுள்ள மேற்பார்வைத் திறனும், நீடித்த அமைப்புகளையும் உருவாக்குவதற்கான தேவையை காட்டுகிறது’. அதைவிட முக்கியமாக ‘அணுசக்தி பயன்படுத்தும் சில நாடுகள் பயனற்ற கட்டுப்பாட்டு மேற்பார்வைகளுடையவை, ஊழலில் திளைப்பவை, நிலையான அரசியலற்றவை’ என கிட்டத்தட்ட நேரடியாகவே இந்தியா பாக்கிஸ்தானைக் குறிப்பிடுகின்றனர்.

நிர்ணயிக்கப்பட்ட தண்டவாளங்களில் ஓடும் ரயில்கள் மோதிக்கொள்வதையே தடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது நம் அரசு. இத்தனை இரயில் விபத்துக்களுக்குப் பிறகு இப்போதுதான் விபத்தை தடுக்கத் திட்டமிட ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. நம் அணு உலைகள் நடத்தப்படும் லட்சணங்களை செப்டம்பர் 11, 2010 தெகல்கா கட்டுரை ஒன்று அதிர்ச்சியுடன் வெளியிட்டிருக்கிறது. கல்பாக்கம் அணுஉலையில் தொடர்ந்து நடக்கும் விபத்துக்களை அது பட்டியலிட்டு அவை குறித்த உண்மையான தகவல்கள் எதையும் இந்திய அணுசக்தி மேலாண்மை அமைப்பு வெளியிட மறுத்துள்ளதை குறிப்பிடுகிறது. கல்பாக்கத்தை சுற்றி வசிக்கும் சேரி மக்கள் தொடர்ந்து புற்று நோய்க்கு ஆளாகிவருவதை அது சுட்டிக்காட்டுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ‘மிகக் குறைந்த அளவில் கேவலம் “வெறும்” 244 பேருக்கு’ மட்டுமே புற்று நோய்வந்திருப்பதாக இந்திய அணு சக்தி அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் உண்மையில் அந்த எண்ணிக்கை மிக அதிகம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்களும் அந்தப் பகுதி மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவர்களும். அணு உலைகளில் வேலை பார்ப்பவர்களின்குழந்தைகளுக்கு புற்று நோய் ஏற்படுவதை குறிப்பிடுகிறது தெகல்கா. உண்மைகள் மறைக்கப்பட்டு தங்களுக்குத் தெளிவான ட்ராக் ரெக்கார்ட் இருப்பதாக மார்தட்டிக் கொள்கிறார்கள் நம் அதிகாரிகள்.

அணுசக்தியில் மின்சாரம் தயாரிப்பது உலகளவில் மிகவும் இலாபகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கடைசியாக அமைக்கப்பட்ட10 அணு உலைகளும் திட்டமிடப்பட்டதைவிட 300% அதிக செலவில் அமைக்கப்பட்டுள்ளன. கோடி கோடிகயாகக் கொண்டு கொட்டியும் அணுசக்தியிலிருந்து இந்தியா பெறும் மின்சாரத்தின் அளவு கேவலம் 2.7% மட்டுமே. இந்தியாவில் எந்த அணு உலையுமே அது அமைக்கப்பட்ட முழுதிறனுக்கும் உற்பத்தியைச் செய்யவில்லை. திட்டங்கள் துவங்குகையில் எதிர்பார்க்கப்படும் மின்சார அளவுகள் எல்லாம் வெறும் பேப்பர்களிலேயே எழுதப்பட்டுள்ளன. ஆக இந்தப் பெரும் திட்டங்கள் யார் யாருக்கோ இலாபங்களை ஈட்டுவதற்காகவே செய்யப்படுகின்றன எனும் சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

ஃபுக்குஷிமாவுக்குப் பிறகு அணுசக்தி குறித்த உலகப் பார்வை ஒரு அதிரடி மாற்றத்தை அடைந்துள்ளது. ஜெர்மனி, இத்தாலி ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் அணு சக்தியை முற்றிலும் கைவிட முடிவெடுத்துள்ளன. அடுத்த சில வருடங்களில் அணுஉலைகளை ஒவ்வொன்றாக நிறுத்தப்போகிறார்கள். அவை மாற்று சக்தியை நோக்கி நகர முடிவெடுத்துள்ளன. மிகத் தீவிர  அணுசக்தி ஆதரவான நாடு ஃப்ரான்ஸ். அங்கேயே 63%மக்கள் அணுசக்திக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இத்தாலியில் 95%பேர் அணுசக்தி பயன்பாட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மே 25, 2011ல் வியன்னாவில் கூடிய ஆஸ்ட்ரியா, கிரீஸ், அயர்லாந்து, லாத்வியா, போர்சுகல் உள்ளிட்ட எட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மந்திரிகளின் குழுஅணு சக்தி பயன்பாட்டுக்கு எதிராக பிரகடனம் ஒன்றை செய்துள்ளனது.

நோபல் பரிசு பெற்றவர்கள் 18 பேர் ஒன்றுகூடி ஃபுக்குஷிமாவுக்குப் பின் உலகளவில் அணுசக்தி பயன்பாடு மெல்ல கைவிடப்படவேண்டும் என பிரக்டனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ‘உலகில் 400 அணுமின்ஆலைகள் உள்ளன. அவற்றிலிருந்து 7% மட்டுமே உலகின் மின்தேவை பூர்த்திசெய்யப்படுகிறது. ஆனால் இவற்றில் பலவும் விபத்துப் பகுதிகளில்அமைந்துள்ளன இது மனித குலத்துக்கே ஆபத்தானது!’ என்கிறது இவர்களின் பிரகடனம். இந்தியாவைப் போலவே அணுசக்தியை பெரிதும் நம்பியிருந்த சீனா ஃபுக்குஷிமாவுக்குப் பின் அதைக் கைவிட்டுவிட்டு மாற்று மின்சக்தி தயாரிப்பில் உலகிலேயே அதிக ஆர்வம் காட்டும் நாடாகமாறிவிட்டிருக்கிறது.

ஆனால் இந்தியாவில் ஃபுக்குஷிமாவுக்குப் பிறகான அணுசக்தி அணுகுமுறை என்ற ஒன்றே வகுக்கப்படவில்லை. உலகின் மிகப் பெரிய அணுஉலை விபத்தை இந்தியா கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. நான்குமுறை உச் கொட்டிவிட்டு வழக்கம்போல அலுவலகத்துக்குச் செல்லஆரம்பித்துவிட்டனர் அதிகாரிகள். அரசாங்கமே சும்மாயிருக்கும்போது அவர்கள் மட்டும் என்ன செய்வார்கள் பாவம்?

(இரண்டாவது பாகம் தொடரும்)

0

சிறில் அலெக்ஸ்

15 comments so far

 1. Karthik
  #1

  நல்ல பதிவு.. அரசியலோடு அறிவியலும் இன்னும் கொஞ்சம் கலந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். சில செய்திகளுக்கு சுட்டி இணைப்பது நன்று. E.g: //அணுசக்தியில் மின்சாரம் தயாரிப்பது உலகளவில் மிகவும் இலாபகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கடைசியாக அமைக்கப்பட்ட10 அணு உலைகளும் திட்டமிடப்பட்டதைவிட 300% அதிக செலவில் அமைக்கப்பட்டுள்ளன. கோடி கோடிகயாகக் கொண்டு கொட்டியும் அணுசக்தியிலிருந்து இந்தியா பெறும் மின்சாரத்தின் அளவு கேவலம் 2.7% மட்டுமே//

 2. chinnapiyan v.krishnakumar
  #2

  மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் இப்போது நாம் என்ன செய்ய முடியும். ஏற்கனவே தமிழ் தமிழர்கள் வாழ்ந்த லெமூரியா கண்டம் காணாமல் போய்விட்டது. அப்புறம் தமிழ் சங்கம் இருந்த புராதான ஊர்கள் கொற்கை துறைமுகம் எல்லாம் காணாமல் போய்விட்டது. இப்போ தென் தமிழ் நாடு. ஒரு பொது பிரச்சனை என்றால் கர்நாடக கேரளா வில் எல்லா அரசியல்வாதிகளும் தங்களுக்குள் இருக்கும் பேதங்களை மறந்து ஒன்று கூடிவிடுகிரார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சுய நலவாதிகள் அரசாளுகிரார்கள்.

 3. அதிஷா
  #3

  அருமையான பதிவு. தயவு செய்து தொடரவும்.

 4. Sritharan
  #4

  Good work! Let us say NO to nuclear plant. Also shall we say big NO to US deal? 12 years ago, then activists had dinner with US diplomats at Chennai! Now, as this plant is going to be critical in few months, US has instigated Churches against the government. For all these 15 years, what the hell were these so called Bishops doing? Why now, coming into the rescue of those poor fisher folks?
  Tomorrow, if we say NO to n-deal to US, they are going to deport all our brothers & sisters to India! Who will ‘bark’ for you? Will these Bishops come for your rescue? Never! Wake up fools! It is we the people of India is going to affected,by closing this plant!

 5. DIVYAN
  #5

  அஜாரே , கருப்பு பணம் , ஊழல் , உள்ளாச்சி தேர்தல் , கோஷ்டி சண்டை , இன உணர்ச்சி , குடும்ப ப்ரிச்சனை என அனைத்தையும் கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு மனித உயிர்களின் மேல் கொஞ்சம் அக்கறைக்காட்டி நம்மை ஆளும் அரசாங்கம் நாம் மறுமுறை ஓட்டு போடவாவது வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு , பெருந்தவறு ஏதும் நடவாமல் இருக்க வழிவகை செய்திடல் வேண்டும் ….. செய்யுமா ????

 6. புலவர் தருமி
  #6

  “நிர்ணயிக்கப்பட்ட தண்டவாளங்களில் ஓடும் ரயில்கள் மோதிக்கொள்வதையே தடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது நம் அரசு.” – செருப்பால் அடித்த மாதிரி கேட்டுயிருக்கீங்க. ஆனால் அரசுக்கு சூடு சொரணை எல்லாம் கிடையாது. திருப்பூரில் சாயத்தை ஆற்றில் கலப்பதையே தடுக்காமல் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படி அணு உலைக்கு ஏற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்வார்கள். அணு உலைகளை கைவிட்டு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீளமுள்ள நம் கடலில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யவேண்டும்.

 7. Mercy Fernando
  #7

  Very good inspiring article cyril. crores and crores of rupees are swindled by the so called corrupt politicians. By closing this plant if we are incurring loss that sure will not cross 2G scam.

 8. anand.s
  #8

  please publish in paper’s

 9. kalanithi
  #9

  Ungal karuthu meekavum payan alikirathu nandri…

 10. ஓகை நடராஜன்
  #10

  உங்கள் கட்டுரை கதிரியக்கத்தால் மனித இனத்துக்கு ஏற்படும் இன்னல்களை எடுத்துரைத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை வேண்டாம் என்று சொல்கிறது. கதிரியக்கத் தீமைகளை மட்டும் வைத்தே மின் தேவைக்கான ஒரு வாய்ப்பை நிறுத்தமுடியுமென்றால் பல உலக நடப்புகள் கேள்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

  அணு ஆயுதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஜப்பானைவிட கதிரியக்கக் கொடுமைகளை யார் அனுபவைத்திருக்கிறார்கள்? ஆனால் அங்கு அதற்குப் பிறகு அணு மின் நிலையங்கள் அமைக்கப் படாமலா இருந்தது? அந்த நாட்டின் மிக துரித முன்னேற்றத்துக்கான ஒரு காரணமாக அணு மின்சாரமும் இருந்திருக்கிறது.

  //மார்ச் 11ல் ஜப்பானை உலுக்கிய 9 ரிக்டர் நிலநடுக்கத்தினாலும் அதில் விளைந்த ஆழிப்பேரலைகளினாலும் ஃபுக்குஷிமாவின் அணுசக்தி ஆலை இடிபட்டு, அங்கிருந்த அணு உலைகளை குளிரூட்டச் செய்யும் கருவிகள் செயலிழந்து, மூன்று உலைகள் 2800 டிகிரி செல்ஷியஸுக்கும் மேல்வெப்பமடைந்து வெடித்துச் சிதறின//

  அடிக்கடி நில நடுக்கத்துக்கும் சுனாமிக்கும் உள்ளாகும் நாடாக ஜப்பான் இருந்த போதிலும் பல அணுமின் நிலையங்களை கட்டி தன் முன்னேற்றத்துக் வழி செய்து கொண்டது. கூடங்குளம் ஜப்பான் அளவுக்கு நிலநடுக்க மற்றும் சுனாமி ஆபத்துகளை எதிர்நோக்கும் நிலப்பகுதி இல்லை. நீங்கள் குறிப்பிட்ட குளிரூட்டும் கருவிகளை கூடங்குளத்தில் ஒன்றுக்கு நான்காக அமைத்திருப்பதாக அறிக்கைகள் சொல்லுகின்றன. நிலநடுக்கத்துக்கும் சுனாமிக்குமாக ஏராளமான முன்னெச்சரிக்கை மற்றும் தானியங்கி ஏற்பாடுகள் இருப்பதாகவும் அறிக்கைகள் சொல்லுகின்றன.

  தொழிநுட்ப நோக்கில் இப்பிரச்சனையை அனுகாமல் வெற்று பீதியை மக்களிடம் கிளப்பும் விதமாக உங்கள் கட்டுரை அமைந்திருக்கிறது.

 11. ஓகை நடராஜன்
  #11

  //அணுசக்தியில் மின்சாரம் தயாரிப்பது உலகளவில் மிகவும் இலாபகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கடைசியாக அமைக்கப்பட்ட10 அணு உலைகளும் திட்டமிடப்பட்டதைவிட 300% அதிக செலவில் அமைக்கப்பட்டுள்ளன. கோடி கோடிகயாகக் கொண்டு கொட்டியும் அணுசக்தியிலிருந்து இந்தியா பெறும் மின்சாரத்தின் அளவு கேவலம் 2.7% மட்டுமே. இந்தியாவில் எந்த அணு உலையுமே அது அமைக்கப்பட்ட முழுதிறனுக்கும் உற்பத்தியைச் செய்யவில்லை//

  இக்கருத்துகள் உண்மைதான் என்றாலும் உலக நாடுகளின் தொழிநுட்பத் தடைகளை மீறி நாமாக முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு துறையில் இக்குறைகளை நாம் பெரிது படுத்துவதற்கில்லை. இவை அரசின் கொள்கை முடிவைச் சார்ந்தவை. இதற்கான எதிர்ப்பை கட்டி முடிக்கப்பட்ட உற்பத்தி தொடங்கும் நிலையிலுள்ள மின் நிலையத்துக்கு எதிராக காட்டுவது எவ்வகையில் சரி? சுதந்திரத்துக்குப் பிறகு சற்றே வளர்ச்சியின் தொடக்கத்தில் இருக்கும் நாம் பல துறைகளிலும் தற்சார்பை எட்ட வேண்டிய நிலையில் இருக்கும் நாம் இந்தத் துறையை புறக்கனிக்க முடியுமா?

  இதிலிருக்கும் ஆபத்துக்களுக்கான முன்னெச்செரிக்ககைகலை மேலும் தீவிரப் படுத்தி இதில் தொடருவதை விட கைவிட்டு விடுவது எப்படி சரியான பாதையாக இருக்கும்?

 12. Dman
  #12

  Dear sir,
  You think you are talking science? No. You are simply saying wrong things.

  1. The nuclear plants are being set up by foriegn Private company collaborations. We have very few indegeneous plants. We are not self sufficient in that.

  2. we already have 17 plants those generate a meger 2.7% of electricity. So by sheer math in order to fill up the gap we may need several nuclear plants. Which is impractical. What good is development if your environment is radiated. Imagine having one or two plamts per state and them being attacked by terrorists. In our country terrorist are shooting people in the streets sir.

 13. ஓகை நடராஜன்
  #13

  Dear Dman,

  1. I do agree that we are not self sufficient. But we are trying to become self sufficient. We were importing all the components of Npower plants. But we mow make many components and we can even export some of them. We cannot afford to stop anything on this to remain in par with the world. Please note no country has closed existing plants after Fukushima. Only few developed countries decided to close after some years.

  2. Can we shy away with everything for terrorists? Do we not travel after Sep11? Do we not stay in hotels after Taj? What about Pakistan filled with all kinds of terrorists and how much we are vulnerable if Nweapon controls are taken by them?

 14. arjun
  #14

  this article has to be published in newspapers , and people must have awareness what is atomic research center andatom bomb….especially students

 15. Vilasini
  #15

  Dear Natarajan

  As a sheer citizen, not technically viable, of this country I have been reading various articles for and against Kudangulam NPP. I really do not want to look at this from the technical point of view alone. I worry only about my and my fellow people’s safety. Pls do not compare sep 11 incident with any of such terrorist attacks in India. WTC attack is one such in thousand incidents around the world. But here, we face such attacks almost every day. Though only not from the terrorists, these attacks vary from industries like dove chemicals to sivakasi SSI units. So, here the question of safety is not from the functioning of NPP but the very functioning of our government. Can all the scientists, politicians who support NPP, give an undertaking on the government safety measures to the public if any disaster happens? You all support to the safety of NPP by justifying various things like demand for electricity , demand for becoming independent nation, demand for becoming authoritative and dominant nation among the world countries…but have you all thought about the demand for safety for the public. I’m not talking about the group of people who oppose NPP creating emotional waves among the public. I’m talking for the people as I’m just one among them. I’m talking for myself, my family, my society. Thousands of voices echoes in support of the safety and necessity of NPP, but I have not heard even one voice from them who talk about the safety when any such disaster happens, not about the safety when it is operating smoothly. Do you all mean to say NPP will not have accidents eternally? We understand the risk involved in even walking on the road or sleeping inside the four walls of our own house. But is the ratio same? Can you, by your truest sense of compassion for people, compare the American government and our Indian government? If we debate about the capital involved in setting up these NPP throughout nation, and debate from the safety of setting up NPP, we would always succeed undoubtedly as these two elements are the most powerful weapons in the universe. But let us think on humanity grounds, sometimes.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

3 Trackbacks/Pings

Facebook comments: