பாம்பு, பூரான், பாளையங்கோட்டை!

க – 17

16 பிப்ரவரி 1965. நள்ளிரவு நேரம். முரசொலி அலுவலகத்தில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார் கருணாநிதி. வாசலில் காவலர்கள் காத்திருந்தனர். உதவி ஆணையர் சில கேள்விகளைக் கேட்டார். முரசொலித் தலையங்கம் பற்றி. செய்திகள் பற்றி. கட்டுரைகள் பற்றி. உடனடியாகக் கைது செய்து எழும்பூரில் இருக்கும் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார்.

இரவு நேரத்திலேயே நடந்த சில மணிநேர விசாரணைகளுக்குப் பிறகு போலீஸ் லாரியில் ஏற்றப்பட்டார் கருணாநிதி. லாரி புறப்பட்டது. ஆனால் எங்கே செல்கிறோம் என்று சொல்லவில்லை. பலமணிநேரப் பயணத்துக்குப் பிறகு மதுரை மத்தியச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். பிறகு அங்கிருந்து வெளியேற்றி, மீண்டும் வாகனத்தில் ஏற்றினர். வாகனம் நேராகப் பாளையங்கோட்டை சிறைக்குச் சென்றது. அங்கிருக்கும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் கருணாநிதி.

கைதுக்கான காரணம் இதுதான். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று மாணவர்களைத் தூண்டிவிட்டவர்களுள் முதன்மையானவர் கருணாநிதி. ஆகவே, இந்தியப் பாதுகாப்புச் சட்டம் 30(1) ன்கீழ் கைது செய்யப்பட்டிருந்தார் கருணாநிதி. இந்தப் பிரிவின்கீழ் கைது செய்யப்பட்ட முதல் திமுக உறுப்பினர் கருணாநிதிதான்.

கைது விவகாரத்தைச் சட்டமன்றத்தில் எழுப்பியது திமுக. சென்னையில் கைது செய்யப்பட்ட கருணாநிதியை போலீஸ் லாரியில் ஏற்றிச்சென்றுள்ளனர். அதன் காரணமாக அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து லாரியிலேயே நானூறு மைல்களுக்கு மேலாக்க் கொண்டுசென்றுள்ளனர். எதிர்கட்சித் துணைத்தலைவரான கருணாநிதியை ஒரு காரில் அழைத்துச்செல்லக்கூட அரசுக்கு மனமில்லையா? என்று கேள்வி எழுப்பிய ப.உ.சண்முகம், கருணாநிதி கைது பற்றி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.

கருணாநிதியின் கைது பற்றி நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பினார் திமுக உறுப்பினர் இரா. செழியன். பிறகு அண்ணாவும் பேசினார். ஆனாலும் அரசுத்தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. இடையில் முரசொலி பத்திரிகையில் வெளியான செய்திகள் மட்டும் தலையங்கம் தொடர்பாக பத்திரிகையைக் கவனித்துக்கொண்டிருந்த மாறனும் கைது செய்யப்பட்டார்.

நாள்கள் நகர்ந்தன. ஆனால் விடுதலை கிடைக்கவில்லை. வருத்தம் தாங்க முடியாமல் திடீரென ஒருநாள் பாளையங்கோட்டை சிறைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்தார் அண்ணா. நலம் விசாரித்தார். பதிலுக்கு தர்மபுரி இடைத்தேர்தல் பற்றிய விவரங்களைக் கேட்டார் கருணாநிதி. சந்திப்பு நடந்த அன்று மாலை நெல்லையில் ஒரு பொதுக்கூட்டம். அண்ணா பேசினார்.

என் தம்பி கருணாநிதியைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். இங்கே பேசியவர்கள் கருணாநிதி தனிமைச் சிறையில் தவிக்கிறார் என்று சொன்னார்கள். தவறாகச் சொல்லிவிட்டார்கள். தம்பி கருணாநிதியைத் தனிமைச் சிறையில் தள்ளுமளவுக்குக் கொடியவரல்ல பக்தவத்சலம். பாம்பும் பூரானும் நெளிகிற பாழ் சிறையில்தான் கருணாநிதியைப் பூட்டிவைத்திருக்கிறார்கள்.

