கருப்பு வெள்ளை கீ போர்ட்கள்

மென்பொருள் துறை. இந்தியாவில் இன்றைக்கு default ஆன விஷயம். மென்பொருளில் இல்லாமல் வேறு துறைகளில் இருந்தால் நாம் ஒரு படி கீழே. பெண்கள் சாப்ட்வேர் மாப்பிள்ளைகளுக்காகவும், ஆண்கள் சாப்ட்வேர் பெண்களுக்காகவும் வாழ்க்கையினை நிர்ணயித்துக் கொண்ட வேகம். ஜங்க் புட், பிட்சா, ஆண் பெண் பேதமின்மை, 14 மணி நேர வேலை, ஜீன்ஸ் டீசட்டையில் அலுவலகம், ப்ளாக்பெர்ரியில் வீங்கும் கட்டைவிரல்கள்.

கட்டற்ற சுதந்திரம், இணையத்தில் எல்லைகள் இல்லை. பத்தாவது படித்தவர் பி.ஏ எழுதலாம், எட்டாவது படித்தவர் எம்.ஏ எழுதலாம் என்கிற சீமான் டூட்டோரியல் விளம்பரங்களை பின் தள்ளியதில் முக்கிய பங்கு கணினி பயிற்சி நிறுவனங்களுக்கு. ஜாவா, டாட் நெட், சி ஷார்ப், ஆரகிள், எஸ் ஏ பி என எழுத்து இடியாப்பத்தில் முழி பிதுங்கி, ரேடியேஷன் தாங்கிக் கொண்டு ஒரு தலைமுறையே கணினி முன்பாக தன் எதிர்காலத்தை செதுக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மாநிலங்களும், நகரங்களும் அடுத்த தெருவாய் உருமாறி, நிறம் மாறி, சிகாகோ சிந்தாதரிப்பேட்டையாகவும், நியுயார்க் நங்கநல்லூராகவும், பாஸ்டன் பாலவாக்கம் பக்கத்திலும் வர செய்த துறை.  எட்டாவது படித்தவர் எஸ் ஏ பி படித்து கொஞ்சம் முக்கி முனங்கி தேறினால், அடுத்த மூன்று வருடங்களில் ’சியாட்டில் உங்களை வரவேற்கிறது’ போர்டினை, கையில் மினரல் தண்ணீர் பாட்டிலோடு கடக்கலாம். 🙂  கீக் (Geek) என்பது செக்ஸியாய் மாறிப் போனது கடந்த பத்தாண்டுகளில் தான்.

எல்லாமே ஒரு பெட்டி, செர்வர், கொஞ்சம் மூளை, நிறைய லாபம், உலகமுழுக்க வர்த்தகம் என விரியும் நிகர்மெய் சமுத்திரத்தில் கருப்புப் பண முதலைகள் நன்றாகவே நீந்துகின்றன.

மென்பொருள் என்பது பைனரியில் உருவான, ஒரு குறிப்பிட்ட வேலையை சிறப்புறவும், தொடர்ச்சியாகவும் செய்யக் கூடிய ஒரு வழி. மென்பொருள் அரிதான காலத்தில் ஆரம்பித்த இன்போஸிஸ் இன்றைக்கு பல பில்லியன் டாலர் நிறுவனம். மென்பொருளுக்கு விலை நிர்ணயிப்பது என்பது கடினம். ஏனெனில், எல்லாமே டிஜிட்டல் பைட்டுகள், இதன் சரியான விலையினை கண்டறிவதென்பது திருப்பதியில் மொட்டை தேடும் நிலை. ஒரு மென்பொருளின் விலை என்பது அதை வாங்குபவரின் திறனைப் பொருத்தது. இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது நம் கதை.

துபாயிலிருந்து பெரும்பணத்தினை இந்தியாவுக்கு மாற்றவேண்டும். வேறு எந்த வழியில் வந்தாலும் பிக்கல் பிடுங்கல்கள் அதிகம். வழியென்ன?

முதல்படி, இந்தியாவில் ஒரு மென்பொருள் நிறுவனத்தினை முதலில் வாங்க வேண்டும் அல்லது தொடங்க வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அது இருந்தால் இன்னமும் நல்லது. இந்த மென்பொருள் நிறுவனத்தின் வேலையே துபாய் முதலாளியின் பணத்தினை மாற்றுவது. நுட்பம் தெரியவில்லையெனில் பரவாயில்லை. ஊரில் சல்லிசாக கிடைக்கும் ஏதாவது ஒரு ஈ ஆர் பி, சி ஆர் எம், எஸ் ஏ பி இம்ப்ளிமெண்டேஷன் என்பது மாதிரியான ஜல்லிகளில் ஏதேனுமொன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இது வெளிப்பூச்சுக்கு. இது முதல் படி.

இரண்டாம் படி, துபாய் நிறுவனம் இந்தியாவில் யார் யாருக்கு காசு கொடுக்க வேண்டுமோ, அதை ஒரு லிஸ்ட் போடும். அந்த நிறுவனங்கள் எல்லாம் வெற்று இன்வாய்ஸில் இந்த மென்பொருள் நிறுவனத்துக்கு பொருளோ / சேவையோ அளிப்பார்கள். மென்பொருள் நிறுவனம், அத்தனை நிறுவனங்களிடத்திலும் கடன் வசதி பெற்றிருக்கும்.

மூன்றாம் படி, துபாய் நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தினை உலக வர்த்தகத்தில் இருக்கும் ஜாம்பவான்களுக்கு ஈடாய் மாற்ற முதலில் எல்லாவற்றையும் கணினிமயமாக்க முனைவார்கள். சந்தையில் கிடைக்கும் விலையை விட, 50-100 மடங்கு விலையினை இந்தியாவில் இருக்கும் மென்பொருள் நிறுவனத்துக்கு கொடுப்பார்கள். இந்தியாவில் இருக்கும் பெருந்தலைகள், விஷயமறிந்தவர்கள் உடனே துபாய்க்கு போய் காண்ட்ராக்ட் போட்டு புர்ஜ் அல் அராபில் தங்கி, ஷாப்பிங் மால்களில் அர்மானி வாங்கி, ரஷ்யப் பெண்களோடு ஜல்சா பண்ணிவிட்டு இந்தியாவுக்கு வயர் ட்ரான்ஸ்பர் செய்து விட்டு தான் திரும்புவார்கள்.

நான்காவது படி, இந்தியாவுக்கு வரும் மொத்தப் பணத்தில் மென்பொருள் நிறுவனத்துக்கு எஞ்சும் பணத்தைத் தவிர மீதமத்தனைத்தும் போய் சேர வேண்டியவர்களுக்கு சரியாக பைசா பாக்கியில்லாமல் போய் சேரும். மென்பொருள் நிறுவனம், கடன் வசதி பெற்ற நிறுவனங்கள் அத்தனைக்கும் காசினை திரும்பக் கொடுக்கும். இது சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இருப்பதால் வரி ஏதும் கட்டத் தேவையில்லை. கேட்டால் அது ஒரு முழுக்க முழுக்க ஏற்றுமதி மட்டுமே செய்யும் நிறுவனம் (EOU – Export Oriented Unit) என்று சட்டத்தினைக் காட்டி, வரவேற்பறையில் காந்தியின் பொன்மொழிகளை ஒட்டியிருப்பார்கள். சத்யமேவ ஜெயதே.

மேலே சொன்னது போனத் தலைமுறை டெக்னிக். ஆனால் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட முறை இப்போது வந்திருக்கும் ’மென்பொருளை சேவையாக வழங்கல்’ (Software as a Service – SaaS) நிறுவனங்கள் வழியே செய்வது. வெப் 2.0 என்கிற கருத்தாக்கம் பரவ ஆரம்பித்த 2003ல் தொடங்கப் பட்ட மாடல் இது. இதில் யாரும் மென்பொருளை வாங்கத் தேவையில்லை. ஜிமெயில் உபயோகிப்பது மாதிரி, நேரடியாக தேவைப்படும் நேரத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்பாட்டுக்கு ஏற்றவாறு காசு. இதை வைத்துக் கொண்டு தான் சேல்ஸ்போர்ஸ் மாதிரியான நிறுவனங்கள் நேர்மையாகவே பில்லியன் டாலர் நிறுவனங்களாக மாறியிருக்கின்றன.

இது லேட்டஸ்ட் வழி. ஏதேனும் ஒரு உதவாத சேவையை இணையம் வழியே தருவதாக சொல்வது. அதற்கு ஊரெங்கும் சந்தாதாரர்கள் இருப்பதாக சொல்லிக் கொள்வது. துர்க்மெனிஸ்தான், லாட்டிவியா, செக் குடியரசு என்று சோற்றுக்கே லாட்டரியடிக்கும் ஊர்களிலிருந்தெல்லாம் சந்தாதாரர்கள் இருப்பார்கள். சின்ன, சின்ன பரிவர்த்தனைகளாக மாற்றி, ஊரெங்கும் காசினை வெஸ்டர்ன் யூனியன் மாதிரி சேவை வழியாக அனுப்பி, சந்தாதாரர்களாக்கி அவர்கள் உங்கள் சேவையினை உபயோகிக்காமலேயே காசு கட்டுவார்கள். இது தான் அடிப்படை.

பத்தாயிரம் குறு நிறுவனங்கள். ஒரு குறு நிறுவனத்தில் 10 நபர்கள். ஒரு நபருக்கு $25 என்றுக் கொண்டால் ஒரு மாதத்துக்கு $2,500,000 [கிட்டத்திட்ட 11 கோடி] வெளுப்பாக்கலாம். கிட்டத்திட்ட 7 பில்லியன் மக்கள் கொண்ட உலகில், இந்த சேவையை ’நம்ப’ பத்தாயிரம் நிறுவனங்கள் இருக்க முடியாதா என்ன ? ஆக ஒரு வருடத்துக்கு 132 கோடி எவ்விதமான கேள்வியும் கேட்காமல் வங்கியில் இருக்கும். வியாபார வருமானம் என்று நாகூசாமல் பொய் சொல்லலாம்.’நேர்மையாய் சம்பாதித்த காசு’.யாரும் கேள்வியே கேட்க முடியாது. அதையும் எதாவது ஒரு குறை வரி தேசத்தில் வைத்திருந்தால் செளகர்யம். வரியும் மிச்சம்.

இதையே வேறு விதமாகவும் செய்ய முடியும். உலக தீவிரவாத குழுக்கள் இப்போது உலகமெங்கும் பணத்தினை பரிமாற்றம் செய்ய நம்புவது எதுவாக இருக்க முடியும் ? வங்கிகள் – மாட்டிக் கொள்வார்கள். வெஸ்டர்ன் யூனியன் – அதிகமாக கேள்விகள் கேட்பார்கள். ஹவாலா – ஏற்கனவே ப்ளாக் லிஸ்டில் இருக்கக் கூடிய பரிவர்த்தனை. பின் எப்படி? இருக்கவே இருக்கிறது கூகிள்.

கூகிளின் வருமானம், கூகிள் தேடல் பக்கத்தில் வலதுப் பக்கத்தில் வரும் Ad Words மற்றும் பல்வேறு வலைப்பதிவுகள், தளங்கள், சமூக வலைப் பின்னல்களில் வரும் Ad Sense. இதுப் பற்றி விரிவாகத் தெரிந்துக் கொள்ள கூகிளை தடவுங்கள். சுருக்கமாக, நீங்கள் தேடும் சொல்லுக்கு இணையான விளம்பரங்கள் தான் இவை. இங்கிருந்து தான் உலகின் மிகப் பெரிய தீவிரவாத, போதைப் பொருள் வங்கி இயங்குகிறது.

முதல் படி, யாருக்கு பணம் வரவேண்டுமோ, அவர்கள் ஒரு வலைப்பதிவு தொடங்குவார்கள். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட குறிச் சொற்களை வைத்து தான் இது இருக்கும். ஒரு ப்ரெளசிங் சென்டரிலிருந்து ப்ராக்சி மாற்றி, ஐபி மாற்றி ஒரு கணினியே பல்வேறு ஐபிகளிலிருந்து ட்ராபிக் வருமாறு செய்யமுடியும். இதை உக்ரேனிய, ரஷ்ய, கிழக்கு ஐரோப்பிய டீனேஜர்களிடத்தில் $100 கொடுத்தால் சர்வ சாதாரணமாக செய்வார்கள். 3 மாதங்களில் அந்த வலைப்பதிவுக்கு ட்ராபிக் ஏறிவிடும்.

தீவிரவாத, போதைப் பொருள் குழுக்கள் இதற்கென்றே இருக்கிறது. அவர்களும் ஒரு ஒன்றுக்கும் உதவாத இணையப் பக்கத்தினை வைத்துக் கொண்டு, சரியாக போன வலைப்பதிவு பயன்படுத்திய குறிச் சொற்களையே பயன்படுத்துவார்கள். கூகிளின் அல்காரிதம் தன் வேலையை சரியாக செய்து விட்டு, அடுத்த வேலையை பார்க்கப் போய்விடும். வலைப்பதிவில் இந்த இணையப் பக்கம் பற்றிய விளம்பரம் வரும். இது Ad Sense. இதில் வரும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட % கூகிளுக்கும், மீதம் எந்த இணையப் பக்கம்/பதிவில் ’கிளிக்’கப்பட்டதோ அவர்களுக்கு போகும். இது போதாதா. 30%+ கூகிளுக்குப் போனாலும், மீதப் பணத்தினை பைசா குறைவில்லாமல், நேரடியாக வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு அனுப்பி விடுவார்கள். அமெரிக்க டாலர் செக். கூகிளிடமிருந்து. பவுன்ஸாகாது. கணக்கில் பணம் ஏறிவிடும். கேள்விகள் இல்லை. பணம் கைமாற்றியாகிவிட்டது. கூகிள் போதும். இதில் Ad Sense னை எப்படி ஏமாற்றுவது என்று கூகிளில் தேடினாலே கிடைக்கும்.

மென்பொருள், இணையம் என விரியும் விர்ட்சுவல் வெளிகளில் யாருக்கும் யாரையும் தெரியாது. அடுத்த பக்கம் இருப்பவர் – ஆணா, பெண்ணா, அஃறிணையா என்று கண்டறிவதற்குள் தாவு தீர்ந்துவிடும். இது மாயவெளி. எல்லாமே சாத்தியம். நீங்கள் கண்டறிந்து முடிவதற்குள், பணம் பைட்டுகளாக மாறி, காண்டம் மாற்றும் நேரத்தில் கண்டம் விட்டு கண்டம் தாவியிருக்கும். இது எதிர்காலத்தில் இன்னும் விரிவடையும் வாய்ப்புகளதிகம்.

மேற்சொன்னதில் முக்கியமானது சிறப்புப் பொருளாதார மண்டலம். சிறப்புப் பொருளாதார மண்டலம் (Special Economic Zone – SEZ), கட்டற்ற வர்த்தக மண்டலம் (Free Trade Zone-FTZ), ஏற்றுமதி மண்டல முனையம் (Export Processing Zone – EPZ) என விரியும் இடங்களிலிருந்து பணம் வெளுக்கப்படுவது அடுத்த வாரம்.

கல்லா நிரம்பும்…..

O

நரேன்

9 comments so far

 1. Arvind
  #1

  Really good article and impressed that you have collected so many information on it. My doubt, govts didn’t aware these or they don’t want to. better make it everything legal and govt will get lot of tax and can use it for public.

 2. saravanan
  #2

  This is good article… when it will publish as a book Naren….

  We are exciting…

  Thanks… Sara

 3. yussuf
  #3

  துபாயின் உண்மை முகத்தை தோலுரித்து காண்பிச்சிட்டிங்க

 4. Srinivasan. V
  #4

  பிரமாதம் நரேன்.
  துல்லியம்.
  தகடு தத்தங்களின் முழு ஆழம் நோக்கி செல்லும் உங்களின் கட்டுரை மிகவும் அருமை.
  யார் கூவினாலும் எப்படி மிரட்டினாலும் காதிலே விழா உயரத்திலே நீங்கள் தொடர்ந்து இருந்துகொண்டு + தெரிந்ததை எல்லாம் இப்படியே அழகாக புட்டு புட்டு வைக்க அந்த பத்மநாப சுவாமி அருள்வார்.
  அப்படியே ஆகட்டும்.
  நன்றி.
  வாழ்க வளமுடன்,
  அன்புடன்,
  ஸ்ரீனிவாசன்.

 5. Narain
  #5

  Arvind/Saravanan,

  Thanks. Book will be intimated by Nov/Dec.

 6. jagan
  #6

  ஆர்.பி.ஐ இதையெல்லாம் கண்டுக்காமல் லூஸில் விட்டுவிட்டு, எதோ கொஞ்சம் வருமானம் பார்க்கும் ஃப்ரீலான்சர்கள், சின்ன நிறுவனங்கள் உபயோகப்படுத்தும் பே-பாலை(Paypal), ஏகப்பட்ட விதிகள் மூலம் குதறிவிட்டிருக்கிறது.

  Paypal – க.ப பரிமாற்றத்துக்கு எந்த அளவில் பயன்படுகிறது? RBI பயமுறுத்துவதும், உதார் விடுவதும் சரியானதுதானா?

  (நரேன்- ‘இந்திய மென்பொருள் சேவை small players not biggies – பேபால் பயன்பாடு- ஆர்பிஐன் நொட்டை விதிகள்’ குறித்து நீங்கள் விரிவாக ஒரு கட்டுரை எழுத எதிர்பார்க்கிறேன். முன்பே இருந்தால் சுட்டி தரவும்)

 7. Narain
  #7

  அதை தனியாக விரிவாக எழுதவேண்டும். ரிசர்வ் வங்கி விதிகள் பற்றிய கடுமையான விமர்சனங்கள் என்னிடத்தில் இருக்கின்றன. ஆனால் உள்ளூரில் இருந்துக் கொண்டு அதை எழுதுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. முயற்சி செய்கிறேன்.

 8. Faizal
  #8

  Thanks for giving this information.

 9. Kumaran
  #9

  It is really very good article. Please let us the book name if it already published.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Facebook comments: