மொழிப்போர் தொடங்கியது!

க – 16

இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுத்துக்கொண்டிருந்த சூழலில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய மாற்றம் ஒன்று நடந்தது. ஆட்சி மற்றும் அரசுப் பதவிகளில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் அவற்றில் இருந்து விலகி, கட்சிப்பணிக்குத் திரும்பவேண்டும் என்று முடிவெடுத்தனர். அந்தத் திட்டத்தின் பெயர் காமராஜர் திட்டம் (K Plan). அதன்படி நாற்பதுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் கட்சிப்பணிக்குச் சென்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜர் பதவி விலகினார். அந்தப் பதவிக்கு பக்தவத்சலம் வந்தார். காமராஜரின் ராஜினாமாவுக்குப் பரிசாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்தது.

தமிழக அரசியல் வரலாற்றில் ஆகப்பெரிய திருப்பம் நடந்தபோதும் திமுக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தது. சேலம், தஞ்சை, நெல்லையில் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. இறுதியாகச் சென்னை மாநாடு. 13 அக்டோபர் 1963 அன்று நுங்கம்பாக்கத்தில் கூடியது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கும் ஆட்சிமொழி பற்றிய 17-வது பிரிவின் நகலை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை அங்கே அறிவித்தார் அண்ணா. இது வெறும் அடையாளப்போராட்டம் அல்ல, ஓரிரு நாளில் முடிந்துவிடுவதற்கு. 26 ஜனவரி 1965 வரை தொடர்ச்சியாக நடக்கும் போராட்டம் என்று அறிவித்தார் அண்ணா.

எந்தெந்த ஊரில் யார்யார் போராட்டத்தை நடத்துவது என்பது முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஊருக்கும் ஐந்து பேர் கொண்ட அணி. சென்னையில் அண்ணா தலைமையில் ஒரு ஐவர் அணி. கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டது தஞ்சாவூர். அவருடைய அணியில் மன்னை நாராயணசாமி, மாயவரம் கிட்டப்பா, எஸ். நடராசன், அ. நடராசன் ஆகியோர் இருந்தனர். போராட்டத்துக்கு மக்களைத் திரட்டும் வகையில் நேரே தஞ்சாவூர் சென்று அந்தப் பகுதிகளில் பிரசாரம் செய்தார் கருணாநிதி.

போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே அண்ணா உள்ளிட்ட சிலரைக் கைது செய்திருந்தது அரசு. எனினும், நாடு தழுவிய அளவில் சட்ட நகல் கொளுத்தும் போராட்டம் நடந்தது. மற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டபோதும் கருணாநிதி கைது செய்யப்படவில்லை. ஆனால் போராட்டம் எல்லாம் முடிந்தபிறகு 19 டிசம்பர் 1963 அன்று கருணாநிதியைக் கைது செய்தது அரசு. ஆறுநாள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

திமுக நடத்திய போராட்டங்கள், மாநாடுகள் இளைஞர்களின் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தட்டியெழுப்பிக் கொண்டிருந்தன. அதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது சின்னச்சாமி
என்ற இளைஞரின் மரணம்.

திருச்சி மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த இளைஞர் சின்னச்சாமி. திமுக தொண்டர். திருச்சியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்திறங்கிய அந்த இளைஞருக்கு அதே ரயிலில் வந்திறங்கிய முதலமைச்சர் பக்தவத்சலத்திடம் பேசவேண்டும் என்ற ஆர்வம். இந்தித் திணிப்பைத் தடுக்கக்கூடாதா என்ற கேள்வியை முதல்வரிடம் எழுப்பினார். மறுநொடி கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் திருச்சி சென்ற அந்த இளைஞர், தமிழுக்காகத் தன் உயிரைப் பலிகொடுப்பதாகக் கடிதம் ஒன்றை எழுதிவிட்டுத் தீக்குளித்தார். நான்காவது மொழிப்போரின் முதல் களப்பலி. சிங்கத்தமிழன் சின்னச்சாமி.

மொழிப்போராட்டம் அணையாமல் நடந்துகொண்டிருந்தபோது தேசிய அளவில் மிகப்பெரிய இழப்பு. பிரதமர் ஜவாஹர்லால் நேரு 27 மே 1964 அன்று மரணம் அடைந்தார். அவருக்குப் பதிலாக லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். ஆட்சி மொழி மசோதாவைக் கொண்டுவந்த சாஸ்திரியே தற்போது பிரதமர் ஆகிவிட்டதால் மொழிப்போராட்டம் முன்னைக் காட்டிலும் தீவிரமடைந்தது.

அப்போது இலங்கையில் இருந்து கருணாநிதிக்கு அழைப்பு ஒன்று வந்த்து. அனுப்பியவர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். தங்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டும் என்று அழைத்திருந்தனர். விஷயம் இலங்கை அரசுக்குச் சென்றது. உடனடியாகத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கருணாநிதியின் வருகை தடுக்கப்பட்டது. இதுவிஷயமாக இலங்கை நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பப்பட்டது. அதற்கு ஆளுங்கட்சித் தலைவர் சி.பி. டிசில்வா விளக்கம் கொடுத்தார்.

’திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தைச் சேர்ந்த எவரையும் இலங்கையில் அனுமதிக்கமுடியாது. ஆகவே, கருணாநிதிக்குத் தடை விதிக்கப்பட்டது.’

உடனடியாக எழுந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர் நவரத்தினம், ‘திமுக ஒருபோதும் தடைசெய்யப்படவில்லை. அது இந்தியாவில் இருக்கும் ஜனநாயகக் கட்சிகளுள் முக்கியமானது. அந்தக் கட்சிக்கு சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பிரிவினை, சட்ட விரோத செயல்கள் ஆகியவற்றும் திமுகவுக்கும் தொடர்பில்லை’ என்று விளக்கம் கொடுத்தார்.

இடைப்பட்ட காலத்தில் கருணாநிதிக்கு திரைப்பட வாய்ப்புகளும் அவ்வப்போது வந்தவண்ணம் இருந்தன. குறவஞ்சி, எல்லோரும் இந்நாட்டு மன்னர், அரசிளங்குமரி, தாயில்லாப் பிள்ளை, இருவர் உள்ளம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. முக்கியமாக, காஞ்சித்தலைவன். பல்லவ மன்னரின் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தின் வசனகர்த்தா கருணாநிதி. படத்தின் நாயகன் எம்.ஜி.ஆர். இன்னொரு நாயகன் எஸ்.எஸ்.ராஜேந்திரன். படத்தின் தலைப்பு அண்ணாவைக் குறித்தது. போதாது? படம் நல்ல வெற்றி.

அதன்பிறகு, பூம்புகார். ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் ஒன்றை எடுக்கவேண்டும் என்பது கருணாநிதியின் விருப்பம். இத்தனைக்கும் பி.யூ. சின்னப்பா நடித்த கண்ணகி என்ற படம் அதே பாணியில் வெளியாகி இருந்தது. ஆனாலும் தன்னுடைய எண்ணத்துக்கு ஏற்ப திரைக்கதை – வசனம் அமைத்து புதிதாக, புதுமையாக படம் எடுக்க விரும்பினார் கருணாநிதி. அவர் பங்குதாரராக இருக்கும் மேகலா பிக்சர்ஸ் சார்பில் படத்தை எடுக்க முடிவானது.

எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, ராஜஸ்ரீ ஆகியோர் நடித்த பூம்புகார் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரம் கவுந்தி அடிகள். அதில் கே.பி. சுந்தராம்பாள் நடிக்கவேண்டும் என்பது கருணாநிதியின் விருப்பம். உடனடியாகச் சம்மதம் தெரிவித்தார் கே.பி.எஸ். அவருக்கென்றே சில சிறப்பான வசனங்களை எழுதிக்கொடுத்தார் கருணாநிதி. மனச்சாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது என்ற வசனம் இன்றும் பிரபலம்.

கதைப்படி பொற்கொல்லர்கள் சிறுமைப்படுத்தப்பட்டபோதும் தன்னுடைய திரைக்கதையில் அதனை மாற்றியிருந்தார் கருணாநிதி. பொற்கொல்லர்களின் மதிப்பை உயர்த்தும் வகையில் காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றிருந்தன. முக்கியமாக, கண்ணகி மதுரையை தீயிட்டு அழித்தாள் என்பது கதை. ஆனால் படத்தில் பூகம்பத்தால் மதுரை மாநகர் அழிவதாகத் திரைக்கதை அமைத்திருந்தார் கருணாநிதி. எல்லாம் கூடிவந்தது. 1964 ஆம் ஆண்டு இறுதியில் படம் வெளியானது. அபார வெற்றி.

படத்தின் வெற்றிச்செய்தி வெளிவந்துகொண்டிருந்த சமயத்தில் 26 ஜனவரி 1965 நெருங்கிக் கொண்டிருந்தது. ஆம். இந்தி மொழி இந்தியாவின் ஆட்சிமொழியாக மாறும் நாள். அந்த நாளை துக்கநாளாக அனுசரிக்க திமுக முடிவுசெய்தது. கண்டனக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கறுப்புக்கொடிகள் ஏற்றப்படும் என்றும் கறுப்புச்சின்னம் அணிவது என்றும் முடிவானது. இவை அனைத்தும் திமுக செயற்குழுவில் தீர்மானமாக நிறைவேறி, கூட்டறிக்கையாகவும் வெளியிடப்பட்டது. அதில் கையெழுத்திட்டவர்களில் கருணாநிதியும் ஒருவர்.

குடியரசுத் தினத்தன்று துக்கநாள் அனுசரிப்பது துரோகச்செயல். அதைச் செய்பவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் முதலமைச்சர் பக்தவத்சலம். போராட்டத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க அரசு தயாராகிவிட்டதை உணர்த்தியது அந்த அறிவிப்பு. ஆனால் குடியரசு நாளை அவமதிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று விளக்கம் கொடுத்தார் கருணாநிதி.

குடியரசு நாள் என்பது குழந்தை. அதன் தலையில் இருக்கும் நச்சுப்பழம் இந்தி. திமுக குறிபார்ப்பதில் கெட்டிக்காரக்கட்சி. குடியரசு நாளுக்கும் அவமதிப்பு வராமல் இந்தி ஏகாதிபத்தியத்தையும் பிளந்திடத் தவறாமல் திமுக அம்பு எய்து வெற்றிபெறும் திறமைபெற்றது.

போராட்டத்துக்காக அண்ணா குறித்திருந்த தேதி 26 ஜனவரி 1965. ஆனால் அதற்கு முன்பே அண்ணா கைது செய்யப்பட்டார். பிறகு நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன், அன்பழகன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்த இளைஞர்கள் தயாராகினர். வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு மாணவர்கள் சாலைக்கு வந்தனர். இந்த இட்த்தில்தான் மொழிப்போராட்டம் மாணவர் போராட்டமாக உருவெடுத்தது.

மதுரை, கோவை, திருச்சி, தஞ்சாவூர் மாயவரம் உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் இந்தி எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தினர். அரசியல் சட்டத்தின் பதினேழாவது பிரிவின் நகலுக்குத் தீவைத்தனர். இந்திப் புத்தகங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. முதல்வரைச் சந்திக்கச் சென்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

தமிழ் உணர்வால் உந்தப்பட்ட கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், மயிலாடுதுறை சாரங்கபாணி, அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, விராலிமலை சண்முகம், சிவகங்கை ராஜேந்திரன், பீளமேடு தண்டபாணி என்று பல இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். போராட்டம் வலுத்துக்கொண்டிருந்தபோதும் இந்தித் திணிப்பை வாபஸ் பெறும் திட்டம் இல்லை என்று சொல்லிவிட்டார் பிரதமர் சாஸ்திரி. ரயில் மறியல், உண்ணாவிரதம் என்று மாணவர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். பதிலடியாக, மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது பக்தவத்சலம் அரசு.

அடக்குமுறைகள் தொடர்ந்தபோதும் மாணவர்கள் போராட்டம் ஓயவில்லை. நிலைமையை சீராக்கும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது மத்திய அரசு. இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆட்சிமொழியாக ஆங்கிலம் நீடிக்கும். ஆகவே, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடவேண்டும் என்றார் மத்திய அமைச்சர் குல்சாரி லால் நந்தா.

ஆனாலும் மாணவர்கள் அமைதிகொள்ளவில்லை. காரணம், மத்திய அரசை அவர்கள் நம்பவில்லை. இந்நிலையில் திடீரென அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மாணவர் தலைவர்கள் அண்ணாவைச் சந்தித்துப் பேசினர். ‘இழைக்கப்படும் அநீதியை உலகறியச் செய்வதில் மாணவர் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. ஆகவே, மாணவர்கள் தங்கள் நேரடி நடவடிக்கையை நிறுத்திவையுங்கள்’ என்றார் அண்ணா. விளைவு, போராட்டம் முடிவுக்கு வந்தது.

அமைதி திரும்பியது என்று நினைத்தபோது அடக்குமுறை பாய்ந்தது, கருணாநிதி மீது!

0

(தொடரும்)

5 comments so far

 1. மாயவரத்தான்....
  #1

  //மயிலாடுதுறை சாரங்கபாணி//

  அது மாயூரம் சாரங்கபாணி.. வரலாறு முக்கியம் சார்!

 2. Thee
  #2

  it is clearly stating that they misused tamil people from the beginning and no use to tamil people with these incidents. Can any one list the achieved from these protests.

 3. velmurugan
  #3

  ஆமாம் அது மும்பை இல்லை பம்பாய், சென்னை இல்லை மெட்ராஸ் கொல்கத்தா இல்லை கல்கத்தா இதுதான் வரலாறு.

 4. Alexis
  #4

  செத்த பயலுவல்லாம் கிறுக்குப் பயலுவ ….. இதே ஆளு கடசீல … எம் பேரனுக்கு இந்தி தெரியும்ன்னு மத்திய அமைச்சர் ஆக்குனாரு !!!!! இவிங்கள இன்னமும் நம்புது ஒரு கூட்டம் !! நல்லா இருங்கப்பா ..

 5. ss
  #5

  தமிழ் துரோகி யார் ???????? தூ ……….

  19.4.2000 அன்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு எடுக்கப்பட்டது:தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகி விடும் என்று முதலமைச்சர் அவர்கள் தெரிவித்த கருத்திற்கிணங்க, நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்த வரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று ஆளுநர் அவர்கள் 21.4.2000 அன்று ஒப்புதல் அளித்தார். அதன்படி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 நபர்களில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: