ஆழி பெரிது

40. தமிழ் வேதம்,  தமிழர் வளர்த்த வேதம்

தொல்காப்பியம் ‘நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான்’ முன்னர் அரங்கேறியது என்பது தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியார், இவை ‘தைத்திரியமும், பௌடிகமும்,    தலவகாரமும் சாம வேதமும்’ என கூறுகின்றார். இவை ரிக் யஜுர் சாம அதர்வணம் என்பது பொருந்தாது என்கிறார்.  எனவே நச்சினார்க்கினியர் கூறும் இவை நான்கும் எவை என்பதை நாம் காணலாம்.

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் ‘சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு தைத்திரியன் சாம வேதி’ என சொல்கிறார். ’பந்தார் மெல்விரல்’ எனும் பாசுரத்தில் ‘சந்தோகா! பௌழியா! தைத்திரியா சாமவேதியனே!’ என்கிறார். கோக்கருநந் தடக்கன் எனும் மன்ன்னின் செப்பேட்டில் நாம் ’பவிழிய சரணத்தார்’ ‘தயித்திரிய சரணத்தார்’, ‘தலவகாரச் ச்ரணத்தார்’ எனும் வார்த்தைகளை பார்க்கிறோம். இவை யாவை?

மார்க்சிய ஆராய்ச்சியாளரும் சட்டவல்லுநருமான வெ.கிருஷ்ணமூர்த்தி வேத இலக்கியத்தின் வளர்ச்சியையும் கிளை பிரிதலையும் விளக்கியுள்ளார். பழமையான வேத இலக்கியங்கள் சம்ஹிதைகள் ஆகும். இவற்றுக்குப் பின்னால் பிராமணங்கள் , ஆரணியகங்கள் ஆகியவை உருவாகின. பின்னர் மேலும் விரிவடைந்து உபநிடதங்கள் தோன்றின. உபநிடதங்கள், பிரம சூத்திரம், தரிசன்ங்கள் எனப்படும் ஒரு பிரிவும், கல்ப சூத்திரங்கள் எனப்படும் மற்றொரு பிரிவும் உண்டாகியது. இந்த கல்ப சூத்திரங்கள் எனும் பிரிவிலேயே ஸ்ரௌத சூத்திரங்கள், க்ருஹ்ய சூத்திரங்கள், தர்ம சூத்திரங்கள் ஆகிய மூன்று வகைகள் உருவாகின. இவற்றின் பிரிவாக பின்னர் ஸ்மிருதிகள் இணைக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றும் ஒன்றோடொன்றாக பின்னலமைப்புகளாக தொடர்புகள் உருவாக்கப்பட்டு அமைக்கப்ப்ட்டன.

உதாரணமாக ரிக்வேத சம்ஹிதையுடன் ஐத்ரேய மற்றும் கௌக்ஷிதகி பிராமணம் அதே பெயர்களில் ஆரணியக நூல்கள் அதே பெயர்களில் உபநிடதங்கள் பின்னர் வசிஷ்ட தரும சூத்திரம் இந்த சம்ஹிதையுடன் தொடர்புடையது. யஜுர்வேதம் சுக்ல யஜுர்வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என இரண்டாக பிரிக்கப்படும். அதில் கிருஷ்ண யஜுர் வேத சம்ஹிதைக்கு தைத்திரிய பிராமணம், தைத்திரிய ஆரணியகம் மற்றும் தைத்திரிய உபநிடதம். தரும சூத்திரங்களாகுபவை ஆபஸ்தம்பம், வைகானச ஸ்மார்த்த சூத்திரம், வாஜசனீயம் ஆகியவை.  இப்படி ஒரு பெரும் இலக்கிய பின்னல் தொகுப்பையே வேத இலக்கியம் என சொல்லும் வழக்கமும் உண்டு.

இங்கு ஒரு முக்கிய அணி சேர்தலை காணலாம். அவை ஞான காண்டம் கர்ம காண்டம் என்ற விதத்தில் அமைகின்றன. உபநிடதங்கள் ஞான காண்டம் என்றால் கர்ம காண்ட நூல்கள் பிராமணங்களை மட்டுமன்றி அவற்றுடன் இணைத்து உருவாக்கப்பட்ட கல்ப சூத்திரங்கள் அவைகளில் வகைப்படுத்தப்பட்ட ஸ்ரௌத சூத்திரங்கள், க்ருஹ்ய சூத்திரங்கள் தரும சூத்திரங்கள் ஆகிய அனைத்தும் இணைந்தவை ஆகும். இவற்றுள் ஸ்ரௌத சூத்திரங்கள் அரச உரிமையுடன் இணைந்த யாகங்கள் குறித்தவை. கருஹ்ய சூத்திரங்கள் தனிமனித குடும்ப சடங்குகள் குறித்தவை. தரும சூத்திரங்கள் தனிமனித –சமுதாய உறவுகள் குறித்தவை. இந்த தரும சூத்திரங்களே இன்று நாம் கடுமையாக தாக்கும் ‘சாதிக்கொரு நீதி’ என்கிற கருத்தாக்கத்தை அடிப்படையாக கொண்டவை. பேரரசுகள் உருவான போது சமூக ஒழுங்கை வேண்டிய அரசர்கள் இந்த தருமசூத்திரங்கள் கற்பிக்கப்படுவதை ஆதரித்தனர். இந்த முழு தொகுப்பையும் வேதம் என அழைப்பது பொதுவில் இருந்தது  என்பதை நாம் ஏற்கனவே கண்டோம்.