அண்ணாவின் பேச்சுக்குப் பிறகு இன்னொரு வழக்கும் கருணாநிதி மீது தொடுக்கப்பட்டது. முரசொலியின் வெளியான கட்டுரைகளுக்காக இந்தியப் பாதுகாப்புச்சட்டம் 41(5)ன் படி புதிய வழக்கு. சென்னையில் நடக்க இருந்த விசாரணைக்காக பாளையங்கோட்டையில் இருந்து சென்னை அழைத்துவரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணைகள் நடந்துகொண்டிருந்த சூழ்நிலையில் திடீரென பாதுகாப்புச் சட்டத்தின் 30(1) பிரிவினை ரத்து செய்தது தமிழக அரசு. அதன் எதிரொலியாக, 62 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு கருணாநிதிக்கு விடுதலை கிடைத்தது.

விடுதலையான மகிழ்ச்சியோடு நிதியைத் திரட்டும் பணியைத் தொடங்கினார் கருணாநிதி. எதற்காக நிதி? வரவிருக்கும் பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்குத் தேவையான நிதி. நிதிதிரட்டும் பணியை இப்போது தொடங்கினாலும் அதற்கான இலக்கை முன்கூட்டியே பகிரங்கமாக அறிவித்திருந்தார் கருணாநிதி, பொருளாளர் என்ற முறையில்.

7 ஜூலை 1963. சென்னைக் கடற்கரையில் திமுக பொதுக்கூட்டம் கூடியது. திருவண்ணாமலை இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்றதற்கான பாராட்டுவிழா அது. அந்த மேடையில் கருணாநிதி பேசினார்.

பொதுத்தேர்தலில் திமுகழகம் வெற்றிபெற வேண்டுமானால், இருநூறு தொகுதிகளிலும் திமுக போட்டியிட்டாக வேண்டும். ஒரு தொகுதிக்கு ஐயாயிரம் ரூபாய் என்று கணக்கு வைத்தாலும் சுமார் பத்துலட்சம் ரூபாய் பொதுத்தேர்தல் நிதியாகத் திரட்டவேண்டும். ஆகவே, அந்தப் பத்து லட்ச ரூபாயைத் திரட்டுகிற வேலையை இந்த மேடையிலேயே நான் – பொருளாளர் என்ற முறையில் – தொடங்கிவைக்கின்றேன்.

கருணாநிதியின் அதிரடி அறிவிப்பு மேடையில் இருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அத்தனைப் பெரிய தொகையைத் திரட்டமுடியுமா என்ற சந்தேகம் அண்ணா உள்ளிட்ட அனைவருக்குமே இருந்தது. ஆனால் நம்பிக்கையுடன் இருந்தார் கருணாநிதி. அதைச் சாதிக்கும் வகையில் தற்போது நிதி திரட்டும் பணியைத் தொடங்கினார்.

15 செப்டெம்பர் 1965 தொடங்கி என்னைக் கூட்டத்துக்கு அழைப்பவர்கள் நிகழ்ச்சி ஒன்றுக்கு தலா ஐநூறு ரூபாயேனும் கொடுத்தாகவேண்டும். கருணாநிதி விதித்த முதல் நிபந்தனை இதுதான். திரட்டப்படும் நிதி கழகத் தேர்தல் நிதியில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பு தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. கொஞ்சம் கொஞ்சமாக நிதி திரண்டது.

நிதி வசூலின் இன்னொரு முயற்சியாக திமுக சார்பில் கொடி வாரம் கொண்டாடப்பட்டது. உதயசூரியன் மற்றும் அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட திமுக கொடிகள் இருபத்தைந்து பைசா, ஒரு ரூபாய் ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. திமுகவின் முக்கியத் தலைவர்கள் பலரும் கொடி விற்பனையில் ஈடுபட்டனர். கொடி வாங்குவதில் தொண்டர்கள் ஆர்வம் செலுத்தினர்.
தேர்தல் தேதி நெருங்கி வருவதைத் தொடர்ந்து நிதி திரட்டும் பணியை வேகப்படுத்தும் வகையில் கோவை மாவட்டத்துக்குச் சுற்றுப்பயணம் செய்தார் கருணாநிதி. பத்து நாள் பயணம். ஒரு நாளுக்கு பதினைந்து கூட்டங்கள். மொத்தம் நூற்றைம்பது கூட்டங்கள்.
கொடியேற்றினார். தெருமுனைக்கூட்டத்தில் பேசினார். பொதுக்கூட்டத்தில் பேசினார். எல்லா இடங்களிலும் நிதி கிடைத்தது. சில இடங்களில் நிதிக்குப் பதிலாக தங்க, வெள்ளி நகைகள் கிடைத்தன. கோழி, ஆடு, முயல், முட்டைகளும் கிடைத்தன. அவற்றை அந்தந்த இடத்திலேயே ஏலம் விட்டு, கிடைத்த நிதியைக் கணக்கில் சேர்த்துக்கொண்டார்.

இந்த இடத்தில் பெரியார் பாணியில் சில காரியங்களைச் செய்தார் கருணாநிதி. விருந்துக்கு வருவதற்கு; கையெழுத்து போடுவதற்கு; புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு என்று எல்லாவற்றுக்கும் கட்சி வளர்ச்சி நிதிதரவேண்டும் என்பார் பெரியார். அந்த உத்தியை
தேர்தல் நிதி திரட்டப் பயன்படுத்தினார் கருணாநிதி. எல்லாவற்றுக்கும் பலன் கிடைத்தது. கோவை மாவட்டத்தில் மட்டும் பத்து நாளில் 41,500 ரூபாய் நிதி திரண்டது.

ஒருபக்கம் கருணாநிதி நிதிதிரட்டிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அண்ணா உள்ளிட்ட திமுகவின் முக்கியத் தலைவர்கள், எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட திமுக நட்சத்திரங்கள் எல்லோரும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

தொண்டர்களிடம் நிதி வசூல் செய்ய திமுக கடைப்பிடிக்கும் நடைமுறைகளுள் முக்கியமானது பிரசார நாடகம் போடுவது. அந்த வகையில் தேர்தல் நிதிக்கென்று சிறப்பு நாடகம் ஒன்றை எழுதினார் கருணாநிதி. அதன் பெயர் காகிதப்பூ. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவனாக இருப்பான் கதையின் நாயகன். அவனை மெல்ல மெல்லத் திருத்தி திமுகவுக்கு அழைத்து வருவாள் நாயகி. இதுதான் நாடகத்தின் கதை.

நாயகனாக கருணாநிதியே நடித்தார். அவரைத் திருத்தும் நாயகியாக தர்மாம்பாள் என்ற பதினெட்டு வயது இளம்பெண் நடித்தார். நாடகம் நல்ல வசூலைக் கொடுத்தது. அந்த நிதியும் தேர்தல் நிதியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. நாடகம் முடிந்தபிறகும் கருணாநிதி – தர்மாம்பாள் நட்பு தொடர்ந்தது. காதலாகக் கசிந்தது. விளைவு, கருணாநிதி – தர்மாம்பாள் திருமணம் நடந்தது. இப்போது தர்மாம்பாளின் பெயர் ராஜாத்தி.

தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில் திமுகவின் நான்காவது பொது மாநாட்டை நடத்த முடிவுசெய்தார் அண்ணா. 29 டிசம்பர் 1966 அன்று சென்னை விருகம்பாக்கத்தில் மாநாடு கூடியது. பிரும்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த மாநாட்டைத் திறந்துவைத்தவர் கருணாநிதி. அந்த மேடையில் திமுக தலைவர்கள் மட்டுமல்லாமல் தோழமைக் கட்சித் தலைவர்களான ராஜாஜி, காயிதே மில்லத், ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட பலரும் இருந்தனர். மாநாட்டில் கருணாநிதி சிறப்புரை நிகழ்த்தினார்.

தமிழக சட்டமன்றத்தில் திமுக 12 தனிநபர் மசோதாக்களைக் கொண்டுபோயிருக்கிறது. 6117 வலிவுமிக்க வினாக்களை ஆட்சி மன்றத்தில் தொடுத்திருக்கிறது. சர்வீஸ் கமிஷன் தேர்வு தமிழ் மொழியிலேயே இருக்கவேண்டும் என்ற தீர்மானம் இராம. அரங்கண்ணல் அவர்களால் கொண்டுவரப்பட்டது. 14 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்கவேண்டும் என்ற தீர்மானம் கே.ஏ. மதியழகனால் கொண்டுவரப்பட்டது. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று திமுக சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இப்படி திமுகவால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டன. இந்த்த் தீர்மான்ங்களில் எது தேவையில்லை என்று கருதுகிறீர்கள்? ஆகவே, திமுக ஆட்சி ஏற்பட்டால் இதுபோன்ற நல்ல தீர்மானங்கள் செயல்படுத்தப்படும்.

1 ஜனவரி 1967. மாநாட்டின் இறுதிநாள். மைக்கைப் பிடித்தார் கருணாநிதி. அப்போது கையிலே ஒரு பை. பணம் நிறைந்த பை. பேசத் தொடங்கினார்.

‘பதினோரு லட்சம் ரூபாய்களை நான் அறிஞர் அண்ணா அவர்களிடம் ஒப்படைக்கிறேன். அத்துடன் அதைச் சேர்க்கக் காரணமாக இருந்த பல லட்சக்கணக்கான இதயங்களையும் அண்ணா அவர்களிடம் ஒப்படைக்கிறேன்’

நிர்ணயம் செய்த இலக்கு பத்து லட்சம் ரூபாய். திரண்டதோ பதினோரு லட்சம். தேர்தல் நிதியைப் பெற்றுக்கொண்டு அண்ணா பேசினார்.

தமிழ் மொழியில் உள்ள சொற்கள் பொருள் உள்ளவை என்பதில் நான் அசையாத நம்பிக்கை கொண்டவன். உன் தாயார் உனக்கு நிதி என்று பெயரிட்டதே – உன்னை நாட்டுமக்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்றுதான். நீ கொடுத்தது பதினோரு லட்சம். ஆனால் மக்கள் மட்டும் சிக்கவேண்டிய நேரத்தில் உன்னிடம் சிக்கியிருந்தால் நீ இன்னமும் அதிகம் சேர்த்திருப்பாய்! எனவே உனது உழைப்பு பொன்னே போல் போற்றத்தக்கது.

இறுதியாக, வரவிருக்கும் தேர்தலில் திமுகவுடன் அணி அமைத்திருக்கும் கட்சிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை எல்லாவற்றையும் அறிவித்தார் அண்ணா. பிறகு திமுக வேட்பாளர் பட்டியலையும் வாசித்தார். முதலில் தொகுதியின் பெயர். அடுத்து வேட்பாளர் என்று தொடர்ச்சியாக வாசித்த அண்ணா, சைதாப்பேட்டை என்று சொல்லிவிட்டு சில நொடிகள் இடைவெளிவிட்டார். அடுத்து வேட்பாளர் பெயரைச் சொல்லவேண்டும். சொன்னார்.

பதினோரு லட்சம்!

0

(தொடரும்)

6 comments so far

  1. மாயவரத்தான்....
    #1

    ஹும்.. இதே மாதிரி வரும் தேர்தலில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி, புறம்போக்கு நிலம், பட்டா நிலம், திஹார், புழல், வேலுர் என்றெல்லாம் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவார்களோ?!

  2. Parthasarathy
    #2

    ****மக்கள் மட்டும் சிக்கவேண்டிய நேரத்தில் உன்னிடம் சிக்கியிருந்தால் நீ இன்னமும் அதிகம் சேர்த்திருப்பாய்**** அண்ணா நல்ல தீர்க்கத்தரிசி

  3. ஒரு வாசகன்
    #3

    ஓ.. இத்தனைக்கும் காரணம் ஆண்ணாவா?? அப்போதே கருணாநிதியென்றால் பதினோரு லட்சம் என்று சரியாக கோடு போட்டு காண்பித்துவிட்டாரே

  4. Suganya
    #4

    I like your style of writing !! Esp. in this issue, the finishing of the article is awesome !! Keep up the good work.

  5. ram
    #5

    நீங்க மாங்குமாங்குன்னு எழுதறது இங்கெ காப்பி பேஸ்ட் ஆகுது பாத்தீங்களா?

    http://namathu.blogspot.com/2011/08/blog-post_24.html

    ___________

    எம் ஜி ஆரைப்பத்தி எழுத ஆளே இல்லையா?

  6. Alexis
    #6

    ஆனால் மக்கள் மட்டும் சிக்கவேண்டிய நேரத்தில் உன்னிடம் சிக்கியிருந்தால் நீ இன்னமும் அதிகம் சேர்த்திருப்பாய்!………………..நீங்க போன பொறவு தமிழன் இவருகிட்ட வகைய்யா சிக்கிட்டான் எசமான் சிக்கிட்டான் …. நீங்க சொன்ன மாதிரியே அதிகம் சேர்த்துட்டாங்க எசமான் சேர்த்துட்டாங்க …. குடும்பத்துக்கு !!

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: