ஆழி பெரிது
42. வேதத்தின் சமூகப் பார்வை-1. ஆழியும் பிரமிடும்
சென்ற அத்தியாயத்தில் அசுவமேத வேள்வி ஆபாச பாலியல் சடங்கா என்பதைப் பார்த்தோம். இதனுடன் இணைந்த மற்றொரு பிரபலமான, தவறான கண்ணோட்டம் வேதங்கள் குறித்து உண்டு. வேத காலத்தில் சாதியம் இருந்ததா? வேத கால வர்ண அமைப்பு எத்தகையதாக இருந்தது?
இதனை முழுமையாக அறிந்து கொள்ள வேத சமுதாயத்தை மட்டும் தனியாகப் பார்க்காமல் பொதுவாக மானுட சமுதாயங்களில் சமூக படிநிலைகள் எப்படி உருவாகின்றன என்று கவனிக்கவேண்டும். அத்துடன் அத்தகைய படிநிலைகளில் பிறப்படிப்படையிலான ஏற்றதாழ்வுகள் எவ்வாறு உருவாகின்றன என்பதையும் அதை மத நூல்கள் அங்கீகரிக்கின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும்.
இது நவீனத்துவ யுகம். இந்த நவீனத்துவ யுகத்தில் இருக்கும் அமைப்புகளில் ஜனநாயக அமைப்பே மிகச் சிறந்தது. இந்த நவீனத்துவ யுகத்துக்கு மேற்கத்திய நாடுகள் வருவதற்கு மிக அதிக அளவில் மூலதனமும் இயற்கை வளங்களும் தேவைப்பட்டன. அவற்றை மேற்கத்திய நாடுகள் காலனிய ஆதிக்கம் மூலம் இன்றைய மூன்றாம் உலக நாடுகளிலிருந்து சுரண்டி எடுத்தன. இதனால் மூன்றாம் உலக நாடுகளின் சமூக அமைப்புகள் தேக்கமும் இறுக்கமும் அடைந்தன. அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகள் ஜனநாயகத்தன்மையை அடைந்தன. இந்த அடிப்படையான பிளவு மேற்கத்திய பண்பாட்டின் உயர்ந்த தன்மை காரணமாகவும் இதர பண்பாடுகளின் தாழ்வு காரணமாகவும் ஏற்பட்டது என்பதாக ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டது. இதுவே உலகமெங்கும் நிலைநிறுத்தப்பட்டது.
ஆனால் உண்மை என்ன? மேற்கத்திய நாடுகளில் பிறப்படிப்படையிலான சமூக அமைப்பு இருந்தது. அதற்கு மத பீடங்களின் ஆதரவும் இருந்தது. இந்தியாவில் தீண்டாமை ஏற்படுவதற்கு முன்னரே கூட மேற்கத்திய சமுதாயத்தில் அது பரவலாக இருந்தது என நம்ப இடமிருக்கிறது. வரலாற்றாசிரியர் கேட்டி ஸ்டூவர்ட் என்பவர் சொல்கிறார்: ‘புனித ரோமானிய பேரரசெங்கும் ’கீழான தொழில்’ செய்தோரை ‘மேலான தொழில்’செய்தோர் பல்வேறு விதமான சமூக பொருளாதார சட்டபூர்வமான அரசியல் ரீதியான பாரபட்சங்களுக்கு ஆளாக்கினார்கள். இந்த பாரபட்சங்களில் (கீழ் நோக்கி செல்லச் செல்ல) அதிகரிக்கும் அவமானப்படுத்துதல் இருந்தது. இந்த தொழில் செய்யும் Guild எனப்படுபவை 19 ஆம் நூற்றாண்டு வரைக்கும் ஐரோப்பாவில் பிறப்படிப்படையிலானவை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.
இந்திய வர்ணம் நான்கு பிரிவுகளை கொண்டது. ஆனால் மேற்கத்திய சமூக பார்வை ஏழு பிரிவுகளை கொண்டது. இந்த ஏழு பிரிவுகளையும் சமுதாயத்தில் ஒன்றன் கீழ் ஒன்றாக ஆண்டவர் உருவாக்கினார் என்றும் அவை ஏழு உலகங்களை ஒன்றன் கீழ் ஒன்றாக உருவாக்கியதை ஒத்த ஒரு மாறாத அமைப்பு என்றும் மேற்கத்திய மத்திய கால இறையியலில் நம்பப்பட்டது. மேலும் மேற்கத்திய சமூக அமைப்பு இன்றைக்கும் ஒரு ’பிரமிடு’ பார்வை கொண்டது. பிரமிடின் அடி மேடை அகன்று பெரிதாக இருக்கும். உச்சி கூம்பு சிறிதாக இருக்கும். மேற்கத்திய சமுதாயத்தின் மேல் உச்சியில் எப்போதும் சிறுபான்மையினரே இருப்பார்கள். பெரும்பான்மை மக்கள் அதிகாரமும் வளமும் இல்லாமல் எப்போதும் அடிப்பாகங்களிலேயே அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். எந்த வரலாற்றுப் பாடப்புத்தகத்திலும் காட்டப்படும் ஒரு சித்திரம் இது. இதுதான் ஐரோப்பியா கண்ட ஆதர்ச சமுதாய பார்வை.
ஆனால், இந்திய சமுதாய பார்வை வேறுவிதமானது. நான்கு வர்ணங்களும் பிரமிடுகள் அல்ல. மாறாக சமுதாயம் எனும் அதி உயிரியின் உடல் பாகங்கள். இது பெரிய அளவில் அடுக்குமுறை பார்வையை அழித்துவிடுகிறது. புருஷ சூக்தம் குறித்த அத்தியாயத்தில் இதை விளக்கமாக காணலாம். மற்றொரு பார்வையாக இந்திய பாரம்பரியம் முன்வைப்பது பேராழி வட்டங்கள் எனப்படும் Oceanic Circles. இப்பார்வையை பாரத பாரம்பரியத்திலிருந்து எடுத்து மேற்கத்திய சமூக பார்வைக்கு மாற்றாக முன்வைத்தவர் மகாத்மா காந்தியே ஆவார். அவரது வார்த்தைகளில்:
இந்த அமைப்பில் எண்ணற்ற கிராமங்கள் உண்டு. அக்கிராமங்களின் சமூக அமைப்பு என்றென்றும் விரியும். ஆனால் எப்போதும் உயராத வட்டங்களினால் (ever-widening, never-ascending circles) ஆனதாகும். வாழ்க்கை என்பது பிரமிடாக அதன் சிறிய உச்சி அதன் அடிப்பாகத்தால் தூக்கி நிறுத்தப்படும் தன்மை கொண்ட்தாக அமையாது. மாறாக அது ஒரு ஆழி வட்டமாக அமையும். அதன் மையத்தில் தனிமனிதன் இருப்பான். அவனைச் சுற்றி கிராமம். கிராமத்துக்காக தன்னை கொடுக்கும் தனிமனிதன். கிராமங்களால் உருவான ஆரத்துக்காக தன்னை கொடுக்கும் கிராமம் இறுதியில் இவை அனைத்துமாக ஓருயிராக இயங்கும். அந்த இயக்கம் கர்வமோ தீவிரமோ கொண்டதல்ல பணிவாக பேராழி வட்டங்களின் ஒருங்கிணைந்த உறுப்புகள் எனும் மகோன்னதத்துடன் அவை இயங்கும். (ஹரிஜன், 28-7-1946)
மகாத்மா காந்தி முன்வைக்கும் இந்த ஆதர்ச பார்வை வேத சமுதாய சிந்தனையிலிருந்தே உருவானது. இதை எப்படி தெரிந்து கொள்வது? வேதங்களின் பெயரால் பின்னர் எழுந்த ஸ்மிருதிகளாலும் சமுதாய தேக்க நிலையாலும் மிகவும் கஷ்டப்பட்ட ஒரு மனிதர். இந்திய சமூக வரலாற்றின் மிகச்சிறந்த மேதை என்றே கருதப்படத்தக்கவர். சமூக நீதிக்காக போராடியவர். இந்து சமுதாயத்தின் மீதும் சாதியக் கோட்பாடுகளின் மீதும் மிகக்கடுமையான விமர்சன்ங்களை வைத்தவர். இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரதம சிற்பி, பாபா சாகேப் அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்து அதை நாம் ஆரம்பிக்கலாம்.
(தொடரும்)
மேலதிக விவரங்களுக்கு:
Katy Stuart, Defiled Trades and Social Outcasts, Honor and Ritual Pollution in Early Modern Germany, Cambridge University Press, 1999
0
அரவிந்தன் நீலகண்டன்