பவிழியம் என பார்த்திவ சேகரபுரம் செப்பேடும் பௌடிகம் என நச்சினார்க்கினியாரும் பௌழிய என பெரிய திருமொழியும் சொல்வது எதை? விதி விலக்காக பிராமணங்களுக்கு பிறபட்ட பவிஷ்ய புராணத்தை தன் முதல் நூலாக கொண்டிருக்கும்  ஆபஸ்தம்ப சூத்திரத்தை என்கிறார் வெ.கிருஷ்ணமூர்த்தி. இந்த சூத்திர நூல் தனி ஒருவரால் எழுதப்பட்டதில்லை. யஜுர்வேத பிரிவைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதற்கு இந்த சூத்திரத்திலேயே உள் ஆதாரமாக ‘வாஜசனீய பிராமணம்’ மேற்கோள் காட்டப்படுகிறது.. இது யஜுர்வேத்த்தின் பிராமணம் ஆகும். மேலும் ஆபஸ்தம்பிய வகுப்பு அந்தணர்கள் தென்னிந்தியாவைத் தவிர வேறெங்கும் காணப்படவில்லை. ஆக பவிழியம் அல்லது பௌடிகம் அல்லது பௌழியம் எனப்படுவது ஆபஸ்தம்ப சூத்திரத்தையே குறிக்கும். வேத பண்பாட்டில் தமிழ்நாட்டுக்கென்றே  தனித்தன்மையுடன் உருவான ஒன்றாக இது உருவாகியிருக்க வேண்டும்.

இதே போல தைத்திரியம் கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சார்ந்த்தாகும். தலவகாரர் என்பது க்ருஹ்ய சூத்திரத்தின் உபகர்ம பகுதியில் சொல்லப்படும் 13 மகரிஷிகளில் ஒருவரின் பெயராகும். தலவாகாரம் என்பது சாம வேத பிரிவினில் எழுந்த கௌதம தரும சூத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும் என்கிறார் வெ.கிருஷ்ணமூர்த்தி.

ஆக பவுடியம், தைத்திரீயம், தலவாகரம் என்பவை தெளிவாக தரும சூத்திரங்களை குறிப்பவை ஆகும். அவை ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களை குறிப்பவை அல்ல. மாறாக அவற்றை அடியொற்றியதாகக் கூறி  எழுந்த வாழ்வியல் சட்ட நூல்களான தரும சாத்திரங்களை குறிப்பவை ஆகும். இந்த நூல்கள் மனுவுக்கு முந்தையவையும் ஆகும். தொல்காப்பியம் வாழ்வியலை வரையறுக்கும் இலக்கண நூல் என்பதை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இது தெளிவாக விளங்கும்.

இனி சாமவேதத்துக்கு வருவோம். இந்த வேதத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தனி சிறப்பான உறவு உள்ளது. நம்மாழ்வார் சாமவேத சாரமாக செய்த  திருவாய் மொழியில் ‘எங்கும் எழுந்த நல் வேதத் தொலி  நின்றோங்கு  தென் திருப்பேரையில் வீற்றிருந்த’ என்கிறார். இங்கு ’நல் வேத்த்தொலி’ என நம்மாழ்வார் குறிப்பிடுவது  சாம வேத சாகையில் வரும் கான்ங்களையே. இன்றைக்கும் தென் திருப்பேரை (வ.உ.சிதம்பரனார் மாவட்டம்) கிராமத்தின் அந்தணர்கள் அனைவரும் சாம சாகையை சேர்ந்தவரே. திராவிடத்தின் தனித்தன்மையாகிய ‘ழ’காரம் இந்த சாமசாகை ஓதுதலில் (பாடுதலில்) காணப்படுகிறது.

ஆக தனித்தமிழ் வேதம் என்கிற போலிப் பெருமைக்கு அப்பால் வேதம் வளர்த்த தமிழகம் என்கிற உண்மை பெருமையே நமக்கு இன்னும் சிறப்பளிக்கிறது.

 

மேலதிக விவரங்களுக்கு:

  • ·         வெ.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்வேதம் – ஓர் ஆய்வு, ஆய்வு வட்டக் கட்டுரைகள், சென்னை-7, 1995 பக்.51-68
  • ·         T.N. மகர பூஷணம் அய்யங்கார், ஸ்ரீ ஜைமினி ஸாமவேத தலவகார ஸாகையின் ஸாராம்ஸங்கள், in Vedas : Traditional and Modern Perspectives, (Gen. Editor Dr.V.Kameswari), குப்புசாமி சாஸ்திரிகள் ஆராய்ச்சி மையம், மைலாப்பூர், சென்னை, 2007

One comment

  1. dr.sidharth
    #1

    “ஆக தனித்தமிழ் வேதம் என்கிற போலிப் பெருமைக்கு அப்பால் வேதம் வளர்த்த தமிழகம் என்கிற உண்மை பெருமையே நமக்கு இன்னும் சிறப்பளிக்கிறது”…. Coup De grace வழக்கம் போல கலக்கிட்டீங்க..

Leave a Reply





XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Facebook comments: